Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சின்னச் சின்ன ஆசைகள் (அதிரை சிகரம் தொட ஆசை!) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2012 | , , , , ,


ஆசைகள் அனைவருக்கும் பொதுவானவை. மனிதனை ஆசைகளின் மூட்டை என்று வர்ணிப்பார்கள். சிலருக்கு தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் பல ஆசைகள் இருப்பது இயற்கை மற்றும் இயல்பு. மிகச் சிலருக்கு தான் சார்ந்து இருக்கும் சமூகத்தைப் பற்றிய ஆசைகள், சுயநல அரசியlவாதிகளுக்கு சுரண்ட ஆசைகள், சுருட்டும் ஆசைகள், தனது பத்தாவது தலைமுறை பேரனுக்குக்கூட சொத்து சேர்த்து வைக்கும் ஆசைகள். இந்த சூழ்ல்நிலைக்கு ஆளாகி இருக்கும் இவ்வுலகில் ஒரு அறுபத்து ஐந்து வயது நிரம்பிய இளைஞருக்கு தனது காலம் முடிவதற்குள் தான் பிறந்த ஊரில் அமைந்திட வேண்டும் - அவற்றை கண்களால் காண வேண்டுமென்று என்று சில பாராட்டுக்குரிய பொது நல ஆசைகள். அவை சின்ன சின்ன ஆசைகள் தான். ஆனால் ஒரு பெரிய பரந்த மனத்தில் உதித்தெழுந்த ஆசைகள். இந்த ஆசைகளைப் பட்டியலிடுவதில் ஆனந்தம் அடைகிறேன்.


இந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட அதிரைப்பட்டினத்தை இம்மண்ணில் பிறந்த அனைவரும் கற்பனை செய்து பார்த்தால் நினைத்தாலே இனிக்கிறது. இவைகள் அறுபது வயது தாண்டியவரின் ஆசையாக இருக்கலாம். இதுபோன்ற ஆசைகளே இதைப் படிக்கும் இளைஞர்களின் கனவாகவும் - குறிக்கோளாகவும் இருக்க முடியும்.

1. ஊர் முழுவதுக்கும் பொதுவான முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் (Drainage) :
கழிவு நீர் சூழாத அதிரைப்பட்டினம் - கழிவு நீர்களே கொசுக்களின் தாயகம். வியாதிகள் ஆரம்பிக்கும் அரிச்சுவடி. சீர்கேடுகளின் மூலகாரணம். இவைகளைக் களையப்பட்ட அதிரைப்பட்டினம் இந்த இளைஞரின் கனவுகளில் முதலிடம்.

2.  சிறு வணிகத் துறைமுகம் - (mini harbor with recreation facilities): 
 வளரும் நாடுகளில் புதிய புதிய வசதிகள் மேம்பட்டு வருகின்றன. சரித்திர காலத்தில் தான் பெற்றிருந்த சிறு துறைமுகத்தை இழந்து நிற்கும் அதிரைப்பட்டினத்தில் மீண்டும் நவீனப்படுத்தப்பட்ட - பொழுது போக்கு வதிகளுடன் கூடிய ஒரு சிறு வணிகத் துறைமுகம் நிறுவப்பட வேண்டும்.

3. எல்லாத் தெருக்களிலும் இணையதள மையங்கள் (internet cafe center for all street) :
காலத்தின் மாற்றத்திற்கேற்ப அதிரைப்பட்டினத்தின் அனைத்து தெருக்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தெருவுக்கு ஒன்றென இணையதள மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

4. மேம்படுத்தப்பட்ட பொதுவான பன்முக விளையாட்டுத் திடல்கள் (play grounds, stadiums) :
அதிரைப்பட்டினத்தில் அமைந்திட வேண்டும். இந்த விளையாட்டுத் திடல்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற வேண்டும். விளையாட்டுத் திடல்களில் எதிரபாராத விபத்துகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக ஷிஃபா மருத்துவமணை போன்ற பன்முக சேவை கொண்ட மருத்துவமணையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கே அவசர ஊர்திகள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

5. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தொழில் அமைப்புகள். (Industries suitable for ladies and gents) :
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் ஏற்றதான தொழில்கள் அதிரைப்பட்டினத்தில் அமையப்பெற வேண்டும். பெண்களின் சுய தற்சார்பு ஊரின் பொருளாதாரத்தை வளர்க்கும் திறனுடையது.

6. அதிரைப்பட்டினத்தில் அனைவருக்கும் வீடு: 
ஊரில் அனைவருக்கும் 600 to 800 சதுர அடிகளில் கட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் (all houses to be built for all 600 to 800 sq.ft.) அதிக ஆடம்பரமில்லாத, பிரம்மாண்டமில்லாத ஆனால் சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அதிரைப்பட்டினத்தில் பாகுபாடு இன்றி அனைவருக்கும் அமையப்பெற வேண்டும்.

7. பணி மேம்பாட்டுக்கான தகுதி வளர்க்கும் வசதிகள் (career development facilities): 
வெளிநாட்டில், உள்நாட்டில் பணியாற்றி விடுமுறையில் ஊர்வரும் படித்த அதிரைப்பட்டினத்து இளைஞர்கள், தங்களின் பணியில் மென்மேலும் ஏற்றம் பெற உதவிடும் பயிற்சி வகுப்புகள் நடத்தும் நிறுவனங்கள் அமையப்பெற வேண்டும்.

8. தோட்டக்கலை, மரம் வளர்ப்பு, (gardening, tree plantations): 
இல்லங்கள்தோறும் மணம் பரப்பி பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வீதிகள் தோறும் நிழல் தரும் மரங்கள் கொண்ட சோலை வனமாக அதிரைப்பட்டினம் செழிக்க வேண்டும்.

9. அயல்நாடுகள் செல்வதற்கான வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு நிலையங்கள் (international recruitment) :
எதுவுமே தெரியாமல் வெளிநாடு செல்ல எண்ணும் இளைஞர்களுக்கு ஏதாவது தொழில் பயிற்சி கொடுத்து வெளிநாடு அனுப்பும் நிறுவனங்கள் அமைந்திட வேண்டும்.

10. 5000 மாணவ மாணவிகளைக் கொண்ட ஒற்றைப் பள்ளி அதுவும் இமாம ஷாஃபி (ரஹ்) பள்ளி (One School with strength of 5000 students): 
 பல்வேறு பள்ளிகளில் சிதறிப்போகாமல் ஒற்றைப் பள்ளியில், குறைந்த பட்சம் ஐந்தாயிரம் மாணவமணிகள் கொண்ட பள்ளி, அதிலும் மார்க்க அடிப்படைகளைப் போதிக்கும் பள்ளி என்னும் உயர்ந்த நிலையில் இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி அடைய வேண்டும்.

இன்னும்...

11. விதவைகளுக்கு மாற்றமில்லாத மறுவாழ்வு (rehabilitation for all widows).

12. மத்திய அரசுப்பணிகளுக்கான தேர்வு பயிற்சி மையங்கள் (IAS/IFS/COACHING CENTRES).

13. மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் (road facilities)

14. இடையூறு இல்லாத மின்சாரம் மற்றும் தண்ணீர் (uninterrupted water and electricity)

15. பெண்களுக்கான தனி பூங்காக்கள் (Exclusive parks for ladies)

16. அல் அமீன் பள்ளி முழுமையாக கட்டி முடிக்கப்படுதல்  (al-ameen masjed)

17. பெண்களுக்கான தனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (exclusive women's college)

18. சமுதாயக் கூடங்கள் (Community centers)

19. இடையில் படிப்பை நிறுத்தியவர்களுக்கு (dropout students) வழிகாட்டு மையமாக திறந்தவெளி கல்லூரி (open college) அமைத்து படிப்பை நிறைவு செய்ய வைக்க வேண்டும்.

19. அனைத்து தெருக்களிலும் நூல் நிலையங்கள் (Library in all streets)

20. இரயில்வே அகலப் பாதை அமைந்து காரைக்குடி - சென்னை மார்க்கம் இனிய இரயில் பயணங்கள் அமைய வேண்டும்.

21. வானூர்தி ஏறு இறங்கு தளம் (helipad stage) கரிசல்மணி குளம் அருகில் அமைத்து அதிரை உடன்பிறப்புகள் யாரெல்லாம் வெளிநாடுகள் பயணப் போக்குவரதில் இருக்கிறார்களோ அவர்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து தனி அல்லது வாடகை ஹெலிகாப்டரில் அதிரைக்கு வந்து சேரும் தளம் அமைய வேண்டும்.

22. சென்னை புதுக்கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து முஸ்லிம் மாணவர்களுக்கு குறைந்த செலவில் இலாப நோக்கமின்றி மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் முஸ்லீம்கள் நிறைந்த ஒரு பகுதியில் அமையப் பெற வேண்டும். இறைவனிடம் துஆவோடு எழுந்த இவ்வெண்ணம் அவன் அருளால் நிறைவேறக்கூடிய சாத்தியக்குறுகள் தற்போது தென்பட்டுள்ளன.  இதைப் பற்றிய விவரங்களை எனது அடுத்தப் பதிவில் கோடிட்டுக்காட்டுவேன். 

இது அதிரை இளைஞனின் சின்னச் சின்ன ஆசைகளின் தொடக்கமே !

J.A. தாஜுதீன்
செல் : +91 98408 85773 
மின்னஞ்சல் : taj47@yahoo.com

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

எங்களை மாதிரி சின்னபுள்ளைங்களுக்கு பெரிய பெரிய ஆசைகள் இருக்கு அதில் அதிரை பெருமை கொள்ளும் ஆசைகள் அனைத்துமே ! :)

இந்த சின்ன சின்ன ஆசைகளை அப்படியே விஷுவலாக 3D படமாக காணொளி செய்ய ஆசை... நேரம் அமைந்தால் அதுவும் நிகழும் (இதுவும் ஆசைதான்)...

மூத்தவர்களின் வருகையும் பதிவும் அதிரைநிருபருக்கு சிறப்பை சேர்க்கிறது !

Yasir said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
வித்தியாசமான சிந்தனை..அதனை எழுத்தில் கொண்டுவந்த திறமை....அருமையோ அருமை...

//சின்னச் சின்ன ஆசைகளின் தொடக்கமே//இது ரொம்ப பெரிய ஆசைகள் சகோதரரே..இப்படி பெரிசு பெரிசா ஆசைப்பட்டால்தான் சின்னதாகவாது நிறைவேறும் : ) வாழ்துக்கள்

Yasir said...

கண்ணியத்திற்க்குரிய J.A.தாஜுதீன் காக்கா, “ஆசைகள்” அனைத்தும் சமுதாய நலன் கருதியும் ,சமுதாய சிந்தனை உள்ளவையாகவும்,முத்து முத்துதாகவும் இருக்கும் போத ஒரு சந்தேகம் வந்தது, ஒரு சமூக ஆர்வலரின் ஏக்கம் இந்த ஆக்கத்தில் தெரிந்தது...சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அ.நி.யை அலைத்து கேட்டபோதுதான் உங்களின் சமுக அக்கறையும்,இன்னபல நற்செயல்களையும் அறிந்துகொள்ள முடிந்தது....உங்களைபோன்ற எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் சமுக நல சிந்தனைவாதிகள்தான் இன்றைய தேவை..தொடர்ந்து எழுதுங்கள்..

அப்துல்மாலிக் said...

தாஜுதீன் நல்லா விருந்து சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்த தூக்கத்துலே கண்ட கனவு மாதிரி இருக்கு..... ஹா ஹா
நல்ல ஆசைதான், முடியாதது எதுவுமில்லை, தான் தனக்கு தன் வாரிசுக்கு என்ற சுயநலத்தை ஒதுக்கிவைத்தால் நிச்சயம் யாராலும் சாதிக்கமுடியும், இன்ஷா அல்லாஹ்...

ZAKIR HUSSAIN said...

To Bro [ Haji] J.A. தாஜுதீன் அவர்களுக்கு

ஒரு சிறந்த மாவட்ட கலெக்டர் எப்படியிருக்கவேண்டுமோ அதற்கு பயிற்சி எடுத்ததுபோல் உங்கள் ஆக்கம் இருக்கிறது.

உங்கள் ஆசைகள் நீங்கள் பிறந்த ஊர் பற்றியே இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு உயர்ந்த சூழலுக்கு அதிராம்பட்டினத்தை அழைத்து செல்லும் உங்கள் எண்ணத்தை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக

அப்துல்மாலிக் said...

உங்க ஆசையிலே இதையும் சேர்த்துக்கோங்க....
”உள்ளூரிலே உழைப்புக்கும்/சொந்த தொழிலுக்கு முக்கிய ஆலோசனை மையம் ஏற்படுத்துவது”

sabeer.abushahruk said...

//தாஜுதீன் நல்லா விருந்து சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்த தூக்கத்துலே கண்ட கனவு மாதிரி இருக்கு..... ஹா ஹா//

அ.மாலிக், தங்களுக்கு இந்தப் பதிவின் ஆசிரியர் அவர்களை அறிமுகமில்லை என நினைக்கிறேன்.

இவர்கள், நெய்னா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்கள். எனக்கே காக்கா எனில் என்னைக் காக்காவென்று விளிக்கும் தங்களுக்கு?

ஒரு "காக்கா" சேர்த்து எழுதுங்களேன் :)

sabeer.abushahruk said...

காக்கா,
 
சுயநல ஆசைகளில் உலகம் சுருங்கிப்போய்க் கிடக்கும் இக்காலகட்டத்தில், சில்லறை ஆசைகளோடு இளைஞர்களெல்லாம் முடங்கிக்கிடக்கும் இந்நாட்களில், தங்களின் சின்னச் சின்ன ஆசைகள் சிறகடிக்கின்றன; சிகரம் தொட விதை விதைக்கின்றன. 
 
மனசுக்கு ஏது வயசு? 

தங்களின் அருகிலிருந்து உரையாட வாய்த்த சிற்சில சமயங்களில்கூட உங்களின் புன்னகையில் பொதுநலமும்; உச்சரிப்புகளில் ஊர் நலமும் மிளிரக்கண்டவன் நான்.  மனவலிமையோடு உடல் வலிமையும் தங்களுக்கு வாய்க்கப்பெற்றால் இந்த உங்கள் ஆசைகளெல்லாம் சொடுக்குப்போடும் நேரத்தில் நிறைவேற்றிவிடும் உத்வேகம் உங்களுக்குண்டு.
 
இந்தப் பதிவின் மூலம் அதிரைவாசிகளை உசுப்பேற்றி உங்கள் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளப்பார்க்கிறீர்கள், என்னே ஒரு திட்டம்!!!

இன்றோ நாளையோ இவை நிறைவேறும் பட்சத்தில் உங்கள் முயற்சிக்காக எங்கள் து ஆ என்றும் உண்டு.
 
இன்னும் ஆசைப்படுங்கள் காக்கா, இலாபம் எமக்கும் எல்லோருக்கும்தானே!
 

sabeer.abushahruk said...

அறுபத்து ஐந்து வயதின் அன்புமூட்டை, அறிவுப் பெட்டி, அழகுப் பொட்டலம், பாசப் பெட்டகம், அருமைக் காக்கா தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை நிருபரில் தங்களின் முதல் பதிவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

நமது ஊரைப் பற்றிய உலகலாவிய ஆசைகள் படிக்கப்படிக்க உள்ளம் புல்லரிக்கிறது.

தனக்கென ஆசைகள் சுயநலம். ஊருக்காக நீங்கள் காணும் கனவுகள் பொதுநலம். இப்படி ஊருக்காகவென நன்மை நாடுவது உங்களுக்குப் புதிதல்ல என்பது நான் அனுபவித்து அறிந்தது. 

நீங்கள் கண்டுவரும் கனவுகள் கண்டிப்பாக நிஜமாகி நீங்கள் காணவரும். அதுவரை உங்கள் அகவை மூன்று வருடத்திற்கொருமுறை ஒரு வயது  கூடும் வரம் வேண்டியபடி தங்களுக்காக என்றென்றும் துஆச் செய்தவனாகவே இருப்பேன்.

கனவுகளைக் காகிதத்தில் கண்டிருந்தாலும் காரியத்தைக் கொண்டிருக்கின்றன. அலங்காரம் செய்யப்பட்ட மணமகள் போல அழகாகவும் கத்தரித்து வைக்கப்பட்ட போலீஸ் கிராப் போல கச்சிதமாகவும் இருக்கிறது உங்கள் எழுத்து.

தொடர்ந்து ஆசைப்படுங்கள் காக்கா.

தங்களைப் போன்ற மூத்தவர்கள் முன்னணியிலும் இளைஞர் பட்டாளம் ஒன்று பின்னணியிலும் இடையில் என்னைப்போன்றவர்களும் வெளுத்துவாங்கும் களம் இது.

வாங்க, சாதனைகளை நோக்கி நகர்வோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் JAT காக்கா,
நீண்ட நாட்களாக yahoo மின்மடலில் எனக்குத் தனிப்பட்ட அக்கறையுடன் என்னைப் பற்றியும், குடும்ப விவரங்களும், இன்னும் முன்பு போல் மேலை நாடு சென்று வளம் காண வேண்டும் என்றெல்லாம் தொடர் மடல்களிட்டவர்களான தாங்கள், சில காலம் தொடர்பின்றி போனதால் உண்டான ஏக்கத்தை இன்று அ.நி.யில் அரிய பெரிய ஆக்கத்தின் வழியாகச் சந்திப்பதிலும்; தங்களின் அவசியமான- அவசரமான பெரிய ஆசைகள் (பேராசைகள் அல்ல)பற்றிச் சிந்திப்பதிலும் வாய்ப்புக் கொடுத்த வல்லோன் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றேன்.

என்னுடைய நீண்ட நாட்களின் கனவு- ஆசைகளில் இரண்டை (இலக்கம் 17 & 19)தங்களின் பட்டியலில் கண்டு பேரானந்தம்; இவைகளைத் தொடர்ந்து சுமார் 12 வருடங்களாக MST காக்கா அவர்கட்கு நேரிலும் , மின்மடலிலும் வலியுறுத்தி வருகின்றேன்;என்னுடைய ஆசையின் விதை அன்றொரு நாள் ஜூம் ஆ பள்ளியில் ஒரு பெருநாள் மாலைப் பொழுதில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் அளவுக்கு வீரியம் பெற்று, இறுதியில் குழம்பிப் போய் முடிவின்றிக் கைவிட்டனர். இருப்பினும், விடாமல் MST காக்கா அவர்களை வலியுறுத்திக் கொண்டே இருந்த வேளையில் அவர்களின் ஒரு மின்மடலில் ,”இராஜாமடம் அருகே மகளிர்க் கல்லூரிக்கான நிலம் வாங்கப்பட்டுள்ளது” என்ற ஒரு நற்செய்தி மட்டும் கண்டேன். தங்களின் இவ்வாசைப் பட்டியலில் “மகளிர்க் கல்லூரியும்” இருப்பதால், தாங்கள் மீண்டும் கூடி இதை முதலில் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது; அல்ஹம்துலில்லாஹ்!

அடுத்து, கிளை நூலகம் என்பது மிக மிக அவசியமானது. ஊருக்கு வெளியே இருப்பதால் நம்மவர் அதிகம் பயன்படுத்தாமல் இருக்கின்றனர்; இன்ஷா அல்லாஹ் தாங்கள் விரும்பிய வண்ணம் கிளை நூலகம் அமையுமானால் மகிழ்ச்சி அடைவதில் அடியேன் முதலாமவனாக இருப்பேன். 1) இப்பொழுதும் நூலகமே என் உலகம் 2) நூலகத்தின் அவசியம் பற்றி 2000ல் மியாசி ஸ்கூலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அடியேன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையால் ஜனாப் MST காக்கா அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்; ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குப் பிறகு பைத்துல்மாலில் சில காலம் சிறிய நூலகம் உருவானது; அப்புறம் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை! இன்ஷா நூலகம் பற்றியும் மீண்டும் கூடி ஆலோசித்து உடன் ஆவண செய்ய வேண்டுகின்றேன்.

இவ்வாக்கத்தின் துவக்கமாக //கழிவு நீர் சூழாத அதிரைப்பட்டினம் - கழிவு நீர்களே கொசுக்களின் தாயகம். வியாதிகள் ஆரம்பிக்கும் அரிச்சுவடி. சீர்கேடுகளின் மூலகாரணம். // என்ற வரிகள் “புதுக்கவிதை”யாக எனக்குத் தென்பட்டது. கவிவேந்தர் சபீர் அவர்கள் //தங்களின் அருகிலிருந்து உரையாட// அக்கவிவேந்தரின் கவிமூச்சு தங்களிடம் கலந்து விட்டதென்பதே என் யூகம்!

இப்படிக்கு,
என் நலம் நாடும் தங்களின் நலம் நாடும் தம்பி,
“கவியன்பன்” கலாம்
shaickkalam@yahoo.com
00971-56-7822844

sabeer.abushahruk said...


அன்பிற்குரிய காக்கா,

தங்களைப் போன்றவர்களின் தரமான ஆசைகள் எல்லோருக்கும் வருவதில்லை. என்னைப்போன்றவர்கள் அடைகாக்கும் ஆசைகள் சாதாரணமானவை.

அடைகாக்கும் ஆசைகள்:

அடுத்தமுறை நான்
அதிரைக்குச் செல்லுகயில்
அனுபவிக்கச் சில
அவசியம் வாய்க்க வேண்டும்

புத்தம்புது மழையால்
பூமி நனைந்திருக்க வேண்டும்
பின்னிரவில் விட்ட மழை
மண்ணில் மிச்சம் வேண்டும்

உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்

பொய்த்துப்போன கம்பன் கனா
மெய்ப்பட்டு வர வேண்டும்
மெய்ப்படும் நாள்வரை
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்

புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்

கைப்பந்து கால்பந்தென
மைதானங்கள் செழிக்க வேண்டும்
மட்டைப் பந்துக்கும்
மையத்தில் இடம் வேண்டும்

விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்

பள்ளிகளில் ஐம்பொழுதும்
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்

ஜும்-ஆ தொழுதபின்பு
சொந்தபந்தம் தழுவ வேண்டும்
பலகாலம் பரிச்சயம் மறந்த
பலரையும் பார்க்க வேண்டும்

இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்

மரண அறிவிப் பென்று
காதுகளில் விழ நேர்ந்தால்
ஜனாஸா தொழுகையொன்று
அதிரையில் தொழ வேண்டும்

சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்

கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்

பெண்களின் விருந்தை
முன்னிருந்து நடத்த வேண்டும்
பேசி வைத்தப் பெண் விழியை
தேடியலைந்த நெனப்பு வேண்டும்

ஓதிக் கொடுக்கும் சப்தம்
காது வழி கேட்க வேண்டும்
உஸ்தாது கைபிடித்து
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்

நவீன வசதிகளில்
நாளுக்கு நாள் மாறினாலும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்!

- சபீர்

sabeer.abushahruk said...

மேலும் சில ஆசைகள்:



கருவேலங் காடழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்
கள்ளிச் செடி களைந்து
கற்றாலை முளைக்கனும்

வாய்க்காலிலும் கால்வாயிலும்
நீர்வரத்தும் வடிகாலும்
நிச்சயம் வேண்டுமையா
நெற்கதிர்கள் செழிப்பதற்கு

வெட்டிக்குளத்தைச் சற்று
வெட்டெடுத்துத் தரவேனும்
மீன்கள் வளரவிட்டு
நாங்கள் வாழவேண்டும்

செடியன் முதல் செக்கடி வரை
தூர்வாரித் தந்துவிட்டால்
ஊர்க்கார ரெல்லோர்க்கும்
ஊருணியில் நீரிருக்கும்

மழைநீரைச் சேமிக்க
மார்க்கம் ஒன்று காட்ட வேண்டும்
மற்றெல்லா மாவட்டம்போல்
மண் செழிக்க வாழ வேண்டும்

புலரும் வெஞ் சுடர்கூட
உலர்த்த முடியா ஈரத்தால்
காலி மனையி லெல்லாம்
கடும் கொசுக்கள் குடியிருக்கு

சகதியாய்ப் போன மனையில்
சல்லிக்காசு வாடகை யின்றி
சாரைப்பாம்பு வசிக்கு ததனால்
நல்லதும் புழங்குதைய்யா

மனைக்குச் சொந்தக்காரரோ
சொந்தக்காரரின் மனைவியோ
தன் னிலம் உலர வைத்து
தடுப்பு வேலி அடைக்க வேனும்

கூலிக்கு ஆள் வைத்து
குப்பைக் கூலம் கொளுத்த வேனும்
பாலிதீன் பைகளுக்கும்
பைபை சொல்ல வேனும்

வீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்
ஆட்டு ரத்தம் ஓடுதய்யா
நாட்டு நடப்பு அறியாதோரின்
காட்டு தர்பார் நிறுத்துங்கய்யா

சாக்கடைச் சண்டையினால்
சாக்காடு நிகழு முன்னர்
நேக்குப் போக்குப் பார்த்து
நிலத்தில்மூடி மறைக்க வேனும்


தெருக்களைப் பெருக்கனும்
தெரு விளக்கெறியனும்
ஈக்களும் கொசுக்களும்
இல்லாமல் பண்ணனும்

நீர் நிலைகளெல்லாம்
தூர்வாரி நிறைக்கனும்
கழிவுநீர் கலக்காத
வாய்க்கல்கள் ஓடனும்

படிக்கவும் பயிலவும்
போதனை செய்யனும்
படிப்பின்றிப் போனாலோ
தொழில் பயிற்றுவிக்கனும்

மாற்றுக் கருத்தற்ற
மார்கம் போதிக்கனும்
முஹல்லாக்களுக்கிடையே
பாகுபாடு களையனும்

நீயும் நானும்
வழக்கொழிந்து போகனும்
நீங்களும் நாங்களும்
வாழ்க்கையென் றாகனும்

Unknown said...

மேற்கூறிய அழகுக் கவிதையில் நான் ரசித்த உச்சக் கட்ட வரிகள்” தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்”

அதிரை என்.ஷஃபாத் said...

"சின்ன சின்ன ஆசைகள்" என்று தலைப்பிடப் பட்டிருந்தாலும், இவை அனைத்துமே சிறப்பான ஆசைகள்!! இவற்றில் பல தனிமனித முன்னேற்றம் மற்றும் சமூக முன்னேற்றங்களை நோக்கியனவாக இருக்கின்றன. ஆசைகள் நிறைவேறி, அதிரை வளம்பெற அல்லாஹ் உதவி செய்வானாகவும், ஆமீன்.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் அடிகளில்
கால்பதித்து வருமென்
கவிதைக் குழந்தை....
தளிர்நடை கண்டு
தாலாட்ட வேண்டும்
00000000000000000

பெரியோரை மதிக்க வேண்டும்
.....பெருந்தன்மை சிறக்க வேண்டும்
சிறியோரை அணைக்க வேண்டும்
....சினங்கொள்ளல் ஒழிய வேண்டும்

பெற்றோர்கட் கிணங்க வேண்டும்
....பெருமைகளை விரட்ட வேண்டும்
கற்றோர்கள் பணிவு வேண்டும்
....கயமைகளைக் களைய வேண்டும்

இயக்கங்கள் அழிய வேண்டும்
....எல்லாரும் இணைய வேண்டும்
மயக்கங்கள் வடிய வேண்டும்
....மன்றாடி இறைஞ்ச வேண்டும்

தாய்சொல்லில் மகிழ வேண்டும்
.....தாரத்தைப் புகழ வேண்டும்
வாய்சொல்லை அளக்க வேண்டும்
....வாழத்தான் விளக்கம் வேண்டும்

ஆன்மீகம் உணர வேண்டும்
....அதிரைக்கு பலமாய் வேண்டும்
மேன்மேலும் உயர வேண்டும்
...மேநாட்டு வளமும் வேண்டும்

காக்காக்கள் உரைகள் வேண்டும்
.....காளையர்கள் தொடர வேண்டும்
ஆக்கங்கள் எழுத வேண்டும்
.....ஆதரிக்கும் உளமும் வேண்டும்

காயல்பட் டினம்போல் ஆகணும்
.....கட்டுப்பா டுகள்போட் டாகணும்
வாயல்கள் வசந்தம் பூக்கணும்
...வஞ்சம்போக் கிடவே வாழ்த்தணும்
.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அத்தனையும் அத்தியாவசிய ஆசைகள். தங்கள் ஆயுளும் இதை அனுபவிக்க எங்கள் ஆசை.

// மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் முஸ்லீம்கள் நிறைந்த ஒரு பகுதியில் அமையப் பெற வேண்டும்.//

அது அதிரையாக இருக்கவும் ஆசை.

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஹாஜி ஜனாப் ஜெ.எ. தாஜுத்தீன் காக்காவின் ஆசைகள் லேசுப்பட்ட ஆசைகளல்ல. எல்லாம் பெருத்த ஆசைகள். ஒரு சட்டக்கல்லூரியும் நம் ஊரில் நிறுவப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள். 'எதிலும் பூசிக்கொள்ளக்கூடிய வீக்கோ டர்மரிக் மல்டி பர்பஸ் கிரீம் மாதிரி' நம் ஊரை எல்லாத்துறைகளிலும் முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சென்னை பணிநிமித்தமாக இருந்து வந்தாலும் சதா காலமும் பிறந்த மண் பண் பட வேண்டுமென்று ஆசைகொண்டுள்ள அவர்களின் ஹயாத் நீளமாகி அல்லாஹ் அவர்களின் நல்ல பல ஆசைகள் நிறைவேறிட நல்லருள் புரிவானாக.....ஆமீன்.

உங்கள் ஆசைகள் தொடர வேண்டும். நல்ல பல கனவுகள் காணப்பட வேண்டும். அவை நம் கண் மறையும் முன் நிறைவேற்றப்பட வேண்டும். ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது


மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Dear Haji Janab A.J. Thajudeen kaka,
Your all dreams and good thoughts (hajaths) will be fulfilled by the grace of Allah before our last breathe. Ameen.

அப்துல்மாலிக் said...


இப்பதிவை எழுதிய மதிப்பிற்குரிய மூத்த சகோதரர் J.A.தாஜுதீன் காக்கா தாங்களுக்கு நான் இட்ட பின்னூட்டம் என் நண்பர் தாஜுதீன் எழுதிய பதிவாக எண்ணி ஒருமையில் அழைத்து கருத்து எழுதிவிட்டேன், தவறுக்கு வருந்துகிறேன் :(((

சுட்டிக்காட்டிய அ.நி. எடிட்டராக்காவுக்கு நன்றிகள்

Abdul Razik said...

REASONABLE WILLINGS
This is the dream of every Adirai inhabitants I pray yours thoughts would be accomplished.
The points 1,4,6,9 and all points from 11 to end are high important. Example restoration to married life by remarriage, household for all people, prompt sewer system and play grounds etc. This article must attain all inhabitants of Adirai. I think Nowadays about 20% of Adirai people are using internet locally and internationally. About 15000 people are using internet. This articles must be reached to all net users and they should try to deliver to their associates even they deprived or high class.. Because the specified points belongs to all class people. As of my request the above said 15000 people make an effort, we hope we can attain the goal partially on some important points mentioned here. This regard we must stand together without politics/ parties/ groups and try to fulfill one by one. My better views are the indicated facts must be split as group wise A B AND C. I mean group A should be applicable with our current native condition and then B and C. Finally requesting all people please read this article and write your thoughts at least. We hope we will achieve these goals by grace and pity of almighty Allah with our efforts. Thanks lot to Haji Janab Tajudeen Kaka to brought this issue as an article.

Abdul Razik
Dubai

Noor Mohamed said...

பொது நலமே தனது வாழ்வின் பகுதியாகக் கொண்டு வாழும் வாரிசுகளின் ஒருவராகிய ஹாஜி J A தாஜுதீன் காக்கா அவர்கள் தொலை நோக்குப் பார்வையில் சமுதாய சேவைகள் பல செய்து கொண்டிருப்பினும், தான் பிறந்த ஊரின் மீது அளவற்ற அன்பு கொண்டு, சொல்லாலும் பொருளாலும் இன்றளவும் செயல்பட்டு வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

JAT காக்கா அவர்களின் "சின்னச் சின்ன ஆசைகள் (அதிரை சிகரம் தொட ஆசை!)" ஊருக்கு தேவையான சீர்திருத்த ஆசைகள். அவர்களின் ஆசைகள் நிறைவேற நாம் அனைவரும் பிணக்குகளை களைந்து ஒன்றுபட்டு பாடுபடுவோம்! இன்ஷா அல்லாஹ், வெற்றி காண்போம்!!

மேலே கூறப்பட்ட ஆசைகள் பல இருப்பினும், நம் சமுதாயத்திற்கு சட்டக் கல்லூரியும் மருத்துவக் கல்லூரியும் இக்கால கட்டத்தில் தவிர்க்க முடியாத இன்றியமையாதவைகள். JAT காக்கா அவர்களின் இந்த ஆசையில் விரைவில் வாழ்வில் வளம் காண துஆ செய்வோம். வெற்றி பெறுவோம்.

Anonymous said...

விரிந்த பார்வை கொண்ட A.J.தாஜுதீன் காக்கா அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற நாம் அனைவரும் துஆச் செய்வோம்.

ஆசிஃப் / மும்பை
via : googletalk.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப். தாஜுதீன் காக்கா,

இந்த ஆக்கம் வெளிவர இரண்டு தினம் முன்பு நாம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் வீட்டில் பகலுணவு உண்டபோது சூசகமாக குறிப்பிட்ட்டீர்களே அது இந்த இமய நினைவுகள்தானா? பாராட்டுக்கள் காக்கா.

உங்களைப்போல் உள்ளுவதெல்லாம் உயர்வாக உள்ளவர்கள் குறைவு. உங்களின் ஆசைகளும் நிறைவேறும் நாளொன்றும்வரும். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் தாஜுதீன் காக்கா,

இந்த ஆக்கம் வெளிவர இரண்டு தினம் முன்பு நாம் இணைந்து பகலுணவு
உண்டபோது " அன்சாரி பார்த்துக்கொண்டிருங்கள்" என்று கூறினீர்களே அது இதுதானா? ( LUNCH SPONSORED BY PROF. ABDUL KHADIR)

இந்த ஆசைகளை அல்லாஹ் உங்களின் நல்ல மனதுக்காக நிறைவேற்றுவான் காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த ஆக்கம் வெளிவர இரண்டு தினம் முன்பு நாம் இணைந்து பகலுணவு
உண்டபோது " அன்சாரி பார்த்துக்கொண்டிருங்கள்" என்று கூறினீர்களே அது இதுதானா? ( LUNCH SPONSORED BY PROF. ABDUL KHADIR)//

தங்களைப் போன்ற வல்லுநர்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும் என்ற அவர்களின் ஆசையாக இருந்திருக்கலாம்.

Ebrahim Ansari said...

ஆசைகள் ஒரு சர்க்கரைப்பந்தல்.

அதில் தம்பி சபீர் அவர்கள் தேன் மழை பொழிந்திருக்கிறார்கள்.

கவியன்பன் கவியால் வரவேற்பு வாழை கட்டி இருககிறார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.