Sunday, January 12, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நண்பா உன் நட்பு! 34

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2013 | , , , , ,

நண்பா
நாளை - நல்
காலையாய் வெளுக்குமென
நம்பிக்கை தந்த நண்பா

நீ
சொன்னது போலவே
விண்ணது வெளுத்தது
இண்டுயிடுக்கை யெல்லாம்
வெளிச்சம் நிறைத்தது!

என்
சொல்லும் செயலும்
எண்ணமும் ஏக்கமும்
கண்டும் கணித்தும்…
பின்னது நாட்களில்
இன்னது நடக்குமென
சொன்னது நீயே!

உன்னை
நண்பனாய் நம்பினேன்
அம்பென எம்பினேன்
நானினைத்தத் திசைநோக்கி
நாணிழுத்து
என்னை
எய்தவன் நீதான்…
அரும்பவும் பூக்கவும்
திரும்பவும் தளிர்க்கவும்
கருணையாய் மழையெனப்
பெய்தவன் நீதான்!

இலக்கினை ஏகிட
இடர்மேல் இடரென
வழியெலாம் இருள்…
விளக்கென ஏந்திட
வாய்த்த உன் நட்பு
வல்லவன் அருள்!

பயணித்தப் பொழுதுகளில்
பலமிக்க விழுதுகளாய்
நிழலுக்குப் பதிலாக
நீயன்றோ நின்றாய்…
ஏற்றிய ஏணியை
எட்டி உதைத்தல்
தீதன்றோ என்றாய்!

பசிக்குப் புசிப்பது
விலங்கியல் என்றால்…
பசிப்பவன் புசிப்பதை
வசிப்பவன் ரசிப்பதே
மனிதயியல் என்றாய்!

வாழ்க்கையைக் கற்கவும்
கற்றபடி நிற்கவும்
வேட்கையை விதைத்தவன் – நீ
வார்த்தைகள் கோத்து
தோற்றதைத் தேற்றி
விழிநீர் துடைத்தவன்

உன்
கைவிரல் கோத்து
கால்களால் கடந்த
தூரங்கள் அதிகம்…
படைகள் புடைசூழ
பாரினை எதிர்கொள்ள
புஜபலம் உன் நட்பு

எத்துணை தூரம்
எந்தெந்தத் தேசம்
எப்படிப் பிரித்தாலும் – எனக்குப்
புத்துணர்வோடு பூமியை வெல்ல
சத்துணவன்றோ
உன் நட்பு!

ஜாகிருக்காக சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

34 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

மனதை உருக்கும் வரிகள்.
நட்புக்கு புது இலக்கணம் இந்த கவி வரிகள்.

உங்கள் இருவரின் நட்பு உங்கள் சந்ததியினரிடமும் தொடர வேண்டும். அதற்காக து ஆ செய்கிறேன்.

இன்று whats upல் என் கல்லூரி நண்பன் என்னிடம் கிண்டல் அடித்து உரையாடிக் கொண்டிருந்தான், உடனே ஒரு கேள்வி கேட்டான். நீ நல்லவனா? கெட்டவனா?

அதே கேள்வியை நான் கேட்டேன், நீ நல்லவனா? கெட்டவனா?

அதற்கு அவன் சொன்னான், நீ நல்லவானாக இருந்தால் நான் நல்லவன், நீ கெட்டவனாக இருந்தால் நான் கெட்டவன்.

நான் சொன்னேன், நீ நல்லவனா கெட்டவனா என்று உன்னை சுற்றியுள்ளவர்களிடம் கேள் நான் நல்லவனா கெட்டவனா என்று தெரியும் என்று முடித்தேன்.

இது எதார்த்தமான உரையாடல் என்றால், அது தான் உண்மை.. நல்ல நண்பனுடைய நண்பன் நிச்சயம் நல்ல நண்பனாகவே இருப்பான் என்பது சபீர் காக்கா, ஜாஹிர் காக்கா இருவரின் குணங்களே சாட்சி.

KALAM SHAICK ABDUL KADER said...

உங்களின் அணுக்கத் தோழரின் அன்பை விளக்கும் இக்கவிதையால் மட்டும் நன்றியை நிரப்பிட இயலாது; எனினும், நட்பை நினைவுக் கூறும் நல்லெண்ணமும் ஒரு வகை நன்றி என்பதிலும் மாற்றுக் கருத்துக் கிடையாது.

உங்களின் நண்பரின் நினவால் நீங்கள் இட்ட இந்தக் கவிதையால், என் ஆருயிர் நண்பன் தமீம் உடைய நட்பின் நினவால் யான் முன்பு இத்தளத்தில் பதிந்தவற்றையே மீள்பதிவு செய்கிறேன்; (கண்ணும் கருத்துமாய் இருக்கும் நண்பன் மன்சூர்ப் பார்வைக்கும் படட்டும்)



பலம்குன்றி நிற்கும் பருவத்தி லெம்மை
நலம்பெற நாடுதல் நட்பு.


உடைமாற்றிப் போட்டதையும்; உண்டதையும்; ஒற்றைக்
குடைக்குள்ளே ஓருடலாய்க் கொட்டும் மழையில்
நடைபயிற்சி செய்ததையும் நட்பால் இழைத்துத்
தடையின்றிப் பொழிகின்ற தன்னிலைக் கூற்று
விடைபெற்று வந்த விநாடியும் போற்றும்
அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
படைத்தோனே வழங்கும் பரிசு.


sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்பிற்குரிய தம்பி தாஜுதீன்,

நல்ல நண்பன் கெட்ட நண்பன் பற்றிய உரையாடல் சுருக்கமாக இருந்தாலும் செறிவாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் உள்ளது.

நட்பு என்பது ஓர் உறவு மட்டுமல்ல; அது ஒரு சக்தி, ஒரு நெம்புகோல், ஒரு சாவி.

சாதிக்கத் தூண்டும் சக்தி
மலையளவுக் கவலையையும் புரட்டும் நெம்புகோல்
புதிர்களுக்கான சாவி

இப்படி வாய்க்கப்பெற்றவரே வெற்றியாளர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பயணித்தப் பொழுதுகளில்
பலமிக்க விழுதுகளாய்
நிழலுக்குப் பதிலாக
நீயன்றோ நின்றாய்…//

சகோ ஜா. வின் தன்மை அருமை!

இப்படியெல்லாம் இன்னாருக்காக இன்னார் கவிதை மாலை யிட்டு நட்பு மலர்த்தி மணக்கச் செய்கிறார்களே!
வாழ்க உங்கள் நட்பு

ZAKIR HUSSAIN said...

Attention அதிரை நிருபர்:

ஆன்லைனில் ஒரு பட்டன் அழுத்தினால் கண்திருஷ்டி சுத்திபோடும் முறை எதுவும் இருந்தால் இந்த கவிதையின் வலது கீழ் பகுதியில் பொருத்துக:

காலடி மண் எடுத்து அனுப்பும் ஏஜென்சியும் இத்துடன் விளம்பரம் செய்யலாம் [ஃப்ளாஸ் பிரசன்டேசன் இலவசம் ]

Ebrahim Ansari said...

//பசிக்குப் புசிப்பது
விலங்கியல் என்றால்…
பசிப்பவன் புசிப்பதை
வசிப்பவன் ரசிப்பதே
மனிதயியல் என்றாய்//

ஆயிரம் முறை எழுந்து நின்று கைதட்டவைக்கும் கவி வரிகள்.

நட்பைப் பற்றி உணர வேண்டுமென்றால் எல்லோராலும் உணர முடியும். ஆனால் எழுதவேண்டுமென்றால்/ உள்ளத்தில் உள்ளதைக் கொட்டித்தீர்க்க சிலரால் மட்டுமே முடியும்.

"நட்புக்கு வயது நாற்பத்திஎட்டு" நான் கூட ஒரு பதிவை நீண்ட நாட்களுக்கு முன் பதிந்து இருந்தேன்.

உலகில் நண்பர்கள் அமைவதே வரம் என்று நம்புபவன் நான்.

உன் நண்பர்கள் யார் என்று நீ சொல் நீ யார் என்று நான் சொல்கிறேன் என்று ஒரு சொலவடை உண்டு.

நண்பர்களைப் பற்றி எழுதவேண்டுமானால் இங்கே தம்பி சபீர் அவர்கள் கொட்டி இருப்பதைக் காட்டிலும் என்னால் கண்ணீர் சிந்திக் கொட்ட பல நிகழ்வுகள் உள்ளன. ஆனால் இவ்வளவு கவித்துவமாக எழுத வராது.

ஆனால் ஒன்று

நானூறு அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து கிடந்த என்னை பக்கத்தில் பள்ளம தொண்டாமலேயே - பொகரைன் இயந்திரம் இல்லாமலேயே கைதூக்கிவிட்டவர்கள் எனது நண்பர்களே!

சொந்தங்கள்? No Comments.

Unknown said...

//இலக்கினை ஏகிட
இடர்மேல் இடரென
வழியெலாம் இருள்…
விளக்கென ஏந்திட
வாய்த்த உன் நட்பு
வல்லவன் அருள்!//

சபீர்
உங்கள் இருவரின் நட்பின் ஆழத்தில் உதித்த இந்த கவியில்
வழியில் விழி காண இயலா இருட்டில் விளக்கின் ஒளியாய் வந்த
நட்பை இறைவன் அருளாக நினைத்த உன் நட்பின்
ஆழத்தை உணர்த்தும் வரிகள்

உன்னத நட்புக்கோர் எடுத்துக்காட்டு.

வாழ்க உங்கள் நட்பு இறுதிவரை.

அபு ஆசிப்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இது நண்பாவுக்கு வெண்பா வா ? இல்லை ,அன்பால் பொங்கிய வெண் பொங்கலா? இல்லை அடிக்கரும்பா? எத்தனை முறைப்படித்தாலும் இனிக்கிறதே!

crown said...

நண்பா
நாளை - நல்
காலையாய் வெளுக்குமென
நம்பிக்கை தந்த நண்பா
----------------------------------------------------------
இருன்ட இரவில் உறக்கமின்றி உருண்ட என்னை மருன்ட பார்வையில் கரிசனமாய் பார்த்தாய் பின் கவலை மற உறங்கி எழு! உனக்கும் விடியும்,இருளும் வடியும் என இதயத்தில் படியும் படி செய்தவனே! என் நம்பிக்கையின் முழுபலமே! என் நண்பன்!

crown said...

நீ
சொன்னது போலவே
விண்ணது வெளுத்தது
இண்டுயிடுக்கை யெல்லாம்
வெளிச்சம் நிறைத்தது!
--------------------------------------------------
பளிச்சென வந்து இண்டு இடுக்கில்(உருவகம் இங்கே= துன்பம் தரும் மன நிலையை சொல்வதாய் அமைகிறது) நுழைந்து,இன்னல் நீக்கிடும் மின்னலாய் ஆனதே உந்தன் நட்பின் வெளிச்சம்!

crown said...

என்
சொல்லும் செயலும்
எண்ணமும் ஏக்கமும்
கண்டும் கணித்தும்…
பின்னது நாட்களில்
இன்னது நடக்குமென
சொன்னது நீயே!
-------------------------------------
என் எண்ணத்தின் பாசை புரிந்தவனும் நீயே!என் கண்ணத்தில் சொறியும் கண்ணீர் துடைத்தவனும் நீயே!பொன்னேட்டில் என்பெயர் பதிக்கப்படும் நாள் வரும் என கணித்து,எனக்காய் செத்து,செத்து ஜனித்தது நீயே! என் நட்பின் தேசத்து தாயே! நீயே!

crown said...

உன்னை
நண்பனாய் நம்பினேன்
அம்பென எம்பினேன்
நானினைத்தத் திசைநோக்கி
நாணிழுத்து
என்னை
எய்தவன் நீதான்…
அரும்பவும் பூக்கவும்
திரும்பவும் தளிர்க்கவும்
கருணையாய் மழையெனப்
பெய்தவன் நீதான்!
--------------------------------------------------------------------

நண்பனே! நம் நட்பிற்கு நான் நட்பையே தரமுடியும் இன்னும் கூடுதல் பிணைப்புடன்,இணைப்புடன்,கணிவுடன் ,கண்ணியத்துடன்.கவிஞரே ! நட்பின் இலக்கணத்தை இக்கணத்தில் இதைவிட சிறப்பாய் எழுதவும் முடியுமோ? வாழ்க உமது நட்பு! ஓங்குக உங்கள் மொழிபுலமை! நன்றியுரை நவின்றுள்ளீர்கள்.

crown said...

இலக்கினை ஏகிட
இடர்மேல் இடரென
வழியெலாம் இருள்…
விளக்கென ஏந்திட
வாய்த்த உன் நட்பு
வல்லவன் அருள்!
-------------------------------------------
உண்மை நட்பின் பொருள் ,வல்லவனின் அருள் ,இருள் நீக்கிடும் விளக்கு நம் நட்பு என்று நண்பனின் உதவியை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய விதம் நிலவு வெளிச்சத்தில் மிதமான இளங்குளிரில் காலாற நடைபயில்வதுபோது நாசியை வருடும் மலர்கொத்திலிருந்து வரும் ஒரு சுகந்தம்!

crown said...

பயணித்தப் பொழுதுகளில்
பலமிக்க விழுதுகளாய்
நிழலுக்குப் பதிலாக
நீயன்றோ நின்றாய்…
ஏற்றிய ஏணியை
எட்டி உதைத்தல்
தீதன்றோ என்றாய்!
--------------------------------------------

நான் நிழலில் இருக்க நீ வெயிலில் காய்ந்தாய்!
நன்றி மறப்பதற்கு பதில் இறப்பதே மேல் என வாழ்கை பாடமும் போதித்தாய்! நான் சாதிக்க நீ சந்தோசத்தில் மூழ்கிப்போனாய்!

crown said...

பசிக்குப் புசிப்பது
விலங்கியல் என்றால்…
பசிப்பவன் புசிப்பதை
வசிப்பவன் ரசிப்பதே
மனிதயியல் என்றாய்!
-------------------------------------------------------
இப்படியெல்லாம் கவிதை சோறு சமைத்து பறிமாற உங்களால் மட்டுமே முடியும். இது கவிதை மட்டுமல்ல உண்மையின் பிரதிபலிப்பு! நட்பின் வாக்கும் மூலம்!

crown said...

எத்துணை தூரம்
எந்தெந்தத் தேசம்
எப்படிப் பிரித்தாலும் – எனக்குப்
புத்துணர்வோடு பூமியை வெல்ல
சத்துணவன்றோ
உன் நட்பு!
------------------------------------------
நல்ல போசாக்கு நிறைந்த உணவு நட்பு! அருமை! இரு வேறு இடத்தில் இருந்தாலும் காற்றில் நூல் செய்து அறுந்து போகாமல் மூச்சுக்காற்றிலும் மாறி, மாறி பறிமாறப்படும் இந்த நட்பு என்றும் வாழ்க! ஆமீன். என் தேசத்தின் கவிதை சக்கரவர்த்தியின் "கிரிடம்" என்றும் இவரிடமிருந்து கழட்டப்படாது இது உறுதி!

Shameed said...

நடப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்

உங்களின் நட்ப்பு 50 வருடத்தை தாண்டி இருக்கணுமே!!

Yasir said...

கொடுத்து வைத்தவர்கள் இரண்டுபேரும்....ஏங்ங்ங்கக வைத்த கவிதை....உங்களைப்போன்றவர்களின் அனல் படுவதே நாங்கள் கொடுத்துவைத்த பாக்கியம்

அதிரை.மெய்சா said...

அடடா நட்பை பற்றி எளிமையான வார்த்தைகளைக்கொண்டு ஏற்றமான அர்த்தங்களை பின்னி நட்பை இமயத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்று விட்ட அருமை நட்பே. உன் மனதினில் உள்ள ஆதங்கங்களை கவி வழியாக தந்தமைக்கு வாழ்த்துக்கள். நண்பனே.!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா'ஸ்... உங்களிருவரின் நட்பை போற்றி கருத்திட திருவள்ளுவரிடம் மூனு குறள் எழுதச் சொல்லி பாடுபடுத்தி வாங்கி வந்து இங்கே பதிந்திருக்கேன்...

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

நீடூழி வாழி..

இப்படிக்கும்

'இபு'வின் ஃப்ரெண்டு...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Attention அதிரை நிருபர்:

ஆன்லைனில் ஒரு பட்டன் அழுத்தினால் கண்திருஷ்டி சுத்திபோடும் முறை எதுவும் இருந்தால் இந்த கவிதையின் வலது கீழ் பகுதியில் பொருத்துக://

அதைப் பற்றியும் திருவள்ளுவரிடமே கேட்டேன்...

"விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.?

இதைப் போடு வேற பட்டெனெல்லாம் வேனாம்னு வள்ளுவர் சொல்லிட்டார் காக்கா...

//காலடி மண் எடுத்து அனுப்பும் ஏஜென்சியும் இத்துடன் விளம்பரம் செய்யலாம் [ஃப்ளாஸ் பிரசன்டேசன் இலவசம் ]//

அது அம்மா திட்டத்தில் இன்னு வரலைன்னு சொல்லிட்டாங்க.... அப்படி அம்மா திட்டத்தில் இடம் பெற்றால் செய்திடலாம் காக்கா.. :)

sabeer.abushahruk said...

//அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
படைத்தோனே வழங்கும் பரிசு.//

கவியன்பன்,

மிகச் சரியாகச் சொன்னீர்கள். நட்பெனும் நல்லுணர்வும் நல்ல நண்பனும் வாய்க்கப்பெறுதல் இறைவனின் அருள்.

எம் ஹெச் ஜே,

நல்ல நண்பர்களால் மட்டுமே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் மேன்மையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதைஅனுபவத்தில் உணர்ந்தவன் நான். அவ்வப்போது நினைவுகூர்வது யதார்த்தமானது. நன்றி. (அப்புறம் எம் ஹெச் ஜே.; அப்பவே சொல்ல நினைத்தேன், "உவர்" என்பது தமிழ் வார்த்தைதான், உயர்திணை பலர் பாலில்வரும் சுட்டுப்பெயர் :-))

ஜாகிர்,: இன்னும் இருக்கிறது சொல்ல.

இபுறாகீம் அன்சாரி காக்கா,

//சொந்தங்கள்? No Comments//

இந்த அபிப்ராயத்தை வாசிக்கும்போதே வலிக்கிறது. இது இப்படியா இருந்திருக்க வேண்டும்? சொந்தங்கள்? சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது எவ்வளவு கசப்பான உண்மை? இது எல்லோருக்கும் பொருந்தும் ஒரு கமென்ட்டாக மெல்ல மெல்ல மாறி வருவதற்கெதிராக அதிகமதிகம் எழுதி உணர்த்தப்பட வேண்டும் காக்கா.

அந்தப் பொருப்பு நம் அனைவருக்குமே உள்ளது.

நன்றி, காக்கா.

காதர்,
என் வாழ்க்கையின் எல்லா நிலையிலும் நண்பர்களைக் கொண்டே நான் வார்த்தெடுக்கப்படுகிறேன்.

நன்றி.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம கிரவுன்,

இந்தப் பதிவில் தங்களின் கிரவுனுரையும் தொலைபேசியில் தங்களின் மிகச் சுவாரஸ்யமான உரையாடலும் இன்றைய விடுமுறை நாளைக் கொண்டாடிய திருப்தியையும் புத்துணர்வையும் தந்தது.

உரையாடலின்போது ஒவ்வொரு வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன் எனினும் கீழ்கண்டது ஒரு மாஸ்டர் பீஸ்:

முயலாமை:

முயல்
ஆமையிடம்
தோற்றுப்போகக் காரணம் முயலாமை.

+++

இந்தப் பதிவு பறைசாற்றவோ பீற்றிக்கொள்ளவோ அல்ல; நட்பின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் வாசிப்போருக்கு உணர்த்தவே என்பதை கிரகித்து, அழகு தமிழில் ஆழ்ந்த வாசிப்பின் அடையாலமாகத் தாங்கள் பதிந்திருக்கும் கருத்துகளை என் கழுத்தில் அணிவிக்கும் மாலையென சந்தோஷமாக ஏற்கிறேன்.

மிக்க நன்றியும் கடப்பாடும்

sabeer.abushahruk said...

ஹமீது,

நாமெல்லாம் ஒரே செட்டுதானே, அப்புறம் ஏன் கேள்வி; விடை தெரிந்து வைத்துக்கொண்டே. (டை அடிச்சாச்சா?)

யாசிர்,
சமீபத்தில் எனக்கு கிடைத்த அரிய விஷயங்களில் தங்களின் அறிமுகமும் நட்பும் தலையாயது. நன்றி.

மெய்சா,
வரவிற்கும் வாசிப்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. மனித வாழ்க்கையின் உணர்வுபூர்வமான விஷயங்களைப் பற்றி அதிகம் நீயும் எழுத வேண்டும் என்பது வேண்டுகோள்.

sabeer.abushahruk said...

அபு இபு,

ஏன் வள்ளுவரெல்லாம்... நாமே உதாரணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது?

நன்றியும் வாழ்த்துகளும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//உவர்" என்பது தமிழ் வார்த்தைதான், உயர்திணை பலர் பாலில்வரும் சுட்டுப்பெயர் :-)) //
அப்படியா தமிழின் தமிழ் தானா! எங்கே அந்த அபூபக்கர் கேன் காக்காவை கானோமே!

// கவிதை மாலை யிட்டு நட்பு மலர்த்தி மணக்கச்//
அது போல என் தமிழில் மணக்க என்பதில் ச்சின்ன "ன" வாக இருக்கனும்.

Unknown said...

It is Pure.Not Materialistic.Admireable friendship by Sabeer and Zakir Kaaka's.
Long Live.
Best Regards
Harmys

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

எத்துணை தூரம்
எந்தெந்தத் தேசம்
எப்படிப் பிரித்தாலும் – எனக்குப்
புத்துணர்வோடு பூமியை வெல்ல
சத்துணவன்றோ
உன் நட்பு!//////////
இப்படி இருக்க சமூக விழிப்புணர்வு பக்கத்தில் வந்த என் கிறுக்கல் கீழே


நண்பேன்டா !

மாமா தந்த
ஐந்து காசில்
வாங்கி வந்தேன்
கமர்கட்டு
காக்காய்
கடிகடித்து
நானுந்தந்தேன்
நண்பனுக்கு

***
அவன்
வாங்கி வந்த
குச்சி ஐசில்
எங்களின்
நாவு சிவப்பு நிறமாய்
மாறிப்போனது

***
இணைபிரியா
நட்புக்கு
இனைந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படம்
இன்றும்
எங்களிடம்
பொக்கிஷமாய்!

***
பள்ளிப்படிப்போடு
அவர்தம்
சூழலால்
பிரிந்துவிட்டோம்
பிரியா விடையோடு

***
கடிதத்தொடர்பு
உறவின்
பாலமாய்
இருக்க

***
ரிடயர்மென்ட்
எனும் மூன்றாம்
நண்பன்
எங்களை
ஒன்று சேர்த்தான்

***
எங்கள்
பேரப்பிள்ளைகளும்
வாரிசுரிமைபோல்
நன்பர்களாய்
ஷேர் செய்கின்றனர்

***
புளுடூத்திலும்
பேஸ்புக்கிலும்
[ அவர்தம்
நட்பை ]

***
எங்கள் ஷேர்
கமர்கட்டும்!
குச்சி ஐசும்!
என்று சொன்னால்
ச்சி டர்ட்டி ஹேபிட்
என்கிறான்
என் பேரன் !

அதிரை சித்திக் said...

இனி சபீர் என்றால் நட்பை பாராட்டுபவர் என்ற பொருள் கொள்ளலாம் ...எனக்கும் சபீர என்ற நண்பன் உண்டு உங்கள் கவி
என் நண்பனுக்கும் சமர்பிக்கிறேன் அவர் பெயரும் சபீர் (மு.சே.மு )
இரு சபீரும் வாழ்க வளமுடன்

sabeer.abushahruk said...

Thanks for the greetings. As long as friendship is reciprocating with true love and care it lasts forever.

By the way, long time no see.

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர்கள் அதிரை சித்திக் அவர்களும் எம் எஸ் எம் சஃபீர் அவர்களும் பால்ய சிநேகிதர்கள் என்பது நான் அறிந்ததே, வாழ்க.

சகோ சஃபீர், ஆத்மார்த்த உணர்வுகள் எப்போதுமே கவிதையாகவே வெளிப்படும். அவற்றை அப்படி அப்படியே எழுதிவிடுவதே நல்ல கவிதைக்கு அடையாலம். அவ்வகையில் தங்களின் ஷேரிங்கைக் கருவெனக் கொண்ட நண்பேன்டா ஒரு மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

உங்களுக்கும்: லாங் டைம் நோ சீ.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வாழிய நட்பு, வளர்க இவ்வலைதளம்,அனைவர்களுக்கும் எனது சலாம்

Unknown said...

Assalamu Alaikkum,

The poem reflects that genuine love and affection find pleasure in giving only without expetations.
Respected brothers, you both set an example. May Allah shower blessings on you.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பசிக்குப் புசிப்பது
விலங்கியல் என்றால்…
பசிப்பவன் புசிப்பதை
வசிப்பவன் ரசிப்பதே
மனிதயியல் என்றாய்!//

ஏனோ தெரியவில்லை... இன்று காலைமுதல் மூட்டுக்கு மூட்டு வலி, உடல் முழுவதும் ஒரே முரிப்பு (நாட்டு மருந்த்துக் கடையிலா இருக்கேன்னு கேட்டுடாதிய)...

கையடக்க தட்டில் அதிரைநிருபரை மேய்ந்து கொண்டிருக்கும்போது இந்த வரிகளைப் வாசித்ததும்...

லைப்-பாய் போட்டு குளித்த பொடியன் மாதிரி சுறுசுறுப்பானது என்ன மாயமோ !?

உங்கள் கவிதையை சுடச் சுட வாசிச்சதும் இருக்கும் சுறுப்பு மட்டும் சும்மா இருக்கும்போது வாசிச்சாலும் வருதே அதெப்படி !?

நேற்று முன்தினம் 'இபு' என்னிடம் ஒரு கேள்வி கேட்க நானும் இணையத்தில் அந்தப் பக்கத்தை சுட்டி எடுத்து ஆன்லைனில் காட்டிக் கொண்டிருக்கும்போது சொன்னேன்... இப்படித் தேடி தேடி படித்தால்தான் நிறைய விரும்பிய விஷயம் தெரியவரும் என்றேன்...!

ஆனால் இபு என்னிடம் திருப்பிச் சொன்னது "எவ்வளவுதான் தேடினாலும் உம்மா சாக்லேட்டை எங்கே மறைத்து வசித்திருக்காங்கன்னு மட்டும் தெரிய மாட்டேங்குது டாடி அதுமட்டும் ஏன்" என்றான்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.