கடும் வெப்பம் நிலவும் பாலைவனப்பிரதேசங்களில் வாழும் மிருகங்கள் தண்ணீருக்காக இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நீர் இருப்பது போல் கண்களுக்கு காட்சி தரும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் நிசத்தில் அது அனல் பறக்கும் வெறும் மணல் பரப்பாகத்தான் இருக்கும். அது போல் வாழ்க்கையில் பல தரப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வில் வேண்டி விரும்புவது கிடைக்காமல் கடைசி வரை கானல் நீரைப்போன்று காட்சி தந்து வாழ்க்கையும் முடிந்து போகும். அவற்றில் நமக்கறிந்த சிலவற்றை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.
ஏழ்மையானவர்களுக்கு வசதி வாய்ப்பான வாழ்க்கை ஒரு கானல் நீர்.
தீராத நோயுடையவர்களுக்கும் அதனால் படுக்கையில் படுத்தவர்களுக்கும் ஆரோக்கிய வாழ்க்கை ஒரு கானல் நீர்.
தட்டந்தரையில் படுத்துறங்குபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பின் உறக்கம் ஒரு கானல் நீர்.
தன்னிடம் உள்ள சைக்கிளைக்கூட பழுது பார்த்து பராமரிக்க இயலாதவனுக்கு சொந்த இரு சக்கர வாகனப்பயணம் ஒரு கானல் நீர்.
பஞ்சம் தலை விரித்தாடும் ஆப்பிரிக்கக்கண்டத்தின் சில நாட்டு மக்களுக்கு ஒழுங்கான உடை, நல்ல உணவு, தங்க இருப்பிடம் என்ற சாதாரன அடிப்படை தேவை கூட ஒரு கானல் நீர் தான்.
வஞ்சிக்கப்படும் அப்பாவி இஸ்லாமிய சமுதாயத்திற்கு உண்மையான ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு கானல் நீர்.
பாசமுடன் வளர்த்து, பரிவுடன் தான் ஆளாக்கிய பெற்ற பிள்ளைகளே வளர்ந்து ஆளானதும் தாய், தந்தையரை கவனிக்காமல் கை விடுவதால் தாய், தந்தையருக்கு பிள்ளைகளின் உண்மையான பாசமும், நேசமும் ஒரு கானல் நீர்.
போட்டி மிகுந்த இந்த உலகில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரன மனிதன் போல் வாழ நினைக்கும் ஆசை ஒரு கானல் நீர்.
மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் கொத்துக்கொத்தாக அதிகார சக்திகளால் தன் இனம் அழிக்கப்பட்டு இன்று குற்றுயிரும், குலையுயிருமாக இருந்து வரும் பாலஸ்தீன, இலங்கை தமிழ் மக்களுக்கு தனி நாடு, தனி ஈழம் ஒரு கானல் நீர்.
நல்ல அறிவுத்திறன் இருந்தும் வசதி இல்லாத மாணவனுக்கு உயர்க்கல்வி என்பது ஒரு கானல் நீர்.
அரசியல் ஆதாயத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எதுவும் எப்படியும் விளையாடப்படும் இந்த நாளில் வீட்டில், குடும்பத்தில், தெருவில், ஊரில், மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில், கண்டங்களில், உலகில் அமைதியையும், சமத்துவத்தையும், நீதி, நேர்மையை எதிர்பார்ப்பது இருப்பது ஒரு கானல் நீர்.
பெற்ற தாய், தந்தையரை எதோ காரணத்தினால் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாசம் ஒரு கானல் நீர்.
உண்மையான நடுநிலையாளர்களுக்கு நல்லதை நாடி செல்லுமிடமெல்லாம் கானல் நீர்.
அடக்குமுறை, அத்துமீறல்களால் உலகில் யாரோ ஒரு சில குறிப்பிட்ட நபர்களால் செய்யப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி பொருளாதார ஆதாயத்திற்காக உலகின் ஒட்டு மொத்த ஊடகங்களும் பேசியும், எழுதியும் வருவதால் நடுநிலையான ஊடகத்தை எதிர்பார்ப்பது ஒரு கானல் நீர்.
பழைய காலத்தில் ஆரோக்கியத்துடன் சுகமாய் இருந்து இன்று ஆரோக்கியம் குறைந்து சுகவீனமாய் இருந்து வரும் நம் பெரியவர்களுக்கு அந்தக்காலம் ஒரு கானல் நீர்.
சமுதாயத்தில் எதேதோ காரணங்களுக்காக பிரிந்து ஆளுக்கொரு தலைவன், நாளுக்கொரு இயக்கமாக பல வண்ணக்கொடியில் ஒரு சமுதாயம் பஞ்சாய் பறந்து வருவதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசை கொள்ளும் நடுநிலையாளர்களின் முயற்சி ஒரு கானல் நீர்.
செயற்கையான இன்றைய வாழ்வில் இயற்கை ஆர்வலர்களுக்கு இயற்கையான வாழ்க்கை ஒரு கானல் நீர்.
மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி நேர்மையான ஒரு அரசியல் வாதியை தேர்ந்தெடுக்க நினைப்பது ஒரு கானல் நீர்.
மக்கள் நலனே தன் நலம் என சுயநலமின்றி உழைத்து சுற்றித்திரியும் அரசு அதிகாரிகளை காண நினைப்பது ஒரு கானல் நீர்.
ஊழல் இல்லா, இலஞ்சம் வாங்கா அரசுத்துறைகள் நாட்டில் எங்கேனும் இருக்கும் என மக்கள் நினைப்பது ஒரு கானல் நீர்.
மகாத்மா, காமராஜர், அண்ணாவின் பொற்கால ஆட்சிகளை கொண்டு வருவேன் என்று எவரேனும் சொல்லித்திரிந்து அதை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு அவர்களெல்லாம் ஒரு கானல் நீர்.
கடைசியாக, காலமெல்லாம் தன் குடும்ப நலனுக்காக எதேனும் அரபு நாட்டிலோ அல்லது வேறு ஏதேனும் வெள்ளைக்கார நாட்டிலோ தன்னைத்தானே நாடு கடத்தி தஞ்சம் அடைந்து வெளிச்சமின்றி உருகும் ஐஸ் கட்டி போல் இருப்பவனுக்கு குடும்பமும், சுற்றமும் சூழ இன்பமுடன் வாழ நினைக்கும் நம் ஊர் வாழ்க்கை ஒரு கானல் நீர்.
முட்டாள்களுக்கும், சிந்திக்க மறுக்கும் அறிவீனர்களுக்கும் இந்த உலகமே ஒரு கானல் நீர் தான்....
யா! அல்லாஹ்!! உண்மையான, ஹலாலான, அசெளகரியங்கள் இல்லா, போலித்தனமில்லா, அமைதியான நல்ல வாழ்க்கையை எஞ்சியுள்ள எங்களின் மீதி ஆயுட்காலங்களில் நசீபாக்குவாயாக.....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது

