இந்த தலைப்பில் பகுதி ஒன்று கடந்த 2012 ஏப்ரலில் அதிரைநிருபர் வலைதளத்தில் ஒரு எச்சரிக்கையூட்டும் ஆக்கமாக என் பெயரில் பதியப்பட்டது. அதனுடைய இணைப்பை இங்கே காணலாம்.
இப்போது எழுதப்படப் போகும் இந்தப் பகுதியை படிக்கும் முன்பு ஒரு வருடத்துக்கு முன்பே இது பற்றிய எச்சரிக்கை விடுத்து பதியப்பட்ட முதல் பகுதியை படித்துக் கொண்டால் இந்த பிரம்மாண்டப் பிரச்னையின் உண்மை உருவம் தெரியும் .
கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகர் புது டில்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் ஆறாவது கூட்டம், மினரல் வாட்டர் பாட்டில்கள் மேசைகளை அலங்கரிக்க நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய நீர்க் கொள்கை 2012 – ன் வரைவு வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொல்லப்பட்டது என்று எழுதினாலும் அதனால் தவறு வந்துவிடாது. இந்தக் கூட்டத்துக்கு இந்தியாவின் மவுன சாமியார்களின் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். இந்தத் தலைப்பில் நாம் பதிந்த பகுதி ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை அபாயங்களையும் இந்தக் கூட்டம் அட்சதை தூவி அங்கீகரித்தது.
இதன்படி,
அரசோ அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ இன்மேல் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான பாசன நீரை வழங்காது. (பேரூராட்சி மன்ற தலவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இனி தெரு குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்கிற தண்ணீர் பிரச்னைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை) . இதை செய்யப் போவது தனியார் அல்லது பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான்.
மளிகைக்கடையில் விற்கப்படும் மஞ்சள் மிளகாய் கொத்தமல்லி மைதா சீனி போல் இனி தண்ணீரும் ஒரு வணிகப் பொருள். இந்தத் தண்ணீர் ஆற்றில் ஓடி வந்தாலும் சரி, நிலத்தடிகளில் இருந்தாலும் சரி, பாசன நேரானாலும் சரி அவற்றிற்கு விலை உண்டு.
“காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது”
என்று பாடப்பட்டது ஒரு காலம். இப்போது நீரும் நம்மை விட்டுப் பிரிக்கப் பட்டு வர்த்தகப் பொருள் ஆகிவிட வழி திறக்கப்படப் போகிறது. இப்படியே போனால் காற்றும் கூட பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படலாம்.
வீட்டுக்குத் தேவையான தண்ணீரின் அளவின் பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்படுத்துதலை நிர்வாகம் செய்ய தண்ணீர் ஒழுங்காற்று ஆணையம் என்ற ஒன்று அமைக்கப்படும் . யார் கண்டது இனி பெரும் விருந்துகள் வைக்க வேண்டுமென்றாலும் ஒரு ஆளுக்கு இவ்வளவு தண்ணீர்தான் என்ற அளவு அரசால் அனுமதிக்கப் படலாம். தொண்டையில் விக்கல் வருமென்று கூடுதலாக இரண்டு பீப்பாய் தண்ணீர் ப்ரோவிஷன் வைத்தால் கூட அதைவிடக் கூடுதலாக சிலருக்கு விக்கல் ஏற்பட்டாலும் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிவந்துதான் விக்கல் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலை ஏற்படலாம்.
இப்போது வரவிருக்கும் மசோதாவின்படி, தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைத்து அவரவர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட நீரை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அரசு தலையிட்டு ஒழுங்கு படுத்த வேண்டிய நிதி - காப்பீடு – சேமிப்பு தொடர்பான பல சேவைகளை கட்டுப்பாடு இன்றி - தடையின்றி திறந்து விடுகிறது. தண்ணீர் போன்ற அத்தியாவசிய ஆனால் இலகுவாக நிர்வகிக்க இயலாத துறைகளில் தடைகளை அதிகரிக்கிறது. இதனால் தனியார்க்கு தண்ணீர் பட்ட பாடாகப் போகிறது.
மின்கட்டணத்தை கூட்டுவது குறைப்பது, தொலைபேசிக் கட்டணத்தை கூட்டுவது குறைப்பது, போக்குவரத்துத்த்க் கட்டணமனங்களை கூட்டுவது குறைப்பது ஆகியவைகளுக்கு ஒழுங்கு படுத்தும் ஆணையம் அமைந்திருந்து மக்களின் நாடித்துடிப்பை அறியாமலேயே திடீர் முடிவுகளை அறிவிக்கும் ஆணையங்கள் அமைந்திருப்பதுபோல் தண்ணீருக்கும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.
இதில் நாம் முக்கியமாக உற்று நோக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் அரசு அல்லது அரசுத்துறைகள் என்பது தண்ணீர் வழங்கும் “ சேவை” செய்யாது. தண்ணீர் வழங்கும் வசதிகளை வழங்குபவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதை இலாபகரமாக நிர்வகிக்கும் “வர்த்தகத்துறை" ஆகிவிடும் என்பதே. இதன் மூலம் நாம் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது என்ன வென்றால் தண்ணீர் பங்கீட்டு சேவை என்பது அங்கங்களுக்கோ அல்லது அரசு- தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக்கோ மாற்றப் படும்.
இதுதான் தலையில் இறங்கும் இடி. அதாவது நிலத்தின் சொந்தக்காரர்கள், வீடுமனை உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான நிலப்பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளைக் குழாய் வைத்து கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுக்கவோ அவருக்கு உரிமை இல்லை. இனி பத்திரப் பதிவுகள் நடக்கும்போது ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் என்று எழுதவேண்டியது இருக்காது. குறிப்பிட்ட நிலத்தின் அடியில் இருக்கும் நீர், நிலத்தை வாங்குபவருக்கு சொந்தமல்ல. ஆகவே பத்திரப்பதிவில் இத்தனை கிழமேல் ஜாதியடிக்கு உட்பட்ட நிலத்துக்கு அடியில் இருக்கும் நீர் தவிர மற்றவைகளை அனுபவித்துக் கொள்ள வேண்டியது என்று எழுத வேண்டி இருந்தாலும் இருக்கலாம்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால் தேசிய அளவிலும் மாநிலங்களுக்கு இடையிலும் ஏற்படும் தண்ணீர் தொடர்பான் பிரச்னைகளை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு ஒரு நிரந்தரமான தண்ணீர் வழக்கு நடுவர் மன்றத்தை உருவாக்கும். இந்த ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே பொதுவாக வரவேற்கலாம். அதற்காக ஆட்டுக் குடல் கறி சாப்பிடவேண்டுமென்ற ஆசைக்காக ஒரு ஆட்டையே அறுக்கலாமா?
இப்போது மேற்கண்ட அம்சங்களைக் கொண்ட ஒரு வரைவு சட்டம் பாராளுமன்றத்துக்கு வர இருக்கிறது. இந்தக் கொள்கையை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களுடன் ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் மாநிலமும் எதிர்த்துள்ளன.
அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமையை சில தனிப்பட்ட முதலாளிகளை திருப்திப் படுத்துவதற்காக இந்த தேசிய நீர்க் கொள்கையின் வரைவுசட்டம் வர இருக்கிறது. இது முழுக்க முழுக்க மாநிலங்களின் உரிமை மீது அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைதான் என்று மாநில முதலமைச்சர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மாநிலங்களில் விவசாயம் மற்றும் தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை மத்திய அரசே கட்டுப் படுத்தும். நாடு முழுதும் உள்ள நதிகள், ஆறுகள், காட்டாறுகள், ஏரிகள், குல்ன்கள், ஆழ்துளை கிணறுகள் உட்பட்ட எல்லா வகையான நீர் ஆதாரங்களையும் மத்திய அரசு அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். தண்ணீர் கொள்கை என்ற பெயரில் தண்ணீரை விலை வைத்து விற்கவும் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும் முயற்சிப்பதை தடுக்க ஒன்றிணைவது ஒரு காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு விவசாயத்தை நம்பி இருக்கிற நாட்டில் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்வதை தனியாரிடம் விட்டால் அது ஏற்கனவே சீர்கெட்டிருக்கிற விவசாயிகளின் வாழ்வையும் விவசாயத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும்.
இந்தியாவில் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது. பரவும் நோய்களில் 21% மோசமான நீராதாரங்களினால் ஏற்படுகிறது என்பதும் 5 வயது வரையிலான குழந்தைகள் இறப்பிற்கு சுகாதாரமற்ற நீராதாரங்களே காரணம் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது. இந்தியாவில் அனைத்து முனிசிபாலிட்டிகள் மக்களுக்குத் திறந்து விடும் தண்ணீர் எதுவும் பாதுகாப்பானதல்ல என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஏதோ தண்ணீர் என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றங்கள் திறந்துவிடும் தண்ணீர் பாதுகாப்பானதா சுத்தமானதா என்பதை சோதிக்க எவ்வித அமைப்பு ரீதியான ஏற்பாடும் இதுவரை இல்லை.
மேல்நிலை நீர் தொட்டிகளின் உள்ளே எலியும் பூனையும் ஒன்றாக கட்டிப் பிடித்துக்கொண்டு செத்துக்கிடந்த செய்திகள் எல்லாம் வெளியாகின்றன. நல்ல நீரும் சாக்கடை நீரும் சரசமாடிக் கலப்பது பூமிக்கடியில் நடக்கும் புதிய காதல் கதை. எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப் ப்பட்ட பகுதிகளில் குடிக்கத்தரும் தண்ணீரில் எரிபொருள் வாடை வருவதை மறுக்க முடியுமா?
மேலும் நல்ல நீரை மட்டும் பிரித்து எடுத்து வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. அதுதான் பாதுகாப்பானது என்ற பிரச்சாரமும், மக்களின் நம்பிக்கையும் வலுத்து வருகிறது. பேருந்துகள் நிறுத்தப் படும் இடங்களில் வாங்கிக் குடிக்கும் தண்ணீர் தயாரிக்கப் பட்ட விதம் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இருக்கிறோமா?
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு – குடி தண்ணீர் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது . அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் 5000 கோடி ரூபாயாம் . தமிழகத்தில் 10,000 க்கும் அதிகமான தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் இயங்குகின்றன . நாளுக்கு நாள் அழியும் இயற்கை வளங்களில் தண்ணீரே முதன்மையானதாக உள்ளது .
ஆனால் அயல்நாட்டு முதலாளிகளுக்கு எப்படி நம் ஆதாரங்களைச் சுரண்ட அனுமதி அளிக்கலாம் அதற்கு ஏற்றபடி எவ்வாறு சட்டங்கள் இயற்றலாம், எதிர்த்து வரும் போராட்டங்களை எப்படி அடக்கலாம் என்பதிலேயே மத்திய அரசு கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற விவகாரங்களை சிந்திக்க அரசுக்கு நேரம் எங்கே இருக்கிறது? மண், பொன், பெண் ஆகிய மூன்று போகப் பொருள்களுகாகவே போர்கள் நடைபெற்றதாக உலக சரித்திரம் கூறுகிறது. இனியொரு போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற ஒரு உலகளாவிய அச்சம் உருவாகியுள்ளது.
நிலமும் நீரும் இந்தியப் பொருளாதாரம் ஏற்றம் பெறத் தேவையானவை. ஏற்கனவே நிலங்கள் சிறையிடப்பட்டு நெல் விளைந்த பூமிகளில் கல் விளைந்து வீணாகக் கிடக்கின்றன. இப்போது தண்ணீரையும் தனியார்க்கு தாரை வார்த்துக் கொடுப்பது மண்ணின் மக்களின் அடிமடியிலே கை வைக்கும் அக்கிரமம் என்பதை அரசு உணரவேண்டும். நீர் வளத்தை ஒரு லட்டாகப் பிடித்து அடுத்தவர் கையில் கொடுக்க அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது? ஏற்கனவே மழை பெய்ய மறுக்கிறது. மேகங்கள் கூடிக் கூடி கலைந்து வித்தை காட்டுகின்றன; நகரமயமாவதால் மரங்கள் வெட்டப்படுகின்றன. விலை மதிப்பற்ற காடுகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. ஒரு காய்ச்சல் குருவியைப் பிடித்தால் கூட கைது செய்யும் வனத்துறை, வனங்களை அழிக்கும் வலிமை உடைய அரசியல்வாதிகளை கண்டு கொள்வதே இல்லை.
சுற்றுப்புற சூழ்நிலைகளை மேம்படுத்துவதை விட்டு விட்டு கழுதைகளுக்குக் கல்யாணம் செய்துவைத்தால் கன மழை பெய்யும் என்று காத்திருக்கிறோம். தண்ணீரின் தேவை மக்கள் பெருக்கத்தால் அதிகரித்து வருகிறது. குளங்கள் மற்றும் ஏரிகளில் குளித்துப் பழகியவர்கள் வீடுகளுக்குள் நீச்சல் குளம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் தூர் வாரப்படாமல் வருடக்கணக்கில் கிடப்பதால் மேடு தட்டிப்போய், எப்போதாவது இஷடப்பட்டால் பெய்யும் மழை நீரையும் சேகரித்துவைத்துக் கொள்ள வகை தெரியாமல் கிடக்கின்றன. ஏரிகளில் குளங்களில் தனியார் மண் அள்ளுவது தடுக்கப் பட்டு இருக்கிறது அரசும் இதை கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறது. இருக்கும் நிலத்தடி நீரையும் கெடுத்துவைப்பதற்காக இரசாயனக்கழிவுகள் காட்டாறாக ஓடுகின்றன; இறால் பண்ணைகள் இலாபகரம் என்பதால் கடற்கரையோர கிராமங்களில் தினமும் தோண்டப்பட்டு வளர்ந்தோங்கி வருகின்றன. இதனால் உப்பு நீர் கடலில் இருந்து ஊருக்குள் வரவேற்பு வளையம் வைத்து கொண்டுவரப் படுகிறது. எங்கேயாவது பேருந்து நிலையமோ, சந்தைகளின் விரிவாக்கமோ திருமண மண்டபங்களோ அரசின் தரப்பில் மணிமண்டபங்களோ நினைவுச் சின்னங்களோ கட்ட இடம் தேவைப்பட்டால் குளங்களும் ஏரிகளும் குறிவைத்து தூர்க்கப் பட்டு அவற்றின் மேல் காங்க்ரீட் கட்டிடங்கள் கட்டப் படுகின்றன. உதாரணமாக சென்னை வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது ஒரு ஏரியை உயிருடன் எரித்து சாம்பலாக்கிவிட்டுத்தான் . அதனால்தான் அந்தப் பகுதி இன்றும் லேக் ஏரியா என்று அழைக்கப் படுகிறது. குளத்தங்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் குடிசைகள் கட்டி அரசியல் பின்பலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன.
உலகிலேயே அதிகம் மழை பெய்யும் சிரபுஞ்சியிலேயே தண்ணீர் பஞ்சம் என்று வெட்கமின்றி தம்பட்டம் அடிக்கிறார்கள். கோடை வாசஸ்தலங்கலாகிய சிம்லா, ஊட்டி, கொடைக்கானலில் கூட தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது . இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தண்ணீரை மேலாண்மை செய்வது சரியில்லை என்பதுதான். சிரபுஞ்சியிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்றால் உலகமே நம்மைக் கேலி செய்யும்.
மேலே சொல்லப்பட்ட குறைகளைக் களைந்து தண்ணீரை காப்பாற்றும் முயற்சிகளை முன்னிறுத்தும் வகையிலும் தண்ணீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையிலும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை மத்திய அரசு கொண்டுவந்தால் யாவரும் வரவேற்கலாம். அதைவிட்டுவிட்டு இன்னும் பிரச்னைகளை அதிகப் படுத்தும் மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வருவது அரசின் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது. ஏற்கனவே நேரடி அந்நிய முதலீடு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கள், 2 G, இத்தாலிய ஹெலிகாப்டர், சி. பி .ஐ. அறிக்கை கசிவு என்று தன் மீது பல களங்கங்களை சுமந்து நிற்கும் மன்மோகன் அரசு, தண்ணீரை தனியார்க்கு தாரை வார்ப்பதன் மூலம் மற்றொரு சாக்கடையை அள்ளி சந்தனமாகப் பூசப்போகிறது.
தண்ணீரை திரவத்தங்கம் என்பார்கள். இந்தத் தங்கத்தையும் தனியாரிடம் கொள்ளை இலாபம் ஈட்ட வழிகளை திறந்துவிடும் அரசை வகை கெட்ட அரசு என்றே கூற முடியும்.
இபுராஹீம் அன்சாரி


