சனவரி 1ம் தேதி 2014 - துபாய் மக்களுக்கு தூங்கி எழுந்த புத்தம் புது வருடம் காலை 11:30 மணியளவில் அலைபேசி அழைப்பு எங்கள் ஃபேக்டரியில் வேலை செய்யும் தமிழகத்தை சார்ந்த சகோதரர் விடுமுறை தினமாதலால் சொந்தங்களைச் சந்திக்க தேரா (ஜெபல் அலியிலிருந்து துபாய்) வந்த ஒருவருக்கு (வயது 50) நெஞ்சு வலி. அவரை துபாயில் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்ற கேள்வியோடு அவரின் உறவினர் கேட்டார்.
சற்றே பதற்றமான என் பதிலோ "சட்டென்று அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், வலி அதிகமென்றால் ஆம்புலன்ஸை அழையுங்கள்" என்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். அவர்களோ அருகில் இருந்த பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே முதலுதவியைச் செய்த மருத்துவர் உடணடியாக அவருக்கு ஆஞ்சியோ கிராஃபி செய்யனும் என்று மருத்தவமனை (வியாபாரிகள்) அடுத்த கட்டமாக விலைப்பட்டியலை எடுத்து, இதற்கு இவ்வளவு அதற்கு இவ்வளவு என்று பேரம் மட்டுமல்ல இன்சூரன்ஸ் இதுக்கு அனுமதி அதுக்கு அனுமதியில்லை என்று கிட்டத்தட்ட பகல் மூன்று மணி வரை கடத்திக் கொண்டு இருந்தார்கள்.
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட சகோதரரின் உறவினர்களும் அவர்களின் நண்பர்களும் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி கேட்டால் பெல்ஹொல் மருத்துவமனைக் காரர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அடுத்து அவர்களாகவே இன்னும் பிற இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அவர்களும் இதேபோல் இவ்வளாவு செலவாகும், முதலில் அட்வான்ஸ் இவ்வளவு கட்டனும் என்ற பேரமும் தொடர்ந்திருக்கிறது.
மாலை ஐந்து அரை மணிக்கு அவரின் உறவினர்கள் எனக்கு மீண்டும் ஃபோன் செய்தனர் மேற்சொன்னவைகள் விளக்கிய பின்னர், உடணடியாக பெல்ஹொல் மருத்துவமனைக்குச் சென்றேன், அதற்குள் அவர்களாகவே ஈரானியன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்று ஆம்புலன்ஸும் ரெடியாகி இருந்தது.
அங்கிருந்து அவரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் ஈரானியன் மருத்துவமனைக்கு சென்றது. அவர்களின் ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் மற்றும் முதலுதவியின் தொடர்ச்சி ஆனதும். காத்திருந்தோம், அடுத்ததாக ஆஞ்சியோ கிராஃபி டெஸ்ட் உடணடியாக துவங்கியது அதில் அந்த சகோதரருக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் அதனை உடணடியாக செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினர்.
அதற்கிடையில் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, வீட்டாரும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்க இயலுமா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதுவே எங்கள் முயற்சியாகவும் இருந்தது. ஆனால் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த நிலையில் விமானப் பயணம் சரிப்பட்டு வராது, அதோடு அவருடைய ஹைபர் டென்சன் கொஞ்சம் கூட குறையவில்லை என்று மறுத்து விட்டனர். அப்படியே வலுக்கட்டாயமாக அனுப்ப முயன்றாலும் ஒருவாரம் கழித்துதான் முடியும் என்று சொல்லி விட்டனர்.
அன்றைய பொழுது கழிந்தது, அடுத்த நாள் காலை 06:00 மணிக்கு நேரில் சென்று பார்த்தேன் நன்றாக இருந்தார், வழக்கமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறார். ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன்.
சனவரி 2ம் தேதியும் அமைதியாகவே சென்றது, அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ். பொழுதும் நன்றாகவே கழிந்தது, அந்த சகோதரரின் குடும்பத்தினரும் ஊரில் நிம்மதியாயினர்.
சனவரி 3ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11:00 மணிக்கு அவரின் உறவினரின் மொபைலில் அந்த சகோதரரோடு பேசிக் கொண்டேன். நலமுடன் தெளிவாக பேசிக் கொண்டு இருந்தார். மேலும் அங்கே மருத்துவமனையில் மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனையில் சொன்னதையேச் சொன்னார்கள், அதில் அதிக அவசரம் இருந்தது. உடணடியாக அதனைச் செய்தே ஆகவேண்டும் என்று சொன்னதால் பதற்றம் தொற்றியது.
மாலை ஏழு அரையானது இன்சூரன்ஸ் அனுமதி கிடைக்க தாமதமானதால் முதலில் டெப்பாசிட் செய்யுங்கள் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டச் சொன்னார்கள். அவசரத் தேவையறிந்து அன்று விடுமுறையானதால் நானும் எனக்கு அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் இருந்ததால் என்னோட முதலாளிக்கு தகவல் தெரிவித்தேன்.
எட்டு மணிக்கு எங்கள் முதலாளியே நேரில் வந்து அந்த தொகையை தனது கார்டு மூலம் அவர்கள் கட்டச் சொன்ன தொகையை செலுத்தி விட்டு பதிக்கப்பட்ட சகோதரருக்கு ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றார்.
மருத்துவமனை கேட்ட தொகையை செலுத்தியதும், வேலைகள் வேகமெடுத்தது... இரவு 10:30 மணிக்கு மேல் ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செய்ய இருக்கிறோம் என்றனர். ஆஞ்சியோ பளாஸ்ட் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னும் என்னவெல்லாம் என்று மேலும் விபரங்களை இரவு வெகு நேரமாக தேடியெடுத்து அறிய முற்பட்டேன்.
இரவு 11:15 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். அந்த சகோதரரின் சொந்தக்கார் "அஞ்சியோ ப்ளாஸ்ட் முடிந்து விட்டது நல்லவிதமாக இருப்பதாக" அனுப்பியிருந்தார்.
அந்த எஸ் எம் எஸ்ஸை 15 நிமிடம் கழித்துதான் பார்க்க நேர்ந்தது, அதனப் பார்த்ததும் உடணடியாக அவருக்கு ஃபோன் செய்தேன், அவரோ சற்றே தளர்ந்திருந்தார், குரலில் அழுகையின் கசிவு தெரிந்தது. "மூன்று அடைப்பில் இரண்டைதான் சரி செய்து இருக்கின்றனர் இன்னும் ஒன்றைச் செய்ய இயலவில்லையாம், காரணம் இருதயத்தின் இயக்கத்தில் வேகம் குறைந்து விட்டது, அதோடு உள்ளிருக்கும் தசைகளில் தளர்ச்சி இருப்பதாலும் இரண்டு நாட்கள் கழித்துதான் செய்ய வேண்டும்" என்று மருத்துவர்கள் சொன்னதாகச் சொன்னார். எனக்கும் எதோ குழப்பமாக இருந்தது, இந்த சிகிச்சை முறையை ஒரே நேரத்தில்தானே செய்வார்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் அதற்கான தகுதியுடன் உடல் ஒத்துழைக்குமா என்று சரி பார்த்துதானே செய்திருக்கனும். அப்படியிருக்க ஏன் இந்த குளறுபடி என்ற அச்சமும் தொற்றிக் கொண்டது.
அதன் பின்னர் உறக்கமும் கலைந்தது, சிந்தனையோட்டம் சற்றே கவலையுடன் குழப்பத்தில் இருந்தேன். ஈரானியன் மருத்துவமனைக்கு ஃபோன் செய்தேன் டியூட்டி மருத்தவரிடம் பேசினேன் அவரும் மேற்சொன்னவையே அப்படியே விளக்கமாச் சொன்னார். அதோடு கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்றும் ஆறுதல் சொன்னார்.
நள்ளிரவு 12:50 மணியளவில் அதாவது சனவரி 4ம் தேதி மீண்டும் அந்த சகோதரரின் உறவினரின் அலைபேசி அழைப்பு "மாமா மவுத் ஆகிவிட்டார்கள்" என்ற குரலின் அழுகையை சமாதானப் படுத்த தடுமாறினேன் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்".
அடுத்த 15 நிமிடத்தில் நானும் அங்கே சென்று விட்டேன், அந்த அதிர்விலிருந்து மீளுவதற்கு தவித்துக் கொண்டிருந்தேன். அனுதாபமும் வருத்தமும் கலந்து எனது குரலை கோபத்தில் உயர்த்த வைத்து விட்டது சத்தம் கேட்டதும். ஓடிவந்தனர் மருத்துவர்கள், கூலாக "வருந்துகிறோம் சட்டென்று ஹார்ட் அட்டாக் வந்து விட்டது அதனால் இறந்து விட்டார்" என்று சொன்னதும் வல்லமை நிறைந்த அல்லாஹ் அந்த நேரத்தில் அதிமாகவே பொறுமையை கொடுத்து அருளினான். அதன் காரணமாக சாந்தமாகவே மேலும் நடக்க வேண்டியதை கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டாருக்கு (ஊருக்கு) தகவல் கொடுக்கும் பொறுப்பை அவரின் சொந்தக் காரர்கள் செய்தனர், அதோடு மார்க்கம் அனுமதித்ததையே ஊரிலிருக்கும் அவருடைய மனைவி மக்கள் பொருந்திக் கொண்டு இங்கே (துபாயிலேயே) நல்லடக்கம் செய்ய அனுமதித்தனர் (அல்ஹம்துலில்லாஹ்).
முறையாகச் செய்ய வேண்டிய அனைத்து காகிதச் சடங்குகளையும் முடித்தெடுக்க ஒன்றரை நாள் ஆனது, சனவரி ஐந்தாம் தேதி அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அல்குஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது (அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தருள்வானாக).
இந்தப் பதிவு எழுதக் காரணம், மருத்துமனை (வியாபாரிகள்) பேரமும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் குதிரைச் சவாரியும் இன்னும் வேறு விஷயங்களையும் எழுதச் சொல்லி உசுப்பேத்தி விட்டிருக்கிறது.
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
அபூஇப்ராஹீம்
எச்சரிக்கை : புகைபிடிப்பதனால் ஏற்பட்ட விளைவுகளை கண்கூடாக கண்டதன் கண்ணீர் கசிவே இந்தப் பதிவு !


