Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 29 39

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2013 | , , ,


இஸ்லாமியப் பொருளாதாரத்தின் அடித்தளம்- குடும்ப உறவுகள்.(மனைவி).

மனைவியை BETTER HALF  என்று சொல்வார்கள். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்பும்  ஒரு பெண் இருக்கிறார்’ என்றும் சொல்வார்கள். ஒரு நல்ல மனைவி ஒரு குடும்பப்பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை யாரும் மறுக்க இயலாது. இன்னும் சொல்லப் போனால் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மற்றக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச்செய்பவள் அன்னை என்கிற கருத்து ஒரு சாதாரணமான கவிதை வரியில்ல. மனைவியாக வருபவள் நல்லவளாக  சிறந்த நிர்வாகியாக பாசமுள்ளவளாக பண்பாடு மிக்கவளாக உள்ளதைக் கொண்டு நல்லது செய்பவளாக அமைந்துவிட்டால் அது எத்தனை பெரும் பேறு  என்பதையும் அப்படி  அமையாத  இல்லாத குடும்பங்களின் பொருளாதாரம் எவ்வளவுதான் பெரும் பணம் படைத்த குடும்பமாக இருந்தாலும் சீர்கேட்டுக் கிடப்பதையும்  நாம்  கண்ணால் காண முடியும்.

நான் குறிப்பிடப்போவது நான் அறிந்த இரு குடும்பங்களின் கதை. எனக்குப் பல குடும்பங்களின் கதைகள்  தெரியும். காரணம் குறைந்தது ஒரு பத்து குடும்பங்களுக்கு நான்தான் எழுத்தர். அறுபதுகளில் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உழைத்துக் கொண்டிருந்த குடும்பத்தலைவர்களுக்கு- கடிதங்கள் எழுதுவதும் வரும் கடிதங்களை  படித்துச் சொல்வதும்  எனது முக்கியப்  பணியாக இருந்தது. இதற்காக ஒரு கடிதத்துக்கு இரண்டணா  முதல் நாலணாவரை கிடைக்கும் பல மனிதர்களின் . வாழ்க்கைப் பாடங்களைப் படித்துக் கொள்ளவும் மனிதர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும்  இவை எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. இப்படி   நான் அறிந்த இரு குடும்பெண்களின் மாறுபட்ட குணமுடைய இரு மனைவிகளைப் பற்றி இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன். அந்த இரு குடும்பத்தலைவிகளும் இன்று உயிருடன் இல்லை. (இன்னாளில்லாஹி) அவர்கள் என்னை மன்னிபபார்களாக. எனது நோக்கம் மனைவிகள் எப்படி குடும்ப பொருளாதாரத்தை உருவாக்க கருவியாக இருக்கிறார்கள் என்பதை சுட்டுவதே.

நான் சொல்லப் போகும் ஒரு குடும்பத்தின் தலைவர் மலேசியாவில் இருந்து மாதாமாதம் ஐந்து தேதிக்குள் கிடக்கும்படி இருநூற்று ஐம்பது ரூபாய் பணம் அனுப்புவார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை. சொந்த வீடு. இந்தப் பணத்தைத் தவிர தம்பிடி காசுகூட இடையில் அனுப்ப மாட்டார்.  ஊருக்கு வரும்போது ஒரு பவுன கூட கொண்டு வர மாட்டார் என்று அவர் மனைவி புலம்புவார். . ஊருக்கு வந்துவிட்டு திரும்பி மலேசியா போகும்போது கப்பல் பயணச்சீட்டுக்கு அவரிடம் பணம் இருக்காது. அவர் யாரிடமாவது கடன் வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்பார். மனைவியும் கடன் வாங்கி வந்து கொடுப்பார்கள். அந்தக் கடனை முதல் மாதம் செலவுப் பணத்தோடு சேர்த்து அனுப்பிவிடுவார். நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்படி வெளியில் கடன் வாங்கியதாக அந்தக் குடும்பத்தலைவி கொண்டுவந்து கணவரிடம் கொடுத்த பணம் உண்மையில் கடன் வாங்கியது அல்ல. கணவருக்குத்தெரியாமல் அந்த அன்புத்தாயே சிறு சேமிப்பாக சேர்த்த பணம். அது மட்டுமல்ல பிள்ளைகளுக்கு பசி இல்லாமல் வயிறார உணவு, நியாயமான உடை, சமூக / குடும்ப காரியங்களில் உறவினர்களின் விஷயங்களில் கவுரவத்தொடு நடப்பது தர்மம் முதலிய அத்தனை காரியத்திலும் கச்சிதமாக செய்து கணவர்  அனுப்பியதிலேயே மிச்சம் பிடித்து  தன் மகளுக்காக கிட்டத்தட்ட எண்பது பவுன வரை நகைகளும் சேர்த்து வைத்து சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார். இந்த எண்பது பவுன்களும் மலேசியக் கணவரால் அனுப்பப்பட்டதோ அல்லது அதற்காக தனியாக பணம் அனுப்பி வாங்கப் பட்டதோ அல்ல! அல்ல! அல்ல!.  இன்று பிள்ளைகளும் தலை  எடுத்து  அல்லாஹ் உதவியால் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் இரு நூற்று ஐம்பது ரூபாயில் மரியாதையாக குடும்பம் நடத்திக் காட்டிய பெருமை நிறைந்த பெருமகள் அவர். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக்! ( எனது தபால் எழுதும் கூலியுடன் கூடவே தன் கையால் செய்த  பொரிவிலங்காய் உருண்டை, அறிப்புப் பணியாரம் எல்லாம் தருவார்.)

இதற்கு நேர்மாறான இன்னொரு குடும்பத்தலைவியையும் நான் சுட்டிக் காட்டவேண்டும். இவரது கணவர்  சிங்கப் பூரில் ஒரு தேநீர் விடுதி நடத்தி வந்தார். நல்ல சாம்பாத்தியம். நிறையப் பணம் தொடர்ந்து அனுப்புவார். இரண்டே பிள்ளைகள். ஊர் வரும்போதெல்லாம் நிறைய நகைகள் கொண்டு வருவார். ஆனால் இவர் மனைவி ஒரு “தீங்கலி”. ஊதாரித்தனமாக செலவு செய்வார். மீன்கடைகளில் விலை பேசாமல் மீனை வாங்கி வந்து சமைப்பார். மளிகைக் கடைகளில் கடன்வைத்து சாமான்களை வாங்குவார். கையில் பணம் இல்லாவிட்டால் எதையும் தள்ளி வைக்க மாட்டார்.  வாங்கக் கூடாத இடங்களில் வாங்கக் கூடாத  தெருக்களில் ஆண்களிடமும் கூட  அதிக வட்டிக்கு வட்டிக்கு வாங்கியாவது அனாவசிய ஆடம்பர செலவுகளைச் செய்வார். பால்காரருக்குப் பணம் தர மாட்டார்.  பட்டுக் கோட்டைக்கு அடிக்கடி போய் இனிப்பு காரம் என்று பொட்டலம் பொட்டலமாக வாங்கி வருவார். கணவர் அடிக்கடி சிங்கப் பூரில் இருந்து அனுப்பும் துணிமணிகள் பற்றாமல் அடிக்கடி ஜவுளி எடுப்பார்.  ஆயிரக் கணக்கில் கணவரிடமிருந்து  பணம் தொடர்ந்து  வந்து கொண்டு இருந்தாலும் கணவருக்கு எப்போதும் பணம் கேட்டே கடிதம் எழுதுவார். கணவர் ஊர் வரும்போதெல்லாம் கடன்காரர்கள் படையெடுத்து வருவார்கள். இடையில் சிங்கப் பூரில் சாலை ஓரத்தில் கணவர் வைத்திருந்த கடைக்குரிய இடத்தை அந்த நாட்டு அரசு எடுத்துக் கொண்டது. கணவர் ஊரோடு வரும்போது நானூறு இனிப்பு நீரையும்  கொண்டுவதார். சேமிப்பு இல்லாததால் இன்னும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது." தேவை இல்லாததை வாங்குபவர்கள் தேவையானதை விற்க நேரிடும்" என்கிற ஆங்கிலப் பழமொழி இவர்கள் விஷயத்தில் உணமையானது. குடி இருந்த வீட்டை முதலில் அடகு வைத்து பிறகு அதை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டனர்.

இதை ஏன் குறிப்பிடுகிறேன்  என்றால்  ஒரு குடும்பம் வாழ்வதிலும்  தாழ்வதிலும் மனைவி ஆற்றும் பணி அளப்பரியது. மனைவி என்பவள் குடும்பப் பொருளாதாரத்தை வளர்க்கும் மரம போன்றவள். தகுதி வாய்ந்த ஒரு இல்லத் தலைவியுடைய இல்லமே நல்ல இல்லமாக அமைய முடியுமென்று திருவள்ளுவரும் கூறுகிறார். ஒருவனின் மனைவியிடம் இல்லறத்தை சிறப்புடன் நடத்தும் இயல்பு இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய நலன்கள் நிரம்பப் பெற்று இருந்தாலும் அதனால் பயனே இல்லை. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ளது போல ஆகுமென்று வள்ளுவர் கூறுகிறார்.

மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித் தாயினும் இல் – என்கிற குறள் இதை வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் அருட்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

“இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.”

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் :முஸ்லிம் 2911

மேலும்,

“உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே”  என்றும் கண்மணி  நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அஹ்மத் 7095 

மனைவிமார்களை கண்ணியப் படுத்துவது அவர்களை தட்டிக் கொடுத்து அரவணைத்து செல்வது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வழிகோலும் என்பதால்தான் இஸ்லாம் மனைவிமார்களை  கண்ணியப் படுத்துகிறது. வேறு எந்த மதமும் மனைவிகளை இப்படி கண்ணியப் படுத்தியதாக தெரியவில்லை.. பெண்ணுரிமை விசயத்தில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் நவீன வாதிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது பெண்ணின் பங்கு  பற்றி விவாதித்தல் அடிப்படையானது. ஒரு சிறந்த தாயும், தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்க இயலும். . ஆனால் அந்த சிறந்த தாயும் தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவியின் உறவின் வழியாகவே  சாத்தியமாகும். இந்தப் பின்னணியில்  குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது. 

இஸ்லாமிய கோட்பாடுகள் புகட்டுவதன்  இலக்கு,  ஒர் உண்மையான முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின் பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை உருவாக்குவதாகும்.

நம்பிக்கைதான்  ஈமானின் பெரும்  பலம்,  நான் பூமியின் பிரதிநிதி என்ற பொறுப் புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன் என்ற பண்புகளை மனித இனத்தினின் மீது புகட்டி உருவாக்கிவிடுவதன்  வழியாகவே இது  சாத்தியமாகும். இப்பண்புகள் இளமையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். மனிதனுக்கு கருத்து அரும்புவிடத் தொடங்கும்போதே  இவை பயிற்றுவிக்கப் பட வேண்டும்.  

இப்படி ஒரு நிலை நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால்  ஒரு சீரான குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும். குழந்தைகளின் முதல் பள்ளிக் கூடம் தான் வளரும் குடும்பமே. தாயையும் தந்தையையும் பார்த்தே குழந்தைகள் பழகி வளருகின்றன. ஒரு குழந்தை தானாகவே தன்னை பண்புள்ளதாக வளர்த்துக் கொள்ள இயலவே இயலாது.  “ தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” எண்பது நம்மிடையே வழங்கப் படும் ஒரு  பழமொழி. ‘ தாயை தண்ணீர்  எடுக்கும் இடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம் “ என்றும் கூறுவார்கள். எனவே நமது குழந்தைகள் நம்மால் கவனிக்கப் பட்டும் , நம்மால்  வளர்க்கப் படவும் வேண்டும். இதற்கு நம் குழந்தைகள் நம்மைக் காணும் போது தாயும் தந்தையும் மனமொப்பி இணைந்த குடும்ப அமைப்பு சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது.  சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில்  அடைக்கப் பட்டுள்ள சிறுவர்கள்  அந்நிலை அடையக் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் குடும்ப வாழ்வு இக்குழந்தைகளின் கண் முன்னே  சிதைக்கப் பட்டதே என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு  தந்தை தனது  வீட்டில் குழந்தைகளின் முன்னே  மதுவருந்தி விட்டு வைக்கும் மிச்சத்தை மகன் எடுத்துக் தெரியாமல் குடிப்பது நாம் கேள்விப்படும் ஒன்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!

குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தினர்கள் கணவன், மனைவி எனப்படும் ஆணும், பெண்ணுமே, குடும்பம் எனபது ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புகாட்டல் மற்றும் , இரக்க மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. நிறைவேற்ற  இயலாத பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சாட்டுவது இருவருக்கிடையில் அன்பை வளர்க்காது. ஒருவர் மீது ஒருவர் பொறுப்பைசுமத்தும் போது இந்த இரக்க உணர்வு மேலோங்க  வேண்டும். இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள். வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும் ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக ஒழுக்க சீலர்களாக  அமைய முடியும்.?

இந்த சூழ்நிலையில்  குடும்பத்தின் அமைப்பில் அதன் பொருளாதார வளர்ச்சியில்  பெண்ணின் பங்கு மிக அடிப்படையானது. மனைவியே குடும்பத்தின் அஸ்திவாரம். இதனால்தான் வீட்டை மனை என்கிறார்கள். இதை ஆள்பவளே மனைவி.  தலைமை தாங்குவது  ஆணின் பொறுப்பில் இருந்தாலும் பெண்ணே குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள். 

தித்திக்கும் திருமறை  ஆண், பெண் படைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது. திருமறையில் கூறப்படுகிறது.

உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்” (ஸூரா-ரூம் 21)

ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில் பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது. பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது. பெண்ணின் சிறப்புத் தன்மை மனோதத்துவ ரீதியாக ஆரம்பிக்கிறது.  

ஆண் அவனது இயற்கையான உடல் அமைப்பு, தோற்றம், பலம், வன்மை என்பவற்றால் உழைக்கவும், போராடவும்  சுமைகளை சுமக்கும் சுமைதாங்கியாகவே  படைக்கப்பட்டுள்ளான். உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு நோக்கி வரும் ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும், ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும், வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும் மாறிப்போகிறான். இதனால்தான் பல வீடுகளில் தட்டைப் பீங்கான்கள் உடைகின்றன.

பெர்னாட்ஷா நொந்து போய்ச் சொன்னார் “ பெண்களைப் போல ஆண்களுக்கு ஆறுதல் தர ஆள் இல்லை. ஆனால் பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு இந்த ஆறுதல்  தேவையும் இல்லை “ எனறு.

இவ்வாறு ஓர் ஆணைச் ஆணாகச்  செய்பவளே பெண்தான். அவனை மன நலம்   கொண்டவனாக வைத்து,  சமூகப் பொருளாதாரத்தின்  சிறந்த நற்பயன் தரும் சக்தியாக வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் (ஸல்) கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கிறார்கள்.

யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)

இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால் அவள் தன்னில் உருவாக்கிக் கொள்ள வேண்டிய அம்சங்கள் யாவை?

கணவன் மனைவி  இருவரும் சில மணிநேரங்களில் நிறைவு பெற்று முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும் உறவாடக் கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்க்கைத் தோழர்கள். இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எந்தத் தரப்ப்பார் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரது மனமொத்த   ஒருமைப்பாடு மற்றும்  உடன்பாடு மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பொருளியல் மற்றும் சமூகத்தரமும் பேணப் பட வேண்டும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்தக்  காரணத்தால்தான் கணவன் மனைவியாகப் போகும்  இருவரும் ஒருவரை ஒருவர் திருமணத்துக்கு முன்னரே  பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். நமது பகுதிகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இல்லை. 

ஒரு நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது நீ அவளைப் பார்த்தாயா?, அவளைப் பார், அப்போது உங்களிடையே ஓர் இணக்கத்தை  உருவாக்க அது மிகப் பொருத்தமாக அமையும்.எனக் கூறினார்கள்.

கட்டிடத்துக்கு மனைப் பொருத்தம் எப்படி அவசியமோ திருமணத்துக்கும் மனப்  பொருத்தம் மற்றும் உடல் பொருத்தம் ஆகியன அவசியமாகும். தான் விரும்பாத ஓர் ஆணுடன் எப்படி ஒரு பெண் வாழ முடியும்? எவ்வாறு அவள் அவனுக்கு மன அமைதியைக் கொடுக்க முடியும்? அப்படி அமைதில்லாதவன் எப்படி பொருளாதார ரீதியில் உயர முடியும்? இந்நிலையில் இருவருமே மன அமைதியை இழந்து தவிப்பர். உறவாடலின் முதல் அடிப்படையே இங்கு இல்லாமல் போகின்றது. பொருத்தமில்லா மனைவி பொருத்தமில்லாக் கணவனுக்கு மணமுடிக்கப் பட்டால்  வாழ்வின் அடிப்படையிலேயே  வெடிகுண்டு வைக்கப் படுகிறது என்றே பொருள்.  

அடுத்த அம்சம் மனதத்துவத்தைப் புரிந்திருத்தலாகும். திருமணத்தின் ஆரம்பத்தில் இனக்கவர்ச்சியின் வேகத்தால் இருவரும் மிகவும் சுமுகமாக உறவாட முடியும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக் கவர்ச்சி குறையத்துவங்கும். இப்போது ஆணின் மனத்தத்துவம் புரியாத ஒரு பெண் பல தவறுகளை அப்பகுதியில் இழைத்து முரண் பாடுகளை உருவாக்கி விடுவாள்.

கணவனுக்குக் கட்டுப்படல், அவனுக்கு நன்றி செலுத்தல், போன்ற பல விடயங்களை இப்பகுதியில் இறைதூதர் (ஸல்) அவர்கள் திரும் பத்திரும்ப வலியுறுத்தியதன் காரணம்  இதுவேயாகும். கீழே சில ஹதீஸ்களை இக்கருத்தை விளங்குவதற்காகத் தரவிரும்புகிறேன்.  

தனது கணவனுக்கு நன்றி செலுத்தாத ஒரு பெண்ணை அல்லாஹ் பார்ப்பதில்லை. அவனது தேவை இன்றி அவள் இருக்கவும் முடியாது. “ (அல் ஹாகிம் -அல் முஸ்தத்ரக்)

“எப்பெண்ணாவது மரணிக்கும் போது கணவன் திருப்திப்பட்ட நிலையில்  மரணித்தால் சுவர்க்கத்தில் நுழைவாள்(இப்னுமாஜா, அல்ஹாகிம்)

ஒரு பெண் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு விளக்கத்துக்காக  வந்தாள். தான் வந்த நோக்கம் நிறைவேறியதும்  இறைதூதர் (ஸல்) அவளைப் பார்த்து உனக்கு கணவன் இருக்கிறானா? எனக் கேட்டார் ஆம் என அப்பெண் கூறிய போது அவனைப் பொருத்த வரையில் உனது நிலை என்ன? என இறைதூதர் (ஸல்) வின வினார்கள். சிலவேளை இயலாமல் போவது தவிர என்னால் முடிந்தளவு நான் அவனது கடமைகளை நிறைவேற்றுகிறேன் என அப்பெண் கூறினாள். அப்போது இறைதூதர் (ஸல்)

அவனைப் பொறுத்தவரையில் நீ எங்கே இருக்கிறாய் எனப் பார்த்துக் கொள். ஏனெனில் அவனே உனது சுவர்க்கமும், நரகமும்”  என்றார்கள்.(முஸ்னத் அஹமத், ஸூன் நஸாயி, முஸ்தரக் அல்-ஹாகிம்)

செலவழிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவன் கணவன். என்றாலும் மனைவிதான் வீட்டுச் செலவினங்களை நெறிப்படுத்துகிறாள். அந்த வகையில் வீட்டின் செலவினங்களை கணவனின் வருமானத்திற்கேற்ப நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவது மனைவியரின் பொறுப்பாகும்.  செல்வம் அதிகம் இருந்தால்   ஆடம்பர மோகமின்றி கவனமாகப் பணத்தைக் கையாளும் போக்கும் வறுமை நிலையாயின் பொறுமை யுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழும் திறனும் ஒரு நல்ல மனைவிக்கு இருக்க வேண்டும். இவ்வாறு கணவனின் செல்வத்தை மிகவும் கவனமாக பாதுகாக்கும் திறன் அவளுக்கு இருக்க வேண்டும்.

அத்தோடு கணவன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செலவழிக்க கடமைப்படுகிறானே தவிர அவனது சொத்து விவகாரங்களில் தலையிடவோ, அவனது உறவினர்களுக்காக செலவிடுவதில் தலையிடவோ மனைவிக்கு உரிமை இல்லை. என்பதை அவள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று நமது குடும்பங்களில் நடைபெறும் முக்கியமான பிளவுகள் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுக்கும் இந்த அமசத்தை உணராமல் இருப்பதால்தான் என்பதை இங்கு வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

இஸ்லாமியப் பொருளாதார சந்ட்டங்களின்படி , மனைவியின் சொத்தில் கணவனுக்கு தலையிட எந்தவிதமான உரிமையுமில்லை என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது. 

கணவனின் சொத்தைப் பாதுகாப்பதும் ஒரு மனைவியின் பொறுப்பு என்பதையும் இறைதூதர் (ஸல்) விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

நான்கு விடயங்கள் யாருக்குக் கிடைக்கப்பெறுகிறதோ அவர் உலக, மறுமையின் நன்மையைப் பெற்றவராகின்றார். நன்றி செலுத்தும் உள்ளம், இறை நினைவு கூறும் நாவு, சோதனைகளின் போது பொறுமையாக உள்ள உடம்பு, தன்னிலோ, கணவனின் சொத்திலோ பாவகாரியங்களை நாடாத மனைவி. (தபரானி - அல்கபீர், அல்-அவ்ஸத்)

மூன்று விஷயங்கள்   மனிதனின் சந்தோஷ வாழ்வுக்கு காரணமாகும் எனக் கூறிய இறை தூதர் (ஸல்) அவற்றில் முதலாவதைக் கீழ்க்கண்டபடி கூறினார்கள்.

நீ பார்த்தால் உன்னைக் கவரக் கூடிய, நீ இல்லாத போது தன்னையும், தனது செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய மனைவி “ (அல்-ஹாகிம் - முஸ்தத்ரக்)

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் இப்படிப்பட்ட நற்குணமுள்ள மனைவிகளைத்  தந்து அனைவரின் பொருளாதார வாழ்வும் சமூக ஒழுக்கமும் மேம்பட உதவுவானாக !
மீண்டும் சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ். 
இபுராஹீம் அன்சாரி

வேலை நேரமும் கல்வியும்..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2013 | , , , , ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அதுபோல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட மயிலாட ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6:30 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிப்பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரில் வங்கிகள்: 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படுகிறது அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான். லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட கேஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலக்சன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்
  • நாம் நம் பிள்ளைகளுக்கு ஐவேளை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .
இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

Sஹமீது
இது ஒரு மீள்பதிவு

"கிட்டன்ஸ்ல ஊர் முச்சூடும்" – ஊடகங்கள் 19

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , , , ,

ஊடக தர்மங்கள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் செத்துப்போய் பல மாமாங்கம் ஆகி விட்டன. வெறும் கற்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு கனரக பீரங்கிகள் முன் இழந்த தன் மண்ணை மீட்க சண்டை போடுவதால் பாலஸ்தீன மக்கள் மீது வானிலிருந்து பாஸ்பரஸ் கொத்து குண்டு மழை பொழியச்செய்து பச்சிளம் குழந்தைகள் என கூட பார்க்காமல் அழித்தொழிக்கும் இஸ்ரேல் அரசே முன்னின்று நடத்தும் அரசு பயங்கரவாதத்தை அமெரிக்கா மெச்சி உள்நாட்டு பாதுகாப்பு என அதை ஆதரித்து இஸ்ரேலுக்கு ஆதரவான தனது குரலை பிரகடணப்படுத்துகிறது ஒவ்வொரு முறையும். அதை அப்படியே அச்சு பிசகாமல் ஏற்று தன் அச்சுத்தொழிலையும், தொலைக்காட்சித் தொழிலையும் வளர்க்கும் ஊடகங்கள்.


சமீபத்தில் சிரியாவில் பஸார் அல் அசாத் என்னும் கொடிய மனித மிருகத்தின் அரசு அப்பாவி பொது மக்களின் மேல் ரசாயன விஷ குண்டுகளை போட்டு சுமார் 1300க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என அந்த விஷக் காற்றை சுவாசித்த அனைவரையும் கொன்று குவித்தது. இதற்காக பச்சாதாபப்பட்டு அமெரிக்கா தனது போர்க்கப்பலை சிரியா எல்லையோர கடல் பகுதியில் பிரிட்டனின் உதவியுடன் எந்நேரமும் சிரியாவை தாக்க தயாராக உள்ளது. இது சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்கள் மற்றும் அங்குள்ள அப்பாவி பொது மக்கள் மேல் அனுதாபப்பட்டு செய்யப் போவதாக தெரியவில்லை. அதன் மூலம் எப்படியாவது ஈரானை நிலை குலையச் செய்யவே இந்த ஏற்பாடு.


தமிழகத்தில், இளவரசன் நல்லவனோ? கெட்டவனோ? அவன் காதலித்து கல்யாணம் செய்ததது சரியோ? தவறோ? ஆனால் அவன் இறந்த பின் அவனுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவனுடைய இனத்தின் தலைவரை ஏன் அரசு அனுமதிக்கவில்லை? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இருக்கலாம். சரி.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவருடைய ஊரில் பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவர் அத்வானி சேலம் வந்து ஆடிட்டர் ரமேஷுக்கு இரங்கல் தெரிவித்து பெரும் மாநாடே நடத்த அரசு எப்படி அனுமதித்தது? அங்கு சட்டம் ஒழுங்கு எல்லாம் லீவு போட்டு விட்டு வெக்கேஷனில் போய் விட்டதா?

கமலின் "விஸ்வரூபம்" படத்திற்கு ஆதரவாகவும், கருத்துச்சுதந்திரம் பற்றியும் ஓரணியில் திரண்டு கொக்கரித்த ஊடகங்களும், அதே கபோதிகளும் இன்று "மதராஸ் கபே" படம் ஒரு இனத்திற்கு எதிரானது என்று கூக்குரலிட்டு அதை தடை செய்தே தீர வேண்டும் என்று கூறி மரத்திற்கு மரம் நிறம் மாற்றும் பச்சோந்திகளையெல்லாம் ஓரம் கட்டி மரத்திலிருந்து அவைகளை வேடிக்கைபார்க்க வைத்து விட்டன. 

அன்று கட்சத்தீவை ஏகோபித்த முடிவில் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்து விட்டு இன்று அதை திரும்பி பெற்றுத்தீர வேண்டுமென சபதமெடுக்கின்றன அரசியல் கட்சிகள்.

ஊடகங்கள் சித்தரிப்பது போல் அல்லது உண்மையில் பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த குண்டு வெடிப்பில் நேரடி தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் பல வருடங்கள் வாடிக் கொண்டிருந்த சரப்ஜித் சிங்கை நேரில் சென்று பார்த்து வர அவர் குடும்பத்திற்கு பாக்கிஸ்தான் விசா கொடுத்தது. பிறகு சிறையில் ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு இறந்த பின் அவருடைய உடலை இறுதி ஈமச்சடங்குகளுக்காக குறைந்த பட்ச மனிதாபிமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது அந்த பயங்கரவாத நாடு. 

ஆனால் அஃப்சல் குரு என்ற இந்திய மாநிலங்களில் ஒன்றான கஷ்மீரத்து ஏழை இளைஞன் பாராளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான் (நேரடித் தொடர்பு இல்லை என்பது உலகறிந்த உண்மை) என்று காரணம் கூறி உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறிய "காவி பயங்கரவாதம்" பற்றிய சர்ச்சையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பாராளுமன்றத்தில் அமளி, துமளியில் ஈடு பட்ட பாஜகவின் வாயை அடைப்பதற்காக பிரணாப் முகர்ஜி மூலம் இரவோடு இரவாக அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவனுக்கு முன் எத்தனையோ பெரும் குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டணை பெற்று (ராஜீவ் கொலையாளிகள் உட்பட) தண்டணைக்காக காத்திருப்போர் பட்டியலில் வரிசையில் நிற்க இவனை மட்டும் விடிகாலையிலேயே தூக்கிலிட்டு அவன் மனைவி, பிள்ளை குடும்பம் கடைசியில் அவனுடன் பேசி பிரியா விடைபெற வாய்ப்பு கேட்டும் அனுமதிக்காமல் அவனுடைய உயிரற்ற உடலை இறுதிச்சடங்கிற்கு அவனுடைய குடும்பத்திற்கு ஒப்படைக்காமல் திகார் சிறையிலேயே அவன் போற்றும் இஸ்லாம் மார்க்கம் கூறும் இறுதிச் சடங்கேதும் நடத்தாமல் புதைத்து நொடிப்பொழுதில் அமெரிக்காவின் நிகழ்வுகளை இந்தியாவில் காணும் இந்த தொழில் நுட்ப யுகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விரைவு தபால் மூலம் தூக்கு தண்டணை நிறைவேற்றம் பற்றி அவன் குடும்பத்திற்கு தபால் அனுப்பி தன்னுடைய (பாசிச மத துவேச பார்ப்பனக்) கடமையில் கண்ணாக இருந்தது நம் தாய் திருநாடாம் பாரத நாடு என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது(!!!!???).

மாமியார் உடைத்தால் வெறும் மண் குடம்; மருமகள் உடைத்தால் அது பொன்குடமாகிப்போகும். உனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் அது சும்மா தக்காளி சட்னியாகிப் போகும் நம் நாட்டில். 

வடக்கில் எல்லைப்படையில் ஒருவன் சண்டையில் இறந்தாலும் நாடே கொந்தளித்து ஊடகங்கள் தோறும் கூக்குரலிடுகின்றன. ஆனால் தினம் தினம் தமிழக மீனவனை கடலில் ஸ்டெம்பின்றி, பாலின்றி, பேட்டின்றி விக்கெட் வீழ்த்துவது போல் வீழ்த்துகிறான் இலங்கை கடற்படை என்னும் கடற் கொள்ளையர்கள். கேட்க நாதியில்லை. ஊடகங்களெல்லாம் உச்சி வெயிலில் மயங்கிக் கிடக்கின்றன. 

பிரதம நாற்காலிச் சண்டையில் (காங்கிரஸ்,பாஜக) நாட்டில் இன்னும் எத்தனை குண்டு வெடிப்புகள் நடக்குமோ? இராணுவ வீரர்களை இழப்போமோ? நீர் மூழ்கிக்கப்பல்கள் நெருப்பில் மூழ்குமோ? மதிய உணவில் விஷம் கலக்கப்படுமோ? எல்லை சீன, மியான்மர், பாக்கிஸ்தான், இலங்கை அட்டூழியங்களுக்கு எத்தனை உயிர், உடமைகள் பறிபோகுமோ? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி மிதிபடுமோ? நாட்டில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் ராக்கெட் இன்றி எப்படி செவ்வாய்க்கிரகம் எட்டுமோ? சாதி, மதம் தாண்டிய பாலியல் பலாத்காரங்கள் டாஸ்மாக் கடைகள் போல் இன்னும் எப்படி பெருகுமோ? என இப்படி பட்டியல் நீளும் மாபாதகங்களை எண்ணி ஒவ்வொரு உண்மைக்குடிமகனும் நிச்சயம் அஞ்சாமல் அஞ்சி நிமிசம் கூட நகர்த்த முடியாது.

ஒரு இந்தியக்குடிமகனாக என் சொந்த கருத்து.

மு.செ.மு.நெய்னா முஹம்மது

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 9 17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2013 | , , , , ,

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக அரசியல் நிகழ்வுகள் ஒரே ஒரு தொடக்கத்தில் மட்டுமல்ல தொடர்ந்த சில காரணங்களாலேயே நிகழ்வுறும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து (திமுக) ‘ மூன்றெழுத்தில்  என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடி கைதட்டல் பெற்ற எம்ஜியார் நீக்கப் பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் அரசியல் நோக்கர்களால் பட்டியலிடப்பட்டன. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்கிற முப்பெரும் பொறுப்பில் ஒருவரான  பொருளாளர் பதவியில் இருந்த எம்ஜியார் நீக்கப் பட்டது ஏன்? 

முதலாவதாக, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்வராகக் கொண்டுவர எம்ஜியார் ஆற்றிய அரும்பணியை முன்னர் எழுதப்பட்ட அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அவ்விதம் எம்ஜியாரால் முதல்வராக்கப் பட்ட கருணாநிதி,  தன்னிடம் எல்லா அரசு நடை முறைகளிலும் ஆலோசித்து செயல்படுவார் என்று எம்ஜியார் எதிர்பார்த்தார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. வழக்கம்போல் கருணாநிதி ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காவிட்டாலும் அலட்சியப் படுத்திய நிகழ்வுகள் அங்கும் இங்குமாக நடைபெறத் துவங்கின. குறிப்பாக சில அரசு அதிகாரிகளின் பதவி மற்றும்   இடமாற்றங்களில் எம்ஜியாரின் பரிந்துரைகளுக்கு பால் வார்க்கப் படவில்லை.  இதனால் உள்ளங்களில் சில உரசல்கள் தீப்  பொறிகளாக பல திசைகளிலும் தெறித்து விழுந்தன. தூபம் போடும் பலர் சுற்றிலும் புகைவதை விசிறி  வைத்து வீசிவிடத் தொடங்கினர். இதில் வழக்கம்போல பல பார்ப்பன சக்திகள் அதிகம்.    

இந்த நிலையில் , மதுரையில் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்றது இந்த மாநில மாநாட்டில் இரண்டு விஷயங்கள் அப்போது குறிப்பிடப்பட்டதை மறக்க முடியாது. ஒன்று,  மாநில மாநாட்டின் செயற்குழுவுக்குப் பிறகு நடைபெற்ற  விருந்து. இதில் பரிமாறப் பட்ட அசைவ ஐட்டங்கள். நடப்பன ஊர்வன பறப்பன என்று பல ஐட்டங்கள். இதைப் பற்றி பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. கருணாநிதி இதற்கு அடித்த கமெண்ட்: “ சில பத்திரிகைகள் செயற்குழுவில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தன. பல பத்திரிகைகள் நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையைப் பார்த்தன” என்று கூறினார்.  இரண்டு,   எம்ஜியார்  பேசும்போது மாநில சுயாட்சிக்காக இராணுவத்தைக் கூட சந்திக்கத் தயார் என்று    வீராவேசமாகப் பேசியது.

இந்த மாநாட்டில் கருணாநிதி பேசும் முன்பே எம்ஜியார் பேசிவிட்டார். எம்ஜியார் பேசி முடித்ததும் கருணாநிதி பேசும் போது  கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. புரட்சி நடிகரின் பேச்சை கேட்க காத்திருந்த கூட்டம் முத்தமிழ்வித்தகர் மு. கருணாநிதியின் பேச்சை கேட்கக் காத்திருக்காமல் களைய ஆரம்பித்ததும் முதல்வருக்கு அதிர்ச்சி. உடனே ஒரு ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார். தலை சுற்றுகிறது என்று மயங்கி விழுந்தார். உடனே தலைவரின் பேச்சுப் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. உண்மைக காரணம் கூட்டம் இல்லாததே. கருணாநிதியின்  ரீங்காரம் போய் ஓங்காரம் உண்டாகி ஆங்காரம் ஏற்பட்டது.  அப்போது அவர் மனதில் உருவானதுதான் எம்ஜியாரை விலக்கிவிட வேண்டுமென்ற திட்டம். நீட்டிய இடத்தில் கையெழுத்திட நெடுஞ்செழியன் பக்கத்துணையாக இருந்தது அசட்டு தைரியத்துக்கு கட்டியம் கூறி அரசியல் வித்தகரின்  விநாச காலத்தின் விபரீத புத்திக்கு விதை போட்டது. 

அடுத்து கோவை செயற்குழுக் கூட்டம். மக்களின் வாயில் சாராயத்தை ஊற்ற வேண்டுமென்றார் திருக்குவளையார். இல்லை வேண்டாம் என்றார் நாடோடி மன்னன். ஏற்கனவே  இருந்த இறுக்கத்துக்குள்   இரும்பால் செய்த பிளவுக் கோடாலி  இடையில் புகுந்து இப்படி   அப்படி நெம்பிவிட ஆரம்பித்தது. 

அடுத்தபடியாக, கருணாநிதிக்கு சொந்தமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்த ‘எங்கள் தங்கம்’  படத்தில் எம்ஜியார் நடித்ததற்கான சம்பள பாக்கி ரூபாய் ஒன்றரை இலட்சத்தை தனது சார்பாக வங்க தேச யுத்த நிதிக்குக் கொடுக்கச் சொல்லி இருந்தார் எம்ஜியார். அதன்படி யுத்த நிதிக்குக் கொடுத்துவிட்டதாக கணக்குக் காட்டி கணக்கை சரி செய்தனர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தார். ஆனால் இதை முறையாக படிவங்கள் மூலம் செலுத்தத் தவறியதால் எம்ஜியாருக்கு அந்தப் பணத்துக்கான வருமானவரியைக் கட்டும்படி வருமானவரித்துறை நோட்டிஸ் விட்டு அதற்குரிய வரியையும் கட்ட வைத்து எம்ஜியாரை எரிச்சல்பட வைத்து. . 

இதைத் தொடர்ந்து தனக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார் எம்ஜியார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு அமைச்சராக இருக்கக் கூடாது என்று சட்டம் பேசினார் கருணாநிதி. திரைப்  படத்தில் பலவகையிலும் ருசிகண்ட எம்ஜியார் பூனை இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை நம்பி இருக்கும் வகைக்கொரு கதாநாயகிகளை வாழ்விழக்கச் செய்துவிட்டு அமைச்சர் பதவி என்கிற அலங்காரத்தை சூடிக் கொள்ள எம்ஜியார் விரும்பவில்லை. திரை  உலக வாழ்வை இழக்காமலேயே அமைச்சராக்க கருணாநிதி நினைத்தால் நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் அங்கம் தந்து தன்னை அருகில் அமர்த்திக் கொள்ள கருணாநிதி விரும்பவில்லை என்று எம்ஜியார் ஆத்திரப் பட்டார்; ஆதங்கப் பட்டார். ‘நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கு சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது’  என்றும் ‘ நான் ஒரு கை பார்க்கிறேன்! நேரம் வரும் கேட்கிறேன்!  பூனையல்ல புலிதான் எனப் போகப் போகக் காட்டுகிறேன் ‘  பல்லவி பாடி இதயத்தின்  எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார். 

இதற்கிடையில் எம்ஜியாருக்குப் போட்டியாக எம்ஜியாரைப் போல் நடை உடை பழக்கி கருணாநிதி,  தனது மகன் மு. க. முத்துவை திரைப்  படத்தில் அறிமுகப் படுத்தி பிள்ளையோ பிள்ளை என்று திரைப் பட சந்தைகளில் கூடையில் வைத்துக்  கூவத் தொடங்கினார். ஆனால் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஏழைகள் கொண்டாடிய எம்ஜியாரின் புகழ்ச் சூரியனுக்கு முன்,  மு க முத்து என்ற பனித்துளி கன  நேரத்தில் காணாமல் போனதுதான் மிச்சம். அதிலும் பிள்ளையோ பிள்ளை படத்தை ரசிகர்களின் அரவமே இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மட்டுமே நூறு நாட்கள் ஓடச்செய்து அதன் நூறாவது நாள் விழாவில் எம்ஜியாரையும் கலந்து கொண்டு பாராட்டச்செய்தார். ஆனால் எம்ஜியார் பேசும்போது “ நடிப்புலகில் அவரவரும் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்து நடித்தாலே வெற்றி பெறலாம். பிறரைப் போல் நடிக்க முயற்சிப்பது எடுபட்டு வெற்றி பெறாது; மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்கிற பொருள்படப் பேசி குத்திக் காட்டியதால் பிளவுகள் அதிகரித்தன.   

இதுதான் தருணம் என்று கணியூர் குடும்பம் என்று திராவிட வரலாற்றில் குறிப்பிடப்படும் கே. ஏ. மதியழகன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோர் எம்ஜியாரைத்  தூண்டி விட்டனர். கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்ட   “தென்னகம்“ என்கிற பத்திரிக்கை எம்ஜியாருடைய நிகழ்ச்சிகளுக்கும் பேச்சுக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கருணாநிதியை இருட்டடிப்பு செய்யத் தொடங்கியது. அதுவரை கருணாநிதிக்கு அடித்த ஜால்ராக்களை அப்பத்திரிகை வசதியாக மறந்தது.  மயிலாப்பூர் மாங்கொல்லை என்ற இடத்தில் நடைபெற்ற மதியழகனும் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கணக்குக் காட்ட வேண்டுமென்று எம்ஜியார் வெளிப்படையாகப் பேசினார். அவ்வளவுதான்! காத்திருந்த பத்திரிகைகள் எம்ஜியாரை கரை படாத கரங்களுக்கு சொந்தக் காரர் என்பதாகவும் கருணாநிதியை ஊழல பேர்வழி என்றும் சித்தரித்து தங்களின் பக்கங்களை நிரப்பிக் கொண்டன. தினமலர் போன்ற பத்திரிகைகளும் மக்கள் குரல் போன்ற அதுவரை அட்ரஸ் தெரியாத பத்திரிகைகளும் நன்றாகக் கல்லாக் கட்டின. 

மக்கள் மன்றத்தின் இடையே தனது திரைப்படங்களில் ஒழுக்க சீலராகவும், மது அருந்தாதவராகவும், புகைப் பிடிக்காதவராகவும், ஏழைக்கு  உதவும் குணம் படைத்தவராகவும், வயோதிகர்களை அதுவும் குறிப்பாக தாய்மார்களை வணங்கும் குணம் படைத்தவராகவும் காட்டிக் காட்டி தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்த எம்ஜியார் சொல்வது வேதவாக்கு என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த  உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை’ என்றும், ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்’  என்றெல்லாம் எம்ஜியார் பாடிய திரைப் பாடல்கள் ஏதோ கதைக்காக என்று எண்ணாமல் உண்மை என்று இன்றும் எண்ணும் ஒரு கூட்டம் தன்னை பின்தொடரும் என்று எம்ஜியார் போட்டக் கணக்கு அவருக்கு கருணாநிதியை எதிர்க்கும் துணிச்சலை தந்தது. மயிலாப்பூரைத் தொடர்ந்து திருக்கழுக் குன்றத்திலும் கூட்டம் போட்டுப் பேசவைத்தது. இரண்டாம் உலகப் போருக்கு செர்பிய இளவரசன் சுட்டுக் கொல்லப் பட்டது உடனடிக்  காரணமானது போல் திமுகவின் இரண்டாம் பிளவுக்குக் காரணமாக அமைந்தது.        

1972 அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி ஆகாசவாணி! செய்திகள்!  வாசிப்பது சரோஜ்  நாராயணசாமி!   என்று செய்தி வாசிப்பவர் மிகவும் மகிழ்ச்சி ததும்பும் குரலில் செய்தி வாசித்தார். தி மு கவிலிருந்து எம்ஜியார் நீக்கிவைக்கப் பட்டிருப்பதான செய்திதான் அது. பட்டி தொட்டியெங்கும் அதிர்ச்சி. பார்ப்பன முகாம்களில் ஆனந்தம். திராவிட இயக்கமொன்று பெரும்பிளவைச் சந்தித்ததில் அதிகாரவர்க்கத்தினருக்கு ஆனந்தம் பரமானந்தம். ஆனால் இந்தச் செய்தியை முடிவெடுக்க கருணாநிதி எத்தனை இரவுகள் சிந்தித்தாரோ தெரியாது ஆனால் என் இதயத்திலிருந்து அண்ணாவின் இதயக்கனியை  அறுத்து எறிந்துவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார். 

கல்லடி சொல்லடி என்பார்களே அவற்றை முதலமைச்சர் என்கிற முறையில் கருணாநிதி சந்தித்தார். பல  இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. வெகுண்டெழுந்த எம்ஜியாரின் ரசிகர் கூட்டம் வேலி தாண்டிய வெள்ளாடுகள் ஆயினர். பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகள் பூட்டப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  பல தரப்புக்  கதம்ப மலர்கள் ஒரு மாலையாகி எம்ஜியாரின் கழுத்தில் சூட்டப்பட்டன. செம்மொழி அறிஞர் என்று இன்று  புகழப்படும் கருணாநிதியின் மீது செம்மொழி அறியாத வசவுகள் மற்றும் வாசகங்கள் சூட்டப்பட்டன. சுவரொட்டிகள் இவற்றிற்கு சுருதி கூட்டின. புறநானூற்று தாய்மார்களும் அகநானூற்று அன்னைமார்களும் கருணாநிதிக்கு எதிராக ஒப்பாரிப் பாட்டுப் பாடி பொரிந்து தள்ளினர். 

சில அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எம்ஜியாரைத் தாங்கள் இயக்கத்துள் இழுக்கவும் வலை வீசின. தலைநகர் டில்லியில் இருந்த தங்களின் அலுவலகங்களுக்கு அழைத்துப் போயின. அத்தகைய கட்சிகள் நினைத்ததெல்லாம் ஒரு புகழ் வாய்ந்த திரைப்பட நடிகர் நமது கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு இலாபம் என்ற வகையிலேயே கணக்குப் போட்டன. 

ஆனால் எம்ஜியார் அனைவரின் கணக்கையும் பொய்யாக்கினார். 1972 அக்டோபர் மாதம்  17 ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் தனிக் கட்சி கண்டார். முன்னர் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியின் கருப்பு சிவப்புக்கு  இடையே வெள்ளை நிறம் கொடுத்து அதில் அண்ணாவின் படத்தைப் பொறித்தார். இந்த யோசனையை எம்ஜியாருக்கு வழங்கியவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம் கல்யாண சுந்தரம் என்று கூறப்படுகிறது. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான செய்தி அறிந்த மக்கள் வெள்ளம சென்னை  லாயிட்ஸ் சாலையில் இருந்த எம்ஜியாரின் அலுவலகம் மற்றும் இல்லங்களை நோக்கி ஆதரவு கோஷத்துடன் படை திரண்டனர். கே. ஏ. மதியழகனும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமியும் எம்ஜியாருக்கு வலது கரமாக செயல்பட்டனர். அத்துடன் நாராயணசாமி முதலியார் என்கிற சட்ட மேதையும் துணை நின்றார்.  . 

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவராவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டதை இங்கு குறிப்பிடவேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை ..சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே   தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.  ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை  கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு கண்ணதாசனும்  சம்பத்தும் காரணமாக இருந்தார்கள்.  அவர்களைப்  பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து அவர்களுக்குக்  கிடைக்கவில்லை.

ஆனால் இதற்கு எதிரிடையாக  எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தவர்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். காலம் காலமாக கட்டியாண்ட எம்ஜியார் ரசிகர் மன்றத்தினர் இதில் முதலிடம் வகித்தார்கள். 

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும். இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.சென்னையில் இருந்து மதுரை வரை இரயிலில் எம்ஜியார் பயணம் செய்த நிகழ்வு, இரயில நின்ற இடங்களிலெல்லாம் திரண்ட மக்கள் வெள்ளம்   இந்திய இரயில்வே வரலாற்றில் இதற்குமுன் என்றும் காணாதது.  

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று பலர்  எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல்  காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று அரசியல் வித்தகர்கள் நம்பினார்கள். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார். விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராகவும் ஆர்வமுடையவராகவும்  விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் நடத்திக்  காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு” - என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத பாமர கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோடு  உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. 

கண்ணதாசன் கூறுகிறார் “ எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.”

அ தி மு கவின் வரலாற்றுச் சிறப்புடைய திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், ஆகியவை  செப்பேட்டில் செதுக்கப்பட  வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். திமுகவுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்த திண்டுக்கல்,  திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு என்று பறை சாற்றி, எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகிறது என்று கட்டியம் கூறியது. பலர் எம்ஜியாரை  நோக்கிப் படை எடுத்து வந்தனர். அனைவரையும் அரவணைத்தார். . 

இந்த நேரத்தில்  கருணாநிதி அவர்களைப் பற்றி மீண்டும் இன்னும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவதும் அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை  குறிப்பிடுவதும் பொருத்தமாகும் என்று கருதுகிறேன்.

கருணாநிதி கட்சி மற்றும் அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார். கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. க. சுப்புவை அப்படித்தான் இழுத்தார். இன்னொரு உதாரணம் ஏ.கே. சுப்பையா. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி கருணாநிதிக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று தலைமைசெயலகத்தில்  இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். நினைவாற்றல் நிரம்பப் பெற்றவர். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, எழுதப் படாத சட்டம்  ஒன்றை தனக்குள் வைத்திருந்ததுதான். .

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவுவது பேரளவுக்கல்ல தனது உதவி  முழுதும் பயனாளிக்குப்  பயன்படும்படி  செய்வார்.  அவருக்கு  அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி கருணாநிதி,  பிறருக்கு உதவும் விஷயத்தில் சுத்த சைபர்.  இரண்டு பேருக்கும்  இடையிலே பேதம் இது  கருணாநிதியினுடைய சுபாவம் அது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த      பலவீனத்தினால்தான், கருணாநிதியின் மிகப் பெரிய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் எம்ஜியார் என்கிற இதயக்கனி உயிரோடு இருந்தவரை மீண்டும் முதல்வர் பதவி அவருக்கு  எட்டாக்கனியாக இருந்தது. கருணாநிதிக்குப் பல கஷ்டங்கள் தோன்றின. 

இன்னும் சுவையான செய்திகளுடன் இன்ஷா அல்லாஹ் தொடரும். 

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 8 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அகிலத்தின் அருட்கொடை, உலகத் தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, நம் அருமை நபி(ஸல்) அவர்களின் பாசமிகுந்த மகள், சொர்க்கத்து பெண்களின் தலைவி ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்வின் முக்கிய சம்பவங்கள் மற்றும் அதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் பார்க்கலாம்.

அகிலத்தின் இறைத்தூதர், முஹம்மது(ஸல்) அவர்களின் அருமை மகளார் இவ்வுலகில் செல்வச் செழிப்போடு வாழ நூறு சதவீதம் தகுதியானவர்கள் என்பதை இதுவரை வாழ்ந்த இன்னும் வாழ்ந்து வரும் இன்றைய அதிகார வர்க்கத்தினரோடு சிறிதளவு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால் சொர்கத்து பெண்களின் தலைவி, அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்களின் அன்பு மகள் இப்பூவுலகில் பிறந்தபோது தன் தாயோடு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா அம்மையார் எப்போது தூய இஸ்லாத்தை ஏற்றார்களோ அன்று முதல் மரணிக்கும் வரை ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்து கஷ்டங்களையும் துன்பங்களையும் தான் வாழ்ந்த சொற்பமான காலத்திலேயே சுமந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உண்மையில் கண்கள் கலங்குகிறது.

நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள், வரிசைப்படி சொல்வதாக இருந்தால் 1.ஜைனப்(ரலி), 2.ருகைய்யா(ரலி) 3.ஃபாத்திமா(ரலி) 4.உம்மு குல்தும்(ரலி). ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் பிறந்துள்ளார்கள். கிட்டத்தட்ட 20 ஹதீஸ்கள் வரை ஃபாத்திமா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு 3 அல்லது 6 மாதம் கழித்து ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணித்ததால் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் மிகவும் குறைவு.

நபி(ஸல்) அவர்களின் மகள் என்பதால் செல்வ செழிப்புள்ள ஒருசில நபித்தோழர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களை மணமுடிக்க நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய வளர்ப்புடன் ஒன்றாக வாழ்ந்த சொந்தம், நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க கல்வி கற்ற மாணவர், நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு துளிகூட மாறு செய்யாத அருமைத் தோழர் அலீய்(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீய்(ரலி) அவர்கள் பணக்காரரோ, அன்றைய மக்கா பிரதேசத்தில் வாழ்ந்த திடகாத்திர தோற்றமுடைய ஆண் அழகரோ அல்ல, ஒரு சாதாரண கருப்பு நிறத் தோற்றமுடைய ஆண் மகன்.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு பொருத்தமான தகுதியானவரைத் தான் மனமுடித்துத் தந்துள்ளார்கள் என்று நூறு சதவீதம் நம்பிக்கை நிச்சயம் ஃபாத்திமா(ரலி) அவர்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்ததால் தான், மரணிக்கும் வரை பாசம் நேசம் காட்டி தன் கணவர் அலீய்(ரலி) அவர்களோடு சந்தோசமாக வாழ்ந்துள்ளார்கள.

அலீய்(ரலி) மற்றும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் ஐந்து. 1.ஹஸன், 2. ஹுசைன், 3. முஹ்சீன், 4, ஜைனப், 5. உம்மு குல்தும். தன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரான ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி) மரணித்த பின்பு தன் பிள்ளைகளுக்கு அவ்விருவரின் பெயரை வைத்துள்ளார்கள் என்பதை நாம் அவதானிக்கும் போது, ஃபாத்திமா(ரலி) தன் சகோதரிகளின் மேல் எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தார்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்கள் மறைந்த தம் இரு மகள்கள் (ஜைனப்(ரலி) உம்மு குல்தும்(ரலி)) மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இறுதி காலகட்டத்தில் அவர்களுடைய மகள்களில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் மட்டும்தான் உயிரோடு இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உயிருக்கு நிகரான பாசம் நிறைந்தவராக ஃபாத்திமா(ரலி) அவர்கள் இருந்துள்ளார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களைப் பற்றி “என்னுடைய ஓர் சதை தூண்டு” என்று நபி(ஸல்) சிலாகித்துக் கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு என்று தான் ஒரு இறைத்தூதர், இஸ்லாமிய ஆட்சித் தலைவர் என்பதால் எந்த ஒரு தனிப்பட்ட சலுகைகள் எதுவும் கொடுக்கவில்லை. கடந்த வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் எந்த ஒரு ஆட்சித் தலைவரும் இப்படி தனக்கு பிறந்த மகளை ஒரு சராசரி மக்களோடு மக்களாக வாழ வைத்ததாக காண இயலாது.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் என்னதான் இறைத்தூதரின் மகளாக இருந்தாலும், வீட்டு வேலைகளை தானே முன்னின்று செய்யும் சராசரி பெண்ணாக வாழ்ந்தார்கள் என்பதற்கு பின் வரும் வரலாற்று சம்பவமே சாட்சி. சொர்கத்து வாசியான பெண் வீட்டின் உணவுக்காக மாவு அரைத்து அரைத்து அவர்களின் கைகளில் அச்சு ஏற்பட்டு ஒரு கடினமான தோற்றமாக மாறிவிட்டது. இதனை கண்ட அலீய்(ரலி) அவர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போர் கைதிகளை அடிமைகளாக மக்களுக்கு கொடுக்கிறார்களே, ஏன் இப்படி உடலை வருத்தி கஷ்டப்படுகிறீர்கள், உங்கள் தந்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு அடிமையை பெற்று வீட்டு வேலை செய்ய வைக்கலாமே, சென்று கேட்டுப் பாருங்களேன் என்று ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் கூற, ஃபாத்திமா(ரலி) அவர்கள் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு சென்றார்கள். ஆனால் அங்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை. தான் வந்துவிட்டு போன செய்தியை தன் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்குமாறு அன்னை ஆயிசா(ரலி) அவர்களிடம் கூறிவிட்டு வந்துவிட்டார்கள்.

பாசம் நிறைந்த மகள் தன் வீட்டிற்கு ஏன் வந்துள்ளார் என்பதை அறிந்த அருமை தந்தையான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடும் குளிரான அந்த இரவு நேரத்தில் ஃபாத்திமா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்து விட்டு, ஃபாத்திமா(ரலி) அவர்களின் தேவையை அறிந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள், “நீங்கள் என்னிடம் ஒரு வேலைக்காக ஒரு அடிமை வேண்டும் என்று கேட்டீர்களே, உங்கள் இருவருக்கும் அதைவிட சிறந்தது ஒன்று சொல்லித் தரவா?” என்று கூறிவிட்டு சொன்னார்கள் மருத்துவ குணம் நிறைந்த அண்ணலார் அவர்கள் “நீங்கள் தூங்குவதற்கு முன்னால் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை அல்லாஹு அக்பர் 34 தடை ஓதிவிட்டு உறங்குங்கள், நீங்கள் ஒரு வேலைக்காரனை வீட்டில் வைத்திருப்பதைவிட இது சிறந்தது” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்.

கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஃபாத்திமா(ரலி) அவர்கள் கேட்டது என்ன? நபி(ஸல்) அவர்கள் கொடுத்தது என்ன?. இருப்பினும் தன் தந்தை இறைத்தூதர் எது செய்தாலும் அதில் நன்மை உள்ளது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்த ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்நாளில் தன் தந்தை வழிகாட்டிய அந்த சிறந்த துஆவை ஓதி  வந்தார்கள், மேலும் அலீய்(ரலி) அவர்களும் ஒவ்வொரு நாளும் ஜமல், சிப்பீன் போன்ற கஷ்டமான யுத்த நாட்களிலும் ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது ஓதிவந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் வாசிக்கும் போது உள்ளம் சிலிர்க்கிறது.

ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர் அவர்களின் மகளுடைய வாழ்வு இவ்வளவு எளிமையாக இருந்துள்ளதே, ஆனால் நம்முடைய வாழ்வு ஃபத்திமா(ரலி) அவர்களின் வாழ்வு போல் எளிமையாக உள்ளதா? என்பதை நாம் சீர்த்தூக்கி பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் இறைத்தூதராகிய நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் மார்க்க கல்வி பயின்ற, தன்னுடைய சொந்தம் அவர் ஏழையாக இருந்தாலும், உழைத்து சம்பாதிக்கும் அருமைச் சொந்தம் அலீய்(ரலி) அவர்கள்தான் தன் மகள் ஃபாத்திமாவுக்கு பொருத்தம் என்று ஒரு பொறுப்பான தந்தையாக பெருந்தன்மையுடன் திருமணம் செய்து வைத்தார்களே, அது போல் என்னதான் பணம் செல்வங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், நம் மகளுக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வச்தியானவனாக, கட்டழகு ஆண் மகனாக கல்வியறிவு மிகுந்தவனாக இருப்பதை விட உழைத்து சம்பாதிக்கும் மார்க்க பற்றுள்ள எளிமைக்கு சொந்தக்காரராக, சுயமரியாதையுடன் இருந்தாலே போதும் என்று பொருந்திக் கொள்ளும் தந்தையரை இன்று காணமுடியுமா?

ஒரு மார்க்க பற்றுள்ள உழைப்பாளியை தனக்கு பொருத்தமானவராகத் தான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று பரிபூரண நம்பிக்கைக் கொண்ட சொர்கத்துவாசியான கண்மணி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மிகவும் சந்தோசமாகவும், ஒழுக்க நெறியோடும் அலீய்(ரலி) அவர்களுடன் வாழ்ந்தார்களே, அதுபோல் பெற்றோரால் மணமுடித்து தந்த கணவனைப் பொருந்திக் கொண்டு, ஒழுக்க நெறியோடு சந்தோசமாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? இதில் நிறையபேர் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் முடியாது அவர்களையும் நாம் கண்கூடாக கண்டும் வருகிறோம்.

சுவர்க்கத்து பெண்களின் தலைவி ஈமானில் உயர்ந்து நின்ற ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டு வேலைக்கு என்று தனியாக வேலையாட்கள்  இல்லாமல் வாழ்ந்துள்ளார்கள் என்றால் அநேக முஸ்லீம் வீடுகளில், தம் சொந்த துணி துவைக்க, சாப்பிட்ட பாத்திரம் கழுவ, வசிக்கும் வீடு சுத்தம் செய்து கழுவ, தன்னை பெற்ற தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேலைக்காரர்களை வைத்திருக்கிறோமே, இதுதான் முன்மாதிரி சமுதாயத்திற்கு அடையாளமா? சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து ஏன் இன்னும் படிப்பினை பெறாமல் உள்ளோம்?

ஒரு தந்தை தன்னுடைய அதிகாரம், சக்திக்கு உட்பட்டு தன் பிள்ளைகளுக்கு சேரவேண்டியவைகளை சேர்த்து வைத்திருந்தும், அது தனக்கு போதவில்லை என்று திருமணத்திற்கு முன்பும் பின்பும் தன் தந்தை தாயிடம் இன்னும் சட்டம் பேசி பிடுங்கித் தீர்க்கும் பிள்ளைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் செல்வப் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வில் கிடைக்கும் நம் மறுமை வெற்றிக்கு ஒரு நல்ல வழிகாட்டி உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளும் நிலயில் நாம் எத்தனை பேர் உள்ளோம்?

நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

சுவர்கத்துவாசியான ஃபாத்திமா(ரலி) அவர்கள் பற்றி இன்னும் அறியப்படாத செய்திகள் அடுத்த பதிவில் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

Ascertained Return (Dhua of a student – III) - உன்னையே மீண்டடைவேன் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2013 | , , , , ,

The only One
I would try so hard
to be close with,
is my Allah alone ...

I have learned ...
I think I have experienced loneliness..
But, this is not loneliness...  

For some reasons
I have stopped caring
about the people around me....
I loved this isolation
from people around me....

I understood
the sweet isolation
that
the prophet PBUH experienced
in his state of deep thinking
staying in cave of mount Hira....

Ya Allah
You just made me realise
"look Shahnaz ...l
look around you
the  people you thought of depending on.
its just you and your Creator in the end "  .....
Ya Allah
You just made me laugh of the realisation ..
.
the day I return to You
will be my utmost aim in my life...
For now
For You  ...
I'll just continue on
with my responsibilities
You have given me in this world .

Love you Allah.

-Shahnaz Sabeer Ahmed


உன்னையே மீண்டடைவேன்! (ஒரு மாணவியின் துஆ – III)

ஒரே ஒருத்தனும் தனித்தவனுமாம்
என்னிறைவா
உன்னிறைவான
நெருக்கம் மட்டும் நாடியே
என்
தீவிர முயற்சிகள் நீளும்!

நான் கற்றுக்கொண்டேன்…
தனிமையென்கிற தன்னிறைவில்
நான் அனுபவித்ததொன்றும்
தனிமையல்ல

சில காரணங்களுக்காக
என்னைச் சூழ்ந்திருப்போரின்
அபிப்ராயங்கள்
என் கவனத்தை ஈர்ப்பதை
தடுத்துக் கொண்டேன் – அவ்வளவே!
இந்த
உலகத்திருப்போரின் ஊடுருவலற்ற
ஒற்றையிருப்பு
எனக்குப் பிடித்திருந்திருக்கிறதுபோலும்!

ஆனால், அதிலிருந்து
அந்த
இனிய தனித்திருப்பின் நிலையை
எனதருமை நாயகம் (ஸல்)
ஹீரா குகையில்
உலகை மாற்றிய
உயரிய சிந்தனைகளை
எப்படி அனுபவித்திருப்பார்கள்
என உணர முடிகிறது

யா அல்லாஹ்!
என்னைச் சூழ்ந்துள்ள
எவரும்
என்னுடன்
நிலைபெறமாட்டார்; துணைவரமாட்டார்
என்னைப் படைத்த உன்னைத் தவிர
என்னும்
உயரிய தத்துவத்தை
எனக்கு உணர்த்தியவனே…

உன்
உடனிருப்பே நிரந்தரம்
என்ற எண்ணம்
என்னுள் சிலிர்க்கிறது; சிரிக்கிறேன்.

உன்னை மீண்டடையும்
அந்நாளே
என்
வாழ்க்கையின் உச்சகட்டக் குறிக்கோள்

அதுவரை
உனக்காகவே
நீ
இவ்வுலகில்
எனக்கிட்டப் பொறுப்புகளைச்
செயல்படுத்தியே தொடரும் என் வாழ்க்கை

அல்லாஹ் உன்மேலான
அபரித அன்போடு…

ஷஹ்னாஸ் சபீர் அஹ்மது
மருத்துவ மாணவி (இரண்டாம் ஆண்டு)
தமிழில்   : சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

குணக்குன்று 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2013 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு