Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு உரையாடல்... 41

ZAKIR HUSSAIN | April 29, 2011 |

ஒரு பேட்டி...

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..

இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.

அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைவு வந்தவுடன் எனக்கு கிடைத்த டெலிபோன் நம்பரில் தொடர்பில் கிடைத்த ஆசிரியர் SKM.H என்று நான் படிக்கும் காலங்களில் அன்புடன் அழைக்கப்பட்ட ஹாஜா முஹைதீன் சார். நானும் அவரின் பழைய மாணவன் ஆதலால் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு...

உங்கள் மாணவப்பருவம், பள்ளியில் சேர்ந்து பணியாற்றியது பற்றி...

பள்ளிப்பருவம் எல்லாம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளிதான் [ அப்போது உயர்நிலை மட்டும் தான்] பிறகு பி.யு. சி எல்லாம் Kadhir Mohideen college , 3 வருடம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு புதுக்கோட்டை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் B.T படிப்பு முடித்து, 8- 9 வருடம் ஹையர் செக்டரி ஆசிரியர் ஆகி 1986ல் தலைமை ஆசிரியர் பொறுப்பு ...பிறகு 31- 05- 1998 ல் ஓய்வு பெற்றேன்...

ஒரு மிகப்பெரிய பணியை இவ்வளவு சிம்பிளாக சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது..இடைப்பட்ட காலங்களில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை ஏமாற்றம் , எத்தனை வெற்றி எதையும் ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவம் சாரின் வார்த்தைகளில் தெரிந்தது.

இப்போது உங்களது வேலை பற்றி...

1998 செப்டம்பரிலிருந்து IMAM SHAFI MATRIC HIGHER SECONDARY SCHOOL, ஏறக்குறைய 70 Teachers, 30 பேர் கொண்ட Non Teaching Satff, உதவியுடன் 1600 மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.

மறக்கமுடியாத நிகழ்வுகள், மாணவர்கள் பற்றி...

நிறைய இருக்கிறது,நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை..என் வயதும் அதற்க்கு ஒரு காரணமாக இருக்களாம். நாடகம் விளையாட்டு என்று எனக்கு ஆர்வம் இருந்ததால் சில மாணவர்கள் எனக்கு ஞாபகம் இப்போதைக்கு வருகிறது.நாடகங்களில் பங்கேற்ற ஜாபர், அஸ்ரப், சிராஜுதின், நூர்முஹம்மது, விளையாட்டில் சிறப்பாக இருந்த அல் அமீன். உன் பெயரில் இன்னொரு மாணவன் இருந்தான் [அவனும் ஜாஹிர் ஹுசேன் தான்.. உனக்கு ஜூனியராக இருக்க வேண்டும்.]

நினைவில் நிற்கும் நிகழ்வுகளில் என் ஆசிரியர் பணியையே சொல்லலாம்...நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

இன்னும் ஒன்று ஒருமுறை பக்கத்து ஊரில் தேர்தல் தலைமை அதிகாரியாக போயிருக்கும்போது [அசம்ப்ளி எலக்சன்] ஒரு P.E.T ஆசிரியர் என்னைவிட மூத்தவர் [ வேலை/வயது இரண்டிலும்] என்னைப்பார்த்து சொன்னது எப்படி சார் நீங்கள் ஒரு P.E.T (physical education teacher) ஆனால் என்னை விட வயதிலும் , சர்வீசிலும் குறைந்தவர் எப்படி எனக்கு தேர்தல் அதிகாரியாக அரசு நியமித்து இருக்கிறது.??

உடனே நான் சொன்னேன் ' சார் முதலில் ஒரு உண்மை.. நான் P.E.T அல்ல, கிராஜுவேட் முடித்து , தலைமை ஆசிரியாக இருப்பதுடன் ஒரு Mathematics Teacher. நான் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் மாணவர்களுடன் District/ Divisional Sports போவதை பார்த்து என்னை P.E.T ஆக நினைத்து விட்டார்.’

இல்லை சார் இன்றும் ஸ்லிம் ஆக இருக்கும் உங்கள் உடல்வாகு பார்த்து அவர் முடிவு செய்து இருக்களாம்..- இது நான்

ஒரு முறை District Education Officer ஆக இருந்த ஒருவருடன் இலக்கிய மேடையில் பேசிய பிறகு, அடுத்த நாள்அவர் நமது ஸ்கூலுக்கு வந்த போது நான் கணக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது 'நீங்கள் ஏன் கணக்கு பாடம் எடுக்கிறீர்கள்?...போய் கணக்கு ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றவுடன்..சார் நான் கணக்கு ஆசிரியர்தான் என விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.

முன்னால் / இந்நாள் மாணவர்கள் ஒரு ஒப்பீடு……..

' அப்போது இருந்த மாணவர்களிடம் இருந்த obedience இப்போது பார்ப்பது அறிதாகிவிட்டது.. அதற்க்கு காரணம் சூழ்நிலைகள், சட்டம் எல்லாம்தான். மாணவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என்று இல்லை நாம் அவனிடம் அன்பாக ஒரு 10 நிமிடம் பேசினாலும் அவனது தவற்றை உணர வைத்து விடலாம். முன்பு ஒரு ஆசிரியரிடம் கோபமாக நடந்த மாணவனை எனது அன்பால் திருத்திய 2 நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

தமிழ் , இலக்கியம் மற்றும் நாடகம் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

' உண்மையிலேயே நான் தமிழ் இலக்கியம் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு அப்ளிகேசன் போட்டு இடம் எல்லாம் கிடைத்து விட்டது , அப்போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் அன்பழகன் எல்லோரும் அங்கு பேராசிரியராக பணீயாற்றிய காலம்...அப்போது உள்ள குடும்ப பொருளாதார சூழ்நிலையில் நான் மெட்ராஸ் போய் படிக்க முடியவில்லை.

நான் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களை, அகில இந்திய வானொளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தேன் அதில் நான் எழுதி மிகப் பிரபலமான இரண்டு நாடகங்கள் மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் திப்பு சுல்தான், அறிவியல் நிகழ்ச்சிகள் ஆறு முறையும் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சி மூன்று முறையும் எழுதி இயக்கியிருக்கிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

2 மகன்கள், 1 மகள் எல்லோருக்கும் கல்யாணமாகிவிட்டது... நானும் 2002 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீ எப்படிப்பா இருக்கே..உனக்கு எத்தனை பிள்ளைங்க...உன் வாப்பா சவுக்கியாமா..என் சலாத்தை அவர்களுக்கு சொல்லிவிடு...

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சாரின் அன்பான விசாரிப்பில் நான் நெகிழ்ந்துதான் போனேன்.

ZAKIR HUSSAIN

நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்

கடன் வாங்கலாம் வாங்க – (நிறைவுரை) 37

அதிரைநிருபர் | April 28, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!


இந்த கட்டுரை இத்தொடரோடு முடிவதால் தொடர் 1 முதல் 15 வரை ஒரு முன்னோட்டம் பார்த்துவிடுவோம்.

நாடுகள் வாங்கும் கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை. (மேலும் விபரமாக படிக்க)

கடன் அட்டையில் வாங்கும் கடன் விபரங்கள், வளைகுடாவுக்கு வந்தவர்களின் கடன் வாங்கும் நிலைகள். (மேலும் விபரமாக படிக்க)

வளைகுடா சகோதரர்கள் மேலும் சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள். (மேலும் விபரமாக படிக்க)

ஊரிலிருந்து வளைகுடா சகோதரர்களுக்கு கடன் கேட்பவர்களின் நிலைகள், ஆடம்பர கடன், சகோதரிகள் வாங்கும் கடன்கள், புதிய நகைகள் செய்வது, நகை கடன், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், ஆகியவைகள் பற்றிப்பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)

இஸ்லாம் என்றால் என்ன?, வட்டி கடைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன். (மேலும் விபரமாக படிக்க)

குர்பானி கொடுப்பது பற்றி, வலீமா கடன்கள், திருமண கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள், ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள், பாலைவனத்தில் பிடித்துவிடும் சகோதாரிகள், காலமெல்லாம் கணவனை பாலைவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள், கடன் எனும் நிழல் கூட தன்மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி. (மேலும் விபரமாக படிக்க)

நாம் தொழுவது எதற்காக?,  நன்மை எதில் உள்ளது, பிறசமுதாயத்தவர்களின் உதவிகள், அழகிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள், யார் கவலைப்படமாட்டார்கள். (மேலும் விபரமாக படிக்க)

வெற்றி பெற்றோரின் நிலை, நமது ஜகாத்துகள் பயன் அளிக்கிறதா?, அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யாரும் உண்டா?. (மேலும் விபரமாக படிக்க)

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள், கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்,தர்மம் செய்த கூலி வேண்டுமா? கடன் வாங்குவோர் நிலை,கட்டாய கடன்,கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். (மேலும் விபரமாக படிக்க)

கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்,கடன் வாங்கியவர்களின் திருப்பிச் செலுத்தும் எண்ணமும் ஏமாற்றும் எண்ணமும்,கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு.(மேலும் விபரமாக படிக்க)

கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்.(மேலும் விபரமாக படிக்க)

பிள்ளைகளின் சேமிப்பு, வாங்கும் பொருட்களில் சிக்கனம்,துணிமணிகள், வீண் விரயம்,தள்ளுபடி, வளைகுடா சகோதரர்களின் சிக்கனம், சிக்கனமா? கஞ்சத்தனமா?. (மேலும் விபரமாக படிக்க)

வட்டியில்லா கடன் திட்டம்,பைத்துல்மால்,பொருளாதார சுனாமி,இன்றைய செல்வந்தர்களின் நிலை என்று அனைத்துவிதமான தலைப்புகளிலும் தொடர் 1 முதல் 15வரை பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ஒன்றுமில்லாத காரியங்கள், கதைகளுக்கெல்லாம் உருவான விதத்தை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கடன் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இந்த ஆக்கம் உருவான விதத்தை தெரிவிப்பதில் சில படிப்பினைகள் இருப்பதால் விளக்குகிறேன்.


கடன் கட்டுரை உருவான விதம்:

நான் வளைகுடா நாட்டில் வந்த நாள் முதல் வேலை, ரூம், தொழுகை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் பெயர் தாங்கி முஸ்லிமாக, வெள்ளிக்கிழமை மற்றும் தொழுபவர்களாக இருந்தார்கள். இந்த சகோதரர்களோடு சேர்ந்து இருந்த பொழுது உண்மையான மார்க்கத்தையும், இஸ்லாத்தில் அழைப்பு பணி இருப்பதையும் அறியாமல் இருந்தேன். பல ஆண்டுகள் இவர்களோடு சேர்ந்து இருந்தபொழுது மார்க்கத்தில் எந்த முன்னேற்றமும் என்னிடம் கிடையாது. (இன்றளவும் வளைகுடா நாடுகளில் இருக்கும் நமது சகோதரர்கள் மார்க்கத்தை அறிய முயற்சி செய்யாமல் சினிமா, சீரியல், பாடல்கள் என்று நேரங்களை வீண் விரயம் செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் அழிவுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மறுமை பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்).

இந்த நேரத்தில் அழைப்பு பணி செய்யும் ஒரு சகோதரர் மூலம் தவ்ஹீது சகோதரர்கள் சேர்ந்து அழைப்பு பணி செய்வதை அறிந்தேன். அந்த சகோதரர் அங்கு அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையால் தூய்மையான மார்க்கத்தை  அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வார பயானுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். இவர்கள் மூலம் யு.ஏ.இல் அனைத்து இடங்களிலும் நடந்த பயான்களுக்கு சென்று வந்தேன்.

மறுமை சிந்தனையுள்ள சகோதரர்களோடு பழகும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. நான் பல ஆண்டுகள் பழகிய சகோதரர்கள் தொழக்கூட ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். தவ்ஹீது சகோதரர்களின் அறிமுகம் எனக்கு வல்ல அல்லாஹ் கொடுத்த வாய்ப்பே. தவ்ஹீத் சகோதரர்கள் சேர்ந்து கையெழுத்து பிரதி நடத்தி வந்தார்கள். (கையால் எழுதி அல்ல, கம்யூட்டர் மூலம் டைப் செய்து) இதன் ஆசிரியர் கீழக்கரையைச் சேர்ந்த சகோதரர் அப்துல்லாஹ் செய்யது ஆபீதீன், ஃபுஜைராவில் இருந்தார். இதன் காப்பியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி சரிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தடவை ஃபுஜைராவில் நடந்த பயானுக்கு சென்றிருந்தோம் அங்கு தங்கி மறுநாள் காலை அங்கு கடலில் குளிக்க சென்றோம். கடலிலேயே மசூரா சகோ. அ.செய்யது ஆபீதீன் என்னை சத்தியப்பாதை கையெழுத்து பிரதியின் ஆலோசனைக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று மற்ற ஆலோசகர்களிடம் கூறினார். அந்த குழுவில் உள்ளவர்கள் ஆமோதிக்க நான் ஆலோசனைக்குழு உறுப்பினரானேன்.

இதன் பிறகு சில மாதங்கள் கழித்து இந்த கையெழுத்து பிரதியை மாத இதழாக வெளியிட வேண்டும் என்று எல்லோரும் ஆலோசனை செய்து தமிழ்நாட்டில் பதிவு செய்து ஆசிரியர் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின் உதவியுடன் சத்தியப்பாதை என்ற பெயரில் மாத இதழாக வெளி வந்தது. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மசூராவில் என்னை உதவி ஆசிரியராக சேர்க்க வேண்டும் என்று சகோ. அ.செய்யது ஆபீதீன் அறிவித்தார். ஆலோசனை குழுவிலிருந்து உதவி ஆசிரியர் ஆனேன். மீண்டும் ஒரு மசூராவில் என்னை இணை ஆசிரியராக அறிவித்தார். ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உதவி ஆசிரியர், இணை ஆசிரியர் நிலைக்கு என்னை கொண்டு வந்தார். அல்ஹம்துலில்லாஹ்!. இந்த நேரத்தில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பையும் இருவரும் கவனித்து வந்தோம்.

எனக்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தவுடன்தான் இந்த கடன் வாங்கலாம் வாங்க ஆக்கத்தை இதில் எழுத ஆரம்பித்தேன். பொருளாதார பற்றாக்குறையால் இந்த இதழை தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி விட்டோம்.

அதிரை நிருபரில் ஆக்கம்  வெளியானது:

ஒரு நாள் தற்செயலாக அதிரைநிருபரை பார்க்க நேர்ந்தது. சபீர் அதிரை நிருபரில் கவிதை வெளியிட்டது பற்றி என்னிடம் கூறியபோது நான் எழுதிய ஆக்கத்தை வெளியிட கேட்டு சொல்லும்படியும், அதிரை நிருபரில் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது என்று வெளியிட்டிருந்தார்கள் என்றும் கூறினேன். என் மெயிலுக்கு அனுப்பி வை நான் அவர்களுக்கு அனுப்பி வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நானும் அனுப்பி வைத்தேன்.

என்னிடம் சாப்ட் காப்பி இல்லை, சத்தியப்பாதை இதழ்தான் இருந்தது. முதல் ஆக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். இது சம்பந்தமாக சகோதரர் தாஜுதீனிடம் பேசினேன். ஆனால் தாஜுதீனிடம் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் வேறு ஒரு இணையதளத்துக்கும் இந்த ஆக்கத்தை அனுப்பி வைத்தேன். அந்த இணையதளத்திடம் இருந்து இரண்டு தடவை பதில் வந்தது. ஆக்கம்  முழுவதுமாக இருக்கிறதா? நாங்கள் ஆலோசனைக்குழுவில் வைத்து கலந்து கொண்டு தங்களுக்கு பதில் தருகிறோம் என்று பதில் மெயில் வந்தது. அதன்பிறகு இன்று வரை அவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒரு வேளை பதில் அன்றே வந்திருந்தால் அந்த இணையதளத்தில் இந்த ஆக்கம் வெளியாகியிருக்கும்.

சபீரிடம் இருந்து போன்: என்ன ஆச்சு ஏன் உன் ஆக்கம் வரவில்லை என்று, நான் தாஜுதினிடம் இருந்து பதில் இல்லை என்றேன். சரி நான் பேசுகிறேன் என்று சொன்ன பிறகு தாஜுதீனிடம் இருந்து போன் வந்தது. காக்கா உடல் நலமில்லாத காரணத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் பிறகு நான் ஆக்கத்தை அனுப்பி வைத்து நிறைவுரைக்கு வந்து விட்டேன்.
 
சத்தியப்பாதை இதழில் வெளிவந்தது கரு என்றால் அதிரை நிருபரில் வெளியானது முழுக்குழந்தை என்று சொல்லலாம். ஏன் என்றால் மேலும் பல அனுபவங்கள் மூலமும், தற்பொழுது உள்ள நிகழ்வுகளையும் சேர்த்து எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிக அளவில் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டது இந்த ஆக்கம்.


நன்றியுரை :

உலகை படைத்து பரிபாலித்து வரும் வல்ல அல்லாஹ்வுக்கே என்னுடைய முதல் நன்றி! (அல்ஹம்துலில்லாஹ்!) இந்த ஆக்கத்தை எழுதக்கூடிய சூழலை கொடுத்து எழுத வைத்தவன் வல்ல அல்லாஹ்வே!

அப்துல்லாஹ் செய்யது ஆபிதீன்:
என்னை ஆசிரியராக நியமித்து பின் எனக்கு இந்த ஆக்கத்தை எழுத வாய்ப்பு அளித்ததற்கு என் நன்றியை சகோதரர் செய்யது ஆபிதீனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

சபீர்:
அதிரை நிருபருக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆக்கம் வெளிவருவதற்கு முயற்சியும் செய்து மேலும் எழுதுவதற்கும் ஊக்கத்தையும் கொடுத்த சபீருக்கு என்னுடைய நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

தாஜுதீன்:
நான் இரண்டு வாரம் தொடர்ந்து கட்டுரையை அனுப்பிய பிறகு காக்கா நீங்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னபொழுது நான் நேரடியாக பதிந்தால் ஏதாவது தவறுகள் வந்தால் திருத்த வாய்ப்பிருக்காது என்று கூறிய பிறகு எனது ஆக்கத்தை படித்து பிறகு அதற்கான அழகிய படங்களை தேடி எடுத்து வேலை பளுவுக்கு இடையிலும் சிறந்த முறையில் பதிவு செய்த சகோ.தாஜுதீனுக்கு எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

அபுஇபுறாஹிம்:
ஆக்கம் வெளிவந்தவுடன் முதல் வாசகராக வந்து பின்னூட்டம் பதிந்ததற்கும் மற்றவர்களும் பின்னூட்டம் இடுவதற்கு ஊக்கமாக இருந்ததற்கும் எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

வாசகர்கள்:

சகோதரர்கள்: அபுஇபுறாஹிம், தாஜுதீன், சபீர், யாசிர், தஸ்தகீர், ஹமீது, அப்துல்மாலிக், ஜாகிர், ஜலால், அஜீஸ், ஹாலித், நிஷாத் மீரா,  ஜமீல் காக்கா,அஹ்மது காக்கா, ரியாஷ் அஹமது, அப்துர்ரஹ்மான், நீடுர் அலி, மீராஷாஹ், அதிரை அபூபக்கர், ஹிதாயத்துல்லாஹ், அபு ஆதில், அஹமது இர்ஷாத், அபு இஸ்மாயில், அபு ஈசா, MSM நெய்னா முகம்மது, பின்னூட்டம் பதிந்த வாசகர்களுக்கும், படித்தும் பின்னூட்டமிட வசதி இல்லாத வாசகர்களுக்கும்,  படித்து பயன் பெற்ற சகோதரிகளுக்கும் எனது நன்றி!

ஒரு ஆக்கத்தை எழுதி பதிந்தால் மட்டும் போதாது அதை படித்து கருத்தை தெரிவிக்கும் வாசகர்கள் இருந்தால்தான் அந்த ஆக்கத்திற்கு வெற்றி! அந்த வகையில் கருத்திட்ட, கருத்திட முடியாத வாசகர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

நிறைவுரை:

வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த ஆக்கம் தொடராக வெளிவந்து என்னால் முடிந்தளவு நமக்குள் நடைபெறும் அனைத்து விதமான கடன்களையும் குர்ஆன், மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கடன் வாங்குபவர், கொடுப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கடனற்ற வாழ்க்கை வாழ நாம் எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன். இன்ஷாஅல்லாஹ் இதன்படி வாழ நாம் அனைவரும் நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதில் நிறைகள் இருந்து அதனால் நீங்கள் பயன் அடைந்து இருந்தால் அது இவ்வுலகையும், மனிதர்களையும் மற்ற படைப்பினங்களையும் படைத்து பாதுகாத்து வரும் சர்வ சக்தி படைத்த வல்ல அல்லாஹ்வுக்கேச் சேரும் - அல்ஹம்துலில்லாஹ்! குறைகள் இருந்தால் பலகீனம் நிறைந்த படைப்பாகிய மனிதனான என்னேயேச் சேரும்.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று மாறாக அல்லாஹ், இறுதிநாள் வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள், அவர்களே உண்மை கூறியவர்கள், அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் : 2: 177)

வாசகர்களுக்கு அன்பான கோரிக்கை:

அதிரை நிருபரில் வெளியான முக்கியமான ஆக்கங்களை வெளியிட வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆக்கங்களை நோட்டீஸாக வெளியிட வேண்டுமெனில் பொருளாதாரம் வேண்டும் ஒருவரே பொறுப்பு எடுப்பது சிரமமான காரியம். பரிட்சைக்கு படிக்கலாமா? என்ற ஆக்கத்தை மிகுந்த பொருட் செலவில் செலவு செய்து அதிரை நிருபர் குழு மட்டும் பொறுப்பு எடுத்து வெளியிட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

வாசகர்கள் அனைவரிடமும் என்னுடைய சொந்த கருத்தாக தெரிவிப்பது: வெளிவந்த நோட்டீஸ் செலவிலும், இனி நோட்டீஸாக வெளியிடப்போகும் செலவிலும் தங்களின் பங்களிப்பை (நன்கொடை) செய்து நன்மையை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (நன்மையை ஒருவரே எடுத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவித்துள்ளேன்). எந்த ஆக்கங்களை நோட்டீஸாக, புத்தகமாக வெளியிட போகிறார்கள் அதற்கு என்ன செலவாகும் என்ற விபரங்களை அதிரை நிருபர் குழுதான் வெளியிட வேண்டும். வாசகர்களின் கருத்தை தெரிவியுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (அல்குர்ஆன் : 2:254)

அவதூறு பரப்புபவர் - புறம் பேசுபவர்களுக்காக:

உனக்கு தெரியுமா? சேதி? அதிரை நிருபர் குழு நன்கொடை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்களாம் என்று புறம் பேச ஆரம்பிப்பவர்களின் கவனத்திற்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை: 

நன்மையிலும். இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

--- நிறைவுற்றது ---

-- S. அலாவுதீன்அன்பு நேசங்களே..

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2010 அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நம் அதிரைநிருபரில் மிகுந்த வரவேற்பை பெற்ற கடன் வாங்கலாம் வாங்க தொடர் விழிப்புணர்வு பதிவு இந்த பதிவுடன் நிறைவடைகிறது. முதலில் இறைவனுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்…

இந்த அற்புதமான விழிப்புணர்வு கட்டுரையை நம் அனைவருக்கும் பரிசாக தந்து பயனடைய செய்த  எங்கள் அன்பு பாசம் நிறைந்த சகோதரர் S. அலாவுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற தொடர் மூலமே அதிரைநிருபரின் தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நம் அனுமதியுடனும் மற்றும் நம் அனுமதியில்லாமலும் இந்த தொடர் ஆக்கத்தை வெளியிட்ட சகோதர வலைப்பூக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டங்களுடன் சகோதரர் அலாவுதீன் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் அளித்துவந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த தொடர் நம் அதிரைநிருபரில் வெளிவர காரணமாக இருந்த சகோதரர் சபீர் அவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் இருவருக்காக நாங்கள் எல்லாம்வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம். இந்த தொடர் ஆக்கத்தை படித்தவர்களும், படிக்கபோகிறவர்களும் இந்த இருவருக்காவும் துஆ செய்யுங்கள்.

அதிரைநிருபர் தேடல் பகுதியில் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தட்டினால் போதும் இந்த தொடர் ஆக்கத்தின் சுட்டிகள் அனைத்தும் கிடைக்கும். மேலும் கூகுல் தேடல் இணையத்திலும் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தேடினால் நம் அதிரைநிருபர் வலைத்தளமே முன்னனியில் வரும். இது மட்டுமல்ல கூகுல் தேடலில் அதிரை அலாவுதீன், சகோதரர் அலாவுதீன், அலாவுதீன் காக்கா என்று தேடிப்பருங்கள் சகோதரர் அலாவுதீன் அவர்களின் ஆக்கங்களே முதல் வரிசையில் கிடைக்கும்.

வல்ல அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

இது போன்று நன்மை தரும் விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுத அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல செல்வ வளத்தையும் தந்தருள்வானாக என்று துஆ செய்கிறோம். வாசக நேசங்களே நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்…

மீண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே..

தொடர்ந்து இணைந்திருங்கள்…

அதிரைநிருபர் குழு

டியூஷன் - சிந்திப்போம் ! 14

அதிரைநிருபர் | April 27, 2011 | ,

அல்லாஹ்வின் சாந்தி நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வின் அருளால் கல்வி விழிப்புணர்வுப் பயனத்தை மேற்கொன்டிருக்கிற நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தரமான கல்வியை கொடுப்பதற்காகவும், வளரும் சமுதாயத்தை வருங்கால சவால்களை சமாளித்து வெற்றியின் இலக்குகளை நோக்கி பயனிக்க தகுதியானவர்களாக உருவாக்குவதற்காகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து அவர்களை வழிநடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்த பொதுவாக எல்லோரும் மேற்கொள்கிற வழி "டியூஷன்". அன்றாடம் வகுப்பில் நடத்துகிற பாடத்தைப் மீண்டும் ஒரு முறை படித்து அதில் ஏற்படுகிற சந்தேகங்களைக் களைந்து பாடத்தை மனதில் பதிய வைத்துக்கொள்கிற பணியைத்தான் இந்த டியூஷன் செய்கிறது. வசதி உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி படிக்கவைக்கின்றனர்; ஆனால் படிப்பதற்கே வசதி இல்லாத ஏழைகளுக்கு டியூஷன் என்பதெல்லாம் எட்டாக் கனியாகவே இருக்கிறது. எனவே, நாம் பொதுவான மையங்களை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வின்றி எல்லா மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் வழி வகை செய்ய வேண்டும்.

பயிற்றுவிக்கும் முறை:
பொதுவாக டியூஷன்களில் ஆசிரியர்கள் மானவர்களுக்கு பயிற்றுவிப்பர். அவ்வாறு ஆசிரியர்களைக்கொன்டு பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொன்டே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். அதாவது எல்லா வகுப்புகளிலும் நன்றாகப் படிக்கின்ற மாணவர்கள் இருப்பர்; அவர்களைக்கொன்டு மற்ற மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். மேலும் மேல் வகுப்பு மாணவர்களைக்கொண்டு கீழ் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தேர்ந்த ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் நல்ல உத்யோகங்களில் உள்ளவர்களைக்கொண்டு SEMINAR எடுக்கலாம். பாடம் நடத்துகிற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கலாம்.

நன்மைகள்:

ஆசிரியர்களை வைத்து பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொண்டே மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதால் அல்லாஹ் நாடினால் கீழ்கானும் பலன்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

1) படித்துக் கொடுக்கின்ற மாணவர்கள் பாடங்களை மேலும் தெளிவாக புரிந்துகொள்வர்.

2) சக மாணவர்களே பாடம் நடத்துவதால் படிக்கின்ற மாணவர்களுக்கும் ஒரு சகஜமான சூழ்நிலை ஏற்பட்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வழி வகுக்கும்.

3) மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு பாடம் எடுப்பதால் அவர்களுக்கு பழை பாடங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்புகள் ஏற்படும்.

4) பல மாணவர்களுக்கு முன் நின்று பாடம் நடத்திப் பழகுவதனால் அச்சம் தெளிந்து மேல் வகுப்புக்குச் செல்லும்போது SEMINAR போன்றவற்றில் சிறப்பாக செயல்பட உதவும்.

5) சராசரி மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் பாடம் எடுக்க வைக்கலாம்.

6) பெண்களுக்கு டியூஷன் செல்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க இது வழிவகை செய்யும்.

7) மாணவர்கள் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சுயமாக கற்கும் ஆற்றல் அவர்களிடத்திலே வந்துவிடும்.

8) மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறாக அல்லாஹ்வின் உதவியால் ஏராளமான பலன்கள் கிட்ட வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

'அஸ்ஸலாம்

அபு ஈசா

கோடையில் குளிர வைக்கும் பழவர்க்கங்களும், கிழங்கு வகைகளும் -‍‍ பழைய நினைவுகளிலிருந்து.... 53

அதிரைநிருபர் | April 25, 2011 | ,

1. நொங்கு:

ந‌ம‌தூர் சுற்று வ‌ட்டார‌ கிராம‌ப்புற‌ங்க‌ளிலிருந்து கோடைகால‌த்தை வ‌ர‌வேற்கும் முக‌மாக‌ ஊரின் முக்கிய‌ ச‌ந்து, முச்ச‌ந்திக‌ளில் வ‌ந்திறங்கி குவிந்து கிடக்கும். அதை அழ‌காக‌ சீவி அத‌னுள் இருக்கும் க‌ண்க‌ளை தோண்டி எடுத்து ப‌னைம‌ட்டையில் வைத்து விற்ப‌ர். அதை பார்ப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் ஆர்வ‌த்துட‌ன் வாங்கிச்சென்று வீட்டின் பெண்க‌ளிட‌ம் கொண்டு வ‌ந்து ஒப்ப‌டைப்ப‌ர். அவ‌ர்க‌ளும் அதை செவ்வ‌னே சுத்த‌ம் செய்து அவ‌ற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து பால் ம‌ற்றும் ப‌ன்னீருட‌ன் கொஞ்ச‌ம் சீனியும் சேர்த்து அப்ப‌டியே குளிர் சாத‌ன்ப்பெட்டியில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கிளாஸில் கொடுக்க‌ நாம் குடித்த‌ பின் உள்ளே சென்ற‌ நுங்கு கோடை உஸ்ன‌த்தையும், தாகத்தையும் எங்கே? என‌ கேட்க‌ வைத்து விடும். (அத‌ன் பின் நொங்கு வ‌ண்டி மூல‌ம் தொங்கு,தொங்கு என்று தெருவில் ஓடி விளையாண்டது மீதி).

2. விளாம்ப‌ழம்:

இப்பொழுதெல்லாம் க‌ண்மாசியாக் காணாம‌ல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.

ஆமை போன்று க‌டின‌ மேல் தோலை உடைய‌ இந்த‌ ப‌ழ‌ம் அதை உடைத்து ச‌ர்க்க‌ரை/வெல்லம் (க‌ச்சாக்க‌டையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக‌ சேர்த்து சாப்பிட்டால் ந‌ன்கு வ‌யிறும் நிறையும் உள்ள‌மும் குளிரும் இனிமையாய்.

3. எல‌ந்தைப்ப‌ழம்:

இது ந‌ன்கு ப‌ழுத்து புழுவுட‌ன் வ‌ந்தாலும் ச‌ரி அல்ல‌து இன்னும் ச‌ரி வ‌ர‌ ப‌ழுக்காம‌ல் செங்காயாக‌ வ‌ந்தாலும் ச‌ரி ஒரு க‌ட்டு க‌ட்டாம‌ல் விடுவ‌தில்லை. உப்பு போட்டு அல்ல‌து பொடி சேர்த்து சாப்பிட்டாலும் சும்மா வெறும‌னே சாப்பிட்டாலும் ந‌ன்றாக‌ சுவை த‌ரும். வயது வித்தியாசமின்றி வாயில் எச்சிலை ஊற்றெடுக்க‌ வைக்கும். (இத‌ன் ம‌றுபிற‌வி தான் க‌டையில் விற்கும் எல‌ந்த‌வ‌டை பார்க்க‌ க‌ண்ண‌ங்க‌ரே என்று இருந்தாலும் அத‌ன் சுத்த‌ம்,ப‌த்த‌ம் பார்க்காம‌ல் திண்டால் தான் அன்றைய‌ பொழுதே இனிமையாக‌ க‌ழியும் என்ப‌து அறிவிக்க‌ப்ப‌டாத ஊர் வ‌ழ‌க்க‌மாக‌ இருந்த‌து அந்த‌ கால‌த்தில்)

4. வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்:

ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் ப‌னை ம‌ட்டையை போர்வையாய் போர்த்தி வ‌ந்திற‌ங்கும். அவற்றை வாங்கி சிறு துண்டுகளாகவோ அல்லது மிக்ஸ்யில் நன்கு அரைத்து ஜூஸ் செய்து குளிரூட்டி அருந்தினாலும் மிகவும் இனிமையாகவும் தாகம் தீர்க்கும் தாரக மந்திரமாகத்திகழும். உள்ளிருக்கும் சிறு கொட்டைக‌ளை எடுத்து வெயிலில் காய‌ வைப்ப‌ர் வீட்டுப்பெண்க‌ள். அத‌ன் ப‌ருப்பு தான் இன்றைய‌ இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு மேருகூட்ட மேல்பூச்சாக‌ ஃபெர் அண்ட் ல‌வ்லி கிரீம் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

5. நாவ‌ப்ப‌ழ‌ம்:
ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் இனிப்பிட்டு சாப்பிட்டாலும் அல்ல‌து உப்பிட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுப‌வ‌ரின் எதிர்பார்ப்பிற்கேற்ற‌ சுவையைத்தாராள‌மாகத்த‌ரும். இத‌ன் க‌ச‌ப்பு மிகுந்த‌ கொட்டையை அரைத்து உட்கொள்வது ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்தாக‌ சொல்வ‌ர்.

6. ப‌ன‌ம்ப‌ழ‌ம்:

இள‌ நுங்கின் முதுமை கால‌ம் தான் இந்த‌ ப‌ன‌ம் ப‌ழ‌ம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அத‌ன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைக‌ளில் ப‌டாம‌ல் சாப்பிட்டால் அது ஒரு சாத‌னையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும் அக்கால‌த்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ல் வ‌ர்ண‌ம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.

7. மாங்காய்/மாம்ப‌ழ‌ம்:

ஒட்டு அல்ல‌து நாட்டு மாங்காய்க‌ள் வ‌யோதிக‌ம் அடைந்து ந‌ம‌க்கு ந‌ல்ல‌ சுவை த‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளாய் வகை, வ‌கையான‌ ர‌க‌ங்க‌ளில் குவிந்து கிடைக்கும். விலையும் அப்ப‌டித்தான். ஒரு கால‌த்தில் தெருவுக்கு வ‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளை அப்ப‌டியே வெட்டாம‌ல் ந‌ன்றாக் கையில் வைத்து ப‌க்குவ‌மாக‌ அமுக்கி அத‌ன் சாரு (ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள் ப‌ள்ளிக்கூட‌ சார் இல்லை) வெளியில் வ‌ராம‌ல் சாப்பிடும் பொழுது சில‌ர் அத‌ன் கொட்டையைக்கூட‌ விட்டு வைக்காம‌ல் ச‌ப்பி சாப்பிடும் பொழுது அத‌ற்குள் என்றோ சென்று செட்டிலான‌ புழுவும் சேர்ந்தே வாயிக்குள் சென்று விடும். (அப்புற‌ம் என்ன? வ‌யிற்று வ‌லி என்று மீராசா டாக்ட‌ரிட‌ம் செல்ல வேண்டியது தான். தஸ்தகீர் ஒரு காலத்தில் செட்டித்தோப்பில் கல்லால் மாங்காய் அடித்து தின்ற பழக்கம் ஏதும் உண்டா? இன்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் அடித்து திண்க ஏதேனும் வசதி உண்டா?)

8. நெல்லிக்காய்:

காலமெல்லாம் காயாகத்தான் இருக்கும். இத‌ன் ப‌ழ‌ம் எங்கு கிடைக்கும் என்று தெரிய‌வில்லை.

பெரு நெல்லிக்காய், சிறு(அரு)நெல்லிக்காய் என்று இர‌ண்டு வ‌கைக‌ளாக‌ கிடைக்கும். ஊறுகாய் போடுவ‌த‌ற்கும், சும்மா உப்பு/பொடி போட்டு சாப்பிடுவ‌த‌ற்கும் சுவையாக‌ இருக்கும். யானை வ‌ரும் பின்னே ம‌ணியோசை வ‌ரும் முன்னே என்ப‌து போல் நெல்லிக்காய் என்றாலே வாயில் எச்சில் ஊறி முன்பே வ‌ந்து நிற்கும். (பெண்க‌ளுக்கு ரொம்ப‌ ஒஹ‌ப்பான‌ க‌னி)

9. ப‌ன‌ங்கிழ‌ங்கு:

(நுங்கின் தாய‌ புள்ளெ அல்ல‌து ஒக்க‌ப்பொற‌ந்த‌ ஒட‌ன் பொற‌ப்பு என்றும் சொல்லலாம்) ந‌ன்றாக அவித்த‌ கிழ‌ங்கை வாங்கி வ‌ந்து அத‌ன் நாரை நீக்கி விட்டு (குருத்து எடுத்து திண்ட‌து போக‌) சுர‌ண்டி அத்துட‌ன் கொஞ்ச‌ம் தேங்காய்ப்பூ சேர்த்து சீனியும் போட்டு சாப்பிட்டால் சுகமான சுவைக்கு சொல்ல‌வா வேண்டும்? (எல்லாத்துலையும் சீனியைப்போட்டு சாப்பிட்டா சீக்கிர‌ம் இனிப்பு நீரு வ‌ராதா? என்று யாரோ முண‌ங்குவ‌து போல் தெரிகிற‌து)

10. ம‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:

ந‌ல்ல‌ ம‌ல்லிகைப்பூ போன்ற‌ நிற‌த்தில் அவித்து எடுக்க‌ப்ப‌டும் கிழ‌ங்கு சும்மா சாப்பிட்டாலும் பொடி வைத்து சாப்பிட்டாலும் நன்றாக‌த்தான் இருக்கும். இது ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்று இன்று க‌டைக‌ளில் சுவை மிகு சிஃப்ஸாக‌ கிடைக்கிற‌து.

11. கொட்டிக்கிழ‌ங்கு:

எங்கு தான் கொட்டிக்கிட‌க்குமோ இந்த‌ கிழ‌ங்கு? பார்க்க‌ க‌ருமை நிற‌மாய் ஒரு வ‌டிவ‌மே இல்லாம‌ல் இருக்கும். ஆனால் அத‌ன் மேல் தோலை சுத்த‌ம் செய்து சாப்பிட்டால் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்துட‌ன் சுவையாக‌ இருக்கும். (சில‌ நேர‌ங்க‌ளில் தோல் உறிக்க‌ மாய்ச்ச‌ல் ப‌ட்டு அப்ப‌டியே திண்டு தீர்த்த‌ நினைவுக‌ளும் உண்டு)

12. ச‌க்க‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:

இத‌ன் மேல் தோல் சிவ‌ந்து மிக‌வும் மிருதுவாக‌ இருக்கும். இறைவ‌னால் இத‌ற்கு இய‌ற்கையில் இனிப்பு சேர்க்க‌ப்ப‌ட்டே வ‌ரும். ந‌ன்றாக‌ இருக்கும்.

13. பலாப்ப‌ழ‌ம்:

இதை பக்குவமாக உறித்தெடுப்ப‌து என்ப‌து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்லாம‌ல் ப‌டிக்கும் பெரும் பாட‌ம். போர்க்களம் செல்ல ஆயத்தமாகும் படை வீரன் போல் இதை வெட்டும் முன்னர் பல தயாரிப்புகள் செய்ய வேண்டும். தின்ப‌த‌ற்கு இனிமையாக‌வும் மேலும் திண்ண‌‌ தூண்டும் முக்க‌னிக‌ளில் ஒரு ந‌ல்ல‌ சுவைமிக்க‌ ப‌ழ‌ம். இத‌ன் கொட்டையை அடுப்பில் இட்டு சுட்டு சாப்பிட்டால் அதுவும் இனிமையாக‌ இருக்கும். கீரை ஆக்கும் பொழுதும் வீட்டுப்பெண்க‌ள் இதை சேர்த்துக்கொள்வ‌ர். (கூடுத‌ல் சுவைக்கு ராலு போட‌ ம‌ற‌ந்துடாதியெ...)

14. ப‌த‌னீர்:

இதுவும் நுங்கின் உட‌ன் பிற‌ப்பு தான். பனை மரத்தின் சுவை மிக்க நீர். இது இப்பொழுது வ‌ர‌த்து குறைந்து விட்ட‌து.

15. இள‌நீர்:

இது வீட்டுப்பிராணி என்று சொல்வ‌து போல் ந‌ம்மூரில் எல்லா வீடுக‌ளிலும் ப‌ரவலாக தென்னை மரங்கள் இருக்கும். உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும் இய‌ற்கைப்பான‌ம். இதையும் ம‌க்க‌ள் சுவையைக்கூட்ட‌ சில‌ எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து ப‌ருகுவ‌ர் (அதான் ப‌ன்னீர் ம‌ற்றும் சீனி சேர்த்த‌ல்).

16. தர்பூசணிபபழம்:

சிவந்த நல்ல பழம் அப்படியே சாப்பிட்டாலும் ஐஸ் போட்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும் பருக,பருக கேட்கும். இத‌னை த‌ட்டிப்பார்த்து ந‌ல்ல‌ ப‌ழ‌த்தை தெரிவு செய்யும் கலையை கற்க‌ ந‌ம் ம‌க்க‌ள் எந்த‌ கோர்ஸ் ப‌டித்தார்க‌ள்? எங்கு ப‌டித்தார்க‌ள்? என்று தெரிய‌வில்லை.

17. நில‌க்க‌டலை:

இதை அவித்து சாப்பிட்டாலும், வ‌றுத்து சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ சுவையைத்த‌ரும். வ‌றுத்து சாப்பிடுவ‌தை விட‌ அவித்து சாப்பிடுவ‌து ந‌ல்ல‌து என்று சொல்வ‌ர். இத‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி தான் க‌ட‌லை மிட்டாய்.

இன்னும் ப‌ல‌ காய், க‌னிக‌ள் கோடை கால‌த்தை குளிர்விக்க‌ இறைவ‌னால் இலவசமாக இப்பாருலகிற்கு அருள‌ப்ப‌ட்ட‌வைக‌ள் ஏராள‌ம் உண்டு. இதை எண்ணி என்றும் இறைவ‌னைப்புக‌ழ்வோம்.

ப‌ழைய‌ நினைவுக‌ளிலிருந்து எதையாவ‌து எழுத‌ வேண்டும் என்று எண்ணி இதை எழுதியுள்ளேன். இதை ப‌டித்து பின்னூட்ட‌ம் இடுப‌வ‌ர்க‌ள் தான் இத‌ற்கு சரியான‌ மார்க் போட‌ வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு க‌ட்டுரையில் ச‌ந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு