ஊரில் ஒன்றாய் நாமிருந்த காலத்தை
உறக்கத்தில் நான் கண்டேன் தோழா!
நீ என்னருகே இருந்த நாட்களெல்லாம்
உள்ளத்தின் பெருநாட்கள்
காலைமாலை இறைக்கல்வி பயில
இறைஇல்ல பள்ளி சென்றோம்
இனிதே திருக்குர்'ஆனையும்
இன்முகத்துடன் ஓதி முடித்தோம்

பள்ளி ஒஸ்தாரிடம் அன்று வாங்கியஅடி
இன்று எம் வாழ்வின் மெத்தைப்படி
முறையே ஓதியவர் ஏற்றம் பெற்றார்
தவறியவர் தட்டுக்கெட்டுப்போனார்.
குளிக்கச்சென்ற தென்னந்தோப்பில்
ஆசிரியர் இன்றி பாடம் நடக்கும்
மைனாக்குருவிகளின் பள்ளிக்கூடம்
மத்தாப்பின்றி கொண்டாட்டம் சேரும்
ஒன்றாக பள்ளி சென்றோம்
நன்கு பாடம் படித்தோம்
பள்ளியில் படிக்க தவறியதை
டியூசனில் படித்து முடித்தோம்
உலகத்தை உருண்டையாய்
உருட்டிவிளையாண்ட பழிங்கியும்
சாட்டையை சட்டென சுழற்றி
சுற்றித்திரிய வைத்த பம்பரமும்
மேக்காற்றில் அசைந்தாடும்
வால் நீண்ட பட்டமும் அதற்கு
கட்டணமின்றி அனுப்பிய தந்தியும்
அதை பெற்றுக்கொண்ட பட்டமும்
கூறிய இருமுனைக்'கில்லி'யும்
ஆசானாய் அதன் நீண்ட கம்பும்
தேடிச்சேர்த்த ஜெமிலாட்டு மூடியும்
கொத்தனாரின்றி கட்டிமுடித்த மண்வீடும்
ஆயுதமாய் அட்டபில்லும்
அதில் அடிபட்ட சிட்டுக்குருவியும்
இரக்கப்பட வைத்து விடும் எம்மை
அதை பறக்க விட மனசு துடிக்கும்
தட்டுத்தடுமாறி அடித்த தட்டச்சும்
முற்றுப்பெறாத ஆங்கிலப்பயிற்சியும்
இன்று கனவுகளில் வந்து செல்லும்
உள்ளக்காயத்திற்கு மருந்து போடும்
உம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
அலிலப்பரும், ஜாமின்ட்ரி பாக்ஸும்
இன்று உள்ளத்தில் படம் வரைந்து
உற்சாகத்தில் கோட்டை எழுப்பும்.
ப.கோட்டையில் வாங்கிய பெருநாள்சட்டை
மடமட சப்தம் வந்த வேட்டி
மாமா தந்த ஓமக்ஸ் வாட்ச்சு
ஆசையுடன் அப்பாதந்த அல்வா துண்டு
முதலில் கைப்பிடித்த கல்லுக்குச்சியும்
பிறகு பழகிய கைநடன கணிப்பொறியும்
எம் மனசுக்குள் அரங்கம் அமைத்து
நடுவரில்லா பட்டிமன்றம் நடத்தும்
கப்பல் போன்ற ஊதா தொப்பியும்
காசில்லாமல் கரைசேரும் ஆசைகளும்
காட்சிகள் பல இங்கு அரங்கேறும்
நம் கனவுகளில் எல்லாம் நடந்தேறும்
கள்ளத்தனமாய் ஓட்டிய மோட்டார் சைக்கிளும்
காசில்லாமல் பழகிக்கொண்ட பாஸ்போர்ட்எடுக்குமுறை
எட்டுத்தப்பில் கனவில் வந்து செல்லும்
உள்ள ஏக்கத்துடன் மறைந்து போகும்
மாலை நேர விளையாட்டு
நம்மை எல்லாம் சீராட்டும்
மஹ்ரிப்பின் பாங்கு ஒலி
விளையாட்டிற்கு முடிவு கட்டும்
சுத்தம் செய்த எம் உடலும்
சுகமாய் இரவும் ஆரம்பமாகும்
இருள் வந்து இருக்கை அமைக்கும்
தெரு விளக்கு விழித்துக்கொள்ளும்
மின்வெட்டு பொட்டிக்கடையும்
குத்துவிளக்கில் மிளிரும் கொட்டகையும்
எண்ணெய் தடவிய காகிதமோ
தன்பக்கம் கொசுக்களை ஈர்த்தெடுக்கும்
மின்மினிப்பூச்சிகள் வானில் பறக்கும்
பாசஉம்மா தந்த காசில் உள்ளம் மிதக்கும்
நண்பர்கள் கூட்டம் ஒன்றாய் சேரும்
இன்பமாய் இனியதை வாங்கி திண்கும்
எங்கோ இருக்கும் எனக்கும்
அங்கே இருக்கும் உனக்கும்
இடையிடையே வந்து செல்லும்
உறக்கத்தில் மேய்ந்து செல்லும்
கருமையில்லா அரும்பு மீசையும்
கன்னத்தில் சிறுகுன்றுகளாய் பருவும்
மனதிற்குள் அலைபாயும் ஆசைகளும்
மல்லாக்க படுக்க வைத்த இதயமும்
சீராக வாரிச்சீவிய சிங்கார தலைமுடியும்
இன்று சின்னாபின்னமானது நாகரீகமாய்
பரட்டைத்தலையன் இன்று பெருமைப்பட்டான்
தலைசீவி வந்தவனை வெட்கப்படவைத்தான்.
அன்று மழையில் நனைந்த உடலும்
வெயிலில் அலைந்த களைப்பும்
பனியில் பார்த்த பாட்டுக்கச்சேரியும்
பரணில் வைக்கப்படாத நினைவுகளும்
மரணித்த நம்மவர்கள் போக
மீதி இருக்கும் நீயும், நானும்
தொலைத்த இன்பத்தை திரும்பிபெறுவோமோ?
அதற்கு முன் இறைவனடி சேர்வோமோ?
இன்று ரசிக்க நம் ரயிலடி சென்றாலும்
புசிக்க நல்ல பிரியாணி தின்றாலும்
இருக்க நல்ல இருக்கை கிடைத்தாலும்
அனுபவிக்க அருகில் நீ இல்லையடா தோழா!
அன்று விளையாடித்திரிந்த நாட்களில்
எங்கோ தொலைத்து வந்த இன்பம்
இன்று சல்லடையாய் தேடினாலும்
எங்கும் இல்லையடா தோழா!
இன்ஷா அல்லாஹ் இங்கு கனவுகள் தொடரும் காட்சிகள் படரும் காணத்தவறாதீர் கட்டணமேதுமில்லை.
- மு.செ.மு. நெய்னா முஹம்மது

































