"தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது" என்ற நபிமொழி இம்மானுடத்திற்கு ரத்தினச்சுருக்கமாக சொல்வது என்னவெனில் சிரமங்கள் ஆயிரம் கடந்து தன்னை ஈன்ற தாயிக்கு முறையான பணி விடை செய்து மறுமையில் நிரந்தர சந்தோசத்தைத்தரும் சுவர்க்கத்தை அடைந்து கொள் என்பதே.
இன்றைய அவசர கால, நவீன தொழில்நுட்ப உலகில் பல இடங்களில் தாய்மை பரிதவிப்பதையும், பந்துவிளையாடப்படுவதையும், அனாதையாய் கை விடப்படுவதையும், முதியோர் இல்லங்களில் முடங்கிக்கிடப்பதையும், சொத்தின் பங்கிற்காக பெத்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுவதையும், எதேனும் காரணத்திற்காக சித்ரவதை செய்யப்படுவதையும் நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வாயிலாகவும், சில சமயம் நேரடியாகவும் வேதனையோடு பார்த்து வருகிறோம்.
தாய்மையை போற்றி பணிவிடைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வு மின்னஞ்சல்கள் அணுதினமும் ஆயிரக்கணக்கில் முகநூலிலும்(ஃபேஸ் புக்) இன்ன பிற சமூக தளங்களிலும் அன்றாடம் வலம் வருவதை நாம் பார்த்தும், படித்தும் வருகிறோம். அப்படி எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை நம் ஊர் வழக்கு மொழி சேர்த்து கொஞ்சம் விரிவாக்கி இங்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊர்லெ ஒரு நடுத்தரமான குடும்பம். அரசுப்பணியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று மாச செலவுக்கு யாரிடமும் கடன் கேட்டு நின்றுவிடாமல் பென்சன் வாங்கி அதில் தன் வாழ்வாதாரத்தை வீட்டிலிருந்து கழிக்கும் வயசான வாப்பாவும், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் ஓடியாடி இன்று அது ஒவ்வொன்றும் அடிக்கடி வருந்தாமல் தடங்கலுக்கு ஆளாகும் உம்மாவும், உள்ளூரிலேயே சிறிய மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் மூத்த காக்காவும், மனதில் மட்டும் அம்பானி வெளியில் நாலு காசு சம்பாதிக்க திரானி இல்லாத மச்சானுடன் எல்லாக்கஷ்டங்களையும் மூடி மறைத்து வெளியில் பொய்ப்புன்முறுவல் பூத்து வாழ்ந்து வரும் ஒரு ராத்தா மற்றும் அவளின் பிள்ளைகள், பிறகு சமீபத்தில் கல்லூரியில் அங்குமிங்கும் கடனுடன் வாங்கி லட்சங்கள் சில செலவு செய்து எம்.பி.ஏ.வில் சேர்ந்து படித்து வரும் தம்பியும், தங்கச்சி பெரிம்சாகி (பெரியவளாகி) சில மாதங்களே ஆகி மதரஸாவிற்கு சென்று வரும் அவளுக்கு எவன் மாப்பிள்ளையாக அமையப்போகிறானோ? அவன் வீட்டிலுள்ளவர்கள் என்னஎன்னவெல்லாம் கேட்கப்போகிறார்களோ? வீடு வாசல் கட்ட என்ன செய்வது? என அவளுக்காக கதிகலங்கி நிற்கும் ஒட்டு மொத்தக்குடும்பமும், முதுகலை நன்கு படித்து முதல் மதிப்பெண்களில் தேறி நல்ல கை நிறைய சம்பாத்தியத்திற்காக எதேனும் ஒரு எம்.என்.சி. (மல்டி நேஷனல் கம்பெனி) நிறுவனத்தில் பணிக்கிடைக்காதா? என தனக்கொரு வேலை தேடி அலைந்து திரியும் நம்மூர் ஒரு இளைஞனும் அவன் நேர்முகத்தேர்விற்கு சென்று வந்த பின் அவன் தாயின் பாசமும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பிணைந்திருக்கும் உள்ளம் நெகிழும் அந்த பாசப்போராட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சம்பவமே இது.
அவனுக்கும் எதிர்பார்த்த படி பன்னாட்டு தொடர்புடன் செயல்படக்கூடிய ஒரு நல்ல நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது அருகிலுள்ள திருச்சியிலிருந்து. அவனும் அதிகாலையே எழுந்து இறைவனைத்தொழுது வணங்கி நேர்முகத்தேர்வுக்குச்செல்ல கொஞ்சம் உணவு மட்டுமே உட்கொண்டு விட்டு கடமையில் கண்ணாக இருந்தான். வீட்டினர் எல்லோரிடமும் இறைவனைப்பிரார்த்தித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற து'ஆச்செய்யும் படி கேட்டுக்கொண்டு செல்ல வேண்டிய பேருந்தைப்பிடிக்க வீட்டை விட்டு சீக்கிரமே வெளியேறினான் அல்லாவுன்தவக்கல்த்து என்ற தாயின் து'ஆவுடன்.
செல்ல வேண்டிய பஸ்ஸில் ஏறி அமர்ந்து பல கனவுகளுடனும் கொஞ்சம் பயத்துடனும் அவன் பயணப்பட்ட அந்த இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஓடியதே தெரியாமல் போனது அவனுக்கு. திருச்சியும் வந்தடைந்தது. பேருந்து நிலையத்திலிருந்து அவன் செல்ல வேண்டிய நிறுவனத்திற்கு ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். அந்த நிறுவனமும் வந்து விட்டது. உயர்ந்த கட்டிடம். அங்கு இருப்பவர்கள் எல்லாமே கோர்ட்டும், சூட்டும் போட்டிருந்தனர். வெளிநாட்டுக்கார்கள் வாசலில் அணிவகுத்து நின்றன.
வாயிற்காவலாளியிடம் நேர்முக அழைப்புக்கு வந்த கடிதத்தை காட்டி மின் தூக்கி (லிஃப்ட்) மூலம் செல்ல வேண்டிய ஐந்தாவது மாடி சென்றடைந்தான். அவனுக்காக காத்திருந்து உள்ளே அழைத்துச்செல்ல ஒருவனும் வெளியே காத்திருந்தான். உள்ளே சென்றதும் நிறுவனத்தின் மேலாளருக்கு இவனுடைய கல்விச்சான்றிதழ்கள், விளையாட்டுச்சான்றிதழ்கள், போட்டிகளில் பரிசு பெற்றச்சான்றிதழ்கள், இன்னும் பிற நற்சான்றிதழ்கள் எல்லாவற்றையும் நன்கு நோட்டமிட்டபின் அடக்கமும், அமைதியுடன் கூடிய உறுதியான பதிலும், அவன் கண்ணில் தென்பட்ட தெளிவும் ரொம்பவே பிடித்துப்போய் அதிக குடைச்சல் கேள்விகள் இல்லாமல் சட்டென்று சென்னைக்கு அப்பாய்ண்ட்மென்ட் லட்டரும் அருகிலிருந்த காரியதரிசிக்கு உடனே அடிக்கச்சொல்லி கட்டளையிட்டார். அவனுக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை. மிக்க நன்றிகளை மேலாளருக்கு தெரிவித்து விட்டு சந்தோசத்துடன் அப்பாய்ண்ட்மென்ட் லட்டரையும் கையோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றான். இதர படிகள் போக சம்பளம் 75,000 ரூபாய் என நிர்ணயிக்கப்படிருந்தது.
ஊருக்குத்திரும்பளானான். பேருந்து நிலையமும் வந்திறங்கினான். வழியில் மழைத்தூரலால் அவன் கைபேசிக்குள் ஒரு சொட்டு மழைத்தண்ணீர் புகுந்துவிட்டது. பிறகு அலைபேசியும் செயலிழந்து விட்டது. ஊருக்கு அவன் சந்தோசத்தை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது. சரி ஊருக்குப்போய் வீட்டினர்களுக்குத்தெரிவித்துக்கொள்ளலாம் என சுமார் பகல் 12 மணியளவில் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.
பஸ்ஸும் புறப்பட்டது சந்தோசக்காற்று இவனை சன்னலோரம் நன்கு தாலாட்டிக்கொண்டே வந்தது. பாதி பசி மீதி சந்தோசத்தில் அவன் நன்கு உறங்கிப்போனான்.
இரண்டு மூன்று பஸ்கள் ஏறி ஊருக்கு சுமார் 2 1/2 மணியளவில் வந்தடைந்தான். இந்த பகல் நேரத்தில் உண்ட உறக்கத்தில் ஊரில் அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் இருந்தது மக்கள் நடமாட்டம் . எனவே தேவையில்லாமல் ஏன் ஆட்டோவிற்கு செலவு செய்ய வேண்டும் என வீட்டிற்கு நடக்கலானான். வழியில் அவனைக்கண்ட தெரிந்த முகங்கள் "என்னப்பா இந்த நேரத்துலெ பேண்ட் போட்டுக்கிட்டு போறா எங்கேர்ந்து வர்ரா?" என்று கேட்காமல் இல்லை. அவன் சென்று வந்த விசயத்தை மறைத்தே வைத்து சில சாக்குபோக்கு சொல்லி சமாளித்தான். இல்லாட்டி ஊர் கண்ணு,முக்கெல்லாம் வைத்து அவனுக்கு அமெரிக்கத்தூதரகத்திலேயே வேலை கிடைத்து விட்டது போலும், சுமார் ரெண்டு, மூனு லச்சர்வா சம்பளம் கிடைக்கும் என்றும் மிகைப்படுத்தி சொல்லித்திரியும்.
வீடு வந்திறங்கினான். அவனுக்காக சிரமங்கள் பலவற்றில் சிக்கித்தவிக்கும் அவன் குடும்பம் ஆவலாகவே காத்திருந்தது. சலாம் சொல்லி அவனை ஒட்டு மொத்தக்குடும்பமும் வீட்டினுள் வரவேற்றது.
முதலில் வாப்பா கேட்டார்கள் "என்னப்பா இண்டர்வியு எப்படி இருந்திச்சி? ஈசியா இருந்துச்சா? அப்பாய்ண்ட்மென் லட்டர் தந்தாங்களா? பர்மணன்ட் வேலை தானே?".
ராத்தா கேட்டாள் "வேலை எங்கேயாம்? சம்பளம் எவ்வளவு தர்ரேண்டு சொன்னானுவோ?".
தங்கச்சி ஆசையோடு கேட்டாள் "காக்கா, எனக்கு மொத சம்பளத்துலெ துபாய் புர்கா ஒன்னும், காதுக்கு தோடும் வாங்கித்தரனும் ஆமாம்".
தம்பி ஏக்கத்துடன் கேட்டான் "காக்கா, எனக்கு மொத சம்பளத்துலெ சாம்சங் கேலக்ஸி3 ஒன்னு வாங்கித்தா என்னா?".
இறுதியாக வேர்வையுடன் அடுப்படியிலிருந்து வெளியேறிய உம்மா வந்து கவலையோடு கேட்டிச்சி "என் கண்ணான வாப்பா, வ்ளோவ் நேரம்சென்டு வர்ரியேம்மா, எதாச்சும் சாப்ட்டியாம்மா, சட்டுண்டு கையெக்கழிவிட்டு வாம்மா, சாப்பாடு ஆறுது".
இது தான், இது தாங்க தாய்ப்பாசம்ங்கிறது....
நீ நேர்முகத்தேர்வில் தோல்வி அடைந்து ஒன்னுமே இல்லாமல் வந்தாலும் சரி, ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தோடு வந்தாலும் சரி அது பற்றி கவலையும் இல்லை சந்தோசமும் இல்லை. மொதல்ல நம் வயிற்றை நிரப்ப வேண்டும் என்று எண்ணும் மனமே, நம் துயரில் என்றும் துவண்டு போகும் மனமே அந்த பெத்த மனசுங்க. இதுக்கு உலகில் ஈடு, இணை எதுவும் இல்லைங்க......
இது போன்ற நிறைய உள்ளம் நெகிழும் சம்பவங்கள் தாய்,தந்தையரை பெற்றிருந்த, பெற்றிருக்கும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பல சமயம் நிச்சயம் நிகழாமல் இருந்திருக்காது. ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு விரிவாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
எனவே காலம் சென்ற நம் தாய்மார்களுக்காக அவர்களின் ஆஹிர நற்பதவிக்காக து'ஆச்செய்வோம். வாழ்ந்து வரும் தாய், தந்தையரை போற்றி அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை நிரப்பமாக செய்வோம். இறையருளை நிரம்பப்பெறுவோம் இன்ஷா அல்லாஹ்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது


