அற்றுச் செல்லும் நேரமதில்
உன்னிடம்
விட்டுச் செல்வதன் சாரமிது
நகைக்கும் பற்களில் பழுப்பேற
புகைக்கும் பழக்கம் எனக்கு
நீ பிறந்த நாள்தான் அப்பழக்கம்
நான் துறந்த நாள்
புகை அற்ற வாயால்
பெயர் வைத்தேன் உனக்கு
பொக்கைவாய்ப் புன்னகையால் - நீ
புதுவுலகை எனக்களிக்க -உன்
பிடரியில் கைதாங்கி
பூமுகத்தில் முத்தமிட்டேன்.
பக்கத்தில் உனைக் கிடத்தி
பகுத்தறிவு போதித்தேன்
.
இறைமறை ஓதுவதை
இளநகையோடுப் பார்த்திருந்தாய்
பள்ளிக்கூடம் போகுமுன்பே
எழுத்துகளைப் பயிற்றுவித்தேன்
உன்னை நான் வளர்த்தெடுக்க
என்னை நான் வார்த்தெடுத்தேன்
முன்கோபம் முறியடித்து
முகமன் சொல்ல வைத்தேன்
காசுபணம் சொத்துசுகம்
கவனத்தைச் சிதைக்காமல்
கல்வியையும் கண்ணியத்தையும்
கடமையென உணர வைத்தேன்
உடல் சுத்தம் உடை சுத்தம்
உளச்சுத்தம் உயர்ந்ததென
இடஞ்சுட்டி பொருள் விளக்க
எடுத்துக்காட்டாய் நான் நின்றேன்
உண்மையும் உழைப்புமே
உயர்வுக்கு உகந்ததென்றேன்
என்னைப் பார்த்தே
எல்லாம் கற்கும்
உன்னைப் பார்த்து
உள்ளம் பூரித்தேன்
மாதிரி மனிதனாய் உன்முன்
பரிணமிக்க முயன்றேன்
அதிகாலை தொழுது
அழகான விடியலில்
அருள்வேதம் ஓது
அந்நாள் உனக்கு நன்னாளே
பொழுது புலர்வதை
நீ காணும் நாட்களே
உன்
வாழ்நாட்கள் என கணக்கில் வை
நன்னீராடு பசிக்குப் புசி
நல்லோரோடு ரசித்துச் சிரி
நளினம் கொள் நற்சொற்கள் சொல்
விண்முட்டும் கட்டடத்திற்கும்
முதற்படிதான் துவக்கம்
முறைப்படி முதலில் படி
முன்னேறுவாய் படித்தபடி
உழைத்து உண்
உனைவிட
இளைத்த மனிதருக்கு
உண்ணக் கொடு
தடுக்கி விழுவோரைத்
தாங்கிப் பிடி
தடுமாறி நடப்போருக்குக்
கைத்தடியாகு
மின்னணு எந்திரங்களில்
நுண்ணறிவு பெறு
கண்ணொளி கருதி
கட்டுப்பாட்டுடன் கையாள்
வீண் வாதம் தவிர் - அது
ஒரு வழிப் பாதையில்
எதிர் வழிச் செல்லும்
பிடிவாத மன்றோ
வழியெலாம் வாய்த்த
வாய்ப்புகள் விடுத்து
வாய்ப் புகழ் பாடி
ஏய்ப்பவர் அறி
இருப்போரோ இறந்தோரோ
மூத்தவர் பலரும்
நேற்றைய தினம் வரை
இன்றைய தலைமுறையின்
நாளை சிறக்க
நன்னயம் செய்யவே நாடினர்
நன்மையை நாடினர்
உண்மையைத் தேடினர்
தேடியபோதினில்
தெளிவின்றிப் போயினும்
நாடிய மனங்களின்
நன்றி மறக்காதே
இஸ்லாம் முதற்கொண்டு
இனியவை யாவையும்
எல்லோர்க்கும் எத்திவை
மாற்று மதத்தவரும்
மனிதர் என்ற பார்வைகொள்
மத நல்லிணக்கம்
மாற்றம் கொணர
துவேஷம் ஒத்திவை
போகும் வழியெல்லாம்
புன்னகை தூவிச் செல்
திரும்பி வருகயில்
உனக்காகக் காத்திருக்கும்
ஒரு
புன்னகை தேசம்!


