பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?
கடந்த அத்தியாயத்தில் முதலீடுகளின் சில வகைகளைப் பார்த்தோம். இப்போது பங்கு சந்தை பற்றி அறியும் முன்பு பங்கு என்றால் என்ன என்று பார்க்கலாம்.
நாம் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறோம் அல்லது ஒரு தொழிலுக்கான ஒரு நல்ல திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெறும் கை முழம் போடாது . ஆகவே அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் பணம் தேவைப்படும். நாம் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிற தொழிலுக்கு போதுமான அளவு நம்மிடம் நமது சொந்தப் பணம் இல்லை என்று நாம் உணரும் நிலையில் வங்கிகள் முதலிய வெளியார் இடமிருந்து கடன் வாங்கி அந்தத் தொழிலைத் தொடங்கி நடத்த நினைப்போம்.
மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு இருக்கிற தொழிலைத் தொடங்க வேண்டுமானால் தேவைப்படும் மூலதனத்தை பொதுச் சந்தையில் பொதுமக்களிடமிருந்து திரட்ட திட்டமிட்ட மூலதனத்தை சிறு சிறு மதிப்பாகப் பிரித்து வெளியிட வேண்டும். இதற்காக சில ஒழுங்கு முறைகள் மற்றும் சட்ட பூர்வமான தகுதியும் அமைப்பும் அங்கீகாரமும் தேவைப்படும். இவ்விதம் வெளியிடப்படும் அந்தப் பிரிவுகளின் மதிப்பே பங்கு எனப்படும். இந்த முறையில் முகம் அறியாத பொது மக்கள் கூட ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆக முடியும்.
எடுத்துக் காட்டாக, நம்முடைய தொழிலின் அபிவிருத்திக்கு அல்லது நமது தொழில் திட்டம் நடைமுறைக்கு வர ஒரு கோடி ரூபாய் தேவைப் படுகிறது என்று வைத்துக் கொண்டால் அதை பத்து ரூபாய் மதிப்புள்ள பத்து இலட்சம் பங்குகளாக்கி பொது மக்களிடம் விற்று தேவையான மூலதனத்தைத் திரட்டலாம்.
இந்த முறையில் ஏற்படும் உடனடிப் பலன் என்னவென்று கேட்டால் நமக்குத் தேவையான – நமது சக்திக்கு அப்பாற்பட்ட முதலீடு திரட்டப்படுகிறது. அத்துடன், நிறுவனத்தின் முதலீட்டுத் தேவைக்காக கடன் வாங்கி அல்லது இருக்கும் அனைத்து சொத்துக்களையும் விற்று முதலீடு செய்தால் அதன் மூலம் வரும் இலாபமும் இழப்பும் ஒரு தனி நபரை மட்டுமே சார்ந்திருக்கும் . ஆனால் பங்குகளை வெளியிட்டு பல முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் நடத்தும்போது இலாபமும் இழப்பும் பங்குகளை வைத்திருக்கும் பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முதலீடாக திரட்டப்பட்ட தொகைகளுக்கு முதலீட்டாடளர்களுக்கு வட்டி என்று கொடுக்கப்படவேண்டியதில்லை. மாறாக, இலாபத்தில் டிவிடெண்ட் ( Dividend) என்று சொல்லப்படுகிற ஆதாயப் பகுதி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்த டிவிடென்டின் விகிதம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். இந்த டிவிடென்டின் விகிதமே ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்துகின்றன; அல்லது தாழ்த்துகின்றன. அதிக இலாபப் பங்கை டிவிடெண்ட் ஆகக் கொடுக்கும் நிறுவனத்தின் பங்குகளுக்கு தேவை அதிகமானால் அவற்றின் விலையும் அதிகமாகும். ஒரு நிறுவனம் தனது முதலீட்டை பங்காக பிரித்து விற்கத் தொடங்கிய பின் சட்ட பூர்வமான அளவில் அந்த நிறுவனம் தனி நபர் நிறுவனம் என்கிற அமைப்பை இழந்து பங்கு நிறுவனம் ( Joint Stock Company ) என்று ஆகிவிடும்.
பங்கு என்றால் என்ன என்று தெரிந்த பின், இந்தப் பங்குகளின் முக மதிப்பு ( Face Value) என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்வோம். ஒரு நிறுவனம் வெளிஇடும் ஒற்றைப் பங்கின் நிர்ணயிக்கப்பட்ட விலையே அதன் முக மதிப்பாகும். பத்து ரூபாய் பங்கு என்பது பத்து ரூபாய் முகமதிப்புடையதாகும். சில நேரங்களில் நிறுவனங்களின் கடந்த கால வெற்றி தோல்விகளைப் பொருத்து அந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இதுவரை தந்து கொண்டிருந்த இலாபப் பங்குகளின் வீதத்தை வைத்து அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளை வாங்க அல்லது வாங்காமலிருக்க மக்கள் முன்வரலாம் வராமலிருக்கலாம். நிறுவனங்களின் இத்தகைய வணிக வரலாறுகள் அவற்றின் பங்குகளின் விலையை விலாசமிடுகின்றன.
இதுநாள் வரை சரியான அளவில் இலாபம் ஈட்டி நல்ல வீதத்தில் இலாபப்பங்குகளை தராத நிறுவனங்கள் தங்களின் பங்குகளை வெளியிடும்போது பங்குகளின் முக மதிப்பில் கழிவு கொடுத்து விற்பார்கள். அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு எட்டு ரூபாய்க்கு விற்கப்படும். இதையே வேறு ஒரு ரீதியில் நல்ல பெயரோடு இயங்கும் நிறுவனம் தனது பங்கை வெளியிடும்போது முகமதிப்பை விட அதிக விலை வைத்து விற்பார்கள் . அதாவது பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்கு பனிரெண்டு ரூபாய்க்கு விற்கப்படும்.
இதையே ஆங்கிலத்தில், முகமதிப்பில் குறிப்பிடப்பட்ட அதே விலைக்கு விற்றால் Share at Par என்றும் கழிவு கொடுத்து விற்றால் Share at Discount என்றும் கூடுதல் விலை வைத்து விற்றால் Share at Premium என்றும் கூறுவார்கள்.
தொழில் முனைகிற எல்லோரும் பொதுமக்கள் இடம் பங்குகளை விற்கிறேன் என்று கூறி பணம் திரட்டிவிட முடியுமா? முடியாது. பங்குகளை பொது மக்கள் இடமிருந்து திரட்டும் நிறுவனங்கள் சில தகுதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
குக்கிராமத்தில் ஒரு தனி நபர் நடத்தும் ஒரு மளிகைக்கடையை பெரிய நகரத்துக்கு இடம் மாற்றி ஒரு பெரிய கடையாக்க விரும்புகிற தனி நபர் நிறுவனம் என்று அழைக்கப்படுகிற Sole Proprietor நிறுவனம் இதற்கான கூடுதல் முதலீட்டுத் தேவைக்காக பொதுமக்களுக்கு பங்குகளை விற்க இயலாது. அவ்விதம் தனது நிறுவனத்தை அவர் பெரிது படுத்த விரும்பினால் தன்னிடம் இருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களை விற்றுத்தான் முதலீட்டைப் பெருக்க முடியும்.
அதேபோல் கூட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் Partnership Companies ஆகியவைகளும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்கும் அதிகாரம் படைத்தவைகள் அல்ல.
இன்னும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் என்ற அமைப்பில் இருக்கும் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு விற்க இயலாது.
இந்த இடத்தில் நாம் அன்றாடம் பல இடங்களிலும் காணும் ஒரு வார்த்தை பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு மன்னார் & கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்பது போல் பல வணிக நிறுவனங்களின் விலாசபலகைகளை கண்டிருக்கிறோம். இப்படி பிரைவேட் லிமிடெட் என்பதன் பொருள் என்ன என்பது பலருக்குத் தெரிவதில்லை. மிகச் சுருக்கமாக, இதன் விளக்கம் என்ன வென்றால் இந்த லிமிடெட் அதாவது அளவுக்குட்பட்டது என்கிற வார்த்தை ஒரு நிறுவனத்தின் லயாபிளிட்டி என்கிற செலுத்தப்படவேண்டிய நிலுவைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாகும். அதாவது அந்த கம்பெனி பிறருக்குக் கொடுக்க வேண்டிய லயாபிளிட்டி லிமிடெட்- வரையரைகுட்பட்டதுதான் - என்பதை புரிந்து கொண்டால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு நிறுவனம் நடத்தப்படுகிறபோது அந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு கடன்கார நிறுவனமாகிவிட்டால் ஒரு லிமிடெட் கம்பெனி தான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தன்னிடம் இருக்கக் கூடிய பங்கீட்டு மூலதனத்தின் அளவு வரையே திருப்பிச் செலுத்தக் கடப்பாடு உடையது என்றும், அந்த நிறுவனத்தின் பங்காளிகளாக இருக்கக்கூடியவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை விற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவை இல்லை என்பதே இது பற்றிய விளக்கமாகும். அதாவது கடன் ஏற்படும் பட்சத்தில் போட்ட முதல் மட்டுமே போய்விடும் தன்னிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் போய்விடாது . இப்படிப் பட்ட பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளும் வெளிச் சந்தையில் பொதுமக்களுக்கு தனது பங்குகளை விற்க முடியாது. The liability of the shareholders to creditors of the Company is limited to the Capital originally invested . A shareholder’s personal assets are thereby protected in the event of Company’s loss or insolvency, but money invested in the Company will be lost.
பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுள்ள பங்குதாரர்களையே கொண்டு இருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட சில குடும்பங்களின் உறுப்பினர்களையே பங்குதாரர்களாகக் கொண்டு இருக்கும்.
Joint Stock Companies என்று அழைக்கப்படும் பப்ளிக் கம்பெனிகள் மட்டுமே பங்கு சந்தைகளில் பதிவு செய்து கொள்ளவும் தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்கவும் சட்டம் அனுமதித்து இருக்கிறது. இப்படிப்பட்ட பெரிய கம்பெனிகள், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு அவர்களின் பெயர் இடம் பெறுவதையே லிஸ்டட் கம்பெனி ( Listed Company) என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட கம்பெனிகள் தங்களின் தொழிலில் நாட்டும் வெற்றிக் கொடியைப் பொறுத்து பங்குச் சந்தையில் இவற்றின் விலைகள் ஏற்ற இறக்கம் காணுகின்றன. இவற்றின் தரத்துக்கு ஏற்ப கடந்த காலங்களில் இத்தகைய நிறுவனங்கள் சாதித்துக் காட்டிய சாதனைகளின் அடிப்படையில் இவற்றிர்க்கு A, A+,+,+, B, B+,+,+, C, C+ ஆகிய தரங்களும் வழங்கப்படுகின்றன. SEBI என்கிற Securities and Exchange Board of India என்கிற நிறுவனமும் பங்குச்சந்தை நடைமுறைகளை கண்காணிக்கிறது.
பங்குகளை வாங்கித்தரவும் விற்றுத்தரவும் பதிவுபெற்ற தரகர்கள் ( Brokers) இருக்கிறார்கள். இந்தத் தரகர்கள் அவ்வபோது நம்மை அலைபேசியில் அல்லது இணையத்தில் தொடர்பு கொண்டு புதிதாக சந்தைக்கு வரும் நிறுவனங்களின் பங்குகள், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மேலும் வெளியிட இருக்கும் பங்குகள், Fluctuations என்கிற ஏற்ற இறக்கங்கள், யூகங்கள் ஆகியவற்றை நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
புதிதாக உருவாக்கப்படுகிற ஒரு நிறுவனம் தனது பங்குகளை வெளியிட வேண்டுமானால் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்த முகவிலை மதிப்பே இதன் பங்கின் விலையாகும். சரி ! புதிய கம்பெனி ! இதன் பங்குகள் சிலவற்றை வாங்கி வைத்துப் பார்க்கலாமே என்று சிலர் வாங்குவார்கள். பெரும்பாலும் தொடக்கத்தில் பிரிமியம் இல்லாமல் முகமதிப்பிலேயோ அல்லது ‘கம்பெனி விளம்பரத்துக்காக’ டிஸ்கவுண்டோடோதான் பங்குகள் விற்கப்படும். இவ்விதம் புதிதாக உருவான கம்பெனி வெற்றிகரமாக தனது தொழில் நடவடிக்கைகளை கையாண்டு நடத்தி இலாபம் சம்பாதித்துக் காட்டி தனது பங்கை வாங்கியவர்களுக்கு நல்ல இலாபப்பங்கீடும் அளிப்பதாக பங்குச் சந்தையில் செய்திகள் வெளியாகும் பட்சத்தில் அந்தக் கம்பெனியின் பங்குகளின் முக மதிப்பு ஏற்றம் காணத் தொடங்கும். பலர் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவார்கள்.
இதற்கு மாறாக, இந்த நிறுவனம் தனது தொழிலில் இலாபம் சம்பாதித்துக் காட்டாவிட்டால் இதனுடைய பங்குகளை வைத்துக் கொண்டு இருப்பதைவிட விற்றுவிடுவது நல்லது என்று இந்தப் பங்குகள் விற்பனைக்கு வரும். வந்த விலைக்கு இவைகள் விற்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
சில புதிய நிறுவனங்கள் புதிதாக அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே வளர்ந்து நிற்கும் ஒரு ஆலமர கம்பெனியின் அரவணைப்பில் வெளியாகலாம். உதாரணமாக டாடா கம்பெனி, அத்வானி கம்பெனி, அத்னான் குரூப். முருகப்பா குரூப், சோழமண்டல நிறுவனங்கள், பொள்ளாச்சி மகாலிங்கம் குரூப் என்றெல்லாம் ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களின் நிழலில் உருவாகி வரும் கம்பெனிகள் முதல் ஓவரிலேயே சிக்சர் அடிக்கும். வெளியீட்டின் போதே இவைகள் பிரிமியம் விலை வைத்து விற்கப்படும். அதே போல் உடனே விற்றும் தீர்ந்துவிடும்.
ஏற்கனவே வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்கள் தங்களின் தொழில் விரிவாகத்துக்காக இன்னும் அதிக நிதி திரட்ட விரும்புகிறது என்றால் பங்குகளை வெளியிடும். இவ்விதம் வெளியிடும் பங்குகள் உடைய விலையை நிறுவனம் ஆரம்பத்திலேயே அதிக பிரிமியம் விலை வைத்து விற்கும். உதாரணமாக பத்து ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கு இரு நூறு ரூபாய் என்று கூவும் ; அவை உடனே விற்றும் போய்விடும். காரணம் நம்பிக்கை மட்டுமல்ல; யூகமும்தான். ஜெயிக்கலாம் என்று நமபபடும் குதிரையின் மேல் பணம் அதிகமாக கட்டுவது மாதிரித்தான் இதுவும். பங்கு மார்கெட் வர்த்தகத்தின் இயல்புகளைப் பார்த்து வரும் நாம் இப்போது முக்கியகட்டத்துக்கு வந்திருக்கிறோம்.
அதிக இலாபம் தரும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்கிற யூக எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரிக்கும் என்பதால் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டுள்ளோர் முனைகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த வணிக அமைப்பின் மீது நாம் வைக்கத் தொடங்கும் விமர்சனங்கள் வீதிக்கு வருகின்றன. பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரிக்க, பலமுறை பல தந்திரங்கள் நடைபெற்று அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.
பங்கு வணிகம் ஒரு சூதாட்டம் போன்றது என்கிற கருத்தை முன்னெடுத்து வைக்கிறவர்கள் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் பத்தினிகள் அல்ல என்று குறிப்பிடுகிறார்கள். வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்று தங்களை சமரசப்படுத்திக் கொள்வோர் மனமறிந்து ஏமாற்றத் துணிவதற்கு பங்குச் சந்தை உரம் போட்டு வளர்க்கிற காட்சிகளை கண்டிருக்கிறோம்.
உண்மையில் இலாபம் சம்பாதிக்காமலேயே ஊடகம் மற்றும் அரசியல் செல்வாக்குகளின் துணையோடு செயற்கையாக பங்குகளின் தேவைகளை வெற்று நிதிநிலை அறிக்கைகள் மூலம் அதிகரித்து - ஏமாற்றும் நோக்கத்துடன் விலைகளை ஏற்றிவிட்டு - பொது மக்களை ஆசையுடன் வாங்க வைத்து பின்னர் விற்க முடியாமல் போகும்போது தங்களின் உழைத்து சேர்த்த சேமிப்பை இழந்து நடுத்தெருவில் நின்ற பலரையும் தற்கொலை செய்துகொண்ட சிலரையும் சரித்திரம் சந்தித்து இருக்கிறது. இவற்றிர்க்கெல்லாம் அண்மைக்கால உதாரணமாக சத்யம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வீழ்ச்சியையும் ஹர்ஷத் மேத்தா மோசடி என்பவைகளையும் குறிப்பிட்டுக் காட்டலாம்.
சில நிறுவனங்கள், தங்களின் பங்கின் வெளிச்சந்தை மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் என்று கூடக் காட்டி வெற்று வெளிச்சம் போட்டு விட இங்கே வழி இருக்கிறது. பங்குகளை வெளியிடும்போது பங்குகளுக்கு வைக்கப்படும் முகமதிப்பு விலை நாட்கள் செல்லச்செல்ல அதிகரிக்கப்படுகிறது. உண்மையாக விலை ஏறாவிட்டாலும் நிறுவனங்கள் தங்களின் நிலையை ஊதிக் காட்ட இவ்விதம் அதிகரிப்பதால் உண்மையான மதிப்பை உலகம் உணர முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களை உருவாக்கும் புரமோட்டர்ஸ் நிறுவனங்கள் நிர்வாகத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தங்களின் ஏனைய வணிகங்களுடைய நிதி நெருக்கடிகளுக்கு பங்குகளை வெளியிட்டு பொதுமக்களை ஏமாளியாக்கும் வாய்ப்புகள் வாய்த்தது இந்தப் பங்குச் சந்தை.
இப்படிப்பட்ட நிலைமைகள் வரும்போதுதான் இஸ்லாம் தடை செய்துள்ள பல அம்சங்கள் இங்கே தென்படுகின்றன என்று மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்திடம் இருக்கும் பங்குகளின் உண்மை மதிப்பு இருபது இலட்சம் ரூபாய் என்றால் அதை இரண்டு கோடி என்கிற அளவுக்கு மதிப்புக் காட்டி சொல்லப்படுகிறது. ஆகவே உண்மை மதிப்புக்கும் சொல்லப்படும் மதிப்புக்கும் இடையே ஒரு கோடியே எண்பது இலட்சம் வித்தியாசப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் நாம் செய்யும் முதலீடு, உண்மையின் அடிப்படையை தகர்த்துவிடுவதால் மார்க்கம் வகுத்த வணிக வழிமுறைகளுக்கு மாறுபாடாக நிற்கிறது. இல்லாததை இருப்பதாக காட்டப்படுவதால் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வணிகத்தில் நேர்மை என்கிற அடிப்படை தகர்ந்து போகிறது.
பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் அந்த நிறுவனங்களின் கணக்குகளை சோதித்துப் பார்க்கவோ அல்லது நிர்வாகத்தில் தலையிடவோ அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. நமது கண் பார்வைக்குட்படாத ஒரு நிறுவனத்தில் முதலீடுகள் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல.
பங்கு சந்தை மூலம் முதலீடு செய்கிறவர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள பணம் எத்தகைய பொருட்களை வாங்க/ விற்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய மாட்டார்கள். ஒரு முஸ்லிம் பங்கு வாங்கிய நிறுவனத்தின் பணம் , மதுக்கடைகள் நடத்தவும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகள் நடத்தவும் கூட பயன்படுத்தப்படலாம். இப்படி தனது பணம் ஹராமான வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹலாலான வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதாஎன்று அறிய முடியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விடும் பங்குச் சந்தை வணிகத்தில் முஸ்லிம்கள் இறங்கக் கூடாது என்று பல மார்க்க அறிஞர்கள் மற்றும் பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
ஆனாலும் நமது கருத்தை சிந்தனைக்கும் விவாதத்துக்குமாக இப்படி சமர்ப்பிக்கலாம்.
இந்த நவீன யுகத்தில் - புதுமைகளை புரட்டிப் போட்டுப் பார்க்கும் வணிக சமூகத்தில் வளர்ச்சியின் பாதையில் செல்ல மார்க்கம் ஒரு தடையாக இருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது.
ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பத்வா கொடுத்து கல்வியில் நமது சமூகம் பின் தங்கியது போல் இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பங்கு சந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு பெட்டிக் கடைகளையும் புரோட்டா கடைகளையுமே இந்த சமுதாயம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி. ஒரு முஸ்லிமின் கரங்களில் என்றைக்கும் குஷ்கா போடும் கரண்டிதான் இருக்க வேண்டுமா? அவனது கரங்கள் பீடிதான் சுற்ற வேண்டுமா? அவன் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் கிடந்துதான் சாக வேண்டுமா? அவன் கல்கத்தா வீதிகளில் கை ரிக்க்ஷா இழுத்துத்தான் பிழைக்க வேண்டுமா?
வளர்ந்து வரும் சமுதாயத்தில் தொலைக்காட்சிபெட்டிகள் இல்லாத முஸ்லிம்களின் வீடுகள் இல்லை; அலைபேசியும் தொலைபேசியும் இல்லாத இஸ்லாமியரை ஆள் வைத்துத்தேடவேண்டிய நிலை; கணினி யுகத்தில் கல்வியும் கணினி மயமாகிவிட்டது; அதே கணினியில் கல்வியுடன் கூட கலவிக் காட்சிகளும் காட்டத்தானேப்படுகின்றன? அதற்காக கணினிகளைத் தூக்கி கடாசிவிட்டோமா? அவற்றின் பயன்பாட்டை ஒதுக்கிவிட்டோமா இல்லையே!
விமானங்களில் பயணிக்கும்போது, அனைவருக்கும் இலவசமாக மது பரிமாறப்படுகிறது. அடுத்த இருக்கையில் இருப்பவன் ஊற்றி ஊற்றிக் குடிக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறோமே அதேபோல் நமக்கு வேண்டாதை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு நாமும் இந்த பங்கு சந்தையில் ஒரு அங்கமாகி நம்மை வளர்த்துக் கொள்ளக் கூடாதா? பலாப்பழத்தில் சக்கைகளைத் தூக்கி வீசிவிட்டு சுளைகளை மட்டும் சுவைக்கும் பக்குவம் பங்கு சந்தை வணிகத்துக்கும் நமக்குப் பயன்படாதா?
வங்கிகளில் வட்டியை ஒழித்து இஸ்லாமிய வங்கி முறையை மார்க்க அறிஞர்கள் தந்திருப்பது போல் இஸ்லாமிய பங்குச் சந்தை முறைகளையும் களைய வேண்டியவைகளைக் களைந்து வடிவமைத்து வழங்கினால் அது சமுதாயம் நவீன பொருளாதார வளர்ச்சியுடன் இணையாக போட்டி போட்டு வளர வழி வகுக்கும்தானே! எடுத்த எடுப்பிலேயே ஒன்றைத் தவறு என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லும் மார்க்க அறிஞர்கள் அந்தத் தவறுகளைக் களைய வழிகளையும் சொல்லித் தர மாட்டார்களா? இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விலங்கிடாதீர்கள்; சிந்தித்து அல்லாஹ் ஏற்கும் வழியில் உயரப் பறப்பதற்கு ஏற்ற சிறகாக ஆக்கித் தாருங்கள் என்று மார்க்க நல் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்போம்.
இபுராஹீம் அன்சாரி








