வழக்காடல் அல்ல இது
வலக்கரம் பிடித்து
வாழ வந்தவளோடு
உவகையான ஓர்
ஊடலாடல்
மனைவி சொல்லே மந்திரம்
மனைவி இல்லையேல்
மனிதா நீ எந்திரம்
எல்லாம் சரி
என் இனியவளே
இல்லம் விருத்தியாக்கும்
இன்முகத்தவளே !
செல்வது தெரியும்
அன்பே - நான்
மீள்வதும் தெரியும்...
அலுவலில் நான் படும்
அவஸ்தைகள் தெரியுமா
கொம்பு முளைத்த
முதலாளியோடு -என்
ஜல்லிக்கட்டுப் புரியுமா
மூச்சுக்கு மூனுதரம்
முறைவைத்து அழைப்பவன்
முதலாளி ஆனதனால் - தலை
முட்டி முட்டி வலிக்குதடி
காஃபி கலந்து அதில்
காதல் மலாய் மிதக்க
கண்களைப் பார்த்துக்கொண்டே
கைகளில் தருபவளே
கணவன் கஷ்டமெல்லாம்
கனவிலும் காண்பதரிது
கண்களுக்கு மேல் சற்று
கைவைத்து நீவி விடு
காகிதங்கள் கிலோக்கணக்கில்
கணக்கிட்டுத் தரவேண்டும்
கையெழுத்துப் போட மட்டும்
கற்றிருப்பான் முதலாளி
கணக்குப் பண்ணத் தெரியும்
கணக்கைப் பண்ணத் தெரியாது
கணக்குப் பிள்ளை கர்மத்தையும் - உன்
கணவன் நானே பார்க்கவேண்டும்
ஆங்கிலத் தட்டச்சுவில்
ஆயிரம் பிழை இருக்கும்
ஒப்பனை செய்வதன்றி
ஒன்றுமறியாக் காரியதரிசி
பூரிக்குக் கிழங்கிலிட
பூண்டுரித்துத் தராததால்
என்ன கிழிச்சீங்க என்று
ஏளனம் செய்பவளே
சுமாராகச் சமைத்துவைத்து
சுடாமல் பரிமாறி
சும்மாத் தொணதொணக்கும்
சுந்தர முகத்தவளே
ஒருநாள் பொழுதேனும்
ஓய்வெனக்குத் தரவேண்டும்
அலுவலகம் வந்திருந்து - என்
அவஸ்தைக ளறியவேண்டும்.
-சபீர்


