Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுவர்க்கத்திற்கு வேகத்தடை ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2013 | , , , , ,

அறியாமைக் காலத்து
அரேபியர்களா
அதிரைக் காரர்கள்?

செவ்வக செங்கல் வைத்து
சிமென்ட்டால் செதுக்கியெடுத்து
சவப்பெட்டிச் சாயலிலே
சிலை வணங்கத் துணிந்தனரே

ஐயகோ என்ன செய்ய
அறிவழிந்து போயினரே

இபுறாஹீம் அலைஹிவசல்லம்
இன்றில்லை என் செய்வேன்
சின்னச் சின்ன கபுருடைத்து
பெரிய கபுரைக் குற்றஞ்சொல்ல!

பச்சைப் போர்வை போத்தி
பாதுகாக்கும் முன்பதாக
பகுத்தறியப் படித்தவரே
பிழையுணர மாட்டீரோ

காற்றுப்புகாக் கபுரறையில்
கண்தெரியாக் காரிருளில்
மூச்சுத்திணறி மரணித்த
மனிதனை நீர் மறந்தீரோ

கொலைபாதகச் செயலன்றோ
விலைமதிப்பற்ற உயிரன்றோ
அருள்பாலிப்பார் அவ்லியா எனில்
அழித்துவிட்ட தென்ன நியாயம்

ஓரிறையை வணங்குவதாய்
ஊரறியச் சொல்லிவிட்டு
சிலை வணங்கத் துணிந்தீரோ
நிலைகுலைந்து போயினரோ

கழிப்பிடமா பிறப்பிடம்
குமட்டுதய்யா சம்பவம்
இடித்துடையும் இழிச்சின்னம்
துடைத்தழியும் கேவலம்

குதிரைக்கு கிண்டியாலும்
அதிரைக்கு உண்டியலும்...
செயல் வேறு பலன் ஒன்று
காசேதான் கடவுள்

எல்லைக் கற்களைக்
குலதெய்வங்களுக்காக
விட்டுக்கொடுத்த
நெடுஞ்சாலைத் துறையே...

வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று - இல்லையேல்
பச்சைப்போர்வை போத்தி
பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

நபிமணியும் நகைச்சுவையும்...! தொடரிலிருந்து... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2013 | , ,


தமிழ் இலக்கியத்திற்கு சமகாலத்தில் முத்தாய்ப்பாக அதிரைநிருபரில் வெளிவந்து கொண்டிருக்கும் நபிமணியும் நகைச்சுவையும் தொடரில் மூழ்கி எடுத்த முத்துக்களின் குவியலை இங்கே பங்கிட்டு பகிர்ந்தளிப்பதில் மகிழ்கிறோம் ! இந்தத் தொடரில் வேறெந்தப் புத்தகத்தையும் விஞ்சும் அளவிற்கு, வரம்பிற்குட்பட்டு, கண்மணி நபி முஹம்மது(ஸல்) அவர்களைப் புகழ்ந்துரைக்கும் கூற்றுகள் மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.  அவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்து மகிழ்வோம் வாருங்கள்.
-------------------------

“யா அத்தஹாக்! (சிரிப்பழகரே!)”

அப்படித்தான் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.

ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.

அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!

அவர்தாம் நம் இனிய தலைவர்  நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
-------------------------

நபிகள் நாயகத்தை, தூதராக அனுப்பிய அல்லாஹ், "நற்செய்தி சொல்பவர் (முபஷ்ஷிர்)" என்றும் (அல்-குர்ஆன் 2:223); "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் (அல்-குர் ஆன் 68:4); "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" (33:21) என்றெல்லாம் அழைக்கின்றான்.

சொந்த ஊர்க்காரர்கள் "அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர்.

அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம் (காசிமின் தந்தையே)" என்று பிரியமுடன் அழைத்தனர்.

"என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய சஹாபாக்கள் போற்றி மகிழ்ந்தனர்.
-------------------------

யாரையும் எதிர் கொள்ளும்போதும் எந்தச்  சந்திப்பின்போதும் அரைகுறையாக வரவேற்றார்கள் என்றோ   முகத்தை மட்டும் கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்தார்கள் என்றோ   ஒரு நிகழ்ச்சியைக்கூட நம் தங்கத் தலைவரின் வரலாறு நெடுகிலும் எவரும் காணவே முடியாது! எவரை எதிர் கொண்டாலும்  அவர் மீது முழுமையான அக்கறையுடனேயே எதிர் கொள்வார்கள். 

இத்தகைய உன்னதமான தன்மையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு தோழரும், அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தில் வேறு எவரையும்விட தன் மீதே அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருப்பதாக உணர்ந்தனர் (*). அதனால்தான் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைத் தங்கள் அழகிய முன்மாதிரியாய் ஆத்மசுத்தியுடன் ஆக்கிக் கொண்டனர். அந்தச்  சரித்திரத்தின் சான்றாக சுந்தர நபி (ஸல்) உதிர்த்த  சுத்தமான சொற்களெல்லாம் பசுமரத்தில் ஆணியாய் அவர்தம் மனதில் பதிந்து போயின!

இந்த மானுட வர்க்கம் முழுதும் நல்லவர்களாகவும் அந்த நல்லவர்கள் அனைவரும் சுந்தர நந்தவனமாம் சுவர்க்கத்தை அடைந்துவிட வேண்டும் என்பதும் அண்ணலின் அபிலாஷையாய் ஆகிப்போனது. அந்தப் பாலைவன மணற்குன்றுகளில் நின்று, இந்த அவனியை அவர் பார்த்த வெளியெங்கும் பாதைப் பரந்து விரிந்தப் பரப்பானது!
-------------------------

சஹாபி என்றாலே பொருள் நபித்தோழர்தாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லுரைகளாலும் தோழர்களுடன் நடந்துகொண்ட பெரும் கனிவினாலும் அவர்கள் நபித் தோழமையில் பேருவகை கொண்டிருந்தனர். நபி தந்த அருள் மறையை தினமும் வாசித்தார்கள். அறியாமை இருளில் ஏகத்துவச் சுடரை ஏற்றிவைத்த ஏந்தல் நபியை உயிருக்கும் மேலாய் நேசித்தார்கள். எந்த அளவுக்கு என்றால், யுத்த களத்தில் உயிர் பிரியும் தருவாயில் கூட, இந்தத் தரணியில் மானிடர் நலமுடன் வாழ, வழி வகுத்துத் தந்த தங்கள் தலைவரின் காலில் ஒரு முள் தைப்பதைக்கூடப் பொறுக்க மாட்டாத அளவுக்கு அவர்கள் பெருமான் நபி (ஸல்) மீது பேரன்பு கொண்டார்கள்.
-------------------------

அன்று என்னவோ தேனீக்கள் போன்று சூழ்ந்து கொண்ட தோழர்களுக்கு மத்தியில் நடு நாயகமாக நம்  நபிகள் நாயகம் (ஸல்). யாருக்கும் எழுந்து போக மனமில்லை. புதிதாக வருபவர்க்கு அமர ஓர் அங்குல இடமுமில்லை!

காண்பதற்கு, நீல வானத்தின் முழு நிலவைச் சுற்றி தோரணங்களைப்போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களாய் மங்காப் புகழ் பெற்ற நம் தங்கத் தலைவரைச் சூழ்ந்து கொண்ட நட்சத்திரத் தோழர்கள். அங்கே, அண்ணலுக்கு அருகில், ஆனந்த உரையாடலில் ஒளி வீசும் அந்தப் பெரிய தாரகை யார்? அது அண்ணல் நபியின் ஆருயிர் நண்பர் அபூபக்ரு (ரலி) அல்லவா! அவர் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை விவரித்துக் கொண்டிருக்க, வியப்பினாலும் சிரிப்பினாலும் திண்ணைத் தோழர்க் கூட்டத்தில் கலகலப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. சுவையான சம்பவம் விரிவாகச் செல்லவும், அன்றலர்ந்த செந்தாமரை மலர்போல் அண்ணலின் முகம் மலர்ந்து ஆனந்த மணம் மேலும் வீசியது. நிகழ்வின் உச்ச வர்ணனை உயர்ந்து செல்லவும் தேனமுதம் சிந்தும் தெள்ளிய சிரிப்பால் காஸிமின் தந்தைக்குக் கடைவாய்ப் பல் மின்னியது! (**) 
-------------------------

அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்.

அந்த அருட்கரம் தொட்டதுமே அவர் அமைதியானார். அது எப்படி சாத்தியம்? அந்த கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனதின் உணர்வுகளையும் துல்லியமாக நாடிபிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக்கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரைசேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!
-------------------------

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு,

எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, 

நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!
-------------------------

'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்!

அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
-------------------------

எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத்தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,
எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ,

அவர்தான்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலை சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக்காட்டினார். அதுபோன்ற ஒருவரியை இதுவரை

எவனாலும் எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்
அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,
அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அது அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி !

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம்.

அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரண பல்கலைக் கழகமுமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக்கழகம்!"
-------------------------

மாண்பாளர் நபிகள் நாயகம்(ஸல்) மதீனா வந்தபோது அனஸ் பின் மாலிக் பத்து வயது பாலகன்! உறுதியான முடிவெடுத்த உம்மு சுலைம்(ரலி), உத்தம நபியின் ஊழியத்தில் அனஸை அழைத்து வந்து சேர்த்தார்! உம்முசுலைமின் வேண்டுகோளுக்கு இணங்க அனஸை அருகே வைத்துக் கொண்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அண்ணலின் அரவணைப்பில் சுவனக்காற்றைச் சுவாசித்தார் அனஸ்! ஏந்தல் நபியின் எளிமையான தோற்றத்தில் 'மூசா' நபியின் வீரத்தைக் கண்டார்! மேன்மைமிகு நபியின் மென்மையான பண்புகளுக்குப் பின்னால் 'ஈஸா' நபியின் பணிவைக் கண்டார்! கண்ணியத் தூதரின் கட்டளைகளிலும் காருண்யத்திலும் 'சுலைமான்' நபியின் கம்பீரத்தைக் கண்டார்! ஓங்கி நின்ற ஒப்பற்ற எழிலில் 'யூசுப்' நபியின் பேரழகைக் கண்டார்! எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து வகையான அற்புத குணங்களும் அவர்தம் பாட்டனார் 'இப்ராஹீம்' நபியிடமிருந்து பளிச்சிடக் கண்டார்!

எந்த மனிதரும் தன் வேலையாளுக்கு நிறைவான மனிதனாக விளங்கமுடியாது என்றுசொல்லப்படுகின்றது. ஆனால், அது முத்திரைத் தூதர் முஹம்மது நபியைத் தவிர! காரணம்,நெருங்கிப் பழகியவர்கள், அவரின் குறைகளையும் பலவீனங்களையும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா!
-------------------------

அந்த ஒப்பற்றப் பெயர் கூறப்பட்டால் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்கள் பயத்தால் நடுநடுங்கிப்போகும்! அவன் வார்த்தைகளை வாசித்துக் காண்பிக்கப்பட்டால் அந்த நல்லவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். மேலும், தங்கள் இரட்சகன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைத்து விடுவார்கள். (1)

அவன்தான் அர்ஷின் அதிபதி. அகில உலகங்களின் இரட்சகன். அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா! அவன் எல்லாம்  அறிந்தவன். எல்லாம்  வல்லவன். உயரிய புகழ், புகழ்ச்சிகள் அனைத்திற்கும் உரியவன். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா மொழிகளிலும் எல்லா நாவுகளாலும்  எல்லா உயிர்களாலும் துதிக்கப்படும் தூயோன் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா! அனைத்தையும் எந்தவிதமான முன்மாதிரியின்றிப் படைத்து, பரிபாலித்து, காத்துவரும் அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகன்! என்றும் நிலைத்தவன்!
--------------------------
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
அதிரைநிருபர் பதிப்பகம்

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது... 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2013 | , , ,

குறுந்தொடர் : 4
விரிந்து படர்ந்து கிடக்கும் விக்டோரியா ஐலேண்ட் செல்லும் பாதை எழிலாகவும் வனத்துடனும் காணப்பட்டது. விக்டோரியா ஐலேண்ட் பாலம் உலகிலயே நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நான் மட்டும் தனியாக சென்றதால் (‘தல’ என்னுடன் வரவில்லை) “மொபோ” வேண்டாம் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்பியவனாக  நன்கறிந்த வாகன ஓட்டியுடன் சென்றேன்.

அவரோ ரொம்ப(வே) நல்லவர் , இண்டியாவை காணவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் அவாவாம். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாய் கூறினார். எத்தனை பேரிடம் இந்த பிட்டையே போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.


லெக்கி பெனிசுலாவை நோக்கி பறக்கும் எங்கள் பயணம்…


வழியெங்கும் பச்சைப்பசேல்


ஐலேண்டில் உள்ள மூன்று முக்கிய கட்டிடங்கள்.

போகும் வழிகளெல்லாம் கால்முளைத்த வீடுகள் கடலில் இருப்பதைக் கண்டு என்னோடு வந்த (வாகன)ஓட்டியிடம் கேட்டேன். அவர் “இவைகளெல்லாம் மீனவர்களின் வீடுகள் இந்த கடலே அவர்களுக்கு எல்லாமே, ஆதலால் அதன் மீதே தம் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்கள்” என்றார். வக்கனையாக சமைத்து சாப்பிட மற்றவர்களுக்கு மீனை வாரி கொடுக்கும் இவர்கள் வாழ்வு அந்தரத்தில் தொங்குவது கண்டு பரிதாபமாக இருந்தது.


கால்முளைத்த வீடுகள் ஐபோன் பிக்சர்தான் தெளிவா இருக்கா ?

ஒரு வழியாக லெக்கி இலவச மண்டலத்தை அட அதாங்க ஃபீரிஜோன் (free zone) சென்றடைந்தாகிவிட்டது. அங்குமிங்குமான அலைச்சல்களுக்கு பின்னர் ஒரு நிறுவனத்தை கண்டு அது ரொம்பவும் பெரிதாக தெரிந்ததால் அங்கு சென்றோம்.

சந்திப்பின்போது,மெனேஜர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட ஒருவர் “உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்களிடம் சில மில்லியன் டாலர் பணம் உள்ளது நீங்கள் சப்ளை செய்யும் பொருட்களுக்கு பேமண்ட ஆக அதனை நாங்க உங்க அக்கவுண்டுக்கு மாற்றிவிடுகின்றோம்” என்றார். நானும் சந்தோஷமாக ஆஹா! ஒரு திமிங்கலத்தை அல்லவா பிடித்துவிட்டோம் என்று ஒரு செகண்ட சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார் “அதற்கு முன் நீங்கள் 4 கண்டெய்னர் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் அது எங்கள் போர்ட்டை அடைந்தவுடன் நாங்கள் பணத்தை அனுப்பி விடுக்கின்றோம்” என்றார். 

ஆஹா ஹாட்மெயில் அக்கவுண்ட் நான் 1999-ல் தொடங்கினதிலிருந்து வந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர், செத்துப் போய்ட்டார் என்று படித்து படித்து மனதில் பதிந்திருந்த அந்த பிம்பங்கள் உண்மை தோற்றங்களாக நம் முன்னிருப்பதைக் கண்டு ஆடிப்போய்விட்டேன். சமாளித்துக் கொண்டு நானும் அவரிடம் “துபாய் திரும்பியதும் எங்கள் நிதி ஆலோசர்களிடம் அப்ரூவல் வாங்கிவிட்டு உங்ளைத் தொடர்புக் கொள்கின்றேன்” என்று அவர்களின் வீட்டு வாயிலோடு சொன்னதை மறந்துவிட்டு ‘ஜூட்’ விட்டேன். பெரிய டீமையே அவர் வைத்துக் கொண்டு இதே தொழிலாகத்தான் திரிகிறார் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்திப்பிற்கு பிறகு காதில் கடித்தார்கள்.

இன்னும் சில மார்க்கெட்டுகளைப் பார்க்க வேண்டி உள்ளேயிருக்கும் சில ஏரியாக்களை வட்ட மடித்தோம். வறுமையின் கொடுமையையும், வாடிய முகங்களையும் காண சகிக்காமல் வண்டியை லாகோஸை நோக்கி திருப்பச் சொன்னேன்.


லெக்கியின் லக்கி மார்க்கெட்


பெரும்பாலான மக்களின் காலை உணவு விடுதி இதான்

லாகோஸ் வந்தடைந்ததும் ஒரு சில முன் அனுமதி பெற்ற சந்திப்புக்களை ஹோட்டலிலேயே முடித்துவிட்டு கொஞ்சம் இணக்கமாக நம்முடன் தொழில் செய்ய விரும்பியவர்களின் தகவல்களைத் திரட்டிக்கொண்டு ஹோட்டலை சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னரே காலி செய்து விட்டு ஏர்ப்போட்டில் போய் அமர்ந்துவிடலாம். இந்த ஹோட்டலுக்கு ஏர்ப்போர்ட் எவ்வளவோ மேல் என் தல கூறியதால், அனைத்தையும் பேக் செய்துவிட்டு ஆயத்தமானோம்.

நைஜீரிய காட்டுத்தேன் நல்லது என்பதால் ஒரு கிலோ வாங்கி என் ஹேண்ட லக்கேஜில் வைத்துக் கொண்டேன். ‘தல’ ஒரு 100 நைரா பணத்தை போர்டிங் கவுண்டரில் கொடுத்து எக்ஸிட் பக்கத்தில் சீட் வாங்கிவிட்டார்.


கிளம்புமுன் ஹோட்டலின் சன்னலிலிருந்து எடுத்தது


முர்த்தலா முகம்மது ஏர்ப்போர்ட்டில் புறப்படுமுன் நான், மிஸ்டர் போட்டோ ஜெனிக்க்கு தேவையான அடையாளம் ஏதும் உண்டா ?:)

சுங்க சோதனையில் சுரண்டி எடுத்து விட்டார்கள். எங்க வாப்பா பெயர் உடைய ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் “வாவ்” உன் வாப்பா பெயரும் என் பெயரும் சேம் சொல்லிவிட்டு ஆர் யூ முஸ்லிம்?? என்னிடம் கேட்டார் “ யெஸ்” என்றடவுடன் மாஷா அல்லாஹ்! என்று  மகிழ்ச்சியுடன் அவர் குத்திய ஸ்டாம்பில் எல்லாம் கேட்டிலேயும் கேள்விகள் எதுவும் இல்லாமல் வெளியேறினேன். 

கடைசியில் போர்டிங் போகுமுன் உள்ள செக்கிங்கில் ”தேன்” அனுமதியில்லை என்றனர், ”ஏன்” என்று காது புடைத்து கொண்டு கேட்கும் பழக்கம் இல்லாததால் ”என்ன தீர்வு” என கேட்டேன். அவர்களின் சைகளை புரிந்தவனாக, பெண்னொருத்தி “நீங்க அந்த பெரிய ஆபிஸரைப் போய் பாரும்” என்றார். கம்பீரமாக கன் செக்யூரிட்டியுடன் இருந்த அவரை தயக்கத்துடன் நெருங்கினேன், அவரோ “ஹவ் ஆர் யூ ?” என்றதும் நானும் பதிலளித்துவிட்டு சொன்னேன் ‘தேனை’ப்பற்றி அதற்கும் அவர் ”ஓ எமிரேட்ஸில் அனுமதிப்பது இல்லை” என்றார்.

நான் சொன்னேன் கொண்டு செல்ல வேண்டும் “1000 நைரா கொடுத்தா நேரா விட்டுர்ரேன்” என்றார். பயணிகளின் பாதுகாப்பு இந்த பணத்தால் காம்பரமைஸ் ஆகுதா ? என்று ஆச்சரியப்பட்டு விட்டு “என்னிடம் பணம் இல்லை ஒரு பாடி ஸ்பிரே உள்ளது அதை வேண்டுமென்றால் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள்” என்றேன். 

நமட்டுச் சிரிப்பை சிந்திய அந்த பெரிய ஆஃபிஸர் அதற்கும் இறங்கி வந்து அந்த 3$ மதிப்பு உள்ள ஸ்பிரேயைப் எடுத்துக்கொண்டு ”ஹே வ சேஃப் ஜோர்னி” என்று சொன்னவுடன் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமலே விமாப் பயணிகள் காத்திருப்பு பகுதியை நோக்கி நடந்தேன்.

எமிரேட்ஸில் ஏறியதும் நம் சொந்தவீட்டிற்கு வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு எல்லா பயணத்திலும் ஏற்படுகின்றது.

பயணத்தில் பல நன்மையான / தீமையான விசயங்கள் இருந்தாலும் பல படிப்பினைகளையும்,அனுபவங்களையும்,அல்லாஹ் நம்மை வைத்திருக்கும் உயர்வான நிலையை உணர்த்தி அவனுக்கு நன்றி மேலும் அதிகமாக செலுத்த காட்டித்தந்த நைஜீரியா பயணம் வாழ்வில் மறக்கமுடியாதது.

அல்லாஹ்வின் உதவியால் எல்லா நடைமுறைகளும் முடிந்து என்னுடைய முதல் இரண்டு கண்டெய்னர் ஆர்டர் இதனை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் சைனாவிலிருந்து கிளம்பிற்று,முதல் பயணத்திலயே ஒரு நாட்டில் அதுவும் நைஜீரியா போன்ற நாடுகளில் மொத்த வியாபாரம் கிடைப்பது என்பது சாத்தியம் குறைவு அல்லாஹ்வின் கிருபையால் என் விசயத்தில் அது நேர்மாற்றமாக இருந்தது.

எனக்கு இருக்கின்ற இருபத்தி நாலு மணிநேரத்தில் அலுவலக வேலையும் அனுபவச் சூழலையும் கோர்த்து எழுத அவகாசம் குறைவே, பயணம் மற்றும் மற்ற வேலைச் சூழலுமே இந்த பதிவுக்கான தாமதம்.

அடுத்து எத்தியோப்பிய பயணத்தைத் தொடரலாமா !?

முகமது யாசிர்

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2013 | , , , ,


சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் வரிசையில் அதிரைச் சூழலில் அதிகாலையும் அந்திமாலையும் அசத்தும் பகல் பொழுதும் ஒரே கேமராவில் சிக்கினால் இப்படித்தான் இருக்குமோ !?

கற்பனைக்கு கட்டுகள் இல்லை கற்பனைக்கு எட்டாததை எட்டிப்பிடிக்கும் சாமர்த்தியம், சாயும் பொழுதும் விழித்தெழும் பொழுதும் எப்படியிருந்தாலும் ரசனைக்கு கிடைத்த பரிசாகவே சிந்திக்கத் துணிந்தவர்களுக்குத் தெரியும்.

இனி உங்களின் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.

அஜ்மான் அழகிய கடற்கரை ஓரமாக அமைதியாக வாக்கிங் தாங்க போனேன் அப்படியே ரூட்டு மீன் மார்க்கெட்டை நோக்கி நடையை மாற்றியது!

வழிநெடுக சிதறிக் கிடந்த மீன்கள் என்னிடம் ஏதோ கேட்பது போன்று தோன்றியது, அது வேற ஒன்னுமில்லை...

"ஆக்குவாங்களா? பொரிப்பாங்களா? இல்லே காயப் போட்டுடுவாங்களா? ன்னு !?


நானும் உங்க கிட்டே விசாரிச்சு சொல்றேன்னு அப்படியே கேமராவில் புடிச்சுகிட்டு வந்துட்டேனுங்க !

ஷஃபி அஹ்மது

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2013 | , , , , , , ,


1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF!!!

தனி படுக்கையில்  அல்ல வாப்பா, உம்மாவுடன் கூட படுத்து உறங்கியவர்கள் தான் நாங்கள்•

எந்த வித உணவுப் பொருட்களும் எங்களுக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக நாங்கள் இருந்ததில்லை. 

சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை. 

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. 

கால்பந்தை காலிலும், கைப்பந்தை கையிலும் விளையாண்டு மகிழ்ந்தோம் கணினியிலல்ல. 

நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. 

தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் பிஸிலரி பாட்டில் வாட்டரை தேடியதில்லை. 

ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி வாய்வைத்து குடித்தாலும் நோய்கள் எங்களை தொற்றியதில்லை. 

அதிக அளவு இனிப்பு பண்டங்களையும், தட்டு நிறைய சோறும் சாப்பிட்டு வந்த போதிலும் ஓவர் குண்டாக இருந்ததில்லை. 

காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி விளையாண்டு வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை. 

சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை. 

உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள். 

எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்ந்தோம். 

எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும், கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல. 

அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை அழைக்க  "தம்பீ வாப்பா" என்ற ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட வேண்டிய அவசியமில்லை. 

உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஓடியதில்லை. 

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால்  செல்போன் மூலம் பரிமாறவில்லை.

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன்,  எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்பியூட்டர், லேப்டாப், நெட், சாட் போன்றவகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர். 

வேண்டும் பொழுது  நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை. 

எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர். 

ஓட்டு வீடாக இருந்தாலும் ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம். தனித்தனி வீடுகள் தேவையற்ற ஒன்றாக இருந்தது.

அடைமழை பெய்து ஈர விறகுகள் அடுப்பெரிக்க அடம்பிடித்தாலும் அன்றாட வீட்டின் சாப்பாட்டுத்தேவை சங்கடமில்லாமல் நிறைவேறியது. ஆனால் இன்றோ கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் வீட்டின் ஒட்டுமொத்த அமைதியும் தீர்ந்து விடுகிறது. 

ஒவ்வொருவரும் அவரவர் மதம் பேணி நடந்து வந்தோம். அண்ணன், தம்பிகளாக, மாமன், மச்சானாக பழகிய எங்களுக்குள் மதச்சண்டைகளின் அர்த்தம் என்னவென அறியாமல் அமைதியாய் வாழ்ந்து வந்தோம்.

யாரும் வழியில் ஆபத்தில், விபத்தில் சிக்கிக்கொண்டால் ஓடோடிச்சென்று உதவி செய்வோம். இன்றைய காலம் போல் வேடிக்கை மட்டும் பார்த்து செல்போனில் படம் எடுத்து வரமாட்டோம். 

உறவுகள் அருகில் இருந்தது அதனால் உள்ளம் நன்றாக இருந்தது. உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை.

மின்சார தடையால் எங்கள் அன்றாட தேவைகள் ஸ்தம்பித்துப்போனதில்லை. குளங்களுக்குச்சென்று உற்சாக குளியலுடன் உடல் நலம் பேணும் நீச்சல் பயிற்சியும் இலவசமாய் பெற்று வந்தோம். 

எந்தக்காய்ச்சல், உடல்நலக்குறைவுகள் வந்தாலும் ஒரு ஊசியுடன் ஓடிப்போனது. கண்டதுக்கும் ரத்தப்பரிசோதனை செய்து காசு பறிக்க ரத்தப்பரிசோதனை நிலையங்கள் கூட ஊரில் இல்லாமல் இருந்தது. 

ஏதோ உடலை மறைக்க உடையணிந்து வந்தோம். பிறர் பார்வைக்கு விருந்து படைக்கவல்ல. 

வருடம் முழுவதும் ஊரின் நிலத்தடி நீர் வற்றாமல் குளங்களில் நீர் இருந்தது. அடுத்த மாநிலங்களுடன் தண்ணீருக்கு மண்டியிட்டு போராடி நீதிமன்றங்களை நாடியதில்லை. 

சைக்கிளில் விபத்தின்றி ஊரையே சுற்றி வந்தோம். பெட்ரோல், டீசல் விலையேற்றமும், எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாமல் இருந்து வந்தோம். 

ஓட்டுக்கு காசு கொடுத்து பிறகு தேவைக்கு நாடிச்சென்று கையை கழுவும் அரசியல் அறியாமல் இருந்து வந்தோம்.

நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருந்தும் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே கண்களுக்கு தெரிகின்றன.

வசதி குறைவாக இருந்தாலும் இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை. 

அந்த பொற்காலங்களில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா? இல்லையா? என்பதை நீங்க தான் சொல்லனும்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

சினிமாவும் முஸ்லீம்களும் – சிந்திப்பதற்காக ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர்கள் துப்பாக்கியைத் தூக்கும்போதே சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும். இந்தச் சினிமா கலாச்சாரத் தீவிரவாதிகளையும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சிறையில் போட்டிருக்க வேண்டும். இப்போ பாருங்க விஸ்வரூபம் எடுத்து வீதிக்கு வந்து சினிமா கலாச்சார தீவிரவாதத்தை தூண்டிவிட்டு தனது சுயலாபத்திற்காக நீளிக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறார்கள் அவர்களின் ஆதரவாளர்களை. இந்த அயோக்கியர்களைச் சட்டம் தண்டிக்க கால அவகாசம் எடுத்தாலும் மக்கள் புறக்கனித்து தண்டித்தே ஆகவேண்டும்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத நினைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல இது என் ஆதங்கமும் கூட,

இந்தப் பதிவைப். படிக்கும் போது சினிமா பிரியர்களுக்குக்(!!) கோபம் வரலாம், கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள். 

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாத்துறை அழிந்து சீரழிந்து வரும் துறையாகவே இருந்து வருகிறது. சினிமா ஒரு கலையே அல்ல. அன்மைகால சினிமாக்கள் கேடுகெட்டக் காமக்கூத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்ட கற்பனையின் மூலம் உப்புக்குச்சப்பானியாக ஒரு சில கலைகளை (நடிப்பு, நடனம், இசை, வீரசாகச விளையாட்டு) உள்ளடக்கிய கலவைதான் சினிமா. இதை கலை என்று ஒருவன் சொன்னால் நிச்சயம் அவன் பைத்தியக்காரனாவே இருப்பான். 

இது ஒரு பக்கம் இருந்தாலும். கேடுகெட்ட சினிமா என்ற ஊடகம் சக்திவாய்ந்ததாக உருமாறியிருப்பதற்கு மிகப்பெரிய காரணம். மனிதன் நடைமுறையில் வாழ்வில் சாதிக்க முடியாததைக் கற்பனையின் மூலம் அவைகளை சாதித்து காட்டும் காட்சியமைப்புகளே அதிகம் இடம்பெறுவதால், சினிமா மக்கள் மனத்தில் இடம்பிடித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஒரு சிறிய உதாரணம்: இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுகிறான், நேர்முக தேர்வுக்கு செல்கிறான், தோல்வியை சந்திக்கிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். உடனே நேர்முக தேர்வு எடுப்பவர் நம்மை தோல்வியுற செய்யவேண்டும் என்ற தொணியில் கேள்வி கேட்பார், அவரைச் ஷூவைக் கழட்டி அடிக்கனும் போல் இருக்கும், நம்மிடம் இருக்கும் சர்டிபிகேட்களை கிழித்து அவர் மேல் தூக்கி வீசவேண்டும் என்பது போல் இருக்கும். நடைமுறையில் அப்படி செய்ய முடியாது. ஆனால் உங்கள் அபிமான ஹீரோ சினிமாவில் வேலை தேடுவார், நேர்முகத் தேர்வில் தோல்வியுறுவார், உடனே தான் போட்டிருக்கும் ஷூவால் தேர்வாளரை அடிப்பார், தன் கையிலிருக்கும் சர்டிபிகேட்டை கிழித்து அவர் முகத்தில் எறிவார். நடைமுறையில் செய்யமுடியாததைச் சினிமாவில் செய்து காட்டுவதால் சினிமா மக்களின் கற்பனைக்குக் காட்சியமைத்து காட்டுவதை கற்பனையில் செய்யத்துடிக்கும் ஒவ்வொருத்தனும் ரசிக்கிறான். இதுவே சினிமாவின் வெற்றியின் ரகசியம். ஆனால் அந்த அபிமான ஹீரோ செய்த வன்முறை செயலை நியாப்படுத்தும் காட்சியே இருக்குமே தவிர, அந்த வன்முறை காட்சிக்கு பிறகு யதார்த்த உலகில் நடப்பவை பற்றி காண்பிக்க மாட்டார்கள்.

இது போல் சாதாரண நம்முடைய வாழ்வில் நாம் சாதிக்க முடியாத அனுபவிக்க முடியாதவைகள், தடை செய்யப்பட்ட விரும்பியவைகள் அனைத்தையும் கற்பனை மட்டுமே செய்ய முடியும், அவைகளை அபிமான ஹீரோ சினிமாவில் செய்வதால் நாம் ரசிக்கிறோமே தவிர, வேறு என்ன இந்த சினிமாவில் நன்மையுள்ளது?

நாகரீகம் 21ம் நூற்றாண்டு என்று தங்களை முற்போக்கு சிந்தனைவாதிகள் பீற்றிக்கொள்ளும் பிற்போக்கு அதிமேதாவிகள் நிறைந்தது இவ்வுலகம். கனவு, கற்பனை மூலம் காலத்தில் கழிப்பதில் மட்டுமே அநேக மனிதர்கள் விரும்புகிறார்கள். நம்மை இவ்வுலகில் படைத்த ஒரு சக்தி இறைவன் என்கிற ஒரு வினாடி சிந்தனைகூட மனிதனின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகிவிட்டது சினிமா கற்பனை அடிமைகளிடம். கேடுகெட்ட சினிமா மனித சமூகத்தில் சாதித்ததைவிட சீரழித்ததே அதிகம் என்பது வரலாறு.

சினிமாதுறையில் உள்ள எத்தனை பேர் ஒழுக்க சீர்கேடுகளின்றி வாழ்கிறார்கள்? என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த மிகப்பெரியச் சாபக்கேடு தமிழ் சினிமா. இறுதியில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. என் டி இராமராவுக்கு பிறகு ஆந்திராவில் சினிமா கூத்தாடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வபோது முஸ்லீம்களைச் சீண்டி தங்களின் வருமானத்தை பெருக்குவதில் சினிமாக்காரர்கள் கில்லாடிகளாகவே இருந்துள்ளார்கள். அந்த கில்லாடி லிஸ்டில் முன்னணியில் இருப்பவர் உலக ‘நாய்’கன் என்று இணையதளங்களில் தற்போது சித்தரிக்கப்படும் கமல் என்ற 'காம'ஹாசன்.  இவரின் வி(ச)சுவரூபம் என்ற திரைப்படம் முஸ்லீம்களை இதுவரை சினிமாவில் சித்தரிக்காத வகையில் படுமோசமாக சித்தரித்துள்ளது. சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ளது.

விசரூபத்தை தடை செய்யக்கோரி பலமுனை கண்டன தாக்குதல்கள் பத்திரிகை செய்தி மூலமும், இணையதளங்கள் மூலமும், ஒலி ஒளி ஊடகங்களிலும் உரக்க ஒலித்தாலும். முஸ்லீம்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள் நிறைய உள்ளது. 
  • காம கூத்துகள், வன்முறை வெறியாட்டங்கள் நிறைந்த சினிமாவை வெறுத்த முஸ்லீம்கள் எத்தனை பேர்.?
  • சினிமாவோடு சம்பத்தப்பட்ட பெயர் தாங்கி முஸ்லீம்களின் சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்டவர்கள் பலராகவே இன்றைய முஸ்லீம்கள். உதாரணமாக ஏ ஆர் ரஹ்மானின் சினிமா இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்? சினிமா கூத்தாடிகளுக்கு துணை நிற்கும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தும் ஆனந்த கண்ணீர் விட்டவர்களின் முஸ்லீம்களே அதிகம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
  • சினிமா பாடல்கள், சினிமா பாடல் தொடர்பான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்காத, கேட்காத, வெறுக்காத முஸ்லீம்கள் எத்தனை பேர்?
இப்படி சினிமாவோடு தொடர்புபடுத்தி கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கலாம். சினிமா நம்மை எவ்வளவு மூடர்களாக்கி விட்டது சிந்திருக்கிறோமா? ஆனால் முஸ்லீம்களாகிய நாம் பல சந்தர்பங்களில் உணர்ச்சிவசப்படுகிறோமே தவிர சிந்திக்க தவறுகிறோம்.

“முஸ்லீம்களும் இஸ்லாமிய சினிமா எடுக்க வேண்டும்” என்று சகோதரர் ஆளூர் நவாஸ், இலங்கையை சேர்ந்த ஓர் அமைப்பும் முயற்சி செய்து வருகிறார்கள். ஷியாக்கள் எடுக்கும் இரானிய சினிமாக்களை இஸ்லாமிய சினிமா என்று உதரணம் காட்டி, இஸ்லாமிய சினிமா அவசியம் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இஸ்லாம் வெறுத்த பொய்யான கற்பனை, நடனம், இசை, நகைச்சுவை இல்லாமல் சினிமா அன்மைகாலத்தில் சாத்தியமா, மக்களிடம் சென்றடையுமா? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா இப்படி இப்படி என்று அவரை உயரமற்றவர் எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள் 'நீங்கள் இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும் என்று சொன்னார்கள். (ஒரு தடவை) நபியவர்களிடம் ஒருவரின் செயலை செய்து காட்டினேன். ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆதாரம்:அபூதாவூத்-4875

இந்த ஹதீதில் இரண்டு விசயங்கள் புலப்படுகிறது.

1. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் அன்னை ஸபிய்யா(ரழி) அவர்கள் இப்படி இருப்பார்கள், அப்படி இருப்பார்கள் என்று சொல்லி செய்து காட்டியதை வன்மையாக கண்டிக்கும் விதமாக, ஆயிசா(ரழி) அவர்கள் சொன்ன வார்த்தையைக் கடலில் கலந்தால் கடல் நாற்றமெடுக்கும் என்று கடுஞ்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஒருவரை போன்று நடித்து காட்டுவதையும், பழித்துக்காட்டுவதையும் இங்கு நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

2. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் ஒருவரை போல் நடித்து காட்டியபோது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஒருவர் போல் நடித்து காட்டுவதற்கு எனக்கு எவ்வளவு தான் (இவ்வுலகில் செல்வமாகவோ, பணமாகவோ) எனக்கு கிடைத்தாலும் நான் அதை விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நடித்துக்காட்டுவதை விரும்பவில்லை, வெறுத்துள்ளார்கள் என்பது நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

நம்முடைய உயிருனும் மேலான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறர் நடிப்பதை தடுத்துள்ளார்கள், தானும் பிறர் போல் நடித்துக் காட்டுவதை வெறுத்துள்ளார்கள் என்று ஹதீஸின் மூலம் அறிந்த பிறகும், நடிப்போடு தொடர்புடைய இசை, சினிமா, சீரியல், நகைச்சுவை காட்சிகள் என்று நவீன சைத்தானிய ஊடகத்திலிருந்து நம்மை தூரமாக்கினால் மட்டுமே சினிமா என்ற கேடுகெட்ட ஊடகத்தை அழித்தொழிக்க வலுவான சக்தியாக முஸ்லீம்கள் உருவாக முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியதை விரும்பி செய்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க முடியுமே தவிர, நபி (ஸல்) அவர்கள் விரும்பாத, வெறுத்த செயல்களை விரும்பி செய்பவன் உண்மை முஸ்லீமாக இருக்க முடியாது என்ற கருத்தை இங்கு உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

குர் ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் காட்டித்தந்த தூய வழியில் நம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டால் மட்டுமே அல்லாஹ்வின் நல்லருள் கிடைக்கும். அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக.

இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி,  சினிமா பார்ப்பதால் குறைந்தபட்சம் 5 நன்மைகள் உங்களால் கூற முடியுமா?

விரும்பினால் கருத்துப் பெட்டியில் பதில் தரலாம்.

M.தாஜுதீன்

முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! தொடர்கிறது... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2013 | , ,

மரியாதைக்குரிய ஆசான் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...!

டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் (அதே): 
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !

பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

01) டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

02) Membership of the order of Australia என்ற விருது சில மாதங்களுக்கு முன்னர் இந்திய விளையாட்டு வீரருக்கு வழங்கப்பட்டது? அவர் யார்?

03) FDI, RBI, AM என்பதற்கு விரிவாக்கம் (Abbreviation) என்ன?

04) தமிழ்நாட்டிலுள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகள் எத்தனை?

05) ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?

06) ஐக்கிய நாட்டுகள் சபையின் தற்போதைய தலைமைச் செயலர் பெயர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

07) இந்திய ராஜ்ய சபையின் தற்போதைய தலைவர் யார்?

08) வக்கீல் என்பது எம்மொழிச் சொல்?

09) உலக சுகாதார தினம் எப்போது?

10) (இந்திய) தேசிய இளைஞர் தினம் எப்போது?

11) (இந்திய) தேசிய மகளிர் தினம் எப்போது?

12) யாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?

13) பின் வரும் சொற்றொடர்களுக்கு உரியவர்கள் யார்? 

“உழைப்பாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னரெ அவர்களது ஊதியத்தை வழங்கிவிடு”

“செய் அல்லது செத்து மடி”

14) இன்று மியான்மர் என்று அழைப்படும் நாட்டின் பழைய பெயர் என்ன?

15) இன்று ஈராக் என்று அழைக்கப்படும் நாட்டின் பழைய பெயர் என்ன?

அதிரைநிருபர் பதிப்பகம்

வளைகுடா விடுப்பு - பயணம் 3 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2013 | , ,


காலைப் பசியாறிவிட்டு “வெளியில் போயிட்டு வாரேன்” என்று அஹமது தனது மனைவி மற்றும் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். மச்சிமார்கள் இருவரும் ஊர் கதைகளையும் குடும்ப விசயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து ஆமினா கேட்டாள் “மச்சி நீங்க பட்டுப்புடவை எடுத்து இருக்கீங்களாமே? காட்டுங்களேன் பார்க்கலாம்!”

பாத்திமாவோ அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை சொலக்கென்றது ‘மச்சிக்கு எப்டி தெரியும்’ என்ற யோசனையோடு “எடுத்துக் கொண்டு வாரேன் மச்சி” என்று சொலேர்ப்பை வெளிக்காட்டாமல் பீரோவை நோக்கி நடந்தாள்.

புடவையை ஆமினாவிடம் கொடுக்க ஆமினா புடவை டிசைனை பார்ப்பதுபோல் புடவையின் விலை அட்டையை தேடினால் அது ஒளிந்திருந்த அந்த அட்டையை மடிப்பை லேசாக விலக்கிப் பார்த்து ‘அப்பாடா நாம் கேள்வி பட்டது சரிதான்’ என்று மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள்.


“மச்சி புடவை எந்த கடையில் எடுத்தது?”

“போத்தீஸ்லதான் மச்சி”

“என்ன விலை?”

“அதான் இப்ப பாத்திங்களே!?”

 “நா பாக்கலமா… பட்டு ஜரிகையைத்தான் தொட்டு பார்த்தேன்” என்று சமாளித்தாள்.

“எட்டாயிரம் மச்சி, புடவை நல்லாயிருக்கா?”

“ம்ம்..”

“ஆட்டுதலை தலை, கொடலு ஊர்லேந்து தருவிக்கிறீங்களே ஏன் இங்கே கிடைக்காதா?”

“கெடைக்குது…. வக்குன தலை கிடைக்குறது இல்ல, தோல உறிச்சி கொடுத்துடுரானுவ ருசியே இருக்குறது இல்ல அதான்”

“அப்ப கொடல?”

“எனக்கு கொடல சரியா கலுவத் தெரியாது அதுனால உம்மா சுத்தம் பன்னி அனுப்புவாஹ..”

“கொடுவா பிஸ்க்குக்கூட அனுப்பிக்கிறாஹளே” விடாக் கொண்டி கேல்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

பதிலுக்கு பாத்திமாவும் (கொடாக் கொண்டி) விடவில்லை பதில் சொல்வதை தொடர்ந்தாள்.

“அது உங்களுக்கு பொரிச்சிக் குடுக்கத்தான்” என்று சமாளித்தாள்.

மச்சிமார்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வெளியில் சென்ற அஹமது திரும்பி வந்துவிட்டார்.

“என்னம்மா மச்சிமார்கள் இரண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க?”

“சும்மா மதராஸ் எப்டியிருக்கு அதிராம்பட்டினத்துல நடந்த விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்” 

“சரி, மதராஸை சென்னைன்னு பேர் மாத்தி ரொம்ப நாளாச்சு இன்னும் மதராஸ்சுன்னே சொல்லிக்கிட்டு இருக்கியே?”

“நா சொல்லுறதுல உங்களுக்கு என்ன கஸ்டம்?”

“சரி சொல்லிக்கோ.”

“சரி எங்கே போய்ட்டு வர்ரீங்க?”

“ஃபிரண்ட்ஸை சந்திச்சேன் 10வது கூட பாஸ் பண்ணாதவங்கள் கூட நல்ல வசதியா இருக்கானுவ மாப்ள நீயும் சென்னையிலேயே செட்டில் ஆகுடா நிறைய வியாபாரங்கள் இருக்குன்னு சொல்றானுவ யோசனை பன்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.”

“ஆமாம் காக்கா நீங்க படித்தவர் ஏதாச்சும் வியாபாரம் பண்ணலாம்.”

“நீ என்னமா சொல்ற?” மனைவியை பார்த்து கேட்டார்.

“பாத்துமாவோட மாப்ளயும்தான் படிச்சவர்தான் இவ மட்டும் யான் லன்டனுக்கு அனுப்பிவச்சானு கேளுங்க?”

“இப்ப எதுக்கு தங்கச்சியோட சண்டைக்கு போர என் கேள்விக்கு பதில் சொல்” 

ஆனால் ஆமினா விடமிருந்து எந்த பதிலும் இல்லை. வியாபார சிந்தனை லேசாக மனதில் துளிர் விட்டு இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில் மனைவியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பேச்சை வேறு திசைக்கு திருப்பினான்.

“சாய்ங்காலம் ‘T’ நகர் போகலாமா?” என்று கேட்டார்.

“எதுக்கு காக்கா?” என்று தங்கை கேட்க…

“பெருநாள் வருதுல துணிமனி எடுக்கத்தான்”

“போகலாம் காக்கா”

“மருமகன் பள்ளி. சாரி காலேஜ் போயாச்சா?”

“ஆஆ போய்ட்டான்”

அசர் தொழுகையை முடித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து T-நகர் சென்றார்கள். ஆட்டோ சென்ட்ரலை தாண்டியதும் ஒரு கார் அவர்களை ஓவர் டேக் எடுத்து சென்றது பளபள வென இருந்தது. அந்த வெளிநாட்டுக் காரின் பின்புற கண்ணாடியில் ‘மாஷா அல்லாஹ்’ என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. 

“காக்கா முன்னாடி போறது யார் கார் தெரியுமா? நம்ம பெரியப்பா கொளுந்தியா மொவன் யூசுப்ட கார்.”

“அப்டியா! நானும் கேள்விப்பட்டேன் நல்ல வசதியாமே?”

“சார்” இது ஆட்டோ ஓட்டுனரின் குரல்…

“என்னப்பா?”

“என்ன சார் ஒங்க சொந்தக்காரர்னு சொல்ரீங்க இது கூட தெரியாதா? இந்த சென்னையில அவருக்கு காரு, பஸ்ஸு, வேனுன்னு, மொத்தம் 10,000த்திற்கு மேல் ஓடுது சார்.”

“அது எப்டீப்பா உனக்குத் தெரியும்?”

“சார் அவருடய வண்டிகள்ல பூரா அவங்க கம்பனி பேர் போட்டு இருக்கும் சார் அதகூட பாருங்க MASHA ALLAH ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு பாருங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அஹமது வாய் விட்டே சிறித்து விட்டார்.

“அது கம்பனி பெயர் இல்லப்பா இஸ்லாமியர்களாகிய நாங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசுகளை அதாவது வீடு, கார், பைக், இன்னும் இது போன்ற பொருள்களில் அல்லாஹ்வை புகழ்ந்து ‘மாஷா அல்லாஹ்’ என்று நன்றியை தெரிவிப்பதுண்டு அதன் பொருள் என்னவென்றால் ‘இறைவன் நாடியது நடந்தது”

அஹமதுவிற்குள் மீண்டும் துளிர் விட்ட சொந்த வியாபார ஆசை தன்னைவிட வயதில் 7 வருடம் குறைந்தவன் தான் யூசுப் 28 வயதிலேயே வியாபாரத்தில் முழு ஈடுபாடு 7-8 வருடம் ரொம்ப சிரமப்பட்டான். அதன் பிறகு நானும் வெளி நாட்டு சபுராளியாக ஆனதால் அவன் வளர்ச்சி தெரியவில்லை. பரவாயில்லை உழைப்புக்கேற்ற ஊதியம் மரம் வளர்த்ததின் பலன் எப்படியாவது மனைவியை ஒத்துக் கொள்ள வைத்து உள் நாட்டிலேயே தொழில் செய்திட வேண்டியதுதான் மனதிற்குள் நினைத்து கொண்டான்.
பயணம் தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 5 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2013 | , ,

தொடர் : ஐந்து
மதங்களும் பொருளாதார இயலும் (தொடர்ச்சி)...

இந்தத் தொடரில் புத்த மதம், ஜைன மதம், கிருத்துவ மதம் ஆகிய மதங்கள் கூறும் பொருளாதாரக் கோட்பாடுகளைப் பார்த்த பின்பு தொடர்ந்து மேலும் சில மதங்கள் மற்றும் மதங்கள் சாராத “இசங்கள் “ என்னவெல்லாம் கூறுகின்றன அவற்றுள் என்னவெல்லாம் நடந்தன என்பவைகளையும் தொடர்ந்து பார்க்கலாம். 

இந்து மதம்:-

இந்து மதம் உலகின் புராதான மதங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இந்த மதத்தின்   கடவுள் பற்றிய கொள்கைகளை ஆராய்வது நமது குறிக்கோள் அல்ல. பொருளாதாரம் பற்றி என்ன சொல்கிறது என்பதே நமது நோக்கம். ஆனாலும் பொருளாதாரம் பற்றிய நமது ஆய்வுக்காக இதன்  கடவுள்கள் மற்றும் மகான்கள்  என்று கருதப்படுவோர்களும் உபதேசித்த வேதங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், போதனைகள்  ஆகியவைகளில்  கூறப்படுபவைகளை  நாம் துரதிஷ்டவசமாக தொட்டே செல்ல வேண்டி வரும். 

முதலாவதாக சில  வரலாற்று உண்மைகளைச்  சொல்லவேண்டும்.  முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றி கொள்வதற்கு முன்பாக இந்து எனும் இந்த வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ, வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதங்கள் மற்றும் வேதங்கள் பற்றிய கலைக் களஞ்சியங்கள் (Encyclopedia ) உறுதி செய்கின்றன. 

மேலும் பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது நூலாகிய (Discovery of India) டிஸ்கவரி ஆஃப் இந்தியா –வில்  “  ஒரு மதம் சாராத  ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தையே இந்து என்பது” என்று கூறுகிறார். இந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது அரசியல் மற்றும் சமூக சதிகளின்  காரணங்களுக்காக ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரம் தருகின்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எல்லைக்குள்  வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம், கிருத்துவ, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி ஆகிய மதங்களைச் சார்ந்தோர் தவிர மற்ற அனைவருமே  இந்துக்கள் என்று அறிவித்ததன்  விளைவாக இந்து மதம் ஒரு பெரும்பானமையான மக்கள் பின்பற்றும் மதம் என்று சட்டப்படி ஆகி இருக்கிறது.  (Encyclopedia  Britanica  20:581). எனவே இது ஒரு சமைக்கப்பட்ட மதம்.  

நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்புவான்; தொழுவான். ஒரு கிருத்துவன் இயேசுவை நம்புவான்; துதிப்பான். ஒரு புத்தன் புத்தரை  நம்புவான் வணங்குவான். ஆனால் இந்து மதத்தில் இருக்கிறவர்களில் பலர்  அந்த இந்து  மதத்தில் சொல்லப்படும் பல கடவுள்களை வணங்கினாலும் அல்லது  எந்தக் கடவுளையும் நம்பாவிட்டாலும் , வணங்காவிட்டாலும் கூட அவர்கள்  புள்ளி விபரப்படி அரசுகளின் ஆவணங்களின்படி  இந்துவே ஆவார்கள்.  அந்த வகையில் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் உயர்பதவி வகித்த சில உயர் சாதிக்காரர்களால் புகுத்தப் பட்ட வார்த்தைதான் இந்து மதம் என்பது.

மொத்தத்தில் சைவ மதம், வைணவ மதம், புத்தமதத்தில் இருந்தும் ஜைன மதத்தில் இருந்தும் மதம் மாறிவந்தவர்கள் , தாழ்த்தப் பட்டோர், மத நம்பிக்கை அற்றோர்  ஆகியவற்றின் கூட்டே இந்துமதம் ஆகும்.  ஏனெனில் ஒரே கலாச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக  இந்துமத தத்துவங்கள்  உள்ளன. இதற்கு என சொந்தமாக எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ வரலாற்றில்  இல்லை. 

எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. சைவர்களுக்கென்றும் வைணவர்களுக்கென்றும் உயர்சாதியினருக்கென்றும் தாழ்த்தபபட்டவர்களுக்கென்றும் தனித்தனியான வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் உள்ளன. பல்வேறு கடவுள்களையும் பல்வேறு சடங்குகளையும் வழிபடும் முறைகளையுமே கடைப்பிடிக்கின்றனர்.  உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் கருப்பண்ண சாமி, மாயன், மாடன், காளி  ஆகிய கடவுள்களை பிராமணர்கள் வழிபடுவது இல்லை.    இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எண்ணற்ற கடவுள்களில் எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும். அதுவும் போக அந்த மதத்தின் சடங்குகள்  என்று கூறப்படுபவைகளை எதிர்த்தும் விமர்சித்தும்  பொது  மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசுபவர்களும் எழுதுபவர்களும்  கணிசமாக இருககிறார்கள் இவர்கள் நாத்திகர்கள் என்று அழைக்கப் பட்டாலும் அரசின் ஆவணங்களில்  அவர்களும் இந்துக்களின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்படுகிறார்கள். 

எனக்குத்தெரிந்து ஒரு ஊரில் ஒரு பெரிய குடும்பம் இருந்தது. மிகத் திரண்ட சொத்தும் இருந்தது. அந்தக் குடும்பத்தலைவருக்கு ஐந்து  மனைவிகள்; முப்பது  சகோதர சகோதரிகள்;  மொத்தத்தில் அவருக்கு எழுபத்தாறு  பிள்ளைகள். பேரன் பேத்திகள்  மற்றும் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளும் சேர்ந்து தலைகளை எண்ண இயலாத   அளவுக்கு எண்ணிக்கை உள்ள குடும்பம். இறுதியில் குடும்பத்தலைவர் இறந்துவிட்டார். இருந்த சொத்துக்களை பங்கிட்ட போது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து தென்னை மரங்களும் இரண்டு பனை மரங்களுமே ஒதுங்கின. இதே நிலைமைதான் இந்து மதத்தின் எல்லா சதி , உள் சாதி, இன, குலப் பிரிவுகளை சட்ட பூர்வமாகப்   பிரித்தாலும்  ஏற்படும் .அதன் மெஜாரிட்டி நிலையும் கேள்விக்குறியாகிவிடும்.     

 பொதுவான பல   இந்து  அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம்  சாதாரண நடைமுறை  தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் தொன்மையான வேத தர்மங்களைக் கூறுவது என அறிகிறோம். . இந்து மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரையும் வரலாறு சுட்டிக்காட்டவில்லை.   பல அவதாரங்கள் எடுத்த கடவுள்களில் ராமர் மற்றும்  கிருஷணர் என்கிற அவதாரங்களை  முன்னிலைப் படுத்துகிறது.  ஆயினும்  ராமர் உடைய வாழ்வின் வரலாறு அல்லது கதை என்கிற வடிவத்தைத் தவிர போதனைகளாக எதையும் தொகுத்துக்  கூறவில்லை. ராமர் உடைய வரலாறும் பல மொழிகளில் பலவாறாகப் படைக்கப்பட்டு இருக்கின்றன.  ஆனால் கிருஷ்ணர் வழங்கியதாக பகவத் கீதை என்கிற உபதேசங்களை வழங்குகிறது. இவை போக நான்கு வகை வேதங்களைக் கூறுகிறது . நான்கும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. அனைத்து இந்துக்களும் இவற்றை கடைப்பிடிப்பதில்லை. சகிப்புத்தன்மை நிறைந்த இந்த மதத்தில் பல தன்னலமற்ற  துறவிகள்  தோன்றி நல்லவைகளை உபதேசித்தனர். அவர்களில் வீரத்துறவி என்று போற்றப்படும்  விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர். இந்த மதத்தில் ஆணிவேராக மனுநீதியால் காட்டப்பட்டு   இருந்த இருக்கிற சாதி இனப் பாகுபாடுகளைக் களைய தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் பல இயக்கங்கள் கண்டு கல்வி, மருத்துவம், சமரசம், சாதி ஒழிப்பு ஆகியவைகளை போதித்தார்கள். ஆனால் இந்த மதத்தைப் பின்பற்றுகிற மக்களின் தொகையின் அளவுக்கு அவை அவர்களிடம் சென்று சேரவில்லை என்பதே வருந்தக் கூடிய செய்தியாகும்.   அப்படிப்பட்ட பல மகான்களின் கருத்துக்களின் போதனையின் அடிப்படையில்  இந்துவாகப் பிறப்பவர்கள் நம்ப வேண்டிய கொள்கை கர்மா என்பதாகும்.

ஒரு மனிதன் இந்த உலகில் தனக்கு வித்திக்கப்பட்ட கடைமைகளைச் செய்ய முனையும்போது, சில செயல்களை செய்ய நேரிடுகிறது. அதைத்தான் கர்மா என்று சொல்கிறார்கள். இந்த கர்மாவின் விளைவுகளே பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுகிறது. நாம் இறந்த பிறகும் இந்தப் பாவமும் புண்ணியமும் நம்மைத் தொடர்வதாகவும் அவற்றை பல பிறவிகள் எடுத்து அனுபவித்து கழிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்கள் இதைப் பிறவிப் பிணி என்று சொன்னார்கள். ஆகவே பிறப்பதே பிணி. திருவள்ளுவர் கூட பிறவிப் பெருங்கடல் என்றார்.  

ஒருவர் உண்மையான இந்துவா என்பது அவரின் சமூகப் பொருளாதார பின்பற்றுதலின்படி அமைவது அல்ல.  அவர் செய்யும் கர்மா என்கிற காரியங்களைப் பொறுத்து இறைவனே படைத்து இருப்பதாகக் கூறப்படும் இனத்தில் அல்லது குலத்தில் பிறப்பார். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் நேரடியாக மோட்சம் என்கிற இறைவனின் அன்பைப் பெற்று உயர்வார்கள். மற்ற இழி குலத்தில் பிறந்தவர்கள் ஏழு பிறவிகள் பிறந்து நல்ல காரியங்களைச் செய்து கடவுளின் அன்பைப் பெற்று மோட்சம் பெற முடியும்.    அதாவது ஒருவரது உயர்வும் தாழ்வும் அவர் செய்யும் காரியத்தை வைத்து கணிக்கப்படாது. அவர் பிறந்த குலத்தைவைத்தே கணிக்கப்படும். ஒரு பிறவியே பிணி என்று இருக்கும் போது ஏழு பிறவிகள் பிறந்தாக வேண்டுமென்பதை  அவர்களில் பலரே  விமர்சனம் செய்தார்கள்.  மேலும் நமது செயல்களின் மூலம் நம்முடைய அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் உருவாகிறது. நமது முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து நாம் அனுபவிக்க வேண்டியதை நாம் பிறப்புக்கு முன்பே  நிர்ணயம் செய்யப்பட்டுக் கொண்டு பிறக்கிறோம். இதுவே ப்ரராப்த கர்மா என்று கூறப்படுகிறது. 

ஒவ்வொருவரின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை அவர் பிறக்கும்  முன்பே கடவுள் நிர்ணயித்துவிடுகிறார். இதுவே தலை விதி என்று கூறப்படுகிறது. அந்த விதியின் ரேகைகள் அவர்களின் கரங்களில் பதியப்படுகின்றன.  திருமணங்கள் கூட சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன எனப்படும்  வாசகங்கள் இந்துக்களைப் பொருத்தவரை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.  “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே  தேவன்  அன்று” என்று பாடுகிறார்கள். “ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று ஆடுகிறார்கள். நல்லநிலையில் இருப்பவனை அதிர்ஷ்டக்காரன் என்றும் துன்பத்தில் உழல்பவனை ராசி இல்லாதவன் என்றும் நம்புகிறார்கள். இன்று பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அவர்களின் வாழ்வு எப்படி அமையுமென்று என்றோ ஓலைச்சுவடிகளில் கணிக்கப்பட்டு வைத்தீஸ்வரன் கோயிலில் பத்திரமாக இருப்பதாக நம்புகிறார்கள்.  

சாதி வர்ணப் பாகுபாடுகளால் சமுதாயம் பிளந்து கிடந்தது.  புரையோடிப்போன இந்தப் பிளவுகளால் மேன்மையான மனித வளம் என்கிற  பொருளாதார மூல வளம் முழுதுமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.   மேன்மை அடைய உழைக்க வேண்டிய ஆண் வர்க்கம் சாதி குலத் தொழில்களால் சமத்துவமின்றி பிரிந்து கிடந்தது. பெண் வர்க்கம் ஆண்களின் ஆதிக்கத்துக்கு அடிமையாக  வாழ்ந்தது. பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றான மனித வளம் இனம் மற்றும் குலங்களால் பிளவு பட்டு "இவன் இதுக்கு  இலாயக்குப் பட்டு வர மாட்டான்” என்று ஒதுக்கி வைக்கப்பட்டனர். “ நான் எதுக்குடா இலாயக்குப்ப்பட மாட்டேன்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே ஒரு சமுதாயம் விடை இன்றி அலைந்தது.  

இப்படி இருந்த நிலையில் தான் ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. சமயங்களை சாஸ்திரங்களில் இருந்து சட்ட வடிவாக மாற்ற இந்து சாஸ்திரங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பல சட்டங்கள் இயற்ற அடிக்கல் நாட்டப் பட்டது. அதன் பிறகு சுதந்திரத்துக்குப் பிறகு சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கார் தனது பதவியைப் பயன்படுத்தி பல சமுதாய மறுமலர்ச்சிக்கான சட்டங்களை அமுல படுத்தத் தொடங்கினார். ஆனால் உயர்சாதியினரின் எதிர்ப்பால் அவர் பதவி விலக நேரிட்டது.  இதனால்தான் டாக்டர் அம்பேத்கார் “இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல; அது ஒரு சட்ட விதிகள். சட்டத்திற்கு மதம் என்று தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவன் என்று தன்னை எல்லோரும் புகழ்வதாகவும் அந்தப் பெருமைக்குத் தான் மகிழ்ச்சி அடையவில்லை என்றும், தானே எழுதிய இந்திய அரசியல்   சட்டத்தை தீ வைத்துக் கொளுத்துவதாக இருந்தால் தானே அதன் முதல் ஆளாக இருப்பேன் என்றும் பாராளுமன்றத்தில் மனம் நொந்து  கூறினார்.  இதற்குக் காரணம் சட்ட அமைச்சர் என்ற முறையில் மனசாட்சிப்படி அவரால் பதவியின் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. 

ஆனாலும் இந்து மத வேத , உபநிஷதங்கள்,சாஸ்திரங்களின் அடிப்படையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.  இந்து மதத்தில் வாழ்ந்த மக்களின் பொருளாதாரம் தொடர்புடையவைகளை    அத்தகைய சட்டங்கள் ஒழுங்கு படுத்தின . அவை:- 
  • இந்து திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான இந்து திருமண சட்டம். (Hindu  Marriages Act )
  • இந்து இறங்குரிமை சட்டம் ( Interstate Succession Act )
  • இந்து இளவர் மற்றும் இரட்சணை சட்டம் ( Minorities and Guardianship Act)
  • இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் (Adoptions  and Maintenance Act)
  • இந்து உயில்வழி இறங்குரிமை சட்டம் (Testamentary Succession Act )
  • இந்து இறங்குரிமை சட்டம் (Indian Succession Act ).
  • இந்து கூட்டுக் குடும்ப சட்டம் ( Joint Family Act )

இவைகளைத் தவிர முஸ்லிம், கிருத்துவ, சீக்கியர்களுக்கென மத சம்பிரதாயங்களை  உள்ளடக்கிய தனி சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்து மதத்துக்கென்று நாடு முழுதுக்குமான  பொது  சட்டங்களும் மேலே கண்ட சிறப்பு சட்டங்களும் இயற்றப்பட்டன.  

ஆகவே இங்கு நாம் சொல்ல வருவது துறவறத்தையும் ஆசையறுத்தலையும் சகிப்புத்தன்மையையும் பொதுவான ஒழுக்கத்தையும்  வற்புறுத்தியதைத் தவிர இந்து மதப் பொருளாதாரக் கோட்பாடுகள் என்று சிறப்பான குறிப்புகள் அந்த மதத்தின் வேதங்களில் காணப்படவில்லை. நாட்டுக்குப் பொதுவான சட்டங்களே பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்ணயித்தன. மக்களும் பின்பற்றினர்; விமர்சித்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர்.  அதே நேரம் ஒரு மிகப் பெரும் பொருளாதார முடக்கம் அல்லது உற்பத்தியற்ற செல்வ முடக்கம்  இந்து மதத்தின் மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை என்கிற  பெயரால் ஏற்பட்டதை குறிப்பிட்டே ஆகவேண்டும். 

நாட்டின் செல்வம் ஒரு சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிந்து போய் இருக்கிறது என்று கூச்சல் போடப்படுகிறது. டாடா , பிர்லா , அம்பானி , கோயங்கா, இந்துஜா, மிட்டல்  என்று பெரும்பனக்காரகளின்  பட்டியல் வெளியாகிறது. இந்தப் பணக்காரர்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தைவைத்துப் பல தொழில்கள் செய்கிறார்கள். பலருக்கு வேலை கொடுக்கிறார்கள். பொருளாதார சுழற்சி , புதிய தொழிற்சாலைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆனால் இந்து கடவுள்கள் என்று கூறப்படும் திருப்பதி வெங்கடாசலபதிக்கும், அனந்த பத்மனாபசாமிக்கும் கணக்கிடவே முடியாத அளவு தங்கமும் வைர வைடூரிய  நகைகளும் பணமும் குவிந்து கிடக்கின்றன. 

திருவனந்தபுரம் அனந்த பத்மனாபசாமி கோயிலில் அண்மையில் தோண்டி எடுக்கப் பட்ட புதையலில் கண்டெடுக்கப்பட்ட வைர வைடூரிய தங்க நகைகளின் மதிப்பு நூறு ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டு இருககிறார்கள். திருப்பதி கோயிலின் சொத்துக்கள் பல  லட்சம் கோடி பெறுமானம் உள்ளவை. 4,200 ஏக்கர நிலமும்  12,000 கிலோ தங்கமும்  11,000 கிலோ வெள்ளியும் தற்போது திருப்பதி கோயிலுக்கு சொந்தமானவை. இந்தக் கோயிலில் எண்ண முடியாமல் இருக்கும் நாணயங்கள் மட்டும் பத்து டன் எடை இருக்குமென்று 3/4/2012- ஆம் தேதி கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த செல்வங்கள் கடவுல்களுக்குச் சொந்தமானவை. ஆனால் உற்பத்திக்கு உதவாமல் முடக்கப்பட்டு மூலையில் கிடக்கின்றன.    இந்த திரண்ட சொத்துக்களும் செல்வமும்  நாட்டுக்கு நலனுக்கு அந்த கடவுள்களின் பெயராலேயே உபயோகப்படுத்தப் பட்டால் அடிக்கடி எரி பொருள் விலைகளைக் கூட்ட அவசியம் இருக்காது. குடிநீருக்காக மக்கள் குடத்துடன் அலைய வேண்டிய நிலை  ஏற்படாது. நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அந்த செல்வங்களை பறிமுதல் செய்யவேண்டுமென்று கூறவரவில்லை ( சிவன் சொத்து குல நாசம் என்று அதற்கு ஒரு பழமொழி வைத்து இருக்கிறார்கள்) .மாறாக  உலகவங்கியில் அந்த சொத்துக்களை பிணையாகக் காட்டி பெரும் மக்கள் நல  உதவிகள் பெறலாமே!  இந்த மாதிரியான துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் வண்ணம் புத்திசாலித்தனமாக யோசிக்கும் அரசுகள் அமையாதது நாட்டின் துரதிஷ்டமே.  மதவாதிகளும் இப்படி பெரும் செல்வம் முடங்கிப் போய் கிடப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். 

இவை மட்டுமல்லாமல் பிள்ளைகளோ சொந்தங்களோ இல்லாவிட்டால் அல்லது கோபத்தின் காரணமாக  சொத்துக்களை கோயில்களுக்கு  எழுதிவைக்கும் கலாச்சாரம் காசியிலிருந்து இராமேஸ்வரம் வரை நாடு முழுதும் பரவிக் கிடக்கிறது. அப்படி எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கள் சில செல்வாக்குடைய தனி நபர்களிடம் சிக்கி சீரழிகிறது. பல ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் நாடெங்கும் தரிசாகக் கிடக்கின்றன. இந்தக் கோயில்கள் பணக்காரக் கோயில்களாக இருப்பதைப் பற்றி நமக்குப் பொறாமையோ கருத்து மாறுபாடோ இல்லை. பொருளாதார ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு நாட்டின் பெரும் அளவு செல்வம் எவ்விதப் பயனும் இன்றி முடங்கிக் கிடக்கிறதே என்பதுதான் நமது ஆதங்கம். உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவவேண்டிய பிரம்மாண்டமான மதிப்புடைய (Capital)  முதல்,  புதையல் உருவில் பூமியில் புதைந்து கிடக்கிறதே என்பதுதான் ஒரு பொருளியல் வாதியின் கவலையாக இருக்க முடியும். Idle Capital என்பது வேறு;  Ideal Capital என்பது வேறு.

பொருளாதாரம் தொடர்புடைய இன்னும் சில இந்து மதக் கொள்கைகள், இந்து கூட்டுக் குடும்ப சட்டம், வாரிசுரிமை, பெண்களின் சொத்துரிமை, விதவைப் பெண்களின் சொத்துரிமை,   துறவறம் ஆகிய  இந்து மதம் குறிப்பிடும் இன்னும்  பல விபரங்களை   அடுத்த  அத்தியாயத்தில்  சொல்லலாம். (இப்பவே கண்ணைக் கட்டுதே).
தொடர்ந்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்
இபுராஹீம் அன்சாரி

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு.. 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2013 | , , , , ,


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் கடற்கரைத் தெருவிலுள்ள தர்ஹாவில் பெண்கள் தங்குவதற்காக மண்டபம் என்றொரு பகுதி உள்ளது. தர்ஹாவும் அதன் பெண்கள் பகுதியான மண்டபமும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டவை என்று கூறப்படுகிறது.

மண்டபத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், மண்டபத்தில் தங்கும் பெண்கள் அங்குள்ள ஓர் ஓரப்பகுதியை தங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 18.1.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுவதற்காகக் கடற்கரைத் தெரு ஜும்ஆப் பள்ளிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது!

தொழுகைப் பள்ளிக்குப் பின்புறத்திலுள்ள பெண்கள் மண்டபத்தில் கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. தொழுகை முடிந்து, அங்குச் சென்று பார்த்தபோது பல்லாண்டு காலமாகப் பெண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த இடத்தில் செங்கற்களைக் கொண்டு புதிதாகக் கபுரு ஒன்றைக் கட்டும் பணியில் பிறமதத்துப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாளான 19.1.2013 அன்று திடீர் கபுருக்கு சிமெண்ட் பூசும் வேலை நடந்தது. மறுநாள் 20.1.2013இல் டைல்ஸ் அலங்காரங்கள் பதிக்கப்பட்டன.

கூடிய விரைவில் அங்கு ஓர் உண்டியல் முளைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இருக்கின்ற சமாதிகள் போதாதென்று புதிதாக சமாதிகளை உருவாக்கி வயிறு வளர்க்கும் கூட்டம் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அவமானமாகும்.

நபி (ஸல்) கூறினார்கள் :

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ


"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளை மிதிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

அன்பான தாய்மார்களே!

அல்லாஹ்வின் தூதரின் சாபம் என்பது சாதாரண மனிதர்களின் சாபம் போன்றதல்ல. ரஸூல் (ஸல்) அவர்களின் சாபத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; சமாதி வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹ்வின் பாவ மன்னிப்புக் கிடைக்காத ஷிர்க் எனும் இணைவைத்தலில் விழுந்து, நரகவாசிகளுடன் சேர்ந்துவிடாதீர்கள்.

அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அச்சமின்றி திடீர் கபுரை உண்டாக்குபவர்கள், திண்ணமாக மார்க்கத்தின் வரம்புகளை மீறிவிட்டவர்களாவர். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்:

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது (85:12).

பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இறப்பு நிச்சயம். இறப்புக்குப் பின்னர் நமக்கான கேள்வி கணக்குகள் அதைவிட நிச்சயம்.

அல்லாஹ்வின் கடினமான பிடியிலிருந்து நாம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் தப்பித்துக் கொள்ளவதற்கும் சமாதி வழிபாடு உட்பட அனைத்து வழிகேடுகளிலிருந்தும் விலகி, நேர்வழியில் வாழ்ந்து ஈமானோடு இறப்பதற்கும் வல்ல நாயன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!.
ஃஃஃ
குறிப்பு:
இந்த நோட்டீஸின் பிரதிகள் தனி மடல்களில் இணைக்கப்பட்டு நிழற்பட சான்றுகளோடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் ஹுஸைன், தலைமைச் செயலாக்க அலுவலர் அப்துல் ராஸிக் எம்ஏபிஎல், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் படிவத்தைப் பயன்படுத்தி, +91-44-25248888 எனும் எண்ணுக்குத் தொலைநகல் (Fax) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு:

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------

To
Janab F. Abdul Razick, M.A.B.L,
CEO, Tamilnadu Wakf Board,
1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar,
Chennai – 600001. 
Fax : +91-44-25248888

அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 18.1.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்ஹாவின் பெண்கள் வளாகத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணாகவும் வக்ஃபு விதிமுறைகளுக்கு எதிராகவும் திடீரென்று புதிதாக உருவாகியுள்ள கபுரை அகற்றுவதற்கு உத்தரவிட்டு ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,                                                                                                         
முகவரி : 

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------
வெளியீடு : 5/0113 ; நாள்  25.1.2013

அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East), P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு