ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது வீடு
பள்ளிக்கூட விடுமுறையைவிட
பணியிடை விடுமுறையை நாட்கள்
குறைந்து கிடைப்பது
சாபம்
உந்தித் தள்ளி
உட்புறம் திறந்த
கதவுக்குப் பின்னே
காயப்பட்டுக் கிடக்கிறது காற்று
பாத்திரங்களாலும் வளையோசைகளாலும்
பேசிக்கொண்டிருந்த சமையலறை
சலனமின்றியும் சப்தமின்றியும்
குளிர்ப்பதனப் பெட்டியைக் கொண்டு
முனகிக் கொண்டிருக்கிறது
நெடுந்தொடர்களின் கதாபாத்திரங்கள்
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்
மனைவியைத் தேடுகின்றனர்
சயன அறைக்குச் செல்ல
வீட்டுக்குள்ளேயே
வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது
மகள்...
ஊட்டி வளர்த்த பொம்மைகள்
இறந்து கிடக்கின்றன.
மகன்...
ஓட்டி யுடைத்த வாகனங்கள்
இரைந்து கிடக்கின்றன.
மனைவி...
மடித்து வைத்த உடுப்புகள்
கலைந்து கிடக்கின்றன
எல்லாம் இட்டு
கலந்தெடுத்தாலும்
காஃபியின் ருசியில்
கைப்பதம் குறையிருக்கிறது
வீட்டுப் பாடம் சொல்லித்தரும்
நேரங்களில்
செய்வதறியாது ஸ்தம்பித்துப் போகின்றன
என் இயக்கங்கள்.
நோட்டுப் புத்தகத்தில்
பிழையான கணக்குகள்
தண்டனை நிமித்தம்
பலமுறை எழுதப்பட்டு
பையனின் “கை வலிக்குதுப்பா”
நினைவுக்க்கு வர...
பாடங்களைப்
புரிய வைக்காமல்
படிய வைக்க முனைந்த
பகுத்தறிவு
என்னைப் பரிகசிக்கிறது.
இந்த அமைதியை
ஏதாவ தொரு
நொறுங்கும் கண்ணாடிக் குவளையோ
கார்ட்டூன் ச்சேனலோ
ஊரிலிருந்தொரு அலைபேசிச் சிணுங்களோ
கதவின் அழைப்பு மணியோசையோ
கலைத்துப் போட்டுவிடாதா
என
ஏக்கம் வதைக்கிறது
நீள அகல அளவைகளாலோ
நிலக் குறியீடுகளாலோ
வீட்டின்
அளவை தீர்மானிக்க முடிவதில்லை
நிஜங்களின் இருப்பில்
குறுகளாய்த் தெரியும் வீடு
நினைவுகளோடு
ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது!
Sabeer abuShahruk


