Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும். 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2011 | , , , ,


ஆட்சி செய்து முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆட்சியிழந்த  கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றன.

மேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவ‌லும்.

மனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.

க‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும், க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் இந்தியா உள்நாட்டிலும், உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.

மின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால் அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ? என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?

ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும், வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌ தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌,க‌த‌ற‌ அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிற‌ந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வ‌ந்து விடாது ஒரு போதும் ந‌ம‌க்கெல்லாம்.

பெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌ த‌டையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌றையும், க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண்மை.

வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.

மத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

நமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.

ந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே?

- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

வெற்றியின் விலாசம் ! 4

அதிரைநிருபர் | November 30, 2011 | , ,

துபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியான, முறையான நிர்வாகத் திறமையாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவும் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல், இயந்திரவியல், இயந்திரம் தூக்கிகள், கட்டுமானப் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், சுற்றுச் சூழல் மேலாண்மை, கல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ETA Ascon Star
குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.

இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்  மரியாதைக்குறிய செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார்கள் வெகு எளிமையாக. செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....


பெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும், அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? என்பது கேள்விக்குறி.

இந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றி, யார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan) வெற்றிக்கான முதல் படி.

வியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு! என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தவறுகளைக் களைய வேண்டும்.

வெற்றியின் போதும், தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல், இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சென்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவது, கல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவது, யாரை ஒருமையில், இருமையில், பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.

எங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல், அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.

தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.

-- ஸதக்கத்துல்லாஹ்

அன்பான வாசக நேசங்களே... !

கடந்த 2008 செப்டம்பர் மாதம் சகோ. ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் தமிழ் வாசம் என்ற வலைப்பூவில் வெளியான பதிவு. சாதிக்க துடிப்பவர்களுக்கு ஊக்கம் தருவிதமாக உள்ள இந்த பதிவை மீள் பதிவு செய்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு.

துப்பு(வதை) அறிவோமா ? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2011 | , , ,


சமீபத்தில் லண்டன் BBCயில் நம்ம இந்தியா சார்புடைய ஒரு செய்தியை எதேச்சையாக காண நேர்ந்தது அதில் கொல்கத்தா நகரின் பிரசித்திபெற்ற ஹவ்ரா பாலத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்றது அந்தச் செய்தி. அட! என்னடா அது வெடிகுண்டு மிரட்டலா இருக்குமோ !? என்று மேலும் அச் செய்தியை வாசித்தால் வெரி-சிம்பிள் அதுதான் எச்சில் மேட்டர் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் முட்டுக்கள் மீது அங்கு வசிக்கும் / கடந்து செல்லும் மக்கள் வெற்றிலையை வாயில் போட்டு மென்ற எச்சிலை தூற்றி (துப்பி) அந்த எச்சிலால் ஹவ்ரா பாலம் இரும்புத் தூண்கள் அரிக்கப்பட்டு வருகின்றனவாம்(!!?).

அட! இந்தியக் குடிமக்களா! நில அரிப்பை தடுத்திட சவுக்கு மரம் வளர்த்திடுங்கள், காடு வளருங்கள் என்று காட்டுக் கத்தலா அரசு கத்துது ஆனால் இந்த வெற்றிலைப் பாக்கு மென்றுத் துப்பும் எச்சிலின் அரிப்பை தடுக்க எதை வளர்க்கச் சொல்றதுன்னு யாராச்சும் யோசனை சொல்லுங்களேன்..!

இப்படியாக எச்சிலை (தூற்றி) துப்பி இந்த பாலத்தை பலமிழக்கச் செய்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அல்லது கவிழ்த்தால் அதுதான் கின்னஸ் சாதனையாக இருந்திடப் போகுது. ஆனால், அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அந்த கின்னஸ் சாதனையை யார் செய்ததது என்று  தனிமனிதர் யாரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாது. ஆனால், ஒட்டு மொத்த வெற்றிலை குதப்பிகளைத்தான் சென்றடையும் என்பதினை நாம் மறுக்கப் போவதுமில்லை. .

எனது நண்பர் ஒருவர் நல்ல திடகாத்திரமான ஆள் இவர் ஒரு நாள் வெற்றிலைப் பாக்குக்கு தொடர்ந்து குதப்பும் ஒருவரிடமிருந்து கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு வாங்கி குதப்ப ஆரம்பித்தார். அடுத்த கணமே நண்பர் மயங்கி விழுந்து விட்டார். நான் பதறிப்போய் அவரை ஆஸ்பத்திருக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தேன் வெற்றிலையை கொடுத்தவரோ கூலாக அட “அது எல்லாம் ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் மயங்கி விழுந்தவர் ஐந்து நிமிடத்தில் எழுந்தும் விட்டார்.

அந்த வெற்றிலைப் பாக்குக்கு பழக்கப்பட்ட குதப்பியான அவரிடம் மேலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது “வெற்றிலையின் பின்புறம் ஒரு வகை பூச்சி இருக்குமாம் அதை வாயில் போட்டு மென்றதும் அது குடல் உள்ளே போய் மயக்கத்தை ஏற்படுத்துமாம்(!!?)" அப்டின்னா “உங்களுக்கு ஏன் மயக்கம் வரவில்லை” என்று கேட்டதற்கு.

அவர் சொன்னதுதான் அதைவிட ஹைலைட் ! “எப்பொழுதெல்லாம் வெற்றிலையையும் பாக்கையும் சேர்த்து மெல்லுவதற்கு ஆயத்தமாவேனோ அப்போது அந்த வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி பூச்சிகளை கொன்று விடுவேன்” என்று அவரது பூச்சி கொல்லி டெக்னிக்கை சொன்னவர் மேலும் வெற்றிலைப் பாக்கு பற்றி PhD செய்யுமளவிற்கு அலப்பறை செய்தவருக்கு அதன் தீங்குகள் பற்றி சிறிதளவேனும் அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரது அலப்பறையிலிருந்து அறிய முடிந்தது.  

நம்ம ஊரில் தெருக்களில் ஓரத்தில் / ஸாரி கொஞ்சம் நடுவில் உள்ள எலெக்ட்ரிக் (EB) போஸ்ட் அடியில் அரித்து இருப்பதை நாங்கள் ஊரில் இருக்கும் போது EB அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தபோது அதற்கு அவர்கள் சொன்னது “நாய்கள் அங்கே சிறுநீர் அடிச்சு (??)  அந்த EB போஸ்ட்டுகள் வலுவிழந்து போய் விட்டது”  என்று ஒரு நூதனமான பதிலை பொறுப்பான நம்ம E.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க !.

நாமதான் E.B.க்கு இடம் வாங்கி கொடுத்த கையோடு அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆளுக்கு '10 மா' தென்னந்தோப்பும் வாங்கி கொடுத்து இருந்தா இன்னும் பலவகையான கழிவுகளின் அறிய நலன் / கெடுதிகள் பற்றி தெளிவா(!) மின்சாரவாரிய (அலுவலக!!??) ஆட்கள் நமக்கு வகுப்பெடுப்பார்கள் போலும்.   

டவுட்டு என்னவென்றால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் சிறுநீருக்கும், மக்கள் வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயில் போட்டு நன்றாகக் குதப்பி மென்று துப்பும் எச்சிலுக்கும் இத்தனை பவாரா இருக்கு ? அப்படியான பவர் இருந்தால் ஏதாவது அணு உலைக்கு கடின நீருக்கு பதிலா! அல்லது ரியாக்டருக்கு மாற்றாக இதை முயற்சி செய்து பார்த்தால் ஏதாவது ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று யோசனை சொல்லத் தோனுது. 

இந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிகளை கவனித்தால் ஒன்று மட்டும் புலப்படும் இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள் அது என்னெவென்றால் அந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிய எச்சில்களை மூலைக்கு மூலை துப்புவதில் மட்டும்.

நானும் இது பற்றி எனக்குத் தெரிந்த கோணங்களில் யோசித்து பார்த்துவிட்டேன் மூலைக்கு மூலை இவர்கள் துப்பி வைப்பது ஏன் என்று விளங்கவில்லை இதனால் வரும் நோய்கள் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதாகவும் இல்லை (சகோதரர் ஜாகிர் ஒரு கட்டுரை போடலாம்) . 

இவர்கள் துப்பும் எச்சிலை நன்றாக கவனித்து பார்த்தால் அதில் உலக வரைபடத்தை பார்க்கலாம் மேலும் உற்றுப் பார்த்தால் வேற்று கிரகங்களின் வரை படங்களும் மிக தெளிவாக இருக்கும் (கூகிள் கவனிக்கவும்). இவ்வாறு இருட்டிய இடத்தில், முக்கோணம் குவியுமிடமித்தில், நிறுத்தி வைக்கப்பட்ட கம்பங்களில், இரும்புக் கம்பிகளின் அடியில் இவ்வாறாக துப்பும் துரதிஷ்டவாதிகளுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளை இவர்களுக்கு யாரும் எத்தி வைக்கவில்லையா?  அல்லது அரசுதான் இவ்வாறான சுகாதாரக் கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வு போதியளவு செய்வதில்லையா? / அல்லது அப்படிச் செய்வது இவர்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையா ? என்றும் கேட்கத் தோனுது.

இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் வாயும், நாக்கும் மிக முக்கியமான உறுப்புகள் / ஆயுதங்கள் இதை நாம் நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நேரான வழியில் நடந்தால் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து தீய வழியில் பயன்படுத்தி நாமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் தீங்கையும், சுகாதார சீர்கேட்டினையும் உண்டாக்கினால் நாளை மறுமை நாளில் நமது நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்று யாவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- Sஹமீது

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம் - மீள்பதிவு 4

அதிரைநிருபர் | November 28, 2011 | , , ,

இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது.

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court  

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது.

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன.

*****

ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது.

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943  

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது.

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்?

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen  

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm  

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன?

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது.

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm  

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது.

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது.

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து).

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்:

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html  

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54  

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html  

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096  

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078  

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது. அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்:

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html  / http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php  

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும்.

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

***

முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"

திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"

கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"

இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.

இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

***

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் - மீள்பதிவு 9

அதிரைநிருபர் | November 28, 2011 | , ,

பொதுவாக ஹஜ்பெருநாளை நாம் தியாகத்திருநாள் என அழைக்கிறோம்...நம் வாழ்க்கையிலும் சில நல்ல உள்ளங்கள் மிகப் பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
நமது இன்றைய இளமைக்கும் , வசதிக்கும் அவர்களின் பங்களிப்பும் தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது வெற்றி பெற்ற பிறகு அதற்க்கு 'நான்"தான் காரணம் என மார்தட்டுபவர்கள் மறவாமல் ஒரு மண்டலம் "மந்துகாபர்னி [வல்லாரை மாத்திரை ] எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியா , ஞாபக சக்தியின்மை பிரச்சினைகளுக்கு உதவும்.

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possessiveness லிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.

இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

மாத வருமானம் ஆயிரம் ரூபாயில் 5 பிள்ளைகளை காப்பாற்றிய தாய் தந்தையருக்கு 10 ஆயிரம் வருமானம் பெரும் ஒரு பிள்ளை ஐநூறு கொடுக்க முடியாததற்க்கு ஆயிரம் காரணம் சொல்கிறது.


இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம் பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது மட்டும் பேசுகிறோம்.

வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அம்பாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிறுத்தி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.


"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்த்துக்கள்... எப்படி இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.


வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.- Zakir Hussain


உங்கள் நண்பன் யார்.. ? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றி நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்தியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.

ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).

எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.

அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி இன்னாரை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல், நான் இருந்திருக்கக்கூடாதா?என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தான் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது.

அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.

இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம். (அபூதாவுது, திர்மிதி)

நட்பு அல்லாஹ்வுக்காக அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)

வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.

முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். சூரா அத்தவ்பா : 71)

நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறு உலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்

ஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி.

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2011 | , , ,

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.


ஊரில் அடை மழையாமே !? 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2011 | , , ,

மழை என்றால் அனைவரின் மனமும் மழலையாக மறுவுருவமெடுக்கும், துள்ளி விளையாடத் தவிக்கும், மழையில் நனைந்திட ஆசைகள் ஆயிரம்  இவைகள் வளைகுடாவில் இருப்பதனால், இதே நிலை அதிரையில் இருந்தால் எங்கே என் குடை என்றுதான் தேடுவோம் அது வேறு விஷயம்.

மழைக்கு மயங்காத மானிடனும் உண்டோ இவ்வுலகில், அல்லாஹ்வின் ரஹ்மத் பொழிந்தாலே வீதிகள் செழிக்கும், ஊர் செழிக்கும் ஏன் நாடும் செழிக்கும்.

சரலானாலும், சாய்தெடுக்கும் வெள்ளமானாலும், சில்லென்ற தூறலும் சங்கம் வைத்து தீர்ப்புகள் சொல்லும்... எத்தனை செண்டிமீட்டர் பெய்தோம் என்றும். மழை வருமா, வராதா என்று ஏங்க வைப்பதிலாகட்டும் வந்ததும் துள்ளிக் குதிப்பதிலாகட்டும், பெய்து முடிந்ததும் அரசாங்கத்தையும் அதிகாரிகளை தேடுவதிலாகட்டும் நம்மக்கள் என்றுமே இந்தியக் குடிமக்களே.

ஊரில் மழை என்றால் அன்று ஆகாஸவானி தான் ஆரூடம் சொல்வதை கேட்டிருக்கிறோம் அதன் பின்னர் தொ(ல்)லைக்காட்சிகளின் ஆதிக்கம் வந்ததும்... இன்றைய கால கட்டங்களில் "ரமணன்" என்றொரு தேய்ந்த ரெக்கார்டு மெஷெஜ் சொல்பவரை (தமிழ் புலமை கரைபுரண்டு ஓடுவது போன்ற நினைப்பில்) அடிக்கடி காண முடிகிறது, அந்த அலுவலகத்தில் வேறு யாருமே இல்லையா? 

அதெல்லாம் இருக்கட்டும் நம் ஊரில் பெய்துவரும் தொடர் மழையின் பலன் எந்த அளவுக்கு இருக்கும் என்று இனிமேல்தான் தெரியவரும். தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரினை புகைப்படங்களுடன் அதிரை மக்களின் சிரமங்களை அதிரை வலைத்தளங்களில் சுட்டிக் காட்டப்படிருக்கிறது.


இங்கே செக்கடிக் குளத்திற்கு மழை நீரின் ஓட்டம் பாய்வதை படத்தில் காணலாம்..

வழிந்தோடுமா செக்கடிக் குளம் !?

காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ் !
- அபுஇபுறாஹிம்

மிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2011 | , , , , , ,


நேற்று காலை சன்-செய்திச் சேனலில் தொடர்ந்து ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே அதன் செய்தியாளர் ஒருவரின் வக்கிரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு மக்களுக்கு பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் புகைப்படத்தினை 15 வினாடிகள் தவறாக காட்டிவிட்டதாக மன்னிப்பும் கேட்டது ஒரு ஆங்கில செய்திச் சேனல், அதற்கு நீதிமன்றமும் அபராதம் நூறு கோடி விதித்தது...

விந்தை என்னவென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்றும் சாமானியன் ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி ஊடக தர்மத்தினை நிலைத்திடச் செய்வோம். மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம், வாருங்கள் விவாதிக்கலாம்.

தனிமனித சாடல் இன்றி நேர்மையாகவும் நிதானத்துடனும் விவாதிப்போம், நமது கண்டனத்தை இங்கே பதிந்திடுவோம்.

- அதிரைநிருபர் குழு

நட்புக்குத் தோழர்கள் பரிசு ! 218

அதிரைநிருபர் | November 22, 2011 | , , , , ,


>>>> பின்னூட்டங்கள் 200யும் தாண்டிச் சென்று கொண்டிருப்பதனால் பின்னூட்டங்களின் நிறைவில் வலப்பக்கம் இருக்கும் சிறிய சுட்டியை தட்டினால் 201க்கு பிறகு பதியப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து வாசிக்கலாம்... :) <<<<

சகோதரத்துவத்தின் நிழலாம் தோழமைப் பற்றி நாம் சரியாக புரிந்திருக்கிறோமா என்ற ஐயம் எனக்குண்டு. இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு, அமெரிக்க வாழ் தோழர் நூருத்தீன் அவர்கள் எழுதி, சத்தியமார்க்கம்.com தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" நூல் முதலாம் பாகம் பரிசளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!. ஆன் யுவர் மார்க்...செட்... கோ!
நட்பு!
நல்லதோர் 
மனிதம் செய்ய...
அது
நலம் பெற...
நண்பனின் கைகளில் 
கொடுத்துவிடு!

நட்பு...
சொந்தங்களை வென்ற
சுகமான சந்தம்,
பந்தங்களுக்குள் கட்டுறாத
பாந்தமானதொரு பழக்கம்!

நட்பு...
எதையும் எதிர்பார்க்காத
இதயம் கொண்டது,
விற்க வாங்க முடியாத
விலை மதிப்பற்றது!

வள்ளுவரே...
உடுக்கை இழக்கும்வரை
உதவப் பொறுப்பதில்லை...
இடுப்பில் இருக்கும்போதே
இழக்காமல் 
இருக்கிப் பிடித்து 
இடுக்கண் களையும்
எம் நட்பு!

இனி,

என் முதன்மை நண்பனுக்கு ஒரு வெள்ளை அறிக்கை. மற்ற நண்பர்கள் குறித்துப் பின்னூட்டுவேன்.

என் ஜாகிருக்கு...

இடுக்கண் களையவும்
இருப்பதைப் பகிரவும்
இதயத்துள் நுழைந்தவன் - நீ!

இளமை சிறக்கவும்
இனிதாய்த் திகழவும்
இன்முகம் கொண்டவுன் -நீ!

வணிகம் கற்கச் சென்று
மனிதம் கற்பித்தவன்,
மனிதர்கள் மத்தியில் 
புனிதம் போதிப்பவன்!

அந்த ஒரு நாள்
விடிந்திரா விடில்
அறிமுகம் என நீ
வந்திரா விடில்...

கால்பந்து திடலும்
கணினி மொழி வகுப்பும்
புதுக் கல்லூரி விடுதியும்
புல் விரித்தத் திடலும்

தற்கால நினைப்பில்
கண்றாவியாய்த் தோன்றும்
கடைக்கண் பார்வைகளும்
காதலிகள் கிறக்கமும்

உப்பளக் காற்றும்
உமுரிச்செடி பிரித்த
ஒற்றையடிப் பாதையும்

இரவின் துவக்கத்தில்
கிளம்பும் ரயில்
அதிகாலை அதிரையை 
அடையும் அழகும்

ஒற்றையாய் எனக்கு 
வாய்த்திருக்காது நண்பா!

எத்தனையோ எண்ணங்கள்
எழுதி முடித்தபோதும்
உனக்கென துவங்கியதை
முடிக்க மனமில்லை!

வயிற்றுக்குப் பசித்தால்
வாய்தானே உண்ணும்?
உடலை நகர்த்த
கால்தானே நடக்கும்?

என்னை உயர்த்தவல்லோ
உன்னில் நினைத்தாய்
உன்றன் துஆவில்நான்
உலகை ஜெயித்தேன்!

நட்பின் வலிமையை
நாலுபேருக்குச் சொல்ல
நானோ நீயோ
உன்னையோ என்னையோ
ஈன்றெடுக்க வேண்டும்...
நட்பும் தாய்மையும்
ஒத்த உணர்வுகள் என
நின்றுரைக்க வேண்டும்!

......உன் சபீர்!

சுவாசத்தின் வாசல் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2011 | , , , , ,

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 
மூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.

வாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.

வாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.

வாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா ? கோழிக் குருமாவா ? இல்லே பொரிச்ச மீனா ? என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.

மூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை? மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.

நம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.

மூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா ? அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.

சகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.

மூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.

நம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.

நம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.

சைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.

ஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.

பாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.

தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.

சைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.

மூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.

இப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.

ஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்? அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.

மூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.

'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

உணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா ? அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.

மூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா? சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட "நாத்தம்டிக்குதே" என்று ஒதுக்கத் தோன்றும்.

சுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் ? தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.

அடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.

மேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது ? கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

என்ன மூக்கைப் பொத்திட்டீங்க ? இனிமேல்தான் இருக்கு "உணவுக்கும் நானே, சுவாசத்திற்கு நானே" அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.


PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு