அதிரை பேரூராட்சியின் தலைவரே !
அஸ்லம் அவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்…
அமைதியின் ஆளுமையான
அதிரை நிருபரின்
அன்பான வாழ்த்துக்கள் !
அறிக்கைகளில் மனமகிழ்ந்து
அறிவிப்புகளில் சொக்கிப்போய்
அதிரை மக்களின் சார்பாக
அளிக்கிறேன் விண்ணப்பம்:
சுகாதரச்சீர்கேட்டைச் சுட்டினீர்கள்
சீரமைப்புத் திட்டங்களில்
சேர்த்துக் கொள்வீர்களா?
சின்னச் சின்னக் கோரிக்கைகளை:
கருவேலங் காடழித்து
காட்டு ரோஜா வளர்க்கனும்
கள்ளிச் செடி களைந்து
கற்றாலை முளைக்கனும்
வாய்க்காலிலும் கால்வாயிலும்
நீர்வரத்தும் வடிகாலும்
நிச்சயம் வேண்டுமையா
நெற்கதிர்கள் செழிப்பதற்கு
வெட்டிக்குளத்தைச் சற்று
வெட்டெடுத்துத் தரவேனும்
மீன்கள் வளரவிட்டு
நாங்கள் வாழவேண்டும்
செடியன் முதல் செக்கடி வரை
தூர்வாரித் தந்துவிட்டால்
ஊர்க்கார ரெல்லோர்க்கும்
ஊருணியில் நீரிருக்கும்
மழைநீரைச் சேமிக்க
மார்க்கம் ஒன்று காட்ட வேண்டும்
மற்றெல்லா மாவட்டம்போல்
மண் செழிக்க வாழ வேண்டும்
புலரும் வெஞ் சுடர்கூட
உலர்த்த முடியா ஈரத்தால்
காலி மனையி லெல்லாம்
கடும் கொசுக்கள் குடியிருக்கு
சகதியாய்ப் போன மனையில்
சல்லிக்காசு வாடகை யின்றி
சாரைப்பாம்பு வசிக்கு ததனால்
நல்லதும் புழங்குதைய்யா
மனைக்குச் சொந்தக்காரரோ
சொந்தக்காரரின் மனைவியோ
தன் னிலம் உலர வைத்து
தடுப்பு வேலி அடைக்க வேனும்
கூலிக்கு ஆள் வைத்து
குப்பைக் கூலம் கொளுத்த வேனும்
பாலிதீன் பைகளுக்கும்
பைபை சொல்ல வேனும்
வீட்டு வாசலிலும் ரோட்டு ஓரத்திலும்
ஆட்டு ரத்தம் ஓடுதய்யா
நாட்டு நடப்பு அறியாதோரின்
காட்டு தர்பார் நிறுத்துங்கய்யா
சாக்கடைச் சண்டையினால்
சாக்காடு நிகழு முன்னர்
நேக்குப் போக்குப் பார்த்து
நிலத்தில்மூடி மறைக்க வேனும்
ஏனா கானா ஈனா என்னய்யா
என்றுமே நீர் நம்மாளு தானய்யா
தொடங்குங்கள் நீங்களய்யா
தோள்கொடுப்போம் நாங்களய்யா !
- சபீர்
- sabeer.abushahruk


