அறிமுகம் - நண்பர்களே! இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்! உயிர்காக்கப்பட்ட நாள்! காப்பாற்றியவர்கள் நான்கு இஸ்லாமியர்கள்! அவர்களுக்காக இந்தப் பதிவு! இது எனது தனிப்பட்ட பதிவாகும்! எனது டைரியை படிப்பது போல இருக்கும்! எனவே அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லிக்கொண்டு, இப்பதிவை தொடருகிறேன்!
இலங்கையில் தமிழர்களுக்கும் - இஸ்லாமியர்களுக்கும் சண்டை, சச்சரவு இருப்பதாக ஒரு தோற்றம் வெளியுலகில் இருக்கிறது! ஆனால் உண்மை அதுவல்ல! எங்கேனும் அரிதாக, நடந்த ஓரிரு சம்பவங்களை வைத்துக்கொண்டு, இரு இனங்களுக்கிடையே பிளவு என்று சொல்லுவது தவறு!
தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி ஒற்றுமையாக வாழும் பல கிராமங்கள் இலங்கையில் உள்ளன! வவுனியா அதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு! அங்கே மூவின மக்களும் எவ்விதமான சண்டை சச்சரவும் இன்றி வாழ்கிறார்கள்!
1997 ம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து, ஒரு முஸ்லிம் அன்பரின் வீட்டில் வாடகைக்கு இருந்தோம்! அந்நாட்களில், பல வன்னிக்குடும்பங்கள், முஸ்லிம் மக்களின் வீடுகளின் வாடகைக்கு இருந்தார்கள்! காரணம், முஸ்லிம் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றி வளைக்க மாட்டார்கள்! அங்கு வரவும் மாட்டார்கள் என்ற நம்பிக்கையே!
அன்றிலிருந்து, அவர்களோடு பழகும் அரிய வாய்ப்பு கிடைத்தது! அவர்கள் மிகவும் பண்பானவர்கள்! வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள்! எந்தத் தொழிலையும் தயக்கம் இன்றி செய்வார்கள்! அவர்களுக்குள் தொழில் ரீதியான சாதிப் பாகுபாடு கிடையாது! என்னோடு ஒன்றாகப் படித்த நசீர் என்ற நண்பன், மிகவும் குறும்புக்காரன்! அவனிடம் எப்போதுமே நிறையவே காசு இருக்கும்!
மத்தியானம் பாடசாலை முடிந்ததும், ஒரு மீன் கடையில் வேலை செய்வான்! மின்னல் வேகத்தில் அவன் மீன்களை வெட்டும் அழகே தனி! பின்னர் மாலையில், இருவரும் ஃபுட்பால் விளையாட கிளம்பிடுவோம்! அவனோடு சேர்ந்து, மீன் கடையில் வேலை பார்க்க எனக்கும் விருப்பமாக இருந்தது! ஏன் தெரியுமா? பின்ன, ஏ எல் படிக்கும் போது, கையில காசே இருப்பதில்லை! அதனால்தான்!
அம்மாவிடம் போய், மீன்கடையில் வேலை செய்யப் போவதாக சொன்னேன்! அம்மா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்! நான் மீன்கடையில் வேலை செய்வதால் வரும் விளைவுகள் பற்றி ஒரு மணிநேரம் விபரித்தார்! அதில் எனக்கு யாருமே பொண்ணு தரமாட்டாங்களாம் அப்டீன்னும் என்று ஒரு பிட்ட போட்டுட்டா!
இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்! இதில் நான் யாரையும் குறைத்து கூறவில்லை! எமது சாதி முறைப்படி, நாங்கள் அப்படியான தொழில் செய்யக் கூடாது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டா! நான் சின்ன வயசில் இருந்தே மாத்தியோசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால், அது ஏன்? இது ஏன்? அப்படிச் செய்தால் என்ன? என்று அம்மாவுடன் ஒரே வாக்குவாதம்!
இறுதியில், “ உன்ர விருப்பப்படி வேலை செய்யுறதென்றால், வீட்டைவிட்டுப் போ” என்ற அம்மாவின் கண்டிப்பான உத்தரவோடு, நான் எனது வாயை மூடிக்கொண்டேன்! அன்றோடு ஒரு மீன்கடையில் வேலை செய்யவேண்டும் என்ற எனது கனவு காணாமல் போனது!
பிறகு இங்கு வெளிநாடு வந்து, நான் வெட்டாத மீனா? வாட்டாத இறைச்சியா? கழுவாத கோப்பையா? ஹி ஹி ஹி ஹி ஆனால் இப்பதான் பலர் பொண்ணு கொடுக்க முன்வருகிறார்கள்! என்ன கொடுமை முனுசாமி? ( எத்தனை நாளைக்குத்தான் சரவணனைக் கூப்புடுறது? )
சரி சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு எங்கோ போய்விட்டேன்!
இஸ்லாமியர்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம்! இறைபக்தி, மதக் கட்டுப்பாடு, நேரம் தவறாத தொழுகை!! எப்படி, இப்படியெல்லாம் கட்டுப்பாடாக, ஒரே கோட்பாட்டோடு இருக்கிறார்கள்? என்று நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன்! அவர்களின் இறைவிசுவாசம் - அல்லாஹ் மீது கொண்ட பக்தி, எப்பவுமே ஆச்சரியமானதுதான்! இப்படிப் பட்டவர்களையா, உலகம் பயங்கரவாதிகள் என்கிறது?
இலங்கையில், பி.எச். அப்துல் ஹமீத் என்ற பெரும்சிகரம், தமிழ்க்கடல்! அவர் தொடக்கம், ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரி, ஃபரீன் அப்துல் காதர், ஃபரீன் அப்துல் கையும், சமோஸ் முஹ்ஹம்மது பெரோஸ், எஸ்.ரி.ரவூஃப் என்று பல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இருக்கிறார்கள்!
இவர்கள் அனைவரினதும் குரல்களும், அழகிய தமிழ் உச்சரிப்புக்களும், என்னை மேலும் மேலும், இஸ்லாமியர்கள் மீது பற்றுகொள்ள வைத்தது!
இலங்கையில் இஸ்லாமியர்களின் பேச்சுத் தமிழ் மிகவும் வித்தியாசமாக இருக்கும்! நாம் பேசும் யாழ்ப்பாணத்து தமிழுக்கும், அவர்கள் பேசும் தமிழுக்கும் முற்றிலும் வேறுபாடாக இருக்கும்!
ஆனால் வானொலியில் தமிழ் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும்! மிகவும் அழகு நிறைந்த தமிழில் பேசுவார்கள்! அதுவே மிகப்பெரிய ஆச்சரியம்!
நான் அடிக்கடி ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பேன்!
அதாவது தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், தமிழில் உள்ள இலக்கியங்களைப் படிக்கும்போது, சங்கடமாக இருக்காதா??
ஏனென்றால், தமிழிலக்கியத்தில் 85 வீதம், இந்து சமயம் கலந்துள்ளது! இந்து சமய கருத்துக்களைக் கலக்காத தமிழிலக்கியமே இல்லை என்று சொல்லிவிடலாம்!
தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு இஸ்லாமியர், தமிழின் சிறந்த இலக்கியமாகிய கம்பராமாயணத்தை படிக்க நேர்ந்தால், அதில் பல இந்துமதக் கருத்துக்களைக் கடந்தே செல்லவேண்டும்! இது சங்கடமாக இருக்காதா? இதுபற்றி நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பேன்!
இன்று உலகளவில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாம் மதத்துக்கும் விடுக்கப்படும் சவால்கள் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்!
நான் வாழும் ஃபிரான்ஸ்கூட, இஸ்லாமியபெண்கள் பர்தா அணிவதை எதிர்க்க்கிறது!
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இந்த மேற்கு நாடுகளை மிகவும் பிடிக்கும்! குறிப்பாக நான் வாழும் ஃபிரான்ஸ் மீது அளவுகடந்த பற்று உண்டு! யாராவது ஃபிரான்ஸ் பற்றி தப்பாக கதைத்தால் செம டென்சனாகிடுவேன்!
அதே சமயத்தில், இஸ்லாமிய சகோதர்கள் மீது இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எப்படி எடுத்துக்கொள்வது?
யாருக்கு சப்போர்ட் செய்வது என்று பல நாட்கள், மண்டையைப் போட்டு குழப்பியிருக்கிறேன்!
இப்போ, ஆஃப்கானிஸ்தானில் ஒரு ஃபிரெஞ்சு வீரர் இறந்துவிட்டால், அன்று முழுக்க ஒரே டல்லாக இருக்கும்! அதே சமயத்தில், அங்கு இஸ்லாமிய போராளிகளோ, படையினரோ கொல்லப்பட்டாலும், அதுவும் துக்கத்தையே வரவழைக்கும்!
-----
இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் மனோநிலையில் வாழ்ந்துவருகிறேன்!
குறிப்பாக சதாம் ஹுசேனை, தூக்கில் போட்ட, அந்த நாளில் மிகவும் சங்கடமாக இருந்தது! மனம் அவருக்காக இரங்கவே செய்தது! என்ன செய்வது?
எங்களுக்கு மேற்கு நாடும் வேண்டும், இஸ்லாமிய சொந்தங்களும் வேண்டும்!
நண்பர்களே! நான் முன்பு சொன்னது போல, நான்கு இஸ்லாமிய நண்பர்களால், நான் காப்பாற்றப்பட்ட அந்த நாள் அக்டோபர் 7 ஆகிய இன்றாகும்! இந்த நன்னாளில், அந்த நால்வரோடும் சேர்த்து, இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரையுமே நினைத்துப் பார்க்கிறேன்!
அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணை என்றும் நிலவுவதாக!
நன்றி: ‘சுவனப்பிரியன்’ வலைத்தளம்
பரிந்துரை : அதிரை அஹ்மது
பரிந்துரை : அதிரை அஹ்மது


