உன்னை அறிஉண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி
தன்னை நம்பி தேடியவரே
தீர்வுகள் எட்டினர்
உன்னை நம்பு
உதித்து எழு
மயிர்க்கணக்கில் கால்களிருந்தும்
மரவட்டை யல்ல ஊர்வதற்கு
மான் குட்டி நீ
துள்ளிக் குதி
உறைந்து போவது
பனிக்கட்டிக்கு இயல்பு
நீ புலிக்குட்டி
விடைத்து நில்
புஜங்கள்
புடைக்க நிமிர்
உயர்ந்த எண்ணங்களை
உள்ளத்தில் உரமிடு
விருட்சங்கள் அனைத்திலும்
சுபிட்சங்கள் விளையும்
படிப்போ பிழைப்போ
பொறுப்பாய்ப் பாடுபடு
தேர்விலும் வெல்லலாம்
தெருவிலும் உயரலாம்
முன்னமொரு முறை
முயன்றது போதுமென்ற
எண்ணம் துற,
முட்டி மோதியே
ஓடு உடைந்திட
உலகில் வெளிப்படும்
குஞ்சை நினை
தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை
சொல்ல விழைவதை
சுற்றி வளைத்திட
சோம்பல் மீறிடும்
பொட்டில் அடித்ததுபோல்
சட்டெனச் சொல்
கற்க மறுத்தது
தவறு என்பதை
உணரும்வரைதான்
உறக்கம் வரும்
உண்ணப் பசிக்கையில்
உலகம் மறுக்கையில்
உழைக்க உனக்குள்ளே
உத்வேகம் வரும்
அந்த
ஒற்றை இழை பிடி
உன்னை அதில் இழை
தென்னை நிமிர்ந்ததுபோல்
விண்ணை எட்டு
நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!
Sabeer AbuShahruk

