அழகு...ஓர் அழைப்பிதழ்!
முத்திரையிடு
முகவரியிடு - அன்றேல்
உரியவரைச் சென்று
சேராமல் போய்விடும்
ஊரில் போய்
சோரம் போய்விடும்
அழகு...
ஓர் அறுசுவையுணவு!
நாற்சந்தி தள்ளுவண்டிபோல்
திறந்து போடாமல்
நட்சத்திர அந்தஸ்த்தாக
மூடி வை - தவறினால்
ஈயென மொய்க்கும் கண்கள்
ஈயென இளிப்பர் ஆண்கள்
அழகு...
ஓர் ஆச்சர்யக்குறி!
அற்ப இச்சைகளுக்கோ
அபிலாஷைகளுக்கோ
வளைந்து கொடுக்காதே - மீறினால்
வாழ்க்கையை அது
கேள்விக்குறியாக்கி
முற்றுப்புள்ளியில் முடித்துவிடும்!
அழகு...
ஓர் அடைமழை!
பருவம் தவறி பெய்தாலோ
அளவை மீறி பொழிந்தாலோ
பாழுங்கிணற்றில் வீணாகும்
பரம்பரை மானம் பறிபோகும்
அழகு
ஓர் அற்புத போதை
அனுமதிக்கப்பட்டவரே
அனுபவிக்க வேண்டும் - இல்லையேல்
கண்டவனும் கண்டு
போதை தலைக்கேறி
பைத்தியம் பிடித்துவிடும்
அழகு
ஓர் அருட்கொடை
பத்திரப்படுத்து!
பகிரங்கப்படுத்தி
பாவம் செய்தால்
படைத்தவனின்
கோபப்பார்வையால்
குலநாசம் உறுதி
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

