Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈகை :: உணர்த்தும் சம்பவம் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2012 | , , ,


நஞ்சையும்,புஞ்சையும் பின்னி விளையாடும் தரணி அவ்வூர், வானம் தன் அருட்கொடைகளை அள்ளி வீசிய வீச்சில் கிளர்ந்தெழுந்த மரங்களும் செடிகளும் பச்சைப்பசேலென மின்னிக் கொண்டிருக்கும் ஊர், அங்கு ரமலான் மாதம் தன் நிறைவின் கடைசி நாட்களை நெருங்கி இருந்தது. வழக்கம்போலவே அமல்களின்பால் ஏற்படாத ஆர்வம், ஆடை எடுப்பதில் அதிகமிருந்தது. கடைகளில் நிற்பதற்குக் கூட இடமில்லாமல் கூட்டம், பெருநாளைக்கென நல்ல துணிமணிகள் எடுத்து எடுப்பாகவும், அழகாவும் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் காணப்பட்டது, அது அனுமதிக்கபட்டதும் கூட !

அன்று ரமலான் 27ம் கிழமை அப்துல் விடிய விடிய விழித்திருந்து செய்த அமல்களினால் கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டிருந்தான் அப்துல். ஆயிஷா கொஞ்சம் முன்னாடியே எழுந்து, வீட்டில் சிறு சிறு வேலைகளையெல்லாம் அரக்கப்பரக்க முடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் ஆசை இருக்காதா பின்னே? தன் ஒரே மகன் உமருக்கும், தன் ஆசை கணவனுக்கும், தனக்கும் மகிழ்ச்சி தரும் பெருநாள் நாளில் நல்ல துணிமணிகள் எடுத்து தொழுகைக்குப் போக உடுத்த வேண்டும் என்று. லேட்டாகி விட்டாலும் இன்னும் மூன்று நாள் இருக்கின்றது பெருநாளைக்கு, இன்றைக்கு எப்படியாவது கிளம்பி போய் துணிமணிகள் எடுத்துவிட்டு நோன்பு துறப்பதற்குள் வீடு திரும்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அப்துலை எழுப்பினாள். அசந்த தூக்கத்தில் இருந்து எழும்பிய அப்துல் மனைவியின் விருப்பதிற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல், உமரை எழுப்பினான், இந்த ஒரு நாளுக்காக காத்திருந்தவன் போல உமர் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து எழுந்தான்…,

மூவரும் துணிக்கடைகள் நிறைந்த கடைத் தெருவை நெருங்கினார்கள், ரம்ஜான் தள்ளுபடி என்று வார்த்தை மாயம் காட்டி நிறைய கடைகள் கல்லா கட்டிக்கொண்டிருந்தார்கள். கலர்கலரான, மயக்கும் வகை டிசைன்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டும், தொங்கவிடப்பட்டும் காட்சியளித்தன நீண்ட தேடலுக்குப்பின் ஆயிஷா தன் மனதுக்குப் பிடித்ததை அப்துலிடம் காட்டி அவன் ஒகே என்று சொன்னதும் எடுத்துவிட்டாள். அடுத்து அப்துலுக்கும் அசத்தலான உடையும் கிடைத்துவிட்டது. உமருக்கு அழகான அவன் ஆசைப்பட்டது போலவே குர்தாவும், ஜிப்பாவும் கிடைத்துவிட்டது ஆனாலும் உடனடியாக உமர் அதனை எடுக்கவில்லை.

“தான் தேர்ந்தெடுக்கும் ஆடையில் இரண்டு உடுப்புகள் இருந்தால் மட்டுமே எடுப்பேன்” என்று கூறிவிட்டான்.

“ஏன் அப்படி?” என்று அப்துல் வினவ!

"ஏதாவது சாப்பிடும்போது உடையில் பட்டுவிட்டால் என்ன செய்வது அதான் மாற்று உடை" என்று பதிலளித்த பாசமான மகனைக் கடிந்துகொள்ள மனமில்லாமல் அவன் இஷ்டத்துக்கு விட்டுவிட்டான். இரண்டு உடைகளும் கிடைத்தாயிற்று, பணத்தை செட்டில் செய்துவிட்டு கிளம்பினார்கள்

அன்று பெருநாள் சுபுஹூ பாங்கு சொல்வதற்கு முன்பே எழுந்துவிட்டான் உமர். அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உம்மாவிடம் சென்று என்னென்ன செய்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டான், அப்துலும் குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி தன் மகனுக்கும் உடுத்தி விட்டுக்கொண்டு இருக்கும்போது உமர்.

“வாப்பா நாம் கிழக்கு தெரு வரை போய்விட்டு வரவேண்டும்" என்றான்

"ஏன்?" என்று அப்துல் கேட்பதற்குள் வாப்பா "ப்லீஸ்" என்று கொஞ்சியவனாக வாப்பாவை இழுத்துக்கொண்டு தன் கையில் ஒரு பை தொங்க காரை நோக்கி ஓடினான் அப்துலும் ஒன்றும் புரியதவனாக அவன் பின்னாலேயே சென்று காரை எடுத்து அவன் சொன்ன வீட்டின் அருகில் போய் நிறுத்தினான்.

அவ்வீடு சமீபத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த உமரின் நண்பன் அமீரின் வீடு. நடுத்தர குடும்பம் ஓகோ என்று வாழாவிட்டாலும் ஓகே ஆக வாழ்ந்த குடும்பம். அங்கு இறங்கிய உமர், அமீரை அழைத்தான், வந்து நலம் விசாரித்தவனிடம் தன் கையில் உள்ள பையை கொடுத்தான். அது என்னவென்று அமீர் பிரித்துப் பார்த்தபோது அது அவனுக்காக எடுத்த இரண்டாவது உடை…

“இதனை நீ உடுத்திக்கொள் உனக்கும் எனக்கும் ஓரே உடை, கொஞ்சம் நேரம் கழித்து சாப்பாடு கொண்டு வருக்கின்றேன்” என்று அவன் அமீரிடம் சொன்னதைக் கேட்டு. அப்படியே அசந்துவிட்டான் அப்துல் என்ன நடக்குதென்று புரிந்து கொள்ள முயன்றபோது “வாப்பா எங்க இஸ்லாமிக் டீச்சர் தான்ன் விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் உறவுகளுக்கும் விரும்பவேண்டும் பெருநாட்களில் தான் நல்ல உடை உடுத்தும்போது அவ்வசதி வாய்ப்பில்லாத ஏழை எளியவருக்கும் அதே போல கொடுக்க முயற்ச்சிக்கவேண்டும்” என்று கூறியது என் மனதில் பதிந்து இன்று நனவாகிவிட்டது என்று சொன்ன, அழகிய இச்சிறந்த செயலைச் செய்த தன் மகனை இரு கைகளிலும் அணைத்து முத்தமழை பொழிந்தான் அப்துல்… ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை ஈகையாளனாகப் பார்த்த தகப்பன் பெருமையடைவது போல கண்களில் ஆனந்த கண்ணீர் வர மகிழ்ந்தான்.

இந்த சம்பவத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையேயன்றி வேறில்லை,ஒரு விசயத்தை வற்புறுத்தி சொல்ல வேண்டும் என்பதற்காகவே இங்கே விவரிக்கப்பட்டுள்ளது

ஆகவே! சகோரர்களே, நாம் புத்தாடை உடுத்தி மகிழும் இத்தகைய தருணங்களில் நாம் அறிந்த ஏழைக்கு ஒரு உடை எடுத்து கொடுத்து மகிழ்வதில் இந்த ஈகைத் திருநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் குதூகலிக்கும். நாம் வட்டிலப்பம் சாப்பிடும் போது வசதியற்றவருக்கு ஒரு வடை கொடுத்தால் அது இறைவனிடத்தில் மிகப்பெரியதாக கருத்தப்படும். என்ன நண்பர்களே! இதற்கான முயற்சியை இந்த ஈகைத் திருநாளில் செய்வோமா !? கட்டாயமென்று இல்லை இருப்பினும் ஜகாத், சதக்கா கொடுத்தது போக, நமக்கு நேரமும், வசதியும் இருந்தால் இவ்வாறான நற்காரியங்களைச் செய்வதில் கிடைக்கும் பயனுக்கு ஈடு இணை ஏது ??

சம்பவங்களை விவரித்து ஒரு நல்ல கருத்தைச் சொல்ல எத்தனித்த எனக்கு இது ஒரு கன்னி முயற்சிதான்....

பின்னூட்டங்களில் பின்னால் ஓட்டலாம் !

முஹம்மது யாசிர்
துபாய்

13 Responses So Far:

Ebrahim Ansari said...

கன்னி முயற்சியில் பின்னி எடுத்த மருமகனார்! பாராட்டுக்கள். நல்ல நாளில் நல்ல கருத்து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னாது கன்னி முயற்சின்னு பம்முறமாதிரி தெரியுது !?

உங்களோட ஒவ்வொரு கருத்துமே... சொல்லுமே... அதன் வீரியத்தை !

எழுத்தையும் எழுதுபவரையும் பாராட்டுவது... சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதுவே அவர்களுக்கு பொறாமையாகக் கூட உருவெடுத்து நாளடைவில் வெறுப்பாக அவர்களின் இதயங்களில் கான்கிரீட் போட்டு வீடுகட்டி குடியிருந்திடும்.... அத்தகையோரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது... !

அதிரை சித்திக் said...

சூப்பர் ..அற்புதம் அபாரம்

sabeer.abushahruk said...

தனக்குக் கிடைத்தது சக மனிதனுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற எண்ணம் அந்தச் சின்னப் பையனைப் பெரிய மனிதனாகக் காட்டுகிறது.

காரை எடுத்துக்கொண்டு போதல், ஒன்றுக்கிரண்டாய் உடுப்புகள், தயாராகும் பலதரப்பட்ட உணவுகள், மனைவியின் ஷாப்பிங் எதிர்பார்ப்புகள் போன்ற வர்ணனைகள் மூலம் முக்கியக் குடும்பத்தைப் பணக்காரர்கள் என்று காட்டியிருப்பது, எழுத்தாளரை காளை எழுத்தாளர் என்றே (கன்னியாமே) காட்டுகிறது.

கற்பனைகள் மூலமும் கனவுகள் மூலமும்கூட நன்மையையே நாடுதல் சிறந்த இஸ்லாமிய வழிதான்.

நாட்டம் நல்லதாய் இருக்கவேண்டும் அவ்வளவே.

உமருக்கு என் அன்பு முத்தங்கள். உமரை உருவாக்கியவருக்கு பாராட்டுகள்.

ZAKIR HUSSAIN said...

முதல் முயற்சியில் எழுதியது மாதிரி தெரியவில்லை. சிறுகதை எழுத சில விசயங்களை முன்பு சுஜாதா எழுதியிருந்தார். தேடிப்பிடித்து படிக்க முடியுமா என பாருங்கள்.

மனித குணங்கள் மறைந்து வரும் இந்த கால கட்டத்தில் இது போன்ற நெறிப்படுத்தப்படும் விசயங்கள் மிகவும் அவசியம்.

Well done Brother Yasir...

Noor Mohamed said...

//சம்பவங்களை விவரித்து ஒரு நல்ல கருத்தைச் சொல்ல எத்தனித்த எனக்கு இது ஒரு கன்னி முயற்சிதான்....//

தம்பி யாசிர்! தாம் கன்னி முயற்சியில் படைத்த, கற்பனை கதாபாத்திரங்களை கொண்ட கண்ணியமான ஆக்கம். தேவையான நேரத்தில் தேவையறிந்து தேர்ந்தெடுத்து கூறும் கூற்று. வாழ்த்துகள்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

சகோதரர் யாசிர் அவர்களே,
தாங்கள் எழுதியது கதைபோன்று இருந்தாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிஜத்திலும் நடந்துள்ளன. கதையாகப் படிக்கும் போதே கண்களில் கண்ணீர் கசியும் போது, நிஜமாகவே நடக்கும் போது கண்களில் வழியும் கண்ணீரையும், கல்புகளில் பொங்கும் மகிழ்வையும் மதிப்பிட முடியாது. சிறுவன் உமரின் உள்ளத்தைப் போன்ற உள்ளங்கள் நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள்வானாக, ஆமீன்.

அதிரை சித்திக் said...

என் இதயம் கனிந்த ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள் ...!
தன்பி யாசிரின் உள்ளத்தில் உதித்த கருத்து ..
அவரின் நல் குணத்தை ஈஸ்டுத்து காட்டுகிறது ..
தொடர்ந்து நல்ல ஆக்கங்களை தாருங்கள் ...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ யாசிரின் ஆக்கம் நமது ஈகைக்கு நல்ல ஊக்கம்
உமரின் நற்குணம் போல் வேனும் யாவருக்கும்.

Ebrahim Ansari said...

என்னதான் கதையில் வரும் பாத்திரம் உமர் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் எனக்கென்னவோ பேரன் சாஜித் உடைய உருவமே அந்த பாத்திரத்தின் வழி மனக்கண்ணில் நிழலாடுகிறது.

சாஜித்?= யாசிர் அவர்களின் மகன். அவனும் அப்படி செய்யக்கூடியவனே.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அன்பிற்கும் , மதிபிற்கும் உரிய என் அபிமான எழுத்தாளர், " நறுக்" விமர்சகர், நல்ல வாசகர் இப்படி பறிமானங்களை கொண்ட சகோ.யாசரின் இந்த கண்ணி முயற்சி!!!!!!!!! கனியென சுவைத்தும். நல் செயல்தனை விதைத்தும். நன்மைக்கு நம்மை அழைக்கும் அற்புதமான உணர்வு ஓவியம். சின்னதாக, ஒரு பக்கத்தில் இப்படி வாழ்கை பாடம் நடத்தமுடியும் என்பது . ஜாம்பவான் எழுத்தாளர்கெல்லாம் எளிதாக வாய்ப்பதில்லை. வாழ்துக்கள். ஈத்முபாரக்.

அப்துல்மாலிக் said...

வித்தியாசமான கதைகளம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு