அதிரை குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு தன்னார்வலர்கள் மேற்கொண்ட முயற்சி, அதனால் சிலரிடம் எழுந்த காழ்ப்புணர்வுள், இணைய கருத்துப் பரிமாற்றங்களால் எழுந்த நீயா-நானா மனப்பான்மை, இவற்றையெல்லாம் மீறிய அரசியல் குறுக்கீடுகளால் தற்போது தடைபட்டுள்ள நீர் வரத்து குறித்து இணைய தளங்களில் வெளியான பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் இவற்றையெல்லாம் கண்டபிறகு நானறிந்த சில விளக்கங்கள் மூலம்
சிலரின் தவறான புரிதலை நீக்கும் என்று நம்புகிறேன்.
1) காவிரி கடைமடை பகுதியான அதிரைக்குத் தேவையான நீர்வரத்து கிழக்கில் நசுவினி ஆற்றிலிருந்தும், மேற்கில் ராஜாமடம் அருகே கடலில் கலக்கும் ஆற்றிலிருந்தும், பள்ளிகொண்டான் அருகேயுள்ள செல்லிகுறிச்சி ஏரியிலிருந்தும் கிடைக்கிறது என்பதை அதிரையர்கள் அறிவோம். அவ்வகையில் ராஜாமடம் வழியாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீரை ஊருக்குள் திருப்பிவிடும் முயற்சியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி சேர்மனும் முன்னின்று செய்தார்.
2) ராஜாமடம் ஆற்றிலிருந்து வரும் நீரை ஊருக்குள் கொண்டு வரும் வழித்தடமாக சி.எம்.பி வாய்க்கால் இருந்து வந்தாலும், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்த வாய்க்கால் அடைபட்டிருந்ததையும் அறிவோம். இந்த வாய்க்காலை சீர்செய்வதன்மூலம் அதன்வழியாக ஆலடிக்குளம், செக்கடிகுளம், காட்டுக் குளம், மரைக்காயர் குளம், நடுத்தெரு கீழ்புறமுள்ள செட்டியாகுளம், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி குளம் ஆகியவற்றை நிரப்ப முடியும்.
3) சி.எம்.பி வாய்க்காலில் வரும் தண்ணீர் வரத்து பட்டுக்கோட்டை சாலை வழியாக வெள்ளக் குளம்,கரிசல் மணி வழியாக சி.எம்.பி வாய்க்கால் மூலம் செக்கடி, ஆலடி, மரைக்காயர் ஆகிய குளங்களுக்குச் செல்கிறது.
4) நமதூரின் இயற்கை நீர்வரத்து வழிகளை வைத்துப் பார்க்கும்போது செக்கடி குளம் நிரம்பினால் ஆலடிக்குளம், செட்டியாகுளம்,புதுப்பள்ளி குளம் ஆகியவற்றிற்குள்ள வாய்க்கால் மூலம் அடுத்தடுத்து நான்கு குளங்கள் நிரம்பும்.
5) ஆலடி குளம் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர் மண்ணப்பன் குளத்திற்கும் யானையன் குளத்திற்கும் செல்லும்.யானையன் குளம் நிரம்பி மெயின்ரோடு வழியாக செல்லியன் குளம், நாரக்குட்டை ஆகியவை நிரம்பும். ஆஸ்பத்திரி தெருவிலிருந்த இன்னொரு வழித்தடம் மூலம் புதுப்பள்ளி குளத்திற்கு இருவழிகளில் நிரம்பும் வசதி இருந்தது.
6) மேற்கிலிருந்து ஆறு வழியாகவும், செல்லிக் குறிச்சி ஏரி வழியாகவும் நீரவரத்து இருக்கும் போது இவ்வாறு செயல்பட்டால் தான் மேற்கண்ட குளங்கள் நிரம்பும் என்பதை அறியாமல், செக்கடிக் குளத்திற்கு மட்டும் ஏன் நீரை அனுப்ப வேண்டும்? மற்ற குளங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று புலம்புவதில் நியாயம் இல்லை.
7) ஒரு குளத்தில் போதுமான நீர் இருப்பு இருந்தால் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது இயற்கை. அவ்வகையில் ஊரின் நடுவில் நீர் நிரம்ப தயார் நிலையில் இருக்கும் செக்கடி குளம் நிரம்புவதன்மூலம் புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன்,செக்கடித்தெரு,நடுத்தெரு,ஆலடித்தெரு,செட்டித்தோப்பு ஆகிய பகுதிகள் பலன்பெறும்.
8) மூலிகைக் குளியலுக்குப் பேர்பெற்ற நமதூரின் செடியன் குளத்திற்கு நீர்வரத்து, ராஜாமடம் ஏரியிலிருந்து ரயில்வே பாதையையொட்டிய ஓடைகள் மூலமே சாத்தியம் என்பது தெரிந்தும், வந்துகொண்டிருந்த ஆற்றுநீர் திட்டமிட்ட குளங்களுக்குள் வந்தடைவதற்குள்ளாக செடியன் குளத்திற்கும் நீர்வேண்டி தனியாக கலெக்டரிடம் மணு கொடுத்தது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை.
9) சில வருடங்களுக்கு முன் ஊர் குளங்களெல்லாம் வறண்டு கிடந்தபோது செடியன் குளம் தூர் வாரப்பட்டு அதிக நீர் நிரம்பியதனால் ஏற்பட்ட உடைப்பில் பிலால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அறிவோம். செடியன் குளம் தூர்வாரப்பட்டபோது செக்கடி குளம் கண்டு கொள்ளப்படவில்லை என்று யாரும் கேட்கவில்லை அல்லது இப்பகுதியில் இருந்தவர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை.
10) மேற்ச் சொன்ன இயற்கையான காரணங்களால் செக்கடி குளமும் ஆலடிக்குளமும் நிரப்புவதற்கு முயற்சிகள் நடக்கும்போது, குறிப்பிட்ட குளங்களுக்கு மட்டும் சாதகமாக நீர்வரத்து திருப்பி விடப்படுகிறது என்று குற்றம் சொல்வது நியாயமா?
11) சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடிய போதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. அதுபோல் செய்னாங்குளம் தூர் வாரப்பட்டபோதும் சொல்லவில்லை.
12) நீண்டகால பயன்பாடுகளின் அடிப்படையிலான ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைப்புக்காக அதிரை பேரூராட்சி சேர்மனின் தனியார்வமும், அதனால் சந்தித்த இடையூறுகளும் அறிவோம். ஊர் நலனில் அக்கரை இருந்திருந்தால்,இவ்விசயத்திலும் சேர்மனுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ ஒத்துழைத்திருக்கலாமே!
13) யாருமே கண்டு கொள்ளாத நிலையில் தன்னார்வலர்களின் முயற்சியால் அதிரை சேர்மன் இவ்விசயத்தில் களம் இறங்கிய பிறகு, இன்னொரு வழியில் ஆற்றுநீரைக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலிருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும், எப்படியாவது நமதூர் குளங்கள் நிரம்பட்டும், நீர்நிலைகளும் நீர்மட்டமும் உயரட்டும் என்பதாகத்தானே பலரது எதிர்பார்ப்பும் இருந்தது.
14) சுயவெறுப்புகளின் அடிப்படையிலும் போட்டிமனப்பான்மையிலும் அரசியல் ஆளுமைகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் வரத்தைத் தடுத்தவர்களின் முந்தைய செயல்பாடுகளும், இவர்களின் ஒத்துழைப்பின்மை, இடையூறு குறித்து சேர்மன் வைத்த குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளதை நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15) 2014 ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரியில் நீர்வரத்து விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டும் என்று அரசு குறிப்பு தெரிவிக்கிறது.எஞ்சியுள்ள நாட்களுக்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காழ்ப்புனர்வுகளைக் கைவிட்டு ஒற்றுமையாகச் செயல்பட்டால் எதிர்வரும்கோடையில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.
இந்த அக்கரையிலும் ஆற்றாமையிலும்தான் இந்த விளக்கங்கள். யாரையும் உயர்த்த அல்லது தாழ்த்துவதல்ல என் நோக்கம்.
வஸ்ஸலாம்,
அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்




