Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இத்தியாதி இத்தியாதி - Version 2 33

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2013 | , , , ,

திக்...திக்…!

"ஹெல்ப்..." 

"ஈஸ் எனிபடி அவுட் தேர்...?"

நான்காவது தடவையாகக் கத்திக் கத்திக் கூப்பிட்டும் ஒரு பதிலும் வராததால் லேசாக பயம் தொற்றிக் கொண்டது. கூவிக் கூப்பிட்டாலும் எதிரொலி கேட்குமளவிற்குப் போதுமான இடைவெளி சுவர்களுக்கிடையே இல்லாததால் சுரத்து இல்லாத ஓர் அபயக் குரலாக நமத்துப்போய் ஒலித்தது என் குரல். 

என்னை மெல்ல மெல்ல அச்சம் சூழ்ந்து கொள்ளத் துவங்கியது. செய்வதறியாது தவித்த என்னை உலுக்கியெடுத்தது என்னைச் சுற்றி நிலவியத் தனிமையும் மயான அமைதியும். முகத்தில் பீதி பரவ கவலையுறலானேன். எதிர்மறை எண்ணங்கள் ஆட்கொள்ளத் துவங்க, வாழ்க்கை இத்துடன்  முடிந்தது என்று உள்மனம் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது.  உதவி கிடைக்கும் என்கிற உத்தரவாதம் சற்றும் இல்லாத சூழ்நிலையில் வசமாக மாட்டிக்கொண்டது புரிந்தது.

சம்பவம் நடந்தது இரண்டாயிரத்து ஆறில். அப்போது நான் ஒரு ஸ்டூடியோ ஃப்ளாட் என்றழைக்கப்படும் ஒற்றையறைக் குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தேன். ஜீகோ ரவுண்டபவ்ட் என்னும் பரிச்சயமான இடத்தில் ஷார்ஜாவின் தொழில்நகரப் பகுதியில் இருக்கிறது நான் வேலை செய்யும் நிறுவனமும் அதையொட்டி அமைந்துள்ள குடியிருப்பும். போக்குவரத்துக்காக கணிசமான தொகையும் நேரமும் செலவு செய்யும் அமீரக நடைமுறைக்கு மாற்றமாக நான் வேலை முடிந்த மூன்றாவது நிமிடத்தில் வீட்டுக்குப்போய் விடுவேன்.

அப்படித்தான் அன்றைக்கும் வேலை முடிந்தவுடன் மாலை 06:00 மணிக்கு வீட்டுக்குப்போய் வாயிற்கதவைத் திறந்து உள்ளே போனதும் சாவிகொண்டு கதவை பூட்டிவிட்டு, அனிச்சையாகவே தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். குளியலறைக்குச் சென்று கைகால் முகம் கழுவி கொஞ்சம் புத்துணர்வு பெறலாம் என்று குளியலறைக் கதவைத் திறந்து…உள்ளே போய்… கதவைச் சாத்த… சாத்தும் போது கதவின் பூட்டுக்குள் இருந்து ஏதோ உதிரிபாகங்கள் கழன்று உள்ளுக்குள்ளேயே விழுவது போல் சப்தம் கேட்க…’நாம்தான் பூட்டவில்லையே, சாத்தித்தானே வைத்திருக்கிறோம்’ என்று அலட்சியமாக விட்டுவிட்டு முகம் கழுவத் தொடங்கினேன்.

திறந்தவெளியில் கனரக எந்திரங்களோடான என் பணியில் சூடும் தூசும் அன்றாட வாழ்க்கையில் நான் அனுபவிக்கும் அம்சங்கள், ஆதலால் தொழுகை நேரங்களில் ஒலூச் செய்வதும் வீட்டுக்கு வந்ததும் குளிர்ந்த நீரில் கைகால் முகம் கழுவுவதும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் புத்துணர்வையும் கொடுக்கும்.  ஆனால், அன்று அந்தப் புத்துணர்வு சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.

குளியலறையை விட்டு வெளியே வருவதற்காக நீர் சொட்டச்சொட்டக் கதவின் கைப்பிடியை அலட்சியமாகத் திருக அது எந்த உட்பிடிப்போ எதிர்விசையோ காட்டாமல் இலகுவாகத் திருகியது, ஆனால்… கதவு திறக்கவில்லை.  மீண்டும் மீண்டும் திருகத்திருக ஒன்றுமே நகரும் அல்லது திறக்கும் சப்தம் கேட்காததால் சற்று நிதானித்து மெல்லமெல்ல பல கோணங்களிலும் கைப்பிடியை அமைத்துத் திருகினேன்.  ம்ஹூம்… லேசான குழப்பத்தோடு தொடர்ந்து செய்த முயற்சியின் முடிவில் ஒன்று தெளிவாக விளங்கியது.  அது என்னவென்றால், கதவின் பூட்டில் ஏதோ ஒரு போல்ட்டோ ஸ்க்ரூவோ லூசாகி, உள் உபகரணங்கள் கழன்று, பூட்டு தானாகவே உள்ளே பூட்டிக் கொண்டது.

பூட்டிக்கொண்டது என்பது உரைத்ததும் மாட்டிக்கொண்டேன் என்பதும் புரிந்தது.  எனக்கு அது ஒன்றும் சட்டென்று பெரிய விபரீதமாகப் படவில்லை.  ஏதாவது ஸ்குரூ ட்ரைவரோ ஸ்பானரோ இருக்கிறதா என்று தேடினேன்.  குளியல் சாமான்களையும் ஷேவிங் ரேசரையும் தவிர வேறு எந்த சாமானும் இல்லாமல் மிகச் சுத்தமாக வைத்திருந்தேன் பாத் ரூமை.  கத்தியோ வேறு எந்த இரும்பு உபகரணமோகூட இல்லையென்றதும் எப்படி கதவைத் திறப்பது என்பது கவலையளித்தது.  

அன்று வியாழக்கிழமை என்பதால் நான் உள்ளேயே இருந்தாலும் கம்பெனியில் யாரும் என்னைச் சனிக்கிழமைவரைத் தேடமாட்டார்கள். இந்த எண்ணம் உதித்ததும் மனம் பயத்தில் அதிர்ந்தது. வெற்று அறைக்குள் சன் ட்டிவி செய்தி வாசித்துக்கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டது.  கைபேசிகூட அறையில் மேசைமேல் வைத்திருந்தேன். வெளியே போகாமல் அதைக்கொண்டு எந்த உதவியும் நாட முடியாது. என்ன செய்வது?

அந்தக் குளியலறை ஒன்றரைக்கு இரண்டு மீட்டர் சதுர அளவில் மட்டுமே இருக்கும், குறுகலானது. ஒரே ஒரு எக்ஸாஸ்ட் ஃபேனைத்தவிர வேறு எந்த ஜன்னலோ திறப்போ இல்லாதது.  சிட்டவுட்டின்மேல் ஏறிநின்று அந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் வழியாக சப்தம் போட்டேன்.  அங்கிருந்துதான் இந்தக் கட்டுரையும் தொடங்குகிறது. 

நிதானம் இழக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.  இங்கே மாட்டிக்கொண்டு சாவதைவிட வேறு ஏதாவது முயற்சி செய்தே ஆகவேண்டும் என்று தீர்மாணித்தேன்.  பாத்ரூமின் உள்ளே வரும்போது வெளிச்சம் இருந்ததால் வெளியில் உள்ள குளியலறை விளக்கிற்கான ஸ்விட்ச்சைப் போடாமல்தான் வந்திருந்தேன்.  நேரம் ஆக ஆக வெளிச்சம் மங்கி பாத்ரூமிலும் இருள் சூழ்ந்தது. கட்டுரையின் இந்த இடத்தில் “தொடரும்” போடுமளவுக்கு எனக்கு பயமாக இருந்தது.  

கதவை எட்டி உதைக்க அது மிக கடினமாக இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அடி உதைகளை வாங்கிக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முதல் முயற்சியாக, கைப்பிடியை பலம் கொண்டமட்டும் பிடித்து இழுத்துப்பார்த்தேன்.   இழுத்தால் என்னாகும் எதற்காக இழுக்கிறேன் என்றெல்லாம் யோசிக்கவில்லை, இழுத்தேன்…இழுத்தேன்.  ஆட்டி அசைத்து இழுக்க ஒரு பலம்பொருந்திய இழுப்பில் கைப்பிடி கையோடு வந்தது.  நானும் இழுத்த வேகத்திற்கான உந்து விசையோடு பின்னால் இருந்த வாஷ்பேஸனில் இடித்துக்கொண்டு கீழே விழாமல் தப்பித்தேன்.  கைப்பிடி இருந்த இடத்தை உற்றுநோக்கி ஆராய்ந்ததில் ஒன்றுமே புரியவில்லை.  விரலைவிட்டுத் துலாவினேன்.  ஏதேதோ தட்டுப்பட இழுத்துப்பார்த்தேன்.  எதுவும் வரவில்லை, பயத்தைத்தவிர. அறைக்குள் “ஆணியே புடுங்க வேணாம்” என்று ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.  முகத்தில் ஈயாடவில்லை; சிரிப்பு எங்கிருந்து வரும்?

முதல் முயற்சியில் தோற்று இரண்டாவதாக கதவின் அடிப்பாகத்திலிருந்து வந்த வெளிச்சம் எனக்கு களங்கரை விளக்காகத் தெரிய அதன்கீழ் விரல்களை விட்டு மேல்நோக்கி நெம்பிப்பார்க்கலாம் என்று முயன்றேன்.  அந்த இடுக்கு என் விரல் புகும் அளவுக்கு திறந்தில்லாமல் சிறியதாக இருந்ததால் விரலும் வலிக்க தலையும் மெல்ல வலிக்கத் துவங்கியது.  அப்படியே சிட்டவுட்டின் மூடியில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொள்ளவும் எங்கோ போடப்பட்ட விளக்கின் வெளிச்சம் எக்ஸாஸ்ட் வழி சற்றே என் பாத்ரூமுக்குள் வரவும் சரியாக இருந்தது.  அந்த வெளிச்சத்தில் அப்பத்தான் பார்ப்பதுபோல் கதவைப்பார்த்தேன். பலகை தண்ணீர்பட்டு வீணாகாமல் இருக்க அலுமினிய தகடு பொறுத்தி கதவின் கீழ்பாதியில் பொடி ஆணி வைத்து அடித்திருந்தார்கள்.  பொடி ஆணி! கழட்டுவது சுலபமாயிற்றே என்று பொறி தட்ட, மூன்றாவது முயற்சிக்கான துவக்கம் கிடைக்க, ஆரம்பித்தேன்.

ஆணி அடிக்கப்படாத விளிம்புகளில் கதவின் மரப்பலகைக்கும் அலுமினியத் தகட்டுக்கும் இடையே இருந்த வெடிப்புப்போன்ற பகுதியை மெல்லமெல்ல நெம்பினேன்.  விட்டுவிட்டு வேகமாக நெம்ப முதல் ஆணி தெரித்து விழுந்தது.  தொடர்ந்து அடுத்தடுத்த ஆணிகளும் தெரித்து விழுமளவுக்கு விட்டுவிட்டு இழுக்க அலுமினியத் தகடு கையோடு வந்துவிட்டது.   சுதாரித்து மேற்கொண்டு என்ன என்று பார்க்க, கதவின் ப்ளைவுட் என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்பதுபோல் இருந்தது. முழுக்கதவும் மதில்சுவர்போல் என் முல் நின்றது.  மறுபடியும் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று ஆனவுடன் ஆண்டவன் கொடுத்த பற்கள் மட்டுமே ஆயுதம் எனக் கொண்டு நான்காவது முயற்சியைத் தொடங்கினேன்.

ப்ளைவுட்டை பலம்கொண்ட மட்டும் பற்களும் உதடுகளும் வலிக்க வலிக்க கடித்தேன். தேங்காய் துருவுவதுபோல் பிராண்டினேன்.  20 நிமிட முயற்சியில் ப்ளைவுட்டின் நான்கைந்து இழைகளைக் கடித்துத் துப்பிவிட்டு, அலுமினிய தகட்டை கூறாகச் சுற்றிக்கொண்டு அதை அந்த ப்ளைவுட்டின் ஓட்டை வழியாக உள்ளே விட்டு நெம்பி... நெம்பி... ரெண்டடிக்கு ரெண்டடி அளவிலான பலகையை பெயர்த்து எடுத்துவிட்டேன். அன்றுதான் கதவின் உட்கட்டமைப்பு எனக்கு முழுக்கத் தெரிந்தது.  மரச்சட்டங்களைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பொறுத்தி  இப்புறமும் அப்புறமும் ப்ளைவுட் கொண்டு மூடி வடிவமைத்திருந்தார்கள்.  இப்போது கதவு பலகீனப்பட்டுப் போயிருந்ததால் மனதிற்கும் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டிருந்தது.  கீழே அமர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் ஊண்றிக் கொண்டு இரண்டு கால்களாலும் சட்டத்தை எட்டி உதைய சட்டமும் அப்புறத்து ப்ளைவுட்டும் தடார் புடார் என்று உடைந்தன.  நான் வெளியேறும் அளவிற்கு ஓட்டைக் கிடைத்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வெளியேறி, கம்பெனியின் கார்ப்பென்டருக்கும் ஃபோன் செய்தபோது மணி 10:40 ஆகிவிட்டிருந்தது.

இந்தப் பொறியில் சிக்கிய நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத திக்…திக்…!

******

ட்டானும் ஞ்சாபியும்”

“நாங்கமட்டும் பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் எங்கள் நாட்டை சொர்க்க புரியாக்கி விடுவோம்” என்று மார்தட்டிய பாக்கிஸ்தானியப் பட்டானைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.   பக்கத்திலிருந்த பாக்கிஸ்தானிய பஞ்சாபி, “யார் உங்களை வரவேண்டாமென்றார்கள். நீங்கள்தான் படிக்கவே மாட்டேன்கிறீர்களே” என்று கலாய்க்க, பேச்சு வலுத்துக்கொண்டே போனது.  ஒரு நேரத்தில் பட்டானை போகச்சொல்லிவிட்டு பஞ்சாபியிடம் கேட்டேன், “ ஏன் இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள்?” என்று.

“நாங்கள் மறுக்கவில்லை சபீர் பாய். இவர்களுக்கு உடல் வலிமை கூடுதல் ஆனால், மூளை குறைவு” என்றான்.

“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”

“எங்கள் ஊரில் பஞ்சாபி, பட்டான் ஆகிய இரண்டு வம்சாவழியினரும் வசிக்கிறோம்.  ஒரு முறை…” என்று அவர் சொன்ன சம்பவம் உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்லிவிடுகிறேன்.

ஒரு முறை நம்ம பட்டான் வீட்டில் ஒரு திருடன் புகுந்து விட்டான்.  நம்ம பட்டான் அவனை சாதுர்யமாகப் பிடித்து கட்டிப் போட்டுவிட்டான்.  கட்டும்போதே, “ நீயும் பட்டான் நானும் பட்டான். தெரியாமல் திருட வந்து விட்டேன். என்னை விட்டு விடு” என்று சொன்ன திருட்டு பட்டானை விட மறுத்து விட்டார் நம்ம பட்டான்.  திருட்டுப் பட்டானின் கைகால்களைக் கட்டிப்போட்ட கையோடு போலீஸில் சொல்ல வெளியே கிளம்பினார் நம்ம பட்டான்.

உடனே திருட்டு பட்டான், “ அதுதான் கால்களைக் கட்டிப் போட்டு விட்டாயே. நான் தப்பித்து ஓடி விடமுடியாதே. பிறகு ஏன் கைகளையும் கட்டிப் போட்டாய். கைக்கட்டையாவது  அவிழ்த்து விடு” என்று கெஞ்சினார். திருட்டுப்பட்டான் சொன்னதில், கால்கள் கட்டப்பட்டால்தான் ஓட முடியாது என்கிற நியதி இருந்ததால், நம்ம பட்டான் கைக்கட்டை அவிழ்த்து விட்டுவிட்டு போலீஸூக்குப் போனார்.

போலீஸில் எல்லா விவரத்தையும் சொன்னவர் கைக்கட்டை அவிழ்த்து விட்டதையும் சொல்ல, பஞ்சாபி போலீஸோ, “அட மடையா, கைக்கட்டை ஏன் அவிழ்த்து விட்டாய். தன் கைகளைக்கொண்டு கால் கட்டையும் அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போயியிருப்பானே?” என்று அலுத்துக்கொண்டார். ஒரு கணம் தடுமாறிய நம்ம பட்டானோ சுதாரித்துக் கொண்டு, “இல்லை இல்லை, நீங்க வாங்க, அவன் அங்கேதான் இருப்பான். வந்து கைது செய்யுங்கள்” என்று கட்டாயப்படுத்த போலீஸோ மறுத்தார், “வர முடியாது. அவன் போயிருப்பான். போடா முட்டாளே” என்றார். நம்ம பட்டானோ, “ அவன் போயிருக்க மாட்டான். வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் சொன்னதால், “ நீ எதை வைத்து அவன் தப்பியிருக்க மாட்டான் என்று சொல்கிறாய்?” என்று கேட்க, “ தன் கட்டப்படாத கைகளால் கால்கட்டை அவிழ்ப்பான் என்று எனக்குத் தோன்றாதது அவனுக்கும் தோன்ற வாய்ப்பில்லை. ஏன்னா, நானும் பட்டான் அவனும் பட்டான்.” என்றார்.

சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி பட்டான் வீட்டுக்குப் போனார் போலீஸ்.  அங்கே….

திருட்டுப் பட்டான் கால்கள் கட்டப்பட்ட நிலையில் முழங்கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பரிதாபமாக அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தார். 

*-*-*-*-*-*-* 

னதூர்…ன் க்கள்!

வெயில் தெளித்து
நிழற் கோலமிட்ட
முதிர்க்காலை நேரத்து முற்றம்

மழை ஓய்ந்து
மணல் காய்ந்தும்
உதிராமல் சிதறாமல்
உலர்ந்திருந்த 
சக்கரங்கள் பதித்த
முப்பரிமாணத் தடங்கள்

வானவில் உடைந்து
வாசலிற் சிதறியதுபோல்
வர்ணங்களோடு
தானியம் கொத்தும் கோழிக்குஞ்சுகள்

செங்குத்தாக விழுந்து
உணவு கொத்தும்
மீன்கொத்திகள் பறந்துதிரியும்
குளங்கள்

ஒழுகும் 
கூரை வழியே
மழை நிரப்பியப் பாத்திரங்களைப்போல்
தூய எண்ணங்களால்
மனம் நிரம்பி வழியும் 
என் ஊர்க்காரர்கள்

அன்றாட வாழ்க்கையில்
அடிக்கடி கடக்க நேரும்
மைய வாடிகள்
வாழ்க்கையின் இலக்கை
நினைவுருத்திக் கொண்டிருக்க

குரல்வளம் செழிக்கக்
கூட்டுப் பிரார்த்தனையையொத்த
பாங்குகளினோசையிலும்

எம் 
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

33 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

திக்...திக்.. , ராஜேஷ் குமார். நாவல் படித்த நினவுகளை இழுத்துக் கொண்டு சென்று விட்டது! கதையும் எழுதும் திறமை உள்ளது (இது கதையல்ல; நடந்த சம்பவமே) முயன்றால், கதாசிரியராகவும் வரலாம், கவிவேந்தரே!

விழியில் பார்த்து, இதயம் புகுந்து, உணர்வில் நிறைந்து, “உயிரில்” கலந்ததனாற்றானோ, இறுதியில், \\எனதூர் எனக்குயிர்!\\ என்றீர்!

திக்.. திக் உணர்வால் இரத்தம் சூடேறியதை, \\எனதூர் என் மக்கள்|\ கவிதையின் குளிர்ச்சியால் ஆறிவிட்டது! கூடவே, கண்ணுக்குக் குளிர்ச்சியாய்த் தென்னங்கீற்றைப் பூங்காற்றுத் தாலாட்டித் தென்றலாய் வீசி- நம் ஊரின் வாசமுள்ள பாசம் பேசிடும் காட்சியும் கண்ணுக்கு விருந்தாய் அமைய, நித்திரைக்கு முன்னர்ப் படித்து உள்ளத்தில் முத்திரை பதித்த முத்தான ஆக்கமும், க்விதையும், படமும்!


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாலரை மணி நேர ஜெயில் வாழ்க்கை சம்பவமும், அப்போது நடந்த எலி பிரான்டு வேலையும் ரொம்ப சுவராஸ்யம்.
அது போல நம்மூரு நமக்குயிரு அருமை!

Aboobakkar, Can. said...

பதிவு ஆசியர் சபீர் அஹமது அவர்களே .....ரூமில் தனியாக இருக்கும் தாங்கள் பாத்ரூம் கதவை திறந்து போட்டுவிட்டு ஹாயா குளிப்பதை விட்டுவிட்டு அதை ஏன் பூட்டினீர்கள் மேலும் தொலை தூரத்திற்கு மாச்சல் பட்டு வேலைசெய்யும் இடம் அருகில் இப்படி சஸ்தாவா ரூம் பிடித்தால் இதெல்லாம் சகஜம் தான் .படிக்க படிக்க ஏதோ பழைய பாலசந்தர் படம் பார்த்த பீலிங் நல்லவேளை கீழே உள்ள பூட்டும் மேலே உள்ளதுபோல் புடி இல்லாமல் இருந்தால் கூடுதல் நேரம் எலிவேளை தொடர்ந்திருக்கும் .

அதிரை.மெய்சா said...

உனது கட்டுரை படித்து எனக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.நண்பா..! உனக்கு நிகழ்ந்த இச்சம்பவம் ரொம்ப சுவராஸ்யமாகவும் அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்க படிக்க விறுவிறுப்பாக இருந்தது. மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு திகில் படம் பார்த்த பீலிங்கை ஏற்ப்படுத்தி விட்டாய் நண்பா....!

நண்பா உனக்கு அன்பான அட்வைஸ் எப்போதும் தனிமையில் ரூமில் தங்குவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள். அப்படியே தங்கும் சூழல் ஏற்ப்பட்டாலும் அருகில் செல்போன் மற்றும் தற்க்காப்பு ஆயுதங்கள் வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக பாத் ரூம் போகும் போதும் செல்போனை எடுத்துச் செல். தனிமையில் இருக்கும் போது அதிக விழிப்புணர்வு தேவை. ஓ கே !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இப்படி நேர்ந்த மிகத்துயரம் தரக்கூடிய சந்தர்பத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹுக்கே புகழனைத்தும்.படிக்க,படிக்க மிகத்துயரத்தை வரவழைத்துவிட்டது.ஆனாலும் இதை கதைபோல் எழுதி அதிலும் திகில் நிறைந்த சுவாரசியமாக ஆக்கியது எழுத்துத்திறமையே! ராஜேஸ்குமாரின் ஹீரோ விவேக் போல உங்கள் முயற்சிகள் இருந்தது கற்பனையில் ஓடவிட்டேன்.தமக்கு நேர்ந்தால் துக்கம் பிறருக்கு நேர்ந்தால் அது ஒரு செய்தி,சம்பவம் என பார்க்கும் மனித குணத்தை அல்லாஹ் மாற்றி வைப்பானாக ஆமீன்.

crown said...

பட்டான்! கெட்டான் போங்க ! திருடன் பட்டான் மற்றொரு பட்டானிடம் கண்ணில் பட்டான்? எப்படி அகப்பட்டான்? அவன் இவன் கையை அவிழ்துவிட்டு காவல் நிலையம் புறப்பட்டான்!இறுதியில் விடுபட்டான் என இருக்கும் என இருந்தால் ,சிறைப்பட்டான் என இருக்கு!

crown said...


வெயில் தெளித்து
நிழற் கோலமிட்ட
முதிர்க்காலை நேரத்து முற்றம்
----------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆஹா!என்னே வர்ணனை!மனதெல்லாம் வியாபித்து பரந்து நிற்கிறதே! அழகியல் என்பது இதுதானோ?புவி இயல் இப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

crown said...

மழை ஓய்ந்து
மணல் காய்ந்தும்
உதிராமல் சிதறாமல்
உலர்ந்திருந்த
சக்கரங்கள் பதித்த
முப்பரிமாணத் தடங்கள்.
------------------------------------------------------
மணல் அங்கே சக்கரைப்போல் உதிராமல் சிதறாமல்
இருக்க அதில் சக்"கரங்கள்" "கால்"பதித்த முப்பரிமாண தடங்கள், தடங்கள் இல்லாமல்(தடையில்லாமல்) ஓடிப்பரவி இருக்க! மண் வாசனை இப்பவே மூக்கை துளைக்கிறதே!

crown said...

வானவில் உடைந்து
வாசலிற் சிதறியதுபோல்
வர்ணங்களோடு
தானியம் கொத்தும் கோழிக்குஞ்சுகள்
-----------------------------------------------------------------------
அருமை! அருமை!கற்பனை விண்ணுக்கும்,மண்ணுக்கும்.

அதிரைக்காரன் said...

பதிவை வாசிக வாசிக்க நானும் பாத் ரூமில் மாட்டிக்கொண்டதுபோன்ற உணர்வு. எனக்குப்பிடித்த சுஜாதாவின் எழுத்து நடை. சிறு கரு கிடைத்தாலும் மனுசன் ஒரு புதினமே எழுதிடுவார்.

எப்படியெல்லாம் அனுபவத்தை எழுதலாம் என்பதற்கு நல்ல உதாரணம். இந்த பதிவு. நீங்கள் இப்படி அடிக்கடி எழுதினால் மக்கள் கவிவேந்தரை கதைவேந்தர்:P ஆக்கிவிடக்கூடும்.

crown said...

செங்குத்தாக விழுந்து
உணவு கொத்தும்
மீன்கொத்திகள் பறந்துதிரியும்
குளங்கள்
---------------------------------------------------
அந்த குளங்கள் அது ஒருகாலங்கள் என ஆனது சோகம்!ஆனலும் மனதை அழகாய் கொத்தி போய்கிறது அக்(கு)(ள)கால நினைவலைகள்.

crown said...

ஒழுகும்
கூரை வழியே
மழை நிரப்பியப் பாத்திரங்களைப்போல்
தூய எண்ணங்களால்
மனம் நிரம்பி வழியும்
என் ஊர்க்காரர்கள்
------------------------------------------------------

கவிதைக்கு பொய் அழகா? உண்மையில் நேசமிக்கவர்கள் இருந்தாலும், ஓட்டை கூரையாய் பலர் இருப்பதும் அந்த கூறுகெட்டவர்கள் ஊரின் பேரு கெட காரணகர்த்தா(தா)க்கள்( சமீபத்தி(தீ)ய தீயனைப்பு வீரர் தாக்கல் சம்பவம்)

அதிரைக்காரன் said...

இந்த பதிவின்மூலம் கிடைக்கும் நீதி :

1) குளியலறையில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைப்பது நல்லது.
2) தனியாக இருக்கும்போது வெளிக்கதவை மட்டும் பூட்டினால் நலம்.
3) இதோவந்துட்விடுவோமே என்று அடுப்பில் எதையும் சூடேற்ற பற்ற வைக்காமல் வந்து சூடேற்றுதல் நலம்.

crown said...

ஓட்டை கூரையாய் மனம்மிருப்பவர்கள் என இருந்திருக்கவேண்டும்.

crown said...

அன்றாட வாழ்க்கையில்
அடிக்கடி கடக்க நேரும்
மைய வாடிகள்
வாழ்க்கையின் இலக்கை
நினைவுருத்திக் கொண்டிருக்க
--------------------------------------------------------------
மையவாடி ஊரின் "மய்யத்தில்"அமைந்திருப்பதும், அது இறைப்பை பற்றிய இறாவா சிந்தனை ஊட்டி வைப்பதும் கையாலப்பட்ட விதம் கவிதைக்கு உயிர் சேர்ப்பதாகவும், நம் ஊரின் புகழ் சேர்ப்பதாகவும் உள்ளது. இதற்கு தனி சல்யூட்

crown said...

குரல்வளம் செழிக்கக்
கூட்டுப் பிரார்த்தனையையொத்த
பாங்குகளினோசையிலும்
----------------------------------------------------------------
அதன் (அதான்)பாங்கே அழகுதான்! இதில் அதிரையின் பங்கு சிறப்பம்சம்!

crown said...

எம்
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!
------------------------------------------------
ஊரின் மேல் உள்ள பற்றிலும் முற்றிலும் இதை எழுதியதை பறைசாற்றியுள்ளது இக்கவிதை! இக்கவிதை வரிகளை நானும் வழிமொழிகிறேன்.

sabeer.abushahruk said...

கவியன்பன்,

தங்கள் கருத்தில்
கவியூறுகிறது
எனக்கு
ஊக்கம் உணவாகிறது!

நன்றி!

எம் ஹெச் ஜே,

அந்தக்
குறுங்கால ஜெயிலிலிருந்து
சொந்த பெயிலில்
வெளி வர
எலி வழியே
எழிய வழி!

நன்றி!

சகோ. அபுபக்கர்,

தொலைதூர ஜாகையே
விலை குறைவு
நான்
வசித்த வீடே
மிகைத்த வாடகை.
தொழிற்சாலை நகரில்
அருகே கூடுதல்
தூரத்தில் குறைவு!

நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

திக் திக்...

பக் பக் என்ற பதபதைப்போடுதான் படித்து முடித்தேன்... அந்த திக் திக் நிமிடங்கள் இன்று இந்த பதிவுக்கு இறைவனின் நாட்டமே ! சம்பவத்தை என்னிடம் ஒருமுறை சொல்லிக்காட்டியபோது அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருந்தோம்... !

எழுத்தில் வாசிக்கும்போது எந்த நிலையில் இருந்தாலும் எழுப்பி விடுகிறது நடை... அருமையான ஸ்டைல்!

----

பட்டான்(ஸ்) பாவப் பட்டவர்கள், இன்னும் அவர்களை மூளை இல்லாதவர்களாக சித்தரிப்பை அவர்களே அறிந்திருக்காமல் இல்லை... அவர்களின் ஈரமான மனதை தொட்டுப் பார்த்தால்... தமிழகத்தின் தண்ணீர் கஷ்டம் தீர்ந்துவிடும் அளவுக்கு கண்ணீர் தேக்கம் இருக்கும் [எனக்கும் அவர்கள் மறுபக்கத்தின் அனுபவம் இருக்கு].

---

//அன்றாட வாழ்க்கையில்
அடிக்கடி கடக்க நேரும்
மைய வாடிகள்
வாழ்க்கையின் இலக்கை
நினைவுருத்திக் கொண்டிருக்க//

எனது ஊர் எனக்குயிர்...! ஆமா! ஆமா! ஆமா !

அதனைக் காயப்படுத்த யார் முனைந்தாலும் அதனைத் தடுக்க துடிக்கிறது மனது...

Yasir said...

கவிக்காக்கா...உண்மையிலயே திக் திக் நிமிடங்கள் படிக்கும் எங்களுக்கும்....எனக்கும் இன்றுவரை இந்த பயம் உண்டு பெரும்பாலும் நான் பாத்ரூம் போனால் கதவைப்பூட்டவே மாட்டேன்....அப்படி பூட்ட வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டால் மேலும் கீழும் தப்பிக்க வழி இருக்கின்றதா ? என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டுதான் பூண்டுவேன்.....கொஞ்சம் பூட்டு மக்கர் பண்ணினாலும் எனக்கும் மூச்சுத் திணறல் வருவதுபோல் தோன்றும்...யா அல்லாஹ் இந்த மாதிரி சூழ்நிலைகளிலிருந்து எங்களை காப்பாயாக..நீங்கள் விவரித்து இருக்கும் இச்சம்பவம் எனக்கும் மூச்சை முட்ட வைக்கின்றது....ஏதோ கடைசியில் கவிதை எழுதி நன்றாக சுவாசிக்க வைத்துவிட்டீர்கள்

Yasir said...

இப்படித்தான் ஒரு சம்பவம் ஜெபல் அலியில்...அஸர் தொழுக லேட்ட போன ப்“பட்டான்” கதவைப் பூட்டிக்கொண்டு பாத்ரூம் போக அது பூட்டிக்கொள்ள அவருடைய பலத்திற்க்கே தட்டி தட்டி பார்த்து வெறுத்துப்போன பட்டான் உள்ளயே படுத்துக்கொண்டார்...குவாண்டனமோ மைக்குறோ அறையில கைதியாக இருந்து கொண்டு ஏதோ ஊட்டிப் பார்க்கில் காற்று வாங்குவபவர் போல தைரியமாக இருக்கும் பட்டான்/தாலிபான் களுக்கு இந்த மாதிரி இடங்கலெல்லாம் ஜூஜுபி..... மஃரிப் தொழுகைக்கு வந்த ஒருவர் இதைப்பற்றி போலீஸில் சொல்ல அவசர ஊர்திகள் மருத்துவக் குழுவினருடன் திரண்டுவர சில மணி நேரங்களுக்கு பிறகு கதவை உடைத்து உள்ளே போக.....இறந்து இருப்பார் என்றும் மயங்கி இருப்பார் என்றும் நினைத்த மருத்தவர் குழுவினருக்கும் முன்னிலையில் பட்டான் கேசுவலாக “கியா குவா “ என்று கேட்க திகைத்த மருத்துவர்கள் இந்நாட்டின் விதிப்படி உங்களை செக் செய்ய வேண்டும் என்று கூற “ மேரக்கு குச்சி நஹீகே” என்று சொல்லி துண்டை எடுத்து தோளில் போட்டுக்க்கொண்டு கிளம்பினாரே பார்க்கலாம்...அல்லாஹ் அந்த அளவிற்க்கு தாக்கதை அந்த பட்டான்களுக்கு ஒரு சில ரொட்டித்துண்டுகளிலும்,மாட்டுக்கறியிலும் சுலைமானி டீயிலும் கொடுத்துள்ளான்......

sabeer.abushahruk said...

மெய்சா,

தனிமை
சிலநேரங்களில் இனிமையானது
சிலநேரங்களில் இம்சையானது

வந்தால் போறோம்
போகும்போது
செல் ஃபோனுடன் செல் என்ற
சொல் சரியா?

செல்லில் தண்ணீர் சென்றால்?

நன்றி!

அதிரைக்காரன்,

வாசகரைச்
சூழலுக்குள் சிக்கவைப்பதே
எழுத்தாளனின் சூத்திரம்

கல்கண்டு துணுக்குகளுக்கும்
லேனா தமிழ்வாண விமர்சனத்திற்கும்
நன்றி!


Shameed said...

என்ன இப்படி பண்ணிட்டிய இங்க அதிரை நிருபருக்காக நான் ஒரு திக் திக் தொடர் நேற்றுதான் எழுதி முடித்தேன் நான் எழுதிக்கொண்டிருந்த நேரம் உங்கள் பதிவு வெளியிடப்பட்டுள்ளது இதுக்கு பெயர்தான் டெலிப்பதியா ????

sabeer.abushahruk said...

கிரவுன்,
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

உங்கள்
சுந்தரத் தமிழில்
பட்டானும் அகப்பட்டான்!

பொய்யல்ல
நம்மூர் மக்களின் அகம்
நன்னீர்ப் பொய்கை
மாசு கலக்குமுன்!
மார்க்கெட்...
சூடு பிடிக்குமுன்!

எரிந்து சாம்பலாகியது போக
எஞ்சிய குல்லாய்கள்
நம் தலைகளுக்கா?

நன்றி!

sabeer.abushahruk said...

அபு இபு,

பட்டான்களின்
மறுபக்கக் கதையை
ஒரு பக்கத்திற்கு மிகாமல்
பதிந்தால் அவர்தம்
பாட்டன்பூட்டன் மகிழ்வர்!

நன்றி!

யாசிர்,

நான் பூட்டவில்லை
தானே பூட்டிக்கொண்டது
என்னை மாட்டிக் கொன்றது

நிமிடங்களுக்கு
எடையுண்டு என்பதையும்
யாவற்றிற்கும்
விடையுண்டு என்பதையும்
உணர்ந்த நிமிடங்கள் அவை!

தங்களின்
பாத்ரூம் பட்டான்
அவதி பட்டானா?


நன்றி

Ebrahim Ansari said...

இந்த அருமையான பதிவுக்கு கருத்திட நான்தான் தாமதமா?

என்ன சொல்ல எப்படி பாராட்ட என்று புரியவில்லை. தம்பி சபீர் அவர்களின் இத்யாதி நம்பர் ஒன்று பதிவுக்கு சொன்னதையே சொல்கிறேன். ஒரு தனிநபரின் அனுபவத்தை மற்றவர்களுடன் சுவையாகப் பகிர்வது தனித்திறமை.

அப்புறம் அந்த க் கவிதை. அதன் பின்வரும் வரிகள்

//எம்
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!// -

இது கவிதை அல்ல .
உயிரின் ஓசை.
சரியாக சொல்லப்போனால்
உயிர்கள் உருகும் ஓசை.
அதிரையர்களின் தலையில்
அவிழாமல் கட்டிய பரிவட்டம்
தென்புரத்துச் சீமையின் தெனாவட்டு
ஞானச் செருக்கு
நடுவயது மீசையின் முறுக்கு




Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களே!

அபுதாபியில் காதர் பாய் நிறைய பட்டான் கதைகளை வயிறு வலிக்கும்படி சிரிக்க சிரிக்க சொல்வார். ஒன்று இரண்டைக் கேட்டுப் பகிருங்களேன்.

sabeer.abushahruk said...

ஹமீது,

திகில் தொடரா?
பிகிலோடு காத்திருக்கேன்

நன்றி!

இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,

உணர்ச்சிபூர்வமான
உற்சாகமூட்டல்

செருக்கு முறுக்கு என்கிற
அந்த வர்ணனைகளில்
அந்தக் கால
அப்துர்ரஹ்மான் (கவிக்கோ)!

நன்றி!

Ahamed irshad said...

வெயில் தெளித்து
நிழற் கோலமிட்ட
முதிர்க்காலை நேரத்து முற்றம் //

க்ளாஸ் காக்கா... ஒட்டுமொத்தத்தில் இந்த வரி மிகவும் கவர்ந்தது... வரிகளுக்கு சட்டை பேண்ட்’ஐ அயர்ன் பன்னது போல் மாட்டுவிடுவதுபோல் அமைவது உங்களுக்கு இலகுவாக அமைந்துவிடுகிறது... சூப்பர்...


/ எனதூர் எனக்குயிர்! /

என் ஊரை சொன்னால் நான் என்னையே லைக்குவேன்.. :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன் சொட்டிய தேன்..
அதனப் அப்படியே ரசித்தேன்...

பட்டான்!

கெட்டான் போங்க !
திருடன் பட்டான்
மற்றொரு பட்டானிடம்
கண்ணில் பட்டான்?
எப்படி அகப்பட்டான்?

அவன் இவன்
கையை அவிழ்துவிட்டு
காவல் நிலையம்
புறப் பட்டான்!

இறுதியில் பட்டான்
சிறை பட்டான்...

--------------------------------------

ஆஹா!
என்னே வர்ணனை!
அழகியல் என்பது
இது தானோ?
புவி இயல்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மணல் அங்கே
சக்கரை போன்று
உதிராமல் சிதறாமல்
இருக்க அதில்
பொசக் "கரங்கள்"
"கால்" பதித்த
முப்பரிமாண தடங்கள்,

தடங்கள் இல்லாமல்
(தடையில்லாமல்)
ஓடிப் பரவி இருக்க!
மண் வாசனை
மூக்கை துளைக்கிறதே!


அருமை! அருமை!
கற்பனை
விண்ணுக்கும் மண்ணுக்கும்.

அந்த குளங்கள்
அதுவொரு காலங்கள்
ஆனது சோகம்! - ஆனலும்
மனதை அழகாய்
கொத்திப் போகிறது
அக்(கு)(ள)கால நினைவலைகள்.

கவிதைக்கு
பொய் அழகா?
உண்மையில் நேசமிக்கவர்கள்
இருந்தாலும்
ஓட்டை கூரையாய்
பலர் மனது இருப்பதும்

அந்த கூறு
கெட்டவர்கள் ஊரின்
பேரு கெட
காரண கர்த்தா(தா)க்கள்
(சமீபத்தி(தீ)ய
தீயனைப்பு வீரர்
தாக்குதல் சம்பவம்)

மைய வாடி
ஊரின் "மய்யத்தில்"
அமைந் திருப்பதும்

இறைப்பை பற்றிய
இறாவா(த) சிந்தனை
ஊட்டி வைப்பதும்
கையாலப்பட்ட விதம்
உயிர் சேர்ப்பதாகவும்,

அதன் (அதான்)
பாங்கே அழகுதான்!
இதில்
அதிரையின் பங்கு
சிறப்பம்சம்!

ஊரின் மேலுள்ள
பற்றிலும் முற்றிலும்
பறை சாற்றியுள்ளது
இக்கவிதை!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abushahrukh,

Your poem "எனதூர்…என் மக்கள்!" a sentimental one, induced my memories about our mother land.

//ஒழுகும்
கூரை வழியே
மழை நிரப்பியப் பாத்திரங்களைப்போல்
தூய எண்ணங்களால்
மனம் நிரம்பி வழியும்
என் ஊர்க்காரர்கள்//

I like these optimistic lines about our fellow brothers and sisters of our place.

//எம்
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!//

- These lines are emotionally exciting.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய இர்ஷாத்,

உங்களுக்குப் பிடித்ததே
இதை எழுத
நான் இழையாய்ப் பிடித்தது!

நன்றி!

அபு இபு,

கிரவுனின் முத்துகளை
பொருக்கியெடுத்துத் தொகுத்து
நெறியாளுமைக்கான கிரவுனை
தக்க வைத்துக் கொண்டீர்கள்!

நன்றி

Dear Ahamad Ameen,

its like a kind of comfort
that to have commented by you!

you wont be able to say anything
if
you wouldnt have enjoyed it!

thanks!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.