அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகில் பெரிய டவர் கிரேன் வசதிகளெல்லாம் இல்லாத, நவீன தொலைத்தொடர்புகளெல்லாம் அந்தளவுக்கு வளர்ந்திராத, சந்திர மண்டலத்திற்கு மனிதன் சென்று கால் பதிப்பதற்கு முன்பாகவே கிட்டதட்ட சுமார் ஒரு நூறு வருடங்களுக்கு முன்பாக (1885ம் ஆண்டு என்று நினைக்கிறேன்) நாட்டின் போர்க்கைதிகளை வைத்து பிரான்ஸில் இன்னொரு நாட்டு மன்னனால் அன்பளிப்பாக வெறும் இரும்புத்தூண்களால் போல்ட், நெட்களை வைத்து முறுக்கிக்கட்டி அர்பணிக்கப்பட்டு இன்றும் உலக அதிசயமாய் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபில் டவரை பார்த்து இன்று ஆச்சர்யப்பட்டு பிரம்மித்து நிற்கும் நாம் 1400 வருடங்களுக்கு முன் இது போன்ற பெண் வீட்டினரிடம் வரதட்சிணை கேட்டு வாங்கி உலக மக்கள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடக்கூடாது என்று அன்றே நன்குணர்ந்து அதற்கு நேர்மாறாக பெண்ணிடமிருந்து சகல இன்பங்களையும் அனுபவிக்கும் ஆண் வர்க்கம் தான் பெண்ணுக்குரிய 'மஹர்' என்று சொல்லப்படும் தன்னால் இயன்ற நிர்ணயத்தொகையை செலுத்தி அவளை மணப்பெண்ணாக, வாழ்க்கைத்துணையாக அடைய வேண்டும் என்று அன்றே போர்ப்பிரகடணம் போல் பிரகடணப்படுத்தி எல்லா மக்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி தாமும் செம்மையுடன் பின்பற்றி செல்ல காரணமாக இருந்த புனித இஸ்லாமும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
அதிரைநிருபர் வாசக வட்டத்திற்கு,
"மாப்ளே வரதட்சனை கொடுமைடா" பதிவின் கருத்துப் பெட்டியில் பதியப்பட்ட கருத்துக்களூடே சில கேள்விகள் வைக்கப்பட்டது அதற்கென எழுதிய பதிலுரையை தனிப் பதிவாக இங்கே உங்களின் கவணத்திற்கு.
உலகில் பெரிய டவர் கிரேன் வசதிகளெல்லாம் இல்லாத, நவீன தொலைத்தொடர்புகளெல்லாம் அந்தளவுக்கு வளர்ந்திராத, சந்திர மண்டலத்திற்கு மனிதன் சென்று கால் பதிப்பதற்கு முன்பாகவே கிட்டதட்ட சுமார் ஒரு நூறு வருடங்களுக்கு முன்பாக (1885ம் ஆண்டு என்று நினைக்கிறேன்) நாட்டின் போர்க்கைதிகளை வைத்து பிரான்ஸில் இன்னொரு நாட்டு மன்னனால் அன்பளிப்பாக வெறும் இரும்புத்தூண்களால் போல்ட், நெட்களை வைத்து முறுக்கிக்கட்டி அர்பணிக்கப்பட்டு இன்றும் உலக அதிசயமாய் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபில் டவரை பார்த்து இன்று ஆச்சர்யப்பட்டு பிரம்மித்து நிற்கும் நாம் 1400 வருடங்களுக்கு முன் இது போன்ற பெண் வீட்டினரிடம் வரதட்சிணை கேட்டு வாங்கி உலக மக்கள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடக்கூடாது என்று அன்றே நன்குணர்ந்து அதற்கு நேர்மாறாக பெண்ணிடமிருந்து சகல இன்பங்களையும் அனுபவிக்கும் ஆண் வர்க்கம் தான் பெண்ணுக்குரிய 'மஹர்' என்று சொல்லப்படும் தன்னால் இயன்ற நிர்ணயத்தொகையை செலுத்தி அவளை மணப்பெண்ணாக, வாழ்க்கைத்துணையாக அடைய வேண்டும் என்று அன்றே போர்ப்பிரகடணம் போல் பிரகடணப்படுத்தி எல்லா மக்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி தாமும் செம்மையுடன் பின்பற்றி செல்ல காரணமாக இருந்த புனித இஸ்லாமும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
இஸ்லாமால் 1400 வருடங்களுக்கு முன்பே நேராக, சீராக போடப்பட்ட தலைக்கவசம் நமது ஊர்களில் மட்டும் தலைகீழாக ஆக்கப்பட்டு நம்மக்களை தத்தளிக்க வைத்தது யாரோ? எதனாலோ? உண்மைக்காரணம் உணர முடியவில்லை.
வரதட்சிணை என்றால் என்ன?
விலை மாதரிடம் அவள் கேட்கும் பணம் அல்லது அதை விட கூடுதலாக கொடுத்து இன்பத்தை பெறும் மனிதன் அனுமதிக்கப்பட்ட முறையான உறவின் மூலம் இன்பமடைய பணம், பொன், பொருள், வீடுகளை பெண் வீட்டினரிடம் கேட்டு நிற்பது வரதட்சிணையாகும்.
வரதட்சிணையால் வரும் துன்பங்கள் யாவை?
இப்படி கண் மூடி லட்சங்களை பெண் வீட்டினரிடம் கேட்டு துன்புறுத்தி நிற்பதால் பெண்ணை பெற்ற தந்தையும், அவளின் உடன் பிறந்த சகோதரனும் தன் ஆசாபாசங்களை எல்லாம் துறந்து உள்ளத்தை கல்லாக்கி அதனால் பல நோய்நொடிகளையும் பெற்று அயல் தேசங்களில் தன் பொன்னான வாழ்நாட்களை இப்படி வரதட்சிணை கேட்கும் பொறுக்கிகளுக்காக மெழுகுவர்த்தி போல் தன் மேனியை உருக்கி நிற்பதே துன்பங்களில் எல்லாம் தலையாய துன்பமாகும்.
அதை திருத்த வழி என்ன?
பெண்களுக்கு தீன், துனியாவின் முறையான கல்வியை புகட்டி மனதில் ஒரு பக்குவத்தையும், பொறுமையையும் பழகச்செய்து இயன்றால் வீட்டிலிருந்தே ஏதேனும் கைத்தொழில்/பணி மூலம் அவர்கள் பணம் காசுகள் சம்பாதிக்க வேண்டிய எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருடங்கள் சில உருண்டோடினாலும் சரி நயாப்பைசா தரமாட்டேன், வீடும் கிடையாது என்று மனதில் ஒரு புரட்சிகரமான வைராக்கிய உணர்வை ஏற்படுத்தி, எதற்கும் துவண்டு விடாமல் தொடர்ந்து இவர்களை இந்த நிலையில் தொய்வின்றி நிற்கச்செய்து விட்டால் பிறகு வரதட்சிணைக்காக அலைபாயும் ஆண் வர்க்கம் அல்லோலப்பட்டு ஒரு நல்ல வழிக்கு வரும் அன்றே மார்க்கம் விளங்கி செழிக்கும்.
ஊரில் ஒரு இணைய தளம் யார் நிர்வகிக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியா வண்ணம் கடைசி வரை கட்டுப்பாட்டில் இருக்கும் படி உருவாக்கப்பட வேண்டும். அது உள்ளூரில், வெளியூரில், வெளிநாட்டில் இருக்கும் அனைவர்களுக்கும் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும். அதில் வரதட்சிணை வாங்குபவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என இருபிரிவாக பிரித்து அவர்களை இயன்றால் தேவையான தகவல்களை ரகசியமாக திரட்டி வீட்டு விலாசம், தெரு, குடும்பப்பெயர்களையும் அதற்கு ஒரு படி மேலாக புகைப்படத்துடன் வெளியிட்டு இக்கொடுமையை செய்பவர்களை கதிகலங்கச்செய்ய வைக்க வேண்டும். அதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நானாக இருந்தாலும் என் வீட்டினர்களாக இருந்தாலும் இதைக்கண்டு, பிறர் கூற கேள்விப்பட்டு வெட்கி தலைகுனிந்து ரோட்டில் நடமாட வெட்கப்பட வேண்டும். இவை எல்லாம் அவசியம் புனித மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும். எல்லாம் என் உள்ளத்தில் தோன்றிய புரட்சிகர கருத்துக்கள் இது மார்க்க அறிவுடன் நம்மூருக்கு சாத்தியப்படுமா? என்பதே பதில் தெரியாத கேள்வி.
நம்ம ஊரைப்பொருத்தமட்டில் வரதட்சிணையேதும் வாங்காமால் தன் சொந்த வீட்டில் அல்லது கட்டிய வீட்டில் மணம் முடித்தவளுடன் இல்லறம் நடத்தும் ஆண்மகனைத்தவிர வேறு யாரும் இதன் கொடுமைகளைப்பற்றி எழுத தகுதியற்றவராகி விடுகிறார். இந்த பிரச்சினை என்று வந்தாலே மார்க்க ஆலிம்கள் முதல் சாதாரன ஆடவன் வரை வாயடைத்து நிற்க வேண்டியுள்ளது பெண் வீட்டை விட்டு வெளியேற இயலாதவர்களாய்.
ஒரு ஆண்மகன் நன்கு படித்து பட்டங்கள் பல பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முயல்வது அவன் எதிர்காலத்தில் இன்புற்றிருக்கவேயன்றி வேண்டாத வரதட்சிணை தொகையை பெண் வீட்டினரிடம் உயர்த்திக்கேட்பதற்கல்ல என்று நம் ஊர் உணர வேண்டும். எவ்வளவு தான் இது பற்றி சிறப்புடன் எத்தனையோ பேர் அன்றாடம் எழுதி வந்தாலும் எல்லாம் இறுதியில் செவிடன் காதில் ஊதிய சங்காக அல்லவா ஆகிவிடுகிறது?
போதிய மார்க்க அறிவின்றி இதை வாங்கி இருந்தாலும், கொடுத்திருந்தாலும் அதன் வேதனைகளை அன்றாடம் அனுபவித்து மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேரால், குடும்பத்தால் இதை விட சிறப்பாக இந்த வரதட்சிணையால் வரும் துன்பங்களையும், துயரங்களையும் தெள்ளத்தெளிவாக இன்னும் சிறப்பாக விளக்க முடியும். முயல்வார்களா? இல்லை அப்படியே மெல்லமெல்ல கண்மூடி மண்மூடி மறைந்து போவார்களா?
மாற்ற வழி என்ன?
"வாப்பா/காக்கா, நான் கடைசி வரை முதிர்கன்னியாக இருந்து மவுத்தாப்போனாலும் பரவாயில்லை தயவு செய்து வரதட்சிணை கொடுத்து எனக்காக வீடுவாசல் சிரமப்பட்டு கட்டி எனக்கு மணம் முடித்துக்கொடுக்க வேண்டாம். அல்லாஹ் நாட்டத்தில் எனக்கு ஒரு நல்ல துணை கொஞ்சம் காலங்கள் கழிந்தாலும் பரவாயில்லை நம்மைத்தேடி வரும் என்ற தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும், வைராக்கியத்தையும் நம் வீட்டு பெண்களுக்கு முறையே ஊட்டி விட்டால் பெரும் மாற்றங்கள் உருவாகி நம் ஊரில் பாழாய்ப்போன பழக்க,வழக்கங்கள் ஒழிந்து வாழ்க்கை ஒளிர்ந்து மறுமலர்ச்சி வீடு தோறும் மலர ஆரம்பித்து விடும் இன்ஷா அல்லாஹ்".
வரதட்சிணை நம்மூரில் வீடு தோறும் புரையோடிப்போன புற்று நோய் போல் பரவிக்கிடப்பதால் இது சமாச்சாரமாக வெட்கப்பட்டு, தலைகுனிந்து தான் எழுத வேண்டியுள்ளது.
இந்த நல்ல மாற்றங்கள் நம் கண் முன்னே வருமா? இல்லை நாம் மறைந்த பின்னே வருமா? அல்லாஹ் நன்கறியக்கூடியவன்.
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.