சமீபத்தில் லண்டன் BBCயில் நம்ம இந்தியா சார்புடைய ஒரு செய்தியை எதேச்சையாக காண நேர்ந்தது அதில் கொல்கத்தா நகரின் பிரசித்திபெற்ற ஹவ்ரா பாலத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்றது அந்தச் செய்தி. அட! என்னடா அது வெடிகுண்டு மிரட்டலா இருக்குமோ !? என்று மேலும் அச் செய்தியை வாசித்தால் வெரி-சிம்பிள் அதுதான் எச்சில் மேட்டர் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் முட்டுக்கள் மீது அங்கு வசிக்கும் / கடந்து செல்லும் மக்கள் வெற்றிலையை வாயில் போட்டு மென்ற எச்சிலை தூற்றி (துப்பி) அந்த எச்சிலால் ஹவ்ரா பாலம் இரும்புத் தூண்கள் அரிக்கப்பட்டு வருகின்றனவாம்(!!?).அட! இந்தியக் குடிமக்களா! நில அரிப்பை தடுத்திட சவுக்கு மரம் வளர்த்திடுங்கள், காடு வளருங்கள் என்று காட்டுக் கத்தலா அரசு கத்துது ஆனால் இந்த வெற்றிலைப் பாக்கு மென்றுத் துப்பும் எச்சிலின் அரிப்பை தடுக்க எதை வளர்க்கச் சொல்றதுன்னு யாராச்சும் யோசனை சொல்லுங்களேன்..!
இப்படியாக எச்சிலை (தூற்றி) துப்பி இந்த பாலத்தை பலமிழக்கச் செய்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அல்லது கவிழ்த்தால் அதுதான் கின்னஸ் சாதனையாக இருந்திடப் போகுது. ஆனால், அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அந்த கின்னஸ் சாதனையை யார் செய்ததது என்று தனிமனிதர் யாரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாது. ஆனால், ஒட்டு மொத்த வெற்றிலை குதப்பிகளைத்தான் சென்றடையும் என்பதினை நாம் மறுக்கப் போவதுமில்லை. .எனது நண்பர் ஒருவர் நல்ல திடகாத்திரமான ஆள் இவர் ஒரு நாள் வெற்றிலைப் பாக்குக்கு தொடர்ந்து குதப்பும் ஒருவரிடமிருந்து கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு வாங்கி குதப்ப ஆரம்பித்தார். அடுத்த கணமே நண்பர் மயங்கி விழுந்து விட்டார். நான் பதறிப்போய் அவரை ஆஸ்பத்திருக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தேன் வெற்றிலையை கொடுத்தவரோ கூலாக அட “அது எல்லாம் ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் மயங்கி விழுந்தவர் ஐந்து நிமிடத்தில் எழுந்தும் விட்டார்.
அந்த வெற்றிலைப் பாக்குக்கு பழக்கப்பட்ட குதப்பியான அவரிடம் மேலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது “வெற்றிலையின் பின்புறம் ஒரு வகை பூச்சி இருக்குமாம் அதை வாயில் போட்டு மென்றதும் அது குடல் உள்ளே போய் மயக்கத்தை ஏற்படுத்துமாம்(!!?)" அப்டின்னா “உங்களுக்கு ஏன் மயக்கம் வரவில்லை” என்று கேட்டதற்கு.
அவர் சொன்னதுதான் அதைவிட ஹைலைட் ! “எப்பொழுதெல்லாம் வெற்றிலையையும் பாக்கையும் சேர்த்து மெல்லுவதற்கு ஆயத்தமாவேனோ அப்போது அந்த வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி பூச்சிகளை கொன்று விடுவேன்” என்று அவரது பூச்சி கொல்லி டெக்னிக்கை சொன்னவர் மேலும் வெற்றிலைப் பாக்கு பற்றி PhD செய்யுமளவிற்கு அலப்பறை செய்தவருக்கு அதன் தீங்குகள் பற்றி சிறிதளவேனும் அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரது அலப்பறையிலிருந்து அறிய முடிந்தது.
நம்ம ஊரில் தெருக்களில் ஓரத்தில் / ஸாரி கொஞ்சம் நடுவில் உள்ள எலெக்ட்ரிக் (EB) போஸ்ட் அடியில் அரித்து இருப்பதை நாங்கள் ஊரில் இருக்கும் போது EB அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தபோது அதற்கு அவர்கள் சொன்னது “நாய்கள் அங்கே சிறுநீர் அடிச்சு (??) அந்த EB போஸ்ட்டுகள் வலுவிழந்து போய் விட்டது” என்று ஒரு நூதனமான பதிலை பொறுப்பான நம்ம E.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க !.
நாமதான் E.B.க்கு இடம் வாங்கி கொடுத்த கையோடு அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆளுக்கு '10 மா' தென்னந்தோப்பும் வாங்கி கொடுத்து இருந்தா இன்னும் பலவகையான கழிவுகளின் அறிய நலன் / கெடுதிகள் பற்றி தெளிவா(!) மின்சாரவாரிய (அலுவலக!!??) ஆட்கள் நமக்கு வகுப்பெடுப்பார்கள் போலும்.
டவுட்டு என்னவென்றால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் சிறுநீருக்கும், மக்கள் வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயில் போட்டு நன்றாகக் குதப்பி மென்று துப்பும் எச்சிலுக்கும் இத்தனை பவாரா இருக்கு ? அப்படியான பவர் இருந்தால் ஏதாவது அணு உலைக்கு கடின நீருக்கு பதிலா! அல்லது ரியாக்டருக்கு மாற்றாக இதை முயற்சி செய்து பார்த்தால் ஏதாவது ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று யோசனை சொல்லத் தோனுது.
இந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிகளை கவனித்தால் ஒன்று மட்டும் புலப்படும் இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள் அது என்னெவென்றால் அந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிய எச்சில்களை மூலைக்கு மூலை துப்புவதில் மட்டும்.
நானும் இது பற்றி எனக்குத் தெரிந்த கோணங்களில் யோசித்து பார்த்துவிட்டேன் மூலைக்கு மூலை இவர்கள் துப்பி வைப்பது ஏன் என்று விளங்கவில்லை இதனால் வரும் நோய்கள் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதாகவும் இல்லை (சகோதரர் ஜாகிர் ஒரு கட்டுரை போடலாம்) .
இவர்கள் துப்பும் எச்சிலை நன்றாக கவனித்து பார்த்தால் அதில் உலக வரைபடத்தை பார்க்கலாம் மேலும் உற்றுப் பார்த்தால் வேற்று கிரகங்களின் வரை படங்களும் மிக தெளிவாக இருக்கும் (கூகிள் கவனிக்கவும்). இவ்வாறு இருட்டிய இடத்தில், முக்கோணம் குவியுமிடமித்தில், நிறுத்தி வைக்கப்பட்ட கம்பங்களில், இரும்புக் கம்பிகளின் அடியில் இவ்வாறாக துப்பும் துரதிஷ்டவாதிகளுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளை இவர்களுக்கு யாரும் எத்தி வைக்கவில்லையா? அல்லது அரசுதான் இவ்வாறான சுகாதாரக் கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வு போதியளவு செய்வதில்லையா? / அல்லது அப்படிச் செய்வது இவர்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையா ? என்றும் கேட்கத் தோனுது.
இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் வாயும், நாக்கும் மிக முக்கியமான உறுப்புகள் / ஆயுதங்கள் இதை நாம் நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நேரான வழியில் நடந்தால் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து தீய வழியில் பயன்படுத்தி நாமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் தீங்கையும், சுகாதார சீர்கேட்டினையும் உண்டாக்கினால் நாளை மறுமை நாளில் நமது நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்று யாவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- Sஹமீது




