Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முதல் மிடறு! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2015 | , , ,

நீ தந்த உணவைக்கொண்டே
நோன்பை நான் முடித்துக்கொள்ள
பேரீத்தம் பழத்திற்குள்
பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய்
இறைவா...

முதல் மிடறு தண்ணீரில்
உடல் குளிரக் கண்டேன்
உதிரத்தில் உற்சாகம்
ஊற்றெடுக்கக் கண்டேன்

உள்நாக்கு நனையும்போது
உயிர் மீளக் கண்டேன்
குளிர்நீர் உடலுக்குள்ளே
குடல் வரைந்து செல்லக் கண்டேன்

நட்டநடு நண்பகலில்
வெட்டவெளிப் பணிக்களத்தில்
தகிக்கின்றக் கதிரவனால்
தேகத்திரவம் தீர்ந்துபோகும்

வெயில் சுட்டு உடல் காய
குளித்து வந்த தோரணையில்
கொப்பளிக்கும் வியர்வை
குடல் சுருங்கிக் காய்ந்துபோகும்

உப்புறையும் உடைகளிலே
உலர்ந்துபோகும் உதடுகளும்
பேச்சும் பிறழ்ந்து வரும்
நாக்கு ஒட்டும் மேலண்ணம்

உட்கார உடல் வலிக்கும்
கண்பார்வை காட்சி மங்கும்
வார்த்தையொன்றும் வாய்பேச
வருவதில்லை தாகத்தால்

ஆனால், அதிசயம்!
உன்மறையைக் கையேந்த
உறுத்தாது ஒரு வலியும்
நோன்பு வைத்த நெஞ்சுக்கு
நின்மறையில் நிழலிருக்கும்

நாக்குப் பிறழாது
நல்மறையை நானோத
உரக்க ஓதுகையில்
செவிக்கும் தேன் இறைவேதம்

கண்ணாடிக் குப்பிகளில்
குடிப்பதற்குக் கனிரசமும்
கழுவிவைத்த குவளைகளில்
கற்கண்டாய்ச் சாறிருக்கும்

எதையுமே நாடாது
இதயமே உன் தஞ்சம்
அறிவித்த நேரம்வரை
காத்திருக்கும் என் களைப்பு

முதல் மிடறு நீர்தன்னில்
புலன்கள் திறந்துகொள்ளும்
புது ரத்தம் பாய்ந்ததுபோல்
பார்வையும் துலங்கிவிடும்

முதல் மிடறு தண்ணீரில்
முடிச்சு ஒன்று அவிழ்ந்து வரும்
உயிர் சுரக்கும் உதிரத்தில்
ஈமானும் திடமாகும்

முதல் மிடறு தண்ணீரில்
நோன்பைப் புரிய வைத்தாய்
இறைவா
முடித்துவைத்த நோன்பில் நின்
முழுக்கருணை காட்டித் தந்தாய்

தணியாத தாகத்தினின்றும்
தரணியைக் காப்பாற்று
இறைவா...
ஒவ்வொரு மிடறு நீரையும்
உவப்போடு தந்துதவு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

16 Responses So Far:

Iqbal M. Salih said...

அருமை! அருமை! அருமையாக எழுதப்பட்டுள்ளது.

"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்."

நம் இறைவனை நேரில் சந்திக்கும் அரிய பாக்கியத்தை நமக்கு அல்லாஹ் அருள்வானாக!

இப்னு அப்துல் ரஜாக் said...


நம் இறைவனை நேரில் சந்திக்கும் அரிய பாக்கியத்தை நமக்கு அல்லாஹ் அருள்வானாக!

Ebrahim Ansari said...

ஸஹருக்குப் பிறகு படித்தேன் நோன்பின் மாண்புகளின் பட்டியல் அழகு கவிதையாக படிக்க ஆனந்தம் பேரானந்தம்

நட்புடன் ஜமால் said...

ஆமின் ஆமின்

இத நோன்பு திறந்துட்டு படிச்சிருந்தா இன்னும் "சுவை" கூடியிருக்கும்

அப்துல்மாலிக் said...

ஆனால், அதிசயம்!
உன்மறையைக் கையேந்த
உறுத்தாது ஒரு வலியும்// its true... காக்கா கலக்கல் as usual

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இறைவா...
ஒவ்வொரு மிடறு நீரையும்
உவப்போடு தந்துதவு!//

ஆமீன் !

பொருளுணரவைக்கும் பொக்கிஷம் இந்தக் கவிதை !

ZAKIR HUSSAIN said...

பாஸ்...கவிதை நல்லாயிருக்கு பாஸ்...

ஆனா இந்த மிடறுனா என்னா பாஸ்??

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஆனால், அதிசயம்!
உன்மறையைக் கையேந்த
உறுத்தாது ஒரு வலியும்
நோன்பு வைத்த நெஞ்சுக்கு
நின்மறையில் நிழலிருக்கும்

நாக்குப் பிறழாது
நல்மறையை நானோத
உரக்க ஓதுகையில்
செவிக்கும் தேன் இறைவேதம்
//

This is the Fact..

Jazakkallah Haira kaka for the Excellent poem.

Ebrahim Ansari said...

ஆனா இந்த மிடறுனா என்னா பாஸ்??


தம்பி ஜாகிர்!

தம்பி சபீரின் அனுமதி இல்லாமல் ஆனால் அவர்கள் சார்பாக,

மிடறு என்றால் மொடக்கு . இது ஒரு முறை தொண்டை வழியாக நாம் விழுங்கும் நீரின் ( யூனிட் )அளவு.

சரிதானா தம்பி சபீர்.

sabeer.abushahruk said...

ஜாகிருக்கு "மிடறு" வை விளக்கிய ஈனா ஆனா காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி!

அவனுக்கு அதுவும் வெளங்கலேன்னா ஆங்கிலத்தில் விளக்கப்போகும் அஹமது அமீன் தம்பிக்கு தேங்க்ஸ்; மலாயில் சொல்லப்போகும் ஃபாரூக் மாமாவுக்கு தெரிமா காசி!

Shameed said...

கவிதையை வாசிக்க வாசிக்க தொண்டைக்குள் இடறு இல்லாத மிடருதான் போங்க!!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahrukh,

MashaAllah, nice poem on the feeling and being and ending of fasting experience. May Allah accept our fasting and good deeds in this holy month.

Hope brother Mr. Zakir knows what exactly the beautiful Tamil word 'midaru' sngle sip of swallowing liquid.

Ramadan Mubarak to all brothers and sisters

B. Ahamed Ameen from Dubai.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மாஷா அல்லாஹ்....அருமையான கவிதை!

அதிரை.மெய்சா said...

முதல் மிடறு தண்ணீரை
முத்தாய்ப்பாய் உன்வரியில்
சொத்தாகக் கண்டேனே
சொன்னசொல்லின் தன்மையிலே

பசித்தாகம் மறந்திட்ட
பசைபோல உலர்ந்த நாவில்
பன்னீராய் முதல்மிடறு
பரவசமாய் அருந்துவரே

புசிக்காது நோன்பிருந்து
புனிதத்தை அடைந்துடவே
படைத்திட்ட இறையோனை
பசிமறந்து வணங்கிடுவோம்

Yasir said...

மாஷா அல்லாஹ்...எப்பொழுதும் போல எங்கள் காக்காவின் இக்கவிதை மிடறு-வும் மின்னுகின்றது......அல்லாஹ் இந்த ரமலானின் முழுப்பயனையும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு