பூதங் காத்தப் பொதையலு
புழுப் புழுத்துப் புகைஞ்சி போகும்
போற எடம் வேற யாகும்
சேர்த்து வச்ச சிந்தனையும்
காத்து வச்ச காசுபணம்செல்லரிச்சி சிதஞ்சு போகும்
செலவழிச்சா சிறப்புச் சேரும்
கற்ற கல்வி பெற்ற ஞானம்
கற்றுக் கொடுத்தா வளர்ந்திடும்
கஞ்சி சோறு கழனி காடு
கலந்து உண்டா பெருகிடும்
தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே முடக்கி வச்சு
தூங்கிநின்னா மதி கெட்டுடும்
பூமிக்குள்ளே பொதைச்சு வச்ச
பொக்கிஷந் தான் விதைகளும்
தரைபிளந்து தலைநிமிர்ந்தால்
தழைக்கும் இந்த உலகமும்
தாவரங்கள் காட்டித் தரும்
தியாகத்தை நாம் கற்கனும்
ஞானத்தோடு தணங்களையும்
ஞாலத்துக்கே வழங்கனும்
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கிடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமுமில்லே
கற்றதெல்லாம் கற்றுக்கொடு
பெற்றதெல்லாம் பிரித்துக்கொடு
முற்றுப்பெறும் வாழ்க்கையிலே
முதல் பகுதி வெற்றி பெறு
அத்தனையும் அறியப்படும்
கணக்கு வழக்கில் பதியப்படும்
கேள்வி கணக்கு நாளினிலே
கெடைக்கும் அந்த சொர்க்கம் பெறு!
-- சபீர்
--Sabeer abuShahruk



