கடந்த வாரம் புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழக்கம் போல ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். சீர்காழியைத் தாண்டி ஆனைக்காரன்சத்திரம் என்கிற ஊர் வந்த போது காலை மணி ஏழரை. அந்த ஊரில் நெடுஞ்சாலையோரம் இந்தியன் வங்கி அமைந்து இருக்கிறது. நாங்கள் பயணித்த பேருந்துக்கு பாதை கிடைக்காத விதத்தில் சாலையை ஆக்கிரமித்து, அந்த இளம் காலை நேரத்திலேயே வங்கியின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக – அனைவருமே தோற்றத்தில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடங்கிய குறைந்த பட்சம் இருநூறு முதல் முன்னூறு பேர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். பல ஊர்களிலும் அண்மைக்காலமாக அன்றாடம் நாம் காணும் காட்சிதான் இது. நாமும் நேற்றுவரை இவ்வாறு நின்றுவிட்டுத் தான் இன்று பயணிக்கிறோம்.
பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார். சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஏக்கம் நிறைந்த மக்களின் கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது. பயணம் தொடர்ந்தது. பேருந்து கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது பயணிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பேருந்தில் ஒலித்த இந்த பழைய பாடல் வரிகள் , நமது காதுகளில் நுழைந்து, இதயம் புகுந்து , இன்றைய நாட்டின் நிலையின் உயிரில் கலந்த உறவானது.
பாடல்வரிகள் இவைதான். குலேபகாவலி என்ற பழைய திரைப்படத்தில் வருவது
“ சொக்காப் போட்ட நவாபு
செல்லாது உங்க ஜவாபு
நிக்காஹ் புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு? “
மனம் ஏனோ அந்தப் பாடல்வரிகளை வைத்து, இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட, தனது மனக்கதவை மெல்லத் திறந்து அந்த பாடல் வரிகளுக்கு பதவுரை எழுதியது.
பாடல் வரிகளின் பதவுரை இதுவே.
சொக்காப் போட்ட நவாபு = பத்து இலட்ச ரூபாய் மதிப்புக்கு கோட்டு சூட்டு போட்ட பிரதமர் மோடி என்கிற நவாப்பே!
செல்லாது உங்க ஜவாப்பு = நீங்கள் இப்படி மக்களை கஷ்டப்படுத்திவிட்டு அளக்கிற அளப்பெல்லாம் செல்லுபடியாகும் காலம் மலையேறிவிட்டது.
நிக்காஹ் புருஷன் போல வந்து = கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று பெரிய பந்தாவோடு வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு? = சொன்னதை செய்ய முடியாமல் தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல் வாய்ச்சவடால் பேசிக் கொண்டு பாய் அவுர் பெஹ்னோ என்று அளந்து விடுவதில் எதற்கு இந்த வெட்டி பந்தா?
என்றே மனது இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட்டது. ஏன்?
நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஏழரை என்பதை சனியன் என்றும் அந்த சனியனுக்கு அடுத்தவீட்டில் இருக்கும் எட்டை இராசி இல்லாத எண் என்றும் கூறுவார்கள்.
கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதே போல இந்த நாட்டு மக்களின் தலையில் ஒரு இடியாக இறங்கியது. இடியை இறக்கியவர் வளர்ச்சியின் நாயகன் என்று வக்கற்றவர்களால் வாய்கிழிய புகழப்படும் நரேந்திர மோடியாவார் .
“பொருளாதார அவசர நிலை “ என்று பொருளாதார மேதைகளால் வர்ணிக்கப்படும் செல்லாத நோட்டுக்கள் பற்றிய அறிவிப்பை அதாவது நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பித்துக்குளி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஜாக்கிசானுடைய ஒரே அடியில் எதிராளி வீழ்வது போல் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் , அதாவது பண புழக்கத்தில் இருந்த செலவாணியில் 86 சதவீதம் பயனற்றது ஆகிப் போனது. மக்கள் பதைபதைத்தனர். பிரதமரின் இந்தச் செயல் மற்றும் அறிவிப்பு இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடலில் இருந்து 85 சதவீத இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓடு பார்க்கலாம் என்று சொன்ன உணர்வைத்தான் காட்டியது.
ஆசைகாட்டி மோசம் செய்வதில் ஆஸ்கார் அவார்டு வாங்கத் தகுதி பெற்ற பிரதமர் தனது வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த பொருளாதார முடிவுக்கு நான்கு நோக்கங்களைக் குறிப்பிட்டார். அந்த நோக்கங்களை நோக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல் ( Surgical Strike ) என்றும் தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.
• கருப்புப்பணம் ஒழிப்பு
• கள்ளப்பணம் அகற்றல்
• தீவிரவாதம் ஒழித்தல்
• ஊழலை ஒழித்தல்
ஆகிய நான்கும்தான் மோடி அவர்கள் அறிவித்த தொலைகாட்சி அறிவிப்பில் ஆதியில் சொல்லப்பட்ட காரணங்கள். அத்துடன் வங்கிகள் இரண்டு நாட்கள் இயங்காது என்றும் பிறகு சனி , ஞாயிறு உட்பட வேலை செய்து மக்களின் தேவைகளுக்கு பணியாற்றும். மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தங்களின் கணக்கிலும் போடலாம்; மாற்றியும் கொள்ளலாம். இரண்டு மூன்று தினங்களில் நாடெங்கும் ஏடிஎம்கள் இயங்கத் தொடங்கும். புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றெல்லாம் புருடா விட்டார். மக்களும் நம்பினார்கள். பலர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் நல்ல தொடக்கம் என்று தொடக்கத்தில் வரவேற்றார்கள். கழுத்தறுருக்கும் கத்தியை பிரதமர் மறைத்து வைத்திருந்தது அப்போது தெரியவில்லை.
அந்தக் காலங்களில் கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் நாடகங்கள் போடுவார்கள். நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு கோமாளி வந்து இப்படிப் பாட்டுப் பாடியே நாடகத்தைத் தொடங்கிவைப்பார். “ நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனய்யா! ஆட்டமாடி, பாட்டுப்பாடி ஆனந்தம் அள்ளித்தர வந்தேனய்யா” என்றுதான் கோமாளிப் பாட்டுடன் நாடகம் தொடங்கும். செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற இந்த நாடகமும் இப்படித்தான் நாட்டுக்கு சேவை செய்ய என்று பிரதமரால் பாட்டுப் பாடி தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் மக்களின் துயரங்களுக்கு தூபம் போட்ட திட்டம் இது என்பதை உணர ஆரம்பித்த நேரத்தில் நாடு முழுதும் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கின. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எல்லா நாட்களும் முடங்கின. நாட்டு மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்டார்கள். வங்கிகளின் வாசல்களில் விடியற்காலையிலேயே கூட்டம் வரிசையில் நிற்கத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் மற்றும் மன உளைச்சலில் சிக்கி ஏறக்குறைய நூற்றுக்கும் மேலானோர் தங்களது உயிரை வங்கிகளின் உள்ளேயும் வெளியேயும் விட்டனர்.
நாட்டின் நாடித்துடிப்பை அறிய இயலாத பிரதமர் நடிப்பில் நவரச நாயகனாகி, செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான அடுத்த நாள் கோவா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிப்பின் உச்சத்துக்கே போனார். அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது என்றால் நாம் உணர்ந்துகொள்ளலாம். அவரது குரல் தழுதழுத்தது என்றால் நாம் அறிந்து கொள்ளலாம். குரல் தழுதழுக்க கண்ணீர் வழிந்தோட, நாட்டுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தான் எடுத்து இருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார நடவடிக்கையின் பலன்கள் மக்களுக்கு நடைமுறையில் சென்றடைய ஐம்பது நாட்கள் அவகாசம் தேவை என்று முழங்கினார்.
அதையும் விட ஒரு படி மேலே சென்று ஐம்பது நாட்களுக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் யாவும் தீராவிட்டால் என்னை உயிரோடு தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றார். அதையும்விட ஒரு படி மேலே சென்று நானே தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிடுவேன் என்றார். இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்காக கடந்த ஐம்பது நாட்களாக நாமும் காத்து இருந்தோம். ரோஷக்கார பிரதமர், யாருடைய கட்டாயமும் இல்லாமல் தானே முன்வந்து தான் சொன்ன தனக்குத்தானே தண்டனை தரும் காட்சிளையாவது அரங்கேற்ற தப்பித் தவறி முயற்சித்து விடுவாரோ என்று நாடே அச்சத்துடன் எதிர்பார்த்தது. தனது பதவியை வகிக்க தாம் தகுதி இழந்துவிட்டோம் என்பதையாவது உணர்ந்து தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்ற பேராசை அல்ல குறைந்த பட்சம் மக்கள் மன்றத்தில் மன்னிப்பாவது கோருவாரா என்று அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்?????
இந்திய நாட்டின் பொருளாதார வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்பது பல முறை நடைபெற்று வந்திருக்கும் செய்திகளை நாம் காணலாம்.
ஆங்கிலேயர் ஆட்சியிலேயே , 1946 ஆம் ஆண்டு 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஆனாலும் 1954 ஆம் ஆண்டு 1000, 5000, 10,000 ஆகிய மதிப்புள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1978 ஆம் ஆண்டு கலக்கல் நாயகன் என்று அறியப்பட்ட மொரார்ஜிதேசாய் அரசு அந்த நோட்டுக்களை மீண்டும் செல்லாது என்று அறிவித்தது. மொரார்ஜி தேசாய் அரசு இவ்வாறு அறிவித்த நேரத்தில் நாட்டின் மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் 1000, 5000, 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை கண்ணால் கூட கண்டது இல்லை. மேல்தட்டு வர்க்கம் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது . அரிசிக்கு அலையும் அன்னம்மாவும் சில்லரைசெல்வுக்கு அலையும் சின்னம்மாவுக்கும் இந்த செய்தியே தெரியாது. 2014 ஆம் ஆண்டில் கூட ஒரு மெளனமான நடவடிக்கையாக 2005 ஆம் ஆண்டு அச்சிடபப்ட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து அரசால் திரும்பப் பெறப்பட்டன.
இப்போது நடைபெற்றது போல மூன்று மணிநேர அவகாசத்தில் நாட்டின் பொருளாதார குரல்வளை நெரிக்கபட்டது முன்னெப்போதும் நிகழ்ந்ததே இல்லை. திரைமமறைவான பல காரணங்களால் வரலாற்றிலேயே இது மாபெரும் ஊழல் என்று பல தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் வெளிப்படையாக , அரசியல்ரீதியாக நாம் கண்டதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு நாம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய பிரதம பதவி வேட்பாளராக முன்மொழியப்பட்ட இன்றைய பிரதமர் மோடி அவர்கள் செய்த பரப்புரையை நினைவூட்ட விரும்புகிறோம். இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கும் பிரதமர் , அன்று கருப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கடுமையாகப் பேசினார். என்ன பேசினார் என்பதை நான் அனைவரும் அறிவோம்.
96 சதவீதம் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்டெடுத்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தான் மீட்டு வரும் தொகையைப் பகிர்ந்து 15 இலட்சம் பணம் போடுவேன் என்றார். நாடு நகைத்தது என்றாலும் நம்பிய மக்கள் பலர் அவருக்கு வாக்களித்தனர். இன்றோ தனது வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்ட பிரதமர், மக்களின் மனதை விட்டு தான் சொன்ன ஆசை வார்த்தைகளை அழிக்க புழக்கத்தில் இருக்கும் பணத்தை ஒழித்து கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்கிறார். மக்களை எப்போதும் பரபரப்பிலும் படபடப்பிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டுமென்ற ஹிட்லரின் பாசிசத்தின் ஒரு முறையாகவே இந்த செயலை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கெல்லாம் கருப்புப் பணம் என்று பட்டம் கட்டும் செயலை , பொருளாதாரத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கும் தற்குறி கூட சொல்லமாட்டான். அவ்வாறு பதுக்கபட்ட பணம் வெறும் நான்கு சதவீதம்தான் என்றும் மிச்சம் கறுப்புப் பணம் என்று காட்டப்படுவது எல்லாம் வெளிநாடுகளில் முதலீடாகவும், சொத்துக்களாகவும், தங்கமாகவும், வெளிநாட்டுக் கரன்சிகளாகவும் , பங்கு சந்தை மூலதனமாகவும் பதுக்கபட்டுள்ளன என்பதையே பொருளாதார மேதைகள் சுட்டிக் காட்டுகிறார்கள். Black Money is not in stock but in flow என்பது அடிப்படைப் பொருளாதார அறிச்சுவடி.
கருப்புப் பணம் என்று பிரதமரால் பட்டம் கட்ட பணம் எவரெவர் வீட்டுக் கட்டில் மெத்தைகளிலோ அடுக்கிவைக்கபட்டிருப்பது போலவும் ஒரு தட்டுத்தட்டினால் அல்லது ஒரு ‘சிகப்பு ஹிட்’ வாங்கி அடித்தால் பூச்சிகள் வெளிவருவதுபோல் பணக்கட்டுகள் வெளிவந்துவிடும் என்றும் பிரதமர் நினைத்து இவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையை செய்து, ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வயிற்றில் அடித்து இருக்கிறார்.
செல்லாத நோட்டு அறிவுப்புக்காக பிரதமர் சொன்ன நான்கு காரணங்களும் பொய்த்துப் போய்விட்டன யென்பதை புள்ளிவிபரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.
முதலாவதாக பதினைந்து இலட்சம் கோடி பணத்தில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்றார். ஆனால் நேற்றுவரை பதினாலு இலட்சம் கோடி ரூபாய்வரை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து வருகிறது கறுப்புப் பணம்? வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை எல்லாமே கறுப்புப் பணம் என்று பிரதமர் மார் தட்டிக் கொள்ள இயலுமா? அப்படியானால் மகளுடைய திருமணம், மருத்துவச் செலவு, மகனின் படிப்பு , வெளிநாட்டு விசா என்றெல்லாம் தேவை ஏற்படும் என்று நினைத்து நான்கு ஐந்து வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் தங்களின் உழைப்பினால் உருவாக்கிய செல்வம் ஒரே இரவில் செல்லாமல் ஆக்கப்படும் நிர்ப்பந்தத்துக்கு பயந்து பொழுது விடிந்த உடன் வங்கியில் அவற்றை செலுத்திவிட பதறிப்போய் வந்தார்களே அந்தப் பணம் எல்லாம் கருப்புப் பணமல்ல வியர்வை வாடையைச் சுமந்த கற்புடைய பணம்.
கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிக்க என்று சொன்னதும் இப்படித்தான் புஸ் வானமாகிவிட்டது. எப்படிஎன்றால் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் நானூறு கோடி கள்ளப்பணம் அல்லது கள்ள நோட்டு என்றார்கள். ஆனால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் அவ்வாறு பத்தாயிரம் ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே வங்கி ஊழியர்களின் சங்கம் அறிவிக்கும் உண்மை.
மூன்றாவதாக, தீவிரவாதம் மற்றும் நான்காவதாக ஊழலை ஒழிக்க என்று சொன்னதும் ஒரு ஹம்பக் தான். தீவிரவாதிகள் இந்த அறிவிப்புக்குப் பிறகு மூன்று முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். வெற்று முழக்கம் செய்ததைத்தவிர இந்த தேசபக்தர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
ஊழலை ஒழித்து விட கங்கணம் கட்டிய பிரதமர் கட்சியின் தலைவர் இயக்குனராக இருக்கும் குஜாராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு அமைப்பில் இந்த அறிவிப்பு வெளியாக ஒரு வாரம் முன்பு ஐநூறு கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டதற்குப் பெயர் ஊழலா? இல்லை உத்தமபுத்திரன் படப்பாடலா? மேற்குவங்கத்தில் பாஜக மாநிலக்கட்சி இந்த அறிவிப்பு வெளியாக முன்பு எண்ணூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்ததற்கு பெயர் பெயர் என்ன ஊழலா? இல்லையா?
சேகர் ரெட்டி வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பணத்தில் 33 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ராம்மோகன்ராவ் வீட்டில் 18 இலட்சம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டனவே , டெல்லியில் ரோஹித் என்பவர் வீட்டில் 30 இலட்சம் விமானநிலையத்தில் 54 இலட்சம் இவை எல்லாம் என்ன? ஊற்றுப் பெருக்கா அல்லது ஊழல் பெருக்கா ? இந்த ஊழலில் எல்லாம் யார் ஈடுபட்டார்கள் என்பதன் ரிஷி மூலம், மத்திய அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாவிட்டால் உளவுத்துறையும், அமலாக்கத்துறைரையும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
இன்னும் சொல்வோம். யார் யாரிடம் கருப்புப்பணம் குவிந்து இருக்கிறது அவை எங்கேயெல்லாம் இருக்கிறது என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அவர்களின் பட்டியல் நிதித்துறையிடம் இருக்கிறது. அங்கெல்லாம் சோதனைபோட்டு, இருக்கும் பணத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் பறிமுதல் செய்து அள்ளி இருக்க இயலும். அதைவிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் அர்த்தமில்லாமல் விளையாடி இருக்கிறார் திருவாளர் மோடி.
புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் என்று உலகமே ஒப்புக் கொண்ட தலைசிறந்த பொருளாதார அறிஞரான கவுசிக் பாஸு, ( Kaushik Basu) நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார வல்லுனருமான, பால் குருக்மான்( Paul Krugmaan ), நோபல் பரிசு பெற்ற புகழ்வாய்ந்த அமர்தியா சென்( Amartiya Sen) , போர்பஸ் என்கிற உலகப் பொருளாதரத்தை அளந்து அளவிடுகிற அமைப்பின் தலைவர் ஸ்டீவ் போர்ப்ஸ் ( Steve Forbes) போன்றவர்கள் எல்லாம் மோடியின் அரசு எடுத்த இந்த நடவடிக்கையைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.
DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்கிற முடிவை எடுத்த அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உயர்மதிப்புக் கொண்டவை என்று அவைகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு அவைகளைவிட அதிக மதிப்புடைய, அளவில் குறைந்த, எடையில் குறைந்த 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதே , “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதற்கு அதுவே உதாரணமாக ஆகிவிட்டதே. இத்தகைய ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவை அரசு மேற்கொண்டதன் பின்னணி என்ன? யாருக்கு உதவ ? என்றே பொருளாதாரம் புரிந்தவர்கள் வியந்து கேட்கிறார்கள். அரசின் இந்த மாறுபாடான முடிவில் பொருளாதார சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் இருக்கிறது என்றே அறிவாய்ந்தோர் கணிக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கடத்தவும் பதுக்கவும் குறைந்த இடவசதியே போதும் என்று அத்தகையோரின் முயற்சிக்கு அரசே பாதை போட்டுக் கொடுத்து இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் அதில் குற்றம் என்ன காண முடியும்?
ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது அந்த முடிவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சந்திப்பது, எவ்வாறு நீக்குவது , எவ்வாறு பரிகாரம் காண்பது என்பதற்கான எவ்வித முன்னேற்பாடுமே செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பிரதமர் மோடி செய்து இருக்கிற இந்த அஜால் குஜால் வேலை நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.
பிரதமரின் நடிப்பு, பிஜேபி கட்சியினரின் தொலைக் காட்சி விவாதங்களின் காட்டுக் கூச்சல் இவைகளை மீறி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்கள், சிறுவணிகர்கள், பொதுமக்கள், உழைப்பாளிகள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதவை. இதயமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்ட இந்த இடுப்பை ஒடிக்கும் நடவடிக்கையின் விளைவுகள் விபரீதமானது.
நாடே நிலைகுலைந்து போய் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கட்டிட வேலைகள் கால்வாசியோடு நிற்கின்றன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. விவசாய விளைபொருட்கள் விற்பனை இல்லை. அரசு அலுவலகங்களில் வேலை செய்ய ஆட்கள் இல்லை; அனைவரும் மணிக்கணக்கில் வங்கி வாசலில் நிற்கிறார்கள். நாட்டின் மனித வளம் சோம்பிப் போய் உற்பத்தி இன்றி உறங்கிக் கொண்டு இருக்கிறது; மனிதவேலை நாட்கள் மக்கிப் போய் மந்தமடைந்துவிட்டது. இந்த காரணங்களால் எதிர்கால இந்தியா அனுபவிக்கப் போவது கொடுக்க இருக்கும் விலை மிகப் பெரிதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி இல்லாமலும் விற்பனை இல்லாமலும் நுகர்வோர் இல்லாமலும் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் GDB என்கிற நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 3% வரை குறையும் என்று அளவிடப்பட்டு இருக்கிறது. “வளர்ச்சியின் நாயகன்” என்று வரவழைக்கப்பட்ட நரேந்திரமோடியின் திட்டமிடாத பொருளாதார நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு பாதாள படுகுழி வெட்டி விட்டது. இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வது கடினமாக இருக்கும் என்றே முன்னாள் நிதியமைச்சர்கள், பொருளியல் வல்லுனர்கள் ஆகியோர் கணிக்கிறார்கள்.
நாட்டின் பணசுழற்சிக்கு பொறுப்பு வகிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி நேரத்துக்கொரு அறிவிப்பை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள். காலையில் காபி குடித்துவிட்டு அவர்கள் போடும் உத்தரவுகள் மதிய உணவுக்கு முன்பே மாற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் மாறுபட்ட டிசைன் டிசைனான அறிவிப்புகள் மக்களுக்கு ஆறுதல் தருவதற்கு பதிலாக, குழப்பத்தையே தந்தன. மக்களுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்ட தொகைகள் நாள் முழுதும் கால்கடுக்க வங்கிவாசலில் நின்ற பிறகு , இராமயணத்தை நினைவூட்டி “ இன்று போய் நாளை வா! “ என்கிறார்கள். ஆனால் அவசரத்தேவைக்காக, வங்கியின் வாசலில் பத்து சதவீத கழிவில் மக்கள் பணம் பெற்றுக் கொண்ட காட்சிகளையும் காண முடிந்தது.
நாடே அல்லோகலப் பட்டுக் கொண்டு- அன்றாட செலவுகளுக்கு அலறிக் கொண்டு வங்கி மற்றும் ஏ டி எம் வாசல்களில் உயிரைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில், மோடி மன்னர் பிடில் வாசித்துக் கொண்டு ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்துகொண்டு அழுக்குப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரது அடிவருடிகளோ, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காகவும் , கருப்புப்பணத்தை குழி தோண்டி புதைப்பதற்காகவும் கள்ளப்பணத்தை வேரறுப்பதற்காகவும் மோடிஜி மேற்கொண்டுள்ள போரில் மக்கள் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்துகொண்டிருப்பதாக கண்களை மூடிக்கொண்டு, கதை அளந்துகொண்டிருந்தார்கள். இன்னொருவர் வேதனை ; இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை என்று எம்ஜியார் பாணியில்தான் பதில் சொல்லவேண்டி இருக்கிறது.
“வினாச கால விபரீத புத்தி “ என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அழியும் காலம் வரும்போது அறிவு கெட்டுப்போகும் என்பது அதன் அர்த்தம். அதே போல் மக்கள் வயிறு எரிந்து வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது கருப்புப்பணம் வைத்து இருந்தவர்கள்தான் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசினார் பிரதமர். மக்களின் நாடித்துடிப்பை அறியாத எவரும் ஆட்சியில் நீடிப்பது அர்த்தமில்லாமலே போகும்.
உயர் மதிப்புள்ள செலவாணிகளை செல்லாததாக ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அதைவிட உயர் மதிப்புள்ள நோட்டை வெளியாக்கியதில் குருட்டுப் பொருளாதார அறிவுதான் மோடி அவர்களின் அறிவுக்கு பதம். அவ்வாறு வெளியாக்கிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் காட்சிப் பொருளாக உண்மையான செல்லாத நோட்டாக மக்களின் கைகளில் இருந்தது மட்டுமே மோடி அவர்களின் நிர்வாக அறிவுக்கு பதம். போதுமான சில்லறை நோட்டுகளை அச்சடித்துத் தயாராக வைத்துக் கொள்ளாததும் , ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பை சரிசெய்துகொள்ளாததும் அனுபவமின்மைக்குப் பதம்.
பொருளாதாரமேதை என்று இன்று வரலாறு ஒப்புக் கொள்ளும் திரு. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருக்கும்போது 2011 ஆம் ஆண்டு , M.B. ஷா அவர்கள் தலைமையில் கள்ளப் பொருளாதாரம் , இணைப் பொருளாதாரம், கருப்புப்பணம் ஒழிப்பு ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த வங்கிச் சேவை அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்காக ஆதார் அட்டை போன்ற அடையாளங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகளை செய்தது. அன்றைய மன்மோகன் அரசும் அவற்றை ஏற்று ஆதார்கார்டுகளை அறிமுகம் செய்யத் துவங்கிய நேரத்தில், அதை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள்தான் பிஜேபியினர். இன்று அதே ஆதார் கார்டு, ஒருங்கிணைந்த வங்கிச்சேவை ஆகியவற்றை தலையில் சுமந்து கூவிக்கூவி விற்கத்தொடங்கி இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது போலவே மோடி அரசின் செல்லாத நோட்டு நடவடிக்கை, ஒரு சட்டபூர்வமான கொள்ளை (Legal Looting ); பரந்த ஊழலுக்கு துணைநின்ற நிர்வாகச்சீர்கேடு ( Administrative collapse causing widespread corruption )
இந்த கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும் திட்டத்தை மோடி அறிவித்ததன் பின்னணியில் இந்திய நாடே இதுவரை சந்திக்காத மாபெரும் ஊழல் இருக்கிறது அதன்விபரங்கள் வெளிவரும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் திரு. ராகுல் காந்தி கூறி இருப்பதையும் ஒன்றுமில்லை என்று நாம் ஒதுக்கிவிட இயலாது.
ஒரு நாட்டின் பிரதமர் மக்கள் மன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி மக்கள் தெளிவுற தெரிந்து கொள்வதற்கும் அந்தத் திட்டத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் தனக்கு ஐம்பது நாள் அவகாசம் தேவை என்றும் அதற்குள் பாழ்பட்ட நிலைமைகளை சரிசெய்யாவிட்டால் தன்னை தீயில் இட்டுக் கொளுத்தும்படியும் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்வடிய மக்களின் முன் மண்டி இட்டுக் கேட்டார்.
மன்னிக்கும் மனப்பான்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர்பெற்ற இந்திய மக்கள் ஐம்பதுனாட்களின் முடிவில், அந்த கடந்த ஐம்பது நாட்களில் மக்கள் பட்ட துயரத்தை மனதில் கொண்டும் தான் அளித்த வாக்குறுதியின் நாணயத்தின் அடிப்படையிலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களை நீக்கும் வண்ணம் பிரதமர் மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவிப்பார் என்று வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள்.
ஆனால் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. காரியம் ஒன்றும் ஆகவில்லை. கடந்த ஐம்பது நாட்களுக்கான கணக்குகளை பிரதமர் நாட்டுமக்களிடம் சொல்லுவார் என்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்றெல்லாம் ஏங்கி இருந்தமக்கள் முன்னே தோன்றிய பிரதமர் கங்கை சென்று குளித்தாலும் நீங்காத பாவத்தை ஏழை நடுத்தரமக்கள் மீது ஏவி விட்ட பிரதமர் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சட்டையில் உள்ள தூசியைத் தட்டிவிட்டது போல், பட்ஜெட் உரை ஆற்றுவது போல் பழங்கதைகளைப் பேசி பற்றி எரியும் பிரச்னையை திசைதிருப்பி , ஆசை வார்த்தைகளை மீண்டும் அள்ளிவிட்டுவிட்டு நமஸ்தே என்று கூறி நாற்காலியில் அமர்ந்துகொண்டார். செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது கருப்புப்பணம் என்று 18 முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு பேசிய பிரதமர், அதற்கான பரிகாரங்கள் தீர்வுகள் ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உரையில் ஒரு இடத்தில் கூட அவைபற்றிக் குறிப்பிடவில்லை. தன்னை தீயில் இட்டுக் கொளுத்துங்கள் என்ற அளவுக்குப் பேசிய பிரதமர் அதைப்பற்றியும் வாயே திறக்கவில்லை. மக்களின் இறுதி நம்பிக்கைக்கும் தனது இறுக்கமான உதடுகளால் இறுதி மரியாதையை வருடத்தின் இறுதியில் செலுத்திச் சென்றார் பிரதமர்.
பிரதமர் பேசாவிட்டால் என்ன? நாம் பேசுவோம். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து செல்லாததாக ஆக்கியது ஒரு புஸ் வானம் என்று பேசுவோம். நாம் பேசாவிட்டாலும் இதோ இந்த புள்ளிவிபரங்கள் பேசுகின்றன.
உச்ச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த உறுதிச் சான்றுகளில் 3 முதல் 4 இலட்சம் கோடிவரை கறுப்புப் பணம் அரசுக்கு வரும் என்று கணக்கிட்ட மத்திய அரசுக்கு படுதோல்வியும் பட்டை நாமமும் சாத்தப்பட்டது. எவ்வாறு என்றால் , ரிசர்வ் வங்கியின் பொருளாதார மதிப்பீட்டின் பிரகாரம் 15.44 இலட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும் அதிலேதான் 3 முதல் 4 இலட்சம் கோடி வங்கிக்கு வராது என்றும் கணக்கிடப்பட்டது. ஆனால் கடந்த 28 டிசம்பர் வரை வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 14.92 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக இனி வரவேண்டியது கிட்டத்தட்ட 0. 50 இலட்சம் கோடி மட்டுமே. இந்தப் பணம் கூட அடுத்த இரண்டு நாட்களில் வங்கிகளுக்கு வந்து இருக்கலாம். ஆகவே , இந்த செல்லாத நோட்டு சிகிச்சை தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் இந்தப் புள்ளி விபரங்கள் நாம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்கின்றன.
மக்களின் பணத்தை மல்லையாக்களுக்கு வாரி வழங்கிவிட்டு அவற்றை வராக்கடன் என்றும் அறிவித்துவிட்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மக்களின் கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு வந்து மீண்டும் அந்தப் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் பொருளாதார சதியில்தான் பிரதமரும் நிதி அமைச்சகமும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கடந்த ஐம்பது நாட்களின் செயல்பாட்டால் நிருபணம் ஆகிவிட்டது. மக்களின் மனமும் ஊனம் ஆகிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் நொண்டியாகிவிட்டது.
ஆகவே, “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே இல்லை” என்று பாடும் நாட்டுப்புறப்பாடலின் இலக்கணத்துக்கு இலக்கியமாக ஒரு மாபெரும் நாட்டின் பிரதமரின் அறிவிப்பு அமைந்துவிட்டது. பெண்கள் கும்மியடித்துப் பாடும் அந்தப் பாடல், இன்று நாடெங்கும் நடுத்தெருவில் நிற்கும் மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு பாடும் ஒப்பாரிப்பாடலாக மாறிவிட்டது. இந்த ஒப்பாரி எப்போது ஓயும் என்றே தெரியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மக்களை வைத்திருப்பதே வளர்ச்சியின் நாயகனின் சாதனை.
குறிப்பு:
இந்த பணஒழிப்பு பசப்பு நாடகத்தின் நடுவே பணமில்லா பரிவர்த்தனை என்கிற வில்லியையும் அறிமுகப்படுத்த இந்த அரசு முயல்கிறது. அதுபற்றிய விளக்கமான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில்.
அதிரை இபுராஹீம் அன்சாரி M.com.,