நம் ஊரில் திருமணமான இளைஞர்களும், பெரியவர்களும் பெரும்பாலும் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டக்கூடியவர்களாக இருந்து வருகிறோம். அதனால் ஆண்களின் சதவிகிதம் பெண்களுடன் ஒப்பிடும் பொழுது நமதூரில் குறைவாகவே இருக்கும். இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு சில சமூக விரோதிகளும், தீய எண்ணம் கொண்ட கயவர்களும், திருடர்களும் அவர்களின் கை வரிசையை எந்த நேரத்திலும் யார் வீட்டிலும் சமயம் பார்த்து அரங்கேற்ற முயற்சிக்கலாம். அதை முறியடிக்க அல்லது தடுப்பதற்கு சில யோசனைகள் இதோ:
1. முதலில் நாம் எங்கு வசிக்கிறோமோ நம் வீட்டிற்கு அக்கம்பக்கத்து வீட்டினர்களுடன் அது யார் வீடாக இருந்தாலும் சரி நல்லுறவை வைத்து அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் பரஸ்பரம் கொடுக்கல், வாங்கல் வைத்துக்கொள்வதுடன் அவர்கள் தேவை அறிந்து நாமே சென்று உதவுதல் அல்லது நம் தேவையறிந்து அவர்கள் வந்து உதவுதல் போன்ற நல்ல விசயங்கள் மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் சமூக விரோதிகளிடமிருந்து.
2. இரவில் படுக்கும் முன் வீட்டின் அனைத்து கதவுகளும், பூட்டுகளும் முறையே பூட்டப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
3. பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளில் இரவில் ஏதேனும் திருடன் நுழைந்து அசம்பாவிதங்கள் நிகழ இருக்கின்றன என்ற அச்சம் வந்தால் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வதற்கு முன்னரே வீட்டின் கொல்லைப்புறமோ அல்லது வெளிவாயிலின் உயரமான இடத்தில் யாருக்கும் தெரியாவண்ணம் "விட்டு விட்டு எரியக்கூடிய சிகப்பு விளக்கு ஒன்றை பொருத்தி அத்துடன் ஒரு அவசர ஊர்தி போல் சப்தம் தரும் காலிங் பெல் பேட்டரியில் இயங்கும் ஒரு அழைப்பு மணியை பொருத்தி அதன் பொத்தானை நம் வீட்டின் தனியறையில் யாருக்கும் எளிதில் தெரியா வண்ணம் பொருத்திக்கொண்டால் அது மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் இது போன்ற அச்ச உணர்வு ஏற்படும் சமயம் அதை பயன்படுத்தி அக்கம்பக்க வீட்டினருக்கு ஒரு எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வை எந்த நேரத்திலும் கொடுக்க இயலும்". சமூக விரோதிகளும் திடீர் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரும் முன் தப்பித்து ஓடி விடுவர் இல்லை அவர்களால் பிடிபடுவர்.
4. மேற்கண்ட சிகப்பு விளக்கு அல்லது அழைப்பு மணி பொருத்தப்படுவதால் குறைந்தது இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் செலவாகலாம். அதனால் வீட்டின் பல லட்ச மதிப்பிலான பொருட்களும், விலை மதிப்பிட முடியாத பொக்கிச பெண்களும் பாதுகாக்கப்படலாம் அல்லவா?
5. தீபாவளி சமயம் கடைகளில் விற்கும் சிறிய ரக சரவெடிகளை சில பாக்கெட்கள் வாங்கி வீட்டில் சிறியவர்களுக்கு எளிதில் தெரியாத இடத்தில் பத்திரமாக மறைத்து வைத்திருந்தால் இரவு நேரங்களில் வீட்டில் திருடர்கள்/கொள்ளையர்கள் நுழைந்து விட்டார்கள் அவர்களை எதிர்கொள்ள இயலாமல் பயந்து போய் சப்தமும் செய்ய முடியாமல் உரைந்து போய் இருக்கும் பெண்கள் அந்த சமயம் தான் முன்பே வாங்கி யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்த அந்த சரவெடிகளை கொத்தாக வைத்து அதன் திரியை கொளுத்தி ஜன்னல் வழியே போட்டு விட்டால் அது தொடர்ந்து வெடித்து அக்கம்பக்கத்தினரை எழுப்பி திருடர்களை தலைதெறிக்க ஓடச்செய்து விடும் அல்லவா? இது கொஞ்சம் கடினமான முயற்சி தான் பெண்களை பொருத்த மட்டில்.
6. இல்லை எனில் டேப் ரெக்கார்டரில் கொஞ்சம் கனமான தடித்த ஆண் குரலை (அல்லது பேய், பிசாசு போன்ற சிரிப்பொலியை) பதிவு செய்து வைத்து திருடன் வரும் சமயம் போட்டு விட்டால் அவன் அது கேட்டு ஓடி விடுவான்.
7. இது போன்ற சமயங்களில் நாம் வீட்டின் கதவுகளை உடனே திறந்து கொண்டு தக்க துணையின்றி வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
8. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவு நேரங்களில் தான் அதிகம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பேட்டரி மூலம் இயங்கும் பொருட்களுக்கு (உதாரணம் டார்ச் லைட்) முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
9. முக்கியமாக அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள பெரியவர்களின் (ஆண்களாய் இருந்தால் அடுத்த வீட்டு ஆண்களின் அல்லது பெண்களாய் இருந்தால் அடுத்த வீட்டு பெண்களின்) மொபைல் போன் நம்பர்களை வாங்கி போனில் பதிந்து வைத்து கொள்ள வேண்டும். திருடர்கள் வீட்டில் நுழைந்து விட்டார்கள் என்ற அச்சம் இருந்தால் உடனே அவர்களுக்கு எவ்வித பதட்டமும் இல்லாமல் அமைதியாக போன் செய்து விவரத்தை சொல்லி அவர்களின் உதவியை நாடலாம்.
10. மேற்கண்ட சில ஏற்பாடுகள் வீட்டில் செய்யப்பட்டுள்ளதை பரஸ்பரம் அக்கம்பக்கத்து வீட்டினருடன் ரகசியமாக தனியே பேசி முன்பே பகிர்ந்து கொள்வது நல்லது. திடீரென அவர்களின் உதவியை நாடுவது அவர்களுக்கு அசொளகரியமாக இருக்கலாம். அதனால் முன்பே சில தகவல்களை சொல்லி வைப்பது நல்லது.
11. இது போன்ற இக்கட்டான, பதட்டமான சூழ்நிலையில் நமக்கு (ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) முதலில் கை கொடுத்து உதவுவது "மன திடம்/தைரியம்" தான். அதை அந்த நேரத்தில் வர வைத்து அதை முறையே பக்குவமாக பயன்படுத்திக்கொள்வது பெரும் அசம்பாவிதங்கள் நம் வீட்டிலும் அல்லது அக்கம்பக்கத்து வீட்டிலும் நடைபெறுவதை தடுக்கலாம்/தவிர்க்கலாம்.
12. இந்த காலத்தில் திருடர்கள் எந்த ரூபத்தில் நம் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று நாம் எதை வைத்தும் ஊர்ஜிதம் செய்ய இயலாத நிலை உள்ளது. எதிலும் கவனமும், விழிப்புணர்வும் வேண்டும். மற்றவைகளை நம்மைப்படைத்து பரிபாலிக்கும் இறைவன் பார்த்துக்கொள்ள போதுமானவன்.
13. காலமெல்லாம் நாம் கஷ்டப்பட்டு (பொருள், ஆயுட்காலம், ஆசாபாசங்களை தியாகம் செய்து, ஊரின் இன்ப,துன்பங்களில் பங்கெடுக்காது, வியர்வை சிந்தி) சம்பாதித்து, சேமித்து வைத்திருப்பதை தன் தீய குணத்தாலும், திருட்டுத்தனத்தாலும் நொடிப்பொழுதில் அடைந்து விட கயவர்கள் கூட்டம் (அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) எந்த நேரத்திலும் முயற்சித்துக்கொண்டிருக்கும். அதை முறியடித்து நம் உடமைகளையும், வீட்டினரையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையும், பொறுப்பும் ஆகும்.
இந்த பதிவு எழுதுவதற்கு காரணம் என்னவெனில் சமீபகாலமாக தொலைக்காட்சி செய்திகளில் முதன்மைச்செய்தியாக வரும் கணவன் முன் மனைவி நகைக்காக வெட்டிக்கொலை, பணத்திற்காக மனைவி முன் கொள்ளையர்களால் கணவனை வெட்டிக்கொன்ற கொடூரம், பூட்டி இருந்த வீட்டில் பீரோவை உடைத்து துணிகரக்கொள்ளை, வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை கட்டி வைத்து விட்டு பீரோவை உடைத்து பணம், நகை கொள்ளை, பணத்திற்காக மாணவன்/மாணவி கடத்தல், வயதான கணவன், மனைவி மீது மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை, விருந்தினர் போல் வீட்டிற்கு வந்து துணிகரக்கொள்ளை, என்று அன்றாடம் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் நடந்தேறும் கொள்ளைச்சம்பவங்களையும், அதனால் ஏற்படும் கொலைக்குற்றங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
எல்லாவற்றிற்கும் காவல்துறையின் உதவியை சம்பவம் நடந்து முடிந்ததும் நாடுவதை விட நமக்கு நாமே குறைந்த பட்ச பாதுகாப்பு தேவைகளை ஏற்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது.
இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுக்க சில வழிமுறைகளும் மேலே தரப்பட்டுள்ளன. இன்னும் மேலதிக விவரங்களையும், யோசனைகளையும், வழிமுறைகளையும் படிப்பவர்கள் தங்களின் பின்னூட்டம் மூலம் தாராளமாக தந்து இந்த சமூக சீர்கேட்டிலிருந்து சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
- மு.செ.மு.நெய்னா முஹம்மது
மேலே பதியப்பட்டுள்ள ஆக்கம் கட்டுரையாளரின் தன்னார்வத்தாலும், ஊர் நலன் கருதியும் அவரால் சேகரிக்கப்பட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.