Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம் ! [தொடர் - 1] 5

அதிரைநிருபர் | May 31, 2015 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முகவுரை:

மனிதன் தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான வாழ்வாதாரங்களை தேடி அலைகிறான். அதற்காக அவன் பல்வேறு வழி முறைகளை தெரிவு செய்கிறான். மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழி காட்டும் இஸ்லாம் மனிதன் தன்னுடைய வாழ்வாதாரங்களை எவ் வழியில் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறையையும் சொல்லித் தறுகின்றது.

பொதுவாகச் சொன்னால் இஸ்லாம் எதையெல்லாம் ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று சொல்கிறதோ அது போன்ற காரியங்களிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் ஈட்டுவதை இஸ்லாம் தடை செய்து ஏனைய வழிகளில் பொருள் ஈட்டுவதை அனுமதித்துள்ளது. சிலர் கேளியாகவோ அல்லது தர்க்க ரீதியாகவோ "நாய் விற்ற காசு குறைக்குமா?" என்று கேட்பதுண்டு. நிச்சமாக நாய் விற்ற காசு நாளை மறுமையில் குறைக்கும்(தீவினையைப் பெற்றுத் தறும்) என்பதில் எந்த இறை நம்பிக்கையாளருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவ்வாறு சந்தேகம் கொள்பவர் இறை நம்பிக்கையாளராகவும் இருக்க முடியாது.

மேலும் சில நேரங்களில் சில காரியங்களை இது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா? என்று தீர்மானம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. அது சமயம் செய்வதறியாது சிலர் திக்கு முக்காடிப் போவதுமுண்டு. இது போன்ற சூழ்நிலைக்கும் இஸ்லாம் மிகவும் எளிமையான முறையில் வழிகாட்டுகிறது. அதாவது "ஹராமும் தெளிவு, ஹலாலும் தெளிவு இதற்கிடையில் சந்தேகமானதை தவிர்த்துவிடுங்கள்". மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்.. அவர்கள் இதற்கு ஒரு அழகிய உதாரனத்தையும் சொன்னார்கள். அதாவது "உங்களுடைய கால்நடைகளை வரப்பிலே மேய்க்காதீர்கள்!" ஏனெனில் அது வரப்பிற்கு உள்ளே மேய்ந்ததா அல்லது வரப்பிற்கு வெளியே மேய்ந்ததா? என்று இனம் காண முடியாது என்பதற்காக. அதே போலத்தான் நாம் சந்தேகமான காரியங்களில் ஈடுபடும் போது நாம் அனுமதிக்கப்பட்டதை செய்தோமா அல்லது விலக்கப்பட்டதை செய்தோமா? என்று தெரியாது. ஒரு வேலை நாம் ஈடுபட்டது விலக்கப்பட்ட காரியமெனில் அது நாளை மறுமையில் அல்லாஹ்விடத்திலே தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

**************************************************************************

ரியல் எஸ்டேட்:


கால ஓட்டங்களுக்கேற்ப மனிதர்கள் பொருளீட்டுவதற்கான புதுப் புது வழிமுறைகளை கையாள்வதுண்டு. சில காலகட்டங்களில் சில வகையான தொழில்கள் கோலோச்சியிருக்கும். அந்த வரிசையில் சமீபகாலத்தில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்றுதான் ரியல் எஸ்டேட் தொழில்.

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது இந்த ரியல் எச்டேட் தொழில் என்பது யாவரும் அறிந்ததே. உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக நமதூரில் என்றும் ஏறு முகம்தான். எனவே தான் நம்தூரில் மட்டும் தோராயமாக வீட்டிற்கு ஒரு தரகர் இருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு ஏராளமான ரியல் எஸ்டேட் தரகர்கள் இருக்கிறார்கள்.

விவசாய நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொன்டிருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரனம் நமதூரில் இருக்கும் வழக்கம். அதுதாங்க பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வீடு கட்டிக் கொடுப்பது. [இப்பழக்கம் பெரும்பாலோரால் விமர்சிக்கப்பட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இதன் நிலை என்ன என்பதை அல்லாஹ் நாடினால் வேறொரு பதிவில் பார்க்கலாம்]. இதனால் ஏறிக்கொன்டே இருக்கும் வீட்டுமனைகளின் விலையும் கூடிக்கொன்டே இருக்கும் தரகர்களின் எண்ணிக்கையும் ஏழைகளை பெரு முச்சு விட வைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா என்று நடுத்தர வர்க்கத்தினரையும் ஏங்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் இத் தொழில் அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்?

மார்க்க அனுமதி:

இந்த ரியல் எஸ்டேட் தொழிலின் மார்க்க அனுமதி பற்றி பார்ப்பதற்கு முன்னால் ஒரு விசயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வோம். மனித சமுதாயத்தின் சுபிட்சமான வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கமான சட்டங்களையும், தெளிவான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளது. இருப்பினும் மனித சமுதாயத்தின் பெரும்பகுதி இஸ்லாமின் வழிகாட்டுதலை பின்பற்றாமையே இன்று மனித சமுதாயம் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரனம்.

பதுக்கல்:

அத்தியாவசியப் பொருட்களை தேக்கி வைத்து சந்தையில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் போது விற்பனை செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. மாறாக இதை பெருங்குற்றமென இஸ்லாம் பரை சாற்றுகிறது. பதுக்கல் இந்திய சட்டத்தின் படியும் குற்றமாகும். இங்கே பதுக்கலைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஐய்யம் ஏற்படலாம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இம்மூன்றும் இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். உணவுப் பொருட்களைப் பதுக்குவது கூடாது என்று விளங்கி வைத்திருக்கிற நாம் உறைவிடங்களைப் பதுக்குவதைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஒரு காரியத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் புரிந்து கொன்டோம் என்றால் பின் அது அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா என்பதை விளங்குவது எளிமையாகிவிடும். பொதுவாக வர்த்தகத்தில் ஒரு பொருள் எத்தனை கை மாறுகிறதோ அந்த அளவிற்கு அதன் விலை உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நாம் என்ன செய்கிறோம் எதிர்காலத்தில் விலை ஏறும் போது விற்கலாம் என்று வீட்டு மனைகளை வாங்கி பதுக்கி வைக்கிறோம்! நம்மிடத்தில் வருகிற தரகர் அப்படியான ஒரு திட்டத்தோடுதான் நம்மை அனுகுவார். இன்ன இடத்திலே இன்னார் மனை போட்டிருக்கிறர், நல்...ல இடம், இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இது சென்டராகிவிடும், இப்பொழுது ஒரு இலட்சம் கொடுத்து வாங்கினால் ஒரிரு ஆண்டுகளில் 5, 6 இலட்சம் விலை போகும், அதற்கு முன்னால் இருக்கிற மனை இப்போ 3 இலட்சத்திற்கு கேட்கப்படுகிறது என்று நமக்கு பொடி வைப்பார். மேலும், 40 மனை போட்டார்கள் எல்லாம் போச்சு, அவர்களுக்காக முகப்பில் 4 மனை வைத்துக் கொன்டார்கள், இப்பொழுது ஒரு 7, 8 மனை தான் மீதி இருக்கிறது, நாம் தாமதித்தால் அதுவும் போய்விடும் என்று நம்மை அவசரப்படுத்துவார்.

இப்பொழுது நாம் அந்த மனைய வாங்கப்போகிறோம்! இங்கே நம்மைத் தூண்டியது பண ஆசை! சில ஆண்டுகள் இதைப் பதுக்கி வைத்து பின் விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற பண ஆசை! பணம் சும்மா வங்கியில் தானே கிடக்கிறது அதை இதில் போட்டு முடக்குவோம் என்கிற முடிவுக்கும் நாம் வந்துவிடுகிறோம். நம்முடைய சக்திக்கேற்ப 1, 2, 3, 4 என்று வாங்கி பதுக்கிக் கொள்கிறோம். சில ஆண்டுகளில் நமக்கு பணத் தேவை ஏற்படும் போது வாங்கிய நிலத்தை விற்போம்! அப்பொழுது தரகர் மற்றொருவரிடத்திலே போய் ஒரு வருசம் தான் ஆகிறது ஒரு இலட்சத்திற்கு நான் தான் வாங்கிக் கொடுத்தேன், இப்பொ 4 இலட்சத்திற்கு அந்த ஏரியாவிலேயே மனை கிடையாது, அவங்களுக்கு விற்க மனசு இல்லை, இருந்தாலும் அவசரத் தேவைக்காக கொடுக்கிறார்கள், நான் உங்களுக்கு 3 மனையையும் சேர்த்து 10 இலட்சத்திற்கு முடிச்சுத் தருகிறேன் இன்னும் 2 வருசம் போனா ஒரு மனை 10 இலட்சம் போகும் என்று பழைய சோப்பை மறுபடியும் அப்படியே போட்டு அந்த நிலத்தை வாங்க வைப்பார். இப்படியாக கை மாற்றி, கை மாற்றி அந்த நிலத்தின் விலையை அப்படியே ஏற்றி விடுவார்.

ஒன்றை நாம் உற்று கவனிக்க வேன்டும். அதாவது இங்கே நிலம் ஒரு வியாபாரச் சரக்காக பயன்படுத்தப் படுகிறது! அப்படி என்றால் நீங்கள் விற்பனக்காக வைத்திருக்கிற ஒரு பொருளை விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைத்திருந்தால் அதற்குப் பெயர் பதுக்கல் அல்லாமல் வேறென்ன?

அடுத்தாக, இப்படி பணம் இருப்பவர்கள் மாறி, மாறி நிலத்தைக் கைமாற்றி விலையை ஏற்றினால் அத்தியாவசியமுல்ல ஏழைகளுக்கு எவ்வாறு வீட்டுமனை கிடைக்கும்? சாமானியர்கள் / ஏழ்மையிலிருப்பவர்கள் எவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்க சக்தி பெறுவார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

**************************************************************************

சிந்தனைக்காக:

அப்படியே சற்று இதையும் சிந்தித்துப் பாருங்களேன்!

மனை போடப்படுகிறது! வாங்கிப் பதுக்கி வைப்பது கூடாது என்று அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக எவரும் வாங்கவில்லை! மனையின் விலையில் பெரிய ஏற்றம் ஒன்றும் இருக்காது! தேவையுடையவர்கள் தனக்குத் தேவையான அளவை தேவையான சமயத்தில் வாங்கிக் கொள்ளலாம்! காலத்திற் கேற்ப, இருப்பிற்கேற்ப விலையில் சிறிய ஏற்ற இறக்கம் மட்டுமே காணப்படும்! ஆனால் ஒவ்வொரு கையாக மாறுவதால் ஒவ்வொருவருக்கும் இலாபம், முத்திரைத் தாள் செலவு, பதிவருக்குக் கொடுத்த இலஞ்சம், தரகருக்குக் கொடுத்த தரவு(கமிஷன்), என்றும் எல்லாம் சேர்ந்து மனையின் விலையை அல்லவா உயர்த்திவிடுகிறது!?

மேலும், அவரவர் பணம் இருக்கிறது என்று 4, 5 வாங்கி பதுக்கி வைக்காததால் எல்லா மனைகளும் விற்றுத் தீர்ந்துவிடாது. அதனால் அதை அடுத்துள்ள தோப்பும், வயலும் மனைகளாக மாறிவிடாது! பேராசையால் இயற்கை அழிக்கப்படாது! விவிசாய நிலங்கள் வெறுமையாக்கப்படாது! விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்! அதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும்! அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராது! முத்திரைத் தாளுக்காக செலவளிக்கும் பணமும், பதிவருக்குக் கொடுக்கும் இலஞ்சமும், தரகருக்குக் கொடுக்கும் தரவும் மிச்சமாகும்! ஆனால் பேராசையின் காரனமாக மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்!? இதுதான் எதார்த்தம்.

இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்! அதாவது எது இஸ்லாம் அங்கீகரிக்கும் முறையாக இருக்கும்? எது மனித சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்? எதை நாம் நடைமுறைப்படுத்த வேன்டும்? என்ற முடிவுக்கு இன்ஷா அல்லாஹ் இப்போது நாம் வர முடியும் என்று நம்புகிறேன்.

நிறைவுரை:

இங்கே ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நடைமுறையில் இருக்கின்றவற்றையும் அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் நான் அறிந்தமாத்திரத்திலே உங்கள் முன் உங்கள் சிந்தனைக்காக விட்டு விடுகிறேன். இவ்விசயத்தில் என்னுடைய நிலைபாடு அவசியமில்லாமல் நிலங்களை வாங்குவதும், விலை ஏறிய பின் விற்கலாம் என்று வைப்பதும் கூடாது, இஸ்லாத்தின் பார்வையில் அது தடுக்கப்பட்டது என்பதே!

மேலும் இங்கே மானுடன் சொத்துக்களை வாங்குவதும், தன்னை வளப்படுத்திக் கொள்ளவதும் கூடாதா? என்ற கேள்வி எழும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

இது என்னுடைய சிந்தனையில் உதித்தது! மனிதன் என்ற அடிப்படையில் நானும் தவறிழைக்கக்கூடியவனே. மேலும் என்னுடைய கருத்தாடலே தவிர முடிவனதல்ல. அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய தூதரின் வழிகாட்டுதலுமே இறுதியானது. இஸ்லாத்தின் ஒளியில் மாற்றுக் கருத்து சொல்லப்பட்டால் அதை ஏற்காமல் மன முரன்டாக இருப்பதைவிட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்

அன்புடன்
அபு ஈசா

**************************************************************************

மற்றுமொரு துவக்கவுரை!

ஆன் லைன் வர்த்தகம்...
பங்குச் சந்தை முதலீடுகள்...

இப்படியாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)...

எனக்கொரு ‘என்கவ்ன்ட்டர்’ ! 8

அதிரைநிருபர் | May 30, 2015 | , ,


எவரோ ஒருவர் பின்னாலிருந்து என் கண் கட்டை அவிழ்த்து விட்டார். ஆனால், பின்னுக்கு இழுத்துக் கட்டப்பட்ட என் கைகள் இரண்டும் மட்டும் அவிழ்க்கப்படவில்லை.

பார்வையைத் தெளிவாக்குவதற்கு, கண்களைக் கசக்கிப் பார்க்க முடியவில்லை.  என் கைகள்தாம் கட்டப்பட்டிருக்கின்றனவே!

தெளிவற்ற வெளிச்சத்தில், அது ‘பாம்பே’ (மும்பை) போல் தெரிந்தது.  ஹிந்தியும் மராட்டியும் பேசிக்கொண்டு, மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரும் புதிருமாகப் போய்க்கொண்டிருந்தனர்.

என்னைச் சுற்றிப் பார்த்தேன்.  என்னைக் கண்டும் காணாமலும் காவலர்கள் சிலர், ‘மஃப்ட்டி’யில்.

“ஏ க்யா ஜகா ஹே?”  சற்றே துணிவை வரவழைத்துக்கொண்டு, என்னைச் சுற்றி நின்றவர்களிடம் கேட்டேன்.

“ரே!  ச்சுப்!” என்று எச்சரித்தான் ஒருவன்.  நான் பேசவே கூடாதாம்!

“அரே ட்டமில் வாலா ஹிந்தி பாத் கர்த்தா ஹை!” இன்னொருவன் வியப்பில் வீழ்ந்தான்.

“அரே!  தும்  பீ.....?”  கண்ணை உருட்டிப் பார்த்தான் முதலாமவன்.

இவன் அவனுடைய உயர் அதிகாரி போலே.

“சோரி சார்.”  உதடுகளை சப்பிக்கொண்டு, நிலத்தில் கண்களைப் பதித்தான் அவன்.

“தும் கிதர் ஹை, மாலும்?” உயரதிகாரி என்னைப் பார்த்துத் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“’தும் கிதர் ஹோ?’ போல்னா.”  நான் அவனுடைய ஓட்டை ஹிந்தியைத் திருத்திக் கொடுத்தேன்.

“ஓ!  தும் கடிபோலி ஹிந்தி போல்த்தே ஹோ?  ரேய்!  தும் பாத் நை கர்னா..!?”  முதல் எச்சரிக்கை அது, எனக்கு.

ரோட்டோரத்தில் வந்து நின்ற MTC பஸ்ஸில் என்னை ஏற்றி, அவர்களும் ஏறிக்கொண்டார்கள்.  பஸ் பறந்தது.

என்னை உள்ளே தள்ளினார்கள்.  “ஆரே!” (வாடா) என்ற பெண் குரல்!  நிமிர்ந்து பார்த்தேன்.  என்னால் சகிக்க முடியவில்லை.  அவ்வளவு அலங்கோலம்!  ‘ரெட்லைட் ஏரியா’க்காரியோ?

பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது, என்னைத் தள்ளிக்கொண்டு இறங்கினர் என்னுடன் வந்த அந்த இருவரும்.

சிறிது தூரம் நடந்தே சென்று, கட்டியும் கட்டாமலும், பாதியில் நின்ற பலமாடிக் கட்டடத்தை அடைந்தனர்.  அங்கு ‘லிஃப்ட்’ இன்னும் பொருத்தப்படவில்லை.

ஏறினோம்.  இல்லை, என்னை ஏற்றினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  எத்தனையாவது தளத்திற்கு அழைத்துவரப்பட்டேன் என்பது தெரியாது!

பெரிய ‘ஹால்’ போல் இருந்த இடத்திற்குள் தள்ளப்பட்டேன் நான்.  அங்குக் கண்ட காட்சி, எனக்கு ஓங்காரம் எடுத்தது.  Naked ஆகப் படுத்துக் கிடந்த வாலிபர்கள் இருவர், ‘ஹெராயின்’ புகைத்த புகையை உள்ளுக்குள் இழுத்து, ஒருவன் முகத்தில் மற்றவன் ஊதி விளையாடிக் கட்டிப் புரண்டார்கள்!  அதையடுத்து நடந்தது இன்னும் அசிங்கம்!  இருவேறு பாலினர் போல் இதழ்களைச் சுவைத்துக்கொண்டனர்!  ஐயோ, சகிக்கவில்லை!

“லேட் ஜாவ்!  ஸோ ஜாவ்!”  அந்த மும்பை நகரத்தில் உள்ள இந்த நரகத்தில் படுத்து, உறங்கவும் சொல்கிறான்!  உறக்கமா வரும்?

தன் உதவியாளனைப் பார்த்து, “இஸ்க்கூ பக்டோ” என்று ஒரு பேப்பரைக் கொடுத்தான்.

அந்த அரை வெளிச்சத்தில் பேப்பரை எட்டிப் பார்த்தேன்.  பல மொழிகளில் அதில் கிறுக்கப்பட்டிருந்தது.  அவற்றுள் என் தங்கத் தமிழும் ஒன்று.  அந்தோ!  அது பட்ட பாடு?  அலை கடலுக்குள் அடித்து விரட்டப்பட்ட பர்மிய ‘ரோஹிங்க்யா’ முஸ்லிம்களைப் போன்று இருந்தது!

“ஏய் ட்டமில்வாலா!  துமாரா நாம் கிதர் ஹே?  இஸ் மே பத்தாவ்!” என்றான் காவலன்.  ஒருவாறு பாடுபட்டுத் தேடி, என் தாய்த் தமிழ் இதுதான் என்று கண்டுபிடித்தேன்.  அதில் எழுதியிருந்த பெயர் எனது பெயரன்று!

“ஏ மை நஹீன்.  மேரா நாம் இஸ் மே நஹீன்” என் பெயர் அதிலில்லை என்று மறுத்தேன்.  அடுத்து வந்தவை, அடி!  தள்ளல்!!

“ஹே போலோ யார்” – உண்டு என்று சொல்லப்பா என்றான் அடுத்து நின்ற ‘குற்றவாளி’.  அதனால், “ஹை” என்று சொல்லி, துடிக்கும் என் ஆட்காட்டி விரலை வைத்தேன்.  இல்லாவிட்டால், அடி விழும்!

சென்னையில் இருந்தபோது ‘ழுஹர்’ தொழுகை முடிந்தவுடன், “பசி பிக்கிது” என்று என் நண்பர் ஒருவர் வயிற்றில் கை வைப்பார்.  ஆனால், இன்று மும்பையில் அது, பற்றி எரிந்துகொண்டிருந்தது!  என்ன செய்வது?

எனக்குக் காவலாக நின்றவனிடம், முகத்தில் பரிதாபத்தைத் தேக்கி, வயிற்றைக் காட்டினேன்.

அவ்வளவுதான்!  “பூக் லக்தா ஹை?” என்று கேட்டு, வாயருகில் ஒரு குத்து விட்டான்!  ‘வலிக்குதா?’ என்று கேட்பது போல் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “இஸ்கூ காவோ!  இஸ்கூ பீவோ” என்று, தான் சிகரெட் புகைத்துவிட்டு, சட்டென்று அனைக்க உதவிய கால் கிளாஸ் தண்ணீரையும், அடுத்துக் கிடந்த சிகரெட் பாக்கெட்டையும் காட்டினான்;  வற்புறுத்தவும் செய்தான்!

அதாவது வயிற்றுக்குள் போகட்டுமே என்ற நினைப்பில், சிகரெட் பாக்கெட்டைத் துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம் என்று முடிவெடுத்தேன்!  அப்போது......

“அல்லாஹும்ம சல்லியலா செய்யதனா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதனா முஹம்மதின்.......” என்ற குரல் கேட்டது!  ‘இது, ‘தக்வாப் பள்ளி’ மோதினார் ஹாஜா ஷரீபின் குரல் அல்லவா?  இவர் எங்கே இங்கு வந்தார்?’ என்று வியந்து, கண்ணைக் கசக்கினேன்.  ஆம்;  அது நேற்றைய ‘ஸுப்ஹ்’ தொழுகைக்கான ‘பாங்கு’!

கனவு கலைந்தது!  எனக்கு ஏனிந்தக் கனவு?  “அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” என்று என் வாய் மொழிந்தது.

விழித்தெழுவதற்கான ‘துஆ’வை மொழிந்துகொண்டு, எழுந்து ‘உழு’ செய்யப் போனேன், கண்ட கனவை அசை போட்டுக்கொண்டு!  

அதிரை அஹ்மத்

சகோதரத்துவப் புத்தமைப்பு 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2015 | ,

:::::: :தொடர் - 25 :::::::
அன்று, முஸ்லிம்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தமது பிறந்தகமான மக்காவை விட்டு மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்து சேர்ந்தபோது, மதீனாவின் அரசியல் சூழ்நிலை மக்காவின் சூழ்நிலையை விட்டு மாறுபட்டிருந்தது.  பழமையான அரபுகளும், அவர்களுள் முஸ்லிம்களான சிலரும், மதீனாவுக்கு உரிமை கொண்டாடி வந்த யூதர்களுமான கலப்புச் சமுதாயமாக இருந்தது.

அந்த நிலையில், இறைநம்பிக்கையின் அடிப்படையில், புதிய சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, மதீனத்து முஸ்லிம்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பாக இருந்தது.  அந்த ஒற்றுமைச் சமுதாயமானது, ஆண்டாண்டுகளாக இருந்துவந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாகவும் இருந்தது.  இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியின் அடிப்படையில், இறைவன் அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருந்த வேதக் கட்டளைகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டிய புத்தமைப்பாகவும் இருந்தது.  அந்த இஸ்லாமிய ஆட்சியைச் செயல்பாட்டில் கொண்டுவர, அல்லாஹ்வின்  கட்டளைகள் ‘வஹீ’ என்னும் வேத வெளிப்பாடுகளாக நபியவர்களுக்கு வந்துகொண்டிருந்தன.

அவற்றுள் ஒன்று, இப்படியும் இருந்தது:  “இறைநம்பிக்கை கொண்டவர்களே!  உங்கள் தந்தையரும், உங்கள் சகோதரர்களும், ஓரிறைக் கொள்கையைவிட இறைமறுப்பைத் தேர்ந்தெடுப்பார்களாயின், (அவர்களை) உங்களுக்குப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களே உங்களுள் வரம்பு மீறியவர்கள்.  (நபியே!) நீர் கூறும்:  உங்களுடைய தந்தையரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் நெருங்கிய உறவினரும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வமும், உங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சும் உங்களுடைய வியாபாரமும்,  நீங்கள் ஓய்ந்து நிம்மதி அடையும் இல்லங்களும்,  அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைவழியில் போரிடுவதையும்விட உங்களுக்கு விருப்பமானவையாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளைப்படி  (வேதனையைக் கொண்டு) வருவதை எதிர்பார்த்து இருங்கள்.  பாவிகள் கூட்டத்தை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.”                                                                             (9:23,24)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே!  என்னுடைய எதிரிகளையும் உங்களுடைய எதிரிகளையும், நேசம் வைத்துள்ள தோழர்களாக்கிக் கொள்ளாதீர்கள்.  ஏனெனில், அவர்கள் ‘தீனுல் இஸ்லாம்’ எனும் உண்மை மார்க்கத்தை ஏற்காமல் மறுத்துவிட்டனர்.  உங்களுடைய இரட்சகனான அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நம் தூதரையும் உங்களையும் (மக்காவை விட்டு) வெளியேற்றுகின்றனர்.  எனது பாதையில் போரிடுவதையும், எனது பொருத்தத்தை நாடியும் நீங்கள் வெளிப்படுவீர்களாயின், அவர்களை (நீங்கள் நண்பர்களாக) எடுத்துக்கொள்ளாதீர்கள்.“                               (60:01)

இன்னும் இதுபோன்ற வசனங்களை அவ்வப்போது இறக்கி, முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தான் அல்லாஹ். மக்கத்து இணைவைப்பாளர்களோடு கடந்த காலத்தில் செய்துகொண்ட உடன்படிக்கைகளையும் உறவு முறைகளையும் முறித்துக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தான்.  அரபுச் சமுதாயத்தில், இது போன்ற பிணைப்புகளும் ஒப்பந்தங்களும் பழமைக் காலம் முதற்கொண்டே புனிதமாக மதிக்கப்பட்டவையாக இருந்துவந்தன. ஆனால், ‘இஸ்லாம்’ என்னும் புதிய பாதை, புனித வாழ்க்கை மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களால் என்றைக்கு அறிமுகப் படுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து அரபுச் சமுதாய வழக்கத்தில் இருந்த பழக்க வழக்கங்கள்  மாபெரும் மாற்றத்திற்கு உள்ளாகின.  குர்ஆன் எனும் வேதமும், அதனுடன் இணைந்த தூதுத்துவமும் அந்த அரபுச் சமுதாயத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி, நபியையும் நபித்தோழர்களையும் அந்த மாற்றங்களுக்கு உடன்பட வைத்தன.  

இனப் பிணைப்பைவிட, இஸ்லாமியப் பிணைப்பு மேலானது என்று நபித்தோழர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள்.  கடந்த காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தார்களோ, அவற்றை எல்லாம் மறந்து,  புதிய வாழ்க்கை நெறியான இஸ்லாம் ஒன்று மட்டுமே நிலையான வாழ்க்கைக்கு உரியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.  எந்த ஒரு கொள்கைக்கும் உண்மையான சோதனை, அக்கொள்கையை நடைமுறைப் படுத்துவதில்தான் ஏற்படும்.  நபியவர்களின் தலைமையில் இருந்ததால், நபித் தோழர்கள் தமக்கு முன்னால் இருந்த சோதனையில் சாதனை புரிந்து வெற்றி பெற்றார்கள்.  

அதன் பின்னர், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் எந்த அடிப்படையில் ஒன்றிணைவது என்பது பற்றிய நெறிமுறைகளைத் தன் வேதக் கட்டளைகளால் அந்தத் தோழர்களுக்கு அல்லாஹ் வழி வகுத்துக் கொடுத்தான்.  அவர்களுள் உண்மையான நண்பர்கள் யார், யார் அவர்களின் எதிரிகள் என்று தன் வேதக் கட்டளைகள் மூலம் நெறிப்படுத்திக் கொடுத்தான். உண்மையான நண்பர்கள் யார், அவர்களின் தன்மைகள் யாவை என்பதை அறிந்துகொள்ளும் விதத்தில் நட்புறவு கொள்ளுமாறு அந்த நபித் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தான்.  வேதம் கொடுக்கப்பட்ட முந்தையச் சமுதாய மக்கள் அல்லாஹ்வுக்கும் அந்தந்தக் காலத்தின் இறைத்தூதர்களுக்கும் மாறு செய்து, தமக்குரிய அழிவைத் தாமே தேடிக்கொண்டார்கள் என்பது பற்றிய வரலாறுகளையும் தனது வேதத்தின் மூலம் தெளிவு படுத்தினான்.  அந்த மக்கள் அந்த இறைநெறியைக் கடைப்பிடித்து நடந்தால் வெற்றியும், அதனைப் புறக்கணித்தால் மறுமைத் தண்டனையும் உண்டு என்பதைத் தெளிவு படுத்தினான்.

அந்த வழிகாட்டல், இவ்வாறு அமைந்தது:  “அல்லாஹ்வும் அவன்தன் தூதரும் இறைநம்பிக்கையாளர்களுமே உங்களுக்கு உற்ற நண்பர்களாவர்.  அவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாகவும், தொழுகையை நிறைவேற்றுபவர்களாகவும், ஜக்காத்தை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்.  மேலும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் தோழர்களாக ஆக்கிக்கொள்வார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அவர்களே வெற்றியாளர்கள்.”                                                                                                (5:55,56)

இது போன்ற இறைவசனங்களின் மூலம், தீமையிலிருந்து நன்மையையும், பிழையிலிருந்து சரியானதையும், ஆண்டாண்டுகளாக நிலவிவந்த இனப்பகைகளுக்கு மாறான ஒற்றுமையையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இலகுவாகப் பிரித்தறிய முடிந்தது.  இதுவே புதிதாக அமைந்த மதீனத்துச் சமுதாயத்தினை ஒற்றுமையால் கட்டமைப்புச் செய்யக் கருவாகவும் அமைந்தது.  

சகோதரத்துவ சமுதாயத்தை உலகளாவிய ஒரு தலைமையின் கீழ் கட்டமைப்புச் செய்யத் தேவையான காரணிகளைப் பற்றி இதற்கு முன் விரிவாகப் பார்த்துவந்துள்ளோம்.  மறுபடியும் அவற்றை எடுத்துரைப்பது, ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தில் ஆக்கும் என்பதால், இனி நாம் அவற்றை விவரிக்க விரும்பவில்லை.   இங்கு நாம் வலியுறுத்த விரும்புவது, தலைமைத்துவத்தின் தொடக்க நிலையில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த தலைவரின் தகுதிகள் மற்றும் தன்மைகள், இஸ்லாம் கூறும் தலைமைத்துவத்திற்குச் சிறந்த சான்றுகளாக நிற்கும் என்பதே.  

பெருமானாரின் தனித்தன்மையும் ஒழுக்கப் பண்புகளும் இராஜ தந்திரமும் உயர்குடிப் பிறப்பும் இரக்க உணர்வுமான சிறப்புத் தன்மைகளே பொது மக்களைக் கவர்ந்து, அவர்களை இறைத்தூதரின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் இழுத்துக்கொண்டு வந்தன எனக் கூற முடியும்.  அக்காலத்து மக்கள் யாரும் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியின் உயர்வைக் கண்டு இஸ்லாத்தின் பக்கம் வரவில்லை.  மாறாக, அம்மக்கள் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் உயர் பண்புகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தவர்களே என்று கூறலாம்.  இஸ்லாத்தின் விழுமியங்களைச் சிந்தித்துப் பார்த்து, இறைத்தூதரின் தோழர்கள் என்ற தூய தன்மைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டவர்கள் யாரும் இருக்கவில்லை.  இறைத்தூதரின் தோழர்கள் – சீடர்கள் அல்லர் – தம் தலைவரை அனைத்தையும்விடவும்,  தமது உயிரைவிடவும் உயர்வாக மதித்தார்கள். இதோ, இதற்குச் சான்றாகும் இறைவாக்கு:

“இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட இந்த நபிதான் மிக்க முன்னுரிமைக்கு உரியவராவார்.  இவருடைய மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர். அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி, இறை நம்பிக்கையாளர்களையும் நாடு துறந்தவர்களையும்விட, நெருங்கிய உறவினர்களே அவர்களுள் சிலர் சிலரைவிட (சொத்தை அடைய) உரிமைப்பட்டவர்களாவர். எனினும், அவர்களில் சிலருக்கு ஏதேனும் நீங்கள் உதவி புரிய விரும்பினாலன்றி, (மரண வாக்குமூலம் செய்ய) உங்களுக்கு உரிமையுண்டு.  இது, வேதத்தில் கூறப்பட்ட விதிமுறையாகும்.”                               (33:6)

ஒரு தலைமைக்குக் கட்டுப்பட, அவரை நேசித்து, அவருடைய ஆணைகளை மதித்து, அவர் எடுக்கும் எந்த முடிவையும் மதித்து, தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமது இசைவை வழங்கித் தோழர்கள் ஒன்றிணைந்து இருப்பது, தலைமை எதிர்நோக்கும் இக்கட்டான தருணம் ஆகும்.  இந்த நிலையை, நபித்தோழர்கள் ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ நிகழ்ந்தபோது கண் முன்னால் கண்டார்கள். மக்கத்துக் குறைஷிகள் நபியவர்களின் முன் வைத்த நிபந்தனைகள் மக்காவாசிகளுக்குச் சாதகமானவை; முஸ்லிம்களுக்குப் பாதகமானவை.  அதனால் நபித்தோழர்கள் அவற்றை விரும்பவில்லை.  எனினும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற நிலையில் இருந்த அவர்கள் ‘கசப்பான மருந்தாக’ அவற்றை ஏற்றுக்கொண்டார்கள்.  அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசித்தார்கள்;  அன்னாரை நம்பினார்கள்; பெருமானார் தமக்கு வந்துகொண்டிருந்த ‘வஹி’யின் அடிப்படையில் செயல்படுபவர்கள் என்ற உண்மையால், தம் விருப்பத்தைப் பின்னால் தள்ளிவிட்டுத் தம் ஒப்பற்ற தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டார்கள்.

எதிலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பது, தலைமை எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாகும்.  மக்கத்துக் குறைஷியரின் படை மதீனாவை நோக்கி வந்து உஹது மலையின் அடிவாரத்தில் வந்து முகாமிட்டிருந்தபோது,  குறைஷிகள் மதீனாவைத் தாக்குவதிலிருந்து பாதுகாக்க முஸ்லிம்களிடம் இரண்டு  வழிகள் மட்டுமே இருந்தன.  ஒன்று, மதீனாவில் இருந்துகொண்டே குறைஷிப் படையை எதிர்கொள்வது.  அப்போது மதீனத்துப் பெண்களும் சிறுவர்களும் படை வீரர்களோடு இணைந்து போர் புரிவது.  இது, நபியவர்களின் விருப்பமும், நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையின் பரிந்துரையுமாக இருந்தது.  

இன்னொரு கருத்து, மதீனாவை விட்டு வெளியில் சென்று, உஹதிலேயே எதிரிகளைச் சந்திப்பது.  இது, பெரும்பாலான தோழர்களினதும், பத்ருப் போரில் கலந்து போர் செய்ய வாய்ப்பின்றிப் போன தோழர்களினதும் விருப்பமாக இருந்தது.  எதிரிப் படையைத் தமது புனிதப் பதியான மதீனாவுக்குள் நுழைய அனுமதிப்பது, வெட்கிக் குனியச் செய்யும் செயலாகும் என்பதே அவர்களின் மாற்றுக் கருத்தின் காரணம்.  இதைத் தோழர்களுள் பெரும்பாலோர் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.  இக்கருத்தில் மறைந்திருந்த உண்மையையும் நியாயத்தையும் ஓரிரு நிமிடங்களில் உய்த்துணர்ந்த பெருமானார் (ஸல்) அவர்கள், உடனே தம் வீட்டுக்குள் சென்று, தமது பாதுகாப்புக் கவசத்தை அணிந்தவர்களாக போருக்குப் புறப்பட ஆயத்தமாகி வெளிவந்தார்கள்!

ஆட்சித் தலைவர், ஆன்மிக வழிகாட்டி, போர்த்தளபதி என்ற அடிப்படைத் தகுதியில், நபியவர்கள் தம் தோழர்களைத் தமது ஆணைக்குக் கட்டுப்பட வைத்திருக்கலாம்.  அதற்கு மேல் ஒருவரும் மாற்றுக் கருத்தைக் கூறாமல் உண்மைத் தூதரின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருக்கலாம்.  ஆனால், நபியவர்கள் அதை விடுத்து, பெரும்பான்மைக் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.  

அன்றைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்தது.  தமது ‘குத்பா’ உரையில் அண்ணலார் அவர்கள், தம் தோழர்களை விளித்து, அன்று தொடங்க இருந்த போரில் உறுதியாகவும் வெற்றியை எதிர்பார்த்தும் இருக்குமாறு ஆர்வமூட்டினார்கள்.  

தொழுகை முடிந்த பின்னர் தோழர்களுள் சிலர், தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தமது கருத்திற்கு உடன்பட வைக்க மிகவும் அழுத்தம் காட்டிவிட்டோமோ என்றெண்ணி வருந்தினார்கள்.  அத்தகைய மதீனத்து நபித்தோழர்களுள் பிரபலமான  ஸஅத் பின் முஆத் (ரலி), உஸைத் பின் ஹுழைர் (ரலி) ஆகிய இருவரும் நபியவர்களிடம் வந்து,  நபியவர்களின் சொந்தக் கருத்துக்கு மாற்றமாக, தாம் தமது கருத்தை வலிமையாக வற்புறுத்தி, அவர்களின் மனத்தைப் புண் படுத்திவிட்டோமோ என்பதைக் கூறி வருத்தம் தெரிவித்தார்கள்.  ‘முஹாஜிர்’களின் பிரதிநிதியாக, அண்ணலாரின் சிறிய தந்தையும் தோழருமான ஹம்ஸா (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தனியறையில் இருந்தபோது அவர்களைச் சந்தித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.

அதைத் தொடர்ந்து அண்ணலார் (ஸல்) வெளியில் வந்து, தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:  “தன் நபிக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை,  அணிந்த போர்க் கவசத்தைக் கழற்றுவது நபிக்கு முறையன்று.” உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டேன் என்ற கருத்தில் இவ்வாறு கூறி, தம் தோழர்களைச் சமாதானப் படுத்தினார்கள்.  அதன் பின்னரே அண்ணலாரின் தோழர்கள் அமைதியுற்றார்கள். 

அதிரை அஹ்மது

அறிவுலக மேதை அலீ இப்னு அபீதாலிப் (ரலி) 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 17

போர்க்களத்தில் ஆர்த்தெழுந்தால் மூர்க்கமான வேங்கை அவர்! சூழ்ந்துகொண்டு வீழ்த்த வரும் பகைவர் முன்னே தன்னந் தனியே பாய்ந்து, சுற்றிச் சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று அவர்! அவர் குதிரையின் குளம்படிச் சத்தம் கிளப்பும் புழுதியின் புயல் வேகத்திலேயே எதிரிகள் இதயங்கள் வெடித்து வீழ்வர்! காற்றைக் கிழித்துச் சீறிப் பாய்ந்து வரும் அந்தக் கம்பீரக் குதிரையின் கனைப்பொலிதான் அக்கிரமக்காரர்களை அதிரவைக்கும் 'மலக்குல் மவ்த்' உடைய மரணமணிச்சத்தம்!

அவரை நோக்கி எதிரிகளால் எறியப்படும் ஈட்டிகளும்  அம்புகளும் அவர் இலக்கைத் தடைசெய்ய எத்தனிக்கும் இரும்புக் கேடயங்களும் சுற்றிச் சுழற்றப்படும் வாட்களும் எதிரிகள் பின்வாங்கிப் பதுங்கிக்கொள்ளும் கோட்டைகளும் கொத்தளங்களும் அந்த இரட்டைவாள் வீச்சாளர் மாவீரன் அலீயின் 'துல்ஃபிகார்' என்னும் வாள் வீச்சுக்கு முன்னால், ச்ச்சும்மா வெறும் அட்டைப் பொம்மைகள்!

போரில் மிகச் சரியாக வியூகம் வகுத்து எதிரியை ஒரு சில நொடிகளிலேயே மண்ணைக்  கவ்வச் செய்வது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களின் தனிச்சிறப்பாகும்! உதாரணமாக, பத்ருப்போர்! வீரபராக்கிரமன்  என்று வீணர்களால் போற்றப்பட்ட எதிராளி வலீதை நேருக்கு நேர் எதிர்கொண்டபோது ஒரு புழுதிப் படலம் தோன்றியதைத்தான் தோழர்களால் காண முடிந்தது. அடுத்த கணம் அலீ (ரலி) அவர்களால் பந்தாடிப் பிணமாக வீசி எறியப்பட்டான் வலீத்!

எதிரி சுதாரித்துக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் சில நொடி இடைவெளியில் அவனை அடித்து வீழ்த்தும் இந்தத் தனிக் கலையைத்  தன் ஒவ்வொரு தாக்குதலிலும் அலீ (ரலி) யின் பெயர் உச்சரித்தே அடித்து வென்றான் பிரபல குத்துச்சண்டை வீரன் முஹம்மத் அலீ கிளே! அந்தப் பெயர் சொல்லாமலேயே கவனமாய்க்  காய்நகர்த்தி அடித்தான் குங்ஃபூ கலைஞன் புரூஸ் லீ!

எப்படியும், இவர்கள் போன்ற களமிறங்கும் எல்லா வீரர்களுக்கும் 'நம்பர் ஒன் ரோல் மாடல்'   நம் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள்தான்!

ஹீரோ என்றால் அசிங்க நாற்றமெடுத்த அரசியல்வாதியைப்போல், சதைவெறி பிடித்த போலி ஆன்மீகவாதியைப் போல், செயற்கை அரிதாரம் பூசி வலம் வரும் சினிமா நடிகன்போல், தெருநாய்போல் ஊளையிடும் வெறிகொண்ட பாடகன்போல் நிச்சயமாக அல்ல! இதுபோன்ற எதிலாவது பிரபலமாகும் எவனும் ரசிகப் பட்டாளங்களையே விரும்புவான் அல்லது தனக்கென்று செலவு செய்து அப்படிப்பட்ட அடிவருடித் தொண்டர்களை உருவாக்குவான்!

ஆனால் 'அல்லாஹ்வின் சிங்கம்' அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் தன்னைக் கண்மூடித்தனமாக விரும்பிய, பின்பற்றிய, தனக்கு தெய்வீகத் தன்மையைக் கற்பித்த ரசிகர்களையே இந்தத்  'தனி மனித வழிபாடு' வரம்பு மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி தம் நேர்மையால், வீரத்தால் அவர்களையே அடித்து விரட்டிய அந்த 'நம்பிக்கையாளர்களின் தனிப் பெருந்தலைவர்' இதுவரை வரலாற்றில் அவர் ஒரே ஒருவர்தான்!

அவர்கள் ஷியா என்றும் காரிஜியா என்றும் ஸபாயியா என்றும் அலவீயா என்றும் ஃபாத்திமியா என்றும் இஸ்மாயீலியா என்றும் ஹஷ்ஷாஷியா என்றும் போரா என்றும் எந்தப் பெயரைச்சூட்டிக் கொண்டாலும் இவர்கள் அனைவருமே நம் கர்ம வீரர், அருமை வீரர் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களும் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் இதுபோன்ற வழிகெட்டவர்களுக்கு ஆதரவு அளிக்காததால் அறிவிழந்து போய் அவர்களையே எதிர்த்து நின்று குழப்பம் செய்தவர்களும்தான்!

அலீ(ரலி) அவர்கள் வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும் மிகவும் நேர்மையாக நடக்கக் கூடியவராகவும் உலக ஆதாயத்திற்காக வளைந்து கொடுத்துப் போகாதவராகவும் இருந்தார்கள்.

மொத்தத்தில் 'Straight forward' என்ற ஆங்கில வார்த்தைக்கு, சுருக்கமாக அலீ இப்னு அபீதாலிப் (ரலி) என்று நாம் அர்த்தம் எழுதிவிடலாம்!

எனினும் எளிமையானவர்! எல்லோரையும் அவர் எளிதாக சந்திப்பார்! ஆனால், 'தோல்வியை' மட்டும் அவர் இதுவரை சந்தித்ததேயில்லை!

அஞ்சா நெஞ்சன், ஆண்மையின் அடையாளச் சின்னம் அலீ (ரலி) பிறந்தது அல்லாஹ்வின் வீட்டில்! வளர்ந்தது அண்ணல் நபியின் வீட்டில்! வாழ்ந்தது சுவனத்தின் தலைவியுடன்! பெற்றெடுத்தது பேரழகன் ஹசனையும் பெரும்தியாகி ஹுசைனையும்! வீரமும் விவேகமும் ஒரே நேரத்தில் அணிகலன் கண்டிருந்த அற்புத நாயகர் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள்.

அலட்டல் பேர்வழியான அப்பாஸ் பின் மிர்தாஸ் என்ற கவிஞருக்கு ஒரு முறை சில ஒட்டகங்கள் பெருமானார் (ஸல்) சார்பாகப் பரிசளிக்கப்பட்டன! அந்தப் பரிசில்கள் அவருக்குப் போதவில்லை என்பதை சில வரிகளால் அவர் கவிதை பாடினார்!

அவரை அழைத்து 'உயய்னாவுக்கும் அல் அகராவுக்கும் சேர்த்து' என்ற கவிதை வரி மூலம்  மிர்தாஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதை உம்மி நபி (ஸல்)அவர்கள் விசாரித்தார்கள்! அருகே இருந்த அபூபக்ரு (ரலி) அவர்கள் நபியைப் பார்த்து, 'அண்ணலே! அது அப்படியல்ல! 'உயைனாவுக்கும் அல் அக்ராவுக்கும் சேர்த்து!' என்று திருத்தினார்.

கவிதைகள் பற்றி அரபி இலக்கணம் அறிந்திடாத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், 'அதைத்தானே நானும் சொன்னேன்! இரண்டும் ஒன்றுதானே!' என்று கூற, அபூபக்ரு (ரலி) மகிழ்ச்சி மிகுதியால் சிரித்துக் கொண்டே துள்ளிக் குதிக்கலானார்! அத்துடன், 'அல்லாஹ் (ஜல்) அல்குர்ஆனில் உங்களை எப்படி வர்ணித்து உள்ளானோ அப்படியே நீங்கள் இருக்கிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே!'

அதாவது 'அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை! அது அவருக்கு அவசியமானதுமில்லை' என்று இறைவன் சொல்வது போலவே இருக்கிறீர்கள் என்று உற்சாகத்தில் சான்றளித்தார் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் (1)

உடனே வள்ளல் நபி (ஸல்)அவர்கள், கவிஞர் மிர்தாஸுக்கு நூறு ஒட்டகைகள் அன்பளிப்பாக வழங்கினார்கள்! அது மட்டுமின்றி, தம் சபையில் இருந்த தோழர்களிடம் இவரை அழைத்துச் சென்று 'இப்படிப் பாடிய இவரது நாவைத் துண்டித்துவிடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். பெருமானாரின் இந்த வெளிப்படையான கட்டளையை அட்சர சுத்தமாக அமுல்படுத்த 'குத்துவாள்' உருவிப் பாய்ந்து வந்தார் உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள்.

ஆனால், ஞானத்தின் தலைவாயில் அலீ (ரலி) அவர்கள், மரண பயத்தால் நடுங்கி வெலவெலத்துப் போயிருந்த கவிஞர் மிர்தாஸின் கைபிடித்துக்  கருவூல அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். 'கவிஞர் அவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ அத்தனையும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். கவிஞரின் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை!

"என்னது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்படித்தான் என் நாவைத் துண்டிக்க உத்தரவிட்டார்களா?" என்று ஆச்சர்யமாய்க் கேட்டு நின்றார் கவிஞர் மிர்தாஸ்.

'ஆம். நிச்சயமாக, அதன் அர்த்தம் அதுவேதான்! என்று புன்னகை தவழக் கூறி நின்றார்கள் அறிவின் தலைவாசல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள். தாம் யாத்த கவிதை வரிகளை எண்ணி வெட்கத்தால் குன்றிப் போனார், அண்ணலின் அற்புத அரவணைப்பில் ஒன்றிப் போனார் மிர்தாஸ்!

அலீ-ஃபாத்திமா (ரலி) நிக்காஹ் நிகழ்ந்த அடுத்த நாள் காலை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) உடைய வீடு வந்து கதவைத் தட்டியபோது, திறந்தவர் அண்ணலின் வளர்ப்புத் தாய் பரக்காஹ்!

"ஓ, உம்மு அய்மன். என் தம்பியைச்  சற்றே கூப்பிடுங்கள்".

"தம்பியா? யார் அது?"

"அவர்தான் அலீ இப்னு அபீதாலிப்!"

"அவர் இன்னும் உங்களுக்குத் தம்பியா, அல்லாஹ்வின் தூதரே! நேற்றிலிருந்து அவர் உங்கள் மருமகன் அல்லவா?" என்றுசொல்லிச் சிரித்தார் உம்மு அய்மன் (ரலி)

புன்னகையுடன் தலையசைத்தார்கள் பூமான் நபியவர்கள். "அப்படியல்ல! எப்போதும் எனக்கு அவர் தம்பிதான்!"

ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு  வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறிவிட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவீயில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீ (ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர்மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே, "எழுந்திரும்! அபூதுராப். (மண்ணின் தந்தையே) எழுந்திரும்!" என்றார்கள். அவரது  உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்தச்  செல்லப்பெயர் நிலைத்துப் போனது. அவருக்கும் அது மிகப்பிடித்துப் போனது.  (2)

அகழிப்போர்! ஆயிரம் வீரர்களுக்கு நிகரான மாமல்லன் 'அம்ர் இப்னு அப்தூத்' என்பவனை எதிர்கொள்ள எல்லோரும் தயங்கி நின்றனர். அப்போது, அலீ (ரலி) எழுந்தார். "ஓ, அலீ. கவனம் தேவை! அவன் இப்னு அப்தூத்!". இது இறைத்தூதரின் எச்சரிக்கை!

நல்லது. "அவனைப் பற்றி நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதரே!" இது அலீயின் அடக்கமான  பதில்.

என்ன சாகசமோ அது! குதிரையின் மீதேறிப்  பாய்ந்து வந்தவன் மீது, குபீரென மின்னல் வெட்டியது போல ஒரு வேக வீச்சு அது! சற்று நிமிடத்தில் இப்னு அப்தூத் தன் உயரம் குறைந்து உயிர் மாண்டான்!

அந்தத் தறுதலையின் தலை தனியே தள்ளிப்போய், வாய் பிளந்து வீழ்ந்து கிடந்தது! அந்த மாமிச மலையின் வீழ்ச்சி கண்டு, இஸ்லாமிய சமுதாயம் மொத்தமும்  பேருவகை கொண்டது! தலைவன் மாண்டதால் அந்தக் குதிரைப்படை வீரர்கள் அனைவரும் தலை தெறிக்க வெளிறிப்போய் ஓடி ஒளிந்தனர்!

அப்போதுதான் "லா ஃபத்தாஹ் இல்லா அலீ! லாஸைஃப இல்லா ஃதுல்பிகார்" (அலீயைப் போன்ற வெற்றி வீரன் வேறு எவனுமில்லை! ஃதுல்பிகார் போன்ற போர்வாள் வேறு எதுவுமில்லை) என்று மகிழ்ச்சி மொழி பகர்ந்து சிரித்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். (3)

யமன் தேசம். ஏகத்துவ ஒளிக்கதிர்கள் மக்காவின் ஃபாரான் மலைத்தொடர்களில் உதித்தெழுந்து,

ஸன்ஆவின் மலைக் குன்றுகளில் பட்டுத் தெறித்து ஒளி வீசத் துவங்கிய காலம்! யமன்வாசிகள் புதிதாக தூய இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருந்தார்கள். எனினும், பழைய வழக்கங்களும் நடைமுறைகளும் இன்னும் கொஞ்சம் எஞ்சி இருந்தன! அவர்களின் பழைய பழக்கத்தின்படி ஒரு பெண்மணியோடு ஒரு மாத காலத்திற்குள் மூன்று நபர்கள் உடலுறவு கொண்டுவிட்டார்கள். ஒன்பது மாதம் கழித்து, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை கிளம்பி விட்டது. ஒவ்வொருவரும் அது தன்  குழந்தையே என வாதிட்டார்கள். அறிவுலக மேதை அலீ (ரலி) அவர்கள், அக்குழந்தைக்கான ஈட்டுத் தொகையை நிர்ணயித்தார்கள். அதை மூன்று பாகங்களாக பங்கிட்டார்கள். அதன்பின்னர், சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யாருக்கு விழுந்ததோ அவரிடம் குழந்தையை ஒப்படைத்தார்கள். மற்ற இருவருக்கும் எஞ்சிய ஈட்டுத் தொகையின் இரு பாகங்களை அவரிடமிருந்து வசூலித்துக் கொடுத்தார்கள். 

இந்தத் தீர்ப்பை அறியவந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மகிழ்ச்சிப் பெருக்கால் தங்கள் கடைவாய்ப் பற்கள் தெரியச்  சிரித்தார்கள். (4)

இன்னொரு விசித்திரமான வழக்கு. தன்னுடைய தாயை ஒருவன் மானபங்கப் படுத்திவிட்டான் என்று ஒருவனை இழுத்து வந்து வழக்கு மன்றத்தில் நிறுத்தினார் ஒருவர். அப்படி, தான் ஒரு கனவு கண்டதாகக் கூறினார். ஆனால், தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்று வாதம் செய்து நின்றார். 'குற்றவாளி என்று குறிப்பிடப்படுபவரைக் கொண்டுபோய் வெய்யிலில் நிறுத்துங்கள். அவருடைய நிழலைக்  கசையால் அடியுங்கள்' என்றுஅலீ (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். (5)

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு, அவளின் துர் நடத்தைக்காக தண்டனை அளித்திட உமர் ஃபாரூக் (ரலி) முற்பட்டார். 'கூடாது. அவளுக்கு மனநிலை சரியில்லை! அவள்மீது சட்டம் செல்லுபடியாகாது' என ஞானஞாயிறு அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அதுகண்ட உமர் ஃபாரூக் (ரலி) தம் எண்ணத்தைக் கைவிட்டார்கள்.  (6)

அண்ணல் நபி (ஸல்) அவர்களே அலீ (ரலி) அவர்களுக்கு 'அக்ளாஹும் அலீயுன்' அவர்களுள் மிகச்சிறந்த தீர்ப்பு வழங்குபவர் அலீ ஆவார் என்றுபட்டம் அளித்துள்ளார்கள்.

அடுத்து கைபர்!  யூதர்களின் மாபெரும் இரும்பு போன்ற வலுவான காமூஸ் கோட்டை! அக்கோட்டையின் தளபதி மர்ஹப் மிகப்பெரும் வீராதி வீரன்.

யுத்தக்களத்தில் கொழுந்து விடும் நெருப்பாய் புகுந்து வரும் சூராதி சூரன்! இஸ்லாமியப்படை, பல நாட்கள் முற்றுகையிட்டும் ஓர் இம்மியளவும் முன்னேற முடியவில்லை! மர்ஹப் அல் யஹூதி ஒரு மிகப்பெரும் தடைக்கல்லாக தன் படையுடன் தடுத்து நின்றான்.

மறுபக்கம், கண் வலியால் அவதிப் பட்டுக்கொண்டு போர்முனைக்குச் செல்ல இயலாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் அலீ (ரலி).

நாளை காலை நான் ஒருவரிடம் இந்தக்கொடியை அளிப்பேன். அவரை அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புகிறார்கள். அவர் அல்லாஹ்வின் அருளால் எதிரிக்கோட்டையை எதிர்த்துத் தகர்த்தெரிவார் என்றார்கள் அண்ணல் நபி அவர்கள். ஒவ்வொரு தோழரும் அந்த வெற்றிக்கொடி தன்  கையில் தரப்படவேண்டும் என்று பேராவல் கொண்டனர்!

அடுத்த நாள் அலீ (ரலி) யை அழைத்து தம்மடியில் படுக்கவைத்து தன் அருட்கரங்களால் அவர் கண்களைத் தடவி ஆசீர்வதித்து, அவருக்காக சிறப்பான ஒரு பிரார்த்தனையைச் செய்தார்கள் அலீயின் அண்ணன் அருமை நபியவர்கள்.

அன்றைய நாள், அதன் முழுவீச்சில் துவங்கியது மூர்க்கமான மகா யுத்தம்!

சூறாவளிப் புயல் களத்தில் சுற்றிச் சுழன்றடித்தது போல் பாய்ந்த அலீ (ரலி) யின் வேகத்துக்கு ஈடுகொடுக்கத் திராணியற்று வேரோடு மண்ணாகி வீழ்ந்து மடிந்தான் ஒவ்வொரு யூதனும்!

தர்மத்தின் தளபதியின் பளபளக்கும் போர்வாள், சூழ்ச்சிக்கார யூதர்களைத் தவிடு பொடியாக்கித் தகர்த்துக் கொண்டிருந்தது! நேருக்கு நேர் மோதத் திராணியற்று, மறைந்திருந்து அடித்த யூதன் ஒருவனின்  பலமான தாக்குதலால் கையில் பிடித்திருந்த கேடயம் நழுவிக் கீழே விழுந்தது.

அப்போதுதான் நிகழ்ந்தது அந்த மகா அற்புதம்! அங்குமிங்கும் ஆர்ப்பரித்து நின்ற அநியாயக் கும்பலை நோக்கி நின்ற அலீ, வீரத்தில் வேங்கை எனும் புலி, கையில் கேடயமில்லாமல் நிராயுதபாணியாக நின்றவர், சடாரென்று பாய்ந்து அந்தக் காமூஸ் கோட்டையின் பிரம்மாண்டமான  வாசற் கதவையே தனி ஒருவராக நின்று அநாயாசமாகக் பெயர்த்தெடுத்தார்!

கழற்றி எடுத்தது மட்டுமல்லாமல் ஏழு மல்லர்களும் ஒன்றாக சேர்ந்து தூக்க முயன்றாலும் தூக்கமுடியாத, ஒரு  மலைக்குன்று போன்ற அந்தக் கதவை ஒரு கேடயம்போல் கையில் வைத்துச் சுழற்றத் தொடங்கினார்!

இரும்புப் பாளத்தால் உருக்கி செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான கதவை அப்படி சுற்றிச் சுழற்றியது மட்டுமல்லாமல், சுழற்றிக் கொண்டே முன்னேறி யூதர்களின் கோட்டைக்குள்ளேயே தீரமுடன் பாய்ந்து சென்றார்.

கோட்டையின் மதகு போன்ற அந்த மாபெரும் கதவையே பெயர்த்தெடுத்து கையில் சுற்றிக்கொண்டு மின்னல்போல பாய்ந்து வரும் உருவம் மனித இனமா அல்லது ஜின் இனமா என்று புரியாமல் அதிர்ச்சியிலே மயங்கி விழுந்தான் துரோகத்திற்காகவே  பிறந்த ஒவ்வொரு யூதப் பதரும்!

கோட்டையின் உள் மண்டபத்தில் யூதர்களின் தளபதி, அவர்களின் வீராதி வீரன் என்று பெருமிதப்படும் மர்ஹப் அல் யஹூதி கர்வத்துடன் தோன்றினான்!

அன்றைய தினம் ஒரு பெரும் மதர்ப்பில் இருந்தான் அவன். "இரும்பு போன்ற என் எஃகுக் கோட்டைக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டாயா குறைஷியே! கிட்டே நெருங்கினால் கண்டதுண்டமாக வெட்டிப் போடுவேன் உன்னை. முடிந்தால் ஒற்றைக்கு ஒற்றை வந்து பார் பொடிப் பயலே!" என்று கொக்கரித்தான் வஞ்சகர்களின் தளபதி !

கோட்டையின் கதவை வீசி எறிந்த வேகத்தில், அந்த மாமிச மலை மர்ஹபை நோக்கிய அலீ (ரலி),

“ஈன்றெடுத்த என் அன்னையால் ‘ஹைதர்’ எனச் சிறப்புப்  பெயர் சூட்டி அழைக்கப் பட்டவன் நான்!

காட்டு ராஜாவான கம்பீரச்சிங்கத்தின் அச்சத்தையும் அதிர்ச்சியையும் எதிராளிக்கு அளிப்பவன் நான்!

கண்ணைப் பறிக்கும் மின்னலாய்க்களம் புகுந்து, உயிர் பறிக்கும் கொடும் இடியாய் எதிரியாகிய உன்  மீது  இறங்குபவன் நான்!'

என்ற போர்ப்பரணியைப் பாடிக்கொண்டே ஒரே பாய்ச்சலாக அவன் மேல் பாய்ந்து புறப்பட்டது 'அஸதுல்லாஹ்’ என்ற அந்த அல்லாஹ்வின் சிங்கம்!

வெற்றி வீரன் அலீயின் சக்திமிக்கப் போர் வாள் மர்ஹபின் உடலைப் பலகூறுகளாகப் பிளந்தபோது, ஒரு பெரும் பூகம்பத்தால் பலமுறை உலுக்கப்பட்ட ஒரு மலைபோல அங்கே வீழ்ந்து மடிந்தான் அக்கிரமக்காரர்களின் தளபதி மர்ஹப் அல்யஹூதி.

அல்லாஹுஅக்பர்!

இந்த மாபெரும் கைபர் வெற்றியால், 'அல்லாஹ்வும் ஜிப்ரீலும் மீக்காயீலும் உம் மீது திருப்தி கொள்கிறார்கள்' என்றருளினார்கள் ஏந்தல் நபி பெருமான் (ஸல்) அவர்கள்.

இவ்வாறு, தன் இளமைக் காலத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாசறையில் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், அலீ (ரலி) அவர்களின் இறுதிக் காலம் வரை நீடித்து நின்றன! மிகவும் கூர்மையான அறிவும் தொலை நோக்குச் சிந்தனையும் சத்தியத்தை விரும்பும் நெஞ்சத்தை கொண்டு அவரைப் பக்குவப்படுத்தி இருந்தன! அனைத்து சோதனையான நிகழ்வுகளிலும் அவரை எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாத மாவீரனாகவும் அல்லாஹ்வின் ராஜபாட்டையில் தன்னை அர்ப்பணித்து நடப்பவராகவும் அவரைப் பரிணமித்துக் காட்டின! இவ்வாறு வீரமும் விவேகமும் அவரை அடையாளம் காட்டி, அவரின் தனிப்பட்ட ஆளுமையாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டன!

அலீ பின் ரபாஹா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது: அலீ (ரலி) அவர்களுக்காக, வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் தமது காலை வாகனத்தில் வைத்ததும் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறினார்கள். சரியாக ஏறி அமர்ந்ததும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்றார்கள். பின்பு,

'சுப்ஹானல்லதீ சஹ்ஹரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்' என்று கூறலானார்கள்.

அதன்பிறகு, 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மூன்று முறையும் 'அல்லாஹு அக்பர்' என்று மூன்று முறையும் 'ஸுப்ஹானக்க இன்னீ கத்லலம்த்து நஃப்சீ ஃபக்ஃபிர்லீ ஃபஇன்னஹூ லா யக்ஃபிருத்துனூப இல்லா அன்த்த' என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

அப்போது நான் 'அமீருல் முஃமினீன் அவர்களே!' தாங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள்,

'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செய்வதைப் போன்று செய்து விட்டுச் சிரித்தார்கள். அப்போது நான், நீர் கேட்டது போன்றே அவர்களிடம்  'அல்லாஹ்வின் தூதரே. நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், 'இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக! ஏனெனில், உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க மாட்டார்கள்' என்று பிரார்த்திக்கும்போது, அந்த அடியானைப் பார்த்து அல்லாஹ் (ஜல்) மகிழ்ச்சியடைகிறான்' 'அதனை நினைத்து நான்  சிரித்தேன்' என்றருளினார்கள். (7)

இதோ அந்த அறிவுலக மேதையின் வைரவரிகள் சில:

 • நம்முடைய தொழுகை, அர்ப்பணங்கள், வாழ்வு, மரணம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதே!
 • ஒன்றுபட்டு இருங்கள். தொழுகையைவிட ஒற்றுமை பிரதானமானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 • உங்கள் இரத்த உறவுகளுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அதன் மூலம், அல்லாஹ் உங்கள் மீது கருணை கொள்வான்.
 • இறையச்சத்தில் நேர்மையைக் கடைபிடியுங்கள். இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குள் சரணடைந்து விடுங்கள்.
 • உங்களின் தகுதிக்கு மீறிய ஒன்றின் மீது நீங்கள் ஆசை வைக்காதீர்கள்.
 • எப்பொழுதும் உண்மையாளர்களாக இருங்கள்.
 • குர்ஆனை ஆத்மார்த்தமாகப் பின் பற்றுங்கள். அதனை நடைமுறைப் படுத்தும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்து விடாதீர்கள்.
 • உங்களது மார்க்கத்தைப் பரிகசிப்பவர்கள் குறித்து, நீங்கள் அச்சப்பட வேண்டாம்.அவர்கள் உங்களுக்கு தீங்கிழைக்க நாடினால் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்.
 • இந்த உலக வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
 • இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். வாழ்வின் யதார்த்தங்களைத்  துணிவோடும் தைரியத்தோடும் எதிர்கொள்ளுங்கள்.
 • உங்கள் வழியில் நிற்கின்ற தடைகளைக் கண்டு தடுமாறிவிடாதீர்கள்.
 • நன்மையான விஷயத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். விஷமிகள் விஷயத்தில் நீங்கள் உதவிக் கொள்ளவேண்டாம்.
 • அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீதும் அவர்களின் குடும்பத்தார் அனைவர் மீதும் அல்லாஹ்வின் நல்லாசிகள் உண்டாகட்டுமாக!
o o o o o 0 o o o o o

ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன் 36:69
(2) புஹாரி 6280 : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(3) இப்னுஹிஷாம்
(4) முஸ்தத்ரக் ஹாக்கிம்  : 3/135 
(5) தாரீஃக்குல் குலஃபா, ஸுயூத்தி
(6) முஸ்னத் அஹ்மத் 140
(7) திர்மிதீ 3446: அலீ இப்னு ரபாஹா (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

படிக்கட்டுகள் - 13 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2015 | , ,

பொதுவாக ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவன் என்று ஒரு அளவுகோல் இருக்கும்போது அதை அவன் வைத்திருக்கும் 'பணம்' மட்டுமே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறான அனுகுமுறை என்றால் 'பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்' எனும் பொதுவான கருத்துதான்.

ஆனால் அந்த பணம் படைத்தவர்களின் மனதை ஆய்வு செய்யும் திறமை நம்மிடம் இருந்தால் நமது கருத்து சரியா தவறா என தெரிந்துவிடும் அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்ற இன்னொரு இலவச இணைப்பான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது பொறுப்புகளை சுமக்க தயங்குபவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலா. வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்காமல் பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் போய் வந்தால் கூட வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி வராமல் வீட்டுக்கு வந்து "பணமா முக்கியம்..நான் மட்டும் வசதியானவனாய் இருந்தால் ஏழைகளை படிக்க வைப்பேன், ஊருக்கு உழைப்பேன், அநாதை ஆசிரமம் கட்டுவேன், முதியோர்களை அரவணைப்பேன்' என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்.

இப்போது கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் என்பதை செயலில் காட்ட முடிந்தவர்கள்தான் தொடர்ந்து தர்மம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தர்மத்துக்கும் மனதுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கோடி கையில் கிடைத்து விட்டால் தர்மம் செய்யும் மனம் வந்துவிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இருப்பினும் மனிதன் ஒரு சில விசயங்களில் மட்டும் வெற்றியடைந்தவனாய் பார்ப்பது "பார்வையில் கோளாறு' . இதை சரி செய்யத்தான் “WHOLE PERSON CONCEPT” என்ற ஒரு விசயம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு மனிதன் வெற்றியாளன் தானா இல்லை வெற்றியாளன் மாதிரி முகமூடி அனிந்தவனா என யார் தீர்மானிப்பது.... நீங்கள்தான்.... யாரை?... உங்களை 'மட்டும்'தான்.  மற்றவனை சரி செய்ய அவனுக்கு தெரியும்... முதலில் நாம் நம்மை பார்ப்போம்

WHOLE PERSON CONCEPT


      1.   Health.
உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது.  குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.

தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல. 'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

உங்கல் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         2.   Family
ஒரு மனிதன் வெற்றியடைய ஒடிக்கொண்டிருக்கிறான் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமைய வேண்டும். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் ஒரு மனிதன் வெற்றியடைய முயற்ச்சி எடுப்பது என்பது 'தினம் தினம் எதிர்நீச்சல்". இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தோல்விகளில் ஆதரவாகவும், வெற்றியடையும்போது நிதானத்தையும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் வீட்டுப்பெண்கள் இருக்கும் வரை ஆண்களால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும். இப்போதைய கால கட்டத்தில் பொருள்களை தேடி அலையும் இந்த "நவீன பசி"யில் பெண்களிடம் நான் காணும் ஒரு விசயம் கல்யாணம் ஆன பிறகும் தனது தகப்பனின் மகளாக இருக்கும் கதாபாத்திரத்தை விட்டு தனது கணவனின் மனைவியாக வாழும் கதாபாத்திரத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டும். மற்றும் சிலர் கணவனுடன்  ஷாப்பிங் போகும்போது கணவனை ஒரு மொபைல் ஏ.டி.எம் மெசின் மாதிரி நடத்துவதை தவிற்க வேண்டும்.

ஆண்கள் 'சம்பாதிக்கிறேன்" என்ற ஒரே காரணத்துக்காக பெண்களை அடிமைபோல் நடத்திவிட்டு அதற்கு தேவையில்லாமல் ஞானி மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு சில ஆண்கள் "வெருமனே" மனைவியை குறை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, இத்தனை நாட்கள் அன்பை வளர்க்காமல் எப்படி குறைகாண மட்டும் தெரிந்து கொண்டார்கள் என்பது ஆச்சர்யம். கல்யாணம் செய்த ஆரம்ப காலத்தில் கணவனின் பல முட்டாள் தனங்களையும், பிடிவாதங்களையும், வறுமையையும் தாங்கிக்கொண்ட மனைவியை சில ஆண்கள் வசதி வந்த பிறகு ' அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.


உங்கள் குடும்பத்தில் நீங்கள் மதிக்கப்படுமளவுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?


.. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

          3. Education
அதான் பள்ளிக்கூடம் எல்லாம் போயிட்டுதானே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என சொல்லவேண்டாம். "கல்வி என்பது சர்டிபிகேட்டுக்குள் அடங்கும் சர்ப்பம் அல்ல' என்று எழுதினால் இவன்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்யா என கமென்ட் எழுதக்கூடும் என்பதால் கல்வி என்பது கருவறை தொடங்கி கல்லரை வரை என்ற அந்த ஓல்டு வார்த்தையை எழுதுகிறேன். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.


ஒவ்வொரு நாளும் உங்கள் துறைசார்ந்த விசயங்களை உங்கள் முன்னேற்றம் சார்ந்த விசயங்களை எந்த அளவு படிக்கிறீர்களோ அந்த அளவு முன்னேறலாம். சிலர் வாசிப்பதை தவறாக புரிந்திருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் 'தொடர் கொலைகள்- பாலியல் குற்றங்கள்" போன்ற விசயங்கள் நீங்கள் ஃபாரன்சிக் , போலீஸ், இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' சார்ந்து இருந்தால் பிரயோஜனப்படும்இல்லாவிட்டால் நீங்கள் மேகசினுக்கு கொடுத்த காசு பப்ளிசருக்கு பயன்படும்..அம்புடுதேன்.


நீங்கள் எவ்வளவு நேரம் உங்களை உயர்த்திக்கொள்ளும் கல்வியில் நேரம் செலவளிக்கிறீர்கள்.


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         4.   Career.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை , படிப்பு , தொழில் உங்களுக்கு மனதிருப்தியை தருகிறதா இல்லாவிட்டால் எங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்று எப்போதாவது ஒரு அரைமணி நேரம் அதற்காக ஒதுக்கி உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா... எதிலும் செக்கு மாட்டுத்தனமா இருந்து விட்டால் உழவுக்கு பயன்படாமல் போய்விடலாம் எனும் படிக்காத மேதைகள் சொன்னது இப்போதும் என் காதில் விழுகிறது.


நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் / துறை உங்களை முன்னேற்ற உதவ வேண்டும்.... முன்னேற்றியதா?... முன்னேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

5.Service [to Society]
உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் கருவேல முட்கிளையை எடுத்துப்போட உடல் தெம்பு இருந்தும் பஞ்சாயத்து போர்டை வையும் சமுதாயத்தால் சமுதாயத்துக்கு பயனில்லை.
 
சேவை செய்பவர்களைப்பற்றி ' அவனைப்பார்... இவனைப்பார்.. எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறான். எவ்வளவு சேவை செய்திருக்கிறான் என்று மற்றவனை உதாரணம் காட்ட பிறந்தவர்களா நீங்கள்?. அப்படி உதாரணம் மட்டும் காண்பிப்பவராக இருந்தால் உங்கள் தாய் உங்கள் எதிர்காலத்துக்காக கண்ட கனவுக்கு என்னதான் மதிப்பு?.


இன்று உங்களை சுற்றியுள்ள சமுதாயத்துக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

6. Financial
கடனில்லாத வாழ்க்கையும், வரும் வருமானத்தை செலவு செய்யும்போது உங்கள் உள் மனதுக்குள் உறுத்தல் இல்லாத ஒரு மனநிலையும் இருந்து விட்டாலே சரியான ட்ராக்கில் இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.


மற்றவர்களைப்போல் இல்லையே என்று புலம்பாமல் போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உங்களின் வருமானம் எந்த அளவு உயர்ந்திருக்கிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு செக்கிங் வைத்துக் கொண்டால் நலம். போட்டி உங்களுடன் தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்றவனின் வாழ்க்கையை நீங்கள் வாழ பார்க்காதீர்கள். அது நிச்சயம் முடியாது.

ஒருக்கால் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் அதற்காக என்ன செய்யலாம்?


நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


7. Spiritual
இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது. காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. [ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை] 

இன்று உங்களைப்படைத்த கருணைமிகு இறைவனை எத்தனை முறை நினைத்தீர்கள்? அப்படி நினைக்க எது தடையாக உங்களின் அன்றாட வாழ்க்கை "உண்மைநிலை"யை உணராமல் செய்திருக்கிறது. 


நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களான 7ம் வாழ்க்கைக்கு முக்கியம்.இந்த 7 முக்கியமான விசயங்களும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்வது மிக மிக எளிதானது. மறுபடியும் சொல்கிறேன் நான் முஸ்லீமாக பிறந்ததனால் இதை எழுதவில்லை. [தயவு செய்து மாற்று மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது] . எந்த சூழ்நிலையிலும் தனிமனிதனின் கெளரவம் காக்கப்படும் வாழ்க்கையை இஸ்லாம் சொல்லியிருக்கிறது என்றுதான் சொல்கிறேன். 

இந்த 7 தலைப்புகளும் ஒரு மனிதனுக்கு சரியான முறையில் அமைய / அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று , இரண்டு மட்டும் கூடுதலாக இருந்து மற்றது குறைவாக இருந்தால் ....மன்னிக்கவும் ...உங்களை உடன் மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

முடிவெடுப்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை we will see in next episode.

ZAKIR HUSSAIN

ஷபே பராஅத் (?) 1

அதிரைநிருபர் | May 26, 2015 | , , , , , ,

www.satyamargam.com

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர், அறியாமையில் இருக்கிறார்கள்.

ஷஃ'பான் எனும் இந்த மாதத்தை, மரணித்துப்போன நம் பெற்றோர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதி, விஷேச அமல்கள், துவாக்கள் செய்து அதன் மூலம் நன்மையை அவர்களுக்குச் சேர்க்கக்கூடிய(?) ஒரு மாதமாகவே இந்த மாதம் தவறாகக் கருதப்படுகிறது. இதன் 15ம் நாளை, 'ஷப்-ஏ-பராஅத்' எனும் பெயரில் சில முஸ்லிம்கள் பரவலாகக் கடைபிடித்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் கூறப்படாத இத்தகைய அனாச்சாரங்கள் தற்போது ஓரளவு குறைந்துள்ளன என்றாலும், இன்றும் பலர் இதை ஒரு சிறந்த அமலாக, நன்மை தரும் காரியமாகக் கருதி, விதவிதமான சமையல்கள், இனிப்புவகைகள் என்று சமைத்து, பயபக்தியுடன் பரவசத்துடன் குழுமியிருந்து ஃபாத்திஹா ஓதி, மரணித்த தமது உறவினருக்கு நன்மைகளை நாடிப் பிரார்த்திப்பதாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நூதனச் செய்முறைக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. புனித குர்ஆனின் ஹதீஸ்களின் மூலமொழி அரபியாகும். 'ஷப்-ஏ-பராஅத்' இல் உள்ள  'ஷப்' என்பது அரபிச் சொல் கிடையாது; 'இரவு' என்ற பொருளில் வரும் பார்ஸிச் சொல்லாகும். 'ஏ'காரம் என்பது அரபு மொழியிலேயே இல்லாத ஓர் ஒலி. இப்படியிருக்கையில் தானாக உருவாக்கிக் கொண்ட ஒரு புதிய நடைமுறைக்கு 'ஷப்-ஏ-பராஅத்' என்ற பெயர் சூட்டி முஸ்லிம்களின் புனித ரமலான், ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விஷேசமான இதர பண்டிகைகளின் பட்டியலில் காலங்காலமாக இதனையும் சேர்த்து விட்டனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏவப்பட்ட ஒரு நபி வழியா? நல்ல அமலா? இதனைச் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதற்கு நன்மை கிடைக்குமா கிடைக்காதா? அல்லது ஒருவேளை இது ஒரு பாவமான காரியமாகி தண்டனையைப் பெற்று தருமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர்.

எவர் ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்).

இந்த ஒரு ஹதீஸே நாம் மார்க்கம் என்றும் நன்மையென்றும் கருதி இப்படி நபி (ஸல்) காட்டித்தராத செயல்களைப் புதிதாக உருவாக்கவோ, சேர்க்கவோ அல்லது அதைப் பலரும் செய்கிறார்கள் என்பதால் செயல்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்துகிறது. இதைப்போன்று பல ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தராத ஒன்றைச் செயல்படுத்த நேரடியான தடையுள்ளதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடி, தமது உறவினர்களுக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்திக்கவும், தமக்கு நன்மைகளும் அபிவிருத்தியும் ஏற்படும் என்று கருதி, இப்படிப்பட்ட அமல்கள் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் இதை நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் சிந்திப்பதில்லை.

நிச்சயமாக ஒருவர் இறந்தபின் மூன்றைத் தவிர அவருடைய அமல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அம்மூன்றாவன:
 • அவர் விட்டுச்சென்ற நிலையான தர்மங்கள் (இறையில்லங்கள் கட்டுவது, மரங்கள் நடுவது, கிணறுகள் அமைப்பது, கல்விச்சாலைகள் நிறுவுவது போன்றவை) 
 • அவர் தந்த பயன் தரும் கல்வி (ஈருலக வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு அவர் கற்றுக் கொடுத்த கல்வி) 
 • ஸாலிஹான அவரின் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனைகள்.

இம்மூன்றைத் தவிர வேறு எவ்வழியிலும் ஒருவர் இறந்தபின் அவருக்கு நன்மைகள் சேருவதில்லை. (ஆதார நூல்கள்: முஸ்லிம். அபூ தாவூத், திர்மிதி, நஸயீ)

நபியவர்கள் காட்டித் தந்த வழி இவ்வாறிருக்க, இறந்து போன உறவினருக்கு பராஅத் இரவில் பாத்திஹாக்கள் ஓதினால் எந்தப் புண்ணியமும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை. தவிர, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய ஒரு வழிமுறையை மார்க்கமாகச் செய்யும் பாவத்தையும் சுமக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும்விட - ரமலானுக்கு அடுத்தபடியாக - ஷஃ'பான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃ'பானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைபிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைச்சாற்றுகின்றன:

"நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ'பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமளானுமாகும்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத், நஸயி).

நபி (ஸல்) அவர்கள், 'நோன்பை விடவேமாட்டார்களோ' என்று நாம் நினைக்கும் அளவுக்கு (சிலபோது) நோன்பு நோற்பவர்களாகவும் 'நோன்பிருக்க மாட்டர்களோ' என்று நினைக்கும் அளவுக்கு நோன்பு நோற்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமளானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் அறியவில்லை. நபியவர்கள் அதிக நாட்கள் நோன்பு வைத்த மாதம் ஷஃ'பானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்).

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்:
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! ஷஃ'பானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை' என்று கூறிய போது, நபியவர்கள், "மனிதர்கள் ரஜப், ரமளான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள (ஷஃ'பான் என்ற) ஒரு மாதத்தின் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில், அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என கூறினார்கள். (ஆதாரம்: நஸயி, அஹ்மத்).

இதற்கு மாற்றமாக ஷஃ'பான் மாதத்தில், பிறை 15ல் மட்டும் நோன்பு நோற்பதும், அதன் இரவில் மூன்று யாஸீன்கள் ஓதுவதும், ரொட்டி மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து சாம்பராணிப் புகையுடன் ஃபாத்திஹா ஓதிய பின்னர் அதையும் இதர உணவுகளையும் பரிமாறிக் கொள்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு 'பித்அத்' தான காரியமாகும்.

நமக்கு இஸ்லாத்தையும் நன்மை தீமைகளையும் கற்றுத்தர அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் நமக்கு இவற்றைக் கற்றுத் தரவில்லை. அவர்களுக்குப் பின்னர் யாரோ சிலர் உருவாக்கியவைதான் இவையும் இவை போன்றவையும் என்பதைப் பலரும் அறிவதில்லை. நமக்கு நன்மைகள் வேண்டுவது அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கு துஆச் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல; துவாச் செய்வது தவறும் அல்ல. இதை, தினந்தோறும் தவறாமல் நாம் செய்து வர வேண்டும். அதிகமாகவும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகைகளிலும் செய்ய வேண்டும். அதுவே நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியாகும்.

வருடத்தில் ஒரு நாள் அல்லது ஒருசில நாட்கள், அதுவும் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ காட்டித் தராத ஒரு நாளில் இதுபோன்ற அமல்களைச் செய்வது எந்தப் பலனையும் விளைவிக்காது என்பதை நாம் உணர வேண்டும். பலகாலமாக நமது மூதாதையர் செய்வதாலோ நம்முடைய உறவினர்கள், நமது ஊரார்கள் எல்லாம் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றைச் செய்யாமல், இவையெல்லாம் பொல்லாப் புதுமைகள் என்பதை அறிந்து கொண்டு, இதுபோன்றவற்றை விட்டு விலகி இருந்து, பிறருக்கும் உணர்த்தி விலக்கி அவர்களையும் நேர்வழிக்கு அழைக்க வேண்டும்.

இந்தியாவில் சிலபகுதிகளில் இரவு விழித்து விசேஷமான, தஸ்பீஹ்கள் தொழுகைகள் மற்றும் பொதுக் கல்லறைகளுக்கு இரவில் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சென்று துவா செய்யும் வழக்கமும் இருக்கிறது, இந்த வழக்கம், நபி (ஸல்) அவர்கள் பெண்கள் கப்ரு ஜியாரத்தைக் கண்டித்ததற்கும் எச்சரித்ததற்கும் எதிரானதாகும் என்று உணர்த்தி இப்பழக்கத்தையும் கைவிடச்செய்ய நாம் முயலவேண்டும்.

ரமளானுக்கு ஒரிரு நாட்கள் இருக்கும் போது நோன்பு நோற்கலாகாது:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள், வியாழனில்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதார நூல் :புகாரீ).

மேற்கண்ட ஹதீஸ் திங்கள், வியாழன் ஆகிய இருநாட்களில் தொடர்ந்து வழக்கமாக நோன்பு வைத்து வருபவர்களைக் குறிக்கின்றது என்பதுடன், இதுபோன்ற திங்கள்-வியாழன் நோன்புகள் வைப்பது நபி(ஸல்) அவர்கள் தாமும் கடைபிடித்து வந்ததுடன் பிறருக்கும் ஆர்வமூட்டிய அழகான தெளிவான வழிமுறையாகவுமுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு முறையாகப் பயனடைய முயல வேண்டும்.

அதேபோல்தான் குர்ஆன் ஓதுதலும் ஆகும். திருமறையின் எந்த அத்தியாயத்தை ஓதினாலும் அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்து நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக ஓதிவரவேண்டும், மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டியுள்ள திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் நஃபிலான வணக்கங்கள் மூலம் நன்மையையும் அல்லாஹ்வின் அருளையும் உதவியையும் பெற்றிடத் தொடர்ந்து முயன்று, இம்மை-மறுமை வெற்றியைப்பெற முயலவேண்டும்.

அற்புதமான இந்த ஷஃ'பான் மாதத்தை பித்அத்களில் வீணாக்காமல், இறைத்தூதர் காட்டித்தந்த வழியில் கடைப்பிடித்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆக்கம்: அப்துல்லாஹ்

"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்" 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2015 | , , , , , , , ,

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம் ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும் விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து நடத்திய கடைகளும் அதில் இடம் பெற்ற விற்பனைப்பொருட்களும் (நீங்களெல்லாம் பெரும், பெரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று மேலாளராகவோ, மேற்பார்வையாளராகவோ பணி செய்து வருவதால் அவற்றையெல்லாம் முற்றிலும் மறந்திருப்பீர்கள். அதனால் அவை இங்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தப்படுகிறது) நம் நினைவுகளில் டெமரேஜ் ஏதும் தராமல் நிரந்தமாய் தஞ்சமடைந்துள்ளன.


(லிஸ்டெ போட்ற வேண்டியது தான்)

1. கல்கோனா
2. கடலை மிட்டாய்
3. மஞ்ச கலரு கொடலு
4. தேன் முட்டாயி
5. பால் பன்னு
6. மைசூர் பாக்கு (அப்பொ கரிங்கல்லு மாதிரி இருக்கும். மன்சூராக்க கோவிச்சிக்கிடாதிய)
7. கொத்து மாங்கா (தோப்லேர்ந்து பறிச்சதுனால கூடுதல் லாபம் கிடைக்கும்)
8. மோரு (கருவாப்பிள்ளை, பச்ச மொளவா, கொத்து மாங்கா, கடுகு போட்டு தாளிச்சது)
9. சர்வத்து (ஜம்ஜா விதை ஊற வைத்து, ரோஸ் கலரு பாவு காச்சி வித்தாலும் ஐஸ் போட்டு விக்கிற அளவுக்கு வசதி இல்லை)
இன்னும் இங்கு விடுபட்ட விற்பனை பொருட்களை நீங்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்.

நாளாக, நாளாக விற்பனை நன்கு சூடு பிடிக்கும். பெரிய பசங்க சிலர் நம் கடையின் (அலங்கோலத்தை பார்த்து) சூழ்நிலையை பார்த்து இரக்கப்பட்டு (மொகத்தாச்சனைக்காக) நம் கடையில் ஏதேனும் வாங்கிச்செல்வர்.

பள்ளி திறக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த கூட்டாண்மை வியாபாரம் வரவு, செலவுகள் போக கணக்கு பார்க்கப்பட்டு முதலீட்டிற்கு தகுந்தாற்போல் (ரூபாய் 20 அல்லது 30க்குள்) லாபம் பிரித்து கொடுக்கப்படும் அல்லது எடுக்கப்படும். (வருமான வரி பயமோ, ஆடிட்டிங் தொல்லையோ, பணியாளர் சம்பள பிரச்சினையோ இங்கில்லை).

இந்த மாதிரி வியாபாரம் நாம் எஸனல் குர்'ஆன் ஓதப்போகும் வீட்டுப்பள்ளிகளிலும் அந்த ஒஸ்தார் மூலமே நடத்தப்பட்டது. என்ன செய்வது? அப்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கு இது போன்ற சிறு வருமானங்கள் கொஞ்சம் வீட்டுத்தேவைகளுக்கும் தோள் கொடுத்து உதவியது. இப்பொழுதுள்ள விலைவாசி, பொருளாதார சூழ்நிலைக்கு இதுபோன்ற வியாபாரங்களும், அதன் வருவாயும் வீட்டு கொல்லையில் மேயும் கோழிகளுக்கு தவுடு வாங்கி கொழச்சி வக்க கூட பத்தாது.

இதுபோல் நாம் சிறு பிராயத்தில் தொடங்கிய கடைகள் இப்பொழுது அதை நினைத்துப்பார்க்க சிலருக்கு வெட்கமாகவும், கொஞ்சம் கேவலமாகவும் (அரீர்ப்பாகவும்) கூட தெரியலாம். ஆனால் அன்று அது போல் கடை வைத்து தன் வாழ்க்கையில் வியாபாரம் என்றால் என்னவென ஆரம்பித்தவர்களில் பலர் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அல்ஹம்துலில்லாஹ் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றும், சிலர் அரபுலகத்திலும் குடும்பத்துடன் நல்ல சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும் படுறதில்லை.

இந்த கட்டுரை எழுத காரணம், சகோ அர.அல அவர்கள் இன்று முகப்புத்தகத்தில் இணைத்திருந்த இந்த அரிய புகைப்படமே காரணம். கொட்டகைக்குள் 5 பாட்டில்களும், 5 முதலாளிகளும் நமக்கெல்லாம் இங்கு ஃபோஸ் கொடுத்து ஏதோ சொல்லவர்ராங்க. கேட்டுக்கிடுங்க.....

தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு சர்வத்து கலக்கி குடும்மா.....

இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்திப்பில் சந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

அதிரையின் முத்திரை - (Version - 2) 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2015 | , ,

அருளாளன் அன்புடையோன்
'அல்லாஹ்'வின் ஆசியுடன்
அதிரையெனும் அழகூரின்
அருமைதனை அறியவைப்பேன்

அதிகாலை அழைப்பொலிகள்
அகஇருளை அதிரவைக்கும்
அறிவுடையோர் அணியணியாய்
'அவன்'இல்லம் அடைந்திடுவர்

இதயமெலாம் இதமாக
இயல்பாக இறைவணங்கி
இறைவேதம் இன்னிசைக்க
இளங்காலை இலங்கிடுமே

இத்தினமும் இனியென்றும்
இன்பமுற இருந்திடவே
ஈடில்லா இணைகளற்ற
ஈருலகின் இறையருளால்

ஊரோரம் ஊர்ந்தோடும்
ஊர்தியொலி உயிருசுப்பும்
ஊதலொலி ஊரெழுப்ப
உள்ளமெல்லாம் உவகையுறும்

ஊர்போன உறவினரும்
உடன்சென்ற உற்றாரும்
ஊணுருக உழைத்தலுத்து
ஊர்திரும்பும் உற்சாகம்

எடைகனத்தோர் எட்டுவைத்து
எதிரெதெரே ஏகிடுவர்
எட்டுமணி எட்டிவிட்டால்
ஏடெடுத்தோர்  எழுதச்செல்வர்

எத்தனையோ ஏழையெல்லாம்
எனதூரில் ஏற்றம்பெற்றார்
எண்ணப்படி எப்படிப்பும்
ஏற்றெழுதி எழுச்சிபெற்றார்

ஐவேளை ஐயமற
ஐயாமார் தொழுதிடுவர்
ஒற்றுமையாய் ஓரணியாய்
'ஒருவனிடம்' ஒன்றிடுவர்

ஓடைத்தண்ணீர் ஓட்டத்தைப்போல்
ஒழுக்கத்தையும் ஓம்பிடினும்
ஒவ்வொன்றாய் ஓய்ந்துவர
ஒவ்வாமை ஓங்கிடுதே

அத்தனையும் அங்குமிங்கும்
அலைகழித்து அழிந்துவர
அதிரையென்னும் பெயருண்டு
அஃதொன்றே மாற்றமில்லை

கண்குளிர கண்டுவந்த
கதிர்விளையும் கழனியெலாம்
கட்டடமாய்க் காட்சிதரும்
காசுடையோர் கைங்கர்யம்

கிணறூறும் கொள்ளையில்லை
கனிசுமக்கும் கிளைகளில்லை
கொத்துக்கொத்தாய் காய்காய்க்கும்
கொய்யாயில்லை குருவியில்லை

சாளரத்தின் சாரலிலே
சொக்கிநின்ற சந்தோஷம்
சடுதியிலே சிதைந்ததுவே
சோகமனம் சோர்ந்திடுதே

சாலையெலாம் சகதிமிக
செருப்பில்சிக்கி சேற்றுத்துளி
சிதறிஅது சிறுபுள்ளியாய்ச்
சட்டையிலே சாயமிடும்

தோப்புகளில் தொங்கிவந்த
தென்னங்குலை தடிமனற்று
தொற்றுநோயால் துவண்டுவிட
தேங்காய்கள் தினமுதிரும்

வழித்தடம்போல் வாய்க்கால்கள்
வளர்ந்துவிட்ட விஷக்கொடிகள்
வெப்பத்திலே வெடிப்புகண்டு
வற்றிவிட்ட வெறும்குளங்கள்

வெளிநாட்டில் வேலைதேடி
வாலிபத்தை வீணடித்து
வங்கிகளில் வட்டிகட்டி
வறுமையிலே வீழ்கின்றவர்

அதிரையுண்டு அழகுயில்லை
ஆட்களுண்டு அன்புயில்லை
இதயமுண்டு இரக்கமில்லை
ஈட்டியதை ஈவதில்லை

உறவுவுண்டு உணர்வுயில்லை
ஊருணியில் ஊற்றுயில்லை
எல்லாமுண்டு எதுவுமில்லை
ஏக்கமுண்டு ஏற்றமில்லை

எத்திசையில் சென்றாலும்
என்னுலகம் அதிரையன்றோ
என்னிறைவா எனதூரின்
எழில்மீட்டு எமக்கருள்வாய்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு