அன்புள்ளம் கொண்ட அதிரைநிருபர் அபிமான நெஞ்சங்களே!
அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]...
புத்தகம் தொடர்பான கட்டுரை எழுத ஆசை வந்தது. இது ஒரு பேராசைதான் ‘கடலைக் கலக்க கட்டெறும்பு கச்சை கட்டியது’ போன்றதே என் ஆசையும். என்றாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்ற நம்பிக்கையில் என் பயணத்தை “பிஸ்மில்லாஹ்” என்று ஆரம்பிக்கிறேன். “ஆயிரங்காத பயணத்தின் ஆரம்பமே நாம் எடுத்து வைக்கும் ஒரு முதல் அடியில் தான் துவங்குகிறது’’.என்று ஒருமேதை சொன்னதாக நினைவு.
மடிமீது எனை வைத்து தன் முந்தானையில் மூடி பாலூட்டிய என் தாய்க்கு அடுத்து சுமார் ஐம்பது ஆண்டுகாலத்துக்கும் மேல் பாலும் சோறும் ஊட்டி என்னை ஆளாக்கிய செவிலித்தாய் புத்தகமே. கதை சொல்லி அறிவூட்டி ஊக்கமும் ஆக்கமும் தந்த அந்த புத்தகத்தின் கதை கூற மகன் வந்தேன். இது ஒரு நன்றிக்கடன். (பெரும்பாலான இந்தியர்கள் உச்சரிக்க மறப்பது அல்லது மறுப்பது இரண்டு வார்த்தைகள். ஒன்று; நன்றி. மற்றது; ஸாரி. இதைச் சொன்னது அதிரைநிருபர் தளத்துக்கு மிகநெருக்கமான ஒருவர்தான். அவர் சொன்னதை நான் வழி மொழிகிறேன்.)
சுமார்ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வயிறு வளர்க்க கப்பல் ஏறி மலேயா நாட்டுக்கு போய் பினாங்கு மாநகரில் வேலைதேடி கடை கடையா அலைந்து அலைந்து வேலை கேட்டபோது எல்லாக் கடையும் கை விரித்து “இல்லை இல்லை” என்ற ஒரே பல்லவி பாட ஒரே ஒரு கடை முதலாளி மட்டும் எந்த ஊர் என்றுகேட்டார். ஊரைச் சொன்னேன்.” ஆட்டைக் கழுதை ஆக்கிய....” என்று இழுத்தவர் மனமிறங்கி “கடைல சேத்துகிறேன் ‘’என்று, கருணையோடு சொன்னார். அப்போதெல்லாம் நம்ம ஊர்க்காரங்க யாரும் கடைகளில் சம்பளகாரர்களாகவோ அல்லது கடைகண்ணி வச்சு பெருசாவோ சிறுசாவோ யாவாரம் செஞ்ச முதலாளி யாருமே இல்லவே இல்லேன்னு எவர் முன்னால் வந்து நின்றும் நேர்படச் சொல்வேன்...
ஒரு வியாபாரி இன்னொரு வியாபாரியிடம்‘ இவன் ஒழுங்கான பையன் கை சுத்தமான ஆளு சொல்ற பேச்சுக்கு மறு பேச்சு பேசாம வாயே மூடிகிட்டு வேலை பார்ப்பான். காசு பண விஷயத்தில் கை நீளாது” என்று ஒரு பரிந்துரையை ஒரு முதலாளி இன்னொரு முதலாளி காதுலே போட்டாத்தான் அந்த முதலாளியும் நம்மளை நம்பி வேலை போட்டுக் கொடுப்பார்.
இல்லேன்னா அம்போதான்! அந்த மாதிரியான பரிந்துரை செய்ய நம்ம ஊரு ஆளுங்கதான் அந்த வெயிட்டுலே அங்கே யாரும் இல்லையே! “சோறு போடுறேன் வந்து வேலையே ஒழுங்கா பாரு. வேலை எப்புடினு பாத்துத்தான் சம்பளம் சொல்ல முடியும். இரண்டு வேளைச் சோறு; ஒரு வேளை பசியாற அம்பது காசு இந்த அம்பது காசுக்கு இன்னொரு பேரு செலவுக் காசு [‘போனஸ் கீனஸ்’ என்றெல்லாம் பேச்சு வரப்படாது] நாங்களா பாத்து கொடுத்தாதான் வாங்கிகிடனும் .காலையில வெள்ளன (ஆறு மணிக்கு கடைக்கு வந்துடனும்” (இது முதல் எச்சரிக்கை) கடை மூடும் நேரம்? முதலாளி மூடு எப்படி இருக்கோ அப்படியே அமையும். இரவு மணி 9 லிருந்து 10 மணிக்கு மேல் போகாது [கொசுறு தகவல் : ”மூடும்’’ என்றசொல்’ அபசகுனம்’ என்பதால் எடுத்து வைப்பது” என்ற சொல் உபயோகத்தில் இருக்கும்].
"'நல்லா வேலை செஞ்சா பின்னாடி பார்த்து செய்வோம்” என்ற வாய்மொழி ஒப்பந்தம் போட்டு ஒரு புத்தககடை முதலாளி எனக்கு ’அபயக்கரம் நீட்டினார். நீட்டிய கரத்தை சிக்கெனப் பிடித்து நீண்டது என் பிழிப்பு. பிழைப்பில் பிழை ஏதும் செய்யாமல் ‘கை’ பதனம் வாய் பதனம் என்று கருமமே கண்ணா இருந்ததால் வயிற்றுக்கு கிடைக்க வேண்டிய சோறு கிடைத்தது. சில நேரங்களில் அறுபது நிமிசம் அல்லது கூடக்கூடப் போனால் நூற்று இருபது நிமிசம் தாமதம் ஆகும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் போட்டதையே சாப்பிட்டுவிட்டு அறுசுவை சங்கதியெல்லாம் நாக்குக்கு காட்டாம கர்மமே கண்ணா இருந்து வேலையே மட்டும் வெரசு வெரசா செஞ்சு முடிக்கனும்.
அதுதான் முதலாளிகளின் கோட்பாடு, ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும். ’இதை நன்றாகத் தெரிந்து கொண்ட புத்திசாலிகள் முதலாளிகளானார்கள். இந்த சூத்திரம் அறியாத அப்பாவிகள் நல்லபொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தார்கள். உழைப்பாளிகளின் பசியும் மூடத்தனமும் முதலாளிகளின் மூலதனம் ஆனது. உழைப்பவனைப் பிழிந்து பிழிந்து சாற்றைக் குடித்து சக்கையைத் துப்பி முதலாளிகள் கொழுத்தார்கள். இவர்கள் ஒன்று கூடி தங்களுக்கு ஒரு வர்க்கத்தை நிறுவிக் கொண்டார்கள். இதை முதலாளி வர்க்கம் என்றும் சொல்லாம்.
"பசிநோக்கார் கண் துஞ்சார் செவ்வி அருமையும் பாரார் கருமமே கண்ணாயினார்" என்று சொன்னபடி நான் பணியாற்றிய போது இவர்களைக் கற்றேன். கற்றது பல; பெற்றது பல; விட்டது பல; விற்றது பல. .
விட்டதை மட்டும் விட்டுவிட்டு மற்றதை தந்த “புத்தகத்திற்கு’’ நன்றிக் கடன் ஆற்றும் வண்ணம்’’ ஒரு புத்தகம் பிறக்கிறது” என்ற தலைப்பில் சிறு தொகுப்புக் கட்டுரை வரைய எனக்கு ஒரு ஆசை அந்த ஆசையில் பிறந்ததுதான் இந்த சின்னஞ்சிறு தொடர் கட்டுரை.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
S.முஹம்மது ஃபாரூக்
அறிவிப்பு : இந்த தொடர் வாரந்தோறும் பிரதி ஞாயிற்று கிழமை தோறும் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !



