Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விடுமுறைக் காலம் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2014 | , ,

ன்னும் இரண்டு நாள்களில் ஆங்கில ஆண்டில் அடுத்தது என்கிறது நாள்காட்டி. பொழுது விடிதலும் சாய்தலும் எப்பொழுதும்போல் நடக்கும் அந்த நாளில்

மட்டும் ஏன் ஆரவாரம், கூச்சல், உற்சாகம், நுரை கொப்புளிக்க பீர் என்பது புரிய மறுக்கிறது. அனைவரையும் அனைத்து நாளிலும் வாழ்த்தினால் என்ன போச்சு? என்னுடையது மர மண்டை.

“குலுக்கி, கட்டியணைத்து, சந்தடி சாக்கில் அந்நிய ஆண்/பெண்ணை உதட்டில் ‘இச்’சி வாழ்த்திக் கொள்கிறார்கள். நான் கேட்கிறேன், இவர்கள் வாழ்த்தி என்ன வாழ்ந்து விடுகிறது? ஊர் உலகம் முழுக்க சண்டை, போர், பிரளயம். தினசரி வெட்டு, குத்து, கொலை. இனக் கொலைக் கரங்களில் செங்கோல், அஹிம்சையின் படிமத்தைச் சுட்ட கொலைகாரனுக்குச் சிலை.

“ஒரு பக்கம் வத வதவென்று பிறப்பு, மறுபக்கம் உற்றார், உறவு, பிரபல்யம், அனாமதேயம் என்று பாரபட்சமற்ற சாவுகள். போதாததற்கு மாயமாய் மறையும் விமானங்கள்...”

“நிறுத்து. படுகையனே! ஆண்டின் ஒரு நாளிலாவது உற்சாகம் வேண்டாம்? உன் வீட்டுச் சுவற்றுக்கெல்லாம் எதுக்கு நாள்காட்டி?”

“சரி! சரி! அப்படி என்னை ஒரே மோசமாக நினைக்க வேண்டாம். இந்த ஆண்டுப் பொறப்பு நெருங்குவதில் நல்ல விஷயமும் இருக்கு, மோசமும் இருக்கு. தெரியுமா?”

“முதலில் நல்லதைச் சொல்லு.”

“ஆண்டுப் பிறப்புக்கு முந்தைய ரெண்டு வாரத்தில் அதிகப்படியாக லீவு. அந்த நேரம் அலுவலகத்தில் பாதிப் பேருக்கு மேல விடுப்பில் போய், மீட்டிங்குகள் இன்றி வேலையில் இயலமைதி. வெள்ளைக்காரனுடைய பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையாகி ஹைவேயில் துணி காயப்போடலாம் போல் டிராஃபிக் குறைவு. நினைத்த நேரத்துக்கு அரைமணி முன்னாடியே ‘டான்’னு ஆபீஸ் வந்து விடலாம். இதுக்காகவே ஆபிஸுக்கு வர ஆசையா இருக்கு தெரியுமா. ஐ லைக் திஸ் ஹாலிடே பீரியட்.”

“அந்தளவுக்காச்சும் உன் மண்டைல நல்லது நினைக்கத் தோணுதே. அப்ப அந்த மோசமான விஷயம் என்ன?”

“மீண்டும் இதுக்காக அடுத்து ஒரு வருஷம் காத்திருக்கணுமே!”

நூருத்தீன்

எதில் கஞ்சத்தனம்..! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 30, 2014 | , , ,

நம்மில் சிலர் எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்பதின் மின்னலே இதை எழுதத் தோன்றியது.

கந்தையானாலும் கசக்கி கட்டு - இந்த பழமொழியின் அர்த்தம் - கிழிஞ்சி போய் கடாச வேண்டிய துணியானாலும் , படித்துறையில் 501 பார் சோப் போட்டு துணி துவைப்பவனிடம் ஓசி வாங்கி துவைச்சு போட்டுக்கோ!! [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே...! அவன் அதை போட்டுக் கொண்டு 'கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஆஸ்காருக்கு அடித்தளம் போட்டுடுவான்] இனிமேல் பழமொழி எழுதும்போது ' பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.

ஆக ஆரம்பத்திலேயே சுபிட்சமான எந்த பழமொழியையும் படித்து கொடுக்காததால் இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் நாய்க்கு கூட கண் தெரியவில்லை, பூனைக்கு ஹார்ட்டில் ஓட்டை என்று புலம்பும் சமுதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.

இதில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்து வாழும் வாழ்க்கை இருக்கிறதே, சிலரை பார்க்கும் போது அவர்களுக்கு ' மெமரி சிப்" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.

நம் ஊர் பகுதியை சார்ந்தவர் இறந்து போன செய்தி கேட்டு போய் பார்க்க போயிருந்தேன் [இது 10 வருடத்துக்கு முன் நடந்தது]. அவர் படுத்து கிடந்த இடம் அட்டைபெட்டியை மடக்கி பாய்போல் உபயோகப் படுத்தியிருந்தார், கவலைப்பட்டேன். பிறகு கேள்விப்பட்டேன் ஊரில் பெரிய வீடு எல்லாம் இருக்கிறதாம். மற்றவர்கள் வாழ ஏன் இப்படி கஞ்சத்தனம் ?

ஒரு மனுசன் எத்தனை வருசம்தான் மத்தவங்களுக்காக வாழ்வது???..

சுகாதார விசயத்துக்கு முதலில் வருவோம். சிலருக்கு ஊரில் நல்ல வீடு இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.

ஆனால் இவன் பல்லைப் பார்த்தால் ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.

டூத் பிரஸ் வாங்குவதிலும் தன் பல்லுக்கு எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை. எது சீப் என்பதில் தான் கவனம். யாராவது புதிதாக வாங்கி கொடுத்தால் தனக்கு தேவை 'Hard’ என்று தெரிந்தும் “soft” பிரஸ்ஸை வைத்து பல வருடம் குப்பை கொட்ட நினைப்பது.

இந்த பட்ஜெட் ஏர்லைன் வந்ததில் நிறைய பேர் மிச்சப்படுத்துகிறேன் என்று கூட வருபவர்களை அடிமைகள் போல் நடக்க விடுகிறார்கள்.

சமீபத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அவர் எடுத்த டிக்கட்டுக்கு [ஏர் ஆசியா] அது சென்னைக்குத்தான் போகும். ஏன் நீங்கள் திருச்சிக்கு எடுக்க கூடாது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.

அதற்கு அந்த ஆள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே, கருட புராணத்தில் உள்ள அந்த கூபம், அக்னி குண்டம் போன்ற தண்டனைகள் ரொம்ப ரொம்ப "லைட்' என்பேன். இதில் என்ன ஹைலைட் தெரியுமா?. அவருக்கும் அவர் மனைவிக்கும் 35 வயதுக்குள் இருக்கும். இருவரும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சென்னையில் இறங்கி, ஆட்டோ எடுத்து , சிங்கபெருமாள் கோயில் அருகில் பஸ் ஏறி லொங்கு லொங்குனு ராமநாதபுரம் போய் சேர குறைந்தது 10 மணி நேரம் ஆகலாம் [அதுவும் இரவு நேரம்]. இதில் அவர் மிச்சப்படுத்துவது எவ்வளவு தெரியுமா வெறும் 1700 ரூபாய்தான். பெண்களை கூட அழைத்து செல்லும் கணவான்களே.இது மிச்சமா செலவா உங்களுடைய அலுப்பு, அசெளகரியம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே. ஏன் உங்களுக்கு அந்த கணக்கு மட்டும் தெரியாமல் போனது.

இதில் அந்த ஆள் எடுத்த டிக்கட்டில் 'ச்'சாப்பாடும் சேர்த்து.. 'ச்'சாப்பாடும் சேர்த்து என்று ..அந்த சாப்பாட்டுக்கு 'ச்" போட்டு ரொம்ப கேவலப் படுத்திவிட்டார்.

கோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]

இன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில "திருவாளியத்தன்" வேலை எல்லாம் செய்வார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆள், நல்ல வசதியான மனுசன் , சென்னையிலும், அவரது ஊர் பகுதியிலும் பல கோடி சொத்து வைத்திருப்பவர், ஆனால் அவரது செருப்பு அவரது கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி குறைந்திருக்கும். ஆனால் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை மாதிரியும் , தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் வானத்தை பொத்துக்கொண்டு லாபமாய் கொட்டுகிறது என சொல்லிக் காண்பிப்பதில் வல்லவர். சமயங்களில் நான் நினைப்பது உண்டு, தனக்கு இருப்பதோ இரண்டு கால்கள்,இதைச் சரியாக பாதுகாக்க காரணம் சொல்லும் இவர் இவ்வளவு சொத்தையும் பாதுகாப்பாரா??

வாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.

எப்போது நமக்காக வாழப்போகிறோம்!

இன்னும் சில குடும்பத்து பெண்கள் திருமண விருந்துகளில் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்து போகிறேன் என்று நடந்து கொள்வது மிகவும் வருந்தக்கூடிய விசயம். அவர்கள் வீட்டின் ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது வருந்தாமல் என்னதான் செய்வது.

கூட்ட நெரிசலில் இப்படி சாப்பாட்டுக்கு பேயாக அலைவதை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் இவர்களின் நடத்தை கஞ்சத்தனத்தின் டாப் 10 வரிசையில் முதலிடம் பெறும்.

சிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் "நேத்திக்கட கிடாய்" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் " மொச்ச" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். இங்கு சிலர் தான் போட்டிருக்கும் ட்ராக் சூட் / முழு அங்கி ஜிப்பா [இஸ்லாத்தை கடை பிடிக்கிறேன் என்று டிராமா வேறு] சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.

இந்த குரூப்தான் பல்விளக்கும் பிரஸ் பன்றி முடியில் செய்ததது என்று கொஞ்ச நாள் லந்து கொடுத்த குரூப். இப்போது அப்படி ஆதாரம் இல்லை என்றவுடன் கப்சிப்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும். எனக்கு தெரிந்த ஒருவர் [சொந்தக்கார பெண்மணி] டீ குடியேன் என்று சொல்வதிலேயே அவருடைய சோம்பேரித்தனம் / “இவன் டீ வேணாம்னு சொல்லனும்” எனும் எண்ணம் எல்லாம் பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் பங்குவிலை ஒடும் டிஜிட்டல் டிஸ்ப்லே மாதிரி நம் கண்முன்னே தெரியும். பிறகென்ன பரவாயில்லை இப்போதுதான் டீ குடித்தேன் என்று சொல்லி விடுவதுதான்.

இந்த ஆக்கத்தின் மூலம் என் வேண்டுகோளை நமதூர்க் காரர்களுக்கு வைக்கிறேன்.

கல்யாணத்துக்கு செய்யும் செலவில் நம் கண்முன்னே கையேந்தி யாசகம் கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள். அயர்ன் கலையாத சட்டையுடன் , உயர்தர சென்ட் போட்டு வருபவர்கள் கொஞ்சம் பொறுமை கடை பிடிக்கட்டும். 1986-ல் என் கல்யாணம் நடைபெற்ற போது எங்கள் பூர்வீக வீட்டை இடித்து புதிதாக கட்டிக் கொண்டிருந்தோம் , கான்க்ரீட் போட்டு சிமென்ட் பூசாமல் அப்போது இருந்த வீட்டில் காலை 11.30 மணிக்கே சாப்பாட்டுகாக காத்திருந்த யாசகம் கேட்கும் அந்த ஆட்களனைவருக்கும் அந்த வீட்டில் பந்தி பரிமாறப்பட்டு உணவளிக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே" எனும் சொல்தான்.

கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ்]

ZAKIR HUSSAIN

தாயின் அறிவுரை கேட்போம்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2014 | , ,


தாயின் பேச்சைக் கேளாமல்
தன்வழி மட்டும் போதுமெனப்
போயின் மக்கள் கதியென்ன?
  போதனை யொன்றைக் கேளுங்கள்:

முட்டை யிட்ட ஒருகோழி
  முடங்கி நன்றாய்  அடைகாத்தே
எட்டுப் பிள்ளைக் குஞ்சுகளை
  இயன்று பெற்று மகிழ்ந்ததுவே.

வெளியில் வந்த குஞ்சுகளோ
  விதியை மறந்து தம்போக்கில்
துளியும் கவலை இல்லாமல்
  துள்ளித் துள்ளி ஓடினவே!

கூக்கூ வென்று குஞ்சுகளைக்
  கூவி யழைத்தது தாய்க்கோழி
நோக்கா தவைபோல் குஞ்சுகளும்
  நொடியில் ஓடிச் சென்றனவே.

பட்டுப் போன்ற உடலோடு
  பாதை மாறிப் போகின்ற
எட்டுக் கோழிக் குஞ்சுகளின்
  இடக்குப் பேச்சைக் கேளுங்கள்:

அம்மா இந்த உலகத்தின்
  அழகைப் பார்க்கச் செல்கின்றோம்
சும்மா நில்லு! நாங்களெலாம்
  சுற்றிப் பார்த்துத் திரும்பிடுவோம்!

கோழித் தாய்தன் அன்பாலே
  கூறும் சொல்லைக் கேளாமல்
சூழும் நாசம் அறியாமல்
  சுற்றிச்  சென்றன குஞ்சுகளே.

பாதை மாறிச் செல்லாதீர்
  பருந்து வந்து தூக்கிவிடும்!
பேதை கள்போல் நடவாதீர்
  பேச்சைக் கேட்டு நில்லுங்கள்!

மழையும் வந்தால் நனைந்திடுவீர்!
  மரங்கள் வீழ்ந்தால் நசுங்கிடுவீர்!
இழையும் வண்டி வாகனங்கள்
  இல்லா தும்மை அழித்துவிடும்!

அப்போ தந்த வீதியிலே
  அடுத்து வந்த மிதிவண்டி
தப்பாய் மோதிக் குஞ்சொன்றைச்
  சாக டித்துச் சென்றதுவே!

மிரண்ட ஏழு குஞ்சுகளும்
  மெல்லத் தாயின் அறிவுரையை
இரண்டு நொடியில் மனங்கொண்டே
  இவர்ந்து வந்து சேர்ந்தனவே.

அதிரை அஹ்மது

வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2014 | , ,

பாரத மாதாவுக்கொரு 'ஜே' சொல்லி
பார்ப்பனப் புத்தகம்
பகவத் கீதையை
தேசிய நூலாக்கு.
மூன்று சதவிகித
ஆரியக் கொள்கைகளை
எண்பது சதவிகித
இந்துக் கொள்கையென
புரட்டுக் கணக்குப் போடு.

தேசியக் கொடியை விட்டுவைக்காதே
பட்டை சாயலில்
மட்டும் போதாது
அசோகச் சக்கரத்தை
அகற்றி விட்டு
நடுவிலொரு
நாமத்தைப் போட்டு
நாட்டின் மதிப்பைக் கூட்டு.

தேசியப் பறவையின்
இறக்கையில்
வேல் ஒன்றைக் குத்தி
வல்லரசு இந்தியா என
வாய்ப் பந்தல் போடு.

தனிப் பெரும்பானமை திமிரோடு
தயிர்சாதத்தை
தேசிய உணவாக்கி
குருதிச் சூட்டைக்
குறைக்க வைத்து
அடிமைத்தனத்தை அதிகரி.

உள்ளத்தில் அழுக்கான
கருக்களை அழிக்காமல்
தெருக்களைச் சுத்தம் செய்ய
பொதுசனத்திடம்
கொடு ஒரு துடைப்பம்;
பாரத் ரத்னா 
பட்டுக்குஞ்சத்தைக்
கட்சிக்காரனுக்குக் கட்டு.

ஏசுவின் இடத்தில்
வாஜ்பேயை வை;
கிறிஸ்துமஸ் தினத்தில்
வாஜ்பேயைக் கொண்டாடி
மதச்சார்பின்மையைப்
பறைசாற்று.

தேசத்தந்தையைப்
படுகொலை செய்தவனை
தேசபக்தனாக அறிவிப்புச் செய்.

காந்தியைக் கொன்றவனுக்குக்
கோவில் கட்ட வேண்டுமன்றோ?
மற்றுமொரு மசூதிக்குள்
கோட்ஸே சிலையை வை.

மேல்சபையிலும் கீழ்சபையிலும்
உன்னாட்களே நிரம்பி வழிய
ஓட்டெடுப்பு என்றொரு
கண்துடைப்பு செய்து
ஒப்புதல் ஒப்பேற்றி
கரசேவைகளை
தேசத் தொண்டாக
சட்டத்திருத்தம் செய்.

'இந்து என்பதொரு மதமல்ல
இந்துத்துவா மதக்கொள்கையல்ல'
வாய்ஜாலம் செய்
'வீடு திரும்புதல்'
என்ற பித்தலாட்டத்தில்
நாடு முழுவதும்
கூட்டம் கூட்டமாக
மதமாற்றம் செய்.

மாற்றி எடுத்த கையோடு
சாதிச்சான்றிதழ் ஒன்று
சரிகட்டி - உன்
சீழ்ப்பிடித்த
சித்தாந்தத்தைக் கொண்டு
செருப்பால் அடி.

சர்வசகல நேரமும்
ஏதாவது ஒரு ரூபத்தில்
எல்லா ஊடகங்களிலும்
விவாதங்கள் நடத்து.

மாறுபட்ட வேடங்களில்
உன்னாட்களையே நடிக்கவிட்டு
கேளிக்கைகளில் மயங்கும்
கோமாளி மக்களை
கதாகாலாட்சேபம் செய்தே
கட்டுக்குள் வை.

கங்கையைத் தூய்மையாக்க
கோடிகளை ஒதுக்கு
கணக்குவழக்கு கேட்டால்
கேடிகளால் அடக்கு.
காசு ஒதுக்கியும்
பேசி மயக்கியும்
கைப்பற்றிய பதவி...

மக்கள் சுனாமி ஒன்று
மறுமலர்ச்சி காணும்வரை
கானலை நீர் எனப் பசப்பு;
வளர்ச்சிப்பாதையில்
மேற்கொண்டு அறிவிப்புகள் செய்,
இன்னும் உண்டு
ஏராள நாட்கள்
உன் ஆட்சி அதிகாரத்தில்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

14

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2014 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி இரண்டு

பால்போர் பிரகடனம் உசுப்பி விட்ட உற்சாகத்தில் , உலகெங்கிலுமிருந்து ஓடிப்போன யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு வரத் தொடங்கி ஏற்கனவே யூதர்களின் நிலவள வங்கி மூலம் வாங்கிப் போட்ட நிலங்களில் குடியேற ஆரம்பித்தார்கள். வெர்சயில்ஸ் உடன்படிக்கை என்ற ஒப்பந்தம் மூலம் முதலாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. இந்தப் போர் பற்றி, இந்தத் தொடரில் நாம் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் துருக்கிக்கு செலவுக்கணக்கில் எழுத வேண்டியதும் பிரிட்டனுக்கு வரவுக் கணக்கில் எழுதப்பட வேண்டியதுமான பாலஸ்தீனம்தான். பால்போர் பிரகடனத்தை ஸ்டார்டராக வைத்து தங்களது விருந்தை உண்ணத் தொடங்கிய யூதர்களுக்கு பிரிட்டன் பெற்ற வெற்றி, முழு விருந்தையே படைத்தது.

ஜெருசலத்தை அல்லன்பே என்ற தளபதியின் கீழ் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்த பிரிட்டன், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை இழைக்கத் தொடங்கியது.

உலக சரித்திரத்தில், ஹஜரத் உமர் (ரலி) அவர்களுடைய காலத்தில் தொடங்கி பின்னர் சகிப்புத்தன்மை மற்றும் இரக்ககுணம் கொண்ட அன்பின் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் காலத்தில் தொடர்ந்து அதன்பின் உஸ்மானிய துருக்கிய சாம்ராஜ்யத்தில் பல்வேறு அரசர்கள் மாறி மாறி வந்தாலும் மனிதாபிமானமும் மத சகிப்புத்தன்மையும் அன்பும் அரவணைப்பும்தான் ஜெருசலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் அன்போடு வழங்கப்பட்டது. யூதர்களின் நயவஞ்சகங்கள் வெளிப்படுத்தப்படும்போது கூட மன்னிப்பே அவர்களுக்கு மருந்தாக வழங்கப்பட்டது. புனித மண்ணை ஆண்ட முஸ்லிம் மன்னர்களும் இனியவர்களாக இஸ்லாத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்துச் சென்றதே அதற்குக் காரணம்.

இறுதித் தூதரையே ஒரு யூதன் பகிரங்கமாக பொய்யாக்கி தண்ணி ஒரு தூதர் என்று வாணவேடிக்கை நடத்தியபோது கூட அவனுக்கு வேண்டியதை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பே தீர்ப்பாகத் தரப்பட்டது. அவன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துத் தழுவினான்.

நாட்டை விட்டு வெளியேற நினைத்தவர்களுக்கு பாதுகாப்புடன் வெளியேற வசதி செய்து தரப்பட்டது.

இன்னொரு நாட்டில் அல்லல் பட்ட யூதர்களை காப்பாற்றிக் கொண்டுவர கப்பல் கூட அனுப்பி வைக்கப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்களின் கல்லறையை உடைத்து எலும்பைக் கொண்டு வந்து தோரணம் கட்டுவேன் என்று கூறிய கொடியவன் ஒருவனுக்கு அரசவையில் வைத்து அவனது தலையை சீவிய சம்பவம் தவிர முஸ்லிம்கள் ஆண்ட பாலஸ்தீனத்தில் யூதர்கள் மீதோ , கிருத்துவர்கள் மீதோ பெரிய அளவில் அடக்குமுறைகளோ அட்டூழியங்களோ நடத்தப்படவில்லை. அத்துமீறல்கள் நிகழ்ந்தபோதும் கூட படுகொலைகளோ பாரதூரமான செயல்களோ மேற்கொள்ளப்படாமல் அன்பால் திருத்தும் ஆட்சிகளே நடந்தன என்பவைதான் வரலாறு தரும் சான்றுகள்.

ஆனால், பாலஸ்தீனத்தை பிரிட்டன் கைப்பற்றியதும், ‘ இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்பதுபோலவும் காய்ந்த மாடு கம்பில் விழுந்ததைப் போலவும் , பிரிட்டனும் யூதர்களும் பாலஸ்தீனத்தையும் முஸ்லிம்களையும் மேய ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் 1919 – ஆம் ஆண்டு, வெர்சயில்ஸ் உடன்படிக்கையின்படி League of Nations என்ற ஒரு சர்வதேச கட்டப்பஞ்சாயத்து அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஒருதலைப் பட்சமாக, பாலஸ்தீனத்தின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் பிரிட்டனைச் சார்ந்தது என்று உலகுக்கு அறிவித்தது. அத்துடன் பாலஸ்தீனத்துக்காக ஒரு தூதரை – ஹெர்பர்ட் சாமுவேல் என்ற ஒருவரையும் அனுப்பி வைத்தது. இவர் வேறு யாருமல்ல பால்போர் பிரகடத்தை வடிவமைத்தவரே இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படி, பாலஸ்தீனத்தை சுற்றி ஒரு சதிவலையை நன்றாகப் பின்னத் தொடங்கின ஏகாதிபத்தியங்கள்.

இவ்வாறு இஸ்ரேல் என்ற தனிநாட்டை அமைக்குமுன்பு பாலஸ் தீனத்தைப் பங்கு போட அவர்கள் தீர்மானித்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் வெறும் பனிரெண்டு சதவீதத்தினர்தான். மற்றவர்கள் முஸ்லிம்கள். பெரும்பான்மையாக மட்டுமல்ல பாரம்பரியமாக அந்த மண்ணிலேயே வாழும் முஸ்லிம்களை ஒரு அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி ஓடிய சிறுபான்மை இனம் ஆள வழிவகுத்தன அன்றைய வல்லரசுகள். ஆனால் வல்லோன் வகுத்தவழி என்று ஒன்று இருக்கிறது. அதை இந்தத் தொடரின் நிறைவில் நாம் குறிப்பிடுவோம். இன்ஷா அல்லாஹ்.

இப்படி ஒரு பக்கம் யூதர்களுக்கு இனிப்பான ஐஸ் கிரீம் தரப்பட்டுக் கொண்டு இருந்தாலும் உலகில் பல பாகங்களில் யூதர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படுவது நின்றபாடில்லை.

காரணம், முதலைக் கண்ணீரின் மொத்த வியாபாரிகள்; அடுத்துக் கெடுத்தலின் அதிபர்கள்; துரோகத்தின் துணைவர்கள்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் உலக முகவர்கள்; தோல் இருக்க சுளை முழுங்கிகள்; யூதர்கள் என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ ஜெர்மனியின் எழுச்சியாக அன்று உருவாகி இருந்த அல்டாப் ஹிட்லர் உணர்ந்தார்.

யூத மீன்களைப் பிடித்து சுட்டுத்தின்பதற்கு ஹிட்லர்தான் முதன்முதலில் குளக் குத்தகை எடுத்திருந்தார் என்று எண்ணுவது சரியான கருத்தல்ல. காரணம், யூதர்கள் இவ்விதம் மொத்த சரக்காக கண்டெயினர் கணக்கில் காலம்காலமாகக் கொல்லப்படுவது உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் படிப்பவர்களுக்கு முதல் முறையாகத் தோன்றாது.

ஏற்கனவே யூதர்கள் செய்த துரோகங்களுக்காக இறைவன் இவர்களுக்கு விடுத்த எச்சரிக்கைகள் பைபிளிலும் திருமறை குர் ஆனிலும் நிரம்ப இருக்கின்றன. சிலவற்றை முன்னரே குறிப்பிட்டு இருக்கிறோம். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இறைவனின் எச்சரிக்கை அவ்வப்போது யூதர்களுக்குப் பலநாடுகளும் வழங்கிய மரணப்பரிசுகளின் மூலம் விளங்கும்.

ஆகவே, யூதர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவது என்பது ஹிட்லர் தொடங்கி வைத்தது அல்ல; அவர் தொடர்ந்ததுதான் வந்தார். ஆனால் செய்வதை தீவிரமாகவும் வித்தியாசமாகவும் செய்தார். ஆனால் அதற்கு முன்பே நவீன காலத்தில் ரஷ்யாவில் யூதர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொன்று பிணங்களை சாலைகளில் அனாதைகளாகப் போட்ட நிகழ்வுகளை கடந்த அத்தியாயங்களில் படித்தோம்; அதற்கும் முன்பாக சிலுவைப் போர்வீரர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முப்பதாயிரம் யூதர்களை குடும்பத்துடன் கொன்ற செய்திகளையும் நாம் படித்தோம்; அதே கால கட்டத்தில், ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் பல ஆயிரம் பேர்களாக கப்பலில் ஏற்றப்பட்டு நடுக்கடலில் உயிருடன் கொட்டப்பட்டார்கள் என்பதையும் (அத்தியாயம் 13–ல்) படித்தோம். இன்றைக்கு யூதர்களுக்கு ஆலவட்டம் சுற்றி ஆரத்தி எடுக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒரு காலத்தில் யூதர்களை ஓட ஓட விரட்டியவர்கள் மட்டுமல்ல விரட்டி விரட்டி கொன்றவர்கள்தான் என்பதுதான் வரலாற்று உண்மை.

இவை மட்டுமா? இவைகளுக்கு முன்பே, இஸ்லாம் வளரத் தொடங்கிய காலத்திலும் இடையூறு இல்லாமல் ஏகத்துவம் என்ற இறைவனின் தத்துவம் உலக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டுமென்றால் துரோகத்திலேயே பிறந்து வளர்ந்து தழைத்த யூதப் புதர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கட்டாயம், இறைவனின் அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது கூட கடமையானது.
இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் பனூ குறைளாப் போர் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாகும். ஹிஜ்ரி 5- ஆம் ஆண்டு , அகழ்ப் போரில் சிந்திய இரத்தக் கரைகள் காயும் முன்பு அவசரமாக நடத்தப் பட்டது அந்தப் போர். அகழ்ப் போர் ஏற்படக் காரணமே யூதர்கள் செய்த சதிதான். மதீனத்து யூதர்கள், குறைஷிகளையும் மதீனத்தின் கத்பான் கிளையினரையும் தேடிப்போய், பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு எதிராக ஆயுதங்களும் இன்னபிற உதவிகளும் தருவதாகக் கூறி தூண்டிவிட்டனர். இதன் காரணமாகவே, புதிதாக ஒரு போரை அரங்கேற்றும் தைரியம் குறைஷிகளுக்கு ஏற்பட்டு படை திரட்டி மதினா நோக்கி வந்தனர். யூதர்களின் இந்தக் குற்றத்துக்காக, அவர்களின் தலையில் தட்டிவைப்பதற்காக நடத்தப்பட்டதே பனூ குறைளாப் போர். ஆனால் தலைகள் தட்டி மட்டும் வைக்கப்படவில்லை வெட்டியும் அடுக்கப்பட்டது.

பனூகுரைளாப் போர், வல்ல இறைவனின் தூதருக்கு முன் பொல்லா யூதர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மண்டி இட்டதாகவே முடிவுற்றது. அது மட்டுமல்ல கைது செய்யப்பட்ட யூதர்களை மதினாவின் கடைத்தெருவில் ஒரு பெரும் அகழி வெட்டப்பட்டு , அந்த அகழியில் வைத்து ஒவ்வொரு ஆண் யூதர்களின் தலையும் வெட்டப்பட்டது. இவ்விதம் வெட்டப்பட்டவர்கள் ஏறக்குறைய 700 யூதர்கள் என்றும் யூதப் பெண்களும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர் ஸபியூர் ரஹ்மான் முபாரக்பூரி ( ரஹ்) அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல்மக்தூம் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. (பக்கம் 386).

அடுத்து, ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு , கைபர் போர் என்பதும் பெருமானார் ( ஸல்) அவர்கள் யூதர்களுடன் நேரடியாக முன்னின்று நடத்திய போர்தான். இந்தப் போரிலும் யூதர்கள் பெற்றது தோல்விதான். தங்களுடைய எட்டு கோட்டைகளையும் அனைத்து செல்வங்களையும் இழந்ததும், தங்களுடைய நிலங்களின் பாதி விளைச்சலை பெருமானார் ( ஸல்) அவர்களுடைய பொது நிதிக்குத் தர சம்மதித்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதும் ஏறக்குறைய நூறு யூதர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டதும் இந்தப் போரின் விளைவுகள்.

ஆகவே மூக்குடைபடுவதும் முதுகெலும்பு உடைக்கப்படுவதும் முச்சந்திகளில் வைத்து முனகக் கூட விடாமல் மூன்றாக முறித்துப் போடப்படுவதும் யூதர்களின் வரலாற்றில் புதிதல்ல. தூசியைத் தட்டி விடுவதுபோல் இத்தகைய தண்டனைகளைத் தட்டி விட்டு விட்டு ‘இன்னும் கெட்டுப் போகிறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய்?’ என்று கேட்பதுதான் யூதர்களின் இயல்பு என்பதை உலகம் அன்று தொட்டு இன்றுவரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் உயிர்ப் பலி கொடுப்பது என்பது யூதர்களுக்கு உடுப்பி ஓட்டலில் மசாலா தோசை சாப்பிடுவது போலத்தான். வரலாற்றின் வழி நெடுக இஸ்ரேல் உருவாகும்வரை பொய்நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானடி ! பள்ளத்தில் வீழ்ந்து எழுந்தவன் பள்ளத்தை தேடி நடந்தானடி! என்பவைதான் நாம் காணும் காட்சிகள்.

உலகத்தையே உலுக்கிய ஹிட்லர் அரங்கேற்றிய யூதர்களுக்கெதிரான படுகொலைகள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும் முன்பே ஆரம்பித்துவிட்டது. இந்தப் படுகொலைகள் பாலஸ்தீனம் என்கிற பூந்தோட்டத்தை இஸ்ரேல் என்கிற வந்தேறிகளுக்கு உலக வல்லரசுகள் தாரை வார்க்கவும் யூதர்களின் மேல் ஒருவித அனுதாபத்தையும் பெற்றுத்தர, வலுவான காரணமாக ஆகிவிட்டது.

ஹிட்லரின் இந்த யூத அழித்தொழிப்பு அஜெண்டா 1933 ஆம் ஆண்டே ஹிட்லரின் நாஜிகளால் தொடங்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் படையில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றிக் கொண்டே ஜெர்மனிக்கு எதிராக போர் நடத்திய பிரிட்டனுக்காக ‘உள்ளடி உளவு வேலை’ பார்த்து ஒவ்வொரு நடவடிக்கைகளையும் போட்டுக் கொடுத்த அந்த ஒரு காரணமே யூதர்களைத் தேடித்தேடி அழிப்பதற்கு ஹிட்லரின் நாஜிகளுக்குப் போதுமானதாக இருந்தது.

இருந்தாலும் தாங்கள் ஆரியர்கள் என்கிற இனச்செருக்கும் ஜெர்மானியர்களுக்கு யூதர்களின் மீதான வெறுப்புச் செடிக்கு உரம் போட்டது. தங்களுடைய ஆரிய இனம்தான் உலகில் உள்ள இனங்களிலேயே உயர்ந்தது என்று கருதிய நாஜிக்கள், பிற இனங்களை, குறிப்பாக தங்களை உயர்ந்த இனமாகத் தண்டோராப் போட்டு தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த யூத இனத்தைக் கடுமையாக வெறுத்தனர். ஜெர்மனே யூதர்களால் அசுத்தப்பட்டிருக்கிறது என்று நாஜிக்கள் நம்பினார்கள். இந்த வெறுப்பின் உச்சம்தான் இன அழிப்பு.

ஆரியர்கள் உலகில் உயர்ந்தவர்கள் என்பது நாம் வாழும் நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நிலவி வந்திருக்கிறது என்பதை நாம் சொந்தக் கதையாகவும் சோகக் கதையாகவும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

ஏப்ரல் 1, 1933-ல்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக ரிப்பன் வெட்டித் தொடங்கப்பட்டன. யூதர்களின் ஜெர்மானியக் குடியுரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து யூதர்கள் மீது நாஜிக்களாலும் ஜெர்மானியப் பொதுமக்களாலும் யூதர்கள் அகப்பட்ட இடங்களிலெல்லாம் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து , 1938-ல் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரியாவிலும், நாஜிக்கள் கிளை அலுவலகம் திறந்து யூதர்கள் மீதான ‘இன அழிப்’பை அங்கும் தொடங்கினார்கள். யூதர்களின் வியாபார நிறுவனங்கள், வீடுகள், சொத்துக்கள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே சூறையாடப்பட்டன; தீயிடப்பட்டன. யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இத்தகைய வன்முறைகளின் அரிச்சுவடியில் யூத இன அழித்தொழிப்பை (Holocaust ) ஹிட்லரின் நாஜிப்படைகள் வரைமுறை இன்றி ஆரம்பித்தன. அழித்தொழிப்பு மட்டும் ஆரம்பமாகவில்லை 1939 – ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமானது.

அவைகளை விவரிக்க தனியாக ஒரு அத்தியாயம் வேண்டும் . தருவீர்களா?

இன்ஷா அல்லாஹ்.

இபுராஹிம் அன்சாரி

கடன் வாங்கலாம் வாங்க... 3

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

மெகா தள்ளுபடி: இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம். இரண்டு பேண்ட எடுத்தால் ஒரு பேண்ட இலவசம். தரமில்லாத சோப்புத்தூளாக இருந்தாலும் ஒரு வாளி இலவசம் என்றால் நம் மக்கள் வாங்க தயாரக இருக்கிறார்கள். இந்த வியாபார தந்திரம் பல வடிவங்களில் நம்மை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை காண்பித்துக்கொண்டு இருக்கிறது. 25%, 50%, 70% என்று தள்ளுபடிகளை நாம் பார்த்து வருகிறோம்.

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள்

நாம் இந்த உலகத்தில் வாங்கும் பொருட்களில் தள்ளுடி கிடைக்கிறது என்றால் சிரமம் எடுத்தாவது வாங்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? இதோ நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள்: ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ''நீ உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2391)

கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி அவரிடம் ''நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? ''எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது வேலையாட்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்! '' என்று கூறினார். உடனே, ''அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்! '' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்.'' (அறிவிப்பவர் : ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2077).

நம்மிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் இப்பொழுது நாம் என்ன செய்வது.  அவர் மனம் வேதனைப்படும் அளவுக்கு தொல்லை கொடுக்காமல் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கலாம் அல்லது கடனை தள்ளுபடி செய்து விடலாம். இப்படி நாம் செய்தால் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் வல்ல அல்லாஹ் தள்ளுபடி செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் விளங்க முடிகிறது.

தர்மம் செய்த கூலி வேண்டுமா?

இந்த நபிமொழியை பாருங்கள்: அல்லாஹ்வின் தூதரே (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகிறார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே (அது சரிதானா) என புரைதா(ரலி) கேட்டபோது, கடனின் (தவணைக்)காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).

இதுவரை அல்லாஹ்வுக்காக அழகிய கடன் நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும்  என்பதை பார்த்தோம். இனி இதற்கான தீர்வில் பிறரிடம் கடன் வாங்கும் சகோதர சகோதரிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வாங்குவோர் நிலை

நாம் எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை முன் தொடர்களில் விரிவாக பார்த்து விட்டோம். நாம் வாங்கும் கடன் முக்கிய மூன்று காரியங்களுக்காக இருந்தால் நலமாக இருக்கும். வயிற்றுபசி, மருத்துவம், இருக்கும் வீட்டிற்காக வெயில், மழை உள்ளே படாமல் இருக்க ஆடம்பரம் இல்லாமல்  சீர்படுத்திக்கொள்ளவும் இதை தவிர ஆடம்பரம் இல்லாமல் பலபேருக்கு சில அத்தியாவசிய காரியங்களுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கட்டாய கடன்

நமக்கு சிரமம் ஏற்படும்பொழுது கடன் வாங்க முடிவு செய்தால் திருப்பி கொடுக்க முடியாத நிலை நமக்கு ஏற்படும் என்று கருதினால் கடன் வாங்குவதை விட நம்மிடம் உள்ள நகைகள்  (உடனே விற்று பணமாக்க கூடியது நகைகள்தான்)அல்லது சொத்துக்களை விற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நகைகளும் இல்லை சொத்துக்களும் இல்லை என்ற நிலை வரும்பொழுது நாம் வாங்க போகும் கடன்  அவசியம்தானா? எப்படி இதை திரும்ப கொடுப்போம். நம்முடைய வருமானத்தில் மீதப்படுத்தி திருப்பி அடைத்து விட முடியுமா? என்றெல்லாம் நன்றாக யோசித்தபிறகுதான் கடன் வாங்க தயாராக வேண்டும்.

கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

தங்களின் அவசியத்திற்கு கடன் வாங்கி விட்டீர்கள். திருப்பி கொடுக்கும்பொழுது நமக்கு பெரிய பாரமாகவும், சிரமமாகவும் தோன்றும். இதில் சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாதவர்கள் கடன் தந்தவர்களிடம் நேராக சென்று தங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி வருத்தத்தை தெரிவித்து விட்டு அவகாசம் கேட்கலாம்.

இதில் வசதியுள்ளவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல் புகாரி, எண்:2400)

கடன் தொடர் ஆரம்பித்து 11வது தொடரில் இருக்கிறோம். இந்த தொடரை படித்த அத்தனை வாசக நெஞ்சங்களிடமும் சில கேள்விகளை வைக்கிறேன்.

1) கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!
2) கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
3) கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?

அலாவுதீன் S.
அதிரைநிருபரில் இதுவரை பதிக்கப்பட்ட ஏராளமான தொடர்களில் ஒன்றான 'கடன் வாங்கலாம் வாங்க' தொடரின் இந்த அத்தியாயம் மிக அதிகமாக வாசிக்கப்பட்டது மட்டுமல்ல பகிரப்பட்டதுமாகும்

‘தவ்பா’ - மனம் வருந்திப் பிரார்த்திதல் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2014 | ,

::: தொடர் - 3 ::::

நாம் செய்த பாவங்களை நினைத்து வருந்தி மன்னிப்புக் கோருமாறு நமக்கு அல்லாஹ் கட்டளை இடுகின்றான். நேர்வழி பெறுவதற்கான முதல் நிபந்தனையே ‘தவ்பா’தான். காரணம், பாவத்திலிருந்து மீளப் போவதன் அடையாளமே அது. ஒருவன் தான் திருந்தி வாழவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தால்தான், அதன் பக்கம் அடியெடுத்து வைப்பான். ‘தவ்பா’ செய்யத் தொடங்கும் போதுதான், உண்மையில் நாம் நமது தன்மைகளையும் வழிகளையும் மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதை உண்மைப் படுத்துகின்றோம்.

முதல் மனிதர்களான ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் இறைவன் கற்றுக் கொடுத்த முதல் பாடமே ‘தவ்பா’தான். சாத்தானின் தூண்டுதலால் அவ்விருவரும் இறைக் கட்டளைக்கு மாறு புரிந்தார்கள். அவர்கள் மனோநிலையில் மாற்றம் தெரிந்தது. உடனே அவ்விருவரும்,

“எங்கள் இரட்சகனே! நாங்களே எங்கள் ஆன்மாக்களுக்கு அநீதி இழைத்து விட்டோம்.நீ எங்கள் மீது இரக்கம் கொண்டு மன்னிப்பளிக்காவிட்டால், நாங்கள் இழப்பில் ஆழ்ந்து விடுவோம்” (அல்குர்ஆன் 7:23) என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

எனவே, அவர்களை அல்லாஹ் மன்னித்து, நேர்வழியில் செலுத்தி, பிறருக்கு வழி காட்டும் மனிதர்களாக ஆக்கினான். ஆனால், இப்லீஸ் எனும் சாத்தானோ, வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பகரமாகத் தவணை கேட்டான் (அல்குர்ஆன் : 7:14).

இன்று சாத்தானுக்கும் நமக்கும் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்! நாம் நம் தீய செயல்களிலிருந்து விடுபட வேண்டும் என்று யாராவது நம்மிடம் கூறினால், (காலம் வரட்டும் என்று) தவணை கேட்கின்றோம்; தள்ளிப் போடுகின்றோம்! இது யாருடைய மனப்போக்கு என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். பாவத்தில் பதிந்திருப்பதானது, கெட்ட முடிவுக்கு காரணமாகிவிடும்!

அரபியில் ஒரு வழக்கு சொல்லுண்டு: “வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்காமல், பெரும்பாவத்திலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை, தவணை நிபந்தனையின்றி உடனே முயன்று நிறுத்தாமல், சிறு பாவத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியமில்லை.”

தவறுகளிலிருந்து உடன் விடுபடாவிட்டால், ‘ஹிதாயத்’ எனும் நேர்வழியின் கதவுகள் அடைபட்டு, அல்லாஹ்வின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும். எச்சரிக்கை செய்தும் திருந்தாமல் பாவத்தில் நிலைத்திருப்பவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களுக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்துவிட்டபோது, எல்லாப் பொருள்களின் வாயில்களையும் அவர்களுக்குத் திறந்து விட்டோம். பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், (நம் வேதனையைக் கொண்டு) அவர்களைத் திடீரென்று பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.” (அல்குர்ஆன் 6:44)

அல்லாஹ் தன்மானம் மிக்கவன்; கண்ணியத்தின் காவலன், நாம் திருந்தி நடப்பதற்கான வாய்ப்புகளை அவன் தந்த பின்னரும் நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மனம் போன போக்கில் நடந்தால், நாம் திருந்துவதற்கான வாயிலை அடைத்து விடுவான்! இறுதியில், இப்பாவி விரும்பியவாறெல்லாம் பாவங்களில் அவனைத் தட்டழிய விட்டு, அவன் பாவமீட்சி பெற முடியாத அளவுக்கு ஆக்கிடுவான்! அத்தகைய அவப்பேறு வந்தடையாமல் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக ! ஆமீன்.

தனக்கு எந்த விதத்திலும் கீழ்ப்படியாமல் இருப்பதையும், பாவங்கள் புரிவதையும் நமக்குத் தடை விதித்துள்ளான் நம் இறைவன். பாவம் என்பது, பாவம்தான். அதிலென்ன சிறியதும் பெரியதும்? பாவமென்பது, இறைவனுக்குக் கட்டுப்படாமையின் அறிகுறிதான்.

பாவங்களுள் மிக மோசமானது, படைத்த இறைவனுக்கே இணை வைப்பதுதான். ஒருவன் இறக்கும் வரை அதிலேயே வீழ்ந்து கிடப்பானாயின், அது ஒன்று மட்டுமே இறைவனால் மன்னிக்கப்படாததாகும். நம்மில் பலர் இருக்கின்றார்கள்; அவர்கள் தொழுகையையும் நிறைவேற்றுகின்றார்கள்; அத்தொழுகையில், ‘இறைவா! உன்னையே வணங்குகின்றோம்; உன்னிடத்திலே உதவியும் தேடுகின்றோம்’ என்று ஓதுகின்றார்கள். ஆனால், இணைவைப்பின் எல்லா விதமான செயல்களையும் செய்கின்றார்கள்! அப்படியாயின், அவர்களின் தொழுகையால் என்ன பயன்?

எனவே, அல்லாஹ்வின்பால் மீண்டு, அவனிடம் பாவ மன்னிப்பை வேண்டி நிற்பது நம் மீதுள்ள நீங்கா கடமையாகும். கடந்த காலத்தில் செய்த பாவங்களை எண்ணி வருந்தி, அவற்றை மீண்டும் செய்யாதிருப்பதே பாவ மீட்சியின் வரைவிலக்கணமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அதுதான் அழகிய, அரிய முன்மாதிரியாகும்.
தொடரும்...
அதிரை அஹ்மது [தமிழாக்கம்]
மூலாசிரியர் : மிர்ஸா யாவர் பெய்க்
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் புத்தகத்திலிருந்து....

தினசரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2014 | , ,

(*)அச்சுத் தாயின்
முதற் குழந்தை
இந்தச் செய்தித்தாள்.

(*) ஒரு கையில் தேநீர்,
மறு கையில் செய்தி..
இரண்டுமே சுடச் சுட
இருப்பது தான்
அதிகாலை ஆனந்தம்.

(*) ஒரே நாளில்
உயர்விழந்துப் போகும்
இவை
நிரந்தரமின்மையின்
நிதர்சனம்.

(*)செய்தித்தாள்களுக்குப் பின்னால்
இருக்கும் உழைப்பாளர்களின்
எண்ணிக்கை,
செய்திகளிலிருக்கும்
எழுத்துக்களின் எண்ணிக்கையை
ஒருவேளை
ஒத்திருக்கக் கூடும்.

(*) பேருந்து, ரயில்களில்
இரவல் வாங்கப்படும்
பத்திரிகைகள்
'செய்திகள் எல்லோருக்கும்
பொதுவானவை' என்பதை
சூசகமாய்ச் சொல்லும்.

(*) செய்திகளுக்கு
மட்டுமானதல்ல
இந்தச்
செய்தித்தாள்கள்.

இன்றைய செய்தித்தாள்கள்
இனி நாளை முதல்..

(*) ஓர் ஏழை மாணவனின்
புத்தக உறையாக..

தெருவோர தேநீர்க்கடையில்
வடையிலிருந்து
எண்ணெய் அகற்றும்
வடியாக..

முன்பதிவில்லா
புகைவண்டிப் பெட்டிகளில்
விரித்து அமரும்
பாயாக..

சில்லரை மளிகையில்
சர்க்கரை மடிக்கும்
சுருளாக..

(*) இன்னும் பலவாக..
இரண்டாம் முறையாய்
பயன் தந்து
மரித்து மக்கிப்
போகும்.

அதிரை என்.ஷஃபாத்
12-01-2013

நிலவே! நீதான் பிறையா !? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2014 | , , ,


நிலா நிலா - ஓடிவா
நில்லாமல் - ஓடிவா !
மலை மீது - ஏறிவா
மல்லிகைப் பூ - கொண்டுவா !
- நினைவில் இருக்கும் சிறு வயதுப் பாடல்

நிலவு, நிலா என்று கவிதைகளிலும் கதைகளிலும் கதாநாயகியாக சித்தரிக்கப்படும் சந்திரன், இதுதான் பூமிக்கு மிக அருகாமையில் (சுமார் 4,06,899 கிலோ மீட்டர் தூரம்) இருப்பதால் நாம் தினமும் சர்வ சாதாரணமாக கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றாகத் தெரிகிறது. பூமியை நான்காகப் பிரித்து மூன்று பங்கை நாம் (மனைகளாக) வைத்துகொண்டால் பாக்கி என்னவோ அதுதான் நிலவின் சுற்றளவு , அதாவது சுமார் 10,927 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதுதான் அந்த நிலா. அட! நமதூர் நிலங்களை வாங்கி விற்கும் ப்ரோக்கர்களை அங்கு அனுப்பினால் கிடைக்கின்ற இடங்களை அங்கு சிறு சிறு பாகங்களாக, சந்தும் பொந்துமாக, சாக்கடை ஓடக்கூட வழிவைக்காமல் துண்டு துண்டாக மனை போட்டுவிடுவார்கள்!.

நிலவை உற்று நோக்கினால் வட்டவடிவப் பகுதிக்கு நடுவே சிறு சிறு துகல்கள் போல் மங்கலாகக் கருப்பாக தெரியும் அது நிலவில் உள்ள மலைப் பகுதிகள். அந்த மலைப் பகுதி சூரிய வெளிச்சத்தை அதிகமாகப் பிரதிபலிக்காததால் நமக்குக் கருமை நிரமாகத் தெரிகின்றது நமது பூமியில் உள்ள மலைச் சிகரங்களில் மிக உயரமானது இமயமலையில் உள்ள everest சிகரம்.அதன் உயரம் 8,848 மீட்டர் (1955 ஆம் ஆண்டு இந்தியாவால் அளக்கப்பட்டது) ஆனால் நிலவில் உள்ள லைப்ரிட்ஸ் என்னும் மலை கிட்டத்தட்ட 10,600 மீட்டராகும். நிலவில் 120 டெசிபலை (நம் காதுகள் இந்த சப்தத்தில் செவிடாகிவிடும்) சப்தம் போட்டாலும் வெளியோ கேட்காது (நமதூர் குற்றால குளியல் பர்ட்டிகளின் சப்தமெல்லாம் அங்கு எடுபடாது) காரணம் சப்தத்தை கடத்த அங்கு அசைந்தாடும் காற்று இல்லை.

சூரிய ஒளி நிலவில் பட்டு அது பூமிக்கு வந்து சேர 1.3 வினாடிகள் ஆகிறது அதே சூரிய ஒளி சூரியனில் இருந்து நேரடியாக பூமிக்கு வர பல நிமிடங்கள் ஆகும் காரணம் சூரியன் தூரத்தில் இருப்பதால் வெளிச்சம் வந்து சேர தாமதம் ஆகும். சூரியன் அதே நிலவு இருக்கும் தூரத்தில் இருந்தால் (பூமி) நமலேல்லாம் கரிக்கட்டைதான் (அந்தோ கபாப் தான் போங்கள்)!. நிலவிலும் பூமியில் இருப்பது போல் எரிமலைகள் உள்ளன அதில் ஒலிம்பஸ் மான்ஸ் என்ற எரிமலை 3 கிலோ மீட்டர் உயரமும் 600  கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. 

நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்களும் 7 மணி நேரமும் 43 நிமிடங்களும் 11. 47 வினாடிகளும் ஆகும். நிலவின் இழுவிசை பூமின் இழுவிசையில் ஆறில் ஒரு பங்குதான். நாம் நிலவில் நின்று கொண்டு துள்ளிக் குதித்தால் அப்படியே ஸ்லோ மோஷனில் மேலும் கீழும் மிதந்து வருவோம்! நிலவு பூமியை மணிக்கு 3,700 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றது. சாதாரணமாக பயணிகள் விமானம் அதிகபட்சமாக 1000 கிலோ மீட்டர் வேகத்திற்குள் தான் பறக்கும். 

சில நேரங்களில் வானில் மேகமூட்டம் காணப்படுவதால் பிறையைக் காண்பதில் சிரமம் ஏற்படும் இது போன்ற நேரங்களில் நாம் சிறுவயதில் யோசிப்போமே நமது விமானப்படை விமானங்கள் மூலம் மேக மூட்டத்தை விளக்கிச் சென்று மறைந்திருக்கும் பிறையைப் பார்க்க ஏற்பாடுகள் செய்தால் நோன்பு வைப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உள்ள பெரும் குழப்பங்கள் தடுக்கப்படலாம் அல்லவா என்று ? ஆனால் நமது நாட்டு விமானப்படை மிக்20 மற்றும் மிராஜ் 2000 ரக அதி நவீன போர் விமானங்களைத் துரு பிடித்துத் தூக்கி போடுவார்களே தவிர இதுபோன்ற காரியங்களுக்குப் பயன் படுத்தவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். அது நம் சிறுவயது கனவுதான்.

சவுதியில் இருந்து நம்மைத் தாண்டி (இந்தியாவை) இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவில் எல்லாம் சவுதியில் நோன்பு என்றால் அங்கும் நோன்பு, சவுதியில் பெருநாள் என்றால் அங்கும் பெருநாள் கொண்டாடி விடுகின்றனர். அங்கு எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், நாம் மட்டும் (இந்தியாவில்) இரண்டு பெருநாள் மூன்று பெருநாள் என்று ஆளுக்கு ஒரு இயக்கப் பெருநாள் கொண்டாடி நம் ஒற்றுமையை உருக்குலைத்துக் கொள்கின்றோம்.

இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அனைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் ஒற்றைச் சொல்லை எட்டிப் பிடிப்போமா ?
மெய்யாலுமே இது ஒரு மீள்பதிவுதானுங்க !
Sஹமீத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு