Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் - 1 8

ZAKIR HUSSAIN | June 30, 2014 | , , , ,

அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் விசயத்தை விட்டு அடுத்த விசயங்களில் ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் அதை பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் ...

பெண் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம்  Vs  நவீன முஸ்லீம்கள்

பசங்களை விட பெண் பிள்ளைகளின் மார்க் இப்போது அதிகம் பேசப்படுகிறது. காரணம் பசங்க இப்போது ஒரே பாடலில் ஃபேக்டரி கட்டி முன்னேறி, மெர்சிடிஸில் வந்து இறங்கும் ஹீரோக்களின் வாழ்க்கையை நடைமுறையில் வாழப்பார்ப்பதுதான். ['அது சினிமா, இது வாழ்க்கை ' என்று சொல்லி இந்த வெண்ணைகளுக்கு விளங்க வைக்க இதுவரை பெரிய முயற்சிகள் ஏதும் இல்லை].

தொடர்ந்து எல்லா விசயத்திலும் ஏமாற்றப்பட்ட தென் தமிழ்நாட்டு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம்கள் வெளிநாடுகளை நம்பி வந்ததும், பின்னாளில் அவர்களது பிள்ளைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைத்ததும், இப்போது பிள்ளைகளின் வாழ்க்கை மாற்றம், கல்வி முன்னேற்றம் எல்லாம் வரமாகவும் அதே சமயம் கல்யாண காலம் என்று வந்தவுடன் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளை அளவு படிக்காததால் ஒரு 'கால மிரட்டல்' மாதிரி ஒரு சூழ்நிலை உருவாகிறது என்பது என்னவோ உண்மை. இதில் மார்க்கத்தை பின்பற்றி வாழ்வது, நம் இந்திய கலாச்சாரங்கள் எல்லாமே ஒரு சவால் ஆகிவிடுகிறது. அமெரிக்கா / ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் முஸ்லீம்கள் பள்ளிவாசலை தானாகவே உருவாக்கி தொழ வேண்டிய கட்டாயத்தில் என நினைக்கிறேன்.

வளைகுடா நாடுகளில் மார்க்கம் பேன பிரச்சினை இல்லை என்றாலும், வேலைக் களைப்பில் வீடு / ரூம் திரும்பும் போது நாம் குடிக்கும் டீ யை நாமே போடும் அவலம். [ஆயிரம் வசதிகள் இருந்தாலும் யாராவது டீ போட்டுத் தருவது / கார் கதவை திறந்து விடும் சுகம் மாதிரி ஒரு சுகம் எதிலும் இல்லை ].


இதில் வாழ்க்கையை மாற்றி அமைக்க சிந்தித்து சிந்தித்து அதை நடைமுறை படுத்தலாம் என்று ஊர்வரும் போது பிள்ளைகள் யுனிவர்சிட்டிக்கும், அல்லது கல்யாணத்துக்கும் தயாராகி விடுகிறார்கள். இளமை வாழ்க்கையில் பெரும் சம்பாத்யத்தை வீட்டுக்கு கொட்டி கட்டிய சூழ்நிலை ஊர் மெச்ச கட்டிய வீடுகள் வருமானம் தராது என்று தெரிந்தும்  எதிர்காலம் - கையிருப்பு எல்லாம் மிரட்டலாக தெரிய பெருவாதிபேர் திரும்பவும் ஃப்ளைட்டில் ஏறி திரும்பி வரும்போது அடித்துப் போட்ட  மாதிரி தூங்கிப்போய் விடுகின்றனர்.

சரி இப்போது விசயத்துக்கு வருவோம்... இன்றைய சவால்தான் என்ன?.

அது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, உள்ளூரில் இருந்தாலும் சரி. பெண்களை முடக்கிப்போடும் புத்தி இன்னும் மாறவில்லை. பெண் படித்து , அவளாகவே வாழ்வதற்கு தடை போடுபவர்கள் சமயங்களில் மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசுவது மாதிரி  பேசினாலும், எப்போதும் எதிர்காலத்தை பற்றி நெகடிவ் ஆகவே பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நம் ஊரின் மக்கள் தொகையை 'அதிரை பிறை' வளைத்தளத்தில் பார்த்தேன். மொத்த அதிரை மக்கள் தொகையில் பெண்களை 50% எடுத்துக் கொண்டாலும் அதில் 40 சதவீதம் உழைக்கும் வயதில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு  44,315 ப்ரொடக்டிவ் நேரத்தை விரயம் செய்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையின் ஒரு மாத ப்ரொடக்டிவ் நேரம்.

ஆனால் இவை அனைத்தும் பசாது பேசவும், மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதிலும், டெலிவிசன் சீரியலிலும் அநியாயத்துக்கு அழிகிறது.
 
இப்படி வேஸ்ட் ஆகும் நேரத்தை என்ன செய்யலாம் என்பதை வாசகர்களின் கவனத்திற்கே விட்டு விடுகிறேன். [உடனே பொம்பளைங்க எல்லாம் நாளைக்கே ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டாம். அதற்கு எல்லாம் ஒரு டைம் ஃப்ரேம் இருக்கிறது, தவிரவும் 'நீ என்ன படிக்கப்போறே?' என்று பெண்கள் கேட்டால் நாம என்ன செய்றது?].

பொதுவாகவே முஸ்லீம்கள் மார்க்கம் பற்றி பேச ஆரம்பித்தாலே அது என்னவோ உலகக் கல்விக்கு அப்பாற்பட்டது என்ற நிலையிலேயே பெரும்பாலான இடங்களில் சொல்லித் தரப்படுகிறது.

இப்போது இருக்கும் நவீன விஞ்ஞான முன்னேற்றம் மார்க்கத்தை மிக எளிதாக கொண்டு செல்ல உதவும். [மற்றவர்களிடம்]. இப்போது உள்ள சில இஸ்லாமியப் பள்ளிகள் அட்டோமிக் எனர்ஜி / நியூக்ளியர் மெடிசன் சொல்லிக் கொடுக்கும் அதே உத்வேகத்துடன் மார்க்கத்தையும் கற்றுத் தருகிறது. முஸ்லீம்கள் என்று பெயர் இருந்தால் மட்டும் போதாது,  இந்த உலகத்திலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ வேண்டும்.... அதை பெண்கள் உணர வேண்டும்.

எல்லாம் ஃபார்வேர்ட் மயம்

வாட்ஸப், இ-மெயில்களில் ஃபார்வேர்ட் ஆகும் விசயங்கள் இன்னும் பல வருடங்களுக்கான அறிவை வளர்க்க உதவும். ஆனால் விசயங்களில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்று வாட்ஸப் மெஸ்ஸேஜ். மருந்து அடையாறு கேன்சர் ரிசேர்ச் சென்டரில் கிடைக்கும் என இருந்ததால் சரி எதற்கும் இங்கு உள்ளவர்களுக்கு தேவைப்பட்டால் சொல்லலாமே என அங்கு உள்ள ஃபார்மசிக்கு டெலிபோனில் பேசினேன். அங்கு உள்ளவர்கள் சொன்னது நிறைய பேர் இது போல் விசாரிக்கிறார்கள், உண்மையில் ஒரு மருந்து இருக்கிறது , அது கேன்சரில் உள்ள பல டைப்களில் ஒரு டைப்பிற்கு ஒரு மருந்து. அதை ஆன்காலஜிஸ்ட் தான் பரிந்துறைக்க முடியும் இதை சாதாரணமாக இருமல் டானிக் மாதிரியெல்லம் வாங்க முடியாது என்றார்கள்.

வாட்ஸப்பிலும் , ஃபேஸ் புக்கிலும் எதற்கெடுத்தாலும் ஃபார்வேர்ட் செய்யும் ஆட்கள் தனது மனைவி குடும்பத்துக்கு ஒடி ஒடி உழைக்கிற மாதிரி தனது பெற்றோர்களையும் கவனிக்கிறார்களா என்று கண்டறியும் ஃசாப்ட்வேர் ஏதும் இருக்கிறதா.?. அப்படி இருந்தால்தான் உலகத்தை பற்றி கவலைப்பட முடியும் என்று ஒரு மெஸ்ஸேஜ் ஷேரிங் சட்டம் இருக்க வேண்டும்.

39-B

இது ஒன்றும் பல்லவன் பஸ் ரூட் அல்ல. மலேசியாவில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கான தூக்குத்தண்டனை சட்டத்தின் பிரிவு. 1911 சீனப்புரட்சியின் போது சீனாவின் தென் பகுதியிலிருந்து தென்கிழக்காசியாவான தாய்லாந்து / மலேசியா / பர்மா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா , ச்சந்தூ எல்லாம் இப்போது விஸ்வரூபம் எடுத்து வருங்கால சந்ததியினரை மிகப்பெரிய கேள்விக் குறிக்கு ஆளாக்கியிருக்கிறது.

போதைப் பொருளுக்கு ஆளாகி விட்டவர்களின் நிலை மிகவும் கொடூரமானது. நிமிர்ந்து நடக்கும் ஒரு மனிதனை அவனது முதுகெலும்பை அப்படியே அவனிடமிருந்து உறுவித் திருடுவதற்கு சமமானது.


தினம் தினம் மலேசிய ஏர்போர்ட்டில் போதைப்பொருள் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னாளில் அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் தூக்குத் தண்டனையில் அவர்கள் வாழ்க்கை கறைந்து போவதும் .... கொடுமையிலும் கொடுமை.

இதை நான் எழுதக் காரணம் இந்தியாவிலிருந்து  வரும் பயணிகளும் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். பண ஆசையை தவிர எதுவும் சரியான காரணமாக இருக்காது. இப்போதைக்கு நிறைய நைஜீரியர்கள், இரானியர்கள், பாகிஸ்தானியர்கள், மற்றும் இந்தியர்கள் இதில் நிறைய எலிப்பொறியில் மாட்டுவதுபோல் மாட்டுகிறார்கள். போட்டோ ஃப்ரேம், பால்மாவு பேக்கெட், ஷூ என்று எல்லாவிதமான நம்பியார் காலத்து டெக்னிக்களிலும் கடத்துகிறார்கள்.

டி.வி-யில் இவர்கள் சோதனையின் போது மாட்டும்போது இவர்கள் எப்படி செத்துப் போவார்கள் என்ற எண்ணம்தான் வரும், தூக்கு மாட்டப்போகும் முன், பெற்ற அம்மா, பிள்ளைகள் முகம் மனதில் ஒட... "சடக்" என காலுக்கு கீழ் உள்ள இரும்பு தளம் இரண்டாக விலகிக்கொள்ள  கால் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்து , கடைசியாக சாப்பிட்ட உணவும் தண்ணீரும் மலமாகவும், சிறுநீராகவும் வெளியாகி, நாக்கு தள்ளி, கண் பிதுங்கி...   ஒரு உயிரற்ற உடலை கறுப்பு பாலிதீனில் பேக் செய்து மொத்தமாக அனுப்பி விடுவார்கள். 

இதில் சிலர் பொதி சுமக்கும் கழுதையாகவும் தன்னை அறியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். 'இது சின்ன பார்சல்தான் கொடுத்து விடுகிறேனில்' நிறைய விசயங்கள் இருக்கும். அந்த பார்சல் உங்களை பார்சல் செய்து அனுப்பிவிடக் கூடும். கவனம் தேவை. எவ்வளவு பழக்கப்பட்டவராக இருந்தாலும் இதுபோல் மடையனாக வாங்கி வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள். மலேசிய சுங்கத்துறையும், நார்க் கோட்டிக் டிவிசனும் வைத்திருக்கும் ஸ்கேன் கருவிகளும், கேள்விகளும் மலச்சிக்கள் உள்ளவர்களுக்கு கூட டிசன்ட்ரீ வர வைத்து விடும். மற்றும் இங்கு இருக்கும் மோப்ப நாய்கள் நீங்கள் 35 வருசத்துக்கு முன் ப்ரைமரி ஸ்கூலில் பக்கத்து பையனிடம் திருடிய மாவடுவைக் கூட இப்போது பிடிங்கி காண்பித்து விடும்.

இந்த போதைக் கடத்தல் சட்டதில் கெத்தமின் மாத்திரைகளும் அடங்கும். மாத்திரை தானே வாங்கி வந்தேன் என்றெல்லாம் விவாதிக்க முடியாது. இதில் மிகப்பெரிய கவனம் சாதாரண மாத்திரை பேக்கிங். இதில் போதைப்பொருள் கடத்தினாலும் இங்கு ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்.

மற்ற நாடுகள் மாதிரி காத்திருந்து, ஜனாதிபதியின் கருணை மனு என்பதற்கெல்லாம் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. 

சனியனில் கைவைத்தால் சங்கு நிச்சயம்.

ZAKIR HUSSAIN

என் இதயத்தில் இறைத்தூதர் - 17 - ஆங்கிலமும் ஆங்கிலேயனும் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2014 | , ,

பொதுவாக நமது உலமாக்கள் பலர், மேடைப் பேச்சாளர்களாக, தலைவர்களாக, எழுத்தாளர்களாக என்ற ஒரு வட்டத்தில் - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் (உலமாக்கள்) எடுத்த முக்கிய முடிவு பற்றி தவறான அபிப்பிராயங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதாவது, "அந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த உலமாக்கள் பலர் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்' என்று சொல்லி, நம் மக்களை ஆங்கிலக் கல்வி படிப்பதை தடுத்தனால், படித்து பெற்று உயர் நிலைக்கு வரவேண்டிய மக்கள் கல்வியை இழந்து அதனால் பல நல்ல வாய்ப்புக்களை இழந்து இன்னும் பின்தங்கி இருக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்று முழங்கி வருவதையும், எழுதி வருவதையும் நாம் அறிவோம்.

உலமாக்கள் அவ்வாறு சொன்னது உண்மைதான் அதுவே என் பார்வையுமாகும், அதனால் நம்முடைய பல நல்ல வாய்ப்புக்களை இழந்து சுமாராக 50 வருடங்களுக்கு மேல், பின் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதும் உண்மைதான். நாம் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு, கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், சாதி இந்துக்கள் இன்னும் பிற சாதியினர் ஆங்கிலக் கல்வி பயின்று, அதன் மூலம் ஆங்கியேலே ஆட்சியில் உயர் பதவிகள் பெற்றும், பிறகு சுதந்திரம் கிடைத்த பின் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்ததும், வட இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் தினக் கூலிகளாக மாறிப் போனதும், தென்னிந்திய முஸ்லிம்கள் பலர் வியாபாரிகளாக இருந்தாலும் மொத்த சதவிகிதத்தில் பெரும்பான்மையோர் கூலித் தொழிலாளர்கள் என்பதும், நாம் ஆங்கிலம் / ஆங்கில வழிக் கல்வியை இழந்ததன் ஒரு பகுதி மூலம் கிடைத்த பரிசுதான் அது என்பதும் உண்மையே! ஆனால், அதன் மறுபுறம் நமக்கு கிடைத்த இன்னொரு பெரிய பரிசும் ஒளிந்திருக்கிறது. அதனைப் பலர் சொல்வதுமில்லை எழுதுவதுமில்லை.

நம் உலமாக்கள் மேலோட்டமாக ஆங்கிலேயர்களின் வெறுப்பால் மட்டும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ரு பத்வா கொடுக்கவில்லை, ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தை "மதமாற்றம்" செய்யும் ஒரு முயற்சியாக - பரீட்சித்துப் பார்த்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.

உதாரணமாக, கிறிஸ்தவ மிஷனரிகளை ஊக்குவித்து பள்ளி, கல்லூரிகள் திறந்து பயிற்று மொழியாக ஆங்கிலத்தை உருவாக்கி, அதனூடே மதப்பிரச்சாரமும், பைபிள் மூலம் உள்ள கதைகளை கட்டுரைகளை ஆங்கிலத்தில் பயிற்றுவித்து கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். மறுபுறம் காசு, பணம் கொடுத்தும், வசதியான வாழ்க்கை முறைக்கு ஆசை காட்ட்யும் கிறிஸ்தவத்தை வளார்க்கத் துடித்தார்கள். இதற்கு சில பலன்கள் அவர்களுக்கு கிட்டின.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற ஊர்களில் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் இது எதிரொலித்தது. சாதி இந்துக்கள் மற்றும் தலித் இன மக்கள் என்று பலர் சிறிது சிறிதாக கிறிஸ்தவம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இன்றும் கூட, இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதியின் பெயராலேயே கிறிஸிதவத்துக்கு மாறிய பின்பும் அழைக்கப்படுகிறார்கள். வட இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் கூட பல சிங்கள புத்த மதக்காரர்கள் கிறிஸ்தவம் நோக்கிப் போனார்கள். யாழ்பானம் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் என்ற இந்துக்கள் கிறிஸ்தவம் நோக்கிச் சென்றார்கள் இன்னும் இந்து மத சாதிகளின் மூலமாகவே கிறிஸ்தவத்திலும் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். சிங்களவர்களில் முன்பு யாருமே கிறிந்தவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களே ! ஆங்கிலக் கல்வியின் தாக்கம், அவர்களை தடுமாற வைத்தது எனவே, புத்த மதம் துறந்து கிறிஸ்தவம் தேடிப் போனார்கள்.

இந்நிலையில்தான், நபிமார்களின் வாரிசுகளான நம் உலமாக்களைக் கொண்டு அல்லாஹ் நம் மூதாதையர்களைக் பாதுகாத்தான். ஆம் ! அவர்கள் அன்று ஆங்கிலம் கற்பது திறிஸ்தவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மையும் நம் ஈமானையும் காற்றினான். இது அல்லாஹ் நமக்குச் செய்த பேரருள் என்றால் மிகையல்ல. ஆங்கிலம் கற்காமல் விட்டதனால், நம் இவ்வுலக முன்னேற்றம் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், மிக உயர்ந்த செல்வமாகிய "ஈமான்" காப்பற்றப்பட்டிருக்கிறது. அந்த நம் முன்னோர்களாகிய உலமாக்களின் பாவங்களை மன்னித்து கபுரை வெளிச்சமாக்கி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் என்ற உயரிய சுவர்க்கத்தைக் கொடுப்பானாக.

இப்போது அதே ஆங்கிலம் மூலமாக இஸ்லாம் மேலோங்கி வருகிறது, காஃபிர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ், சூழ்ச்சிக் காரனைவிட மிகப் பெரும் சூழ்ச்சிக்காரன் அல்லவா ! ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் திருக்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பை படித்து இஸ்லாம் நோக்கி முன்னேறுகிறது. இன்றைய சூழ்நிலைக்கு நமக்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். ஆரபி மொழியையும் ஆங்கிலத்தையும் கற்று நம் இனைமி இஸ்லாமை உலகெலாம் பரப்ப சூளுரை செய்வோம் ! இன்ஷா அல்லாஹ் !

குறிப்பு : நாம் எந்த நாட்டில் எந்த மொழி பேசும் மக்களிடையே வாழ்கிறோமோ அங்குள்ள இஸ்லாமிய சேவை நிலையங்களை (Islamic Cetner) தொடர்பு கொண்டு, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் புத்தகங்களை அம்மக்களுக்கு கிடைக்குமாறு செய்ய நாமும் ஒத்துழைப்பதோடு பொருளாதார உதவியும் செய்து, தாவா பணீக்கு முன்னுரிமை கொடுப்பது நம் கடமை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2014 | , , ,


பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

அண்மைக் காலமாக நம்மிடையே அதிக அளவில் பேசப்படும் பொருள்களில் பங்குச் சந்தை என்பதும் ஒன்றாகிவிட்டது. நம்மில் ஒரு சிலர் இந்த பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டார்கள்; ஈடுபட்டால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்; ஈடுபடும் முன்பு இதைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம் என்று முயலத்தொடங்கி இருக்கிறார்கள். எளிமையான முறையில் பங்கு சந்தைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகமும் இது பற்றி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் எந்த திசை நோக்கி வழிகாட்டுகின்றன என்பது பற்றியும் விவாதிக்கலாம். இதைப் பற்றி விரிவாகவே பேசவேண்டி இருப்பதால் ஒரு சில அத்தியாயங்கள் தேவைப்படும். 

ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்பது போல் பங்குச் சந்தையும் வணிக நிறுவனங்களின் பங்குகளை வாங்க அல்லது விற்க உதவும் சந்தைதான். ஆனால் மற்ற சந்தைகளுக்கு ஒரு வேலி அடைத்த அல்லது காம்பவுண்டு சுவர் எடுத்த குறிப்பிட்ட இடம் இருக்கும். ஆனால் பங்கு சந்தைக்கு குறிப்பிட்ட இடமெல்லாம் கிடையாது. இது உலகளாவியது; ஊடகங்களைச் சார்ந்து நிற்பது; வலைதள இணையங்களோடு இணைந்திருப்பது.

குறிப்பாக இன்றைய தகவல் தொழில்துறை நுட்ப வளர்ச்சியில் கண் இமைக்கும் நேரத்தில் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். பம்பாய் பங்கு சந்தை , சென்னை பங்கு சந்தை என்றெல்லாம் இடங்கள் காட்டப்படுகின்றனவே என்று நம்மில் சிலர் கேட்கலாம். அந்த கட்டிடங்கள் மற்றும் இடங்கள் எல்லாம் பங்குகளின் பரிவர்த்தனைகளை பதிவு செய்து கொள்ளும் அலுவலகங்கள்தானே தவிர அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்றுதான் வாங்க விற்க வேண்டுமென்று கட்டாயமான அவசியம் இல்லை. அந்த இடங்களில் கூடும் கூட்டம் முக்கியமாக பங்குகளின் நிலவரங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ளக் கூடுகின்ற கூட்டமே தவிர பங்குகள் வாங்க வேண்டுமானால் கூடுவாஞ்சேரியிலிருந்தும் வாங்கலாம் விற்க வேண்டுமென்றால் கோதண்டாபுரத்திலிருந்தும் விற்கலாம். 

இன்னும் பங்கு சந்தை பற்றியும் முதலீடுகளைப் பற்றியும் நம் அறிந்து கொள்ளும் முன் சில கருத்துக்களை முன்னெடுத்து வைப்பது அவசியமாகிறது. முக்கியமாக சேமிப்பு (SAVINGS) என்பதற்கும் முதலீடு (INVESTMENT) என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒன்றல்ல; சேமிப்பாக இருப்பதெல்லாம் முதலீடாகாது. அதே நேரம் , சேமிப்பு இல்லாவிட்டால் முதலீடு செய்ய இயலாது. ஒரு காலத்தில் நமது பெண்கள் அடுக்குப் பானைகளில் அரிசிக்குள் அல்லது மிளகாய்க்குள் l “சிறுவாடு” சேர்த்து வைப்பார்கள். “சல்லி முட்டியில்” சில்லறைக் காசுகளைப் போட்டு வைப்பவர்களும் உண்டு. நமது செலவு போக மிகுதியை பிற்காலத் தேவைக்கு வேண்டுமென்று தனது கைகளில் மறைத்து வைத்திருப்பது சேமிப்பு. அப்படி சேமித்ததை வீணாக கையில் வைத்துக் கொள்ள வேண்டாமே என்று ஏதாவது செல்வத்தை வளர்க்கும் துறைகளில் அதை போடுவது முதலீடு. இப்படி செய்யும் முதலீடு தங்கத்தின் மீதாக இருக்கலாம்; நிலத்தின் மீதாக இருக்கலாம்; வீட்டின் மீதாக இருக்கலாம்; பரஸ்பர நிதிகளின் மீதாக இருக்கலாம்; பங்குச் சந்தையில் விற்கப்படும் பங்குகளின் மீதாகவும் இருக்கலாம். சேமிப்பு, எப்போது ஒரு வருமானத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட ஆரம்பிக்கிறேதோ அப்போதுதான் அது முதலீடாகிறது.

பொதுவாக “மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகி விடாது” என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் (Immovable Properties) மீது நாம் செய்யும் முதலீடு, காலக்கெடுவில் பலமடங்கு வளரக் கூடியது. பல நேரங்களில் இப்போதுள்ள வளரும் பொருளாதாரத்தில் நமது பொருளாதார நிலமைகளை எட்டாத உயரத்துக்குத் தூக்கிவிட்டு விடக் கூடியது. வானம் பார்த்த பூமிகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய பலர் வீட்டில் இன்று இரண்டு மூன்று இன்னோவா கார்கள் நிற்கின்றன. மானாவாரி தென்னந்தோப்புகள் இன்று சராமாரியாக வீடுமனைகளாக்கப்பட்டு பல புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றோ தனது பாட்டன் காலத்தில் வாங்கிப் போடப்பட்ட நிலங்கள் இன்று பலருக்கு பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. 

 இஸ்லாமிய பொருளாதார கண்ணோட்டத்தின்படி பிறருடைய நிலம் அல்லது வீட்டை தவறான முறையில் அபகரிக்காமல் இருந்தால்- அனாதைகளின் சொத்துக்களுக்கு அநீதி செய்து சுருட்டாமல் இருந்தால் – பொய் பித்தலாட்டம் புரட்டுக்களைக் கூறி சொத்துக்களை விற்காமல் இருந்தால் சுவையான குடிநீர் உள்ள இடம் என்று கூறி சுண்ணாம்புக் கல் விளையும் நிலங்களை தலையில் கட்டாமல் இருந்தால்- அவைகள் ஹலால் ஆனவையே. இத்தகைய அசையாச் சொத்துக்களின் மீது நாம் முதலீடு செய்யும் போது நமது கண் முன்னே நமது கைகளாலேயே இவற்றை செய்து கொள்கிறோம்; நமக்குத் தெரிந்தே இதற்கான பரிவர்த்தனைகள் யாவும் நடைபெறுகின்றன என்ற அளவிலும் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டவையே. 

 ஆனாலும் இவைகளை வாங்குவதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படும்; நமக்குத் தேவையான நேரத்தில் இலகுவாக விற்க இயலாத தன்மைகள் கொண்டவை; சிறிய வருமானம் உள்ளவர்களால் இவற்றில் முதலீடு செய்வது இயலாததாக இருக்கும் என்கிற காரணங்கள் இத்தகைய முதலீடுகளின் மீது முனைவோர்களின் சட்டையைப் பிடித்து பின்னோக்கி இழுத்து, அசையாச் சொத்துக்களின் மீதான முதலீடுகளைப் பற்றி சாதாரண மக்களை தலையைச் சொரிந்து யோசிக்க வைக்கிறது.

அடுத்து, அசையும் சொத்துக்கள் என்று (Movable Properties) என்று அழைக்கப்படுகிற தங்கம், வெள்ளி, நகைகள், வங்கி நிரந்தர வைப்புக்கள், கடன் பத்திரங்கள், பங்குகள் ஆகியவை அசையும் சொத்துக்களாகும். இவற்றுள் வங்கி வைப்புக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீது வட்டியின் வாசம் வீசுவதால் அவற்றை இஸ்லாமியப் பொருளாதாரம் ஒதுக்கி வைக்கிறது. 

தங்கத்தின் மீதான முதலீடு ஒரு நல்ல முதலீடாகக் கருதப் படுகிறது. ஆனாலும் “ஆளைப் பார்த்தியா! அப்படியே சரம் சரமாத் தொங்குது” என்று புரளி பேசும் பலருடைய கண்களுக்கு முன்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்து கழுத்தறுப்பதுடன் இருட்டில் உள் நுழையும் கள்வர்களுக்கு முன்னாலும் தங்கத்தை பாதுகாத்து வைப்பது கடினமாக இருக்கிறது. தங்கத்தின் இன்றைய கடுமையான விலை மதிப்பால் திருடுபவர்கள் தங்கத்தையே குறிவைத்துத் திருடுகிறார்கள். காரணம் Less Luggage ! More Comfort ! கொள்கைதான். பூட்டியிருக்கும் வீடுகளில் வைத்துவிட்டுப் போகும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பயணங்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து அகப்பட்டதை அபகரிப்பதும் விபத்துக்களில் காப்பாற்ற வருபவர்கள் போல் கழுத்தில் காதில் கிடப்பதை அறுத்துக் கொண்டு ஓடும் மனித மிருகங்களும் அதிகரித்து விட்டார்கள். ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு, ஆசையும் அநாகரிகமும் அரசாளும் சமூகத்தில் ஒரு முழுப் பாதுகாப்பான முதலீடாகாது.

அடுத்தபடியாக, தங்கத்தை பெண்கள் மட்டுமே அணிய முடியும். ஏதாவது தேவைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் – அதைப் பெண்களிடம் கேட்டால் உடனே கழற்றிக் கொடுப்பதற்கு எல்லோரும் கால் சிலம்பைக் கழற்றிக் கொடுத்த கண்ணகிகளல்ல. நகையை நாம் கேட்டால் நவீன கண்ணகிகள் முதலில் “ நஹி “ என்றுதான் சொல்வார்கள். அப்படி நகைகளை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றைக் கழற்றும்போது விடும் கண்ணீரின் அளவு சிரபுஞ்சி மழையையும் மிஞ்சிவிடும். “கேட்கும் போதெல்லாம் அதை கழற்றித் தந்தேனே! இதைக் கழற்றித் தந்தேனே !" என்று கூறும் பெண்கள் தங்கத்தை வாங்கும்போது மனமகிழ்வும் விற்கும்போது மனச் சோர்வும் அடைகிறார்கள். இதனால் குடும்ப வாழ்வில் தொய்வு விழ சாத்தியக்கூறுகள் உள்ளன. 

பல நல்ல மகிழ்வான குடும்பங்கள் தங்கத்தை விற்க நேரிடும்போது இழக்கக் கூடாததை இழந்து விட்டதாக உணர்கிறார்கள். "எங்க வாப்புச்சா தந்தது – எங்க வாப்பா பினாங்கிலேயிருந்து கொண்டு வந்தது" என்றெல்லாம் தங்க நகைகளின் மீது பெண்களுக்கு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட் உள்ளதைப் பார்க்கிறோம். அத்துடன் கல்யாணம் முடிக்க வேண்டிய குமர்களை வைத்துக் கொண்டு நகைகள் மீது கை வைப்பதா என்றும் – இப்போது விற்றால் பிறகு தேவைக்கு வாங்க முடியுமா என்றும் பெண்கள் கேள்விக் கணை தொடுப்பார்கள் என்பது சமுதாயம் தழுவிய பொருளாதாரத்தின் உண்மையின் வடிவம்.

ஆகவே தங்க முதலீடு என்பது கூடியவரை ஒரு வழிப்பாதைதான். ஒரு நகையை தட்டாரப்பிள்ளையிடம் கொடுத்து அழித்துவிட்டு, "ஆமா உறுத்துது- புடவையைக் கொழுவிக் கொழுவி இழுக்குது" என்று கூறி மாற்றி வேறு நகைகள் செய்ய வேண்டுமானால் அவைகளை மனக் கஷ்டம் இல்லாமல் பிரிய நமது பெண்கள் உட்படுவார்களேயன்றி நமது பொருளாதார நடவடிக்கைகளுக்காக தங்கத்தை விற்க பெரும்பானமையான பெண்கள் மனதார உடன்படவே மாட்டார்கள். 

ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு என்பது கை நழுவிப் போன சேமிப்பு. ஆகையால் தங்கத்தின் மீதான முதலீட்டை பெரும்பாலும் செலவுக் கணக்கில்தான் எழுதிவைக்க வேண்டும். வேண்டுமானால் ஆறுதலுக்காக, சேமிப்பு ரூபத்தில் ஏற்படும் செலவு என்று சொல்லிக் கொள்ளலாம். இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் தங்கத்தின் மீதான முதலீடு ஒரு தூங்கும் முதலீடு. தங்கத்தின் மீதான முதலீடு, நம்முடனே தங்கும் முதலீடு. நம்மைவிட்டுப் பிரியா முதலீடு. இந்த முதலீட்டால் வருமானம் வர வாய்ப்பில்லை. ஆனாலும் உடனடித் தேவைகள் ஏற்படும் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்றும் கைகண்ட மருந்துதான் தங்கத்தின் மீதான தனித்தன்மையான தன்னிகரற்ற முதலீட்டு முறை என்பது மறுக்க இயலாது.

முயூசுவல் பண்ட் என்று அழைக்கப்படும் பரஸ்பர நிதிகளையும் முதலீட்டில் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அண்மைக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த முதலீட்டு முறை மக்களை மடையர்களாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. பெரும் விளம்பர உக்திகளாலும் வீடு தேடி வரும் விற்பனைப்பிரதிநிதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படும் இந்த முதலீட்டுமுறை அடிப்படையிலேயே ஒரு மாயையை தோற்றுவிக்கிறது. இதன் முறையென்ன வென்றால் வர்த்தக வங்கிகளும் , முதலீட்டு நிறுவனங்களும் பல கார்பரேட் கம்பெனிகளும் முயூசுவல் பண்ட் என்கிற முறையில் பொது மக்களின் சேமிப்புகளைப் பெற்றுத் திரட்டி அவ்விதம் திரட்டப்பட்ட முதலீட்டுப் பணத்தைக் கொண்டு பங்கு சந்தையில் தங்களது இஷ்டத்துக்கு பங்குகளை வாங்கி விற்று, கடன் பத்திரங்களை வாங்கி வைத்து , நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து அதனால் இலாபம் திரட்டி அதை முதலீட்டாளர்களுக்கு ஈவு வைத்துக் கொடுக்கும் முறையே ஆகும். இந்த முறையில் ஏற்றம் பெற்றவர்களைவிட ஏமாந்தவர்களே அதிகமென்று இந்த முறையில் முதலீடு செய்து அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள். இந்த முறையின் அடிப்படை என்னவென்று நமது மொழியில் சொல்லப்போனால் 'ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதுவதுதான்' என்று கூறலாம். எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று அலைபவர்கள் பலி கொடுக்கப்படும் இடம்தான் இந்த மியூசுவல் பண்ட் முறையாகும். வாசமுள்ள வடை வைத்திருக்கிறார்கள் என்று இதில் வாயை வைத்து மாட்டிக் கொண்ட எலிகள் ஏராளம். வட்டியின் இழை இந்த முறையில் ஊடுருவி இருப்பதால் முஸ்லிம்கள் கவனமாகக் கையாளவேண்டிய முதலீடு இந்த முறையாகும். 

அடுத்து எஞ்சி இருப்பது பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள்தான். பங்குகளை ஒரு ஊகம் நிறைந்த துணிகரமான முதலீடுகள் (Risky investments) என துணிந்து சொல்லலாம்; வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், இலாபம் வர வாய்ப்பு உள்ள அதே அளவு நஷ்டம் ஏற்பட்டு, போட்ட முதல் ( capital) ஸ்வாஹா ஆகவும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால் ஊதிப் பெருக்கும் ஊடகங்களால் நிலைமைகள் மாறி வருகின்றன. மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து ஆழம் தெரியாமலேயே காலை விடுகின்றனர் . எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது. பங்கு சந்தை பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையும் அவசியமாகிறது. 

இவற்றை விவாதிக்கும் முன் பங்கு என்றால் என்ன? பங்கு சந்தை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகின்றன? ஆகிய கேள்விகளுக்கு விடை ? 

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் 1435 சிறப்பு நிகழ்ச்சிகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2014 | , , ,


ரமளான் 1 முதல் 20 வரை மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள் வழங்கும் சிறப்பு அமர்வுகள்...

இடம் :

இரவு 10:00 முதல் 11:30 மணி வரை ஈ.பி.எம்.ஸ்கூல் நடுத்தெரு, அதிராம்பட்டினம் மற்றும்,

காலை 11:00 முதல் பகல் 12:30 மணி வரை இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்.

சிறப்பு சொற்பொழிவு தலைப்புகள்:-
 • நோன்பின் மாண்புகள்
 • ரமாள் ஏற்படுத்தும் மாற்றங்கள்
 • நரக விடுதலை
 • சொர்க்கம் செல்லும் வழி
 • அல்குர்ஆன் அழைக்கிறது
 • பெற்றோரைப் பேணுவோம்
 • இஸ்லாமிய இல்லறவியல்
 • நவீன சாதனங்கள் ஓர் ஆய்வு
 • குழந்தை வளர்ப்பு
 • இன்னும் பல...

காலை அமர்வுக்குத் தொலைவிலிருந்து வரும் பெண்களுக்கு வர-போக வாகன வசதி உண்டு.

வாகனங்கள் நிறுத்தங்கள்:-
 1. பெண்கள் மார்கெட், கடற்கரைத் தெரு
 2. ஹனீஃப் டாக்டர் வீடு, PKT ரோடு
 3. ஹனீஃப் மஸ்ஜித், CMP லேன்
 4. EPM ஸ்கூல், நடுத்தெரு
 5. பாலம், கீழத்தெரு
 6. புகாரி மாளிகை, மேலத் தெரு
 7. கருணா வீடு முக்கம், மேலத்தெரு

அன்புடன் அழைக்கிறது....

அதிரை தாருத் தவ்ஹீத்
மின்னஞ்சல் : salaam.adt@gmail.com

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் : 7:205 )

அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! ( அல்குர்ஆன் : 62:10 )

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல்குர்ஆன்: 33:41,42 )

''மக்காவாசிகளான ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். ''வசதியானவர்கள் உயர்வான தகுதிகளையும், நிலையான அருட்கொடையையும் பெற்றுக் கொண்டனர். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். (ஆனால்) அவர்களுக்கு செல்வம் அதிகம் உண்டு. (இதனால்) ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். ஜிஹாத் செய்கின்றனர்.  தர்மம் கொடுக்கின்றனர் (எங்களுக்கு அவ்வாறு முடியவில்லையே?)'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களுக்கு முந்திச் சென்றோரை ஒரு செயல் மூலம் நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கு பிந்தி விட்டவரை அதன் மூலம் முந்துவீர்கள். மேலும் நீங்கள் செய்வது போல் செய்கின்றவரைத் தவிர வேறு எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது. அப்படிப்பட்ட செயலை உங்களுக்கு  கூறட்டுமா?'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்றனர். 

''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை நீங்கள் தஸ்பீஹ் செய்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ் கூறுகிறீர்கள். அல்லாஹு அக்பர் கூறுகிறீர்களே (அதுதான்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூஸாலிஹ் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ''அவற்றின் ஃதிக்ரு முறை எப்படி?'' என்று கேட்கப்பட்ட போது, ''சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர் என்று ஒவ்வொன்றையும் 33 தடவை கூறுவதாகும்'' என்று கூறினார்கள்.   (புகாரி,முஸ்லிம்)

''பிறகு மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் மக்காவாசிகளான ஏழைகள் வந்தார்கள். ''எங்களின் சகோதரர்களான பணக்காரர்கள் நாங்கள் செய்வது பற்றி கேள்விப்பட்டு, அதுபோலவே செய்கின்றனர்'' என்று கூறினார்கள். ''இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் விரும்பியோருக்கு அதை அவன் கொடுப்பான்'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1418 )

''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 33 தடவை அல்லாஹுஅக்பர் என்று ஒருவர் கூறிவிட்டு, 100வது தடவையாக ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹுலஹுல்முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லி ஷய்இன் கதீர்'' என்று கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1419)

கடமையான தொழுகைக்குப்பின் கூறப்படும் சில சொற்கள் உண்டு. அவற்றை கூறுபவர் நட்டமடைய மாட்டார். அவை 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 34 தடவை அல்லாஹுஅக்பர்  ஆகியவையாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1420 )

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல், ஜுப்னி, வல்புக்லி, வஅஊது பிக மின் அன் உரத்தஇலா அர்ஃதலில் உமுரி, வஅஊஃது பிக மின் ஃபித்னதித்துன்யா, வஅஊதுபிக மின் ஃபித்னதில் கப்ரி'' என்ற இந்த வார்த்தைகளால் நபி(ஸல்) அவர்கள் தொழுகைகளுக்குப் பின் பாதுகாவல் தேடுவார்கள்.

பொருள்:
இறைவா! கோழைத்தனம், கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். நீண்ட தள்ளாத வயதின் பக்கம் நான் நீடிக்கப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலக குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1421)

''முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உன்னை நான் நேசிக்கிறேன். முஆதே! ''அல்லாஹும்ம அஇன்னீ அலா ஃதிக்ரிக, வசுக்ரிக, வஹுஸ்னி இபாததிக்க'' என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின் நீ கூறுவதை விட்டு விட வேண்டாம் என உனக்கு உபதேசிக்கிறேன்'' என்று என் கையைப் பிடித்துக் கொண்டு நபி(ஸல்) கூறினார்கள்.

பொருள் : இறைவா! உன்னை நினைவு கூறவும், உனக்கு நன்றி கூறவும், உனக்கு அழகிய முறையில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக!  (அறிவிப்பவர்: முஆத் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1422)

''ஒருவர் (இருப்பில்) அத்தஹிய்யாத் ஓதினால் அல்லாஹ்விடம் நான்கை விட்டும் பாதுகாப்பு தேடட்டும். அப்போது ''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அஃதாபி ஜஹன்னம, வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னதில் மஹ்யா, வல்மமாதி, வமின் ஷர்ரீ ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜாலி'' என்று கூறட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும், கப்ரு வேதனையை விட்டும், வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தை விட்டும், மேலும் தஜ்ஜால் குழப்பத்தின் தீமையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1423 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2014 | , , , ,

அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி! மேற்கு நோக்கிய பயணத்தில் கோட்டைப்பட்டினம். கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்ஹா! அது 30 ஆண்டுகளுக்கு முன்பு அழகான கடற்கரை. பறந்த வெளியில் அந்த தர்ஹா தனியே நின்றது. வெண் நுரை கக்கும் கடல் அலைகள் கரை நோக்கி வந்து வந்து அதை முத்தமிடும் காட்சி கவிரசனை கொண்ட கண்ணிலும் மனதிலும் கற்பனை ஊற்றுக்களைத் தோண்டும். கரை ஓரம் டீ கடை, அடுத்து சர்க்கரை பத்தி, சாம்புராணி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்கும் கடை. நாகூரைப் போல ரெடிமேட் சர்க்கரை அங்கே இல்லை. வாடிக்கையாளர் கேட்கும் அளவு தராசில் ஒரு தட்டில் படிக்கல்லும் மறு தட்டில் சர்க்கரையும் போட்டு நிறுத்துத் தருவார்கள். எப்பொழுதும் நிறுவையில் தராசின் சர்க்கரைத் தட்டு சற்றுத் தாழ்ந்தே இருக்கும். அதாவது கேட்ட அளவை விட சர்க்கரை கூடுதலாக இருக்கும். நாகூர் சிஸ்டம் அங்கே இல்லை. நாணயமான கடைக்காரர். நேர்வழியில் பொருள் தேடும் நெஞ்சு. என்றைக்கும் ஏழயாய்தான் இருப்பாரோ!?  

நான் 10-12 வயது பையனாக இருக்கும்போது அங்கொரு கல்யாணத்திற்கு என் மாமாவுடன் போயிருந்தேன். (அவர் மூத்த மகளை நிக்காஹ் செய்து தந்தவரும் அவரே).  இரவு கல்யாணம்.  இரவு எட்டு மணிக்கு சகன் விருந்து. இரவு 11 மணிக்கு நிக்காஹ் முடிந்தது. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் படுக்கை பள்ளியில்தான்.  அப்போதெல்லாம் பஸ் கிடையாது. போனால் கூண்டு வண்டி, பெட்டி வண்டி கட்டித்தான் போக வேண்டும்.  ராஜாமடம் பாலம் அப்போ கிடையாது.  தண்ணீர் முழங்கால் அளவு ஓடும்போது வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுபோக வேண்டும். நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடினால் படகு வரும்.  அதில் ஏறிக் கடக்கலாம். அதற்கு ஒரு நபருக்கு கால் ரூபாயோ அரை ருபாயோ கட்டணம் செலுத்த வேண்டும். 

காலை பசியாற மாப்பிள்ளை வீட்டிலேயே.  நாங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கெஸ்ட்ஸ்.  காலை பசியாறல் சகனில் வந்தது. மொத்தம் அஞ்சாறு சகன்.  சகனில் இடியப்பம், எறச்சாணம், வட்டிலப்பம், கடப்பாசி, சவ்வரிசி, ரவ்வா போன்ர அதிராம்பட்டிண அய்ட்டங்கள் இல்லை. சகனில் இருந்தது தேங்காய்ப்பால் கஞ்சி! சகனில் கூடி இருந்த எல்லோரும் ‘திருதிரு’வென்று விழித்தார்கள்.  விழித்தவர்கள் விழிகளை விழிகளால் கண்ட ஒருவர் வாய் திறந்து சொன்னார், 


“இது இந்த ஊர் பழக்கம். குடியுங்கள்” என்றார். ‘பாம்பு திண்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கே!’ என்னும் முதுமொழி when you are in Rome do as Romans’s do  என்பதுபோல.

கஞ்சியின் கூடவே தொட்டுக்கிட ஒரு பெரிய உருண்டை தேங்காய்த் தொட்டுக்கறியும் ஒரு தட்டையில் வந்தது. எங்கள் சகனில் எதைக் கொடுத்தாலும் சேடை சொல்லுமொரு நபரும் இருந்தார்.  அவர் சகன் பரத்தியவரைக் கூப்பிட்டு, 

“ஒரு கிண்ணியில் நல்லெண்ணெய் தருகிறீர்களா?” என்று கேட்டார்.  இதைக் கேட்ட அவர் கொஞ்ச நேரம் விழித்தார். பின்பு, 

“ஏன் நல்லெண்ணெய் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். சகனில் இருந்த விகடர் தேங்காய்த் தொட்டுக்கறியைக் காட்டி,

“அரப்பு உருண்டை கொடுத்திருக்கிறீர்கள். நல்லெண்ணெய் கொடுத்தால் தேய்த்து குளிக்கத்தான்!” என்றார். 

இதைக் கேட்ட பலர் சிரித்து விட்டார்கள். ஆனால், அந்த வீட்டுக்காரரின் முகம் அவமானத்தால் சுருங்கி விட்டது. இது ஒரு அநாகரீகமான கிண்டல். பிறர் நிலை, பழக்க வழக்கம் அறியாமல் கிண்டல் செய்து பிறர் மனதை நோகடிப்பதை நம் மார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் தோன்றிய மக்கள் எல்லாம் ஒரே பொருளாதார நிலையிலும் பழக்க வழக்கங்களிலும் இல்லை. நாகரீகமற்ற அந்த மனிதரின் கிண்டலை இன்று நினைத்தால்கூட அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டியும் தாழ்த்தியும் பேசிக் கொண்டிருப்பதையே பொழுது போக்காக்க் கொண்டிருப்பாரகள்.  அவர்கள் வீட்டுக் குப்பையைக் கிண்டினால் கப்பல் கப்பலா ஏற்ற நிறைய சரக்கு உண்டு. 

நாம் நம்ம பேசுபொருளுக்குள் வருவோம்.

சர்க்கரை பத்தி தட்டோடு தர்ஹா வாசலில் உட்கார்ந்திருக்கும் லபையிடம் கொடுத்து ஃபாத்திஹா அல்லது மவுலுது என்று சொன்னால் முறையாக ஓதுவார். அங்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லபைதான். வருஷா வருஷம் லபை மாறிமாறி வருவார்கள்.  10 ½ ரூபாய் கொடுத்தாலும் 101 ரூபாய் கொடுத்தாலும் முகம் மலர வாங்கிக் கொண்டு வாழ்த்தி அனுப்புவார்கள். முத்துப்பேட்டை தர்ஹா பிரச்னை, நாகூர் தர்ஹா பிரச்னை அங்கு கிடையாது.  ஆங்காங்கே நேர்த்திக் கடனுக்கு இருப்பவர்கள் தூங்கிக்கொண்டும் விழித்திருப்போர் காசு கொடுப்பவர்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பாரகள். 

“உங்கள் ஹக்கில் ஏதாவது அவர்களுக்கு பிரியமிருந்தால் கொடுங்கள்!” என்று அந்த லபை மென்மையாகச் சொல்வார். அவரவர்கள் முகம பார்த்து பிரியமிருந்தால் கொடுத்துவிட்டு வரலாம். இது சுமார் 15 வருடங்களுக்கு முந்திய நிலைமையைச் சொல்கிறேன்.  இன்றைய நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. ஷிர்க்கை அடயாளம் கண்டுகொண்ட பின்பு அங்கு செல்வதில் விருப்பம் இல்லை.

அடுத்தப் பயணம், ஏர்வாடி! பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தால் இருபக்கமும் கடைகள். பனை ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மற்றும் சில பொருள்கள்.  என்கூட வந்த என் நண்பர் ஊரை விட்டு கிளம்பியதும் “தன் பிள்ளை எங்கேயோ கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டானோ? தொட்டியில்  தூங்கிய பிள்ளை தொட்டில் கயிறு அருந்து கீழே விழுந்து காயப்பட்டு விட்டானோ? என்ற வீட்டுக் கவலையுடனேயே இருப்பார்.  பிள்ளையின் வய்து என்ன தெரியுமா? ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை.  பசித்தப்பின் கைசூப்பும் பழக்கம் உள்ள குழந்தை! குழந்தை பிறந்து பிறக்கிற எடையெட்டு பிறையோட பதினெட்டு வருஷமாகிரது. பதினெட்டு மாதமல்ல, பதினெட்டு வயது! ஒரு வருஷத்திற்குப் பணிரெண்டு மாதம்.  மலேசியாவில் அவர் இருக்கும்போது பிள்ளையை கவனிக்க வேண்டுமென்று அந்தப் பிழைப்பை விட்டுவிட்டு பிள்ளையைக் காப்பாற்ற ஊரிலேயே தங்கி பிள்ளையை நல்லாத்தான் வளர்த்தார். 

ஏர்வாடி பள்ளிவாசல் கேட்டிலேயே ஒரு ‘ட்டோல் கேட்!’. செருப்பையெல்லாம் கழட்டி அங்கே போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு உள்ளே போக வேண்டும். பள்ளிவாசல் தூரம். ஒரே மணல், கால் வைக்க முடியவில்லை.  சூடு தாங்காத பாதம் ஓடு ஓடு என்றது. ஓடிப்போய் தர்ஹாவில் ஏறினோம். பலமுறை அந்த தர்ஹா போயிருக்கிறேன். இந்த முறை ஒரு புதிய் சிஸ்டம் அங்கே உண்டாக்கி இருந்தார்கள்.  ஒரு லபை முன் உட்கார்ந்து, 

“மவுலுது ஓதுங்கள்< என்றேன். பத்தியைக் கொளுத்தினார். ஒரு இளைஞர் வந்தார். 

“உங்களுக்கு ஏற்பட்ட தங்கடம், சீக்கு, பிணி, சூனியம் நீங்க இந்த ஃபார்மில் எல்லா விபரங்களையும் எழுதி ரூ101/- சேர்த்து உண்டியலில் போடுங்கள். உங்கள் பெயர், ஊர், வாப்பா பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி அந்த உண்டியலில் போடுங்கள்” என்றார்.

“இது என்ன புதிய சிஸ்டமாக இருக்கிறதே?” என்றேன்.

“உங்கள் மனுவை, வேண்டுதல் உள்ளவர்களின் மனுவை அவுலியாக்களே ஒவ்வொன்றாக பரிசீலித்து உங்கள் முசீபத்தை போக்குவார்கள்” என்றார்.

“எவ்வளவு நாளில் பதில் வரும்?” என்றேன்.

“உங்கள் கேஸினுடையத் தன்மையைப் பொருத்து பதில் வரும். சிக்கலான கேஸா இருந்தால் இரண்டு வருஷம்கூட ஆகும். நீங்கள் அடிக்கடி வந்து மீண்டும் ஒரு மனு (ரிமைண்டர்) போட வேண்டும்” என்றார்.

‘விஞ்ஞான முறையில் ஊழல்’ என்ற வார்த்தை தெரியும்.  இதுவும் ‘விஞ்ஞான முறையில் ஏமாற்றுதல்’ என்று புரிந்து கொண்டேன். ஒரு ஃபார்ம் வாங்கி அதில் என்னைப் பற்றிய தகவல், பெயரைத்தவிர எல்லாம் தவறாகக் கொடுத்தேன். ஊர் என்று எதையோ போட்டு ரூ 30/- கொடுத்தேன்.  

“என்ன முப்பது ரூபாய் கொடுக்கிறீர்கள்? ரூ 101/-“ என்றார். 

“திரும்பிப் போகவும் சாப்பிடவும் காசு இல்லை. வேண்டாமென்றால் திரும்பக் கொடுங்கள். யாராவது வந்தால் அவரிடம் கொடுத்து அனுப்புகிறேன்.” என்றேன்.

“சரி சரி” என்று அந்த ரூபாய் முப்பதையும் வாங்கிக்கொண்டார்..  ஃபார்மையும் முப்பது ரூபாயையும் கொண்டு சென்றவர், ஒரு தூணில் மறைந்துகொண்டு ரூ முப்பதை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு அப்ளிகேஷன் ஃபார்மை மட்டும் உண்டியலில் போட்டார்.  இதை அறியாமல் என் கூட வந்த நண்பர்,

“எனக்கும் ஒரு ஃபார்ம் கொடுங்கள்” என்றார். கண்ஜாடை செய்து வேண்டாம் என்றேன். அது அவருக்குப் புரியவில்லை.  நாகூர் லபை சொல்லிய காணிக்கை என்ற சொல்லைக் கேட்டு மாட்டிக் கொண்ட புத்திசாலிதான் அந்த நண்பர். அவருடைய மனவியலை எந்த மனோதத்துவ நிபுனராலும் நிர்ணயிக்க முடியாது. குரங்குப்பிடி! குரங்கை பிடித்து அதை முதலை என்று தவறாகச் சொல்லிவிட்டாலும் மாற்றவே மாட்டார். முதலை முதலையே. தனக்கே எல்லாம் தெரியும் என்பார். மற்றவர்களை ஸீரோ என்பர். அந்த ஃபாரத்தில் அவருடைய உண்மை பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி ரூ 101/- கட்டினார்.  அந்த ரூ 101/- அந்த லபையின் பாக்கெட் உண்டியலில் சரணடைந்தது. ஃபார்ம் மட்டும் அவுலியாக்களின் உண்டியலில் போனது.  

ஒரு வருஷமானது. அவருக்குக் கடிதம் வந்தது.  உள்ளே சந்தனம், நார்சா வந்தது. அவுலியா, “ மீண்டும் அவனை என் தளத்திற்கு வரச்சொல், அவன் கேஸ் ரொம்ப சிக்கலானது. கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று லபையின் கனவில் அவுலியா வந்து சொன்னதாகவும் வியாழன் பிற்பகல் வந்து வெள்ளி இரவு என் தளத்தில் ‘தலைபோட்டு’ படுக்கச் சொன்னதாகவும் லபை கடிதம் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார். 

“உங்களுக்குக் கடிதம் வ்ந்ததா?” என்று கேட்டார்.  

“வரவில்லையே!” என்றேன். 

இப்படியெல்லாம் தொல்லைகள் தொடரும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண்மையான என் அட்ரஸை ஃபார்மில் எழுத வில்லை.  சமயங்களில் வலுத்த கை என்று தெரிந்தால் கலெக்ஷனுக்கு நேரிலேயே வந்து விடுவார்களாம்.

மலேசியாவிலிருந்து அஜ்மீர் சென்ற அரு நபரிடம் அங்குள்ள ஒரு லபை நன்றாக பைண்ட் செய்யப்பட்ட ஒரு பெரிய் லெட்ஜரை எடுத்து கொடுத்து உங்கள் காணிக்கையை எழுதுங்கள் என்றாராம். திறந்து பார்த்தால், பெரும் பெரும் பாம்பே புள்ளிகளின் பெயர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என்று பெரும்புள்ளிகளின் பெயர்கள். ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை செலுத்தியதாய் இருக்க ஆக குறைந்த காணிக்கை அப்பவே 10 லட்சம்.  இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலைமை.  உழல்கள் 98 லட்சம் கோடியை ரொம்ப சுலபமாகத் தாண்டும் இந்த காலகட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்கள் என்று நமக்குத் தெரியாது..  98 ஆயிரம் லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று  படித்தவர்களுக்கே இன்னும் தெரியாத இந்த கல கட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்களோ?  அவுலியாக்கள்தான் அந்த ஹராமானப் பணத்தை ஒப்புக் கொள்வார்களா?

இவ்வளவு காணிக்கை நம்மால் முடியாது என்றதும் வேறு லெட்ஜர். இப்படி ஆளுக்கு ஏற்ற லெட்ஜர்.  ஒரு லெட்ஜரின் மொத்தத் தொகையையும் கூட்டினால் வரி போடாமல் அந்தத் தொகையைப் பயன்படுத்தி இந்தியாவின் பட்ஜெட்டை போட்டுவிடலாம்.  ஐந்து ஆண்டுகாலம் வரி இல்லாமல் இந்தியாவை ஓட்டலாம் என்றார்.   ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து சவாரி செய்யும் ஆசாமிகள் அவர்கள்  

ஒருநாள் ஒருவர் மலேசியாவில் என்னுடைய கடைக்கு வந்தார்.  முகத்தில் வறுமையின் கோடுகள் இல்லை. நல்ல உடை, தொப்பி, தோளில் வெண்ணிர ஹஜ் சால்வை சமூசா வடிவில் அல்லது பிரமிட் மாதிரி மடித்து முதுகிலிருந்து நெஞ்சு வரை போட்டிருந்தார். சால்வையில் ஓரங்களில் குஞ்சமும் நல்ல வேலைப்பாடும் கலைநயமும் கொண்டிருந்தது.  மற்றவர்களைப் போல் முகத்தில் ஏழ்மை தாண்டவமாடவில்லை.  கூடுதலான வருவாய் உள்ளவர் போல் தெரிந்த்து. அதனால அவரை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. மலேசியாவை சுற்றிப்பார்க்க வந்தவர் போலும் தெரிந்தது.  யாரோ எனக்கு தெரிந்தவர்கள் என் அட்ரசை கொடுத்து முக்கிய்மாகப் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள் போல் என்று நான் நினைத்தேன்.

“அஸ்ஸ்லாமு அலைக்கும், ஃபாரூக் ஹாஜியாரே” என்றார்.

“வ அலைக்குமுஸ்ஸலாம். நான் ஹாஜியார் அல்ல; நான் இன்னும் ஹஜ் செய்யவில்லை. ஆனால் நான் ஃபாரூக் தான்” என்றேன்.”. “நீங்கள் தேடி வந்த ஃபாரூக் ஹஜியார் இந்த வரிசையில் ஏழாவது கடை அவருடைய்து” என்றேன். நான் ஏதும் கிண்டலாகக் கதை சொல்லவில்லை. தவறான அட்ரசுக்கு வந்திருக்கலாம் என்றே இதைச் சொன்னேன். 

“நான் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவர்தான் உங்களின் இடத்தைச் சொல்லி உங்களின் பெயரையும் சொல்லி என்னை இங்கு அனுப்பினார்” என்றார்.

“அப்படியா?” டீ குடிக்கிறீர்களா? வந்த விஷயம் என்ன?” என்று கேட்டேன்.

“டீ இப்போதான் அங்கே குடித்தேன். “ என்றார். 

ஒரு கவரை எடுத்து என்னிடம் தந்தார். திறந்து பார்த்தேன். அதில் ஒரு கலர் ஃபோட்டோ இருந்தது. ஃபோட்டோ வேறு ஒன்றுமில்லை ஒரு கச்சிதமான் வீடு. வீடு மாடி வீடு. ஆனால் மாடி இல்லை. அதற்கான பில்லர்கள் எழுப்பப் பட்டிருந்தது. தள வீடு வெளிப்பூச்சு இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு ஊரில் மதர்ஸாவில் ஓதிக் கொடுப்பதாகச் சொன்னார். இரண்டு குமர்களாம். ஆண் பிள்ளை இல்லையாம். கீழ் வீடு மூத்த பிள்ளைக்காம். மேல் வீடு இளைய பெண்ணுக்காம். இரண்டுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் கல்யாணம். மாப்பிள்ளை இருவரும் வேறு வேறு ஊர் மதறஸாக்களில் ஓதிக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். குறைந்த சம்பளம்.” என்றார். ஊரில் உள்ளவர்கள் உதவியால் கீழ் வீட்டைக் கட்டி விட்டேன். தளம் போட்டாச்சு. மேல் வீடு எழுப்பனும், இன்னும் ஜன்னல்,கதவு, பூச்சு எல்லாமே பாக்கி இருக்கு. ரூ 7க்குமேல் (லட்சம்) எஸ்டிமேட் என்றார். 

“எனக்கு உங்களால் ஆனதைச் செய்யுங்கள்” என்றார்.

மறைவாகச் சென்று மலேசிய நாணயம் 50 டாலர் கரன்ஸியில் இரண்டை வைத்து ஆக வெள்ளி 100 கொண்ட என்வலோப்பை அவரிடம் கொடுத்தேன். மறைவாகச் சென்று பணத்தை என்வலோப்பில் வைப்பதை எட்டிப் பார்த்தார். என்வலோப்பை அவர் கையில் கொடுத்தேன்.  அதை வாங்கிய அவர் உடனே திறந்து பார்த்தார்.  அவர் முகம் மாறியது.

“என்ன இது? நூறு வெள்ளி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கே நல்லா இருக்கிறதா? என்று கோபமும் அதட்டலுமாக்க் கேட்டார். அதட்டலைக் கேட்ட எனக்குக் கோபம் வந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன்.

“நம்மால் முடிந்தது அதுதான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மென்மையாகச் சொன்னேன். 

“நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் நூறு வெள்ளியைத் தருகிறீர்கள். இதை வைத்து ஒரு லோடு செங்கல் வாங்க முடியுமா?” என்று கேட்டவர், 

“இந்தா பாருங்கள். உங்கள் பேருடைய ஃபாரூக் ஆயிரம் வெள்ளி தந்திருக்கிறார்” என்று வசூல் நோட்டைக் காட்டினார். 

அங்கே பெரும்புள்ளிகள் பெயர்கள், பெரிய பெரிய நோட்டு. அவர்களோடு என்னால் போட்டி போட முடியாது. என் வியாபாரம் ஆரம்பித்தே இரண்டரை வருடங்கள்தான் ஆகிறது. உழைப்பையும் உதிரத்தையும் காலத்தையும் வேறு ஒருவருக்கு அற்பணித்து விட்டு உடுத்திய கைலியோடும் உலர்ந்த வயிற்றோடும் அல்லாஹ்வின் நம்பிக்கையோடும் வெளியேறியவன் நான். அந்த முயல்களோடு போட்டிப் போட்டு ஓட இந்த ஆமையால் முடியாது. கதையில்தான் ஆமை வெல்லும். நிஜ வாழ்வில் முடியாது. 

“என்னால் முடிந்தது இதுதான். செங்கல் விலையெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தியாவில் பால் விலை அரிசி விலையெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றேன்.

“இந்தாங்கள் இதை நீங்களே வைத்துக் கொண்டு நல்லா இருங்கள்” என்று என்வலோப்பை மேசைமேல் போட்டார். பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். இவர் ஓதிக்கொடுக்கும் லட்சணம் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து படார் என்று அடித்து விட்டுக் கடையை விட்டுக் கோபமாக வெளியேறினார்.  ஒரு மதர்சாவின் பிரின்சிபால் இப்படி நடந்தார். இயல்பில் சிறு விஷயத்திற்குக் கோபப்படும் எனக்கு பல ஆண்டுகள் ஒருவரிடம் பட்ட அடியால் என் மனது உணர்ச்சியை மறந்து மரத்துப்போய் விட்டது. இதுவே பத்து வருஷத்துக்கு முந்திய ஃபாரூக்கா நான் இருந்திருந்தால் நடப்பது வேறாக இருக்கும். காலம் எனக்கு பாடம் போதித்து மாங்காயாக இருந்த என்னை ஊறுகாயாகப் பாடம் பண்ணிவிட்டிருந்தது. அமைதியாக அந்த நூறு வெள்ளியைத் தனியே எடுத்து வைத்திருந்தேன். அதிலிருந்து பிறகு வந்தவர்களுக்கு 20-10-30தாகக் கொடுத்து எம்ப்டி என்வலோப்பை கிழித்துப் போட ஆறுமாதம் ஆனது.

ஏனோ எனக்குத் தெரியவில்லை. யார்யாருக்கு நல்லெண்ணத்துடன் உதவி செய்ய வேண்டுமென்று உதவி செய்தேனோ அவர்கள் எல்லாம் எனக்கு புரூட்டஸாக மாறி என் முதுகில் குத்தினார்கள்.  பலரால் பல் முறை குத்தப்பட்டுச் செத்தவன் நான்.  புரூட்டஸ் ஒரு தடவை குத்தினான். ஜூலியஸ் சீஸர் ஒரு தடவை செத்தான். நானோ பல தடவை பலரால் குத்தப்பட்டு பல தடவை செத்தேன்.  மறக்க முடியாத இரண்டு நெருங்கிய நண்பர்கள் குத்திய கடைசி குத்துகள் என் கண்ணிரெண்டைத் திறந்து வாழ்க்கையில் ஒளி பிறந்தது.  இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இரண்டு நண்பர்களின் பெயரும் என் பெயரும் ஒன்றே.  கடைசி இரு நண்பர்களின் குத்துகள் என் வாழ்வின் உதய சூரியன். எனக்கு விடிந்தது.  மறக்கவே முடியாத ‘மா பெரும் நண்பர்கள்” அவர்கள்.  ஒருவர் போய் விட்டார். ஒருவர் பள்ளியில் பயான் செய்கிறார். ஷெய்த்தான் வேதம் ஓதுகிறது.

இறுதியாக, “இலவசம் விலையானது” என்ற இந்தக் கட்டுரையில் தலைப்பை பிரதிபலிக்கப்போவது இனி வரும் நிகழ்வுகளேயாகும்.  முன் சொன்னதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் இனி சொல்ல இருப்பவை.

take break ! :)

ஒரு நாள் காலை 10:30 மனி அளவுக்கு ஒருவர் என் கடைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் 

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். 

“அலைக்கு முஸ்ஸலாம்” என்று அவரை நோட்டமிட்டேன். இதுவரை நான் அவரைப் பார்த்ததில்லை.  நல்ல நீட்டான உடை, கவர்ச்சியான நல்ல அகன்ற கருத்த முகம். முகத்துக்குத் தாடையில் கொஞ்சம்போல் தாடி.  நம் ஊர் ஜாடை. ஆனால், அவரை நம் ஊரில் பார்த்ததில்லை. 

“நீங்கள்தானே ஃபாரூக்?” என்றார். 

“ஆமாம்” என்றேன். 

“இந்த வரிசையில் இன்னொரு ஃபாரூக் இருக்கிறார். அவரை ‘கீலா கீலா’ என்பார்கள்.” என்றேன். 

பெரும்பாலும் என்னைத் தேடி ஊரிலிருந்து யாரும் வர மாட்டார்கள். காரணம் பசை இல்லை. ஊரில் மண்டபம், வணிக வளாகங்கள், தோப்பு, வயல்கள்,  வாடகை வீடுகள் என்று விளம்பர அய்ட்டங்கள் ஏதும் எனக்கு இல்லை. நான் ஆமைபோல் அமைதியாக வந்து விட்டு அமைதியாக போகிற ஆள்.  எனக்கு இங்கே விளம்பரம் இல்லை. நான் ஊர் வந்திருக்கும்போதுகூட என்னை பார்ப்பவரகளில் பெரும்பாலோர் என் பள்ளித் தோழர்கள் “ எப்போ வந்தா” என்று கேட்பதில்லை. புகழ்பெற்ற பார்ட்டி பேரைச் சொல்லி அவன் சுகமாக இருக்கிறானா? என்று மிகுந்த ஆதங்கத்தோடும் அக்கரையோடும் கேட்பார்கள். “ நீ சுகமாய் இருக்கிறாயா?” என்று கேட்பதில்லை. 

என் மூடு நல்லா இருந்தால், “ நல்லா இருக்கிறான்!” என்பேன். அதோடு விடுவதில்லை.
.  
“எப்போ ஊருக்கு வருரான்?’ என்பார்கள்.  

“நான் ஜோசியன் அல்ல! அது எனக்குத் தெரியாது. யாராவது குடுகுடுப்பைக் காரனிடம் போய் கேள்” என்பேன். 

“என்னப்பா இப்படி பதில் சொல்றா? அவனே உன்னைப்ப்த்தி இப்படித்தான் சொன்னான். ‘சிடுசிடு’ என்று பேசிவிடுவாயாம்.” என்பார்கள்.

“நான் சொலவதைக் கேள். நானும் நீயும் பள்ளிக்காலம் தொட்டு நண்பர்கள். என்னைப் பார்த்து நீ, ‘ நீ சுகமாக இருக்கிராயா?’ என்று கேட்கவில்லை. முதலில் மனித உறவுகளையும் நட்புகளையும் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உளவியலை நன்கு தெரிந்துந்துகொள்” என்பேன்.

ஒருமுறை நான் KLல் என் பெயருடைய நண்பர் கடையில் பங்காளியாக இருக்கும்போடு இரவு 7:30 மணிக்கு டெலிபோன் மணி அடித்த்து.  7:30 க்கு பிசினஸ் சம்பந்தமான டெலிபோன் வருவது அரிது.  எல்லாம் வெட்டிப்பேச்சு ஊர் வமு போந்தான் வரும்.  டெலிபோனை எடுத்து,

“ஹலோ” என்றேன். 

“யார் பேசுறது?” எதிர்முனைக் குரல். இந்தக் குரலுக்குரியவர் ‘எல்லாமே தனக்குத்தான் தெரியும் மற்றவர் யாருக்கும் ஏதும் தெரியாது,. தன் சட்டைத்தான் விலை உயர்ந்த சட்டை, தன் கடிகாரம்தான் விலை உயர்ந்த கடிகாரம், மற்றவரக்ளுடைய எல்லாமே மட்டம் என்று தம்பட்டம் அடிக்கும் பேர்வழி! இவருக்கு ஒரு நாளைக்கு சரியா கொடுக்கனும் என்று ரொம்ப நாள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்.  என் மாமா, அதிரை நிருபரின் இபுறாகீம் அன்சாரியுடைய வாப்பாவுக்கு நெருங்கிய நண்பரும்கூட.

“நான் சுருட்டு ஃபாரூக் பேசுறேன்” என்று அடக்க ஒடுக்கமாய்ச் சொன்னேன்.

“ஏன்…….அவர் இல்லையா?” என்று ரொம்ப அதட்டலான குரலில் கேட்டார்.

“நீங்கள் யார்?” என்றேன் மிகப் பணிவுடன்.

“ஏன் என்னைத் தெரியலையா? நான் தான் …… பேசுறேன்” என்றார். இதுவும் அதட்டலே.

“எங்கள் டெலிபோனில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் தெரியாது. அதனால் கேட்டேன்.” என்றேன். கிண்டல்தான்.” இப்போ நீங்கள் ….நபருடன் பேச வேண்டும். உங்கள் காலை அவர்தான் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம். நான் போனைக் கட் செய்கிறேன். இன்னொரு கால் போடுங்கள் அவர் எடுப்பார்” என்று டெலிபோனைக் கட் செய்தேன்.

மறு கால் வந்த்து.  அவர் எடுத்தார். நான் வெளியே போய் விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். எல்லாவற்றிற்கும் அடீப்ப்படை காரணம் பணம். மனிதாபிமானம் பணத்திற்கு பலியாகிக் கொண்டே இருக்கிறது.  இப்போழுது நாம் முன்பு விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்றார்.

“உட்காருங்கள்” என்று நாற்காலியைக் காட்டினேன். எதற்காக அவர் என்னைப் பார்க்க் வந்தார் என்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.

“நானும் அதிராம்பட்டிணம்தான். நாங்கள் முன்பு கடல்கரைத் தெருவில்தான் இருந்தோம் எங்கள் குடும்ப்ப் பட்டப்பேர் இத்” என்று ஒரு பட்டப்ப்யெரைச் சொன்னார். எனக்குப் புரிந்த்து.  நான் சிறு பிள்ளையா இருந்தபோது என் தாயார் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டு திறந்த வெளி வேலியடைத்த முற்றத்தில் நான் பலமுறை விளையாடி இருக்கிறேன்.  அந்த வீட்டுப் பெண்கள் என் மீது பிரியமாக இருப்பார்கள்  அவர்கள் போன பின் அத இடம் காலியாக இருந்த்து.   இப்போது எப்படி இருக்கிரதுஎன்று தெரியவில்லை. கை மாறி கல்வீடாக மாற் இருக்கலாம்.  தனக்கு நம்ம ஊர் ஆள் என் இட்த்தை அடையாளம் சொல்லி அனுப்பியதாகச் சொன்னார்.

“இரண்டு டீ வரவழைத்துக் குடித்தோம்.

“என்ன விஷயம்?” என்றேன்.

“குர்ஆன் 300 பிரதிகள் தர்ஜமா கொண்டு வந்தேன். உங்களுக்குத் தெரிந்த பெரிய புத்தக வியாபாரி இருப்பதாகவும் நீங்கள் சொன்னால் எல்லாவற்றையும் அவரிடமே கொடுத்த் விடலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்களைத்தேடி வந்தேன்:” என்று சொன்னார்.

“குர் ஆன் எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன்.

“எல்லாமே கப்பலில் வந்து பினாங்கில் இருக்கிரது. மாதிரிக்கு மூனு கொண்டு வந்தேன்” என்று கையில் கொண்டுவந்திருந்த ஒரு பிரதியைக் காட்டினார். ஏற்கனவே வந்த்துதான். வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். பலமுறை reprint  செய்யப்பட்ட்து.

“இப்போது காலை நேரம். அவர் பிசியாக இருப்பார்கள். குர் ஆன் மாதிரியோடு மாலை 41/2 அல்லது 5 மணிக்கு வாருங்கள் போகலாம்” என்று சொல்லி அனுப்பினேன். 

சொன்னதுபோல் 4 1/2 மணிக்கு வந்தார்..  டீ குடித்துவிட்டு வேனில் அங்கே 5 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.  அந்த இடம் எந்த நேரமும் ட்ராஃபிக் நெருக்கடி மிகுந்த இடம்.  பார்க்கிங் கிடைப்பது அரிது. “லிட்டில் இந்தியா” என்று சொல்லப்படும் தமிழ் முஸ்லீம்களின் தேன்கூடு! மொச்சுமொச்சு என்று தஞ்சை மற்றும் ராம்நாடு முச்லீம்கள் நிறைந்த பகுதி. தமிழ் முச்லீம்கள் பள்ளியும் உண்டு.  ஜாலன் மஸ்ஜித் இந்தியா – இந்திய பள்ளிவசல் வீதி – அல்லது தெரு என்பதே இதன் பொருள்.  “பத்து ரோடு (கல் சாலை) கோலாலம்பூரின் (அண்ணாசாலைக்கு சம்ம்) முக்கிய வீதி.  

அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை.  சற்று தூரமுள்ள ஐந்து மாடிக்கட்டிடத்தில் மேலே நாலாவது மாடிக்குப் போய் பார்க்கிங் செய்து விட்டு நாங்கள் போக வேண்டிய புத்தகக் கடைக்கு முதல் மாடிக்கு இருவரும் போனோம். 
தொடரும்..
S.முஹம்மது ஃபாருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு