தொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா? தால் (DHALL) என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா. (இது நான் கேட்டது).
கை கழுவி வாருங்கள் விருந்துக்குப் (விஷயத்துக்கு) போகலாம்.
வாழ்க்கையையும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பிட்டால் எப்படி அந்த பழத்தின் சுளைகளைச் சுவைத்துவிட்டு சக்கைகளையும், நெட்டிகளையும் தூரகளைந்து விடுகிறோமோ அதேபோல் வாழ்வில் கெட்டவைகளை ஒதுக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் நினைத்து ஏற்று நடந்தால்தான் வாழ்வு இனிக்கும். அதேபோல் நாம் சந்திக்கும் நண்பர்கள் ஆனாலும், குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும் அவர்களின் குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் குணமுள்ளவர்களை ஏற்று குற்றமுள்ளவர்களைத் தள்ளிவிட்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
சகோதரர்கள் இருவர் இருந்தார்கள். அதில் ஒருவன் மொடாக்குடியன். உதவாக்கரை. தனது வாழ்வில் அவன் எந்தக்காரியத்தையும் உருப்படியாக செய்ததில்லை. ஆனால் இன்னொரு சகோதரனோ ஒரு பெரிய படிப்பாளியாகவும், வெற்றியாளனாகவும் விளங்கினான். பெரிய பதவியில் அமர்ந்திருந்தான்.
ஒரே பெற்றோருக்கு –ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இந்த இருவரிடமும் காணப்பட்ட வித்தியாசங்கள் ஊராருக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது ஒருவர் இதை அந்த சகோதரர்களிடம் தனித்தனியே கேட்டார். குடிகாரன் சொன்னான். "என் வாழ்க்கை இப்படி கெட்டுப்போனதற்கு என தந்தைதான் காரணம். அவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார். ஒரு வேலையும் செய்யமாட்டார் அவருக்குப் பிறந்த நான் மட்டும் எப்படி இருப்பேன். அவரைப் பார்த்தே அப்படி வாழ பழகிக்கொண்டேன்” என்று சொன்னான்.
அடுத்தவனைக் கேட்டபோது அவனும் தனது வெற்றிக்கு தனது தந்தையே காரணம் என்று சொன்னான். “என தந்தை மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார். அவரைப்பார்த்து அவர் மாதிரி வாழக்கூடாது என்று நான் கவனமாக வளர்ந்தேன் சின்ன வயதிலேயே அப்படி முடிவு செய்ததால் இப்படி வெற்றியாளனாக என்னால் வர முடிந்தது. அவரது தவறுகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உயர்த்தி இருக்கிறது” என்று சொன்னான்.
வாழ்க்கை தரும் பாடங்களில் இருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம் கண் முன்னே காணும் சிலருடைய வாழ்க்கை சம்பவங்கள் நமக்கு படிப்பினைகளையும் அனுபவத்தையும் தருகின்றன. அடுத்தவர்கள் எடுத்துவைக்கும் அடிகளைப்பார்த்து நல்லவற்றை பின்பற்றவேண்டும் .
சிலர் தாம் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்வார்கள். அந்த தவறுக்கு கற்பனை காரணங்களைச் சாதகமாகக் காட்டுவார்கள். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . ஆளுக்கு ஆள் பார்க்கும் பார்வை மாறுபடும் . காகிதத்தைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை எழுத தோன்றுகிறது. கழுதைக்கோ சாப்பிடத்தோன்றுகிறது.
ஒரு பணக்காரத்தந்தை இருந்தார். தனது மகனுக்கு ஏழ்மையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தனது மகனின் வயதை ஒத்த ஒரு ஏழைச்சிறுவனை ஒரு குப்பத்திலிருந்து கூட்டிவந்தார். மகனோடு பழகவிட்டு அந்த குப்பத்தின் வாழ்க்கையை மகனிடம் பேசச்சொன்னார். ஒரு நாள் இருந்துவிட்டு குப்பத்து சிறுவன் போய்விட்டான். பணக்காரத்தந்தையின் மகன் பெற்றவரிடம் வந்தான்,
“என்னப்பா எல்லாம் தெரிந்து கொண்டாயா?” என்று தந்தை கேட்டார்.
மகன் சொன்னான், “அப்பா அவனை ஏழை என்றீர்கள். நாம்தான் ஏழையாக இருக்கிறோம். நம் வீட்டில் ஒரு நாய்தான் இருக்கிறது அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் பத்து பதினைந்து நாய்கள் ஓடி வருமாம். நாம் இந்த அறையில் படுக்கிறோம். அவர்கள் படுக்கும் இடம் வெட்டவெளியாம்: வானம் ரோடு எல்லாம் பார்த்துக்கொண்டே படுத்து தூங்குவார்களாம்: நம்வீட்டில் டியூப் லைட்டும் டேபிள லைட்டும்தான் இருக்கின்றன. அவர்களுக்கு நிலவு, நட்சத்திரம் எல்லாம் வெளிச்சம் தருமாம். நாம் ஏசி போட்டால்தான் தூங்க முடியும் அவர்களுக்கு காற்று கடலில் இருந்து வருமாம். நம்மைவிட அவர்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களே! “ என்றான் பையன். தந்தை பதில் பேசவில்லை.
இப்படி பார்வைகளும், உணர்ந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் வித்தியாசப்படுகின்றன. ஒரே காலகட்டத்தில் அரசியல் செய்யும் ஒரு தலைவர் ஒருவருடைய பார்வையில் தானைத்தலைவராகவும் அதே தலைவர் அடுத்தவருக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவராகவும் தென்படுகிறார். ஆனாலும் இரண்டுக்கும் மத்தியில் உண்மை என்ற ஒன்று இருக்கவே செய்கிறது . அதை உணர்ந்து அறிந்து கொள்வதே வெற்றிக்கு அடிகோலும். ஆராயாமல், சிந்திக்காமல் பொத்தாம்பொதுவிலும், சாய்ந்தால் சாயுற பக்கம் சாய்வதாக இருந்தாலும் அது வெற்றிக்கு வழியை திறந்து விடாது.
ஒரு பட்டப்பகலில் ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்து நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அந்த வழியாகப் போன ஒரு விவசாயி பாவம் வேலை அதிகம் போலிருக்கிறது- அதனால் தூங்குகிறான் என்று நினைத்தான். அடுத்து ஒரு குடிகாரன் அதைப்பார்த்துவிட்டு பாவம் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது மயங்கி தூங்குகிறான் என்று நினைத்தான். அதன்பின் ஒரு திருடன் அதைப்பார்த்துவிட்டு இரவு முழுதும் கண்விழித்து திருடப்போய் இருப்பான் போலிருக்கிறது அதுதான் தூங்குகிறான் என்று எண்ணினான். ஒரு சாமியார் அதைப்பார்த்துவிட்டு சரிதான் வாழ்க்கையை வெறுத்து வந்துவிட்டான் போல இருக்கிறது – அதனால் நிம்மதியாக தூங்குகிறான் என்று எண்ணினார். இப்படி நாம் யாராக இருக்கிறோமோ அப்படியே மற்றவர்களையும் நினைக்கs சொல்லும் மனது. உண்மையை அறிந்து கொள்ள முயலும் மனப்பக்குவம் வளரவேண்டும். பார்த்த உடனே ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது பரவலான மனப்பான்மையாக இருக்கிறது.
ஆனால் எதையுமே பாசிடிவ் அப்ரோச் என்கிற உடன்பாடு கொள்கையில் பார்த்தால் பாதி வெற்றிபெற்றுவிட்டதாக அர்த்தம். பாசிடிவ் அப்ரோச் என்பது முதலில் நம் மனதை நாம் பெறப்போகும் வெற்றிக்கு தயாராக்கி வைப்பதும் அந்த வெற்றியை நோக்கி நமது ஓட்டத்தை துவக்குவதும் ஆகும். நமக்குள் தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பச்சோறு ஆக்கிக்கொண்டிருந்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது.
"எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-"
என்றார் கவிஞர் அதிரை அப்துல் கலாம்.
எல்லாவற்றையுமே எதிர்மறையாக சிந்திப்பது பலருக்கு கூடப்பிறந்த இயல்பு. பேருந்து நிற்கும் இடத்தில் காத்து இருக்கும்போது ஐந்து நிமிடம் பேருந்து வர தாமதமாகிவிட்டால் கூட வீணாப்போன மனதில் அந்த பஸ் ஏதும் மரத்தில் மோதிவிட்டதோ என்று எதிரான சிந்தனை வரும். நம்பிக்கை என்பது வாழ்வின் அடிப்படை. அதனால்தான் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈமான் முதல் கடமையாக இருக்கிறது. நாம் எவ்வளவுதான் நம்பிக்கையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி சிலர் வருவார்கள். நம்முடைய முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் எதிர்மறை கருத்துக்கூறி தகர்ப்பதற்கேன்றே சிலர் வருவார்கள்.
“என்னப்பா சவூதி போறியாமே அந்த வெயில் ஒத்துக்குமா?” என்றும் , “லண்டன் போறியாமே அந்த குளிர் ஒத்துக்குமா?” என்றும்,
"மகளுக்கு இன்னார் வீட்டில் பேசி நிச்சயம் செய்துவிட்டாயாமே பையனைப்பற்றி விசாரிச்சியா அமெரிக்காவிலிருந்து வந்தவன் என்று சொல்றாங்களே!”
“இந்த இடத்திலா மனைக்கட்டு வாங்கினே அங்கு பேய் நடமாடுதாமே!” “அவனுக்கா கடன் கொடுத்தே வந்தமாதிரிதான்!”
“இந்த பைக் ஏன் வாங்குனே உழைக்காதே!”
“இவரை வச்சா வீடு கட்டுறே உருப்பட்டாப்போலத்தான்.!”
இப்படி நம்மை நோக்கி எதிர்மறை எண்ண அம்புகளை விடுவோர் அதிகம் பேர் சுருட்டு குடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருககிறார்கள். அவ்வப்போது வந்து அவர்களின் பிரடியையும் முழங்கையையும் சொரிவார்கள். நம்மிடம் ஒரு சமூசா வங்கி தின்பதற்காக நம்மை சாக்கடையில் தள்ளும் யோசனைகளைக் கூறி நம்மை குழப்பி விடுவார்கள்.
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்குத் தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் “இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான்” என்று கூறினார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ” மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப்போகின்றன “என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கி விட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர்“உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது”என்று கேட்டார்.
அதற்கு அந்தத்தவளை கூறிய பதில் ” எனக்கு காது கேட்காது“ என்பதாகும்.
முயற்சிகளை முறியடித்துப்போடும் ஆலோசனைகளை கேட்பதைவிட கேளாமை நல்லது. சில இடங்களில் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருப்பது கூட நல்லதுதான். மூளை சலவை செய்யும் தன்னலம் மிக்கவர்கள் - நமது எண்ணங்களின் இடுப்பை ஒடித்துப்போடுபவர்கள்- வளரும் பயிர்களை முளையிலேய கிள்ளிவிடுபவர்கள் – நிறைய இருககிறார்கள்.
ஆடு கழுதையான கதை அறிந்த நமக்கு இதுபற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை.
பலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.
‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.
‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’
‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.
சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.
‘‘ஏம்மா கேக்குற?’’
‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’
பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.
‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.உள்ள இருக்கிற காற்றுத்தான். .
என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தால், யார் வேண்டுமானாலும் உயரப்பறக்கலாம் ’’ என்றார்.
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. நமது உள்ளத்தின் – அறிவின்- சட்டியில் உள்ளதுதான் நமது அன்றாட வாழ்வின் அகப்பையில் வரும். நமது எண்ணமே வாழ்வு. நமது நினைப்புத்தான் நமக்கு பிழைப்பை கொடுக்கிறது அல்லது கெடுக்கிறது. ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம்? கண்களில் ஏன் இந்த மயக்கம்? மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நல்ல குறிக்கோள் – அதை நிறைவேற்ற ஒரு திட்டம்- அதற்கான உழைப்பு, முயற்சி இவைகள் இருந்தால் வெற்றி நமதே! இன்ஷாஅல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி

.jpg)
