Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பழமைக் (கூக்)குரல்கள்... 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 08, 2016 | , , , ,

(அண்மைய நாட்களாக ரொம்ப tough ஆன subject களாகவும், வாக்கு வாதங்களாகவும் ‘அதிரைநிருபர் தளத்தில் இடம் பெற்றுவிட்டதால், கொஞ்சம் relax ஆக இந்தப் பதிவு.)

ஓர் அரை நூற்றாண்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  நமதூர் வீதிகளில் மாடி வீடுகள் மிகக் குறைவு. அவை,  ‘மெத்தை வீடுகள்’’ என்று அழைக்கப்படும். நடுத்தெருவில், ‘மெத்தை வீட்டு சவியாமத்தா’  கீழத் தெருவில் கச்சா கடைக்குப் பக்கத்தில் ஒரு ‘மெத்தை வீடு’ – இப்படிச் சில. மீதியிருந்த எல்லா வீடுகளும் – எங்கள் வீடு உள்பட – எல்லாம் நாட்டு ஓடுகளால் அடுக்கப்பட்ட கூரை வீடுகள்.  

அந்தக் காலத்தில் வெளிநாடுகள் என்று பொதுமக்களுக்குத் தெரிந்தவை எல்லாம், இலங்கை (சிலோன்), பர்மா, சிங்கப்பூர், மலேஷியா (மலாயா), இன்னும் ஒன்றிரண்டு!  யூக்கே, அமேரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் இன்னும் என்னென்னவோ நாடுகளில் நம்மூர்க்காரர்கள் இன்று வாழ்கின்றார்களே, அவையெல்லாம் அறியப்படாதவை!  அல்லது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்தவை.  

அந்தக் காலத்தில் நம் வீதிகளில் நடந்துகொண்டிருந்த (கூக்)குரல்களைக் கேட்க உங்களை அழைத்துச் செல்கிறேன், வாருங்கள்! 

“அம்மி கொத்தலையா?  அம்மீ....மாமியோவ்!”

இப்போதைப் போல், அன்று ‘மிக்ஸி’ இல்லை! ‘கிரைண்டர்’ இல்லை! ‘வாஷிங் மெஷின்’ இல்லை!  அம்மியும் ஆட்டுக் கல்லும் உரல் உலக்கையும் வண்ணாரப் பிள்ளையும்தான்!

அம்மியில் உணவுக்கான பொருள்களை அரைத்து மாவாக்க, அந்த அம்மியைச் சிறு சிறு பள்ளங்களாகக் கொத்திவிடச் செய்து, அரைத்துக் கையால் வழித்துவிட்டு, மீண்டும் அரைப்பார்கள் வீட்டுப் பெண்கள்.  அரைத்து அரைத்து அம்மியும் ஆட்டுக் கல்லும் (கொடக்கல்) தேய்ந்து போகும்.  அதை  மீண்டும் கொத்தி விடவேண்டும்.  அந்த வேலையைச் செய்வதில் திறமையானவர்கள் குறத்திகளே.

அவர்கள் தெருத்தெருவாக அலைந்து, “அம்மி கொத்தலையா!  அம்மி கொத்தலையா!  மாமீ...!  மாமியோவ்...!” என்று குரல் கொடுப்பார்கள்.  தேவை உடையவர்கள், “இந்தா, ‘அம்மி கொத்தலையா!’ (அவளுக்குப் பெயர் அதுதான்) என்று கூப்பிட்டு, வேலை செய்யச் சொல்லிக் கூலி கொடுத்தனுப்புவார்கள்.  அல்லது, அவள் கேட்கும் பழைய புடவையைக்  கூலியுடன் கொடுத்தனுப்பு வார்கள் நம் வீட்டுப் பெண்கள்.

“சாலா மிஸ்ரி..ஹல்வா....! லேகியோம்....!”

குறத்திகளுக்கு மேற்கண்ட வேலை.  குறவர்களுக்கு...?  பிசுபிசுப்பான ஒரு பொருளை – பார்வைக்கு அது உலர்ந்த ‘ஆப்ரிகாட்’ பழம்போல் இருக்கும் - கம்பியில் அல்லது நூலில் கோர்த்துக்கொண்டு, “சாலா மிஸ்ரி ஹல்வா....” என்று கூவிக்கொண்டு தெருக்களில் போவார்கள்.  நாங்களெல்லாம் அதைப் பார்த்துக் குடல் பிரட்டலுக்கு உள்ளாகியிருப்போம்.  பல வியாதிகளைக் குறிப்பிட்டு, அவற்றை குணப்படுத்தும் என்றும் கூவுவான்! நம் தெருக்களில் யாரும் அதை வாங்க நான் பார்த்ததில்லை.

பட்ச்சி வைத்திய எண்ணெய்:  

இவனும் குறவனாகத்தான் இருப்பான் போலும்.  ஒரு விரிந்த, வட்ட வடிவமான பாத்திரத்தில், பல குருவிகளின் செத்த உடல்களும் சில பெரிய பறவைகளின் உடல்களும், எண்ணெயில் தோய்ந்த நிலையில் கிடக்கும். மூட்டு வலி, இடுப்பு வலி, கை-கால் கடுப்பு, கழுத்து வலி, தலைவலி, போன்ற நோய்களுக்கு அந்தப் பட்சிகளின் சாறு மருந்தாம்!  அவனை நம்பி வாங்கிச் சென்றவர்களையும் என் பள்ளிப் பருவத்தில் கண்டுள்ளேன்.  அவன் கூப்பாடு, வெகு தூரம்வரை கேட்கும்!  என் வாழ்க்கையில், இதுவரை அப்படி எந்த நாட்டு வைத்தியரும் மருந்தாக, அந்தப் பட்சி எண்ணெயைப் பரிந்துரைக்கக் கேட்டதில்லை!

“காதுக் குடும்பி எடுக்கலையா?  காதுக் குடும்பீ....!” 

இப்படி ஒருவன் கூப்பாடு போட்ட பின்னர்தான் சிலருக்குக் காதுக்குள் அரிப்பு ஏற்படுவதுபோல் உணர்ச்சி உண்டாகும் போல.  அவர்களின் கை அவர்களை அறியாமலே காதுக்குள் போகும்.  இதைக் கண்டுகொள்வான் அந்த ‘காதுக் குடும்பிக்காரன்’.  “அய்யாக்குக் காதுப்பீ கல்லாப் போயிருக்குது” என்று நெருங்கிச் செல்வான்.  ஏமாளிகள் சிலர், தம் காதுகளை அவனிடம் அர்ப்பணம் செய்வார்கள்.  தானும் அமர்ந்து, தன் ‘கஸ்டமரையும்’ உட்கார வைப்பான். அவனிடமிருக்கும் பழைய பெட்டி திறக்கப்படும். “வலிக்காது! பயப்டாதீங்கோ” என்று கூறித் தன் surgery equipmentகளை  எடுப்பான்.  நாங்களெல்லாம் வேடிக்கை பார்ப்போம்.  

சற்று நேரத்தில், “கல்லு தட்டுப்படுது” என்று கூறி, தனது பையைத் திறந்து ‘லாவகமாக’ ஒரு சிறு கல்லைத் தன் விரல் நகத்தால் மறைத்து எடுத்துக் காதில் போடுவான்!  அது ‘சொய்ஞ்...’ என்று இறங்கிக் காதுப் பீயுடன் ஒட்டிக்கொள்ளும்.  பின்னர் அவன் சிறிய இடுக்கியொன்றால் ‘லாவகமாக’ வெளியில் எடுத்துக் கஸ்ட்டமரின் கையில் கொடுப்பான்!  அந்தக் கல்லுக்கு ரெண்டு திட்டு விழும்! தூக்கிப் போட்டுவிடுவான் அந்த ஏமாளி!  அடுத்து நிற்கும் நாங்கள், அர்ஜெண்டினாவின் மரடோனா கோள் போட்டவுடன் தட்டுவது போல் கை தட்டுவோம்!

பூம்பூம் மாடு:

முறுக்கு மீசை, தலைப்பாகையுடன், ஒரு மாட்டை பல நிறத் துணிகளால் அலங்கரித்து, அதன் கொம்பிலும் முகத்திலும் பல வண்ணப் பூச்சுகளைப் பூசி, தன் தோளில் ஒரு மத்தளத்தையும் மாட்டிக்கொண்டு, அதில் தன்னிடமிருக்கும் வளைந்த கம்பால் மேலும் கீழும் உரசுவான் அந்த மாட்டுக்காரன்.  அது ‘பூம்பூம்’ என்று ஒலியெழுப்பும்.  அதனால் அவனுக்கு, ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ என்பர்.  ‘கோயில் மாடு’ என்றும் அந்த மாட்டுக்குப் பெயருண்டு.  

“அம்மாக்கு யோகம் பொறக்குது!  ஐயாக்கு யோகம் பொறக்குது” என்று தொடங்கி, வீட்டுக்காரர் வியாபாரியா, வெளிநாட்டுப் பயணக்காரரா என்பதை, தன்னைப் பின் தொடர்ந்து கத்திக்கொண்டு வரும் சிறுவர்களை அலட்டுவது போல் கேட்டு வைத்துக்கொள்வான்.  அதன் அடிப்படையில், “சீக்கிரம் கல்யாணம் வருது.  சீக்கிரம் கடுதாசி வருது” என்றெல்லாம் அவனது ஆரூடம் அந்த வீட்டின் முன் வெளிப்படும்.  தனது ஆரூடத்தை உறுதிப்படுத்த, மாடு கட்டப்பட்டிருக்கும் கயிற்றைச் சற்று இழுப்பான்.  அது  தன் தலையை ஆட்டும்.  “பாத்தீங்களா?  மாடு ஆமாங்குது!” என்பான்.  சிலர் சில்லறை (ஒன்றைக் காசு) போடுவார்கள்; சிலர் விரட்டி விடுவார்கள்.  மாட்டுக்காரன் அந்த வீட்டுக்காரர்களைத் திட்டிக்கொண்டு போவான். அவனுடைய திட்டுக்கு பயந்த சிலர், அவன் ‘பூம்பூம்’ அடிப்பதற்கு முன்பாகவே காசை எடுத்துக் கொடுத்துப் போகச் சொல்லிவிடுவார்கள்.  துணிச்சலான சில ‘பசங்க’ மாட்டின் வாலைப் பிடித்து இழுப்பார்கள்.  “டேய்! அது கோயில் மாடுடா!” என்பான் ஒருவன்.  “மைர் மாடு.  போடா எனக்குத் தெரியும்” என்ற பதில் அந்தத் துடுக்குப் பயலிடமிருந்து வரும். மாட்டை வைத்து இப்படி ஒரு பிச்சைப் பிழைப்பு!

வயிற்றிலடித்துப் பிச்சை!

இன்னொரு பிச்சைக்காரன் வந்தான்.  அவன் பிச்சை கேட்ட விதமோ, விநோதமானது!  இடுப்பில் கட்டிய ஒரு துணி மட்டும்.  திறந்த மேல் பகுதியுடன் வருவான்.  வீட்டு வாசலுக்கு முன் நின்றுகொண்டு, “ய்யெப்ப, ய்யெப்ப” என்று பலமுறை சொல்லி ஓங்கித் தனது வயிற்றில் அடித்துப் பிச்சை கேட்பான்!  அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டு தர்மம் கொடுப்பார்கள். உடலை வருத்தி, மடமைப் பிச்சை கேட்கும் முறையிது!

உருண்டு புரண்டு: 

இன்னொருவன் சற்று நேரம் நடப்பான்.  பின்னர், தெருவின் நடுவில் உருண்டு உருண்டு, “அம்மா...!  தாயே...!” என்று ஏங்குவான்.  இந்தப் பரிதாப நிலையைக் கண்டு, அவன் கையில் பிடித்திருக்கும் செம்புப் பாத்திரத்தில் செப்புக் காசுகள் வீழும்.  “தாயில்லாப் பிள்ளை” என்று தலையில் அடித்துக்கொள்வான்!  பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

அந்தக் காலத்தில்தான் டூவீலர், த்ரீவீலர், கார்கள், லாரிகள், பஸ்கள் எல்லாம் அபூர்வமாச்சே. அப்படியே வந்தாலும், வாகணக்காரர்கள் ஒதுங்கிப்  போவார்கள்.  அவன் வீதியின் நடுவில்தான்!  இதை மக்கள் பரிதாபமாகப் பார்ப்பார்களே தவிர, யாரும் அவனை எழும்பச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு கூக்குரல் பிச்சை!

குடுகுடுப்பைக்காரன்:   

பார்க்க, ஆள் இப்போதைய ஜனாதிபதிகளின் குதிரைப் படை ராணுவப் பாதுகாப்பு வீரர்களைப்போல் இருப்பான்!  அவன் தலைப்பாகையின் முன்பகுதி, அப்படி நட்டிக்கொண்டிருக்கும்!  கையில் சிறிய மத்தளம் போன்ற குடுகுடுப்பை.  இரண்டு பக்கமும் தட்டி ஓசை எழுப்பும் தடிப்பான மணிகள் நூலினால் கட்டப்பட்டிருக்கும். வளமும் இடமும் வேகமாகத் திருப்பினால், சிறு மத்தளத்தில் அடித்து ஒலி எழுப்பும்.  இவனும் தன் ஆரூடத்தை அவிழ்த்து விடுவான்.

“யோகம் பொறக்குது!  யோகம் பொறக்குது!  இந்த ஊட்டுக்காரங்களுக்கு யோகம் பொறக்குது!  வீட்லே பொதையல் கெடக்குது!  பதிமூணு வர்ஷம் போனா பூதங்காத்து, எடது பக்க மூலைலே மூடிக் கெடக்குது!  அம்மாடே ஆறாவது புள்ளக்கிக் கெடைக்கும்!” என்பது போன்றெல்லாம், புத்தியை அடகு வைத்தவர்களிடம் புதையல் ஆசையைக் கிளப்பிவிடுவான் இவன்.  சிலபோது அந்த வீட்டுக்கார அம்மா பல ஆண்டுகளாக மலடியாகக்கூட இருப்பாள்!  ‘இனி ஆறு பிள்ளைகள் எப்படிப் பிறக்கும்?’  சிந்திக்க அறிவிருக்காது!  இவனுக்கும் காசு விழும்.

பாம்பாட்டி: 

தோளில் தொங்கும் நீளமான பைக்குள் வட்ட வடிவில் ஓலையால் வேயப்பட்டு மூடப்பட்ட ஒரு பெட்டி.  அதற்குள் சின்னச் சின்ன பாம்புகள்! அந்தக் காலத்தில், காம்பவுண்ட் சுவர்களுக்கு பதிலாகப் பெரும்பாலும் வேலிகள்தான் வீடுகளைச் சுற்றிலும், அல்லது ஒரு பக்கத்தில் அடைக்கப்பட்டிருக்கும்.  பற்கள் பிடுங்கப்பட்டுப் பாஷாணம் (விஷம்) நீக்கப் பட்ட பாம்புகளுள் ஒன்றை, யாரும் பார்க்காத நேரத்தில் எடுத்து வேலிக்குள் விட்டு விடுவான் அந்தப் பாம்பாட்டி!  அவனிடம் பாம்புகளை மயங்கி ஆட வைத்து இசை எழுப்பும் ஓர் ஊதுகுழல் உண்டு.  அது இரு பக்கங்களிலும் சிறுத்து நீண்டும், நடுவில் உருண்டையாகவும் இருக்கும்.  அதன் ஒரு பக்கம் வாய் வைத்து விதவிதமாக ஊதுவான்.  அது எழுப்பும் ஓசையில் மயங்கிப் பாம்பு ஆடும்!  

தன் இசையைச சற்று நிறுத்திவிட்டு, “அம்மா!  இந்த வேலிக்குள்ளே ஒரு பாம்பு இருக்குது.  அதெப் பிடிச்சுத் தாறேன்” என்பான் அவன்.  அந்த warning வீட்டாருக்கு அச்சத்தைக் கிளப்ப, அந்த வீட்டுக் கிழடுகள், “அட நல்லாயிருப்பா!  நீ அதெப் பிடிச்சிட்டாப் போதும்.  எங்களுக்குத் தரவேணாம். நீனே வச்சுக்கோ!  இந்தா ஒர்ருவா” என்று நீட்டும்.  வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நோக்கிவிட்டு, பெரிதாயிருந்தால், இருவருக்கும் bargaining நடக்கும். பெரும்பாலும் அவன் கேட்டதே கொடுக்கப்படும்.  ‘பாம்பென்றால், படையும் நடுங்கும்’ அல்லவா?

அதையடுத்து ‘ரீங்காரம்’ தொடங்கி, பாம்பொன்று வேலியிலிருந்து வெளிப்பட்டுத் தலை விரித்தாடும்!  வீட்டுப் ‘பசங்க’ வேடிக்கை பார்ப்பார்கள், அச்சத்தோடு!  பாம்பாட்டி, தனது வட்டப் பெட்டியின் மூடியைத் திறப்பான். உடன் அந்தப் பாம்பு உள்ளே சென்று அடங்கிவிடும்!  வீட்டார் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்!

இன்னும் சிலர் பாம்பாட்டும் வித்தையைத் தெருக்களின் நடுவில் வைத்துச் சின்னப் பிள்ளைகள் சூழ, வேடிக்கை காட்டுவார்கள்.  நடுவில் துண்டு விரித்துவிட்டுப் பாம்பைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருவான் பாம்பாட்டி.  நடுங்கிய மக்கள் நடுவில் விரித்த துணியில் காசை வீசிவிடுவர்.  இப்படியும் ஒரு பிழைப்பு!

“ஈயம் பித்தாலக்கிப் பேர்ச்சம் பலம்!”    

இப்படி ஒரு கூப்பாடு!  வீடுகளில் பல உலோகப் பாத்திரங்களும் பண்டங்களும் புழக்கத்தில் 

இருக்கும்.  அவை நைந்து போனால், அல்லது உடைந்து போய்விட்டால், அல்லது துருப் பிடித்துப் பழையவையாகிப் போய்விட்டால், அவற்றை வாங்கிக் கொள்ள சைக்கிள் வண்டிக்காரர்கள் வருவார்கள் மேற்காணும் கூப்பாட்டோடு. பேரீத்தம் பழம் இவர்களுக்கு அந்தக் காலத்தில் எங்கிருந்து கிடைத்தது? ‘அதுதான் ஈக்கிதே ராஜஸ்தான் பேரீச்சம் பழம்.  வேறென்ன, ஹாஜிகளா கொடுக்கப் போறாங்க?  நல்லா ஈக்கிது போங்க’ என்கிறார் ‘ஊர் சுற்றி உதுமாங்கனி.’

பழையன கழிதலும் புதியன புகுதலும்
                                வழுவல கால வகையி னானே”

என்ற தமிழிலக்கண நன்னூல் சூத்திரத்திற்கு உருக் கொடுப்பார்கள் வீட்டார்.

இதில் வருந்தத் தக்கது என்னவென்றால், வளைந்த, உடைந்த, பழையதாகிப் போன பண்டபாத்திரங்களைக் கொடுக்கும் அதே வேளை, விலை மதிப்பற்ற பழைய காலத்துச் செப்பேடுகளும் தாமிரப் பட்டயங்களும் சைக்கில்காரனின் கைக்கு மாறும்!  முடிவில், அக்காலத்துப் பணம் பல்லாயிரங்களுக்கு அருங்காட்சியகங்களுக்குக் கை மாறும் அந்த அரும்பொருள்கள்!  வீட்டாருக்குக் கிடைப்பதோ, ஓர் அரைக் கிலோ உலர்ந்த பேரீத்தம் பழம்!

இதன் தொடர் இன்றும் நடைபெறுகின்றது, வேறு விதத்தில்.  “எரும்பு வாளி (இரும்பு வாளியைத்தான்), பிளாஸ்டிக் வாளி, பழைய சைக்கிள், பழைய இரும்பு, பழைய நோட்டுகள், புஸ்தகங்கள், பழைய பேப்பர், பிளாஸ்டிக் ச்சேர், எலக்ட்றி சாமான்கள்” என்று இப்படிக் கூவிக்கொண்டு வந்து, அள்ளிச் செல்கிறார்கள் இன்றைய சைக்கிள்காரர்கள்.  பழைய சாமான்களின் மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்கித் தரம் பிரித்து மூட்டை கட்டி, லாரிகளில் ஏற்றிப் பெரும்பெரும் தொழிற்சாலைகளுக்குப் பல லட்சங்களுக்கு விற்கிறார்கள்!  இது ஒரு lucrative பிசினஸ் ஆக நம் நாட்டின் பல பாகங்களில் நடைபெறுவதை நாம் தினமும் பார்க்க முடிகின்றது.  இதிலும் சில இழப்புகள்! சில வீடுகளில் பல அரிய இஸ்லாமிய இலக்கிய நூல்களும் பழைய மார்க்க நூல்களும் ‘கடலைக்காரனுக்கு’ அள்ளிக் கொடுக்கப்படும் அவல நிலை! ‘பழசைக் கொடுத்தாலும், பார்த்துக் கொடுக்கணும்’ என்ற அறிவில்லை நம் மக்களுக்கு! என்ன செய்ய?!

அதிரை அஹ்மத்

மாணவராக வாழ்ந்த ஆசிரியர் - 04 1

அதிரைநிருபர் பதிப்பகம் | March 07, 2016 | , , ,

மதிநுட்பமும் அறிவுக்கூர்மையும் நிறைந்த அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மிகவும் உன்னிப்புடன், முழுக் கவனத்துடன் பாடம் பயில்வதே வழக்கம். தாம் சிறந்தோங்க விரும்புவது மார்க்கச் சட்டக் கலையில் என்ற தெளிவு ஏற்பட்டதும், அந்தச் சட்டங்களைப் பிறர்

கூற, கண்னை மூடிக்கொண்டு மனனம் செய்வது போன்ற தவறை அவர் செய்யவில்லை. நபிமொழிக் கலையைக் கற்பதையும், அதனுடன் சேர்த்து மார்க்கச் சட்டக் கலையைப் பயில்வதையும்தான் அவர் முக்கியமாகக் கருதினார். அவை இரண்டறக் கலந்தவை என்பது அவரது திடமான கருத்தாக இருந்தது.

அதை மிக அழகாக அவர் விவரித்திருக்கிறார். “யாரேனும் நபிமொழிகளை மட்டும் பயின்று, அதிலிருந்து மார்க்கச் சட்டங்களைப் பயிலவில்லையெனில், அவருக்கான எடுத்துக்காட்டு மருந்து விற்பனையாளரைப் போன்றது. விற்பனையாளரிடம் எல்லா மருந்துகளும் இருக்கலாம். ஆனால் அவை எந்தெந்த நோய்களுக்குப் பயன்படும் என்பது அவருக்குத் தெரியாது. மருத்துவர் வரும் வரை அவர் காத்திருக்க வேண்டும். நபிமொழிகளை மட்டுமே பயின்ற நபிமொழிக் கலை மாணவர் அந்த விற்பனையாளரைப் போன்றவரே. நடைமுறையில் அந்த நபிமொழிகளை எவ்விதம் பயன்படுத்துவது என்பதை அறிய அவர் மார்க்கச் சட்ட வல்லுநருக்காகக் காத்திருக்க வேண்டும்.”

இவ்விதமாக அவர் அவற்றினுள் மூழ்கி மூழ்கி, இமாம் அபூஹனீஃபா என்ற தகுதியை எட்டிப் பிடிக்க உதவியது. அவரது மார்க்கச் சட்டக் கருத்துகள் தனி சிந்தனைக் குழுவாக (School of thought) உருவெடுத்து வரலாறாகிப் போனது. அந்த சிந்தனை எந்த அடிப்படையில் அமைந்தது என்பதை மட்டும் பின்னர் பார்ப்போம். அதற்குமுன் -

மாணவராக இருந்து இமாமாக உயர்ந்த இமாம் அபூஹனீஃபா, தம் மாணவர்களிடம் எப்படிப் பழகினார் என்ற சுவையான நிகழ்வுகளைப் பார்த்துவிடுவோம்.

அவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது, அவர்களுக்குப் பாடங்களை ஒப்பிப்பதைப் போலவோ, சொற்பொழிவு நிகழ்த்துவதைப் போலவோ இல்லாமல், அவரே அவர்களிடம் பாடம் பயில்வதைப் போல் அமைந்திருந்தது. ஒரு கேள்வி முன் வைக்கப்படும். அந்த கேள்விக்கான விடையை மாணவர்களுடன் விவாதிப்பார். மாணவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது ஒப்பீடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பார்கள். பலதரப்பட்ட கருத்துகளால் ஒருவரை நோக்கி ஒருவர் கூச்சலிட்டு, பெரும் களேபரமும் ஆரவாரமுமாகக்கூட இருக்கும். இறுதியில் அந்தக் கேள்வியை அல்லது பிரச்னையை அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்தபின், தாம் கருதிய முடிவை இமாம் அபூஹனீஃபா தெரிவிக்க, அது அனைவருக்கும் ஏற்புடையதாய் அமைந்திருக்கும்.

இவ்வகையிலான அவரது அணுகுமுறை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஏககாலத்தில் பயனுடையதாய் அமைந்திருந்தது. அதுமட்டுமின்றி, தாம் இறக்கும் வரை ஞானத்தைத் தேடி அலைந்த ஒரு மாணவராகவே அது அவரை அடையாளப்படுத்தியது.

நீ பத்துப் பேருக்குத் தீங்கு புரிந்தால், அவர்கள் உன்னுடைய தாய் தந்தையராக இருந்தாலுமேகூட, உனக்கு எதிரிகளாக உருவாகிவிடுவார்கள். ஆனால் நீ பத்துப் பேருக்கு நன்மை புரிந்தால் அவர்கள் உன்னுடைய உறவினர்களாக இல்லாதபோதும் உனக்குத் தாய், தந்தையரைப்போல் ஆகிவிடுவார்கள்...

பஸ்ரா நகரமும் கூஃபா நகரமும் மார்க்க விஷயங்களில் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தன. நாம் முன்னரே பார்த்ததுபோல் அவ்விரு நகரங்களும் வாதம், விதண்டாவாதம் என்று பெரும் களேபரத்துடன் திகழ்ந்த காலகட்டம் அது. ஆயினும், கூஃபா நகரில் வளர்ச்சி அடைந்திருந்த பயனுள்ள, சரியான மார்க்கச் சட்ட திட்டங்களையும், மார்க்க அறிஞர்களின் கருத்துகளையும் பஸ்ராவில் உள்ள மக்களுக்குக் கற்றுத் தர தம் மாணவர் யூஸுஃப் இப்னு காலித் என்பவரை அனுப்பி வைத்தார் இமாம் அபூஹனீஃபா. ‘சென்று வா; வென்று வா’ என்று சம்பிரதாயமாக அந்த மாணவரை வழியனுப்பாமல் சில அறிவுரைகளை வழங்கினார் அவர்.

ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட அந்த அறிவுரையானது, கொஞ்சமும் நமத்துப் போகாமல், இன்றும் புத்தம் புதிதாய், நமக்கு மிகவும் அவசியமாய் இருப்பது பெரும் ஆச்சரியம். படித்துச் சிந்திப்பது நமக்குள் அறம் வளர்க்க உதவும்.

“நீ பத்துப் பேருக்குத் தீங்கு புரிந்தால், அவர்கள் உன்னுடைய தாய் தந்தையராக இருந்தாலுமேகூட, உனக்கு எதிரிகளாக உருவாகிவிடுவார்கள். ஆனால் நீ பத்துப் பேருக்கு நன்மை புரிந்தால் அவர்கள் உன்னுடைய உறவினர்களாக இல்லாதபோதும் உனக்குத் தாய், தந்தையரைப்போல் ஆகிவிடுவார்கள்.

“நீ பஸ்ராவுக்குச் சென்று அதன் மக்களை எதிர்த்தாலோ, அவர்களைவிட உன்னை நீ உயர்த்திப் பேசினாலோ, அவர்கள் மத்தியில் உனது அறிவைத் தம்பட்டம் அடித்தாலோ, அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டாலோ, நீ அவர்களை விலக்குவாய்; அவர்கள் உன்னை விலக்குவார்கள். நீ அவர்களைச் சாபமிடுவாய்; அவர்கள் உன்னைச் சாபமிடுவார்கள். அவர்கள் வழிகெட்டுப் போனவர்கள் என்று நீ நினைப்பாய்; நீ வழிகெட்டுப் போனவன், மார்க்கத்தில் புதிதாய் விஷயங்களைச் சேர்ப்பவன் என்று அவர்கள் உன்னை நினைப்பார்கள். உனக்கும் எனக்கும் இழிவு வந்து தானாய் இணையும். நீ அவர்களிடமிருந்து ஓட வேண்டியிருக்கும். இது சரியான முறையன்று. தன்னிடம் இணக்கமாய்ப் பழகாதவர்களிடம் தானும் இணக்கமாய்ப் பழகாமல் இருப்பது விவேகமான மனிதனுக்கு உரியதன்று. அல்லாஹ்வே அவனுக்கு வழிகாட்ட வேண்டும். “நீ பஸ்ராவுக்குச் சென்றால், மக்கள் உன்னை வரவேற்பார்கள், சந்திப்பார்கள், உனக்குரிய மரியாதையை அளிப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவருக்குரிய தகுதியில் உன் மனத்தில் நிறுத்தி வை. மதிப்புக்குரிய மனிதர்களுக்கு மதிப்பளி. அறிவார்ந்த மக்களை உயர்வாய்க் கருது. அவர்களுடைய ஆசிரியர்களிடம் மரியாதை கொள். இளையவர்களிடம் அன்பு செலுத்து; பொது மக்களிடம் நெருங்கிப் பழகு. இறைபக்தி இல்லாதவர்களையும் அன்பாய் நடத்து. ஆனால் சான்றோரைச் சார்ந்து இரு.

“அதிகாரிகளையும் அதிகாரத்தையும் அசட்டை செய்ய வேண்டாம். எவரையும் தாழ்வாகக் கருதவேண்டாம். உன்னுடைய நற்பண்புகளில் தரம் தாழ்ந்துவிடாதே. உன்னுடைய இரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே; எவரையும் சோதித்துப் பார்க்காமல் நம்பிவிடாதே. தரம் தாழ்ந்தவர்களைச் சார்ந்துவிடாதே. நீ எதை வெளிப்படையாய் நிராகரிக்கிறாயோ அதை உனக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளாதே. முட்டாள்களுடன் மனம் திறந்து பேசுவதில் எச்சரிக்கையாக இருக்கவும். அடக்கம், பொறுமை, உளவலிமை, நற்பண்பு, சுயகட்டுப்பாடு ஆகியவை உன்னிடம் இருக்க வேண்டும்.

“உனது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள், சிறப்பான வாகனத்தை உபயோகிக்கவும். உனது உணவைப் பகிர்ந்துகொள். ஏனெனில் கஞ்சன் மேலோங்குவதில்லை. மக்களுள் சிறந்தவர்களை உனக்கு நம்பகமானவர்களாக ஆக்கிக்கொள். அநீதியை நீ அறிந்துவிட்டால், உடனே அதைச் சீர்படுத்து. நேர்மையைக் கண்டுவிட்டால் அதன்மீது உனது கவனத்தை அதிகப்படுத்து. “உன்னை வந்து சந்திப்பவர்கள், சந்திக்காதவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கானவற்றை அவர்கள் சார்பாகச் செய்து கொடு. உனக்கு நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீ நல்லதையே நாடு. மன்னிக்கும் குணத்தை மேற்கொள்; நன்மையை ஏவு. உனக்குச் சம்பந்தமில்லாததைப் புறக்கணி. உனக்குக் கேடு விளைவிப்பவற்றை எல்லாம் நீ விட்டுவிடு. மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் விரைவாகச் செயல்படு. உன்னுடைய சகோதரர்கள் உடல் நலமின்றி இருந்தால், நீ சென்று சந்தி; அல்லது உன் பணியாட்களை அனுப்பியாவது விசாரி. தொடர்ந்து சில நாள்களாக யாரேனும் தென்படாமல் இருப்பின் அவர்களைப் பற்றி விசாரி. அவர்கள் யாரேனும் உன்னிடமிருந்து விலக நினைத்தாலும் நீ அவர்களிடமிருந்து விலக நினைக்காதே. “உன்னால் இயன்ற அளவு மக்களிடம் அன்பு செலுத்து. கண்டிக்கத்தக்க மக்களாகவே இருப்பினும் அவர்களை முகமன் கூறி வரவேற்பளி. கூட்டங்களிலோ, பள்ளிவாசலிலோ மற்றவர்களைச் சந்திக்கும்போது, உனது கருத்துக்கு மாற்றமாய் கேள்விகள், பிரச்னைகள் விவாதிக்கப்படும்போது, முந்திக் கொண்டு சென்று உனது முரண்பாட்டைத் தெரிவிக்காதே. உன்னிடம் கேட்கப்பட்டால், உனக்கு என்ன தெரியுமோ அதை மக்களிடம் தெரிவித்து, ‘மற்றொரு கருத்து இப்படி இப்படி உள்ளது, அதற்கான ஆதாரங்கள் இன்னின்ன’ என்று கூறு. அவர்கள் உன்னைச் செவிமடுத்தால், உனது மதிப்பையும் உனது அறிவின் மதிப்பையும் உணர்ந்து கொள்வார்கள். ‘இது யாருடைய கருத்து?’ என்று அவர்கள் கேட்டால், ‘மார்க்க வல்லுநர் ஒருவருடையது’ என்று மட்டும் பதில் அளித்துவிடு.

“அவ்வப்போது உன்னை வந்துச் சந்திப்பவர்களுக்கு அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உனது அறிவிலிருந்து சிலவற்றைக் கற்பி. அவர்களிடம் நட்புடனும் நகைச்சுவையுடனும் உரையாடவும். அவர்களது தேவைகளைக் கவனிக்கவும். சில வேளைகளில் அவர்களுக்கு உணவளிக்கவும். அவர்களது மதிப்பை அங்கீகரித்து அவர்களது குறைபாடுகளை புறக்கணித்துவிடு. அவர்களிடம் அன்புடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்துகொள்ளவும். அவர்களிடம் எரிச்சலோ, கோபமோ அடைய வேண்டாம். சுமக்க இயலாத சுமையை அவர்கள்மீது செலுத்த வேண்டாம்.”

நற்பண்பு, மக்கள் நலன், மக்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் பக்குவம் போன்றவையெல்லாம் இல்லாமல் இத்தகைய நற்போதனைகள் அளிப்பது ஒருவருக்குச் சாத்தியமா என்ன? அவை தளும்ப தளும்ப நிரம்பியிருந்தன ஆசிரியர் இமாம் அபூஹனீஃபாவிடம்.

(தொடரும்)

நூருத்தீன்
 Darul Islam Family

ஹாபிட் (HABIT) ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | March 06, 2016 | , , ,

பொதுவாகவே அநேகமானோர் ஏதாவது ஒரு வகையில் ஹாபிட் [HABIT] என்கின்ற பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது எதில் ஒருவர் அதிக கவனம் செலுத்தி அதிக நாட்டம் கொண்டு நடந்து கொள்கிறார்களோ அதுவே நாளடைவில் அவர்களுக்கு ஹாபிட் என்று சொல்லக்கூடிய பழக்கமாகி விடுகிறது.

ஹாபிட் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று குட் ஹாபிட் மற்றொன்று பேட் ஹாபிட் என்பதாகும். குட் ஹாபிட்டானாலும் , பேட் ஹாபிட்டானாலும் இரண்டுமே மனிதனை குறிப்பிட்ட சிலவைகளுக்காக மட்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி அதற்காக மட்டுமே அடிமைப்படுத்தி வைத்துவிடும். ஒருமனிதனுக்கு நல்ல பழக்கங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். தீய பழக்கம் முற்றிலும் இருக்கக் கூடாது. அப்படியே தீய பழக்கங்கள் ஹாபிட் என்கிற போர்வையில் ஒளிந்திருந்தாலும் அதை விரட்டியடிக்கவே முடிந்தவரை முயற்ச்சிக்க வேண்டும்.

சிலர் சிலவிளையாட்டில் தீவிரமாக கவனம் செலுத்துவார்கள். அந்த குறிப்பிட்ட விளையாட்டுதான் தனது ஹாபிட் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். அதுபோல சிலர் சாப்பிடும் உணவில் கூட இதுதான் எனது விருப்பமான உணவு என்று பெருமையாக சொல்லிக் கொண்டு அந்த உணவையே விரும்பி சாப்பிடுவார்கள்.இன்னும் சிலர் வார்த்தை உச்சரிப்பில் கூட ஹாபிட் என்று சில அர்த்தமில்லாத வார்த்தைகளை பேச்சோடு உச்சரிப்பார்கள்.இது போன்ற ஒருதரப்பு பழக்கமான ஹாபிட்டை தவிர்த்துக் கொள்வதே நல்லதாகும். 

முக்கியமாக நாம் உண்ணும் உணவில் விருப்பமானவை என ரகம்பிரித்து சாப்பிடக் கூடாது.ஒவ்வொருவகை உணவிலும் வெவ்வேறான புரதச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அனைத்து உணவுவகையிலும் உடலுக்குத் தேவையான பலசத்துக்களும் நிறைந்து உள்ளன. குறிப்பிட்ட ஒருவகை உணவைமட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்காது.பின்விளைவுகள்தான் ஏற்ப்படும்.அதுபோலத்தான் நாம் எல்லா விசயங்களிலும் ஒருதரப்பாக ஆக்கிக் கொள்ள கூடாது.

அடுத்ததாகச் சொல்லப்போனால் ஹாபிட்டை கடைப்பிடித்து நடப்பவர்களை அதைத்தாண்டி மேற்கொண்டு எதையும் அறியவிடாமல் யோசிக்கவிடாமல் குறுகிய வட்டத்திற்குள் முடங்கச் செய்து விடுகிறது.நாம் ஒருபழக்கத்தில் ஹாபிட் ஆகிவிட்டால் அதைவிடச் சிறந்ததை அறிந்து கொள்ள ஹாபிட்டே தடைக்கல்லாக இருக்கிறது.

எல்லா விஷயங்களும் எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.சிலருக்கு அறிந்த விஷயங்கள் சிலருக்கு அறியாது இருக்கும். சிலர் அறிந்திடாத விஷயம் மற்றவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். இதுதான் உலக இயல்பு..அதை விடுத்து ஹாபிட் என்கிற பெயரில் நமக்கு நாமே ஒரு பழக்கத்தை வரையறுத்துக் கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் பிற பழக்கவழக்கங்களும் பிற விசயங்களும் அறிந்திடாமல் போய்விடும்.

அது மட்டுமல்லாது சிலர் தவறான பழக்கங்கள்,மற்றும் முகம் சுளிக்கும்படியான வார்த்தைகளைக் கூட ஹாபிட் என்கிற பெயரில் பிரயோகித்து வருகிறார்கள். இதன் தவறை உணர்ந்து இதிலிருந்து மீண்டுவர முயற்சிக்க வேண்டும்.

ஒரு நல்ல விஷயத்தில் கவனம் செலுத்தி ஆர்வமாக இருப்பது தப்பில்லை.. அதேசமயம் ஹாபிட் என்கிற பெயரில் ஒரேவிஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பதால் எந்தப் பயனும் பலனும் இல்லை. எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பது தான் வாழ்க்கைக்கு பலம் சேர்க்கும். 

ஆகவே எந்த ஒரு பழக்கத்தையும் ஹாபிட் என்கிற பெயரில் நிலையாக வைத்துக் கொள்ளாமல் அதற்க்கு மாறாக நல்லவைகளை எடுத்துக் கொண்டு கெட்டவைகளை தூக்கியெறியும் பழக்கத்தைக் கொண்டிருப்பதே எல்லாவற்றையும் விட சிறந்த [ HABIT ] பழக்கமாக இருக்கிறது. எனவே ஹாபிட் என்கிற பெயரில் எந்த ஒரு பழக்கத்தையும் நிரந்தரமாக ஆக்கிக்கொண்டு ஒரே ரீதியில் ஒரே விசயத்தில் கவனம் செலுத்தி முடங்கி விடாமல் அனைத்து நல்ல விசயங்களையும் அறிந்து கவனம் செலுத்துபவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா 

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 17 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 05, 2016 | ,


இன்றைய உலகில் தொய்வில்லாமல் தொடர்ந்து நடந்து வரும் பணிகளில் , இஸ்லாத்தை நோக்கி மனிதகுலத்தை அழைக்கும் பணியும் ஒன்றாகும். இதனால் உலகெங்கும் இருந்து பலர் தித்திக்கும் திருப்புமுனைகளைக் கண்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று கீழ்க்கண்ட இணைய தள ஆய்வுகள் கூறுன்றன. 

www.religioustolerance.org/growth_isl.chr.htm http://www.Pewresearch.org/ மற்றும் ARIS American Religious Identification Survey ஆகிய ஆய்வுகள்...

The growth rate of Islam, according to the U.S. Center for World Mission, at 2.9% is higher than the growth rate of the world’s population . Thus, the percentage of Muslims in the world is growing on the order of 0.6% per year.

என்றும்

A Pew Forum on Religion & Public Life report in 2015 concluded that the U.S. population of Muslim adults is 2.6 million -- 0.6% of the total population. This places Islam as the third most popular organized religion in the U.S. after Christianity (70.6%) and Judaism (0.9%). என்றும் இந்த உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றன. 

இந்த வளர்ச்சியின் பின்னணியில் அழைப்புப் பணியில் அயராது தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அழைப்பாளர்கள் அனைவருக்கும் இறைவன் தனது அருளை வழங்குவானாக! 

அதே நேரம், அழைப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல கேள்விகளுக்கு விடைகளை ஆராய்ந்து வருகிறோம். 

அந்த வகையில் அழைப்பாளர்கள் பரவலாக எதிர்கொள்கிற இஸ்லாத்தின் மீதான இன்னொரு கடுமையான விமர்சனம் இஸ்லாம் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு எதிரானது; முஸ்லிம்கள் அதிகக் குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டைப் பற்றி விவாதிக்கலாம். 

குடும்பக்கட்டுப்பாடு என்ற கோஷமும் கருத்தும் உலகத்துக்கும்  இந்தியாவுக்கும் புதிதல்ல.

“காதலுக்கு வழிவைத்து 
கருப்பாதை சாத்த 
கதவொன்று கண்டறிவோம் 
அதிலென்ன குற்றம் ? 

என்று கேட்டார் பாரதிதாசன். நாம் இருவர்! நமக்கு இருவர்! என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளில் உள்ள சுவர்களிலும் தீப்பெட்டிகளிலும் கூட எழுதப்பட்டன. பின்னர், ஒன்றே பெருக! அதை நன்றே பெருக! என்றும் திருத்தி முழங்கப் பட்டன. ஆடுமாடுகளைப் போல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்ற முறையில் ஆண்களின் ஆண்மைத் தன்மை நீக்கப் பட்டது., பெண்களின் கர்ப்பமுறும் தன்மைகள் காவு கொடுக்கப்பட்டன. அதற்காக அரிசிமுதல் பருப்புவரை இலவசப் பரிசாக வழங்கப் பட்டது. இதற்காக ஆள் பிடித்துக் கொண்டுவரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறையில் குடும்பக் கட்டுப்பாடு தனி அங்கமாயிற்று. அதிகமான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டது. தெருவெங்கும் பாடல், ஆடல் , நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் பரப்புரைகளும் செய்யப் பட்டன. பேருந்துகள் முதல் விமானங்கள் வரை அடையாளச் சின்னமாகிய சிவப்பு முக்கோணம் பொறிக்கப்பட்டது. 

முஸ்லிம்கள் ஈமானும் இறையச்சமும் உடையவர்கள். தங்களின் இறைவனும் தங்களின் இரசூல் (ஸல்) அவர்களும் வகுத்த வழியிலேயே வாழவேண்டுமென்று நினைப்பவர்கள். இஸ்லாம், குடும்பத்தைக் கட்டுப் படுத்துகிறேன் என்ற போர்வையில் இறைவனால் படைக்கப் பட்டு தாயின் கர்ப்பகருவறையிலேயே தனது சுஜூதை தொடங்கும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவில்லை என்பவை ஒரு புறமிருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி பொதுவான சில பொருளாதாரக் கருத்துக்களை முதலில் நோக்கலாம். பிறகு ஆன்மீக காரணங்களுக்கு வரலாம். 

முஸ்லிம்கள் மட்டுமல்ல, வேறு எவருமே குடும்பக் கட்டுப் பாடு செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதே எமது நிலைப்பாடு. குடும்பக்கட்டுப்பாடு செய்யாததால் மக்கள்தொகை பெருகுகிறது . மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் மக்கள் தொகையை குறைத்துவிட்டால் எல்லாக் குறைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு உள்நோக்கம் கொண்ட பரப்புரையாகும்.  

சில பொருளியல் புள்ளி விபரங்களை வைத்து இந்த விவாதத்தை துவங்குவது பொருத்தமாக இருக்கும். 

இன்றைக்கு உலகத்தில் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500 கோடி மக்களுக்கான உணவு உலகெங்கும் மொத்தமாக உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. தவறு எங்கே நடை பெறுகிறது என்றால் எல்லா உற்பத்தியும் அதிகாரமும் உலகின் பொருளாதாரத்தை  கட்டிப் போட்டு வைத்திருக்கும் பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது. 100 கோடி மக்கள் வாழக் கூடிய பணக்கார நாடுகளில் மட்டும் 1000 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக, மீதி உள்ள கோதுமை, பால், அரிசி போன்றவற்றை உலகில் உணவுப் பற்றாக் குறையை ஏற்படுத்தவும் அரசியல் செல்வாக்கின் மிரட்டல்களை பயன்படுத்தி அடிபணிய வைக்கவும் பதுக்கி வைக்கிறார்கள் அல்லது கடலில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள். எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான் உணவுப் பொருள்களில் பற்றாக் குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும். 

இரண்டாவதாக , இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 120 கோடியாகும். சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை முப்பது  கோடிதான். பாரதியார் அதனால்தான் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாடினார். “ தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று பாடியவரும் அவர்தான். பசிப்பிணி பற்றி மனோன்மணியத்தில் ஒரு பாட்டே இருக்கிறது. இப்போது உள்ள உணவுப் பற்றாகுறையைப் போல அன்றும் என்றும் இருக்கத்தான் செய்தது. அரிசிக்கு ரேஷன் வைத்து அளந்து கொடுப்பதற்கு மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்த காரணத்தாலும் உணவுப் பொருட்கள் கிடைக்காதவர்கள் எலிக்கறி சாப்பிடுங்கள் என்றும் பரப்புரை செய்யப்பட்டதாலும் அரசாங்கங்களே ஆட்டம் காணவில்லையா? 

இந்திய மக்கள்தொகை நூற்று இருபது  கோடி இருக்கும்போது எப்படி பல கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதேபோல முப்பது கோடி மக்கள் இருக்கும்போதும் சில கோடி மக்களுக்கு உணவுப் பற்றாகுறை இருந்துதான் வந்தது . இப்போதுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது. அப்படியென்றால் இவ்வளவு காலம் நிலவி வந்த பற்றாக்குறைக்குக் காரணம் உண்மையில் மக்கள் பெருக்கமா? நிர்வாகக் குறைபாடா? பங்கிடுதலில் பாகுபாடா? அரசியல் அட்டகாசமா? இரக்கமற்ற நெஞ்சங்களா?

அண்மையில் The Economic Times என்கிற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தர விரும்புகிறேன். 

உலகில் தினமும் 87 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில், சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருள்களால்  75,000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக , ஐக்கியநாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பணத்தில் இது 48 லட்சம் கோடியாகும். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP மதிப்பில் 50 சதவீதமாகும் இது சுவிட்சர்லாந்து நாட்டின் GDP க்கு நிகரான தொகையாகும் என்பது கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியதாகும். 

உலக அளவில் உற்பத்தியாகி உண்ணாமல் வீணாக்கும் உணவுப் பொருள்களின் அளவு 33 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் மட்டுமல்ல உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகளிலும் உலகிலேயே சீனாதான் முதலிடம் வகிக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல். 

உலக நாடுகளில் அனைத்து மக்களுக்கும் முழுமையான உணவுப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சில ஆப்ரிக்க நாடுகளோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் அரிசி, கோதும, சிறு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்கள் என பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகிவருவது விடை காணமுடியாத பல சிக்கலான கேள்விகளை முன் வைத்துள்ளது.  

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆகிய நாடுகள் பொருளாதார மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆசியா கண்டத்தில் ஒரு தனிமனிதரால் ஆண்டுக்கு சராசரியாக 100 Kg. காய்கறிகளும் 80 Kg. உணவு   தானியங்களும் வீணடிக்கப் படுகின்றன என ஐ நாவின் புகார்ப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

பணக்கார நாடுகள் சுகாதாரம் குறித்து தேவைக்கும் அதிகமான எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, பழங்கள் மீது சிறிய கீறல் இருந்தாலும் அவை தூக்கி எறியப்படுகின்றன. உணவுப் பொருள்களின் காலாவதி தேதிகளின் மீது அளவுக்கு அதிகமாகக் காட்டப்படும் ஆர்வமும் கவனமும் காரணமாக டன் டன்னாக விளைபொருள்கள் குப்பையில் கொட்டப் படும் அவலம் காணப்படுகிறது. காலாவதியாகப் போகும் தேதிகளுக்கு முன்பாகவே உணவுப் பொருட்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் கோளாறு, பலநூறு டன் உணவுப் பொருகளை கடலில் கொட்டும் நிலைமையை ஏற்படுத்துகிறது. 

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி நிலையிலேயே பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகிவிடுகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் ஒரு தார்ப் பாய் கூட போட்டு மூடப் படாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொறுப்பற்ற செயலைக் கண்கூடாகக் காணலாம். 

அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமலும், சரக்குப் போக்குவரத்தின் போதும் ஏராளமான வேளாண்மைவிளை பொருள்கள் தரையில் கொட்டி வீணாகின்றன. 

உலக அளவில் சுமார் 140 கோடி ஹெக்டேர் நிலத்தில் சாகுபடியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று ஐநா கணக்கிட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில் 28 சதவீதம் ஆகும். இது ஹராம் இல்லையா? 

உற்பத்தி, அறுவடைக்குப் பின் பராமரித்தல் , சேமிப்புக் கிடங்கு போன்றவற்றின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் 54 சதவீத உணவுப் பொருள்களும் பதப் படுத்துதல், விநியோகம், நுகர்வு போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில்  46 சதவீத உணவுப் பொருள்களும் வீணாகின்றன. 

உணவுப் பொருள்களை வீணாக்குவது இரண்டு பாவங்களைச் செய்கிறது. ஒன்று தண்ணீர் போன்ற இயற்கை வளங்களும் வீணாக்கப் படுகின்றன. இரண்டாவதாக, திட்டமிடாத செலவுகளால் பொருளாதார நிலையும் தாழ்வுறுகிறது. 

இவற்றை எல்லாம் மீறி மக்களுக்கு உணவளிப்பது என்கிற கோட்பாடு மழுங்கிப் போய் பட்டினிச்சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. 

நிலைமைகள் இப்படி இருக்க, மக்கள் தொகை வளர்ச்சியின் மீது பழி போடுவது நியாயமா?

உண்மையில் நடப்பது என்னவென்றால் மக்கள் தொகையின் வளர்ச்சியின் காரணமாகத்தான் , பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டிப் பிடிக்க முடிந்தது என்பதும், சில உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன என்பதும் பொருளாதார வரலாறு சொல்லும் உண்மைகள் . 

அன்றைக்கு நெல் பயிரிடுதலின் காலம் ஆறு மாதங்கள் . இன்றோ பல பகுதிகளில் மூன்று மாதப் பயிராக விளைந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதப் பயிராகவும் பயிரிடும் நிலைமையை - எந்த இறைவன் இந்தியாவுக்கு அதிக மக்கள் தொகையை அளித்தானோ அதே இறைவன்தான் தேவையை முன்னிட்டு மனிதனின் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் அறிவை உசுப்பிவிட்டான் என்பதே உண்மையாக இருக்க முடியும். 

மக்கள் தொகையின் பெருக்கமும் நெருக்கமும் நெருக்கடியும் விவசாயத்தில் மட்டுமல்ல அறிவியலிலும் மனிதனின் கொடியை பட்டொளி வீசிப் பறக்க வைத்தது. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விமானச்சேவை முதல் கணினியின் அற்புதங்கள்வரையிலும் அன்றாடம் புதிது புதிதாக மனித மூளையின் அற்புதங்கள், கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு பில்கேட்சின் தாயோ, அபுல் கலாமின் தாயோ, தாமஸ் ஆல்வா எடிசனின் தாயோ, ஐன்ஸ்டீனின் தாயோ , மார்க்கோனியின் தாயோ தங்களின் குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த அறிவியலார்களை, கல்வியாளர்களை கருவிலேயே கலைத்து இருந்தால் இவர்கள் இந்த உலகத்துக்குக் கிடைத்திருப்பார்களா? குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர் இதைச் செய்து இருந்தால் இப்படி ஆதரிப்போர் உலகை தரிசித்து இருக்க முடியுமா? 

குழந்தைகள் பசிக்கும் வயிறோடு மட்டும்தான் பிறக்கின்றனவா? உழைக்கும் இரண்டு கரங்களுடன் பிறக்கவில்லையா? சிந்திக்கும் மூளையுடன் பிறக்கவில்லையா? 

"உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை”’ ( 11:6) என்கிற திருமறையின் வசனமும்,

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளிக்கிறான் ” (30:40) 

போன்ற திருமறையின் வசனங்கள் தரும் இறைநம்பிக்கை மற்றும் ஈமானில் ஊறித்திளைத்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உண்மைதான். 

அதே நேரத்தில் , 

இஸ்லாம் நியாயமான காரணங்களுக்காக குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது ;ஆதரிக்கிறது என்பதை அறிஞர்கள் எடுத்துரைக்கிறார்கள்.  

யாவை? இன்ஷா அல்லாஹ் நாமும் எடுத்துரைப்போம். 

இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 025 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 04, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெற்றோரை நோவினை செய்தல், உறவினரை வெறுத்தல் கூடாது!

நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். (அல்குர்ஆன் : 47: 22,23)

''என்னைத் தவிர வேறு எவரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!(அல்குர்ஆன் : 17:23,24)

''பெரும் பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி!'' என்று கூறினோம். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினைப்படுத்துதல், என்று கூறிவிட்டு, சாய்ந்து இருந்த அவர்கள், (நிமிர்ந்து)உட்கார்ந்து, ''அறிந்து கொள்ளுங்கள். பொய் சொல்வது, பொய் சாட்சி கூறுவது'' என்று கூறிக்கொண்டே இருந்தார்கள். ''அவர்கள் அமைதி அடைய மாட்டார்களா? என்று நாங்கள் கூறும் அளவுக்கு நபி(ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா என்ற நுபய்உ இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 336)

''ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஒருவன் தன் பெற்றோரைத் திட்டவும் செய்வானா?' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். ''ஆம்! ஒருவன், இன்னொருவனின் தந்தையைத் திட்டுவான். அவன், இவனது தந்தையைத் திட்டுவான். இவன் அவனது தாயைத் திட்டுவான். அவன் இவனது தாயைத் திட்டுவான் (இது பெற்றோரைத் திட்டியதாக அமையும்)''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 338)

''உறவைத் துண்டிப்பவன், சொர்க்கத்தில் நுழையமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் என்ற ஜுபைர் இப்னு முத்இம்;(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 339)

"தாய்மார்களை நோவினை செய்வதையும், தனது கடமைகளை செய்யாதிருப்பதையும், தனக்கு உரிமை இல்லாதைத் தேடுவதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து உள்ளான். மேலும், ''இப்படி இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது'' எனக் கூறுவதையும், அதிகக் கேள்வி கேட்பதையும் பொருளை வீணாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஈஸா என்ற முஅய்ரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 340)

தாய், தந்தை, உறவினர்களின் நண்பர்கள், மனைவியின் தோழியர், மற்ற மதிப்புக்குரியவர்களுக்கு நன்மை செய்தல்!

''ஒரு மனிதன், தன் தந்தையின் நன்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப் பெரும் நன்மையாகும்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 341)

கதீஜா(ரலி) அவர்கள் மீது நான் பொறாமை கொண்டது போல், நபி(ஸல்) அவர்களின் எந்த மனைவி மீதும் நான் பொறாமை கெண்டதில்லை. அவர்களை நான் பார்த்ததே இல்லை. எனினும் அவர்களைப் பற்றித்தான் நபி(ஸல்) அவர்கள் அதிகம் நினைவு கூர்வார்கள். ஆட்டை அறுக்கும் போதெல்லாம் அதை துண்டு துண்டாகப் பிரிப்பார்கள். பின்பு அதை கதீஜா(ரலி) அவர்களின் தோழிகளுக்காக அனுப்பி வைத்தார்கள். ''கதீஜா (ரலி) அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எவரும் இல்லையா?'' என நான் கேட்ட போதெல்லாம், நிச்சயமாக கதீஜா இப்படி இருந்தார், இப்படி இருந்தார் அவர் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தையினைக் கொடுத்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 344)

நல்லோர்களை சந்தித்தல், அவர்களுடன் பழகுதல்! 

ஒரு மனிதர், வேறு ஊரில் உள்ள தன் சகோதரரைச் சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் பாதையில் வானவர் ஒருவரை அல்லாஹ் நிறுத்தினான். அவரிடம் அவர் வந்த போது ''எங்கே செல்கிறீர்?'' என வானவர் கேட்டார். '' இந்த ஊரில் உள்ள என் சகோதரனைச் சந்திக்கச் செல்கிறேன்'' என்றார். ''அவரிடம் நீ பயன்படுத்தத்தக்க அருட்கொடை எதுவும் அவனிடம் உனக்காக உள்ளதா?'' என்று கேட்டார். ''இல்லை, அல்லாஹ்வின் விஷயத்தில் அவரை நான் நேசிக்கிறேன்'' என்றார். அப்போது வானவர், '' நான் உன்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதராவேன். நிச்சயமாக அல்லாஹ், அவன் விஷயமாக சகோதரரை நீ நேசிப்பது போல் உம்மை நேசிக்கிறான் என்றார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 361)

"நல்லவனுடன் உட்கார்ந்திருப்பவன், கெட்டவனுடன் உட்கார்ந்திருப்பவன் இந்த இருவருக்கும் உதாரணம் என்பது, கஸ்தூரி வைத்திருப்பவன் மற்றும் இரும்பு உலையில் ஊதுபவன் போன்றதாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன், உமக்கு அதைத்தருவான். அல்லது அவனிடம் நீ நல்ல வாடையைப் பெற்றுக் கொள்ளலாம். இரும்பு உலையை ஊதுபவன், உன் ஆடையை கரித்து விடுவான் அல்லது அவனிடம் கெட்ட வாடையை நீ அடையலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 363)

"ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப் படுகிறாள். அவளின் சொத்துக்காக, அவளின் குடும்பத்திற்காக, அவளின் அழகுக்காக, அவளின் மார்க்கப் பற்றுக்காக (திருமணம் செய்யப்படுகிறாள்). நீ மார்க்கப் பற்றுள்ளவளை உன் கரம் கைப்பற்றுவது மூலம் வெற்றி பெறுவீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 364)

''மூஃமினைத் தவிர வேறு எவரையும் நீ தோழமை கொள்ள வேண்டாம். உனது உணவை இறையச்சம் உள்ளவரைத் தவிர எவரும் உண்ண வேண்டாம்;'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 366)

''ஒருவன், அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே நண்பராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்    (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 367)

''மனிதன் அவன் விரும்புகின்றவனுடன் தான் (மறுமையில்) இருப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 368)

''ஒரு கிராமக் காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் ''மறுமை நாள் எப்போது?'' என்று கேட்டார். அதற்கு, ''நீ என்ன தயார் செய்து வைத்துள்ளாய்?'' என நபி (ஸல்) திருப்பிக் கேட்டார்கள். ''அல்லாஹ்வை அவனது தூதரை விரும்பியது தான்'' என்று கூறினார். ''நீ, விரும்பியவருடன் இருப்பாய்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 369)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

cc: Sabeer appa ! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 03, 2016 | , , , ,

It was
almost same period
when
I became father
and
she was born to call me
'Sabeer Appa'

my grandy...
Mahdhiya Iqbal!

she was the
most beautiful girl
in our family
and very much close
to all of us
brilliant
religious
and beloved

left me now
with
rolling tears

death is something
painful at once
to the one died
but
more painful
to the those
left with memories

she was
always in touch with me.
kept me informed
of whatever she achieved
in her school
whatever happened
in her family

she was like a
blossom in our hall

like a
sunshine at our backyard

like a
drizzle in our summers

death stormed
to rip us all off

she closed her eyes
to leave us in dark

yes...
He
to Whom we all return!
Yet
simple human
takes it cool
when happens in a queue
but suffers
when on random

death was
too quick on her
makes us feel
why, too slow on us?

it hurts
it really does
when i realize
that i wouldn't receive
anymore mails:
"copied to Sabeer Appa"!

May she enters heaven
ya Allah

and
give us strength
to bear this, ya Allah!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

லகும் தீனுக்கும் வலியதீன்... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2016 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தலைப்பைப் பார்த்தவுடன் இது வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று யாரும் எண்ண வேண்டாம். இந்த பதிவின் சாயல் தனி நபரையோ அல்லது இயக்கத்தையோ சாடுவதாக தயைகூர்ந்து எண்ண வேண்டாம் என்று முன்னுரைக்கிறேன் !

அல்குர்ஆனில் உள்ள 109 வது அத்தியாயம் சூரத்துல் காஃபிரூன், 6 வசனங்களுடன் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அற்புத வார்த்தைகள். இந்த அத்தியாயத்தில் வரும் 6 வது அரபு வசனமே லகும் தீனுக்கும் வலியதீன் (لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ), இதன் அர்த்தம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

சமூக நல்லிணக்கம் பேணுகிறோம் என்ற எண்ணத்தில் மேல் சொன்ன இறை வசனத்தைச் சுட்டிக்காட்டி. நமக்கு பிரச்சினை வேண்டாம், எங்கள் மார்க்கம் சொல்லிவிட்டது “லகும் தீனுக்கும் வலியதீன்” (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்). நீங்கள் உங்கள் மதத்தின்படி உங்கள் வணக்கத்தைச் செய்யுங்கள், நான் என் மார்க்கப்படி என்னுடைய வணக்கத்தைச் செய்கிறேன் என்று அவ்வப்போது பொதுவாக முஸ்லீம்களால் பொது தளங்களிலும், பொது மேடைகளிலும் சொல்லப்பட்டு வருவதை அறிவோம்.

முதலில் இந்த இறைவசனம் எங்கு? எப்போது? எந்த சூழலில் இறங்கியது இந்த வசனத்தின் பின்னணி என்ன? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அல்குர்ஆன் வசனத்தையும் நாம் எங்கு? எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவறாக இறைவசனங்களை சம்பந்தமில்லாத சூழலில் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சூரத்துல் காஃபிரூன் அத்தியாயம் மாக்காவில் அல்லாஹ்வின் தூதர், நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் அருளப்பட்டது.

குரைஷி கோத்திரத்தின் வாரிசு, அல் அமீன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட முஹம்மது நபி ஸல் அவர்கள் தங்களின் ஏகத்துவ அழைப்புப்பணியைத் தங்கள் குரைஷி கோத்திர மக்களிடம் எடுத்துவைத்த காலத்தில், நபி ஸல் அவர்களுக்கு பலவிதமான பொருளாதார மற்றும் திருமண ஆசைகள் காட்டி, நபி(ஸல்) அவர்களை ஏகத்துவப் பணியை முடக்கத் திட்டம் தீட்டிப் பார்த்தார்கள் அந்த குரைஷித் தலைவர்கள். 

இதோ முதல் திட்டம் “உங்களை இந்த மக்கா மாநகரின் முதல் தர செல்வந்தராக ஆக்குகிறோம், நீங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுங்கள், நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்கிறோம், என்று இது போன்ற ஆசை வார்த்தைகள் சொல்லி ஆனால் எங்கள் தெய்வங்களை (லாத்து, உஸ்ஸா போன்றவைகளை) மட்டும் தவறாக சொல்ல வேண்டாம்”.  என்று இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களை மடக்கி பேரம் பேசினார்கள் ஏகத்துவ வாடையை வெறுத்த அன்றைய குரைஷி கோமாளிகள்.”

முதல் திட்டம் வேண்டாம் என்றால், இதோ இரண்டாவது சமாதானத் திட்டம். “முஹம்மதே நீர் ஒராண்டு எங்கள் தெய்வங்களான லாத்து உஸ்ஸாவை வணங்கும், அது போன்று நாங்களும் அடுத்த வருடம் நீர் அந்த ஓரிறை கொள்கையை நாங்கள் வணங்குகிறோம் என்ன சம்மதமா?” என்ற வடிகட்டிய இணை வைப்பு சமாதானத் திட்டத்தை எடுத்து வைத்தனர். ஏகத்துவக் கொள்கையில் ஒரு துளிகூட சமரசம் செய்யாத நம் மூன்னோடி நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் அல்லவா நம் தங்கத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச்சொன்ன ஒரே காரணத்திற்காக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்த அந்த இக்கட்டான காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் “குரைஷி உறவுகளே கொஞ்சம் பொறுங்கள் என்னுடைய இறைவன் இதற்கு என்ன சொல்லுகிறான் என்ற பிறகு என் முடிவை சொல்லுகிறேன்” என்றார்கள்.

குரைஷி தலைவர்கள் முஹம்மது ஸல் அவர்களை தங்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த இந்த வேளையில் தான் சூரத்துல் காஃபிரூன் முழு அத்தியாயமும் மற்றும் சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் 64-வது வசனம் என்ற இறைவசனம் இறங்கியது.

சூரத்துல் காஃபிரூன் அத்தியாத்தில்  அல்லாஹ் கூறுகிறான்.

“(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” 
(அல்குர்ஆன் 109: 1-6)

மேலும் சூரத்துல் ஜுமார் அத்தியாத்தின் 64 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

“அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” 
(அல்குர்ஆன் 39:64)

இந்த வசனங்கள் இறங்கிய பின்பு, குரைஷி தலைவர்களைப் பார்த்து முஹம்மது நபி ஸல் அவர்கள் “என் இறைவனின் கட்டளை வந்துவிட்ட பின்பு நான் உங்களோடு சமாதானம் செய்ய முடியாது” என்று சொல்லிய பின்பும்கூட, அவமானப்பட்டு, கேவலப்பட்ட குரைஷிகள் மேலும் ஒரு சமாதான திட்டத்தை வைக்கிறார்கள். “முஹம்மதே, எங்கள் தெய்வங்களின் சிலையை மட்டும் முத்தமிடும் அது போதும், நாங்கள் நீர் சொல்லும் இறைவனை வணங்குகிறோம்” என்று புதிய திட்டத்தை திணிக்கப் பார்த்தார்கள். இந்த தருணத்தில் தான் அல்லாஹ் சூரத்துல் ஜுமார் அத்தியாயம் முழுவதையும் இறைத்தூதருக்கு இறக்கி எச்சரிக்கையும் கொடுக்கிறான். 

அல்லாஹ் கூறுகிறான் அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்). (அல் குர் ஆன் 39:65)

கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு காலகட்டம், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை, பரம்பரை பரம்பரையாக சண்டைக்காரர்களாக வாழ்ந்த சமூகத்துக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்களின் குணநலங்களை ஏற்ற சமூகம் நம் தங்கத்தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கள் வாங்கள் பிரச்சினை இல்லை, பங்காளி பிரச்சினை இல்லை, மாமன் மச்சான் பிரச்சினை இல்லை, சொத்துப் பாங்கீட்டு பிரச்சினை இல்லை, நில அபகரிப்புப் பிரச்சினை இல்லை ஆனால் அல்லாஹ் ஒருவனே அவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும், அல்லாஹ்வுக்கு இணை துணை ஏதும் இல்லை என்று பிரச்சாரம் செய்ததை பொறுக்காத குரைஷி காபிர்கள். தங்களால் முடிந்த அனைத்து இணைவைப்பு சமாதான முயற்சிகளையும் கையாண்டார்கள். ஆனால் அல்லாஹ் தன் வஹியின் மூலம் நபி முஹம்மது ஸல் அவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும், எச்சரிக்கையும் செய்து இறை நிராகரிப்பாளர்களோடு ஓரிறை கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்த கட்டத்திலும் மாறு செய்யாத உத்தம நபி (ஸல்) அவர்கள். அன்றிலிருந்து தான் மரணிக்கும் வரை இறை நிராகரிப்பாளர்களுடன் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யவில்லை.

சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றில் நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.
  • அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களில் ஓரிறை கொள்கையை அடகுவைத்து எந்த ஒரு சமரசம் செய்வது கூடாது. இது தர்கா வழிபாடாக இருந்தாலும் சரி, பிறமத வழிபாடுகளாக இருந்தாலும் சரி.
  • சுற்றுலா என்ற பெயரில் இறைவனுக்கு இணைவைக்கும் இடங்களுக்கு, குறிப்பாக தர்கா, கோவில், சர்ச் போன்றவைகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்விடங்களுக்கு செல்வதன் மூலம் அவைகளை நாம் அங்கீகரித்த நிலைக்கு செல்ல நேரிடும்.
  • பிறமதத்தவர் அவர்கள் போலிக்கடவுள் நம்புகிறவர்களுக்கு பூஜை செய்யும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
  • எம்மதமும் சம்மதம் என்ற பெயரில் அல்லாஹ்வுக்கு இணையான போலிக்கடவுள்களை புகழும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
  • பிறமத நண்பர்களின் திருமணங்களில் இணைவைப்பை மையப்படுத்தி நடைபெறும் பூஜைகள் போன்ற நிகழ்வுகளில் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • மனிதாபிமானம் என்ற பெயரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலைகள், விக்கிரகங்களைக் கொண்ட இணை வைப்பு வழிபாட்டுத் தளங்களை சுத்தம் செய்வது போன்ற காரியங்கள், மக்களின் திருப்தியை பெற்றுத்தருமே தவிர, நம்மை படைத்த ரப்புல் ஆலமீனிடம் திருப்தியை பெற்றுத்தருமா? என்ற பாரதூர கேள்விக்கு நம்மிடம் பதில் உள்ளதா என்பதை நாம் சித்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்வுகளுக்கு அங்கீகாரம் வேண்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மீது திணிக்கப்படும்போது, அவைகள் தவறு என்று நாம் சுட்டிக்காட்ட வேண்டும், நமக்கு அது சாத்தியமில்லை, இணைவைப்பு காரியங்கள் நம்மீது திணிக்கப்படுகிறது என்ற நிலை வேறு வழியே இல்லை என்று வரும் போது, நம் ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற நிலைக்கு நாம் வந்தால் மட்டுமே சூரத்துல் காஃபிரூன் வசனத்தை நாம் உணர்ந்தவர்களாக முடியும். 

இதல்லாமல், மார்க்க விசயத்தில் நம் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துரையாடலிலும், அறியாமல் தவறுகள் செய்யும் நம் முஸ்லீம்களிடமும் சகோதரர்களிடமும் சும்மா சகட்டு மேனிக்கு தன்னுடைய புரிதல் மட்டும் தான் சரி என்ற தோரணையில் “லக்கும் தீனுக்கு வலியதீன்” என்று சொல்லுவது வாடிக்கையாக உள்ளது. இது தவறு என்பதை சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றை வாசித்தால் விளங்கும். உலக மக்களுக்கு முன்னுதாரணமான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், “லகும் தீனுக்கும் வலியதீன்” என்று சொல்லி தவறிழைத்தவர்கள் அல்லர், அநியாக்காரர்களிடம் சொல்லி நழுவவில்லை. கண்ணியத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டினார்களே தவிர, அவர்களிடம் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை.

நம்முடைய ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக நம்மீது திணித்து, இணை வைப்பிற்கு ஒத்துப்போக வைக்கும் நிலை வரும் போது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற வார்த்தையை சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாமே தவிர. சும்மா சகட்டு மேனிக்கு “லக்கும் தீனுக்கு வலியத்தீன்” என்று சொல்லி நழுவிக் கொள்வது சரியான அனுகுமுறையாகாது. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

“விநாயகர் ஊர்வலம் அமைதியாக நிறைவுற்றது”
“கந்தூரி திருவிழா படுவிமர்சியாக நடைபெற்றது”
“ஹிந்துக்கள் சார்பில் வைகாசி திருவிழா!”

என்று தலைப்பிட்டு செய்திகளாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் முஸ்லீம் ஊடகவியளாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அறியாமை பற்றியும், நீ காஃபிர், நீ முஷ்ரிக், நான் ஒரிஜினல் முஸ்லீம், அவன் பெயர் தாங்கி முஸ்லீம் என்று ஆன்லைன் ஃபத்வா கொடுக்கும் வழிகேட்டுக் கொள்கையாளர்கள் பற்றியும் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற தலைப்பில் எதிர்வரும் பதிவுகளில் மேலும் நிறைய அலசலாம். இன்ஷா அல்லாஹ். 

தாஜுதீன்

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | March 01, 2016 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட சமுதாயம். இந்திய விடுதலைக்காக கடினமாக பாடுபட்ட இஸ்லாமிய சமுதாயம் சிந்திய இரத்தங்கள்தான் எத்தனை. மேலும் விடுதலைக்காக தங்கள் சொத்துக்களை இழந்து, உயிரையும் தியாகம் செய்ததற்கு பரிசாக இன்று தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியும், இந்திய நாட்டில் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கும், அரபு நாடுகளிலோ இரண்டாந்தர குடிமக்களைவிட எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலைக்கு நம்மை தள்ளியது ஒரு கூட்டம்.

அந்த கூட்டங்கள் இந்திய விடுதலைக்காக துரும்பளவு கூட தியாகம் செய்தவர்கள் கிடையாது. ஆனால் தியாகச் செம்மல்கள் என்று தம்மை வரலாற்றில் பதிவு செய்து கொண்ட பொய்யின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி, முஸ்லீம்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி அரசிலும், நாட்டிலும் எந்த சலுகையும் அனுபவித்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஆங்கிலேயன் காலத்தில் நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அகற்றியும் அன்றும் இன்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தை மட்டும் எந்த விதத்திலும் முன்னேற விடாமல், அரசுதுறைகளில் நுழைய விடாமல் எல்லா துறைகளிலும் திறமையாக பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு தன்னை மட்டும் மனித இனம் என்று கூறி தற்பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது கயவர்கள் கூட்டம்.

முஸ்லிம் சமுதாயத்தில் படிப்பறிவு என்பது மிக மிக கீழ் நிலையில் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் விடுதலை பெறுவதற்காக படிப்பை நம் முன்னோர்கள் விட்ட காரணத்தால் இன்று வரை கல்வியில் வீழ்ந்தே கிடக்கிறோம். நம்முடைய தியாகத்திற்கு முதல் பரிசு நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறி கொடுத்தது. இரண்டாம் பரிசு தீவிரவாதி என்ற பெயர் - நாம் பெற்ற இந்த இரண்டு பரிசுகளாலும் கல்வியிலும், வாழ்விலும் பின்தங்கிவிட்டோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).

பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.

நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.

நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.

மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் பெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.

பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.

பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.

எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

S.அலாவுதீன்

குறிப்பு : கடந்த வருடங்களில் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு