அல்லாஹ்வின் திருப்பெயரால்...!
முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்த்தோம் அதன் தொடர்ச்சி இந்த வாரமும் உணர்ச்சிப்பூர்வமாக மற்ற சஹாபாக்களையும் சுட்டிக் காட்டி தொடர்கிறது.
இஸ்லாத்திற்கு நபி(ஸல்) அவர்கள் பொதுவில் அழைப்பு விடுத்த தருணத்தில் நபிகளாரின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் மற்றும் பாசமிகு தோழர் அபூபக்கர்(ரலி) அவர்கள் தவிர பின்னர் தொடர்ந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களில் முதன்மையானவர்கள் அன்றைய சமூகத்தினரால் ஒடுக்கப்பட்ட, பிறப்பால் ஊனமுற்ற, அடிமைத் தனத்தினால் அள்ளல்பட்ட மக்களே. அவர்களில் முன்னணியில் இருந்தவர்கள், பிலால்(ரலி) யாசிர்(ரலி), சுமையா(ரலி) அம்மார்(ரலி), சுஹைப்(ரலி), மிக்தாத்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) போன்றோர்களே. இவர்களே தூய இஸ்லாத்தினை ஏற்றார்கள். இதுபோன்ற அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு சமூக அந்தஸ்தை அவர்களுக்கு பெற்றுத் தந்த இஸ்லாத்திற்காக உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை நிரூபித்தும் காட்டிய அவர்களின் உறுதிக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமில்லை சென்று சொன்னால் அது மிகையில்லை.
அன்றைய சமூகத்தில் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் பலர் இஸ்லாத்தை ஏற்பதற்கு சற்றே தயக்கம் காட்டினார்கள், காரணம் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். நம்முடைய அடிமையாக இருந்தவர்களுடன் ஒன்றாக நாம் இருப்பதா? என்று வரட்டு கவுரம் அவர்களை தடுத்தது உண்மை. ஆனால், இதுபோன்ற சமூக அந்தஸ்து எனும் கர்வத்தில் இருந்தவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்ற பிறகு அவர்களிடம் இருந்த கருப்பு வெள்ளை, முதலாளி, தொழிலாளி, ஆண்டான், அடிமை, பணக்காரன், ஏழை, என்ற ஏற்றத் தழ்வுகளை தூக்கி எறிந்தார்கள். இஸ்லாத்தில் இணைந்த எல்லோரும் சரிசமமானவர்கள் என்ற மனநிலைக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களை வார்த்தெடுத்தார்கள்.
கடந்த காலங்களில் தூய இஸ்லாத்தினை ஏற்ற நம்முடைய மூதாதையர்களில் பலர் இந்த சமூகத்தில் பல்வேறு தரங்களில் உயர்ந்தவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலிலோ பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், தெரு, குடும்பம் என்ற பாகுபாடுகளும் பிரிவினையை தூண்டும் உணர்வுகளும் இன்னும் உள்ளது. இது இஸ்லாமிய வழிமுறையா? என்பதே பின்வரும் சம்பவங்களில் நாம் பெரும் படிப்பினைகளாகும்.
சமூகத்தில் ஏற்றத் தழ்வினால் பாதிக்கப்பட்டு, அன்றைய குரைஷிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தியாகச் செம்மல் பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களை தன்னோடு வைத்துக் கொண்டதோடு அல்லாமல், தன்னுடைய பொருளாதாரத்தை நிர்வகிப்பவராகவும் வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுச் சம்பவங்களைப் படிக்கும் போது உண்மையில் மெய் சிலிர்க்கிறது.
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு முறை பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் செலவீணங்கள் பற்றி கேட்கப்படுகிறது. அப்போது பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள், “நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நான் தான் அவர்களுக்கு செலவீணங்களை நிர்வகித்து சரி செய்து சமப்படுத்திக் கொடுப்பவனாக இருந்தேன். யாராவது இஸ்லாத்திற்கு வருவார்கள், அவர்களுக்கு துணி உணவு கொடுக்க வேண்டும், அந்த சமையத்தில் காசு இல்லை என்றால், நபி(ஸல்) அவர்களுக்கு நான் வெளியில் அலைந்து கடன் வாங்கி கொடுப்பேன், பின்னர் ஃபைத்துல் மாலுக்கு காசு வரும், நபி(ஸல்) அந்த காசை வாங்கி கடனை அடைத்து விடுவேன். இப்படி ஆரம்ப கஷ்ட காலம் ஓடியது” என்று கூறினார்கள்.
இப்படி கடன் எடுத்து அலைவதை பார்த்த ஒரு காஃபிர், நம் உத்தம நபியின் உன்னத பிலால்(ரலி) அவர்களிடம் “ஏன் இப்படி கடன் கேட்டு அலைகிறீர் நான் உங்களுக்கு கடன் தருகிறேன்” என்று சொல்லி கடன் கொடுத்தான். கடன் கொடுத்த அந்த காஃபிர், சில காலம் கழித்து பிலால்(ரலி) அவர்கள் சந்தித்து “இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது, கொடுத்த கடனை திருப்பி தந்துவிடு, இல்லாவிட்டால் நீ எப்படி இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு இருந்தாயோ அதே நிலைக்கு உன்னை ஆளாக்கி விடுவேன்” என்று மிரட்டி விட்டுப் போனான்.
என்னதான் பெருளாதார கஷ்டங்கள், பசி பட்டினி இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்று சுதந்திர மனிதனாக வாழ்ந்து வரும் பிலால்(ரலி) அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள். நபி(ஸல்) அவர்களிடம் சென்று “நான் உங்களுக்காக கடன் எடுத்தேன், கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் என்னை அந்த காஃபிர் மீண்டும் அடிமையாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறான், நான் எனக்காகவா கடன் எடுத்தேன்? உங்களுக்காக, இஸ்லாத்திற்காகத்தானே கடன் எடுத்தேன். அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அப்துற்றஹ்மான் இப்னு அஃவ்ப்(ரலி) போன்ற செல்வந்தர்களிடம் காசு இருக்கிறது அவர்களிடம் கேட்டு அடைத்து விடுங்கள் யா ரசூலுல்லாஹ்” என்று எந்தச் சூழலிலும் சொல்லவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் மேல் உள்ள அன்பால் பிலால்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “உங்களிடமும் பணமில்லை, என்னிடமும் பணமில்லை, அந்த காஃபிரிடம் வாங்கிய கடனை நான் திருப்பி செலுத்த வேண்டும். நான் வேறு ஊருக்கு சென்று பணம் சம்பாதித்து விட்டு வருகிறேன் யா ரசூலுல்லாஹ் எனக்கு அனுமதி தாருங்கள்” என்று அனுமதி பெற்று மதினாவை விட்டு கிளம்பிச் செல்லத் தயாரானார் அந்த உளத்தூய்மையின் உத்தமத் தோழர் பிலால்(ரலி) அவர்கள்.
மறுநாள் வெளியூருக்கு சென்று கொண்டிருந்த பிலால்(ரலி) அவர்களை வழியில் நிறுத்தி ஒரு தோழர் “உங்களை நபி(ஸல்) அவர்கள் வரச் சொன்னார்கள்” என்று கூறினார். பிலால் (ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே பதறிப்போன பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தம்முடைய ஆருயிர் தோழர் பிலால் அவர்களிடம் சொன்னார்கள் “எனதருமை பிலாலே வெளியில் கட்டப்பட்டுள்ள ஒட்டகங்கள் அனைத்தும் உங்களுக்கு, எனக்கு ஒரு மன்னன் நேற்று இரவு பரிசாக தந்தார், நீங்கள் அதனை எடுத்து உங்கள் கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விடுங்கள், என்னை இதிலிருந்து விடுவியுங்கள் பிலாலே” என்று கூறியதோடு அல்லாமல் பிலால்(ரலி) அவர்கள் அத்தனை கடன்களையும் அடைக்கும் வரை தன் வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலே மூன்று நாட்கள் நபி(ஸல்) இருந்தார்கள் என்று நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். இப்படி ஒரு தலைவரை போன்று வரலாற்றில் வேறு எந்த ஒரு இடத்திலும் காண இயலாது.
ஒரே ஒரு அடிமை தானே போய்விட்டார் என்று இருக்கவில்லை நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள். அல்லாஹ்வுடைய ஏற்பாடாக ஒரு மன்னனிடமிருந்து அன்பளிப்பு வந்தது. உடனே பிலால்(ரலி) அவர்களை கூப்பிட விட்டார்கள். “என்னுடைய தோழர் பிலால் எனக்கு வேண்டும். இஸ்லாத்தை ஏற்றதினால் அடிபட்டு கஷ்டப்பட்டு ஈமானில் உறுதியுள்ள என் சகோதரர் பிலால் எனக்கு வேண்டும். பசியோடும் பட்டினியோடும் என்னோடு வாழ்ந்த என்னுடைய உடன் பிறவாத சொந்தம் பிலால் எனக்கு வேண்டும். சுடுமண்ணில் போட்டு துன்புறுத்தியும் ஈமானை இழக்காத இறையச்சமுடைய என்னுடைய பிலால் எனக்கு வேண்டும். மக்களை தொழுகைக்கு அழைக்க பாங்கு, இகாமத்துச் சொல்ல என்னுடைய பிலால் எனக்கு வேண்டும். அந்த சொர்கத்துவாசி தான் மரணிக்கு வரை தன்னோடு இருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் நிச்சயம் நபி(ஸல்) அவர்களுக்கு இருந்திருக்கவே, பிலால்(ரலி) அவர்களை தன்னைவிட்டு இறுதிவரை பிரியவிடவில்லை.
ஒரு முறை ஃபஜர் தொழுகைக்கு நபி(ஸல்) அவர்கள் மதினா பள்ளிக்கு நேரத்தோடு வந்தார்கள், பாங்கு சொல்லி விட்டு முதலில் அங்கிருந்தவர் பிலால்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்கள் தன்னருகில் அழைத்தார்கள். பிலால்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களை நோக்கி “எனக்கு முன்பாக நீங்கள் எப்படி சொர்கத்துக்கு போனீர்கள்?” என்று கேட்டு விட்டு “எனக்கு எப்போது சொர்க்கம் எடுத்துக் காட்டப்பட்டால் அப்போதெல்லாம் உங்கள் காலடி ஓசை எனக்கு கேட்கும்” என்று சொன்னார்கள்.
இவ்வுலகில் எந்த ஒரு சஹாபியை பார்த்து சொல்லாத ஒரு வார்த்தையை நம்முடைய தலைவர் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களை பார்த்துக் சொன்னார்கள். இந்த வார்த்தைகளிலேயே ஒரு காலத்தில் சமூகத்தின் அடிமைத்தனத்தில் இருந்த பிலால்(ரலி) அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்று நல்லமல்கள் செய்த காரணத்திற்காக எவ்வளவு பெரிய அந்தஸ்த்தை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கொடுத்துள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!. இந்த பாக்கியம், இந்த அந்தஸ்து வேறு யாருக்கும் நபி(ஸல்) கொடுக்கவில்லை. உங்களில் மிக கண்ணியமானவர்கள் அல்லாஹ்வின் மீது தக்வா உள்ளவர்கள் தான் என்ற குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப பிலால்(ரலி) அவர்கள் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததினால்தான் அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மூலம் கண்ணியப்படுத்தினான்.
இறுதியாக, மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் தன் தலையைக் குனிந்தவர்களாக மக்காவுக்குள் ஒரு லட்சம் சஹாபாக்களுடன் நுழைகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள், “யாரெல்லாம் தங்கள் வீடுகளில் உள்ளார்களோ, கஃபாவில் உள்ளார்களோ, அபுசுஃப்யான்(ரலி) அவர்கள் வீட்டில் உள்ளார்களோ அவர்களுக்கு பாதுகாப்பு, மற்ற வெளியில் உள்ள யாருக்கும் பாதுகப்பு இல்லை.” இதனை கேட்ட மக்கா காஃபிர்கள் அச்சத்தில் பீதியடைந்தார்கள். அங்கு நபி(ஸல்) அவர்களோடு இருந்த அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), மன்னர்கள், செல்வந்தர்கள், போர் படைத்தளபதிகள், ஜனாதிபதிகள், தூதுவர்கள் என்று இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு வலுசேர்க்க மிகத் தகுதியானவர்கள் எல்லாம் இருந்தார்கள்.
கஃபாவுடைய சாவியை அதன் பொறுப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நபி(ஸல்) மேல் சொன்ன யாரையும் அழைக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அடிமையாக இருந்த பிலால்(ரலி) அவர்களையும் ஓர் அடிமையின் மகனான உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்து கஃபாவின் உள்ளே நுழைந்து கதவை மூடிவிடுகிறார்கள். அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), பெரும் செல்வந்தர்கள், போர் படைத்தளபதிகள், தூதுவர்கள் இவர்கள் யாரையும் நபி(ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. சுப்ஹானல்லாஹ்..! இதுபோன்ற கண்ணியம் வேறு எந்த சஹாபிகளுக்கும் கிடைக்கவில்லை. அடிமைகளாக இருந்து விடுபட்ட பிலால்(ரலி) உஸாமா(ரலி) ஆகிய இருவரையும் நபி(ஸல்) அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.
மக்கா வெற்றியை அவர்கள் இருவரையும் கண்ணியப்படுத்தி கவுரவப்படுத்தி அதில் சந்தோசம் கண்டார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைத்து சஹாபாக்களையும் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். அவர்கள் யாரும் அதிருப்தி அடையவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இங்கு தான் ஒரு மிகப்பெரிய படிப்பினையை நம் சமுதாயத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
இஸ்லாத்திற்காக அடிபட்டு கஷ்டப்பட்டு, பெருமை கொள்ளாமல், வீண் விவாதம் செய்யாமல், இஸ்லாத்தில் இருக்கும் சகோதரனை தூற்றாமல், வீண் தம்பட்டம் அடிக்காமல், பசி பட்டினியோடும், நபி(ஸல்) அவர்களுக்காக எதையும் செய்ய துணிந்ததோடு அல்லாமல், அல்லாஹ்வுக்காக தன் உயிரையும் இழக்க துணிந்து, பொறுமையோடும், தொழுகையோடும் வாழும் ஒரு சராசரி மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் கண்ணியப்படுத்துவான், மறுமையிலும் கண்ணியப்படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்கள் விசயத்தில் நடந்து கொண்டதின் மூலம் நாம் உணரலாம்.
தன்னோடு வாழ்ந்த ஒரே ஒரு உத்தமர், தன்னை எல்லோரும் ஒதுக்கியபோது அரவணைத்த காருண்யம் நிறைந்தவர், பசியோடு இருக்கும் போது ஒன்றாக இருந்த மாமனிதர், தாயும் தந்தையும் சொந்தங்களும் இல்லாத போது தன்னை பொறுப் பேற்ற மனித நேயத்தின் சிகரம் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரிய பிலால்(ரலி) அவர்களுக்கு மனமே இல்லை. நபி(ஸல்) அவர்களோடு அதிகம் கஷ்டத்தில் பங்கெடுத்த ஒரே தோழர் பிலால்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்பு முஹம்மதுர்- ரசூலுல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லும் மனதிடத்தை இழந்த நிலைக்கு ஆளானார்கள் என்றால். உத்தம நபியின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நழிவுற்ற, அடிமையாக இருந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதினால் அல்லாஹ்வுடைய தூதர் எவ்வளவு மிகப்பெரிய கண்ணியத்தை கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் பார்த்தோம். நம்முடைய வாழ்வுக்கு முன்னோடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களை பின் பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் எப்படி நம்முடைய சக முஸ்லீம் சகோதர சகோதரிகளை நடத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வினால், அறிவாற்றலால், குலப்பெருமையால், கோத்திர பெருமையால், கருப்பு வெள்ளை என்ற நிறத்தால், தெருப் பெருமையால், முஹல்லா பெருமையால், இயக்க மயக்கத்தால் இன்று பல கூறுகளாக இவ்வுலக இச்சைகளுக்காக பிரிந்தும், பிறரையும் பிரித்தாளுகிறோமே. இது தான் நாம் நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்ற படிப்பினையா?
மேல் சொன்ன சம்பவங்களின் மூலம் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பிலால்(ரலி) அவர்கள் மேல் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் நட்பு வைத்திருந்தார்களோ, அது போல் நாம் ஒவ்வொருவரும் குலம், கோத்திரம், ஊர், தெரு, முஹல்லா என்று பாராமல் நட்புடன் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் ஏற்றுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறும் நன்மக்களாக வாழ வேண்டும். அதற்கு நம் எல்லோக்கும் வல்லவன் ரஹ்மான் அருள் புரிவானாக.
தொடரும்...
M தாஜுதீன்





