கூலிப்படைகள்
களம் காண்கின்றன
கைக்கூலி வாங்கியே
கலைத்துப்போனவர்கள்
காணாமல் போய்விட -அல்லாஹ்வின்
மெய்க்கூலி ஒன்றே
மேன்மையென நாடும் -முஸ்லிம்
கூலிப்படைகள்
களம் காண்கின்றன
இந்தக் கூலிப்படையினர்
கடப்பாரை தரிக்காத
கரசேவகர்கள்
உடைத்தழிக்கும் கூட்டத்தவரல்லர்
உணவும் உடையும் உரையுளும்
உழைத்தளிக்கும் உறவினர்கள்
எந்தக் கொம்பனுக்கும்
பாதம் பணியாத
வேதம் அருளப்பட்ட
வீர கம்பீரக் கூட்டம்...
மனிதம் காக்க
மகளிரின்
பாதம் தாங்குகிறது
பேரிடர் நேரும்போதெல்லாம்
ஊடுருவி உதவும்
முஸ்லிம் தீவிரவாதிகள்
தன்னுயிரைத் துச்சமெனக் கொண்டு
மக்களின்
இன்னுயிர் காக்கும்
இஸ்லாமிய பயங்கரவாதிகள்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காவிநிறம் காணாத
பேரிடர் களத்தில்
சாதிமதம் பாராமல்
சேவை செய்யும்
பிற்போக்குவாதிகள்
மதநம்பிக்கையையும்
மனிதநேயத்தையும் வைத்து
ஆடுபுலி ஆடும்
வேடதாரிகள் பார்வையில்
விசமிகள்
மறை விருத்தங்களை
மனத்தினில் கொண்டு
இறைப் பொருத்தத்தை
மட்டுமே வேண்டிடும்
கூலிப்படைகள்...
மூழ்கும் சென்னையில்
மிதவைகளாயினர்
முதுகில் சுமந்து
முகமன் கூறினர்
போரிட மட்டுமே
வாள் ஏந்திய வம்சம்
பேரிடர் மீட்கவே
தோள் தந்து தாங்கினர்
மக்கள் சேவைக்கான
மகத்தான கூலி - இவர்களுக்கு
மறுமையில் கிடைக்க
மன்றாடுவோம்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்


