மக்காவிலிருந்து
மரணச் செய்திகள்
எவன் ஒருவனிடமிருந்து
வந்தோமோ
அவன் ஒருவனிடமே
மீள்வோம்
எனினும்...
மாண்டவர் எண்ணிக்கை
கூடக்கூட
'ஆண்டவா போதுமெ'ன
அலறுகிறது மனம்
சுவாசக் குழாயைச்
சோகம் அடைக்க
கண்களில்
கண்ணீர்த் தழும்ப
கனக்கிறது மனம்
சிறியொதொரு ஒழுங்குமீறல்
சிதறடிக்க...
இரும்புக்காற்று
வீசியதுபோல்
இறந்து விழுந்தனர்
வீடுபேறு
நாடிவந்த நல்லோர்
எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்டத்தில்
கருயானைப் புகுந்ததுபோல்
கதிகலங்கி
விதிமுடிந்து வீழ்ந்தனர்
சகோதர யாத்ரிகர்கள்
புயல்காற்றைப்போல்
பூகம்பம்போல்
கூட்டமும் ஒரு
காத்திருக்கும் பேரிடர்தான்...
வரிசையோ வேகமோ
சற்றே பிசகியதால்
விநாடிகளில்
வீழ்த்தியது
நூற்றுக்கணக்கில் யாத்ரிகர்களை
சென்றது மீள்பயணம்தான்
எனினும்
வந்துவிடுவர் என்று
நம்பி
வழியனுப்பிய சொந்தங்களும்
வாழ்த்திவிட்ட பந்தங்களும்
துக்கத்தைக்
துறந்து மறக்க
வகையறியாமல் தவிக்கின்றனர்
வாழ்க்கையின் வடிவமைப்பை
இத்தனை எளிதாக
எத்தி வைக்கும் இறைவா...
பாவச்சுமையின்
பகுதியையாவது குறைக்கவந்தோர்
புனித மக்காவில் மரணித்ததால்
இனிய சொர்க்கம்
ஏகட்டும்
தற்காலிகத்
தங்குமிடமாம்
தரைநீண்ட பூமியைவிட்டு
நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு
நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


