கடந்த செப்டம்பர் முப்பதாம் தேதி நீதிமன்றங்கள் முக்கியமான இரண்டு அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல் தொடர்பான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. ஒன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. காத்திருக்கலாம். மற்றொன்று அகில இந்திய அரசியலில் அனைவராலும் அறியப்பட்ட லாலு பிரசாத் அவர்களை குற்றவாளி என அறிவித்தது.
லாலு பிரசாத் என்றால் அவரது தனிப்பட்ட ஸ்டைலான பேச்சு சிரிக்காதவர்களையும் சிரிக்க வைத்து விடும். இன்று சிறைக் கம்பிகளை எண்ணும் நிலைக்குத் தள்ளப் பட்டு இருக்கிற லாலு அவர்களைப் பற்றி ஒரு புகழ்பெற்ற நகைச்சுவைத் துணுக்கு இருக்கிறது. அதாவது லாலு அவர்கள் பீகார் முதல்வராக இருந்த நேரம், ஜப்பானிலிருந்து ஒரு வர்த்தகத் தூதுக்குழு அவரை சந்தித்தது. தூதுக்குழுவின் தலைவர் லாலுவிடம் சொன்னார்.
“ஒரு வருடம் பீகாரை எங்கள் ஜப்பானிய அரசிடம் ஒப்படையுங்கள். நாங்கள் பீகாரை ஒரு ஜப்பானாக மாற்றிக் காட்டுகிறோம்“
இதற்கு லாலு சொன்ன பதில்,
“நீங்கள் யார் பீகாரை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்ல.? நீங்கள் வேண்டுமானால் ஒரு வருடம் அல்ல ஆறுமாதங்கள் மட்டும் ஜப்பானை எங்களிடம் ஒப்படையுங்கள் அதற்குள் ஜப்பானை பீஹாராக மாற்றிக் காட்டுகிறோம்” என்று சொன்னதாக சொல்வார்கள்.
ஒரு ஜாலியான மனிதராக மத்திய இரயில்வே அமைச்சராக பணியாற்றிய போது பல சாதனைகளைச் செய்தவர். ஒடுக்கப் பட்ட சமுதாயமான யாதவ சமுதாயத்துக்கு உயிரோட்டம் தந்தவர். தாழ்த்தப் பட்ட மற்றும் சிறுபான்மையினரின் நலனுக்காக வாய்ப்பு வரும்போதெல்லாம் ஓங்கிக் குரல் கொடுத்தவர். முஸ்லிம்களின் நண்பர். என்பன போன்ற பல சிறப்புக்களுக்கு சொந்தக் காரரான லாலு பிரசாத் ஊழல குற்றச்சாட்டில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
தண்டனை என்ன என்பது அக்டோபர் மூன்றாம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அறிவிக்கப் படும். லாலு அவர்கள் மட்டுமல்ல சிறையில் அவரோடு பேச்சுத்துணைக்கும் ஆடுபுலி மற்றும் தாயம் விளையாடவும் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உட்பட நாற்பத்து நாலு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. சுவரொட்டிகள்தான் மாடுகளுக்கு தீவனம் என்று மாறிவிட்ட காலத்தில் மாட்டுத்தீவன ஊழல் என்ற வழக்கில் லாலு & கோ வுக்கு தண்டனை. இதனால், பீகாரில் மாடுகளுக்கு மாட்டுத்தீவனம் இருந்தது என்று அறிகிறோம். தமிழக மாடுகளுக்கு தீவனம் சுவரொட்டி என்கிற அளவில்தான் உள்ளது. அதுவும் முதல்வரின் படத்தைத் தாங்கிய சுவரொட்டிகளைத் தின்னும் மாடுகள் மீது அவதூறு வழக்குப் போடப்பட்டு அலைக்கழிக்கவும் படலாம்.
தென் அமெரிக்க கண்டத்து நாடுகளிடையேதான் ஊழல் செய்வது அரசியல் தர்மம் என்கிற நிலை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழலின் ஊற்றுக் கண்கள் அங்கே ஆயிரம் ஆயிரமாகும். இத்தாலியிலும் ஊழல் பெருச்சாளிகள் பெருக்கெடுத்து இருக்கின்றனர். ஆனாலும் அங்கெல்லாம் உடனே வேறு ஒருவர் அதிகாரத்துக்குக் கொண்டுவரப் படுவார். அப்படி வருபவர் முன்பு இருந்தவறை தூக்கி சாப்பிட்டுவிடுவார். அதன்பிறகு அரசியல் மேப்பில் இருந்து அவர்கள் அகற்றப்பட்டு விடுவார்கள்.
நமது நாட்டிலோ அதிகாரத்தில் இருந்தவர்களும் இருப்பவர்களும் ஊழலுக்கு மேல் ஊழல புரிந்து உத்தமர்கள் போல் உலவி வருகிறார்கள். மக்களும் அதை மறந்துவிட்டு மாற்றி மாற்றி ஊழல் செய்தவர்களையே அதிகாரத்துக்குக் கொண்டு வரும் பழக்கத்தை அனுதாபத்தின் மூலம் பதவிக்குக் கொண்டு வருகிறார்கள். அரசியல் வாதிகளும் அடிப்படைக் கூச்சம் கூட இல்லாமல் இவ்வுலகை வாழ்விக்க வந்த மகான்கள் போல் பேசி தங்களுக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்வை உய்விப்போம் என்று பேசி தடவைக்கு நாலு ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்குரிய சாதனங்களை இலவசமாக அளிப்பதாக வாக்களித்து பதவிக்கு வந்து விடுவார்கள். தேர்தல்களில் கட்சிகளின் சார்பில் போட்டியிட அந்தக் கட்சியிலேயே இருக்கும் தலையாய அயோக்கியர்களை வேட்பாளர்களாகத் தேர்ந்து எடுக்கிறார்கள். அல்லது சாதி கட்டமைப்பு உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியும் பெற வைக்கிறார்கள். அல்லது ஊழலில் திரட்டிய பணம் யாரிடம் உள்ளதோ அவர்களை நிறுத்துகிறார்கள். அயோக்கியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகள் அனைத்தும் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும்போது யோக்கியர்களுக்கு எங்கே இருக்கப் போகிறது இடம்?
இன்றைய காலகட்டத்தில் முதலீடு இல்லாமல், அராஜகம், பொய், பித்தலாட்டம், அடுத்துக் கெடுத்தல், ஏமாற்றுவேலை என்பனவற்றை மூலதனமாகக் கொண்டுதான் அரசியல் நடத்தப் படுகிறது. அறுந்து போன செருப்பைத் தைக்க வழி இல்லாமல் சென்ற வருடம் அலைந்தவர்கள் எல்லாம் இன்னோவா காரில் போவதும் இப்படித்தான். கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரைக்கும் இன்று ஊழல் ஊர்வலம் பவனி வருகிறது. முதலீடு இல்லாமல் கோடி கோடியாகக் கொட்டும் தொழிலே அரசியல் மற்றும் அதிகாரம்.
‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்’ என்று ஒரு பழமொழி உண்டு. இறைவனைக் குறித்து சொல்லப் பட்ட இந்தப் பழமொழி பின்னர் மூட்டைப் பூச்சிகளுக்காக வேடிக்கையாக சொல்லப் பட்டது. இப்போது அவற்றையும் தாண்டி, விண்ணிலிருந்து மண் வரைக்கும் பரவியுள்ளது ஊழல் பெருச்சாளிகளின் கூட்டமும் குஞ்சுகளுமே. இதைத்தடுப்பாரும் இல்லை; கேட்பாரும் இல்லை. ஒவ்வொரு பெருச்சாளியும் இந்த ஊழலில் ஊறி கொழுத்துப் போய் இருக்கிறது. அது மட்டுமல்ல “தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் என்ன செய்வான்?” என்று மக்களே தங்களை சமாதானப் படுதத்திக் கொள்ளும் ஆறுதல் என்னும் அசட்டுத்தனமும் நிலவுகிறது.
உலக அளவில் கடந்த நாற்பது ஆண்டு கால வரலாற்றைப் பார்த்தால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல். அதன்விளைவாக அன்றைய ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து தண்டனையில் இருந்து தப்பித்தார் நிக்சன். இருபதாண்டுகளுக்கு முன் கொரியாவின் அதிபருக்கு ஊழல்காரணமாக ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. பிலிப்பைன்சின் அதிபருக்கும் இந்நிலை ஏற்பட்டது. சீனாவில் இன்றுவரை ஊழல் நிருபிக்கப் பட்டால் தூக்குத்தண்டனை என்பது சட்டம். ஆனால் நம் நாட்டிலோ ஊழல செய்து கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் தேவதைகளாகவும், அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையாகவும் போற்றப் படுகிறார்கள். இவர்களைவிட்டால் நாட்டை ஆள வேறு யாருமே இல்லை என்று இரு பக்க ஊடகங்களும் மாறி மாறி சித்தரிக்கின்றன. ஜாதி மதத்தின் பெயரால் ஒரு இனப்படு கொலையை தலைமைதாங்கி நடத்தியவர்களை நாட்டின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்க விஷப் பாம்புகளுக்கு வெண்சாமரம் வீசும் வேடிக்கை நடப்பதும் இந்த நாட்டில்தான்.
1960–ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்ற உதவிய காங்கிரஸ் கால ஊழல்களில் மாநகராட்சிக்கு குப்பை அள்ளுவதற்காக வாங்கப்பட்ட போர்டு லாரிகள் ஊழலும் ஒன்று. தி.மு.க. இந்த விஷயத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்தது. வெற்றியும் பெற்றது. அப்போது நிருபர்கள் அண்ணாவிடம் உங்கள் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்களா என்று கேட்டதற்கு அண்ணா எதார்த்தமான பதிலை சொன்னார். அது, “யானைக்கு கோவணம் கட்ட முடியுமா? அப்படித்தான் எல்லா நிலையிலும் ஊழலை ஒழிப்பதும் “ என்றார். இன்றுவரை உண்மையும் அதுதான்.
சதிச்செயல் செய்பவன் புத்திசாலி – அதை
சகித்துக் கொண்டிருப்பவன் குற்றவாளி
உண்மையச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தின் ஆண்டவன் அதிகாரம் – என்பதுதான் அரசியலின் இன்றைய தத்துவம்.
பணமாக வாங்கினால் மட்டும்தான் ஊழல் என்று எண்ணிவிடக் கூடாது. ஊழலுக்குப் பல விஸ்வமூலங்கள் உள்ளன. அறுபதுகளில் கோயம்புத்தூரில் கிருஷ்ணன் என்கிற பெயர் படைத்த பெரிய மில் முதலாளி நூறு ரூபாய் கள்ள நோட்டு அடித்துப் புழக்கத்தில் விட்டார். அன்றைக்கு அது மிகப் பெரிய விஷயம். தேசத் துரோகம். குற்றம் நிருபிக்கப் பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. வருமானவரி செலுத்துபவராகையால் அவருக்கு சிறையில் ஏ வகுப்பு. உடல்நிலையைக் காரணம் காட்டி குளிர்சாதன வசதி. குளு குளு மட்டுமல்ல கிளு கிளுவும்தான். நான் தனிமையில் இருக்கிறேன். பாதுகாப்பு வேண்டும். கணவரால்தான் பாதுகாப்பைத் தர முடியும் என்று மனைவி போட்ட ஒரு மனு கணவரை வீட்டுக்கு வரவைத்தது. எல்லாம் கிருஷ்ண லீலைதான். பணம் பத்தும் செய்தது.
பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமான வி.கே. கிருஷ்ணமேனன் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது 1948ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஜீப்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது. ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் கழகத்திற்குப் பெரும் இழப்பு என்று தெரியவந்து முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், அப்பரிவர்த்தனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
புகார்களின் பின்னணியில் மஹராஷ்டிர முதல்வர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.அந்துலே ராஜினாமா செய்தார், இவ்வாறு பதவி விலகல்கள் காரணமாக சிறைத் தண்டனை என்று எதுவும் விதிக்கப்படவில்லை.
காங்கிரசைச் சேர்ந்த சுக்ராம் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்தபோது மூன்று இலட்ச ரூபாய் கையூட்டு பெற்றார் என்ற புகாரில் 15 ஆண்டுகள் கழித்து, 2011ல் அவருக்கு 85 வயதாகிவிட்ட நிலையில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். 1996ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத்துறை அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளிலும் சாக்குப்பைகளிலும் 1.16 கோடி ரூபாய் கத்தையாக கத்தையாக கரன்சி நோட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் அதைப் பார்த்த பலருக்கு நார்த்தங்காய் ஊறுகாயைப் பார்த்ததுபோல் நாக்கில் நீர் சுரந்தது.
கனிம வளம் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக செப்டம்பர் 2006லிருந்து 2008 வரை பணியாற்றிய மதுகோடா 2500 கோடி ரூபாய் அளவு கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டது உட்பல பல்வேறு ஊழல் புகார்களுக்காளாகி சிறையிடப்பட்டு ஏறத்தாழ நான்காண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.
எல்லையில் நமது இராணுவ வீரர்கள், எதிரிப்படையை நோக்கி பீரங்கியால் சுட்டால் பீரங்கி திருப்பிக் கொண்டு நமது வீரர்களையே சுட்டது. நமது வீரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிரிகள் இல்லாத இடத்தில்தான் நமக்கு சுட்டுப் பழக்கம். எப்படி திடீரென்று எதிர்த்திசையில் இருந்து குண்டு வருகிறது என்று ஒரே குழப்பம். அப்போது அந்த பீரங்கி சொன்னது “வீரர்களே! என்னைத் தெரியவில்லையா நான்தான் போபர்ஸ் பீரங்கி என்று. இத்தாலியிலிருந்து வந்து இந்தியர்களின் தாலியை அறுக்க வந்த காக்ரோச்சியோ கொக்ரோச்சியோ செய்த பீரங்கி. குற்றமிழைத்த இந்தப் பாச்சை எங்கோ வெளிநாட்டுக்குப் பறந்து போயே விட்டது. பின்னர் மண்டையைப் போட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதில் ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருந்தது என்று பேசப்பட்டதை மூடி மறைக்க இயலாது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று ஒரு இராணுவ அமைச்சர் இருந்தார். போரில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு அனுப்பும் சவப் பெட்டியின் பேரத்தின் மீது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு வழக்காகவே நிற்கிறது. காரணம் அவரோ இன்று சுய நினைவு இழந்து ஆடை இன்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக் கிடக்கிறார்.
1962- க்குப் பின் பஞ்சாபில் கெய்ரோன் என்ற ஊழல் மன்னர் முதலமைச்சராக இருந்தார். ஊழலின் சிகரத்துக்கே சென்றுவிட்ட மனிதர் இவர். இன்றைய உலகம் இவரை மறந்துவிட்டது. நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிரூபணம் ஆயின. ஆனாலும் தண்டனை வழங்கப் படவிருந்த நேரத்தில் அவரது காரில் வைத்து சுடப்பட்டு செத்தார்.
நாங்கள் கங்கையில் குளித்து வந்த புனிதமான கட்சி என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் என்பவர் ஒரு இனிய இணைய தளத்தின் இரகசிய கேமிராவால் இலஞ்சம் வாங்கியபோது படம் பிடிக்கப் பட்டார். அப்போது அவர் கேட்டது இந்திய ரூபாயாக வேண்டாம் என்பதாகும் . ஆனாலும் கட்டுக் கட்டாக வாங்கியதை படம் பிடித்து நாறடித்தது தெஹல்கா இணைய தளம். அப்போது கூட அவர் வாங்கிய பணத்தில் ஆறு பங்கு வைக்கப் பட்டு ஒருபங்குதான் அவருக்கு என்று கூறினார். மற்ற ஐந்து பங்கு யாருக்கோ என்று கூறவில்லை. இதுவும் ஒரு ஆரிய மாயையே. இதனால்தான் இவர் பங்கு ஆறு லட்சுமணன் ஆனாரோ என்னவோ. சிலகாலம் சிறை சென்றார். ஜாமீன் போர்வை போர்த்திக் கொண்டு வெளியில் வந்தார்.
சர்க்காரியா கமிஷன் என்ற ஒரு நீதி விசாரணைக் குழுவைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அறிவியல் ரீதியான ஊழல் செய்தவர் என்கிற சான்றிதழ் அவருக்கு வழங்கப் பட்டது. “ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே “ என்ற பாடல் பலரின் உள்மனதைக் குத்தியதும் உண்மைதான்.
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது அரசின் பங்காளியாக இருந்த பாரதீய ஜனதா கட்சியின் உதவியால் ஆசிரியர் நியமன ஊழலில் ஐ ஏ எஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து அடித்த கொள்ளைகளுக்காக தனது மகனுடன் இன்று சிறையில் பத்து ஆண்டு தண்டனை காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.
இன்னும் பிரதமர் மன்மோகன் சிங் மீதே நிலக்கரி பேர ஊழல் வழக்கு தொடங்கி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ. ராசா, மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஆதர்ஷ் வீட்டு ஊழலில் மகாராஷ்டிரா முதல்வர், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடி (களவாடி?) ஆகியோர் மீதெல்லாம் இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இப்போதைய காங்கிரஸ் எம் பி , முன்னாள் மக்கள் நலத்துறையில் என்ன எழவு அமைச்சராகவோ இருந்த ரஷீத் மசூத் என்பவர் மீது மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்ததற்கு கையூட்டுப் பெற்ற குற்றம் நிருபிக்கப் பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை நேற்று வழங்கப் பட்டு இருக்கிறது. இவரது மக்களவை உறுப்பினர் பதவியும் பறிபோகும். ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிறக் முடியாது. மருத்துவக் கல்லூரி இடம் என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் வருடா வருடம் கொட்டும் அமுதசுரபி. ஆனால் ரஷீத் மசூத் மட்டும் மாட்டிக் கொண்டார். இந்தமாதிரியான குற்றத்துக்கு அரசியல்வாதிகளைப் பிடித்து உள்ளே போட்டால் நாட்டில் ஒரு அரசியல்வாதிகூட வெளியில் இருக்க முடியாது. இது ஒரு சம்பாப் பயிர் அறுவடையாகும்.
இப்போது குற்றவாளி எனக் காணப் பட்ட லாலு பிரசாத் இந்தக் குற்றத்துக்காக ஏற்கனவே 155 நாட்கள் சிறையில் இருந்துவிட்டார். மத்திய அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராக இருந்தபோது இரயில் கட்டணத்தை உயர்த்தாத நிர்வாகத்துக்கு சொந்தக்காரர். அத்துடன் இரயில்வேயின் வருமானமும் உயர வழிசெய்தவர்.
இவர் சார்ந்துள்ள யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மீசையை முறுக்கி உயர்த்தி வைத்தால் உயர்சாதியினரின் தண்டனைக்கு உள்ளாகிக் கொண்டு இருந்தார்கள். மீசை தாழ்ந்தே இருக்கவேண்டும். இத்தகைய உயர் சாதிக் கொடுமைகளை எல்லாம் பீகாரில் உடைத்து எறிந்தவர் லாலு பிரசாத். ஆடுமாடுகள் மேய்க்கும் யாதவ சிறுவர்கள் படிப்பறிவு பெறவேண்டும் என்பதற்காக ஆடுமாடுகள் மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஆசிரியர்களை அனுப்பி அங்கெல்லாம் பள்ளிகளைத் தொடங்கியவர். பீகார் மக்களிடையே நல்ல செல்வாக்குப் பெற்ற வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். மனிதன் பலவீனமாகப் படைக்கப் பட்டு இருக்கிறான் என்கிற இலக்கண சொல்லுக்கு இன்று இலக்கியமாக ஆளாகி இவ்வளவு நாட்களாக தான் ஈட்டிய புகழ், செல்வாக்கு, மதிப்பு ஆகிய அனைத்தையும் இன்று இழந்து நிற்கிறார். புத்தர் பிறந்த மண்ணில் பேராசையே துன்பத்துக்குக் காரணம் என்கிற புத்தரின் வார்த்தைகள் லாலுவைப் பொருத்தவரை உண்மையாகிவிட்டன. இன்னும் பலருக்கு உண்மையாக வேண்டி இருக்கிறது.
ஆனாலும் லாலு ஒரு தவறு செய்துவிட்டார். இந்த வழக்கை எப்படி இன்னும் ஐநூறு வருடங்களுக்கு இழுத்து அடிக்கலாம் - தன்மீது சாட்டப் பட்ட குற்ற வழக்கை எந்த நீதிபதி விசாரிக்கலாம் - அரசின் சார்பில் யார் வக்கீலாக இருக்க வேண்டும் - எந்த மொழியில் தனக்கு வழக்கு ஆவணங்கள் மொழி பெயர்த்துத்தர வேண்டும்- வழக்கை இந்தியாவில் நடத்தலாமா அல்லது ஆஸ்திரேலியாவில் நடத்தலாமா என்றெல்லாம் ஆலோசனை கேட்க வேண்டியவர்களிடம் கேட்டு இந்த வழக்கை எதிர் கொண்டு இருந்தால் இந்த வழக்கு இன்னும் நீண்டு கொண்டே சென்று இருந்து இருக்கும். கண்ணெதிரில் காண்கின்ற உதாரணங்களை லாலு கண்டு கொள்ளாமலும் அவாளைக் ‘கண்டுக்காமலும்’ இருந்தது அவர் தவறு.
இன்று உலகம் நோக்கிக் கொண்டு இருக்கிறது ஆரியர்களுக்கு ஒரு நீதி! பிற்பட்டோருக்கு ஒரு நீதி! என்று மனுநீதி சொல்வது நடைமுறையில் நடப்பதை உலகம் கண்வைத்து கவனித்துக் கொண்டு இருக்கிறது. தான் செய்த குற்றத்தை இன்னார்தான் விசாரிக்க வேண்டும் என்றும் தன்னை எதிர்த்து அரசின் சார்பில் இன்னார்தான் ஆஜாராக வேண்டுமென்று ஒரு குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் தைரியமாக முறையிடுகிறார். நீதி மன்றமும் அப்படியே ஆகட்டும் என்று தீர்ப்புத் தருகிறது என்றால் இதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியுமா?
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மனைகள் மூலம் வணிக நிறுவனங்களுக்குச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெருந்தொகையாக அளித்த கடன்கள், கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஒப்பந்தம் என்கிற பெயரில் அடித்த பெருங்கொள்ளை, முதலமைச்சர் எடியூரப்பா அரசு நிலத்தைத் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்த அட்டூழியம், இராணுவத்தில் உயர் அதிகாரிகள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் தங்களின் இரத்த உறவினருக்காகத் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், இவற்றுக்கெல்லாம் மணிமுடியாக, உச்சநீதி மன்றத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞர் பிரசாந் பூஷன், அண்மையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்த 16 பேரில் பாதிப்பேர் ஊழல் பேர்வழிகள் என்று சாற்றியுள்ள குற்றச்சாட்டு இவைகள் எல்லாம் ஜனநாயக முறையின் மீது விழுந்த கரும்புள்ளிகள்.
சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மை என்று மெய்ப்பிக்கப்படுகின்றன. ஊழல் செய்த அமைச்சர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை, உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உயர் அதிகாரிகளை, இராணுவத் தளபதிகளை, பத்திரிகையாளர் அல்லது தொலைக்காட்சி செய்தியாளர்களை, ஆட்டு மந்தையில் - ஆட்டின் தோலைப் போர்த்துக் கொண்டுள்ள ஓநாய் - ‘கறுப்பு ஆடு’ என்று ஆளும்வர்க்கத்தினர் கூறி ஒதுக்கிவிடப் பார்க்கின்றனர்.
இந்தக் ‘கறுப்பு ஆடுகளின்’ எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளபோதிலும், ஆட்சி அமைப்பில் அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களைக் கைப்பற்றி, மக்கள் நாயகத்திற்கு மாற்றாக முதலாளியப் பெருங்குழுமங்களின் கார்ப்பரேட் நாயகத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்ற வகையில் இவற்றை மாற்றியமைத்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், உயர் அதிகாரவர்க்கம், நிதி நிறுவனங்கள், பெருமுதலாளியக் குழுமங்கள் ஆகியவற்றில் செல்வாக்கும் சிறப்புரிமைகளும் பெற்றுள்ள சிறுகும்பலே ஒன்றுசேர்ந்து நாட்டை ஆளுகிறது.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காப்பியத்தின் தொடக்கத்தில் கூறுகிறார். இந்த வார்த்தைகள் பலிக்கும். இதற்கு சிலர் நிச்சயம் பலியாவார்கள்.
தொடர்ந்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.
18 Responses So Far:
இது பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு வேண்டுகோள்:
"உங்களுக்கு இந்த வலைத்தளம் பிடித்திருக்கிறதா?" என்னும் ஃபேஸ் புக் கேள்வி ..ஏறக்குறைய ரயில்வேஸ்டேசனில் பிச்சை எடுப்பவன் மாதிரி பிச்சை போட்டவனிடமே திரும்ப திரும்ப வந்து கேட்கிறது.
ஏதாவது செய்யுங்கப்பா...
கொசுறு கேள்வி: ' லைக்" [ பிடித்திருக்கிறது ] என்று மட்டும்தான் எழுத வேண்டுமா?....
கூடவே புதுப்பித்தல் தொடர்பான கருத்து எழுத முடியாதா?.....
நாலு பேர் நம்மள திட்டினால்தானே நாம முன்னேறுவது தெரியும்...
இரண்டு காக்காமர்களும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளின் பட்டியலை போட்டு ஒரு ஆராய்ச்சியே நடத்தி இருக்கின்றீர்கள்.
ஊழலுக்கு நீதிபதிகளும் விதிவிலக்கல்ல என்பதை படித்தபோது ,
நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், எல்லாமே ஒரு கேலிக்கூத்தாகவே தெரிகின்றது.
இதையெல்லாம் படித்து முடித்தபோது என் நினைவில் நிழலாடியது,
நாட்டின் கடைசி குடிமகன் நீதியை எதிர்பார்ப்பதெல்லாம் இந்நாட்டில்
வானில் பறக்கும் விமானத்தின் இறக்கையை பிடிக்க ஆசைப்படுவது போல்தான்
அபு ஆசிப்.
//"உங்களுக்கு இந்த வலைத்தளம் பிடித்திருக்கிறதா?" என்னும் ஃபேஸ் புக் கேள்வி ..ஏறக்குறைய ரயில்வேஸ்டேசனில் பிச்சை எடுப்பவன் மாதிரி பிச்சை போட்டவனிடமே திரும்ப திரும்ப வந்து கேட்கிறது. //
ஹா ஹா ஹா !
எல்லாமே 'மோடி' மஸ்தான் வேலைதான் காக்கா...!
நேற்று இந்த கேடி சொன்னது "கோவில் கட்டுவதற்கு பதிலாக கழிவறைகளைக் கட்டலாம் !?"
இரயிலில் டீ விற்றவர்தான் இரயில் எரிப்பை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் !
ஸாரி பதிவுக்கு சம்பந்தி இல்லாமல் சம்பந்திகளைப் பற்றி பேசிவிட்டேன்... :)
~~~~~~ இ.அ.காக்கா ~~~~~~
சும்மா சொல்லக் கூடாது ! உங்களுக்கு "ம்ம்ம்மா" கொடுக்கனும்....
~~~~~~ லைக்ஸ் பன்னுங்க மக்க்களே ~~~~~~
அரசியல்வாதிகளின் ஊழல் பட்டியல் பிரமாண்டமாகத் தெரிகிறது. நிரூபிக்கப்பட்டக் குற்றங்களுக்கான தண்டனையாக பதவியைப்பறிப்பதோ கட்சியின் அடிப்படை உறுப்பினர் இடத்திலிருந்து நீக்குவதோ போதுமானதே அல்ல.
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
அருமைய்யனத் தகவல்கள்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்காமார்களே.
//காரணம் அவரோ
இன்று
சுய நினைவு இழந்து
ஆடை இன்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக் கிடக்கிறார். //
மீட்டிங்ல பேசியிருந்தால் கைதட்டும் விசிலும் வானைப் பிளக்கும்.
சரவெடி....
(பிடிங்க சோடா... தலைவர்களே!)
ஐம்பதாண்டு உயிருக்கு ஐநூறாண்டு வரை வழக்கை இழுத்தடிக்கவும் சட்டம் வைத்திருக்கார்களா?
பாவம் லல்லு தன்னை மட்டும் காப்பாற்ற (அரசியல்) தெரியாதவர்.
லல்லு போல எல்லா தரப்பாருக்கும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மாட்டு உணவுக்கே இப்படி இருக்கும் போது மனித உயிருக்கே வேட்டு வைத்தவர்களுக்கு இன்னும் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.
லாலு மட்டும் மாட்டு விசயத்துலே மாட்டிக்கிட்டாரு மத்த ஊழல் வாதிகள் எல்லாம் கோயில் மாடாட்டம் ஊரை சுத்தி வர்றாங்க
அப்பப்பா தலை சுத்துகின்றது இந்த ஊழல் பெருச்சாளிகளின் லிஸ்டை படித்தவுடன்
//பிடியுங்க சோடா //
இது நல்ல சோடாவா? இல்லே ! நல்ல சோடாவான்னு கேட்டேன்.
காரணம் நிறைய பெப்சி, மிரண்டா, செவன் அப் பாக்டரிகள் கூடுவாஞ்சேரியில் பிடிபட்டு இருக்கின்றன. உபயமும் அபயமும் உள்ளூர் நாலெழுத்துக் கட்சிப் பிரமுகர்.
பாவம் லாலு ! தீவனம் மாட்டுக்கு என்றுதெரியாமல் மேய்ந்துவிட்டார்.அவர் மனைவி பெயர் ராப்ரி தேவி. ராப்ரி தேவிதான். ROBBERY தேவியல்ல.
//பாவம் லாலு !//
காக்கா,
லாலுவின் உடல்நிலை பலநிலைகளிலும் பாதிப்புற்றும் நோய்வாய்ப்பட்டும் இருப்பதால் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை தரவேண்டுமாய் அவரின் வக்கீல் மனுச்செய்திருப்பதாக ரேடியோ ஹலோவில் சொன்னார்கள். உண்மையா?
கன்றுக்குட்டி தீவணத்தில் ஊழல் செய்தாலாவது குறைந்தபட்ச தண்டனைத்தரலாம் இவர் மாட்டுத்தீவணத்திலல்லவா செய்திருக்கார்.
ஆனால் ஒன்று, இவர் ரயில்வே மந்திரியாக இருந்தபோது ரயில்பயணிகளுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். நான் அப்போது சென்னை-மும்பாய்-டெல்லி-கல்கட்டா என்று ராஜதானியில் பயணித்தபோது என்னை மடியில் வைத்து தாலாட்டவில்லையே தவிர செம கவனிப்பு. லாலு பயமாம்.
//இது நல்ல சோடாவா? இல்லே ! நல்ல சோடாவான்னு கேட்டேன்.
காரணம் நிறைய பெப்சி, மிரண்டா, செவன் அப் பாக்டரிகள் கூடுவாஞ்சேரியில் பிடிபட்டு இருக்கின்றன. உபயமும் அபயமும் உள்ளூர் நாலெழுத்துக் கட்சிப் பிரமுகர்.//
காக்கா,
இதென்ன கிசுகிசு ஸ்டைல்ல? :-)
//காக்கா,
இதென்ன கிசுகிசு ஸ்டைல்ல? :-)// அவதூறு வழக்கு அச்சுறுத்துகிறது தம்பி.
//காக்கா,
இதென்ன கிசுகிசு ஸ்டைல்ல? :-)// அவதூறு வழக்கு அச்சுறுத்துகிறது தம்பி.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அப்பப்பா! இத்தனை புள்ளிவிவரத்துடன் அரசியல் கரும்புள்ளிகளை பட்டியலிட்டது வியத்தகு செயல்.மேலும் அவாள் அத்வானியின் ஹவா(ல்)லா விசயத்தையும் சொல்லியிருக்கலாம்.இது மாட்டு(ம்)தீவன ஊழல்.இதை ஊதி பெருசாக்கியது அவாளின் ஊது குழல்(அவாளின் பத்திரிக்கைகள்).(கிருஷ்னர் கையிலும் புல்லாங்குழல்) லாலுவின் அரசியல் நந்தவனம்(லாலுவணங்கும் கிருஸ்னர் பெண்டீருடன் கும்மாளம்)இப்படி நொந்தவனமாய், மாட்டு தீவனத்தில் "தீ"வனமாய்(சுடுகாடு=காட்டில் தீ)மாறியதும் லாலு தன் வாலுக்கே தீவைத்ததும்(அனுமார் தன் வாயில்தீவைத்து இலங்கையை தீக்கிரையாக்கின கட்டுக்கதை)எல்லாம் ஜாதி(தீ) தாழ்தப்பட்ட அரசியல் வாதி(தீ)யை மட்டுமே சுடுவதெப்படி? பகுருதீன் காக்காவின் ஆக்கத்தில் இபுறாகிம் அன்சாரி காக்காவின் சாயல் வந்ததெப்படி??? சேர்ந்தே இருப்பதாலா? மொத்தத்தில் ஜனரஞ்சகம்!
அனுமார் வாயில் என தவறாக வந்துவிட்டது, வாலில் என படிக்கவும்.
Post a Comment