Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -14 38

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2013 | , , , , , , ,

அந்த சமதளமில்லாத  சந்நியாசி மடத்தில் கவலை தோய்ந்த முகத்துடன், கிராம நகர பஞ்சாயத்துத் தலைவர்கள் , ஒன்றியம், மாவட்ட, நகராட்சி, மாநகராட்சி, வட்டம், குறுகிய வட்டம், பெருகிய வட்டம் ( உடம்பாலும் ) , சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுதந்திர  இந்தியாவை வாழ்விக்க வந்த மகான்கள் அத்தனை பேரும் கூடி இருந்தனர். எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்துவிட்டது  போன்ற ரேகைகள் முகங்களில் ஓடின.  ஒரு நிற்க முடியாத வயதான எம்.பி. எம்பி எம்பிப் பேசினார். அவர்தான் தலைமை வகித்ததுபோல் இருந்தது அந்தக் கூட்டத்துக்கு.

“அன்பான அரசியல் சட்டக் காவலர்களே ! ஜனநாயகம் என்கிற பெயரில் நாம் நடத்திக் கொண்டிருக்கிற சர்க்கஸ் சர்வாதிகாரத்துக்கு இன்றைக்கு சாவுமணி அடிப்பதற்கு சமயம் வந்துவிட்டது போல் எனது வழுக்கை மண்டைக்குத் தோன்றுகிறது. காரணம் லஞ்சமும் லாவண்யமும் ஊழலும் அரசியல் தளபதிகளாகிய நமது பிறப்புரிமை. அதைப் பறிக்கும் வண்ணம் இன்றைக்கு ராகுல் காந்தி என்கிற திருமணம் கூட ஆகாத ஒரு சிறுவர்   ஊழல் ஒழிப்பு அம்பினை நம் மீது ஏவி விட்டார் . நீங்களும் நாங்களும் எவ்வளவுதான் ஊழலை  ஒழிப்போம் என்று பேசினாலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஊழலில் வரும் லஞ்சத்தை ஒருவருக்கும் தெரியாமல் பங்கு போட்டு, பொதுமக்கள்  முன்னால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி   நம்மை ஊழலுக்கு எதிரிகள் என்று காட்டிக் கொண்டிருந்த வித்தை இனி பலிக்காது போலத் தெரிகிறது. இனியும் இதைப் பொறுத்துக் கொண்டு வாய்மூடி நாம் மவுனம் காக்க வேண்டுமா? “ என்று கேட்டார். 

உடனே காவித்துண்டு முதல் காக்கித்துண்டு வரை போர்த்தி இருந்த போர்வைகளை விலக்கிக் கொண்ட கூட்டத்தினர், “ பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!. இதனை நாள் நாம் பொறுக்கித் தின்றதை  தடுக்க நினைத்து சட்டம் போடுவதைப் பொறுக்க மாட்டோம் “ என்று ஏகக் குரலில் முழங்கினர். அந்த மடமே அதிர்ந்தது. தலைவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். பாராளுமன்றத்தில் அடிக்க வரும் அம்பிகள் நகராட்சி கூட்டங்களில் நாற்காலியை எடுத்து வீசும் வீராப்புப் பிடித்த வேங்கைகள் தங்களின் தலைக்கு ஒரு கத்தி வருகிறது என்ற உடன் எப்படி ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்தார். அந்த மகிழ்ச்சி அடங்குமுன்னே மீண்டும் தலைவர்” நம்மில் ஐம்பதுபேர் உடனே  தலைநகர் டில்லி சென்று நமது எதிர்ப்பை  பிரதமரிடம் சொல்லி,  நமக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த முயலவேண்டும் அத்துடன் ஒவ்வொரு அரசாங்க வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று வரையறுத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு சட்டம் அதுவும் அவசரமாக இயற்ற வேண்டும் என்று கேட்கவேண்டும் என்ன சொல்கிறீர்கள்?” என்று ஆவேசம் முழங்கக் கேட்டார். உடனே பாரத மாதாக்கு ஜே! என்கிற  கோஷம் விண்ணில் உள்ள மேகத்துடன் மோதி ஒரு மின்னலும் வெட்டியது. இடியும் இடித்தது.

டில்லி புறப்பட குழுவினர்  ரயில் நிலையம் வந்தனர். ஆனால் படுக்கை மற்றும் இருக்கை வசதி கிடைக்கவில்லை. உடனே டிக்கெட் பரிசோதகரைக் கண்டனர். அவரோ ஒரு இடத்துக்கு நூறு ரூபாய் தந்தால்  ஒதுக்கித்தருகிறேன் என்று  இவர்களை ஓரமாக ஒதுக்கிக் கொண்டுபோய் காதில் பவ்யமாய் சொன்னார். காசு கைமாறியது. இருக்க இடம் கிடைத்தது. உடனே ஓர் நகராட்சி உறுப்பினர், “வெற்றி! வெற்றி! ஆரம்பமே வெற்றி! கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றோம் “ என்று முழங்கினார். மற்றவர்களும் ஆஹா! இது நல்ல சகுனம் லஞ்சத்துக்கான குறிக்கோள் நோக்கிய நமது   பயணம் லஞ்சம் கொடுத்து ஆரம்பமாகிறது என்று மகிழ்ந்தனர். ரயில் டில்லி நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 

அனைவரும் டில்லி சென்று அடைந்தனர். பிரதமரின் இல்லம் தேடி ஜப்பானில் கல்யாணராமன்கள் அலைவது போல் அலைந்து பிரதமரின் இல்லம் சென்றடைந்தார். ஆனால் கொடுமை! கொடுமை! என்று கோயிலுக்குப் போனால் அங்கு ரெண்டு கொடுமை ஆட்டம் போட்டு வந்தது என்பது போலவும் , ராவுத்தரே  கொக்காகப் பறக்கிறார் குதிரை கோதுமை ரொட்டி கேட்டதாம் என்பது போலவும் , சாமியே சைக்கிளில் போகும்போது பூசாரி புல்லட் கேட்டது போலவும்  பிரதமர் கன்னத்தில் கைவைத்துக் கண்கலங்கி அமர்ந்திருக்க, அவர் அருகே அத்வானிஜி நான்கு பேர் கட்டுகிற  வேட்டியை தான் ஒருவர் மட்டும் சுற்றி சுற்றி கோவணம் போல் கட்டிக் கொண்டு தனது கையையும் கட்டிக் கொண்டு  உட்கார்ந்து இருந்தார். அவருக்கு அடுத்து ராஜ்நாத் சிங்  சிகப்புக் குடைமிளகாய் அளவுக்கு நெற்றியில் ஒரு கோட்டுடனும் அமர்ந்து இருந்தார். அவரது நீண்ட மூக்கு சிவந்து இருந்தது. இரவு முழுதும் அழுது இருப்பார் போல. அவரது காலுக்கடியில் யார் அட நம்ம இல. கணேசன். !  திரும்பிப்பார்த்தால் தம்பித்  துரை , டி ஆர் பாலு , கனிமொழி, சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், பாரூக் அப்துல்லாஹ், ராசா, சுரேஷ் கல்மாடி, மஹாரஸ்டிரா முதல்வர், சிபு சோரன், பங்காரு லட்சுமணன், மது கோடா என்று அத்தனை உலக உத்தமர்களும் மனிதப் புனிதர்களும் ஒன்றாக உட்கார்ந்து இருந்தார்கள்.   ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமே அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சபாநாயகர் மீரா குமார் மட்டும் மிஸ்ஸிங். அதனால் “பைட் ஜாயியே ! பைட் ஜாயியே!” என்கிற குரல் கேட்கவில்லை. 

பிரதமர் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போது பழக்க தோசத்தில் ஒரு பிஜேபி உறுப்பினர் எழுந்து மேஜையைத் தட்டினார். உடனே அத்வானி அவரது கையைப் பிடித்து இழுத்து “சும்மா இரு! இது பாராளுமன்றக் கூட்டமல்ல! நமது அனைவரின் வயிற்றுப் பிழைப்புக்கான வழிகாண நடத்தப்படும் அனைத்துக் கட்சிக்கூட்டம்!  நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்  கூட்டம்” என்று எச்சரித்தார். பிரதமர் பேசாமல் உட்கார்ந்துவிட்டார்.  உடனே சுஷ்மா சுவராஜ்  பேச ஆரம்பித்தார். “ நாம் எல்லோரும் ஒருங்கிணைந்துதான் லஞ்ச லாவண்யங்களுக்காக  தண்டிக்கப் பட்ட எம்பி எம் எல் ஏ க்களின் பதவியைப் பறிக்கக்கூடாது என்று சட்டம் போட முடிவு செய்தோம். அதை நாங்கள் தாமதிக்க நினைத்தாலும் அரசு அவசர சட்டம் போட்டது. தனிப்பட்ட முறையில் நாங்களும் மனதளவில் அதை வரவேற்கிறோம்.  ஆனால் மேடைகளில் இதை எதிர்த்து முழங்குவோம். ஆனால் நம் எல்லோர் வாயிலும் மேல் மண்ணை தடவிவிட்டு கீழ்மண்ணை அள்ளிப் போட்டு விட்டாரே ராகுல் காந்தி? இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார். இதனால் அவரது ஒருகை கம்பளி ஜாக்கெட் கூட  அழுதது போல இருந்தது. 

அடுத்து கவிஞர் கனிமொழி பேசத்தொடங்கும்போது தான் இதுபற்றி  ஒரு கவிதை வாசிக்க விரும்புவதாகக் கூறினார். கவிதை தமிழில் இருந்தாலும் கூடியவர்களின் ஒரே பொது மொழி ஊழல்  என்பதால்  அனைவரும் “அச்சா! பஹூத் அச்சா!” என்று வரவேற்றனர். கனிமொழி கவிதை வாசித்தார் “ நாளை நமதே! இந்த நாடும் நமதே! லஞ்சம் என்ற கொள்கையில் பூத்த அன்பு மலர்களே! கமிஷன் என்கிற வாழ்வாதாரத்தில் தழைத்த இனிய உறவுகளே! நாளை நமதே! இந்த லஞ்ச லாவண்யமும் நமதே! என்று பாடினார். அனைவரும் கைதட்டினர். ஆனாலும் எல்லோரும் கைதட்டி ஓய்ந்த பின்னரும் ஒருவரின்  கை மட்டும் தட்டும் ஓசையை நிறுத்தவில்லை. சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.எல்லோரும் திரும்பிப்பார்த்தால் அப்படித் தட்டும் கைகள் டி ஆர் பாலுவின் கைகள். உடனே தயாநிதி மாறன்  அவரைக் கிள்ளி கை  தட்டுவதை நிறுத்தச் சொன்னார். நான் கனிமொழியின் கவிதைக்கு கை தட்டுவது தலைவர் வரை எட்டிவிட்டதா என்று பார்வையாலேயே கேட்ட டி ஆர் பாலுக்கு” ஆம் “ என்று தலை  அசைத்தார் இளங்கோவன்.  எம் எம் எஸ் அனுப்பி இருப்பாராக்கும். 

கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பங்காரு லட்சுமணன் தான் ஏற்கனவே  சில நாட்கள் சிறையில் வசித்துவிட்டதாகவும் அதற்காக தனக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாழ்வாதார நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கையை வைத்தார். அதே கோரிக்கையை ஆ.ராசா வழி மொழிந்தார்.      

அடுத்து,  எல்லா நாடாளுமன்றக் கட்சித்தலைவர்களும் பேச ஆரம்பித்தனர். டி ஆர் பாலு பேசும்போது கனிமொழி அம்மா என்று குறிப்பிட்டார். உடனே தம்பித்துரை காட்டமாக எழுந்தார். “ அம்மா என்பது தமிழ்வார்த்தை! அதுதான் உலகின் முதல் வார்த்தை!  தமிழில் அப்படி ஒரு வார்த்தை என்றால் அது எங்கள் அம்மாதான். இப்போது புதிதாக ஒரு அம்மாவைத் திணிப்பது எங்களின் அடிப்படை உரிமையில் கைவைப்பதாகும்” என்றார். உடனே அருகில் அமர்ந்து இருந்த கம்யூனிஸ்ட் ராஜா , “எவ்வளவு நாள் நீங்கள் அம்மா! அம்மா! என்றே சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்.? கனிமொழியை  அம்மா என்றால் நீங்கள் உங்கள் அம்மாவை உம்மம்மா என்று கூப்பிடுங்கள் அல்லது பெரியம்மா என்று கூப்பிடுங்கள் . ஒரு காலத்தில் சின்ன அண்ணி பெரிய அண்ணி என்று கூப்பிடவில்லையா அது போல நினைத்துக் கொள்ளுங்கள் ” என்றார். இதைக் கேட்ட தம்பித்துரைக்கு தலை  சுற்றி முதுகுப்பக்கம் வந்தது. ஆனாலும் ஒரு தைரியம்,  தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது அமைச்சர் பதவியைப் பறிப்பதுபோல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஓரிரவில் பறிக்க முடியாது என்கிற தைரியம்தான் அது. இருந்தாலும் அம்மாவுக்கு சென்னைக்கு ஒரு போன் அடித்து நடப்பை சொல்லிவிடுவோமென்று நைசாக வெளிவந்து போயஸ் தோட்ட அம்மாவுக்கு பவ்யமாக ஒரு அழைப்புவிடுத்தார். போனை எடுத்த அம்மா, “ யோவ் போனை வை ! நானே பெங்களூர் பீவர் பிடித்துப் போய் இருக்கிறேன். நீ வேறு. ஊருக்குவா பேசிக்கொள்ளலாம்”  என்று போனை கட் செய்துவிட்டார். 

கூட்டத்தில் திடீரன்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்னவென்று பார்த்தால் ராகுல் காந்தி அரங்கினுள் நுழைந்து  கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அத்வானி தனது லங்க்கோட்டை சரிசெய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் ராகுல்! ராகுல்! என்று குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர். பிரதமருக்கு நிலக்கரியின் நிறத்தில் வியர்க்க ஆரம்பித்தது. சுரேஷ் கல்மாடிக்கு விளையாட்டு அரங்கங்கள் சிறு சிறையின் தனிநபர் செல்லாகத் தென்படத் துவங்கியது. கனிமொழிக்கு சோற்றுக்கு பதில் களி உருண்டை தென்பட்டது. ரசீத் மசூதுக்கு சிறைக் கம்பிகளின் எண்ணிக்கை தென்பட்டது. மற்றவர்களும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு எத்தனை வருடம் என்று பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக பங்காரு லட்சுமணன் 7 X 365 – 155 என்று கணக்குப் போட்டார். 

அப்போது என்  மேல் யாரோ வருடுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று விழித்தேன்.  வேறு யாருமல்ல என் பேத்திதான். அப்பா சுபுஹுக்கு பாங்கு சொல்லிவிட்டார்கள் எழுந்திருக்கலையா என்று கேட்டாள். அப்போதுதான் தெரிந்தது. நான் கண்டது யாவும் கனவு என்று. ஆனால் ஒரு நிம்மதி, இவை கனவல்ல நாட்டில் நிகழும் நிகழ்வுகளின் ஒரு சாயல்தான்; சாம்பிள்தான் என்று ஆறுதல்படுத்திக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தேன். 

தொழுதுவிட்டு வந்ததும் சில சிந்தனைகள் ஏற்பட்டன. முதலில் ராகுல் காந்தியைப் பாராட்ட வேண்டும். ஒரு நியாயமான காரணத்துக்காக, ஒரு அரசின் அமைச்சரவையும் எதிர்க் கட்சிகளும் கூடி முடிவெடுத்து குடியரசுத்தலைவரின் மாளிகை வரை சென்ற அவசர சட்டத்தை தனது சமுதாய அக்கறை என்கிற ஆயுதம் மூலம் அதை  சாம்பலாக்கி ஊதித்தள்ளிய காரணத்துக்காக ராகுலைப் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் லக்னோவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டு நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று சொல்லிய வரலாற்றுக்கும் இவர் சொந்தக்காரர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திரு. மன்மோகன் சிங்கை அவமதித்துவிட்டதாக அவதூறு கிளப்பப் பட்ட காரணத்தால் பஞ்சாப் சென்று அந்த மக்களை தற்போது சந்தித்து அவர்களின் மனப் புண்ணை ஆற்றி இருக்கிறார் ராகுல் காந்தி. எதிர்காலத்தில் இவர் எப்படி உருவெடுப்பாரோ தெரியாது . ஆனால் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சில செயல்கள் நம்பிக்கையை ஊட்டுகின்றன என்று மட்டும் சொல்வேன். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம் மீண்டும் நமது மக்கள் பிரதிநிதிகளின் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் காசில் கொழிக்கிறார்கள் ; குளிக்கிறார்கள்; செழிக்கிரார்கள்.  பல கோடி ரூபாய்கள் இவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் செலவழிக்கப் படுகின்றன. பொதுமக்களுக்கு இலவசமாக அரிசியும் மின்சாரமும் கொடுப்பதைப் பற்றி கண்டித்துப்  பேசுகிறோம். ஆனால் இந்த எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் அனுபவிக்கும் இலவசங்களை நினைத்தாலே தலை சுற்றுகிறது. ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதில் இருந்து, இலவச இரயில் மற்றும் விமானப் பயணம் வரை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெற்று சுகிக்கிரார்கள்.    உயர்ந்த ஊதியம், ஒய்வுகால ஊதியம் தவிர எங்கு போனாலும் ஓசியில் சாப்பாடுவரை இவர்களுக்குக் கிடைக்கிறது. மக்கள் தொண்டர்கள் என்று பட்டத்தைப் போர்த்திக் கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது ஒன்றே இவர்களின் நோக்கமும் கொள்கையுமாக இருக்கிறது. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான்  பொதுவான ஆனால் வேதனையான உண்மை.

ஒரு புறம்  ஏழைகள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுதும் மேனியில் ஆடை கூட இன்றி வெப்பத்தையே ஆடையாக்கிகொண்டு கோவணத்தைக் கட்டிக் கொண்டு உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரதிநிதிகள் குளிர்சாதன வசதியை வீணடிக்காமல் வாழ்கிறார்கள்.   இந்த மக்களின் பிரதிநிதிகள் சுல்தான்கள் போல சுகபோகத்தை  கலப்படமில்லாமல் அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அலாவுதீனின் விளக்கு ஜனநாயகம் என்கிற பெயரில் கிடைத்தது. 

அதுதான் போகட்டும் எங்கே எதற்கு எந்த வேலையை செய்ய அனுப்பப்பட்டார்களோ அங்கு போய் பேண்டை அவிழ்த்துக் காட்டுகிறார்கள் ; பேயாட்டம் ஆடுகிறார்கள்; ஒரு குண்டூசி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கிப் போடுகிறார்கள். பாராளுமன்றம் நாளை முதல் தொடங்குகிறது என்று அறிவிப்பு வந்தால் நாளை முதல் சந்தை ஆரம்பிக்கிறது என்று விளங்கிக்  கொள்ள வேண்டிய நிலை ஆகிவிட்டது.    அது கூட நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன் என்று அனைவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே அதிகம். பல அரசின் திட்டங்களில்  கூட்டுக் கொள்ளைதான் அதிகம். பங்குகள் சரியாகப் பகிரப் பட்டால் பாராளுமன்றம் பதமாகப் போகும் இல்லாவிட்டால் பாதகமாகப் போகும். 

எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது . ஒருத்தியைப் பார்த்து இன்னொருத்தி , “ நீ விபச்சாரி “ என்று திட்டினாளாம். உடனே மற்றவள் , “ நீ மட்டும் என்ன ஒழுங்கா? “ என்று கேட்டாளாம். பிறகு இருவரும் சரி! சரி! வா போகலாம் ஆள் காத்திருக்கிறது  என்று சொல்லிக் கொண்டார்களாம். இது போல்தான் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் அணிகள் இருக்கின்றன. 

கோடி கோடியாய் கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில  அரசியல்வாதிகள்  கைது செய்யப் பட்டால் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.  இப்படி ஜாமீனில் வெளியே வருபவர்கள் ஏதோ செவ்வாய் கிரகத்தில் ஒரு வீடுகட்டிவிட்டு வந்தவர்கள் போலவும், நெல்சன் மண்டேலா போல் காந்தியடிகள் போல் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று மீண்டவர்கள் போலவும்  அவர்களுக்கு  மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் வானவேடிக்கைகள் முழங்க விமான நிலையத்தில் தரப்படும் வரவேற்பும் வரிசையாக நின்று மாலை அணிவித்தலும் கண்டு நாகரிக உலகம் நாணித் தலை குனிகிறது. போதாக்குறைக்கு அவர்களை வாழ்த்தி ஓட்டப்  படும் சுவரொட்டிகள், பிளாக்ஸ் போர்டுகள் அவற்றில் உள்ள வாசகங்களைப் படிக்கும்போது காறித் தான் துப்பவேண்டும்போல் இருக்கிறது. இன்னும் வழக்கே முடியவில்லை ஜாமீனுக்கே இந்த  ஆர்ப்பாட்டம் என்றால் வழக்கு முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.           

லஞ்சம் ஒழியப் போவதுமில்லை கருவைக் காடு அழியப் போவதுமில்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

38 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அப்போது என் மேல் யாரோ வருடுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று விழித்தேன். வேறு யாருமல்ல என் பேத்திதான். அப்பா சுபுஹுக்கு பாங்கு சொல்லிவிட்டார்கள் எழுந்திருக்கலையா என்று கேட்டாள். அப்போதுதான் தெரிந்தது. நான் கண்டது யாவும் கனவு என்று. ஆனால் ஒரு நிம்மதி, இவை கனவல்ல நாட்டில் நிகழும் நிகழ்வுகளின் ஒரு சாயல்தான்; சாம்பிள்தான் என்று ஆறுதல்படுத்திக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தேன். ///

உச்சக்கட்ட நையாண்டி !

காக்கா... உங்க தூக்கத்திலுமா இது நடக்குது... நான் என்னமோ... எங்கவூட்டு டீவியில மட்டும்தான்னுல நெனச்சுகிட்டு இருந்தேன்...

அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏரளமாக் உங்கள் இருவரிடமும் இருப்பதால் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்தால் காலையில் உங்களோடும் மாலையில் அவர்களோடும் கூட்டணி வச்சுக்க நான் ரெடி !

கொடி கலர் வேனும்னா ஒவ்வொரு இயக்கத்திலேயிருந்து ஒரு கலரை எடுத்துக்கலாம் காக்கா.... அந்த டீலிங்கிற்கு அவர்கள் ஒன்னும் சொல்லமாட்டார்கள் !

சரியா ?

KALAM SHAICK ABDUL KADER said...

ராகுல் காந்தியின் இமேஜ் வளர்வதற்காகவே இப்படி ஒரு நாடகம் என்கின்றார்கள் எதிர்க்கட்சியினர். இது சரியா? தவறா?

KALAM SHAICK ABDUL KADER said...

மேதகு பொருளியல் மேதை இ.அ..காக்கா அவர்களும், முத்துநகர் வித்தகர் பகுருதீன் அவர்களும் “முஸ்லிம் வேட்பாளராகளாக” ஆளுக்கொரு தொகுதியில் நின்றாலும் ,அவர்களிருவரின் அரசியல் அறிவுடன் பாராளுமன்றத்தில் சொற்போர் நிகழ்த்தும் ஆற்றல் நிரம்ப இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் “முஸ்லிம் வேட்பாளரைத் தோற்கடிக்கவே இயக்கங்கள் கண்டு எதிர் வேட்பாளர்களாகக் கள்மிறங்கும் இயக்கங்கள்” வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து விட்டால், நம் கனவு நனவாகுமா?

KALAM SHAICK ABDUL KADER said...

ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிற்கும் தொகுதியில் அந்த வேட்பாளரை வெற்றிப் பெற வைக்கும் தூய- சமுதாய நலன் கருதிய - எண்ணத்துடன் வேறு எவரும் போட்டி வேட்பாளாரக நிற்காமல் இருப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே அவ்விருவர்களையும் களம் இறக்கலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

என் கருத்துகள் யாவும் வேடிக்கையானவைகள் என்று நினைக்க வேண்டாம்.; உண்மையில், என் இதயக்கரையில் அலைமோதிய எண்ணத்தை, அன்புநெறியாளர் அபுஇபு அவர்களின் பின்னூட்டம் என் கண்ணோட்டம் பற்றி எழுத வைத்து விட்டது.

மேதகு அ.இ. காக்கா அவர்கள் பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களில் மிகவும் தேர்ச்சியுடையவர்கள் போல், அரசியலிலும் மிகுந்த தேர்ச்சியும் பயிற்சியும் இருக்கும் என்பதும் என் கணிப்பாக இருந்தது. அதனை நிரூபணம் செய்யும் வண்ணம் இந்தக் கட்டுரை நிதர்சனம் சொல்லியது. இ.அ.காக்கா அவர்களுடன் கூட்டணியமைத்துள்ள முத்துநகர் வித்தகரும் முன்னேறிய ஓர் அரசியல் அறிஞர் எனபதும் அவர்களின் எழுத்தே சான்றாகும்.

Anonymous said...

அத்தனை லஞ்ஜாதிவாதிகளையும் ஒரே கனவில் பார்த்து விட்டீர்களே!

உண்மையே சொல்லுங்கள் அவர்களுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தீர்கள்?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

கனவு என்று சொல்லும் வரை உண்மை என்றே நினைக்கும் அளவுக்குத்தான் நம் நாட்டு அரசியல் இருக்கிறது.

செம காமெடியாகச் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கெல்லாம் ட்ராஜடிதான்

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களின் கருத்து

//அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏரளமாக் உங்கள் இருவரிடமும் இருப்பதால்//

சாத்தியக்கூறு????

நாங்கள் இருவரும் லஞ்சம் வாங்குவதை எங்கே பார்த்தீர்கள்?


Ebrahim Ansari said...

கவியன்பன் அபுல் கலாம் அவர்கள்

//இ.அ..காக்கா அவர்களும், முத்துநகர் வித்தகர் பகுருதீன் அவர்களும் “முஸ்லிம் வேட்பாளராகளாக” ஆளுக்கொரு தொகுதியில் நின்றாலும்//

அன்புக்கு நன்றி. எங்கள் மீது கவியன்பன் அவர்களுக்கு எதுவும் கோபமா?

Anonymous said...

சென்னையிலிருந்து டெல்லி போக சீட்டு ஒன்னுக்கு வெறும் நூறு ரூவாதான் லஞ்சமா?

இந்த அற்ப காசை எவன் கைநீட்டி வாங்குவான்!

எப்புடிப் பாத்தாலும் ரூவா ஐநூறுக்கு கொரச்சு இருக்கவே இருக்காது.. ஏதோ இதுலேயும் தில்லுமுல்லு இருக்கு போலே இருக்கு!

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் மண்ணின் மைந்தன், இந்தியாவின் விடிவெள்ளி, வருங்கால நிதி மந்திரி, இப்போது வருகை தந்திருப்பதால்... அவர்களை பேச அழைக்கிறேன்,,, :)

காக்கா: கனவுல இவ்வ்வ்வ்வ்வ்ளோ மேட்டரையும் கண்டுட்டு சும்மா இருந்தா எப்படி...?

அதிரைக்கு மின்சாரம் காற்றிலிருந்து எடுத்தோம், அனைத்து குளங்களிலும் நீர் தேக்கி வைத்தோம், ஒவ்வொரு தெருவுக்கும் டோல்கேட் வைத்தோம்னு எப்புடி கணக்கு காட்டுவதாம்.... !

சீக்கீரம் துண்டை தோளில் போடுங்க காக்கா :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைவரே இந்த (இந்திய) தொண்டன் பின்னாடியே இருப்பான்... :)

Ebrahim Ansari said...

//ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிற்கும் தொகுதியில் அந்த வேட்பாளரை வெற்றிப் பெற வைக்கும் தூய- சமுதாய நலன் கருதிய - எண்ணத்துடன் வேறு எவரும் போட்டி வேட்பாளாரக நிற்காமல் இருப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே அவ்விருவர்களையும் களம் இறக்கலாம்.//

மு தலில் முஸ்லிம் வேட்பாளர் நிற்கும் தொகுதி எது என்று முஸ்லிம் தலைவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் ஏந்தி நிற்கும் துண்டில் அல்லது திருவோட்டில் விழும் தொகுதிகளைத்தான் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக முஸ்லிம் கட்சி என்றால் எந்தக் கட்சி? ஒரு பிரச்னையை எதிர்க்கவே சேர்ந்த முஸ்லிம் கட்சிகளின் எண்ணிக்கை இருபத்து நாலு.

சேப்பாக்கத்தில் , வாணியம்பாடியில் , துறை முகத்தில் முஸ்லிம் வேட்பாளர் தோற்க முஸ்லிம்களே காரணம்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முத்துப் பேட்டை பேரூராட்சியும் மேட்டுப் பாளையம் நகராட்சியும் கணக்கற்ற முஸ்லிம் இயக்கங்கள் போட்டியிட்டதால் பிறர் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிவிட்டன.

ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கும் இடத்தில் மற்றவரைக் கடிக்கும் பாம்பு கிடக்கிறது.

மற்ற முஸ்லிம் தலைவர் இருக்கும் இடத்தில் முதலாமவரை விழுங்கும் முதலை இருக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

ஒற்றுமை என்பது இன்றைய இயலாமை. பகையுணர்வு மண்டிக் கிடக்கிறது.

இதன் உச்ச கட்ட உதாரணம் : அண்மையில் ஒரு பிரிவின் தலைவர் விபத்தில் சிக்கினார். இதற்கு முகநூலில் கருத்திட்ட ஒரு
முஸ்லிம் அப்படியா? வண்டிக்கு மட்டும்தான் சேதமா? என்று தனது காழ்ப்புணர்வைக் காட்டி இருந்தார்.

இவர்களின் சண்டையில் மார்க்க நெறிமுறைகள் மறைந்து போய் வருகின்றன.

இவை இறுதி நாளின் அடையாளம் கவியன்பன் அவர்களே.

இந்த சுழலில் நாமும் சிக்க வேண்டுமா?

Ebrahim Ansari said...

//ஒவ்வொரு தெருவுக்கும் டோல்கேட் // ஹஹஹஹ்ஹா.

நாங்க ஆட்சிக்கு வந்தால்

அப்பத்தில் முட்டை ஊத்தி தருவோம்.
குப்பங்களில் குடிசை கட்டி கூழ் கஞ்சி ஊத்துவோம்
கப்பத்தை ஒழிப்போம்; வெப்பத்தையும் குறைப்போம்
சாலைகளில் குளிர்சாதனம் சடுதியில் தருவோம்
பாலையில் பதநீர் பாட்டிலில் தருவோம்
லஞ்சம் வாங்கியாவது பஞ்சம் நீக்குவோம்
இட்லிக்கு சட்னி தரும் பழமை நீக்கி
இறைச்சிக் கறிக்கு இஞ்சி பூண்டு தருவோம்
பத்தாவது படித்தாலே பட்டம் தருவோம்
பாசி பிடித்த குளத்தை தேய்த்துவிட
தேங்காய் செம்பு தருவோம்
மீசையில் வெள்ளை முடி இருந்தால்
அரசின் செலவில் கருப்பாக்கிவிடுவோம்
மாலத்தீவில் மாசி வாங்கி பொடியாக்கித் தருவோம்
ஆலமரத்தின் அடியில் வீடுகட்டித்தருவோம்
காணாமல் போன சாவியைக்
கண்டுபிடித்துத் தருவோம்
காவல் நிலையங்களில் ஏடிஎம் வசதி
தாலுகா ஆபீசில் தந்தி மணியார்டர் வசதி
தலைமைச்செயலகத்தில் வெஸ்டர்ன் யூனியன்
விரைவில் செய்து தருவோம்
அமைச்சர்களின் மேசைகளில்
கிரெடிட் கார்டு இழுக்கும் வசதி
இப்போதே தருவோம்
கடல் நீரைக் குடிநீராக்கும்
வீண் வேலையை விட்டு
சாமபலை சிமின்ட் ஆக்கும்
தொழில் நுட்பம் தருவோம்

அப்புறம் என்ன பகுருதீன்? இப்பவே கண்ணைக் கட்டுதே.....!

தோளில் துண்டை போட்டுவிடலாமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! இந்த திட்டத்திற்கு... என்ன பெயர் வச்சுருக்கீங்க ?

ஏதுனாச்சும் புச்சா மெகா சீரியல் ஏதும் ப்ளேன் இருக்கா ?

ஸ்டார் தொலைக்காட்சி குழுமம் திட்டம் போட்டு இந்திய 17 மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப எத்தனித்து இருக்கும் சூழ்சியை அறிந்தீர்களா ?!

KALAM SHAICK ABDUL KADER said...

\\முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முத்துப் பேட்டை பேரூராட்சியும் மேட்டுப் பாளையம் நகராட்சியும் கணக்கற்ற முஸ்லிம் இயக்கங்கள் போட்டியிட்டதால் பிறர் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிவிட்டன.\\

//இதன் உச்ச கட்ட உதாரணம் : அண்மையில் ஒரு பிரிவின் தலைவர் விபத்தில் சிக்கினார். இதற்கு முகநூலில் கருத்திட்ட ஒரு
முஸ்லிம் அப்படியா? வண்டிக்கு மட்டும்தான் சேதமா? என்று தனது காழ்ப்புணர்வைக் காட்டி இருந்தார். \\

வேதனையிலும் வேதனை; மனிதாபிமானமற்றச் செயல்களின் காட்டுகளாகும். அநாகரிகத்தில் மேடையில் நின்று அரசியல் பேசுகின்றனர்!

என் கவிதை வரிகள் இதோ:

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!


sabeer.abushahruk said...

காக்கா,

கலக்கல் திட்டஙகள். சீக்கிரமா ஆட்சிக்கு வாங்களேன். நாஙகள்லாம் தொண்டர்களாக வந்துடறோம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காக்கா,

கலக்கல் திட்டஙகள். சீக்கிரமா ஆட்சிக்கு வாங்களேன். நாங்கள்லாம் தொண்டர்களாக வந்துடறோம்.

கனவு காண்கிறோம். அது நனவாக!

Ebrahim Ansari said...

தானைத்தலைவர் - ஆஸ்தானக் கவிஞர் - இந்தப் பொதுக் குழுவுக்கு வருவதற்கு தாமதம். அதற்குள் கட்சி உறுப்பினர்கள் தவித்துப் போய்விட்டனர். பெருநாள் -! குடும்பத்துடன் தலைவர் வெளி இடம் சென்று இருக்கிறார் மீண்டும் வருவார் - கருத்துத்தருவார் என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

பொதுக் குழுவுக்கு வரவேற்கிறோம். இப்போது அபூ இப்ராஹீம் அவர்கள் தலைவருக்கு பொன்னாடை போர்த்துவார்கள்.

இன்னும் சில வட்டாரத்தலைவர்களையும் காணவில்லை.

முக்கியமாக மலேசிய நாட்டின் கட்சிப் பிரதிநிதி
தமாம் நகரில் இருந்து பேசும் படத் தோழர்,
அண்மையில் ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற வட்டாரப் பிரதிநிதி,
அமெரிக்க நாட்டின் முடி சூடிய மாநிலப் பிரதிநிதி,
ஷாஜஹான் கட்டிய காதல் மாளிகையை நினைவூட்டும் கட்சியின் முக்கியப் பிரதிநிதி,
சவுதியின் மற்ற பகுதியில் கண் சிகிச்சை முகாம் நடத்தும் தோழர்
கட்சியின் ஆஸ்தானப் பாடகர்

ஆகியோர் பொதுக்குழுவில கலந்து கொள்ளவில்லை.


இப்படி இருந்தால் கட்சி எப்படி நடத்துவது? கண்டனத் தீர்மானம் நிறைவேறும் முன் காட்சியளித்தால் நலம்.

நெருக்கடியான நேரத்திலும் லண்டன் பிரதிநிதி கலந்து கொண்டதற்கு ஒரு நன்றி கூறி சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்படும்

sabeer.abushahruk said...

பேசி அமர்ந்திருக்கும் தலைவர் அவர்களே,

ஆஸ்த்தான கவியெனும்
மஸ்த்தான விளிப்பினில்
சொக்க வைத்த
மக்கள் தலைவரே

அமீரகத்தில்
அயராது உழைக்கும்
எம்நாட்டு மக்களின் நலனுக்காக
கனரக எந்திரங்களோடு
மல்லுக்கட்டும் எனக்கு
சுலையாக சிலநாட்கள்
விடுமுறை கிடைத்ததால்
ஓய்வெடுத்துவிட்டேன்
என்பதைச்
சொல்லிக்கொண்டு
கூறிக்கொண்டு
அறிவித்துவிட்டு
பகர்ந்துவிட்டு
வடை பெ... மன்னிக்கவும்
விடை பெறுகிறேன்.

(மேலும் தாங்கள் குறிப்பிடும் கட்சிக்காரர்கள் கைகளில் சூட்கேஸ்கள் கொடுக்கப்படாதவரை எதிர்பார்க்கலாம்)

Anonymous said...

கைதட்டு சத்தத்திலே கனிமொழி கவிதை காதிலே விழலே; ஆனாலும் நானும் கைதட்டினேன்னு. கலைஞர் காதுக்கு போகனும்ல !

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

எடிட்டர் ஐயா! சாலாம்-முங்கோ!

under-the-counterலே கொடுக்கெற காஸு ரெம்ப கொறச்சலா தெரியுதே!

இது நம்ம நாட்டு பழக்கமில்லீங்க! நீங்க ஊருக்கு புதுசோ? பார்த்து கூடக் கொறச்சலா போட்டு கொடுங்கையா!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

SMF (மூத்த)காக்கா: நீங்க நெனைக்கிற மாதிரி இது அதுவல்ல... பிரிண்ட் சரியா இருக்கானு சரி பார்க்க கொடுக்கிறது... :) (கேஸு கீஸு போட்டுடாதீங்க).

காந்தி பிறந்த மண்ணில்
சாந்தி புதைத்த மோடி..!

மின்வெட்டு இல்லையாம் - குஜராத்தில்
கண்கெட்ட இனவெறியர்கள் - குதூகலத்தில்

மோடிக்கு ஆதரவாக
mood (ஸ்டேடஸ்)
போடும் மூடர்கள்

இன்று அரசியல் எதிராளி யாரென்று இன்னும் முடிவாகத நிலையில் நாடெங்கும் கூடிக் களைகின்றனர்...

தலைவரே.. ! நான் ஏதோ தேசிய அரசியலுக்கு போயிட்டேன்னு துண்டை கழட்டிடாதீங்க... நானும் ஒரு மாநிலத்தின் அரசியலைத்தான் பேசுகிறேன்...

எனக்கு என்னமோ, நீங்க சுட்டிய வங்களெல்லாம்... அம்மா திட்டத்தினால் சும்மா இருக்கிறாங்கன்னு தெள்ள்ள்ள்ளீவ்வ்வ்வா தெரியுது !

KALAM SHAICK ABDUL KADER said...

மா வட்டங்களாய்ப் பல்கிப் பெருகியிருக்கும் உங்களின் புதிய கட்சிக்குப் பாரெங்கும் புகழ்க்கொடிப் பட்டொளி வீசிப் பறப்பதைப் பறைசாற்றும் உங்களின் தீர்மானம் உள்ளத்தைக் கொள்ளையடித்து விட்டன.

இப்பொழுதே மா வட்டம், சிறு வட்டங்களை நியமிக்கா விடில் “உள்கட்சி” உள்குத்துப் போரில் இறங்குவோம்; அப்புறம் அடைப்புக்குறிக்குள் மற்றுமொரு கட்சி துவங்குவோம். பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்குப் பதவி தரவில்லை என்று தொண்டர்களை உசுப்பி விடுவோம்; மாவட்ட மாநாடுகள் நடத்தித் தொண்டர்கள் பலத்தை நிருபிப்போம். கூட்டணித் தாவலுக்கும் தயாராகி விடுவோம். இதுவே இறுதி எச்சரிக்கையாகும். உடன் செயற்குழுவைக் கூட்டி மா வட்ட , குறு வட்ட நிர்வாகிகளைத் தெரிவு செய்யுங்கள்.

இந்தப் பயிற்சி போதுமா? இன்னும் கொஞ்சம் போதுமா?

பெருநாள் விடுப்பில் அயர்ந்து உறங்காமல், பொதுக்குழுவில் முதலாம் இருக்கையில் அமர்ந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபுஇபு அவர்களையும், இரண்டாம் இடத்தில் அமர்ந்து உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்டிருக்கும் தமியேனையும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டவில்லை என்பதையும் தலைமைக்குச் சுட்டிக் காட்டக் கடமை பட்டுள்ளோம்.

Ebrahim Ansari said...

//பெருநாள் விடுப்பில் அயர்ந்து உறங்காமல், பொதுக்குழுவில் முதலாம் இருக்கையில் அமர்ந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபுஇபு அவர்களையும், இரண்டாம் இடத்தில் அமர்ந்து உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்டிருக்கும் தமியேனையும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டவில்லை என்பதையும் தலைமைக்குச் சுட்டிக் காட்டக் கடமை பட்டுள்ளோம்.//

நீங்கள் மேடையில் வீற்று இருந்ததால் திரும்பிப் பார்க்கவில்லை கவியன்பன். மேலும் ,

கட்சிக்கு இரவுபகல் பாராமல் உழைக்கும் தலைவர்களை மறப்பது ஒன்றும் புதிதல்லவே.

இதற்காகவே நாங்கள் ஒரு கோஷம் ஏற்படுத்தி இருக்கிறோம் . அதுவே மறப்போம் ! மன்னிப்போம். !

sabeer.abushahruk said...

கட்சி கொ.ப.செ.வுக்கு ரெட்டை சோடா ப்ளீஸ்

Ebrahim Ansari said...

//கனரக எந்திரங்களோடு
மல்லுக்கட்டும் எனக்கு
சுலையாக சிலநாட்கள்
விடுமுறை கிடைத்ததால்
ஓய்வெடுத்துவிட்டேன்//

குபேரப் பட்டிணம் கொள்ளை போகும்போது கொடநாட்டில் ஒய்வு எடுக்கப் போகிறவர்கள் வாழும் சூழலில் அரிதாக கிடைத்த விடுமுறையை அனுபவிக்கவே வேண்டும் ராஜா. கட்சி இதற்கு தடை இல்லா சான்றிதழ் வழங்குகிறது.

crown said...

இன்னும் சில வட்டாரத்தலைவர்களையும் காணவில்லை.

முக்கியமாக மலேசிய நாட்டின் கட்சிப் பிரதிநிதி
தமாம் நகரில் இருந்து பேசும் படத் தோழர்,
அண்மையில் ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற வட்டாரப் பிரதிநிதி,
அமெரிக்க நாட்டின் முடி சூடிய மாநிலப் பிரதிநிதி,
ஷாஜஹான் கட்டிய காதல் மாளிகையை நினைவூட்டும் கட்சியின் முக்கியப் பிரதிநிதி,
சவுதியின் மற்ற பகுதியில் கண் சிகிச்சை முகாம் நடத்தும் தோழர்
கட்சியின் ஆஸ்தானப் பாடகர்

ஆகியோர் பொதுக்குழுவில கலந்து கொள்ளவில்லை.
----------------------------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும். பெடரல் கவர்மெண்ட் தற்காலிக மூடியதால் எதிர் கட்சிகளை( நாங்க இப்ப ஆளும்கட்சி)வழிக்கு கொண்டுவர உபாமாவுக்கு உதவியாக இருந்ததால் நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//அஸ்ஸலாமுஅலைக்கும். பெடரல் கவர்மெண்ட் தற்காலிக மூடியதால் எதிர் கட்சிகளை( நாங்க இப்ப ஆளும்கட்சி)வழிக்கு கொண்டுவர உபாமாவுக்கு உதவியாக இருந்ததால் நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\\

கவிதைகளின் சிரிக்க வைத்த வார்த்தைச் சித்தர்-மகுடக் கவிஞர், இப்பொழுது அரசியலிலும் - அதுவும் வல்லரசு நாட்டின் வலுவான ஒரு பதவியில் “கிங்மேகர்” ஆகிவிட்ட கிரவுனார் அவர்களின் வ்ரிகளைப் படித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். அண்மையில், என் உடல்நிலையைச் சோதித்த மருத்துவர் சொன்னார்” நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள்; அதனால் நகைச்சுவையாளர்களுடன் இருங்கள்; அவர்களின் நகைச்சுவைகளைக் கேட்டு, படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்” என்றார். அதனை உண்மைப் படுத்திய மகுடக்கவிஞரே என் மருந்தாக எனக்குத் தெரிகின்றார்.

crown said...

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

//அஸ்ஸலாமுஅலைக்கும். பெடரல் கவர்மெண்ட் தற்காலிக மூடியதால் எதிர் கட்சிகளை( நாங்க இப்ப ஆளும்கட்சி)வழிக்கு கொண்டுவர உபாமாவுக்கு உதவியாக இருந்ததால் நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\\

கவிதைகளின் சிரிக்க வைத்த வார்த்தைச் சித்தர்-மகுடக் கவிஞர், இப்பொழுது அரசியலிலும் - அதுவும் வல்லரசு நாட்டின் வலுவான ஒரு பதவியில் “கிங்மேகர்” ஆகிவிட்ட கிரவுனார் அவர்களின் வ்ரிகளைப் படித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். அண்மையில், என் உடல்நிலையைச் சோதித்த மருத்துவர் சொன்னார்” நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள்; அதனால் நகைச்சுவையாளர்களுடன் இருங்கள்; அவர்களின் நகைச்சுவைகளைக் கேட்டு, படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்” என்றார். அதனை உண்மைப் படுத்திய மகுடக்கவிஞரே என் மருந்தாக எனக்குத் தெரிகின்றார்.
---------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிதீபமே! இது உண்மை பாராட்டா? இல்லை வஞ்சபுகழ்சியா? ஏன் என்றால் சிரிக்கும் படித்தான் நம்மவரகளின்( என் )தகுதி இருக்கு ?????ஹாஹஹஹ்ஹஹ்ஹ ஆனால் உபாமாவின் அரசு இயந்திரத்தில் அதிகம் இருப்பது இந்தியர்களே அமெரிக்கருகளுக்கு அடுத்து.....

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் சலாம், மகுடக் கவிஞரே! நீங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள். உண்மையில் உங்களின் அந்த எழுத்து நடை ஓர் இதம் தரும் நகைச்சுவை என்பதே என் பின்னூட்டத்தின் மையக் கருத்தாகும். ஒபாமாவின் இலக்கு இந்தியர்கள் மீதுதான் என்பதை வைத்து அடியேன் “நய்யாண்டி” செய்யவில்லை; எனவே, என் நெஞ்சப் புகழ்ச்சியே, தவிர வஞ்சப் புகழ்ச்சியன்று. நீங்கள் இருக்கும் வேதனையை நகைச்சுவைப் படுத்தும் அளவுக்கு யான் தரம் தாழ்ந்தவனல்லன். உண்மையில் இத்தொடர் முழுவதுமே சிரிக்க வைக்கும் பின்னூட்டங்களாகவே வழங்கி வருகின்றனர்; அவற்றுள் உங்களின் பின்னூட்டம் கூடுதல் நகைச்சுவையாகப் பட்டது தவிர, உங்களைப் பார்த்து நகைக்கவே அல்ல.

KALAM SHAICK ABDUL KADER said...

மகுடக் கவிஞரே! உங்களின் பின்னூட்டத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள், உங்கள் எழுத்து நடையில், \\ உபாமாவுக்கு உதவியாக இருந்ததால் நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\\ என்பதில் நகைச்சுவையைக் காணலாம். இஃது உங்களுக்கே உரித்தான நடை எனபதே ஈண்டு நகைச்சுவை என்று பகர்ந்தனன். அங்கிருந்து கொண்டு இங்குக் கூட்டத்திற்கு வர இயலவில்லை என்பதற்கும், நீங்கள் எழுதும் மேற்சொன்ன வரிகளுக்கும் இடையில், உங்களின் வரிகளில் தான் நகைச்சுவை இழையோடியிருப்பதை அறியவில்லையா? என்வே, நகைச்சுவையில் உங்கள் எழுத்து நடை, விடயத்தைச் சொல்லும் வகையில் சிறந்தது என்பதே என் மையக் கருத்தாகும்.

crown said...


ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

மகுடக் கவிஞரே! உங்களின் பின்னூட்டத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள், உங்கள் எழுத்து நடையில், \\ உபாமாவுக்கு உதவியாக இருந்ததால் நான் பொதுக்குழுவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.\\ என்பதில் நகைச்சுவையைக் காணலாம். இஃது உங்களுக்கே உரித்தான நடை எனபதே ஈண்டு நகைச்சுவை என்று பகர்ந்தனன். அங்கிருந்து கொண்டு இங்குக் கூட்டத்திற்கு வர இயலவில்லை என்பதற்கும், நீங்கள் எழுதும் மேற்சொன்ன வரிகளுக்கும் இடையில், உங்களின் வரிகளில் தான் நகைச்சுவை இழையோடியிருப்பதை அறியவில்லையா? என்வே, நகைச்சுவையில் உங்கள் எழுத்து நடை, விடயத்தைச் சொல்லும் வகையில் சிறந்தது என்பதே என் மையக் கருத்தாகும்.
--------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமுலைக்கும்.இப்பவும் என்னை கருபண்ணன்(ஒபாமாவை அப்படித்தான் நான் அழைப்பேன் அவர் ரொம்ப மகிழ்ந்துபோவார் உங்க கவிதைனா அவருக்கு உசுரு ! சொல்லச்சொன்னார் நேரம் கிடைத்தால் அதிரை நிருபரில் பங்கு(கம்ஷன்????)பெறுவதாக சொன்னார்.)அழைத்து கிரவுன் அ. நி பார்த்தியலா? கவிதீபம் வருத்தப்பட்டுள்ளார்னு சொன்ன பின் தான் உங்க பின்னோட்டம் கண்டேன். நான் சும்ம உங வாயை(எழுத்தை)கிளறிபார்க்கனும்னு சும்மா எழுதினேன்".எனக்குத்தெரியும் அது நெஞ்சப்புகழ்சி என்பது.உங்கள் நெஞ்சம் சலனப்பட காரணமாகிவிட்டேன் மன்னிக்கவும்.கூடியவிரைவில் ஒன்றிய(மனம் ஒன்றிய)தேர்தலுக்கு பணி செய்வோம் . கண் துஞ்சாது க(ல)ழக பணியாற்றுவோம். வாழ்க அ. நி நாமம்.( நாமும்).

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் சலாம். எதுகை மோனை இளவரசர் எங்கே எம்மைக் கடிந்துக் கொள்வாரோ என்ற ஏக்கத்தில், இரவெலாம் விட்டேன் தூக்கத்தை;பாருங்கள் இந்த மறுமொழி கூட அதிகாலையில் இடுகிறேன். ஒபாமாவுடன் என்றும் துணைநின்று எம் புதிய கட்சியையும் கலிஃபோர்னியா சார்பாக வென்று கூட்டணி ஆட்சி காண விழைகிறேன்.

Ebrahim Ansari said...

ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் இங்கு செக்கடிக் குளத்தில் தண்ணீர் இல்லை; ஆலடிக் குளம் வரண்டுகிடக்கிறது.

இது பற்றி எல்லாம் பொதுக்குழுவில் விவாதிக்க இருந்தோம். அதை எல்லாம் விட்டு விட்டு கருப்பண்ணனுக்கு ஆலோசனை கூறச் சென்ற மகுடாதிபதி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள் கவியன்பன் அதாவது கோ. ப். செ.

தவிரவும் மற்றவர்களின் விளக்கங்கள் இதுவரை வரவில்லை. பெருநாள் வட்டிலப்ப மயக்கம் இன்னும் தீரவில்லையா என்று இன்னொரு நோட்டீஸ் அனுப்புங்கள். ( நீங்கள் சிரித்து மகிழவே கவியன்பன்)

KALAM SHAICK ABDUL KADER said...

ஹாஹாஹா..கொ.ப.செ பொருத்தமானவனுக்குப் பொருத்தமான பதவியை வாரி வழங்கிய அன்புத் தலைவர்க்கு அடியேனின் அகமகிழ்வான நன்றிகள். இப்பொழுதுதான் தங்களின் “அவுரங்கஜேப்” போஸ்டர்களை முகநூல் சுவரில் ஒட்டி விட்டுக் களைப்புடன் அமர்ந்தேன், ஐயா. அதற்குள் எப்படியோ கண்டுபிடித்தும், அடியேன் அல்லும் பகலும் அயராது கழகப்பணியாற்றியவன் (முன்னாள் தி.மு.க) என்றும் இப்பொழுதும் ஆற்றிக் கொண்டிருப்பவன் (முஸ்லிம் லீக்) என்றும் உளவறிந்து உங்கள் கட்சிக்குக் கொ.ப.செ பதவியைக் கொடுத்து விட்டீர்கள். தலைவர் வாழ்க! இப்றாஹிம் பாய் ஜிந்தாபாத்.

sabeer.abushahruk said...

எச்சூஸ்மீ,

கவியன்பனுக்கு கொ.ப.செ. முன்மொழிந்தது நானு. தல ஒப்பம் மட்டுமே தந்தார்கள்.

நிற்க, என் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவது உள்நோக்கத்திலா?

KALAM SHAICK ABDUL KADER said...

அப்படியா தலைவா, எனக்கு ஒன்றும் தெரிவிக்கவில்லையே? என்னை முன்னணியில் நிறுத்த ஆஸ்தான கவிஞர் அவர்கள் பின்னணியில் பாடுபட்டிருப்பதை முற்கூட்டியே சொல்லவில்லையே? வர வர தலைவர் அவர்களுக்கு ஞாபக மறதி வருவதால் “ஃபைலைக் காணோம்” என்று தடுமாறுவதற்குள், பொதுக்குழு “பைலகளை” எல்லாம் பத்திரப்படுத்தி வையுங்கள். முழுமையான நிர்வாகிகள் பட்டியல் போடுங்கள். மூத்தவர் SMF காக்கா அவர்கட்கு உரிய மரியாதையான பதவியை வழங்கி விடவும்.
கொ.ப.செ. பதவி வந்தாச்சு; அப்புறம் ஆட்சியைப் பிடித்தலாம்.ஹாஹா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு