மாமா வந்தே எங்களிடம்
“மதராஸ் போவோம்” என்றார்கள்
ஆமா வென்று பஸ்ஏறி
அடுத்த நாளே வந்தோமே.
மாலைப் போதில் நாங்களெலாம்
மரினா பீச்சில் நின்றோமே
சாலை முழுதும் பெருங்கூட்டம்
சந்தோ சத்தின் அடையாளம்.
முதல்வர் கவர்னர் வந்தார்கள்
முண்டி யடித்துச் சென்றோம்நாம்
இதமாய் இருந்து கண்டார்கள்
ஏறிப் பறந்த ஊர்திகளை.
கூடிப் பறந்த விமானங்கள்
குட்டிக் கரனம் போட்டவுடன்
ஆடிப் போனோம் அச்சத்தால்
அதிசய மாகப் பறந்தனவே.
மஞ்சள், சிவப்பு, வெண்பச்சை,
மங்கிய கறுப்புப் புகைகக்கி
நெஞ்சை அள்ளும் காட்சியுடன்
நேராய்க் கூடிப் பறந்தனவே.
சாகச மெல்லாம் செய்தவுடன்
சாலை கடந்து விமானதளம்
காகம் போல்மேல் பறந்துமிகக்
கணக்காய் இறங்கி நின்றனவே!
அதிரை அஹ்மது


