Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2012 | , ,

நினைவுகளோடு நீசசல்...
இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது உள்ளம் பெருமிதம் கொண்டு பேரானந்தம் அடைந்து அந்த நாளை எண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு காலத்தில்.

ஊரில் ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு மாத இரவுத் தொழுகையில் ஓதி வந்த திருக்குர்'ஆனை மெல்ல,மெல்ல முடித்து இறுதியில் 30வது ஜூஸ்வின் சிறிய சூராக்களை ஓத ஆரம்பிக்கும்.

ஊரில் சில பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு 27ம் இரவு தொழுகைக்காகவும் அதற்குப்பின் இரவுத் தொழுகையில் ஓதி முடிக்கப்படும் திருக்குர்'ஆன் "தம்மாம்" விடப்பட்டு (சவுதி தம்மாம் அல்ல) இதுவரை தொழுகைக்கு கட் அடித்த பெருசு, சிறுசுகள் யாவும் பேணுதலுடன் அனைத்து ரக்காத்துக்களுடன் பிளஸ் மூன்றையும் தொழுது முடிக்கும். நல்ல பிரியாணி நார்சாவாய் பிளாஸ்டிக் பைக்குள் நைந்து கிடக்கும். வீடு செல்லும் வரை காத்திருக்காத சில உள்ளங்கள் மொளனமாய் அதை அங்கேயே பிரித்து மேயும்.

ஒரு பள்ளியில் வாங்கிய நார்சாவுடன் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரம்/வாய்ப்பு தேடும். கிடைத்தால் அதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தெரு தையல்கடைக்காரரின் கடையோ நியாயவிலைக்கடை (ரேசன்)போல் கூட்டம் அலைமோதி நிற்கும். சொன்ன தேதியில் அவர் துணிமணிகளை தைத்து கொடுத்து விட்டால் உள்ளம் அவரை கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டியவர் என வெறும் வாயில் புகழ்ந்து தள்ளும்.

பெரும்பாலும் ஜகாத் கடைசி பத்தில் நம் ஊரில் விநியோகிக்கப்படுவதால் அதை நன்கறிந்த மாற்று மத வெளியூர் கூட்டம் கூட தலையில் தொப்பியுடன், கிழிந்த மேல்துணி அணிந்து பஸ், ரயில் ஏறி எப்படியும் ஊர் வந்து சேரும். தெரிந்த சில இஸ்லாமிய வார்த்தைகளை நாவில் அரைகுறையாய் உச்சரித்து காசு கேட்டு வாங்கிச்செல்லும்.

சென்னையிலிருந்து வந்த தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளுடன் ஒன்று சேரும். உற்சாகம் ஊரில் கலைக்கட்டும் இதனால் சில சிறு சண்டைகளும் அரங்கேறும்.

ஏழை, பணக்காரர் ஏற்ற இறக்கமின்றி எல்லோரிடமும் காசு நிரப்பமாய் வந்து சேரும்.

பெருநாளுக்கு எடுக்கும் வேட்டி 80x80, 60x60, 60x40  என்று பள்ளிக்கூட கணக்கு பாடம் நடத்தும். அந்த குழப்பத்திலும் உள்ளம் குறைந்த காசு எது என்று பார்த்து அதையே வாங்கி உடுத்தி மகிழும்.

பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். 
வரும் வழியில் தலைக்கேற்ற தொப்பியை இலியாஸ், அன்சாரி கேப் மார்ட்டில் வாங்கி அணிந்து மகிழும். தொழுகை முடிந்ததும் அதை மடித்து எக்களில் சொறுகி வைக்கும்.

வருடத்தில் செல்லாத சொந்த பந்த வீடுகள் செல்ல உள்ளம் துடிக்கும் வர இருக்கும் (பெருநாள் காசு) வருவாயை எண்ணி பெருமிதம் கொள்ளும்.

பெருநாள் இரவு பிறை பார்ப்பதில் ஏற்பட்ட குழப்பம் இறுதியில் முஹல்லாப்பள்ளியில் (மரைக்காப்பள்ளி) உலமாக்களின் முடிவுக்கு கொண்டுவரப்படும். அவர்களின் நல்ல முடிவுக்கு பொறுமையின்றி காத்திருக்கும். நாளை பெருநாள் இல்லை நோன்பு என்று முடிவானால் சந்தோசப்படவேண்டிய உள்ளமோ கனத்த இதயத்துடன், கவலையுடன் வீடு திரும்பும்.

பெருநாள் பிறையை பார்க்க உள்ளம் பரவசம் அடைந்து அவசரப்படும். அது பார்க்கப்படாவிட்டாலும் ஏன் பார்க்கப்படவில்லை? என்று அறியாமல் உள்ளம் கேள்வி கேட்கும்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடைகளெல்லாம் பேரிரைச்சல் அடையும். ஆட்டின் உறுப்புகளை தனித்தனியே கூறுபோட்டு ஆடர் செய்யும். இது வரை வேண்டாவெறுப்பாய் இருந்த இறைச்சிக்கடைக்காரனும் வேண்டப்பட்டவனாய் ஆகிப்போவான். உள்ளம் வருடம் முழுவதும் அவனிடம் கறி வாங்குவது போல் பவ்வியமாக பேசி காரியம் சாதிக்க கிட்னி பக்கம் கண் திரும்பும்.


பெருநாளுக்கு எடுத்த வேட்டியில் ஒட்டப்பட்ட லேபிள் அவசரத்தில் கிழிக்கப்பட்டு அவ்விடத்தில் கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம் போல் காட்சி தரும்.

கண்ட இடத்தில் உட்கார்ந்து எழ கருப்பு கம்பாயம் போட்ட வேட்டி கை கொடுக்கும். இன்று கம்பனையும் காணவில்லை கம்பாயம் போட்ட வேட்டியணிந்தவர்களையும் காண இயலவில்லை.

புது சட்டை அவசரத்தில் பிரிக்கும் பொழுது எடுத்த குண்டூசி சில சமயம் கையை நன்கு பதம் பார்க்கும். ஆடு அறுக்கும் முன்பே நம் கையில் காவு வாங்கும்.

சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.

எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இரவு நேர ஓவர்டைம் வேலையை பெண்கள் அனல்பறக்கும் அடுப்பங்கரையில் பார்த்து நல்ல ருசிக்கு பொறித்த ரொட்டி சுட்டெடுத்து, வட்லப்பம், கடல்பாசி, இடியப்பம், கறியாணம் என கலைக்கட்டும் அடுப்பங்கரை சளைக்காத வீட்டுப்பெண்கள். (ஜப்பானாக இருந்தால் பை நிறைய பார்த்த ஓ.டி.க்கு பணம் பார்த்திருப்பார்கள் பாவம்)

மல்லிகைப் பூக்காரி கூட இரவு நேரத்தில் நம் தெரு வீதி உலாவருவாள். நல்ல வியாபாரத்தையும் செய்து முடிப்பாள்.

பெருநாள் இரவு முழுவதும் பேய்பிசாசு பயமின்றி நண்பர்களுடன் சுற்றி விட்டு பெருநாள் காலை சுபுஹ் தொழுக்கைக்கு எழும்ப அலும்பு பண்ணும். வீட்டினரின் ஓலத்தில் வேண்டா வெறுப்பாய் எழுந்து கண்சிமிட்டி கூசும். வீட்டுப்பெரியவர்களின் அதட்டலில் கடைசியில் பல் துலக்காமல் பள்ளி வந்து சேரும்.

குளித்து புத்தாடை அணிந்து நறுமணத்தைலம் அங்குமிங்கும் உடலில் தடவி பள்ளிக்கு வந்து தொழுகைக்கு அமரும். பெரியவர்களுடன் சேர்ந்து கலிமாவும் கூறும். தொழுகை முடிந்ததும் பள்ளியின் வெளியே விரிக்கப்பட்ட விரிப்பில் தன் பாக்கெட்டிலிருந்து பள்ளி சாபுக்கு சலவை நோட்டு பத்தோ, இருபதோ அல்லது இயன்றதைப்போட்டு மகிழும்.

காலை மெல்ல, மெல்ல பொறித்த ரொட்டி சுவையுடன் பெருநாளும் நம்மை விட்டு மெல்ல, மெல்ல எட்டப்பார்வை போல் மறையத்துவங்கும். தெருவில் விற்கும் ஜஸ்கிரீம் உண்டு ஆசைத்தாகம் தீரும். பெருநாள் பகல் நல்ல பிரியாணி உண்டு அயர்ந்து போகும். சாய்ங்காலப்பெருநாள் சக நண்பர்களுடன் மல்லிப்பட்டினம் மனோரா காணத்தூண்டும்.

பெருநாள் மாலை தட்டுத்தடுமாறும் உள்ளங்களை ஒண்றிணைத்து மன ஓர்மையுடன் நமதூர் ஜாவியாவில் மாலை நேர திக்ரு மஜ்லிஸ் ஒன்று சேர்க்கும்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் சென்ற ரமழானுக்காக வருந்தத்துவங்கும் செய்வதறியாது விழிக்கும். வருடம் முழுவதும் ரமழானாய் இருக்கக்கூடாதா? என உள்ளத்துக்குள் கேள்வி எழுப்பி பதிலின்றி மொளனமாய் உறங்கிப்போகும்.

சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...

நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் இறைஞ்சுவோம்...

மலரும் நினைவுகளுடன் நிகழ்கால நிகழ்வுகளுடன்..
மெய்யாலுமே இது ஒரு நினைவு மீள்பதிவுதானுங்க !
மு.செ.மு. நெய்னா முஹம்மது.

12 Responses So Far:

Abdul Razik said...

எம் எஸ் எம்மிடம் இருக்கும் கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால டைரியை ஒரு PDF பைலாக வெளியிட்டால் பொக்கிஷமாக வைத்து பாதுகாக்கலாம் போலிருக்கிறது. மலரும் நினைவுகள் (Renaissance) superb.

Abdul Razik
Dubai

புதுசுரபி said...

//சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...//

படிக்கும் போது, நகர்வலம் - படமோடியது கண்ணெதிரே...... அற்புதமான ஆக்கம்!

Yasir said...

மீள் பதிவானாலும் மனதை துள்ள வைக்கும் பதிவு...

sabeer.abushahruk said...

வயதையும் மீள்பதிவு செய்ய முடிந்தால் எவ்வளவு நல்லாருக்கும், எம் எஸ் எம்?

Ebrahim Ansari said...

Assalaamu alaikkum.

தம்பி நெய்னா அவர்களே!
நானும் தேடித்தேடிப் பார்த்தேன் லிஸ்டில் ஏதாவது விடுபட்டு இருக்கிறதா அதை நாம் குறிப்பிடலாமே என்று. ஊஹூம் . ஒன்னுமேஇல்லே.

அருமை.நினைவுகளை அசைபோடுவது ஒரு இனிய சுகம்.

பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரரே.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் “நகைச்சுவை நாயகர்”, நெய்நா, அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கட்கு என் உளப்பூர்வமான நன்றியை “ஜஸாக்கல்லாஹ் கைரன்” எனும் துஆ வுடன் சொல்கின்றேன்; காரணம்:

என்னிடம் அருமை நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார், “நமதூரின் பெருநாளை மையமாக வைத்து ஒரு கவிதை எழுத வேண்டும்” என்று. நானும் ஒப்புக்கொண்டேன்; என்னிடம் எண்ணங்கள் என்ன வரிகளாக ஓடினவோ அவற்றையும் விட அதிகமாகவே எழுதி விட்டீர்கள். எனது கவிதையில் இத்தனை விடயங்களையும் கொண்டு வருவேனா என்பதும் எனக்குள் ஓர் ஐயப்பாடே! அன்புச் சகோதரர் புதுசுரபி அவர்கள் சொன்னது போல்//படிக்கும் போது, நகர்வலம் - படமோடியது கண்ணெதிரே...... அற்புதமான ஆக்கம்! //
எனது சுமையைக் குறைத்து விட்டதற்குத்தான் என் நன்றியைத் தெரிவித்தேன்.ஜஸாக்கல்லாஹ் கைரன்.

விடுபட்ட விடயங்கள்:

1) “நாளைக்குப் பெருநாள்
நம்மலுக்கு ஜோக்கு
கூட கூட அறுத்து
கூடி கூடி தின்போம்” என்ற குழந்தை பருவ “ரைம்ஸ்”
2) பட்டுச்சேலையும்
பவழ மல்லியும்
போட்டி போட்டு இழுக்க
வாட்டி வதைக்கும்...
மருதாணி கரங்கட்கு
மனம் மணக்கும் ஈத் முபாரக்

3)பூனைக் கொள்ளை எங்கே>
கம்பனுடன் காணாமல் அங்கே


மனதுக்கு நிறைவாகவும் ஊருக்கு விமானச் செலவின்றி போய் வந்து விட்டோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

"ஒரு நாள்
பெருநாள்
மறுநாள்
வெறும்நாள்”

”அதிரைக்கு ராஜா அஹமது ஹாஜா” என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த கவிமுகம் கூறும் இக்கவி வரிகளும் விடுபட்டு விட்டன.

KALAM SHAICK ABDUL KADER said...

இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் கிடைக்கப் போகும் பரிசு “சுவனம்” என்பதில் நமக்கு வேண்டும் கவனம்! இந்தப் பெருநாளும் அதன் ஆனந்தமும் அச்சுவனத்தின் சுகங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியாமல் இருப்பதால் ஒரு “சாம்ப்ள்”; தேன் எப்படி இருக்கும் என்றறியச் சிறிது தேனைத் தொட்டுச் சிறிது சுவைப்பது போல், உலக வாழ்வின் இன்பங்கள் (ஹலாலாக்கப்பட்டவைகள்)ஒரு “சாம்ப்ள்”. எனவே, இச்சிற்றின்பம் மட்டும் போதும் (சாம்பிள் மட்டும் போதும்) என்றிருந்து விடாமல் பேரின்பப் பேறுகளை “எந்த கண்ணும் கண்டிராத; எந்த காதும் கேட்டிராத; எந்த நாக்கும் ருசித்திராத” அச்சுவனத்தின் பேறுகளின் மீது பேரவா கொள்ளவே இப்பெருநாளின் சிற்றின்பங்கள் என்று கவனத்தில் கொண்டு, அப்பேறுகளைப் பெற்றிட இப்புனித ரமலானை நிரப்புவோம் அமல்களால்!

KALAM SHAICK ABDUL KADER said...

ஒரு மாதம் கட்டுப்பாடுடன் நோன்பும், தராவிஹூம் பயிற்சியில் இருந்து விட்டு “ரம்ஜான் ஸ்பெஷல்” என்று போஸ்டரில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமாத் தியேட்டரில் மீண்டும் பாவங்களை ஏற்றிக் கொண்டு வந்த நம் வாலிப காலத்தை நினைத்து இன்றும் வருந்துகின்றோம்!நம் காலத்தில் சினிமாவோடு முடிந்தது; இக்காலத்தில் மற்ற ஹராமானவைகளும் “பெருநாளில்” அரங்கேற்றமாகின்றன என்று ஹைதர் அலிய் ஆலிம் அவர்கள் பயானில் சொல்லக் கேட்டு அன்று ஏற்பட்ட மன அதிர்ச்சி இன்றும் என்னை வாட்டி வதைக்கின்றது. அல்லாஹ் நம் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துவானாக(ஆமீன்)

KALAM SHAICK ABDUL KADER said...

நேற்றிரவு தராவிஹ் தொழுகையில் ஹாபிழ் அவர்கள் சூரத்துல் வாகி ஆ வை ஒதும் பொழுது தேம்பித் தேம்பி அழுதார்கள்; அதில் நரகவாசிகட்குப் புகட்டப்படும் பானம் குறித்துச் சொல்லும் பொழுது நரகின் கொடுமையை அல்லாஹ்வின் வேதம் உணமைப்படுத்திச் சொல்லியும் உள்ளத்தில் இன்னும் அச்சம் இன்றி இருக்கின்றோமே! இன்று நம்முடன் இருக்கும் பாசத்திற்குரிய மனைவி மக்களை மற்றும் சுற்றம் நட்புகளை ஒன்றாக சுவனத்தில் சந்திப்போமா அல்லது இடம் மாறி போய்விடுவோமா? என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது! அதனாற்றான் “என் உம்மத்தில் எவரும் நரகத்திற்குப் போய்விடக் கூடாது” என்பதிலும், தனக்கு ஏற்பட்ட மரண வேதனை தன் உம்மத்துக்கும் தாங்க முடியுமா என்று கவலைப்பட்டு உம்மத்திற்குரிய வேதனைகளை நான் தாங்கிக் கொண்டால் என்ன” என்றெல்லாம் கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டிருக்கின்றார்கள். (இதன் ஆதாரப்பூர்வமான ஹதீஸை சகோ.அலாவுதீன் அறிவிக்கலாம்)

Anonymous said...

அருமை,படித்தேன் தனிமயில் சிரித்தேன்!

Yasir said...

200 Filipinos embrace Islam in Dubai--ALLAHU AKBAR

http://gulfnews.com/about-gulf-news/al-nisr-portfolio/xpress/200-filipinos-embrace-islam-in-dubai-1.1059949

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு