கருவளையம்:
கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம். சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்பியூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது போன்றவைகளாகும்.
“கண்களின் வார்த்தைகள் புரியாதா” என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.
பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் வராமல் தடுக்க, தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும்.
பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும். கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும்.
இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம். கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.
கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும்.
பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.
கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.
கண்களை அழகாக வைத்திருக்க பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உண்பதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.
கருவளையங்களை தவிர்க்கும் வழி:
கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும். கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.
கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது.
கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.
வேதிச் சிகிச்சை:
வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):
சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது. இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.
இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப்பத்தை தீப்பதற்காக கண்தானம் பற்றி அடுத்த தொடரில் பார்போம். இது முக்கியமான சப்ஜக்ட் யாரும் படிக்க தவறவிடாதீர்கள்.
தொடரும்...
அதிரை மன்சூர்


