(அதிரை அப்பா, காலை ஸுபுஹு தொழுகைக்குப்பின் டீக்கடை வருவது வழக்கம்)
அப்பா: “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்”
டீக்கடைக்காரர்: “அலைக்குமுஸ்ஸலாம், வாங்கப்பா......”
(சிறிது நேரத்திற்குப் பின் பேரனும், அனுடைய நண்பனுடன் அங்கே வந்து டீ சொல்கிறான்)
டீக்கடைக்காரர்: “அப்பா.. உங்க பேரன் ஜாகிரு வந்திக்கிறான்… !”
அப்பா: “அப்படியா, ஜாகிருசேண்டு சொல்லு. இல்லாட்டி கோவச்சிகிடுவான் உள்ளே கூப்புடு. கேக்கரதக்கொடு.”
அப்பா: “வாங்க, என்ன இங்கிட்டாலே…”
பேரன்: “டியூசனுக்குப் போறோம் அப்படியே ‘டீ’ குடிச்சிட்டுப் போவலாமுன்னுதான்......”
அப்பா: “ரெண்டு இடியாப்பந்தின்ட்டு ‘டீ’ குடிச்சா என்னா....?”
பேரன்: “வேணாம்ப்பா... ‘டீ’ போதும்..!”
அப்பா: “சரி அதுயாரு ஆமாத்துமா மொவனா.....?”
பேரன்: “இல்லை, பத்தரூட்டு சேகரு. சுபுஹு தொளுவிட்டு இவஞ் சைக்கிள்ளே போவோம்.”
அப்பா: “அப்ப சரி, நா ஜாவியா திக்ருக்குப் போயிட்டு கடைத்தெருக்கு வந்துர்றேன். ஒன்கூட்டாளிட்டே சொல்லி ஒன்ன அங்கே விட்டுட்டுப் போச்சொள்ளு. திக்ரு முடிஞ்சு நா வந்து நிக்கேன்.. நீ வந்துடு, சரியா...?”
பேரன்: “சரிப்பா நா வர்றேன்”
(குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் இருவரும் மார்க்கெட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்)
அப்பா: “என்ன இன்னும் மீனு ஒன்னும் வரல. இல்லாட்டி எறச்சி ஏதும் பாக்கலாம் வா !”
(இறைச்சி கடையிக்கு இருவரும் வருகிறார்கள்.)
கடைக்காரர்: “ வாங்கப்பா, யாரு உங்கப்பேரனா.....?”
அப்பா: “ஆமா ! கிலோ எவ்வளவு.. ?”
கடைக்காரர்: “நானூருப்பா !”
அப்பா: “சுபஹானல்லாஹ்’.. தலையே சுத்துது...”
பேரன்: “என்னப்பா ? சுகர், ரெத்தக்கொதிப்பு அளவைச் சொல்லிட்டாரா...? தலசுத்துதுறீங்க விலயத்தான் சொன்னாருப்பா !”
அப்பா: “இல்லடாப்பா, முன்னே ‘75 ரூபாக்கி’ வித்துக்கிட்டு இரிக்கிம்போது, திடீரிண்டு ‘100 ரூபாண்டவுடன்’ ஹொத்வா முடிஞ்சு மரைக்கா கூட்டம்ல்லாம் கூட்டுனாஹ. அதான் ஞாபகம் வந்துச்சு. இப்ப வுவ்ளோ நெருப்பாக்கீது”
பேரன்: “நெருப்பெல்லாம் வராது, அதான் எல்லாருஞ் சட்டி நெறைய பக்கத்திலேய தண்ணி வச்சிக்கிராங்களே !”
அப்பா: “சரி வா இப்ப மீனு வந்திருக்கும் பாக்கலாம்...”
தொடர்ந்து…
அப்பா: “இந்தா இந்த கொடுவாக்கண்ணுக்கு எவ்ளவு...?”
மீன்காரி: “320 ருவா கொடுங்க !”
அப்பா: “சரி, அந்த வவ்வாலோட அந்த பண்ணாவையும் போட்டு சொல்லு”
மீன்காரி: “430.. வரும்... 400… ருவா கொடுத்துடுங்க”
அப்பா: “என்ன மொம்மாப்துல்லா, வெல கேட்டா 4oo ,500 ங்கிராளுவ... ?
மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, மறுபடியும் போய் மீனுக்கு எவ்ளோவுண்டு கேளுங்க.!”
அப்பா: “நா வந்து ஒன்னட்டே கேட்டேனே..., அங்கென்னா கூட்டம் கொரலி வித்தையா....நடக்குது. ஆட்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க...!”
மொம்மப்துல்லா: “க்கே......க்கே..க்கே.. இல்ல கொடுவா வாங்கி கூறு போடுறாங்க நீங்களும் போய் சேந்துக்கிடுங்க போங்க”
அப்பா: தம்பி வா... நா வாங்கித்தறேன் வூட்டுல போய் கொஞ்சம் பொறிக்கச் சொல்லிட்டு மீதிய ஆனம ஆக்கா சொல்லிடு, லுஹருக்கு நேரமாச்சு நா போறேன் நீனும் வந்துடு”
(அப்பா,பேரனிடம் கொடுவாபிஸ்கு வாங்கி கொடுத்து விட்டு லுஹர் தொளுவ நடைய கட்டிட்டாங்க.)
-ZAEISA


