Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி 37

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , , ,


திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
..."தொலைவான ஒட்டகம்"

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி

சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்

சுரந்து வழியும்
...சுனைவழியின் தொடராம்
பரந்து விரியும்
....பகுத்தறிவின் சுடராம்

மிதக்கும் ஒளியாம்
..மின்னல் கீற்றாம்
செதுக்கும் உளியாம்
..சொர்க்கக் காற்றாம்

மூளையின் உணவாகும்
...முழுமையான கல்வி
மூளையே உணவாகும்
....முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்
...ஊற்றுக் குழியாம்
அள்ளக் குறையா
...ஆற்றுச் சுழியாம்

உலகம் சுற்றுவதும்
...உலகத்தைச் சுற்றி
பலனைக் கற்றுதரும்
...  பலமான கல்வி

மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப்  பெற்றது

எல்லையும் வயதும்
...இதற்கு மட்டும்
இல்லையே மனிதா
...இறப்பில் முற்றும்

மரணம் முடிக்கும்;
....மடைமை ஒழிக்கும்;
இரந்தும் படித்தால்
...இயலாமை அழிக்கும்

செல்வமும் வீரமும்
....செழித்து வளர
கல்வியின் வீரியம்
....கடவுள் வரமாம்

சென்ற இடமெலாம்
.....செழித்திடும் வெற்றியாம்
வென்று பெறுபவர்
......வியத்தகு கல்வியால்

------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
------
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

37 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Kaviyanban Abul Kalam,

Your symmetrical wordings in each stanza of the poem are excellent.

The most compressed words in the lines with elaboration in the meanings stress the importance of education in every aspects of life.

Education only elevates anyone to true rational personality. However the true education should lead one to reflection on self and realization of God Almighty. Then the life will be in harmonious, rich and at peace.

May God Almighty Allah enrich our knowledge.

Note:

//அகிலத்தின் காட்சிகளை
.....அறிவுக்கும் முன்னோடி//
There could be a typo in the above line could be corrected as follows.

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி

Thanks and best regards,


B. Ahamed Ameen
from Dubai

www.dubaibuyer.blogspot.com





KALAM SHAICK ABDUL KADER said...

Wa alaikkum Salam,

Dear Brother Ahmed Ameen,

Jazakkallah khairan for your nice comments and corrections. ye. I typed in midnight (last night) and sent from my office computer yesterday morning. In busy schedule, i didnt correct or review the mistake.

அ.நி நெறியாளர், அன்புச் சகோ. அபூ இப்றாஹிம்.

திருத்தம் செய்யக் கோருகிறேன்:


//.....அறிவிக்கும் முன்னோடி


என்பதே சரி; எழுத்துப் பிழைக்கு- தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வி பற்றிய அதன் அவசியம் பற்றிய கலைநயமிக்க கருத்தாழமிக்க அருமைக் கவித்தொகுப்பு! வாழ்த்தத் தடுக்குது வயசு!
-------------------------------------------------------------------
ஜமாத்துல் அவ்வல் பிறை 17
ஹிஜ்ரி 1434

Ebrahim Ansari said...

அன்புள்ள " உலகக் கவியன்பன்"! ஆம் இனி உங்களை இப்படி அழைக்கலாமென்று முன் மொழிகிறேன். காரணங்கள்
- தடாகத்தில் பூத்த உங்களின் பேட்டி
- தொடர்ந்து இலண்டன் வானொலியில் உங்கள் கவிவரிகளின் முழக்கம்

கல்வி பற்றிய இந்த உங்களின் கவிதை, கல்விக் கூடங்களில் காணத்தக்க இடங்களில், கல்வெட்டில் வடித்து வைக்கப் படவேண்டிய வார்த்தைச் சித்திரம்.

sabeer.abushahruk said...

நான்கிதழ்களின் பூக்களெடுத்து
நற்சிந்தனை நாரெடுத்து
நளினமாகச் சரம்தொடுத்து
நயமாக நல்கிவிட்டீர்

தெரிந்தெடுத்த பூக்களறுமை
தேக்கிவைத்த பாக்களறுமை
தத்துவார்த்த பொதிகுறைத்து
தாங்கள்தந்த கவி எளிமை!

கவியன்பன்,
இதுபோன்ற சிறப்பான கவிதைகளைக் காத்திருந்து, எதிர்பார்த்திருந்து வாசிக்க ரசனைமிக்க கூட்டம் இங்கு இருக்கின்றது. ஏமாற்றாமல் அடிக்கடி புத்தம்புது கவிதைகளாய் தந்துதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

//திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
..."தொலைவான ஒட்டகம்"//

ஒட்டகத் திமிலில்
ஒதுக்கிவைத்த நீராய்
கொடும்பாலை மடைமை
களைந்திடும் குடிநீர்

sabeer.abushahruk said...

//சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்//

திறவுகோல் சுழற்றிட
விலகிடும் பூட்டு
உறவுகள் போற்றிட
உயர்கல்வி ஈட்டு

sabeer.abushahruk said...

//அகிலத்தின் காட்சிகளை
.....அறிவுக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி//

கண்ணாடி காட்டுகின்ற
பிம்பத்தில் குறையுண்டு
இடம்வலம் குழப்பாத
எதார்த்தம் நற்கல்வி

KALAM SHAICK ABDUL KADER said...

இலண்டன் இளங்கவி அன்புத் தம்பி மு.செ.மு. ஜாஃபர் ஸாதிக் அவர்கள் வார்த்தைகளால் வாழ்த்த வயதில்லை என்று தன்னடக்கமாய்ச் சொன்னாலும், உள்ளத்தினுள்ளே ஒளிந்திருக்கும் கள்ளம் - கபடமற்ற அவ்வாழ்த்துப் பூக்களின் நறுமணம் நானறிந்து , என் உளம்நிறைவான நன்றியை நவில்கிறேன், “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

ZAKIR HUSSAIN said...

//மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப் பெற்றது..//


என்னதான் இருந்தாலும் படிச்சவன் படிச்சவன் தான்யா என்று சொல்லக்கேட்டதையும், B.Com படித்தவனை "நாலு எழுத்து" படிச்சவன் என்று சொன்னதையும் உங்கள் கவிதை வழி வாழ்த்தியிருக்கிறீர்கள்.

ஏனோ தெரியவில்லை நம் ஊர் பெண்களிடம் மட்டும் "இது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம்மில்லை" என்கிர மாதிரி கல்விக்கு மரியாதை.


தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், கலாம் காக்கா...

கல்வியின் அவசியம் பற்றிய அருமையான கவிதை தொகுப்பு. ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

இது ஒலிவடிவில் கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். முயற்சிக்கலாமா?

//சென்ற இடமெலாம்
.....செழித்திடும் வெற்றியாம்
வென்று பெறுபவர்
......வியத்தகு கல்வியால் //

100% சதவீதம் சரி காக்கா, ஆனால் கற்ற கல்வியை இஹ்லாசுடன் நடைமுறைபடுத்தினால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி நிச்சயம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் முனைவர்- பொருளாதாரச் சிந்தனைச் சிற்பி இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் உளம்நிறைவாய் வழங்கும் அடைமொழியை ஏற்கிறேன்; பட்டங்களை நானாகத் தேடிச் செல்லவில்லை என்றாலும், பட்டங்களைச் சொல்லிப் பாசத்தைக் காட்டி மகிழும் மனங்கள் மகிழட்டும் என்பது மட்டுமே அடிப்படைக் காரணமாகும். எத்தனை பட்டங்களால் மறையக் கூடிய மனிதர்கட்கு வழங்கினாலும், என்றும் நிலைத்திருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்!

உண்மையில் என் நீண்டநாள் கனவான “கல்வி” பற்றி ஒரு கவிதை எழுதாவிட்டால், கல்வி கற்று அதன்மூலம் சிகரம் நோக்கிச் செல்லும் என் தமிழார்வத்துக்கு நான் செய்யும் குறையாகவே எண்ணி வந்தேன்; மேலும், அ.நி.யின் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கவியரங்கம் நடத்த வேண்டும் துவக்கத்தில் அடியேன் விடுத்த கோரிக்கையின் பொழுது இக்கவிதையின் கரு என் சிந்தைக் கருவறையில் ஒட்டிக் கொண்டது. நேற்று முதல்நாள் இரவில் சுகப்பிரசவமாய் என் கவிதைக் குழந்தை வெளியானது.

இன்ஷா அல்லாஹ், இவ்வாண்டு நிகழப் போகும் அம்மாநாட்டில் கவியரங்கில் என் இக்கவிதையை வாசிக்க அனுமதிக்க வேண்டும் என்று இன்றே விண்ணப்பம் விடுக்கிறேன்.

என் வாழ்நாளில் அடியேன் எழுதிய “கவிதைகளின் முழுமைப் பெற்ற” ஒரு சூட்சமத்தை உள்ளடக்கியதாக இதனை என் மனமும் சான்று வழங்கிக் கொண்டிருப்பதால், அதன் “சூட்சமத்தை- சூத்திரத்தை” உணர்ந்து விட்டதில் ஈண்டு வாழ்த்தளித்த இருகவிஞர்களின் பின்னூட்டங்களில் அடியேன் உணர்ந்தாலும், இன்னும் நீங்களும் இறுதி வரிகளில் கோடிட்டுக் காட்டி விட்டீர்கள் என்பதை உணர்ந்தாலும், அதன் “சூட்சமத்தை” இன்னும் வெளிப்படையாக ஈண்டு வெளிப்படுத்துவோர் எவரும் வருவார்களா? என்பதை அறியும் ஆவலில், இளங்கவிஞர்- இனியவர் ஷஃபாத் மற்றும் மகுடக் கவிஞர்- வார்த்தைச் சித்தர் க்ரவ்னார் ஆகியோரையும் எதிர்பார்க்கிறேன்.

கவிநிலவு- கவிவேந்தர்-இளங்கவிகள் மற்றும் தமிழறிஞர்கள்- ஆசான்கள் கூடும் இச்சபையில் என் ஆவல் நிறைவேறி விட்டால், இனி இந்த “சூட்சமத்தை- சூத்திரத்தை” முன்னெடுத்துத் தான் என் கவிதைகள் வனையப்படும்; அஃதே என் நீண்ட நாள் பேரவாவும் நோக்கமும் ஆகும். (இதனை அப்பேட்டியில் குறிப்பிடவில்லை; காரணம், அவர்களின் வினாக்களில் இக்கருத்தை ஒட்டிய வினா இடம் பெறவில்லை),ஆனால், அ.நி.என்னும் அதிரையின் அறிஞர்கள் கூடும் இடத்தில் முதன்முதலாக என் நோக்கம் வெளிப்படும் இக்கவிதையைப் பதியப்பட வேண்டும் என்பதில் நான் எடுத்துக் கொண்ட முயற்சிகட்குத் துணை நின்றக் கவிநிலவு- கவிவேந்தர் சபீர் அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன். அவர்களின் எதிர்பார்பை இன்ஷா அல்லாஹ் நிறைவு செய்ய அல்லாஹ் எனக்கு உடல் நலம் தருவானாக.

KALAM SHAICK ABDUL KADER said...

//நான்கிதழ்களின் பூக்களெடுத்து
நற்சிந்தனை நாரெடுத்து
நளினமாகச் சரம்தொடுத்து
நயமாக நல்கிவிட்டீர்//

அன்பின் கவிவேந்தர்- கவிநிலவு- ஆஸ்தானக் கவிஞரே!
இதே போன்று முதன்முதலாய் என் வலைத்தளத்தினுள் உங்களை அன்புடன் நுழையச் செய்து வரவேற்ற “ஈரம்” என்னும் கவிதைக்கு நீங்கள் எழுதிய நான்கடிப் பின்னூட்டங்களில் எப்படி அக்கவிதையின் போக்கை உள்வாங்கி, அக்கவிதையை எப்படிக் கோத்தேன் என்பதை உள்ளுணர்வுடன் உண்மையை உடைத்துச் சொன்னீர்களோ, அஃதேபோன்று ஈண்டு இக்கவிதையின் “சூட்சமத்தை” ஓரளவுக்கு இந்நான்கடிக்குள் சொல்லி விட்டீர்கள் என்றாலும் ,

//நான்கிதழ்களின்\\ என்பதை விட “மூவிதழ்கள்” என்பதே அடியேன் இப்பொழுதுச் சொல்லிக் கொண்டு வரும் “சூட்சமம்- சூத்திரம்” என்பதைச் சொல்லி அவைகள் யாவை என்பதையும் உங்களின் சிந்தனைக்கு விட்டு வைக்கிறேன்.

1) நான் இக்கவிதையை அச்சூட்சமத்தை உள்வாங்கி உருவாக்கும் தருணத்தில் இக்கவிதை உண்மையில் கவிவேந்தரின் பாராட்டைப் பெறும் என்று என் உள்மனத்தின் ஆழத்தில் பதிவான ஒரு செய்தி .

2) பதிவுக்கு அனுப்பியதும், கவிதைக்குழுவில் உள்ள கவிவேந்தர் அவர்களின் பார்வையில் பட்டதும் “wonderful" என்ற ஒற்றை வார்த்தையால் இந்த ஆஸ்தான கவிஞரிடம் அடியேன் ஆஸ்கார் விருது பெற்றது ஒரு செய்தி.

2) மேற்கண்ட என் செய்திகள் மேலும் உறுதி செய்யும் வண்ணம் ஈண்டுத் தொடர்ந்து நான்கு நான்கு அடிகளாக நான்கு பின்னூட்டங்களை வழங்கிய கவிவேந்தரின் பாராட்டுகளும் சான்றுகள் என்பதும் ஒரு செய்தி.

இக்கவிதையை இத்தளத்தில் இன்றே பதியப்பட வேண்டும் என்பதில் முழு ஈடுபாட்டுடன் துணை நின்றதற்கும், மேலும் தொடர்ந்து என் கவிதைகள் வர வேண்டும் என்ற அன்புக் கட்டளைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்- ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//ஏனோ தெரியவில்லை நம் ஊர் பெண்களிடம் மட்டும் "இது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம்மில்லை" என்கிர மாதிரி கல்விக்கு மரியாதை. \\

உங்களின் இக்கருத்துரை என்னை வியப்பிலாழ்த்தி விட்டது உளவியலார் அவர்களே! ஆம். உண்மையில் நீங்கள் உள்ளம் புகுந்துப் பார்க்கும் கலைகள் கற்றுள்ளீரோ? அல்லது உங்களின் உளவியல் ஆய்வின்படி “உணர்வுகளின் அதிர்வலைகள்” தானோ? என்னே ஒற்றுமை கண்டேன் எம்மிருவரின் எண்ணங்கட்கும் எழுத்துக்கும் அன்பரே! ஆம், இக்கருவை உள்ளடிக்கி இப்படியாக

// பெண்களிடம் வழங்கிய சுதந்திரம்
பின்னர் ஏனோ இற்றைப் பொழுதில்
ஆண்களால் பறிக்கப்பட்ட தந்திரம்!\\

என்ற “கரு”வை வைத்து வரிகளைச் செதுக்கினேன்; உள்ளூர் உலமாக்களின் எதிர்ப்பை எண்ணி ஒதுக்கினேன்.!

ஆம். அ.நி. நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று ஜும் ஆ பயான்களின் வழியாக உலமாக்களால் கட்டளைப் பிறப்பிக்கப்பட்ட செய்தியும்; பின்னர், தாருத்தவ்ஹீத் நடத்திய கூட்டத்திலும் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாதென்று ஒருவர் இதே தளத்தில் பின்னூட்டமிட்டு அதற்கு ஆசான்கள் அதிரை அஹ்மத் மற்றும் ஜெமீல் காக்கா ஆகியோரின் அருமையான- ஆழமான விளக்கங்களும் தரப்பட்டன என்பதும் அறிந்து, இன்னமும் “பெண்கள் கல்வியில் முன்னேற்றம்” பெறுதலைப் பற்றி ஆண்கள் சிந்திக்கவே இல்லை என்பதாலும் அவ்வரிகளால் வீண்குழப்பங்களைத் தவிர்க்க எண்ணினேன்; ஆனால் நான் எண்ணினேன்; நீங்கள் கோடிட்டுக் காட்டி எழுதி விட்டீர்கள், ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் ஸலாம் தம்பி தாஜூதீன்,

உங்களின் ஆசைப்படி என் குரலில் இன்ஷா அல்லாஹ் அ.நி. கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அல்லது அடியேன் வர இயலாவிட்டால் பேராசிரியர் அப்துல் காதிர் அவர்களின் கணீர் என்ற குரலில் வெளியாக்கலாம்; அல்லது இளங்கவிஞர்- இனியவர் ஷஃபாத் அவர்களின் இனிய குரலில் நீங்கள் முயற்சி செய்து ஒலிப்பேழையாக்கலாம். இம்மூன்று “ஆக்கலாம்” என்பதையும் அனுமதி வழங்குகிறேன் அபுல்கலாம்.

உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்- ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jahir Hussain,

//ஏனோ தெரியவில்லை நம் ஊர் பெண்களிடம் மட்டும் "இது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம்மில்லை" என்கிர மாதிரி கல்விக்கு மரியாதை. //

There is a saying in Tamil "A donkey cannot sense smell of camphor"

And another saying in Tamil "A scholar can appreciate another scholar".

Generally money is given prime imporance over education and moral, and comparing uneducated earning lot more(could be in haram ways) than educated individual - this comparison make some women think that way you mentioned.

Thanks and best regards,



B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

அலாவுதீன்.S. said...

சகோ. அபுல்கலாம் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் :20:114)

இன்றைய தினம் இழிவும், கேடும் (ஏக இறைவனை) மறுப்போர்க்கே என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 16:27)

நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 12:76)

அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும் நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். (அல்குர்ஆன்: 4:162)

///திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
..."தொலைவான ஒட்டகம்"/// உண்மை!

கல்வியைப் பற்றியும் கற்றதன் பயனையும் பற்றியும் அழகான கவிதையை வழங்கிய சகோ. அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை நரி ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லை? ஏன் பின் தங்கி இருக்கிறது? ஏன் சக்தியற்று இருக்கிறது?
மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருககிரார்கள்? தொழில் வளர்ச்சியிலும், இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்கவைக்கவும், விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும், அநியாயமாக படை எடுக்கவும், அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களை தூக்கிலடவும், துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?
நம்மிடையே கல்வியறிவு இல்லாமை, நமக்குள் ஒற்றுமை இல்லாமை.
நம்மை விட ஏன் யூதர்களும், கிருத்துவர்களும் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும் முன்வைக்கிற நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகின்றோம் மறுத்து விடுகிறோம். யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான், அவர்களின் கல்வி வளர்ச்சி.
- கல்வி வளர்ப்போம் ஒற்றுமையாய்க் கை கோர்ப்போம்- கட்டுரை- அ. நி/இ.அ.

Ebrahim Ansari said...

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள்.
அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.
ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன. உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை.
உலக கிருத்துவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%:; ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.
முழுக்க முழுக்க கிருத்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100% கல்வியறிவு பெற்ற நாடுகள் 15. ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை.
அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிருத்துவ நாடுகள் 98%. ஆனால் இஸ்லாமிய நாடுகள் 50% கூட தேறவில்லை.
உயர் படிப்புக்கு செல்கின்ற கிருத்துவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர்படிப்புக்கு செல்வதில்லை.
ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர். ஆனால் , ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில் முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் நிந்தனைக்கு ஆளானோர், அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மை உலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர். கல்வி நிலையங்களை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர், பீட்டர், அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம். அல்லது சேர்க்கத்தானே பிரியப்படுகிறோம்.
தமிழகத்தை பொருத்தவரை கூட கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி.க கட்சி கூட தனக்காக ஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறது. அதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும் மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தையும் , ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில் நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்? இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான் ஆண்டோம்- கல்வியை ஆளவில்லையே.! ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்வி நிலையங்களை ஆங்கில கிருத்துவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது? தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .
- கல்வி வளர்ப்போம் ஒற்றுமையாய்க் கை கோர்ப்போம்- கட்டுரை- அ. நி/இ.அ.

crown said...

திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
..."தொலைவான ஒட்டகம்"
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கவிஞர் கையாண்ட உவமானம் ஆரம்பமே அமர்களமாகவும்,ரஹ்மத்தாகவும் உள்ளது. திருமறை திடமான கட்(டிடம்)டளை.
இந்த திடமான கட்டளையை(கட்டிடம், கல்வி நிலையம்)அனேக இஸ்ஸலாமிய அறக்கட்டளையாவும் கட்டளை என்பது நம் சமூகத்தின் அவலம்.மேலும் கல்வி யெனும் ஒட்டகம், ஒட்ட "கம்"(பசை=பணம்)தேவை என்பதையும் குறிப்பிடுவதாக கொள்ளலாம்.இந்த ஒட்டகம் தொலைத்தவர்கள் அனேகர் நாமே! அதனால் தான் நாம் பாலைவனத்தில் அதிகம்( வளைகுடா) வரட்சியுடன் பயனிக்கிறோம்.

crown said...

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி
-----------------------------------------------------
sabeer.abushahruk சொன்னது…
கண்ணாடி காட்டுகின்ற
பிம்பத்தில் குறையுண்டு
இடம்வலம் குழப்பாத
எதார்த்தம் நற்கல்வி -அதான் , அதேதான் கவிஞரரசு சொன்னதுதான். அதனாலேயே கல்விக்கண் என்கிறோம். கோணல் பார்வை பார்க்காத கவ்வியே உயர்"தர"கல்வி!இதை "தர நம் சமூதாயம் முயலனும்.

crown said...

சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்
-----------------------------------------
சரியா சொன்னீங்க கவிஞர் காக்கா! கள்ளச்சாவியில் இந்த பூட்டை திறக்கமுடியாது! கள்ளச்சாவி இங்கே=(குறுக்கு வழியில்,சான்றிழல் பெற்று பெற்ற கல்வி)

crown said...


சுரந்து வழியும்
...சுனைவழியின் தொடராம்
பரந்து விரியும்
....பகுத்தறிவின் சுடராம்.
---------------------------------------------------------
மாஷா அல்லாஹ்! என்ன ஒரு வார்த்தை வளம்.இதுவும் பெற்றகல்வியின் பயனே என்பதின் சாட்சி! இதை போல் தான் சுனை நீரும்,சுடரும் சாட்சியின் காட்சியாக உருவகபடுகிறது. சுரக்கும் கவிச்சுரபிக்கு அறிவுச்சுடராய் ஆங்கே விளக்க(கா)ம்.

crown said...

மிதக்கும் ஒளியாம்
..மின்னல் கீற்றாம்
செதுக்கும் உளியாம்
..சொர்க்கக் காற்றாம்

மூளையின் உணவாகும்
...முழுமையான கல்வி
மூளையே உணவாகும்
....முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்
...ஊற்றுக் குழியாம்
அள்ளக் குறையா
...ஆற்றுச் சுழியாம்
---------------------------------------------------------
ஒவ்வொரு வரியும் படிக்கையில் சுகானுபவம்,ஆஹா என்ன ருசி! அல்ஹம்துலில்லாஹ்!!!!!.


crown said...

மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப் பெற்றது
------------------------------------------------
எதார்த்த உண்மை! இதை போல் பல உண்மைகளை உங்கள் அழகுத்தமிழில் அடிக்கடி பதியுங்கள்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் போதகர் அலாவுதீன், வ அ அலைக்கும் ஸலாம்.

”இக்ர” என்னும் ஒற்றைச் சொல்லில் இறைவனும் கல்வியை முதன்மையாக்கி வைக்கும் வண்ணம், அருள்மறையை அகிலத்திற்கு இறக்கும் தருணம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் திருவதனத்தில் இத்திருவசனம் மொழிய வைத்தான் என்பதை அடிப்படையாக வைத்தே என் கவிதையின் துவக்கத்தையும் அமைத்தேன். தங்களின் பின்னூட்டத்தில் மேலும் திருமறையின் வசனங்கள் “கல்வி” பற்றி எடுத்துரைக்கும் வசனங்களை மேற்கோள்காட்டி என் கருத்துக்கு வலுவைச் சேர்த்து விட்டீர்கள்; உங்களின் அற்புதமான இப்பின்னூட்டத்திற்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் முனைவர்- மூத்த சகோதரர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் ஆழமான- ஆதாரங்களுடனான இப்பின்னூட்டங்களினால் “கல்வி” பற்றிய என் கவிதைக்கு மேலும் வலுவைச் சேர்க்கின்றன. மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் ஸலாம், தஸ்தகீர்!
வார்த்தைச் சித்தர்- மகுடக் கவிஞர் க்ரவுனார் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துரைகட்கும் என் உளம்நிறைவான நன்றிகள்=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

வார்த்தைகளின் உள்ளே சீர் பிரிப்பதுதான் எங்கள் வேலை என்றால், அவ்வார்த்தைகளைச் சீராகப் பிரித்து வேராகக் காணும் வேறு வேறானப் பொருட்களை அள்ளிக் கொடுக்கும் ஆற்றலை அவரிடம் காண்கிறேன். மடைதிறந்த வெள்ளம் போல் அவரின் கவியுள்ளம் வார்த்தை மழையைக் கொட்டுவது பேச்சிலும் உண்டென்பதே அவர்க்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான அருள்மழை!

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதரரே(இக்கவிதையின் ஆசிரியரே)! என்ன அற்புதமாய்,எளிமையாய் எல்லோருக்கும் விளங்குவதற்க் கேற்ப்ப கல்வியின் கவிதையை அழகாய்ப் பொழிந்துள்ளீர்!! கோடி வாழ்த்துக்கள்!! மிகவும் சுவைமிகு கவிதையாய் இருந்தது!!

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் சலாம் அதி அழகின் அதி அழகுக் குட்டியாய் அழகுத் தமிழில் வாழ்த்துரைக்கும் அன்பு இளவல் அப்துற்றஹீம் ஜமீல் அவர்களே!

ஜஸாக்கல்லாஹ் கைரன். உங்கள் வாப்பா, பெரியவாப்பா மற்றும் சின்னவாப்பா ஆகியோர்களிடம் கற்றுக் கொண்டு, உங்கள் மாமா கவிவேந்தரின் கைபிடித்துப் பழகியது தான் இக்கலை என்பதே என் நிலை!

Yasir said...

கல்வி-யைப் பற்றி கவியன்பன் அவர்களின் காவியம் இது...படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகள்..அதில் புதைந்திருக்கும் பலஉண்மைகள்...கவியன்பனின் கவிதை செவி இன்பமும் தரும் என்பதற்க்கு இலண்டன் வானொலி ஒளிப்பரப்பே சான்று

عبد الرحيم بن جميل said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
//உங்கள் மாமா கவிவேந்தரின் கைபிடித்துப் பழகியது தான் இக்கலை என்பதே என் நிலை!//

எங்கள் மாமா கவிவேந்தர் என யாரைக் குறிப்பிடுகிறீர் என்பது என் மூளைக்குத் தெரியவில்லையே!

சபீர் மாமா பாசக் காரப் புள்ளைக என ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டதற்க்கான அர்த்ததை நன்றாக புரிந்து கொண்டேன்!!

KALAM SHAICK ABDUL KADER said...

கல்வியாளர் யாசிர் அவர்கள் கல்வியைப் பற்றி அதிகம் உணர்ந்தவர்களாதலால் என் கவிதையின் தாக்கம் அவர்களை ஈர்த்ததில் வியப்பில்லை; உங்களின் இனிய வாழ்த்துரைக்கு என் உளம்கனிவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிஞர் சபீர் அபூசாருக்ஹ் அவர்களைத் தான் கவிவேந்தர் என்றேன்; நீங்களும் அவர்களை மாமா என்று தானே அழைக்கின்றீர்கள்.

\\சபீர் மாமா பாசக் காரப் புள்ளைக என ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டதற்கான அர்த்ததை நன்றாகப் புரிந்துக் கொண்டேன்!!//

பாசக்கரவுகளும் நாங்கதான்; ரோசக்காரவுகளும் நாங்கதான்.

அன்பு நெறியாளரின் வருகையைக் காணோமே?
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?

KALAM SHAICK ABDUL KADER said...

படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

ஆனால் படிப்பதைச் சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதைச் சொல்கிறேன்…
ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றித் தன் தோல் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை வியப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.
எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.
ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.
எப்படி?
‘இந்தப் பசுக் கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்துக் கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படித் தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.
பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.
அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்துத் திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடுப் பிறக்கும். இஃது ஏதோ படிப்பதற்காக உங்களுக்குச் சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்....

குறிப்பு: முகநூலில் எனக்கு வந்த செய்தி

Iqbal M. Salih said...

அழகான குட்டிக்கதை. அருமையான அர்த்தத்துடன்!

Natarajan Nagarethinam said...

எனது ஆய்வில் ஏழ்மையின் காரணம், மக்களில் "கற்கும் & சிந்திக்கும்" திறமையில் குறைவு. உழைப்பவர் எல்லாம் ஏழ்மையிலேயும், உழைக்காத்வர் பெரும் செல்வம் படைத்தவராக இருப்பதும் ஏன்? நமக்குத் தெரியாது. நாளையும் கோளையும் மற்றவரையும் உற்றவரையும் குற்றம் சொல்வோம். தமிழில், மனித மனம் ஒரு மிருகப்பண்ணை என்ற இலவச மின் புத்தகத்தையும், உயர்ந்த அறிவை அடையும் வழிகள் என்ற இரு புத்தகத்தைஉம் ஜென் கதைகள் என்ற் பத்தகக்த்தை படித்து மந்தில் பதித்தவர்கள் ஏழ்மையில் சிக்க மாட்டார்கள். free-ebooks.net/search/natarajan என்ற தளாத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு