நமதூரில் அண்மைக் காலத்தில் நடந்த இருவேறு நிகழ்வுகள் பற்றிச் சிந்தனையை மனத்துள் ஓடவிட்டேன். அவற்றுள் ஒன்றைப் பற்றிக் கேட்டு உவகையுற்றேன்; மற்றொன்றைப் பற்றி அறிந்து மனம் வருந்தினேன். அவை, இவைதான்:
நமது சகோதர வலைத்தளமான ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ பதிவாக்கி வெளியிட்ட செய்தி இது: http://adiraixpress.blogspot.in/2013/08/blog-post_1035.html#.UlOZK9KBl_Y
அதிரை ஈசிஆர் சாலை வழியாக அதிவேகமாக நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு செல்லும் பொழுது நாய் காருக்கு குறுக்கே புகுந்ததால் திடீரென்று பிரேக் பிடிக்கும்பொழுது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஜோதினி என்ற ஆறு மாத பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவியான சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் வாகனத்தில் பயணம் செய்த மற்றவர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது..
இது குறித்து, தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து அதிரை காவல் துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில், நம் சமுதாய அமைப்புகளின் செயல் வீரர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், சமூக சேவையில் ஈடுபட்டு, உள்ளூர் காவல்துறையை எதிர்பார்க்காமலும், அவர்கள் வந்த பின்னர் அவர்களுக்குத் துணை நின்றும், காயமுற்றோரை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றும், இறந்துவிட்டவர்களின் உடல்களைக் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்த உதவிகள் செய்தும், சேவைகள் செய்துள்ளனர் என்ற தகவலும், வாசகர்களை மகிழ வைத்தது.
அதற்குப் பின்னரும், அமைப்புத் தோழர்கள் காயமுற்றவர்களை அரசு மருத்துவ மனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ மனை ஊழியர்கள் முறையாகச் சிகிச்சை செய்வதற்கு உதவியாக நின்றும், பாதிப்படைந்தவர்களுக்கு மருந்துகளை வாயினுள் செலுத்த உதவிகள் செய்தும், தம் சேவை உணர்வுக்கு இலக்கணமாக நின்று, அவர்களின் தேவைகள் ஒவ்வொன்றையும் பெற்றுக் கொடுத்து உதவிகள் செய்தனர் என்ற செய்தியும் மனத்தைக் குளிர வைத்தது.
காயமுற்றுக் கிடந்தவர்களுள் ஒருவர் தமது ஊரில் தம் குடும்பத்தாருக்கு விபத்தைப் பற்றிக் கூறியபோது, “இந்த ஊர் முஸ்லிம் மக்கள் சேவை உள்ளத்துடன் எங்களுக்கு உதவிகள் செய்கின்றார்கள்! எமக்குக் கிடைத்த மாத்திரைகளையும் மருந்து வகைகளையும் வாயில் ஊட்டிவிடுகின்றனர்! நமது உறவோ, அயலவர்களாகவோ இல்லாத நிலையிலும் எங்களை நல்லபடியாகக் கவனிக்கின்றனர்! நமக்கிடையே எவ்விதப் பிணைப்பும் இல்லாத முஸ்லிம்கள் இவ்வாறு உதவுவதற்கு இவர்களின் மார்க்கமான இஸ்லாம் தடையாக நிற்கவில்லை” எனவும் கூறி, உறவினரையும் ஆறுதல் படுத்தினார் என்னும் செய்தியானது, நம்மை மகிழ்விக்கின்றது.
இரண்டாவது நிகழ்வு:
இதுபற்றி மற்றொரு வலைப்பூவான ‘அதிரை நியூஸ்' வெளியிட்ட செய்தி இதோ:
அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில் இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.
மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார், டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘தக்வாப் பள்ளி’க்குச் சொந்தமான மார்க்கெட் கடைகள் தீக்கிரையான அன்றைய இரவில், நமதூர் இளைஞர்கள் ஓடிப்போய், முதலுதவி என்ற முறையில் தீயை அணைக்கப் பாடுபட்டனர்.
ஆனால், அறிவித்து வெகு நேரம் சென்று வந்ததற்காகத் தீயணைப்புக்காரர்களுடன் சண்டையிட்டு, தீயணைப்பு வண்டி ஓட்டுனரின் மண்டைக்குக் காயம் ஏற்படுத்தி, இளைஞர்கள் சிலர் மனிதத் தன்மையின்றி நடந்துகொண்டனர் என்ற வருந்தத் தக்க செய்தி, நம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றது. இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டோர், முன் நிகழ்வைப் போன்று, முஸ்லிம்களும் மாற்று மதத்தினரும் ஆவர்.
முதல் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள், நமதூர் முஸ்லிம்களைப் பாராட்டினர். இரண்டாவது நிகழ்வில் பாதிக்கப்பட்டவர், மாற்று மதத்தவரான அரசு ஊழியர். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டோர், நம்மவர்களின் நடத்தையால் முஸ்லிம்களான நம் மீது வெறுப்பைத்தான் அள்ளி வீசுவர். பிழை அவர்களிடம் இல்லை; நம்மவர்கள் மீதுதான் உண்டு என்று உரத்துக் கூற முடியும்.
இரண்டும் எதிரெதிர்த் துருவங்கள்! இனி ஏதேனும் பாதிப்போ, வெறுப்பிற்குரிய நிகழ்வோ நமக்கு ஏற்பட்டால், இந்த அரசு ஊழியர்களிடம் ‘நல்ல பெயர்’ வாங்க முடியாது! முன்னதற்குப் பின்னதும் ஈடாகாது!
“இறைவனின் மனித படைப்பினங்கள் அனைத்தும் ஆதமின் குடும்பத்தவர்களே” எனும் அடிப்படையில்தான் சேவை செய்பவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. அப்போதுதான் அந்தச் சேவைகள் நமக்கு நன்மையை ஈட்டித் தரும். மாறாக, உணர்ச்சி வயப்பட்டும் காழ்ப்புணர்வு கொண்டும் நடந்துகொண்டால், நாம் செய்த சேவைகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப் போகும்.
இவ்வாறு ‘மோட்டுத் தனமாக’ நடந்து கொள்பவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாயின், அவர்கள் கல்வியில் குறைந்தவர்கள் என்பதையும், பெற்றோரின் வளர்ப்பில் எதோ கோளாறு உடையவர்கள் என்றும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
அதிரை அஹ்மது
Pictures : supplied
27 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான் ஆக்கம். நல்ல பயிர்களுடன் தான் சில களைகளும் வளர்கின்றன! அவற்றை களைந்துவிட்டு நல்ல பயிர்களை தொடர்ந்து நடுவோம். நடுனிலை காப்போம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியாகச் சொன்னீர்கள் காக்கா.
தீவிபத்து குறித்த செய்தியை அறியும்போதே அரசு ஊழியர் தாக்கப்பட்ட துர்செய்தியும் கிடைத்து ஆதங்கப்பட்டேன். எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களும், தீயணைப்புப் படை வீரர்களும் உயிரை துச்சமென மதித்து தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஏனைய துறை ஊழியர்கள்போன்று லஞ்ச, லாவஞமின்றி செயல்படும் இவர்கள்மீது எனக்கு என்றுமே மதிப்புண்டு.
அரசு ஊழியரை பணியிலிருக்கும்போது தாக்கியது கண்டனத்துக்குரியது. அவ்வாறு மூடத்தனமாக தாக்கியவர்களை ஊர்மக்களே காவல்துறையிடம் ஒப்படைப்பத்து, நடந்த தவறுக்கு ஊர் மக்கள் சார்பில் மன்னிப்பும் கேட்பதும் அறிவார்ந்ததாக இருக்கும் என்பது இங்குள்ள நண்பர்களின் கருத்து.
//அரசு ஊழியரை பணியிலிருக்கும்போது தாக்கியது கண்டனத்துக்குரியது. அவ்வாறு மூடத்தனமாக தாக்கியவர்களை ஊர்மக்களே காவல்துறையிடம் ஒப்படைப்பத்து, நடந்த தவறுக்கு ஊர் மக்கள் சார்பில் மன்னிப்பும் கேட்பதும் அறிவார்ந்ததாக இருக்கும் என்பது இங்குள்ள நண்பர்களின் கருத்து.//
வழிமொழிகிறேன்
\\ முன்னதற்குப் பின்னதும் ஈடாகாது! \\
உரத்தச் சிந்தனையுடனும், உண்மையை உள்ளபடி ஒப்புக் கொண்டுதான் நமது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் தூயத் தமிழில் அருமையாக எழுதப்பட்டிருக்கின்றது. மேலும், ஆசான் அவர்களின் ஆக்கத்தைப் படிக்கும் போதில், எனக்கு ஏற்படும் ஒற்றுப்பிழைகளை ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்திக் கொள்ளும் ஒரு பாடமாகவும் கருதுகிறேன்.
நீண்ட நாள்களுக்குப் பின்னர் அன்பின் ஆசான் அவர்களின் ஆக்கம் காணக் கிடைத்தாலும், தவற்றைச் சுட்டித் திருத்தும் பணியில் மிகச் சிறந்த ஓர் ஆக்கம்; நாம் எங்குத் தவறிழைத்திருக்கின்றோம்; அதன் விளவுகள் என்ன என்பதை நன்றாக விளங்கும் வண்ணம் எழுதியிருக்கின்ற அவர்களின் இவ்வாக்கத்தைப் படிக்கும் ஓர் அரிய வாய்ப்பைப் பெற்று விட்டோம். அல்ஹம்துலில்லாஹ்!
நம்மைப் பற்றிப் பொதுவாக - உலகலாவிய அளவில் ஊடகங்களும் ஒட்டுமொத்தக் கணிப்பாக “ எளிதில் உணர்ச்சி வயப்படும் இளைஞர்கள்” என்றே எழுதுகின்றனர்; அதனை மெய்பிக்கும் வண்ணம் சம்பவங்களும் நடந்துள்ளன. இவ்வாக்கத்தில் சுட்டிக் காட்டப்பட்ட இரண்டாவது நிகழ்வும் ஒரு சான்று என்றே கூறலாம். இனியும் திருந்தாமல் முரண்டுபிடித்தால் விளைவுகள் மிகவும் மோசமானவைகளாகும்; சமூக ஒற்றுமைக்கும், சமய நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரும் சோதனைகளாகும்; குறிப்பாக, நம் வாரிசுகளின் எதிர்காலம் இருள்மயமாகிவிடும் ஓர் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். வேகமா? விவேகமா? என்ற வினாவிற்கு விடையாக இவ்வாக்கத்தைக் கருதலாம். சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் மூத்த காக்காவாக நமக்கு வழிகாட்டும் நல்லெண்ணத்தில் இவ்வாக்கத்தை எழுதியிருக்கின்றார்கள்.
ஆக்கத்தை எழுதிய ஆசான் அவர்களுக்கும், இதனை ஈண்டுப் பதிவு செய்த அன்பு நெறியாளர் அவர்கட்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்” என்ற துஆவுடன் நன்றி கூறுகிறேன்.
சிறைச்சாலைகளை நிரப்பாமல், கல்விச்சாலைகளை நிரப்பும் விவேகமுள்ள இளைஞர்களாக மாறவேண்டும் , இன்ஷா அல்லாஹ்!
//இவ்வாறு ‘மோட்டுத் தனமாக’ நடந்து கொள்பவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாயின், அவர்கள் கல்வியில் குறைந்தவர்கள் என்பதையும், பெற்றோரின் வளர்ப்பில் எதோ கோளாறு உடையவர்கள் என்றும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.//
அஹமத் காக்காவின் கணிப்பு சரியான கணிப்பு.
தங்களுக்கு ஏற்பட்ட அதே எண்ண ஓட்டம்தான் எனக்கும் அந்த நேரத்தில் எழுந்தது... !
நிறைவில் வைத்திருக்கும் நியாயமான கருத்தின் வெளிப்பாடு, மிகச் சரியே.
ஓ...! மோடு முட்டியானாலும், mood அறிந்தோ / அறியாமலோ செய்திருப்பின் கேட்கலாமே மன்னிப்பு !
ஊர் மக்களில் நாமும் ஒருவராக... !
\\கேட்கலாமே மன்னிப்பு !\\
அன்பு நெறியாளருடன் நூற்றுக்கு நூறு விழுக்காடு உடன்படுகிறேன்; வழிமொழிகிறேன். ஆம். மன்னிப்பையே அல்லாஹ்வும் விரும்புகிறேன்; இதனால், “ஈகோ” என்னும் மனோயிச்சையைப் பார்த்து “யூகோ” என்று “ச்சீ” என்று அந்த வீணான எண்ணத்தைத் துரத்திவிட்டு உடன் மன்னிப்புக் கேட்டு விட்டால் போதும்; ஊரின் மதிப்பும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் மதிப்பும் உயரும். சூழ்ச்சிக்காரர்களின் சூட்சமங்களும், சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு விடும். இஸ்லாம் மன்னிப்பை விரும்பும் மார்க்கம்; அதன் பெயரிலேயே “அமைதி” அமைந்திருப்பது போல, நடைமுறையிலும் அமைதி ஒன்றே அதன் நோக்கம் என்பதை வெளிப்படுத்திக்காட்ட நல்லதொரு வாய்ப்பாக இந்த “மன்னிக்கும்” ஏற்பாடு அமையட்டும்; அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வும் இப்படிப்பட்ட எண்ணங்களைப் போடட்டும்; இதுவே ஆக்கத்தை அக்கறையுடன் எழுதியுள்ள அன்பின் காக்கா அவர்கட்குக் கிடைக்கும் நற்கூலியாக அமையட்டும்!
\\அல்லாஹ்வும் விரும்புகிறேன்; \\ அல்லாஹ்வும் விரும்புகிறான் என்று வாசிக்கவும். தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.
100% உண்மை..
வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அதிரைக்காரன் முன்மொழிந்ததை செயல்படுத்தினால் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் இனி எச்சரிக்கையாக இருப்பர்.
சிந்தித்துப் பாருங்கள்; அறிவுடையோரும் அறிவற்றவர்களும் சமமாவார்களா என சிந்தனை, அறிவு போன்றவற்றை கட்டளையாகவே பிறப்பிக்கப்பட்டுள்ள மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் தாங்கள் பிரச்சினைகளைச் சந்தித்தால் மிக எளிதாக உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர். பிரச்சினைகளுக்கு அறிவுப்பூர்வமான தீர்வைக் காண முயலாமல், உணர்வுப்பூர்வமான தீர்வுகளை எடுத்தவிடுகின்றனர். இதன் பின் விளைவுகள் பிற முஸ்லிம்களையும் பாதிப்படையச் செய்கிறது. இவர்களுக்காக துஆச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
//அரசு ஊழியரை பணியிலிருக்கும்போது தாக்கியது கண்டனத்துக்குரியது. அவ்வாறு மூடத்தனமாக தாக்கியவர்களை ஊர்மக்களே காவல்துறையிடம் ஒப்படைத்து, நடந்த தவறுக்கு ஊர் மக்கள் சார்பில் மன்னிப்பும் கேட்பதும் அறிவார்ந்ததாக இருக்கும்//
அவ்வண்ணமே கோருகிறேன்.
இரு வேறு துருவமாய் நல்லது ஒன்னு கெட்டது ஒன்னு என்றாலும் இத்தகு அறிவிலிச் செயலால் 99% கெட்ட பெயரே மிச்சம்.
தீயணைப்பு படையினர் தாமதமாக வந்ததற்கு அந்த ஒரு ஊழியர் மட்டும் எப்படி பொறுப்பாவார் என்று சிந்திக்க கூட தெரியாதவர்களால் எல்லோரையும் தவறாக நினைக்க வைத்து விட்டார். இது போன்ற படிக்காத ஆட்களால் ஒட்டு மொத்த சமுதாயமே தலைகுனிய வேண்டியிருக்கிறது.
Thanx to Brother Adirai Ahamed for a timely article.
நரேந்திர மோடியின் மேல் மட்டும் இன்று வெறும் சினம் கொண்டு வேதனையில் அலைந்து திரியும் நமக்கு நம்மவர்கள் செய்யும் அநியாய, அக்கிரம, அட்டூழியங்களை காணும் பொழுதும் அவர்களுக்கு அல்லாஹ், ஆஹிரத்திற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள் என எவரேனும் நல்லுபதேசம் செய்யும் பொழுதும் "எது அல்லாவா? சொல்லவே இல்ல?" என்பது போல் இறைமார்க்கத்தை துச்சமென மதித்து நடக்கும் இவர்களாகவே திருந்த வேண்டும் இல்லை இவர்களை இறைவன் நாட்டத்தில் செல்ல வேண்டிய இடம் சென்று சேர வேண்டும் என்று நினைப்பதும் வேதனையின் வெளிப்பாடே.
இவர்களின் அநியாய, அக்கிரம, அட்டூழியங்கள் எல்லை தாண்டி செல்வதனால் தானோ என்னவ்வோ? பருவ கால மழையைக்கூட பொய்க்க/பரிதவிக்க வைத்து விட்டு உஸ்னமான மே, ஜூன் மாத கால வெயில் அக்டோபரில் கூட அடித்துக்கொண்டிருக்கிறது நமது பகுதிகளில்..... இறைவன் ஆடு, மாடு, கோழிகளுக்காக மழையை இறக்கினால் தான் உண்டு மனிதர்களுக்காக வாய்ப்பே இல்லை என்பது போல் ஆகி விட்டது இன்றை நம்மவர்களின் பேராசைகளும், அடக்குமுறைகளும், பிறர் உரிமை மீறல்களும், பிறர் சொத்து,சுகங்களுக்கு ஆசைப்படுதலும் என பட்டியல் நீளத்தான் செய்கிறது....
அஸ்ஸலாமு அலைக்கும்,
அரசு ஊழியரை தாக்கிய சம்பவம் கண்டிக்க தக்கது. மன்னிப்பு கேட்கலாமே என்று சொல்லுவது மிகச் சுலபம். இந்த தீ விபத்தில் அரசியல் ஆதாயம் அடய துடிக்கும் ஒரு சில விசமிகள் சூழ்திருக்கும் இந்த தருணத்தில், அந்த அரசு ஊழியரிடம் யார் சென்று மன்னிப்பு கேட்பார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வி.
தீ விபத்து சம்வபத்தில் எரிந்த கடையின் உரிமையாளர் ஒருவர் டீ கடை கமாலுக்கும், இவருடைய டீ கடையும், ஹோட்டலையும் அகற்ற கடையை கடந்த ஒரு நான்கு மாத காலமாக அதிரை போரூராட்சி மற்றும் தக்வா பள்ளி நிர்வாகத்தின் மூலம் முறையற்ற முறையில் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் தீ விபத்தும் ஏற்பட்டடுள்ளது. பேரூராட்சியின் தொந்தரவால் மனம் உலச்சலில் இருந்துள்ளார் கமால், போரூராட்சி தலைவரின் சம்பவம் நடந்த இரவு எரிந்த கமால் ஹோட்டல் அருகே நின்றுள்ளார். தீ விபத்தால் தன் பிழைப்பு போய்விட்டதே என்ற வருத்தாதாலும் ஏற்கனவே பேரூராட்சியின் தொந்தரவால் மன உலச்சலில் இருந்த கமால், அங்கிருந்த பேரூராட்சி தலைவரின் சட்டையை பிடித்து ஆத்திரத்தின் ஓருரிரு வார்த்தை பேசி இருக்கிறார். அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டனர். இது தான் நடந்த சம்பவம்.
ஆனால்... கமால் கட்டையோடு, அறுவாலோடும் பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முற்பட்டார் என்று காவல்துறையில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரு அடிகூட வாங்காமல், ஒரு காயம்கூட இல்லாத பேரூராட்சி தலைவர் அதிரை அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்து அரசியல் செய்துள்ளார். இது பற்றி ஒருத்தனும் வாய்திறக்கவில்லை...
ஏழையான கமாலின் பிழைப்பும் போய், பொய் வழக்கிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளார்.. அவர் சார்ந்திருக்கும் இயக்கமும் அவரை கைவிட்டு விட்டது. கமாலுக்கு உதவி செய்ய ஊரில் உள்ள எந்த ஒரு ஜமாத்தோ, எந்த ஒரு இயக்கமே யாரும் இல்லை... காரணம் கமால் ஒரு ஏழை என்பதால்.
அரசியல்வாதிகளின், பணக்காரர்களின் தவறுகளை மறைத்துவிட்டு அவர்களுக்கு ஜல்ரா அடிக்கும் போக்கு என்றைக்கு மாறுமோ? அல்லாஹ்தான் அறிவான்.
பாதிக்கப்பட்டுள்ளவனுக்கு ஆறுதல் வார்த்தைக்கூட சொல்லாமல், அவர் மேல் மன்சாட்சியே இல்லாமல் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. கமால் அல்லாஹ்விடம் கை ஏந்திவிட்டால். நிச்சயம் அல்லாஹ் அவன் நாடினால் அநீதியாளர்களை தண்டிப்பான்.
//அரசு ஊழியரை தாக்கிய சம்பவம் கண்டிக்க தக்கது. மன்னிப்பு கேட்கலாமே என்று சொல்லுவது மிகச் சுலபம். இந்த தீ விபத்தில் அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் ஒரு சில விசமிகள் சூழ்திருக்கும் இந்த தருணத்தில், அந்த அரசு ஊழியரிடம் யார் சென்று மன்னிப்பு கேட்பார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்வி.//
இங்கே மற்றொன்றை கவனிக்க வேண்டும், இந்த சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் விஷமிகள் தன்னைப் படைத்தவனுக்கு அஞ்சிக் கொள்ளட்டும்..!
கமால் மீண்டெழுவார் இன்ஷா அல்லாஹ் ! நல்லுள்ளங்கள் இன்னும் அவரைச் சுற்றி இருக்கிறார்கள்... அல்லாஹ்வின் அருளால் அனைத்து பிரச்சினைகளையும் அவர் திடமுடன் எதிர் கொள்வார்...!
பொய் வழக்கை திரும்பப் பெற்று தனது தவறுக்கு அவர்களும் வருத்தம் தெரிவிக்க வேண்டும்...!
கார் விபத்து திட்டமிடப்பட்ட விபத்து அல்ல என்பது ஊர்ஜிதம்
தீ விபத்து திட்ட மிடப்பட்ட செயலோ என்ற சந்தோகத்தை எற்ப்படுத்துகின்றது
ஆனால்... கமால் கட்டையோடு, அறுவாலோடும் பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முற்பட்டார் என்று காவல்துறையில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரு அடிகூட வாங்காமல், ஒரு காயம்கூட இல்லாத பேரூராட்சி தலைவர் அதிரை அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்து அரசியல் செய்துள்ளார். இது பற்றி ஒருத்தனும் வாய்திறக்கவில்லை...//////
கமால் என்ற நபரும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாய் கேள்விப்பட்டேன் உண்மையா அவரை யார் அடித்தார்கள் என துப்புத்துலங்கினால் நலம்
சேர்மனை இரவு 11 மணியளவில் தீ எறிந்த இடத்தில் கண்டேன் என்று புகார் அளித்திருப்பதையும் கேள்வி உண்மைகளை ஆராயவும்
ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் தீயணைக்கவந்த ஊழியரை அடித்தது சரியல்ல. இதில் உறுதியாக இருப்பதாலேயே எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். பிற்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே தீர்வைச் சொன்னேன். தாஜுதீன் குறிப்பிடும் அரசியல் காரணங்கள் அஹமது காக்காவுக்குத் தெரியாதா?
அஸ்ஸலாமு அலைக்கும்,
MSM சபீர் காக்கா,
நீங்கள் கேட்பதல்லாம் சரிதான்.. அரசியல்வாதியின் வியாதிக்கு அரசியல்சிகிச்சை நடைபெறுகிறது. அதற்கு அந்த ஏழை சகோதரன் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.
பேரூராட்சி தலைவருக்கு என்ன காயமோ அதைவிட பலமான மனக்காயம் கமாலுக்கு என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது காக்கா.
ஊரில் பொறுப்புகளில் உள்ளவர்களே பொறுபற்று அரசியல் பன்னும் போது அரசியல் காழ்புணர்வால் பல மாதம் பாதிக்கப்பட்டு, தீ விபத்தால் தொழிலை இழந்துள்ள அந்த ஏழை அரசியல் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லை.
மொத்தத்தில் இருவர் செய்துகொண்டிருப்பதும் தவறு. இருவர் மேல் உள்ள வழக்குகள் வாபஸ்பெற வேண்டும். அந்த ஏழை வியாபாரி மீண்டும் அவருடைய வியாபாரத்தை தொடங்கி அவர் குடும்பத்துக்கு அன்றாட உணவு கிடைக்க வேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் சமாதான முயற்சி அவசியம் தேவை செய்வீர்களா MSM சபீர் காக்கா,?
மொத்தத்தில் இருவர் செய்துகொண்டிருப்பதும் தவறு. இருவர் மேல் உள்ள வழக்குகள் வாபஸ்பெற வேண்டும். அந்த ஏழை வியாபாரி மீண்டும் அவருடைய வியாபாரத்தை தொடங்கி அவர் குடும்பத்துக்கு அன்றாட உணவு கிடைக்க வேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் சமாதான முயற்சி அவசியம் தேவை செய்வீர்களா MSM சபீர் காக்கா,? //////
இன்ஷா அல்லாஹ் சமாதானத்திற்கு முயற்ச்சிப்போம் சகோ.கமால் அவர்களும் அரசியல் நடத்தும் அரசியல் வியதிகளிடம் ஆலோசனை பெறாமல் உண்மைக்கு மாற்றம் இல்லாமல் நடப்பாரேயானால் அலாஹ்வின் உதவி கிட்டும் நம்மால் முடிந்தவரை அலாஹ்வின் உதவியோடு அவருக்கு ஏற்பட்ட சிக்கலை போக்குவோம்
அரசியல் வாதிகள் அரசியல் பண்ணட்டும் நமக்கு [அது] வேண்டாம் சரிதானே தம்பி தாஜுத்தீன்
அஸ்ஸலாமு அலைக்கும், MSM சபீர் காக்கா..
சமாதானத்துக்கு முயற்சி செய்வோம் என்று சொன்ன உங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக...
//அரசியல் வாதிகள் அரசியல் பண்ணட்டும் நமக்கு [அது] வேண்டாம் சரிதானே தம்பி தாஜுத்தீன்//
வேண்டாம் தான் காக்கா, ஆனால் கண் முன்னே பொய் நம் மனசாட்சிக்கு காண்கிரீட் சுவர் போட முயற்சி செய்கிறதே. கண்ணை மூடிக்கொண்டு கல்நெஞசர்களாக இருக்க முடியவில்லை காக்கா...
தீ விபத்தால் அன்றாட பிழைப்பை இழந்து பொய் வழக்கையும் சந்தித்து நிற்கதியான நிலையில் இருந்த சகோதரன் கமாலுதீனுக்கு, அந்த பொய் வழக்குகளை எதிர்கொள்ள அவர் சார்ந்திருக்கும் இயக்கமும் உதவ முன்வரவில்லை, வேறு எந்த ஒரு சமுதாய இயக்கமும் அந்த எழை சகோதரனுக்கு உதவ முன் வரவில்லை, ஊரில் உள்ள முஹல்லா ஜமாத்துக்கள் யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை. காரணம் அவர் பிலால் நகரில் குடியிருக்கும் ஒரு ஏழை உழைப்பாளி என்ற ஒரே காரணத்தை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
எனக்கு என்ன ஆதங்கம் என்றால்... பிற மதத்தவன் விபத்தில் பாதிக்கப்பட்ட போது ஓடி வந்து உதவினார்கள் அனைத்து இயக்க சஹாக்களும், ஆனால் ஒரு ஏழையின் வியாபாரி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது ஒரு சமுதாய இயக்கமும் அவருக்கு உதவ முன்வரவில்லை... குரல் கொடுக்க நாதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டான் அந்த சகோதரன். சந்தர்பம் இதுவே அவரை அரசியல் பகடக்காயாக பயன்படுத்த காரணமாக்கிவிட்டதை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
பிரச்சினைக்கு தீர்வு.. இருவர் மேல் போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். தீ விபத்துக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உளரீதியாகவும், பெருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஏழை சகோதரன் மீண்டும் தன்னுடைய உணவுவிடுதி தொழிலை தொடங்க வேண்டும். இதற்கு ஊரில் முக்கிய பெறுப்பில் உள்ளவர்கள் அந்த சகோதரனுக்கு உதவ வேண்டும்..
ஒரு சாதாரண டிக்கடைக்காரன் கமால், தன் சட்டையில் கை வைத்துவிட்டான் என்பதற்காக, அறுவால், கட்டைகள் வைத்து கொலை செய்ய முயற்சித்தான் என்று கமால் மீது பொய் வழக்கு பேரூராட்சி தலைவர் முதலில் போட்டதும் தவறு. அந்த பொய் புகாருக்கு நிகரான தன்னை தாக்கினார்கள் என்று பொய் புகார் கொடுத்துள்ள சகோதரர் கமாலின் செயலும் தவறு.
பேரூராட்சி தலைவர் முதலில் பொய் புகார் கொடுத்துள்ளார், அவர் முதலில் புகாரை வாபஸ் வாங்க வேண்டும், தொடர்ந்து சகோதரர் கமாலும் அவர் கொடுத்துள்ள பொய் புகாரை வாபஸ் வாங்க வேண்டும்.
காவல்துறையும், காவித்துறையும் அப்பாவி முஸ்லீம்கள் மேல் பொய் வழக்கு போடுகிறது என்று பல திசைகளில் நம் சமுதாய இயக்கங்கள் குரல் கொடுக்குகிறது. ஆனால் ஊர் தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவர் கோபத்தில் தன் சட்டையை பிடித்த ஒரே காரணத்திற்காக அந்த ஏழை உழைப்பாளி மீது பொய் வழக்கு போட்டுள்ளாராரே இதை கேட்க ஊரில் ஒரு தலைவன் இல்லை? சமுதாய இயக்கம் இல்லை?
நம் வேளியே நம் பயிரை மேயும் போது. அடுத்தவன் வீட்டு ஆடு வந்து மேய்ந்தால் என்னா? மற்றவன் விட்டு மாடு வந்து மேய்ந்தால் என்ற எண்ணம் மனதில் எழுவதை தவிற்க முடியவில்லை காக்கா..
சமாதானம் பேசி முடிக்க ஊரில் ஆள் இருக்கிறார்களா?
இந்த ஏழை வியாபாரிக்கு உதவ எந்த இயக்கமும் முன்வர வில்லையே என்ற ஆதங்கம் சரியல்ல காரணம் அவரை சேர்மன் மீது பொய் வழக்க போடச்சொல்லி அவருக்கு ஆதரவாக பின்னால் நிற்கிறது [இது அந்த ஏழையின் வாழ்க்கையில் அந்த இயக்கம் விளையாடுகிறது ஏனோ அவருக்கு அது புரியாமல் ஐவரும் பொய்வழக்கிர்க்கு சம்மதித்து விட்டார்]
நான் சேர்மனிடம் பேசிய வகையில் தாசில்தார் தீவிபத்து என்று எழுதி விட்டபோதும் மந்திரியை வைத்து இது விபத்தல்ல என்று மாற்றும் முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள் [இது தனி நபரால் செய்ய முடியாது அவருக்கு பின்னால் இயக்கம், கட்சிகள் செயல் படுகிறது]
இதில் பாதிக்க பட்டது அந்த ஏழை வியாபாரிதான் நேர்மையான முயற்ச்சி எடுத்தால் எனது ஒத்துழைப்பு இன்ஷா அலாஹ் நிச்சயம்
தவறு; ஐவரும் [அவரும்]
அஸ்ஸலாமு அலைக்கும்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
பொய் வழக்கு எங்கே யாரால் ஆரம்பம் என்பது தான் முதல் கேள்வி, பின்னர் தான் மற்ற கேள்விகள் காக்கா... நம் வேளியே நம் பயிரை மேயும் போது. அடுத்தவன் வீட்டு ஆடு வந்து மேய்ந்தால் என்னா? மற்றவன் விட்டு மாடு வந்து மேய்ந்தால் என்ற எண்ணம் மீண்டும் மனதில் எழுவதை தவிற்க முடியவில்லை காக்கா..
மீண்டும் நினைவூட்டுகிறேன், தவறு இரு பக்கமும் உள்ளது. விட்டுக்கொடுப்பவன் கேட்டுப்போவதில்லை என்பது இருவருக்கும் பொருந்தும். சாமாதானம் செய்பவர்களை காட்டிலும் மூட்டிவிட்டு வேடிக்கை பார்பவர்களே நம்மூரில் அதிகம் காணலாம்.
நம்மவரின் அரசியல் அனுபவமின்மையை பயன்படுத்தி அருகில் இருக்கும் கழக உடன் பிறப்புகளும் அரசியல் ஆதயாத்திற்காக ஊசுப்பேற்றி, குருட் ஆயில் ஊற்றி பத்தவைத்து, வேடிக்கை காண்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுவதைய்ம் தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் இருவரும் கலிமா சொன்ன முஸ்லீம்கள் என்பது தான் வேதனை..
Post a Comment