சகதியில் சிக்கிக்கொண்ட
சக்கரத்தைப் போல
சில சமயம்
சிக்கித் தவிக்கிறது
சிந்தை
எத்தனை முயன்றாலும்
எதையுமே
எழுத முடிவதில்லை
சொல்லித் தீரவேண்டிய
சிந்தனைகள்
சிதறிக்கிடக்கின்றன;
எழுதிக் கோப்பது
எளிதாக இருப்பதில்லை
ஏரிகளாகவும் குளங்களாகவும்
சேமித்து வைக்கத்தக்கச்
சிந்தனைகள்
முகநூல்களிலும்
துரிதத்தொடர்புச் செய்திகளிலும்
விழலுக்கு இரைக்கப்படுகின்றன
பொதுக்கூட்டங்களுக்கு வருபவர்களின்
பிரியாணி பொட்டலம் மீதான
கீழ்த்தர இச்சையைப்போல
சின்னஞ்சிறு வட்டங்களில்
சிக்கி
திருப்தியுற்றுக் கொள்கிறது
சிந்தை
ஒப்பணையால்
ஒப்பேற்றியது போக
தொழில்நுட்பத்
தூரிகை தயவால்
தெளிவாகவும் அழகாகவும்
சுயம் காட்டி
விருப்பங்களில் வீழ்ந்து
சிக்கித் தவிக்கிறது
சிந்தை
இனத்தைப் போலவே
சமூகத்தைப் போலவே
இயக்கங்களைப் போலவே
கழகங்களைப் போலவே
சிறு சிறு குழுக்களாய்
சிதறிக்கிடக்கின்றன சிந்தனைகள்
உலகையே மாற்றிய
வரலாற்றுச் சம்பவங்கள்
சிந்தனைகளை ஒருங்கிணைத்ததால்தான்
சாத்தியமாயிற்று
வாரந்தோறும் வெளியான
சஞ்சிகைத் தொடர்களின்
பக்கங்களைச் சேமித்து
புத்தகமாய்த் தொகுத்த
காலம் கடந்தோடிவிட
புத்தகப் பக்கங்களைப்
பிய்த்துப்பிய்த்து
உதிரியாகப் பரிமாறப்
பழகிக்கொண்டிருக்கிறது ஊடகம்
ஒற்றுமைக் கயிறு
உதறிவிடப்பட்டு
வேற்றுமையிலும் விரிசல்களிலும்
விருப்பம் காட்டுகிறது
தற்காலத் தலைமுறை
ஒற்றையைவிட குடும்பமும்
குடும்பத்தைவிட குழுமமும்
குழுமங்களைவிட கூட்டமும்
வலிமையானவை
சுவரொட்டிகளில்
சொக்கிப் போய்
சாரம் போகும் முன்
சிதறி
சில்லறைகளாக
வலிமை இழக்கும் முன்
சிந்தனைகளைச்
செறிவாக்கிச்
சேமிப்போம்
திண்ணைகளைவிட்டும்
படித்துறைகளைவிட்டும்
மரத்தடிகளைவிட்டும்
டீக்கடைகளைவிட்டும்
சலூன்களைவிட்டும்
முகநூல் பக்கங்களைவிட்டும்
குறுஞ்செய்திகளைவிட்டும்
வாருங்கள்
ஒன்றிணைந்து
வாய்த்த தளங்களை
வலிமையான எண்ணங்களால்
வளமாக்குவோம்
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


