Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலட்சியத்தின் "இலச்சினை (Logo)" 16

அதிரைநிருபர் | December 31, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச் சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011)  நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட" முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமான சகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள் (15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.
விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team

________________________________________________________

நன்றியுடன் : இம்மாநாட்டிற்கான இலட்சினை உருவாக்கிட அதிரைநிருபர் குழுவுடன் இணைந்து எல்லா வகையான ஆலோசனைகளையும் உறுதுணையுடன் பதிவு வடிவம் கொடுத்திட்ட எங்கள் அன்பின் ஜமீல் காக்கா மற்றும் அதிரை அஹ்மது காக்கா, சபீர் காக்கா, ஷர்ஃபுத்தீன் காக்கா இவர்களை நினைவில் கொள்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு

புது வருட பிறப்பு‏? 28

அதிரைநிருபர் | December 31, 2010 | ,

எது புது வருட பிறப்பு?

இதில் அப்படி என்ன சிறப்பு?

அசிங்கமும், அனாச்சாரமும்

கை கோர்க்கும் இரவில்

எங்கே வாழ்விற்கான நல் வெளிச்சம் ?

முஸ்லிம் வருட பிறப்பு முஹர்ரம்,

இந்த ஜனவரி பிறப்பு கொண்டாட்டமோ ஹராம்.

ஜனவரி, பிப்ரவரி,  ஜனனம், மரணம் மார்சுவரி,

இப்படி வரிசையாக வரும் மாதம்.

இதில் என்ன பிராமாதம்?


காலத்தின் மீது சத்தியமாக நான் காலமாக

இருக்கிறேன் அல்லாஹ்வின் வாக்கு,

இதில் ஒருமாதம் சிறப்பு, மறுமாதம் பாதிப்பு

என்கிற பகுப்பு யார் சொன்ன படிப்பு?

--CROWN

என்னா சங்கதி ஹாக்கா? 17

அதிரைநிருபர் | December 31, 2010 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்....

என்னா சங்கதி மொம்மாதுல்லா ஹாக்கா? ஆளேயேக்காணோமே கொஞ்ச நாளா? கடுமையான வேலையாக்கும்? எப்படி ஈக்கிறியெ? ஊட்டுக்கு போன்லாம் பேசிறியலா? ஊர்லெ எல்லாரும் எப்புடி ஈக்கிறாஹெ? நான் விசாரிச்சி சலாம் சொன்னதா எல்லாருக்கும் சொல்லுங்கெ..

அல்ஹம்துலில்லாஹ். நல்லா இருக்கிறேன்டா.. ஆமாடாத்தம்பி கம்பெனியிலே வருசக்கடைசியினாலெயும், நெறைய பேர் லீவுலெ ஊருக்கு போயிக்கிறதுனாலேயும் வேலை கூடிப்போச்சு. அதான் அடிக்கடி இந்த பக்கம் வர முடியலெ... வெள்ளிக்கெழெமெ கூட ஓட்டி, ஹீட்டிண்டு வேலெக்கி போஹனுமா ஈக்கிது. அதெ யான் கேக்குறா...

என்னா செய்யச்சொல்றா? நம்மளுவொ தான் அரைகொறைய படிச்சிட்டு வந்து இங்கெ வந்து கஷ்டப்படனுமா ஈக்கிது. அப்பொவெல்லாம் குடும்பத்துலெ ஓரளவு படிக்கிறதுக்கு வசதி, வாய்ப்பு இருந்தும் நம்மூர்லெ காலேஜ் வசதி இருந்தும் அதை சரிவர பயன்படுத்திக்கிட்டு மேலும் படிக்காமப்போனது இன்னெக்கி எவ்ளோ கஷ்டமா ஈக்கிது பாத்தியா?

நம்மளெ விடெ வசதி வாய்ப்புகள் கொறைச்சி இருந்தும் அன்னெக்கி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்ட குடும்பத்துலெ பொறந்த செல பேர் கவனமா, கொஞ்சம் செரமம் எடுத்துப்படிச்சதுனாலெ இன்னெக்கி கவெர்மெண்ட் உத்தியோகத்துலெயும், வாத்தியார்மாராவும் நம்ம நாட்டுலேயே, ஊருலேயே வேலை செஞ்சிக்கிட்டு நல்லா சம்பாதிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறாஹெ...

அன்னெக்கி அதிகமாக படிக்கச்சொன்னது நமக்கு ஏதோ மார்க்கக்குத்தம் போலயும், தேச விரோத செயல் மாதிரியும் தெரிஞ்சிச்சி. இன்னெக்கி அந்த நல்ல வாய்ப்பெ எழந்துப்புட்டு வருத்தப்படனுமா ஈக்கிது... முன்னாடி எல்லாம் அரபு நாட்டுலெ இருக்குறெ நம்ம சொந்தக்காரஒல்டெ பாஸ்போர்ட்டு காப்பியெக்கொடுத்துட்டா நம்ம வாழ்க்கை கரையேறிடும்ன்டு நெனெச்சிக்கிட்டு காலம் ஓடுனிச்சி..

ஆனால் இந்தக்காலத்துலெ முறையா, உரிய பாடத்தெ தேர்ந்தெடுக்காம ஏனோதானோன்டு படிக்காமெ ஊக்கமா, தொலைநோக்கு சிந்தனையோட படிச்சி முடிச்சிட்டு வெளியிலெ வந்தா தான் நாமெ விரும்புன வேலையும் கொடெக்கும், கை நெறைய சம்பாத்தியமும் கெடெக்கும். பொறவு நம்மனாலெ சமூக சேவைகள் என்று எதாவது செய்ய முடியும். நா சொல்றது வெளங்குதா?

என்னடாட்த்தம்பீ அஞ்சு வயசுலேர்ந்து படிப்பு ஆரம்பிக்கிது. கொறைஞ்சது இருவது வயசுவரைக்கும் கொஞ்சம் ஊக்கமா, கவனமா, நடைமுறை, எதிர்கால இலக்குகளை யோசிச்சி படிச்சோம்ன்டா பொறவு உசுரு இருக்குறொ காலம் வரைக்கும் நாமளும் சந்தோசமாக ஈக்கலாம் நம்மளெ சுத்தி உள்ளவங்களையும் சந்தோசப்படுத்தலாம். நம்மளெ மாதிரி சரிவர படிக்காமெ வந்தா அரபு நாட்டுளெ அரைகொறை இருட்டுளெ கண்ணுதெரியாதவன் துளாவுறெ மாதிரி வருங்கால சந்ததியெலுவோ வாழ்க்கையும் ஆஹிடக்கூடாது மா....அல்லாஹாப்பாத்துவான்...

நம்ம சரியா படிக்காம வந்துப்புட்டு அவன் இவ்ளோ சம்பாதிக்கிறான்.. இவன் குடும்பத்தோட குதூகலமா சுத்துறான்டு நாமெ மத்தவங்களெ பாத்து பொறாமைப்பட்றது தப்பு இல்லையா? அவனுவோ இந்த நெலெமைக்கி வர்ரதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு ஈப்பானுவோ? யோசிக்க வானாமா?

அதுனாலெ தான்டா தம்பீ படிச்சி, படிச்சி சொல்றேன் நம்ம ஊட்டு புள்ளெயெலுவோ நல்லா படிச்சி பெரிய அதிகாரியாவோ, டாக்டராவோ, வக்கீலாவோ, போலீஸ் ஆபீசராவோ, கலெக்டராவோ வந்தா அவங்க குடும்பத்துக்கும் பெருமை,  ஊருக்கும் பெருமை நம்ம சமுதாயத்திற்கே பெருமை இல்லையா? அல்லாஹ் தான் நம்ம ஆசையலுவொளே நெறெவேத்தனும். ஆமீன்..

இன்னொரு விசயம் கேள்விப்பட்டியா? நம்மூர்லெ வர்ர ஜனவரி மாசம் 14, 15ம் தேதியிலெ அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர் வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIம்) இணெஞ்சி கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்போறாங்களாம். அதுனாலெ நம்ம ஊட்லெ, அக்கம்பக்கத்து ஊட்லெ, நம்ம குடும்பத்துலெ, தெருவுலெ படிக்கிற எல்லாப்புள்ளையெலுவொலேயும் மறக்காமெ இதுலெ கலந்துக்கிடெ சொல்லனும். சரியா? இதுக்கு ஒன்னும் காசு,பணம் செலவாகிடாது. பல அறிஞர்களின், படித்தவர்களின் நல்ல பல உபதேசங்கள் கெடெக்கும் அவொளுவொளுக்கு. அதெ வச்சி யாராவது இலக்கு வச்சி படிச்சி நாளெக்கி பெரிய ஆளா வரமாட்டாங்களா? என்னா?

அதுனாலெ கடைசியா ஒன்னு அழுத்தமா சொல்றேன் கேட்டுக்கோ.. எங்கெ எல்லாம் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்குதோ அங்கே எல்லாம் ஆர்வமா கலந்துக்கிற்றெ மனப்பக்குவத்தெ நம்ம புள்ளெயெலுவொலுக்கு மொதல்லெ மனசுலெ வெதெக்கனும். நம்மனாலெ முடிஞ்ச ரூட்டெ காமிச்சி கொடுத்துடுவோம் பிறகு அவங்க தன் தெறமையிலெ இன்ஷா அல்லாஹ் முன்னுக்கு வந்துருவாங்க...

நம்ம வாழ்கெ தான் அரைகொறை வெளிச்சத்துலெ ஓட்டிக்கிட்டு ஈக்கிது. அவனுவொ வாழ்கையாவது பிரகாசமாக முழு வெளிச்சத்துலெ ஓடட்டும். நல்லா படிக்கிறத்தெத்தான் முழு வெளிச்சம்ன்டு சொல்ல வந்தேன்.

நல்லா படிச்சிருந்தா நாமெலும் இங்கே குடும்பத்தோட மத்தவங்க மாதிரி சந்தோசமா இருக்கலாமுல்லையா? அதுக்கு தான் நசீபு இல்லாமெ போயிடிச்சி. நம்ம ஊட்டு புள்ளெயெலுவோ இதுமாதிரி எதிர்காலத்துலெ வருத்தப்படக்கூடாது. அவங்க நல்லா படிச்சி சந்தோசமா குடும்பத்தோட வாழனும். அதுக்காக நம்மானாலெ ஏன்டெ முயற்சியும், துவாவும் செய்வோம்.

கூதல் நடுக்குது. தொழுவ நேரமாச்சி சரி வரட்டா...

நமதூரில் விரைவில் நடைபெற இருக்கின்ற கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டிற்காக சிறப்புக்கட்டுரையாக இதை உங்கள் அனைவரின் பார்வைக்காக பதிகின்றேன். இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு நம் எண்ணம் போல் சிறப்புடன் நடந்தேறிடவும், வெற்றி பெறவும் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக விடைபெறுகிறேன்.

--மு.செ.மு. நெய்னா முஹம்மது

கலந்து ஆலோசிப்போம் 50

அதிரைநிருபர் | December 30, 2010 | ,

அஸ்ஸலாமு அழைக்கும்,

இளையோர் எங்களிடம் பொறுப்புக்களை கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம் உங்களுக்கு அனுபவம் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பல திறமைகள் உள்ளன.

நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்.....

நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்....
நீங்கள் கப்பலை கடலில் ஓட்டினீர்கள்....

நாங்கள் கடலிலும் ஓட்டினோம் த(க)ரையிலும் ஓட்டினோம் (ஹோவர்கிராப்ட்)  கடல் உள்ளேயும் ஓட்டினோம் (சப்மரின்)....


நீங்கள் டெலிபோனை கண்டு பிடித்து ஆப்பறேட்டரிடம் நம்மரை சொன்னீர்கள்....

நாங்கள் நபருக்கே டயல் செய்தோம் (மொபைல்).....

நீங்கள் ஆகாயத்தில் சாட்லைட் விட்டீர்கள்.....

நாங்கள் அதை உடைப்பதற்கு மிசைல் விட்டோம்.....


நீங்கள் நீர் ஆவியில் ரயில் விட்டீர்கள்......

நாங்கள் நீரை கொண்டு இயங்கும் ராக்கெட் என்ஜின் செய்தோம் (கிரையோஜெனிக்)......


இதெல்லாம் உங்களை மட்டம் தட்டவோ அல்லது அவமதிக்கவோ அல்ல, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் முன்னோர்களை விட நீங்கள் புத்திசாலிகள்தான், உங்களைவிட நாங்கள் புத்திசாலிகள் என்பதை ஏற்றுகொள்ளுங்கள், எங்களுக்கு பிறகு வரும் எங்கள் சந்ததிகள் எங்களைவிட புத்திசாலிகள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இன்னும் அவர்களை புத்திசாலிகளாக ஆக்குவதற்கு  நாங்கள் தொடங்கி விட்டோம் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை.

எதுவாக இருந்தாலும் இளையோர்கள் எங்களிடமும் கலந்தாலோசித்து,   கல்வியிலும் மற்ற செயல்பாடுகளிலும்  நல்லது கெட்டது எது என்பதை அலசி ஆராய்ந்து நல்லமுடிவை எடுங்கள் பெரியோர்களே, தாய்மார்களோ, சகோதர, சகோதரிகளே.

---SHAHULHAMEED
    DAMMAM

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு 22

அதிரைநிருபர் | December 28, 2010 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர்  வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து  நடத்தும்

கல்வி விழிப்புணர்வு மாநாடு

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15  தேதிகளில் நம் எதிர்காலச்  சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின முன்னேற்றத்தையும் வளவாழ்வையும் கருத்தில் கொண்டு, கல்வி விழிப்புணர்வு மாநாடு நமதூரில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், நம் சமுதாயத்தின் கல்விச் சிந்தனையாளர்களும் பயிலரங்கு விற்பன்னர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்புச்சொற்பொழிவுகளும் பயிற்சிகளும் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.

இவண்,

இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை,
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றி விரிவான அறிவிப்பும் நிகழ்ச்சி விவரங்களும் பின்னர் வெளியிடப்பெறும், இன்ஷா அல்லாஹ்.

நாளைய நம் சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக உருவாக்குவோம். நமக்குரிய உரிமைகளை  நம் பக்கம் மீட்டெடுப்போம்.   ஆட்சி  அதிகாரத்திலும், சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் நம் இஸ்லாமிய ஆளுமையை நிலைநிறுத்துவோம்.  உலக மக்களுக்கு ஓர் உதாரணமாக நம் வருங்கால சந்ததியினரை உருவாக்க அனைவரும் வாருங்கள்,  மார்க்க கல்வியுடன் உலகக்  கல்வியை  வழியுறுத்தி வலுமைமிக்க  சமுதாயமாக  நம்  முஸ்லீம் சமுதாயம் உருவாக  ஒற்றுமை கரம் நீட்டுகிறோம். வாருங்கள் ஒன்றுபடுவோம்.  வெற்றி  பெற்ற  சமுதாயமாக  உருவெடுப்போம்.  இன்ஷா அல்லாஹ். 

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற படைத்தவனிடம் துஆ செய்கிறோம். நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்.

கல்வி விழிப்புணர்ச்சி சபதத்துடன்....

-- அதிரைநிருபர் குழு
 

ஊர்லெ எக்கச்சக்கமான கலியாணம் 8

அதிரைநிருபர் | December 28, 2010 | , , ,


பெண்ணைப்பெற்றவன் அங்கே காய

அவளுடன் பிறந்தவனோ அகதியாய் எங்கோ தேய‌

அவ‌ளை ஆளாக்கி பேராக்கி ஒரு நல்ல‌ ஆணுக்கு துணையாக்க‌

அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு சொல்லி மாளாது கேட்டு ஓயாது

அவள் ப‌ள்ளி செல்வாள் ந‌ன்கு பாட‌ம் ப‌டிப்பாள்

ஐங்கால‌த்தொழுகையை முறையே நிறைவேற்றுவாள்

வீட்டு வேலைக‌ளை செவ்வ‌னே செய்து முடிப்பாள்

திற‌மைக‌ள் ப‌ல‌ க‌ற்று தெருவில் பெருமையுடன் பேச‌ப்ப‌டுவாள்

வீட்டுக்கு வ‌ந்த‌ விருந்தின‌ரை உவ‌கையுட‌ன் உப‌ச‌ரிப்பாள்

க‌ற்புக்க‌ர‌சியாக‌ இருந்து மார்க்க‌ க‌ண்ணிய‌ம் காப்பாள்

இவ‌ளை திரும‌ண‌ம் முடிக்க‌ இருப்ப‌வ‌ன்

கொடுத்து வைத்த‌வ‌ன் என்றும் பலரால் பேச‌ப்ப‌டுவாள்

இவன் கொடுத்து வைத்தவன் அல்ல மாறாக(ப‌ண‌ம்)வாங்கி

வைத்தவன் பெண் வீட்டாரிடமிருந்து அவர்கள் விருப்பமின்றி

திற‌மைக‌ள் ப‌ல‌ பெற்றிருந்தும் திற‌மைய‌ற்ற‌ எவ‌னுக்கோ

வாழ்க்கைத்துணைவியாக்க‌ப்ப‌டுவாள் பிள்ளைக‌ள் பல‌

ஈன்றெடுத்தும் அற்ப‌ கார‌ண‌த்திற்காக‌ பிற‌கு வாழாவெட்டியாக்க‌ப்ப‌டுவாள்

அரைகுறை அறிவுள்ள‌ குடும்ப‌த்தின‌ரால் ந‌ன்கு பிரித்து மேய‌ப்ப‌டுவாள்

திரும‌ண‌ வாழ்க்கை என்ப‌து மூன்று வேளை ம‌னைவி வீட்டில் உண‌வு உண்டு வர‌ ம‌ட்டும‌ல்ல‌

இல்லை ப‌டுத்துற‌ங்கி உட‌ல் அய‌ர்வை போக்கி கொள்ள‌ ம‌ட்டும‌ல்ல

பிள்ளைகள் பெற்றுக்கொடுத்து அத்துடன் ஓய்ந்து போவதற்கல்ல‌

வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் லாப, நட்டங்களை ஏற்கும் நிரந்தர முதலீடு போன்றது திருமண வாழ்க்கை.

இன்ப‌முட‌ன் இருக்கும் பொழுது அவ‌ள் வேப்ப‌ங்காயைக்கொடுத்தாலும் இன்முக‌த்துட‌ன் சுவையாக ஏற்றுக்கொண்டு உட்கொண்ட‌ நீ

உள்ள‌த்துன்ப‌ம் உன்னைச்சூழ்ந்திருக்கும் வேளையில் அவ‌ள் இனிய‌ தேனைக்கொண்டு வ‌ந்து ஆசையுடன் கொடுத்தாலும் அதை க‌ச‌ப்பாக்கி உட்கொள்ள மறுப்பது/வெறுப்பது ஏனோ?

ப‌ய‌ன்ப‌டுத்திய‌ பின் தூக்கி எறிய‌ அவ‌ள் ஒன்றும் ப்ளாஸ்டிக் குவ‌ளை அல்ல‌

இறுதி வ‌ரை ந‌ம்முட‌ன் இணைபிரியாம‌ல் வர இருக்கும்

உட‌ல் உறுப்பு போன்ற‌வ‌ள் உயிரோடு ஒன்றிணைந்தவள்

இன்ப‌த்திலும் துன்ப‌த்திலும் கூட‌வே ப‌ய‌ணிப்ப‌வள்

ஏதேதோ கார‌ண‌த்திற்காக யாரோ சொல்கிறார்க‌ளே என்று அவ‌ளை எடுத்தெறிந்து விடாதே.

ந‌ம் மார்க்க‌ம் அழ‌குட‌ன் சொல்வ‌து போல் அவ‌ள் ஒரு ப‌ல‌கீன‌மான‌ முதுகெழும்பு போன்ற‌வ‌ள்

நீ அவ‌ள் மேல் க‌டின‌ம் காட்டினால் அவ‌ள் வ‌ளைய‌ மாட்டாள்

மாறாக‌ ஒடிந்து விடுவாள் உள்ள‌ம் நொறுங்கி விடுவாள்

உன்னை விட்டுப்பிரிந்துவிடுவாள் உறக்கத்தை கலைத்திடுவாள்.

விவாக‌ர‌த்து என்ப‌து உரிய‌ கார‌ண‌த்திற்காக வேறு வழியின்றி எடுக்கப்படும் ஒரு இறுதி முடிவே அன்றி எளிதில் ம‌று வாழ்க்கையை தொட‌ர‌ முத‌ல் தொட‌க்க‌மாக‌ இருக்க‌ வேண்டா.

ஊரில் ஒரு புற‌ம் க‌லியாண‌ வைப‌வ‌ங்க‌ள் க‌லைக‌ட்டினாலும் ம‌றுபுற‌ம் சிறு, சிறு அற்ப‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ விவாக‌ர‌த்துக்க‌ள் பெருகி வ‌ருவ‌து ஆரோக்கிய‌மான‌த‌ன்று ம‌ற்றும் அழித்தொழிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.

இக்கட்டுரை மூலம் ஆண்கள் வர்க்கம் மட்டுமே தவறுகள் செய்வதாக எண்ணிவிட வேண்டாம். பெண் வர்க்கமும் பல தவறுகள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ திருமண வாழ்வில் செய்து வருவதும் உண்மைதான்.

உங்க‌ள் ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை இங்கு பின்னூட்ட‌ம் மூல‌ம் ந‌ம் அனைவ‌ரின் பார்வைக்காக‌வும் ப‌தியும் ப‌டி அன்புட‌ன் அ.நி. சார்பாக‌ கேட்டுக்கொள்கிறேன். குறை, நிறைக‌ள் இருப்பின் இன்முக‌த்துட‌ன் ஏற்றுக்கொள்வோம் அந்த‌ வ‌ல்லோனின் க‌ருணையை நாடி...


-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

நீச்சல் கற்றுக்கொள்வோம், கோர விபத்துக்களிருந்து தப்பிப்போம் 18

அதிரைநிருபர் | December 27, 2010 | ,


சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்;பார்க்க சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது.

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆராயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:

1) படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.

2) படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.

3) படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.

4) குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.

5) பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.

6) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.

7) ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.

8) மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.

இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது. அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?

1) கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல மாறாக சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்;.

2) நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி(38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார். ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?

3) சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேயிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

4) சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?

-- டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சுதந்திரமா, பெண்ணுக்கா? 19

அதிரைநிருபர் | December 26, 2010 | , ,

உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகமும், இந்தியாவும்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்?

கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ - தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!

உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!

கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!

கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் - பிரண்ட்
கேர்ள் - பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!

சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!

வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!

தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின் 
ஆடையுடன் தொலைக்காட்சி 
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் - காலேஜ் பெண்!
பெண்ணையே  திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் - யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!

இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!
உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் - அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!

இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!
அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!

1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!
வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!
ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!

பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!


திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!

உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:59)

தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது  அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

... தமது அலங்காரத்தை அவர்கள்  வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)

- அலாவுதீன். S.

No Parking 30

அதிரைநிருபர் | December 25, 2010 |

இன்றைய சூழலில் சமீபகாலமாக துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கங்கனம் கட்டிக் கொண்டு போடும் அபராதங்கள் எதற்குத் தெரியுமா ? ஓடும் வகனங்களுக்கும் அதோடு ஓடாமல் அமைதியாக நிறுத்தப் பட்டிருக்கும் அப்பாவி வாகங்களுக்கும்தான். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த வாகனங்களுக்கு வாயொன்று இருந்திருந்தால் அதன் புலம்பல்கள்களை கோர்வையாக்கி பத்தி பத்தியாக எழுதிக் கொண்டே இருக்கனும்.

-- அதிரைநிருபர் குழு

 
அன்பு நிறைந்த அ. நி .வாசகர்களே !

இந்தப் படத்தைப் பார்த்து நகைச்சுவை உணர்வோடு உங்கள் கருத்து / கவிதை குதிரையை தட்டி விடுங்களேன்!
-- M.S.M. ராஃபியா


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு