தமிழக சட்டமன்றத்தின் இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டத் தொடர் அண்மையில் நிறைவுற்றது. ஒரு அரசியல் நோக்கர் என்கிற முறையில், இப்போதெல்லாம் நடைபெறும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிப் பார்க்கும்போது மனதில் பல ஒப்பீட்டு நினைவலைகள் எழுகின்றன. அவைகளை நமக்குள் அன்புடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவைத்தர எண்ணினேன்.
சட்டமன்றம் கூடப் போகும் நாளைப் பற்றி ஊடகங்கள், பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் கூடி சலசலப்பை ஏற்படுத்தும் முன்பே இவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் சடங்கை செய்துவிடுவார்கள். மானியக் கோரிக்கைகள் வர இருக்கின்றன – மசோதா தர இருக்கிறார்கள் - பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுகிறது- எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன- ஆளும் கட்சி ஒரு கை பார்க்க தயாராகிறது- அப்படி இப்படி என்று ஏதோ ரேக்ளா ரேசுக்குத் தயார் ஆவது போல செய்திகளை வெளியிடுவார்கள்.
பரிதாபத்துக்குரிய மக்களும் ஆஹா! சட்டமன்றம் கூடுகிறது – நமக்கு ஆகுமான பல நல்ல திட்டங்கள் வரப் போகின்றன- என்று வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு காத்திருப்பார்கள். சட்டமன்றம் கூடும் நாள் வரும். அன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள். காரணம் சட்டமன்றத்தின் கேண்டீனில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தரும் தேநீரில் சர்க்கரை அதிகமாகப் போடுகிறார்கள் எதிர்கட்சிக் காரர்களுக்கு உப்பை அள்ளிப் போடுகிறார்கள் என்பது போல சில காரணம் இருக்கும். அதையும் மீறி உள்ளே போனால் சபாநாயகர் எதிர்கட்சிக்காரர்களை கூட்டாக வெளியேற்றினார் என்றும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடப்பட்டனர் என்றும் எதிர்க் கட்சியினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர் என்றும் - ஒரு குறிப்பிட்ட கட்சி உறுப்பினர் விவாதம் நடைபெறும்போது கடந்த வருடம் அவர் சாப்பிட்ட மட்டன் கறியில் ஒரு பிசிறு பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததை குச்சியால் குத்தி நோண்டிக் கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தொடர் முழுதும் நீக்கப் பட்டு இருப்பர் இல்லாவிட்டால் இவர் பல்லைக் கடித்தார் உதட்டைத் துருத்தினார்- என்று ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு தொடர் முழுதும் வெளியேற்றப்படுவார்.
கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை செலவு செய்து கோடான கோடி மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் சக்தியில் கல்லைப் போட்ட சங்கதிதான் நடக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் வெட்டுப் பகை குத்துப் பகை- ஏட்டிக்குப் போட்டி. ஒன்றிலும் அனுசரணை ஒத்துப்போதல் தென்படுவதே இல்லை. தனிவாழ்வுபற்றிய விமர்சனங்கள், சட்டமன்றத்தின் தரத்தை குறைத்துவிடுகின்றன. மக்கள் நாளை நம்மைப் பார்த்து கேள்வி கேட்பார்களே என்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லை. சத்தம் கொஞ்சம் சூடு பிடித்தால் குழாயடி கூட வெட்கப்படும். சந்தைக்கடை கூட தற்கொலை செய்துகொள்ளும். எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதில் ஏகபோக உரிமை சபாநாயகருக்கு.
யார் இந்த சபாநாயகர்? வானளாவிய அதிகாரம் தனக்கு உண்டு என்று பறைசாற்றும் சபாநாயகரும் ஒரு தொகுதியிலிருந்து மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட எம். எல் ஏ தான். ஆனால் அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை சபாநாயகர் விரும்பினால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த அதிகாரத்தை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தால் மக்களுக்கு என்ன மரியாதை? ஜனநாயகத்தின் யோக்கியதைதான் என்ன?
சட்டசபை வளாகத்தில் சபை நடவடிக்கைகளில் சற்றும் நாகரீகமோ சாதுர்யமோ காணப்படுவது இல்லை. பழிவாங்கும் படலம் மாறி மாறி அரங்கேறுகிறது. மக்கள் பிரச்னைகள் புறந்தள்ளப் படுகின்றன. மக்களுக்கு பாராளுமன்ற சட்ட மன்றங்களின் மீது சபை நடவடிக்கைகளைக் காணும்போது நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன.
“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்” என்று வள்ளுவர் வரையறுக்கிறார்.
தூய அறிவாளர்கள் சொல்லின் பொருள் அறிந்து அவையின் தன்மை அறிந்து தாம் சொல்லப் போவதையும் நன்றாக அறிந்தே எதையும் சொல்ல வேண்டும் என்பதே இதன் பொருள்.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன
கெடுப்பார் இலானும் கெடும் “ -என்பதும் வள்ளுவன் வாக்கே.
இடித்துரைத்து சொல்லித்திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானாக கேட்டுப் போவான் என்பது இதற்குப் பொருள்.
ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க் கட்சிகள் எடுத்துரைக்கும் போது அதனை சீர்தூக்கி சரிசெய்து கொள்வது ஆளும் கட்சியின் கடமை. அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக ஆளும் கட்சி செயல்ப்படுமானால் அக்கட்சி அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும். இவை நாம் கண்டு வரும் வரலாற்றுப் படிப்பினைகள்.
இதைத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1957-62 சட்டமன்ற நிகழ்ச்சியில் “ஆளும் கட்சி யானையின் பலம் கொண்டதாக இருந்தாலும் அதை சரியான பாதையில் செலுத்த அங்குசம் என்ற ஒன்று வேண்டும்” என்று ஆளும் கட்சியை நோக்கி நறுக்கென்று மனதில் படும்படி சொன்னார். மேலும்,
அதே 1962 ல் அண்ணா அவர்களின் கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்தைக் கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையின் கட்சிக்கு நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்பதாகும் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.”
என்று நெடுஞ்செழியன் நயம்பட உரைத்தாராம். பின்னர் அது உண்மையில் நடந்தது.
மற்றொருமுறை அரசின் மானியக் கோரிக்கைமீது அண்ணா பேசும்போது அன்றைய காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் இத்தனை கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த அண்ணா “ பத்து பேர் கையிலிருந்து மாறிய ஐஸ் கட்டியைப் போலத்தான் அரசின் திட்டங்கள் மக்களைப் போய் சேரும் சமயத்தில் இருக்கின்றன” என்று இடித்துரைத்தார். அன்றாவது பத்து பேர் கை மாறிய ஐஸ் கட்டியாகத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன. இன்றோ காற்றைக் கையில் பிடித்து காட்டாறு வெள்ளத்தில் கோட்டாறு மண்ணெடுத்து கூட கோபுரமும் மாட மாளிகையும் கட்டி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அரசின் திட்டங்கள் கடலில் கரைத்த சந்தனமாக அல்லவா போய்விட்டன? வருங்காலத்தில் சந்தனமும் இல்லாமல் வெறுங்கையை வைத்து கரைப்பதுபோல் கட்சி நாடகம் நடத்துவார்கள் அரசியல்வாதிகள்.
காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை அவை நடவடிக்கைகள் நடைபெறும்போது ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த எதிக் கட்சி உறுப்பினர் இப்படித்தூங்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கலைஞர் கூறிய கருத்து அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. கலைஞர் கூறினார் “ தூங்கலாம் ஆனால் குறட்டை விடக்கூடாது. தூங்குவது அவர் உரிமை குறட்டைவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு. உரிமைப் பிரச்னை “ என்றார்.
சட்டமன்றத்தில் அரசியல் நாகரீகம் பற்றிப் பேசும் புண்ணியவான்களுக்கு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது திரு. அனந்தன் நம்பியார் உட்பட இரண்டே இரண்டு உறுப்பினர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு உரிமைப் பிரச்னை கொடுக்கப் பட்டு இருந்தது. அதை இன்னொரு நாள் எடுத்துக் கொள்வோம் என்று சபாநாயகர் கூறினார்.
இதற்குக் காரணம் இன்னொரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் வேறொரு தொழிலாளர் பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் அவைக்கு வரமுடியவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சி தந்திருந்த உரிமைப் பிரச்சனைய வழி மொழிய ஆள் இல்லை. ஒரு தீர்மானத்தை ஒருவர் முன் மொழிந்தால் மற்றொரு உறுப்பினர் வழி மொழிய வேண்டும். ஒரு உறுப்பினர் வர முடியாத நிலையில் வழிமொழிய முடியாமல் தீர்மானம் தள்ளுபடியாகக் கூடிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காமல் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நான் வழி மொழிகிறேன் என்று கூறி சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் “இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்துவராதே – ஏணி வைத்தாலும் எட்டாதே – எப்படி நீங்கள் வழிமொழிந்தீர்கள்?” என்று கேட்டார்கள். கண்ணியத்துக் குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள் “ எந்த ஒரு உறுப்பினரும் தனது கருத்தை இந்த அவையில் பதிய உரிமை உடையவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களின் கருத்து பதிவுசெய்யப் படாவிட்டால் அது ஜனநாயகத்தை ஊனமாக்கிவிடும். எனவேதான் வழிமொழிந்தேன். இங்கே இஸ்லாம் கம்யூனிசம் என்கிற பேச்சுக்கு இடமில்லை “ என்றார்கள். இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துக்கும் சான்று பகர்ந்த சம்பவம் அது.
இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர் ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு! நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்! “ என்றார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூறத் தக்கது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றியபோது கல்வி அமைச்சராக பணியாற்றியவர் கோவை அவினாசிலிங்கம் அவர்களாவார். ஒரு விருந்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது காயிதே மில்லத் இடம் கல்வி அமைச்சர் “ இஸ்மாயில் சாஹிப்! உங்கள் மகன் இஞ்சிநீரிங் கல்லூரியில் நன்றாகப் படிக்கிறாரா ?” என்று கேட்டார். “ ஆமாம்! ஆமாம்! ஆனால் அவன் இஞ்சினியருக்குப் படிப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்? என்று வியப்புடன் கேட்டார் காயிதே மில்லத்.
“எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததே நான்தானே? (அவினாசிலிங்கத்தின் சொந்தக் கல்லூரி) விண்ணப்பத்தைப் பார்த்ததும் உங்கள் மகன் என்று தெரிந்தது. எதிர்க் கட்சித்தலைவரான உங்கள் மகனை நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார் திரு. அவினாசி லிங்கம். பேச்சை அத்துடன் முடித்துக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அடுத்த நாள் தனது மகனை அழைத்து "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் அந்தப் படிப்பையும் தொடர வேண்டாம்" என்று நிறுத்திவிட்டார்.
பலர் வற்புறுத்திக் கேட்டும் இப்படி மகனின் படிப்பை இடை நிறுத்தியதற்கான காரணத்தை உடனே அவர் கூறவில்லை. பல குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு காரணத்தைச் சொன்னார் . அது, “ நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் என் மகனுக்கு சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப் பட்ட தயவு நமக்கு தேவை இல்லை.”
இப்படிப்பட்ட பண்பாளர்களை இன்று ஹாங்காங்கில் வலை வாங்கி வந்து வங்காள விரிகுடாக் கடலில் இரட்டை மடி வீசி அரித்து சலித்துப் பார்த்தாலும் சட்டமன்றங்களில் நாம் காண முடியுமா?
இன்ஷா அல்லாஹ் தொடரலாம்.
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc;

