கடந்த பதினெட்டு வாரங்களாக ஒவ்வொரு முஸ்லிமின் தார்மீகக் கடமையான இஸ்லாத்தை நோக்கிய அழைப்புப் பணி பற்றிய சில கருத்துக்களை விவாதித்தோம். இஸ்லாத்தை நோக்கி சில தவறான பார்வைகளுடையோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சில குறிப்புகளையும் சுட்டிக் காட்டினோம். இஸ்லாத்துக்கு எதிரான தவறான புரிந்துணர்வுகளை சரியான புரிந்துணர்வாக மாற்றுவதற்கான திசையில் அறிவியல் மற்றும் ஆய்வுகள் அடங்கிய பல கருத்துக்களை எடுத்துவைத்துப் பயணித்தோம்.
அழைப்புப் பணியில் ஈடுபடும் அன்பர்களுக்கு அந்தக் குறிப்புகள் உதவும் வகையில் அமைந்ததாக அவர்கள் உணர்ந்தால் அதுவே இந்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். அதற்காக இறைவனிடம் கூலி கிடைத்தால் அந்த நற்கூலியே நாம் வேண்டிப் பெறுவதாகும்.
அழைப்புப் பணி தொடர்பாக, இன்னும் பகிரவேண்டியவை நிரம்பவே இருக்கின்றன. தோண்டத்தோண்ட ஊறும் மணற்கேணி போல் அத்தகைய சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் சுரந்துகொண்டே இருக்கின்றன.
மிக முக்கியமாக, தொடர்ந்த அழைப்புப் பணியை ஏற்று இஸ்லாத்தை புதிதாக ஏற்றவர்களுக்கு அல்லது ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கு அல்லது ஏற்கலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தில் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.
காரணம், புதிதாக இஸ்லாத்துக்கு வருபவர்களை முறையாக அரவணைப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலானதாக மட்டுமல்ல நமது அனுபவத்திலும் நாமும் கண்கூடாகக் காண்பதால் அவ்வாறு காணுகின்ற சில உண்மைகளை, கசந்தாலும் எடுத்துரைக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என கருதுகிறோம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்று வருபவர்கள் சமூகப் பொருளாதார அளவில் மற்றும் அமைப்பில் இருவகைப் படுகிறார்கள்.
ஒருவகையினர் கல்வியாளர்கள், நல்ல பதவிகளில் இருப்பவர்கள், எழுத்தாளர், பேச்சாளர், மருத்துவர் போன்ற மக்களிடையே அறிமுகமாகி புகழ்பெற்றவர்கள். இவர்களுக்கு சமூக அந்தஸ்து மட்டுமே தேவைப்படும். பொருளாதார உதவிகள் தேவை இருக்காது. வேலைவாய்ப்புகள் தேவை இருக்காது. பாதுகாப்புக்கும் இட மாறுதலுக்குட்பட்ட வாழ்க்கை வசதிகள் தேவை இருக்காது.
இன்னொரு வகையினர் வாழ்வின் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள். சமூக கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள்; அழிக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதிகள். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நாடி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனாலும் வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி பொருளாதார அரவணைப்பு ஆகியவைகளுடன் திருமண பந்தங்களும் இவர்களுக்கு தேவைப்படும்.
இந்த இரு வகையினருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய ஆரம்ப அறிமுகம் மற்றும் வழிகாட்டுதல்களுடன் மட்டும் நாம் நிறுத்திக் கொண்டால் போதாது. ஒரு விதையை விதைத்துவிட்டால் மட்டுமே அந்த விதை விருட்சமாக வளர்ந்துவிடாது. அந்த விதை முளைத்து, தழைத்து வளர்ந்து வருவதை கண்காணிக்க வேண்டிய கடமையும் அழைப்பாளர்களுக்கு இருக்கிறது.
ஆனால் இன்றைக்கு நமது கண்முன் அழைப்புப் பணி என்பது எவ்வாறு சுருங்கிவிட்டது? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை இஸ்லாத்தோடு ஒன்றி முழுமை அடையச் செய்யும்வரையில் நாம் அவர்களுடன் இருக்கிறோமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சிலர் உடனே புரிந்து கொள்கிறார்கள். பலர் இஸ்லாத்தை ஏற்றாலும் பல புரியாத கேள்விகளோடு தடுமாறி வருகின்றனர். பல விளக்கங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அத்துடன் வாழ்வாதார விஷயங்களிலும் போராடுகிறார்கள்.
அழைப்புப் பணி என்பது ஒருவரை மனதளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் செய்து அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்து, விருத்த சேதனம் செய்வித்து, குர் ஆனின் பிரதி ஒன்றை அவரது கையில் கொடுத்து அவரது தலையில் ஒரு தொப்பியை மாட்டிவிட்டு, அவரது பெயரை ஒரு முஸ்லிம் பெயராக மாற்றிவிட்டு ஆணாக இருந்தால் ஒரு செட் கிப்ஸ் லுங்கியும் அல்லது ஜிப்பாவும் பெண்ணாக இருந்தால் ஒரு செட் புர்காவும் எடுத்துக் கொடுத்துவிட்டு ஒரு படமும் எடுத்து அதை முகநூலிலோ இயக்கங்களின் இணைய தளங்களிலோ வெளியிட்டு முன்னூறு லைக்கும் முப்பது மாஷா அல்லாஹ்வும் வாங்கிவிட்டால் போதுமானது என்றே பரவலாக நினைக்கிறோம்.
இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு இஸ்லாத்தை முறையாகப் போதிப்பதற்கும் அவர்களைத் தொடர்ந்து போஷிப்பதற்கும் போதுமான திட்டங்கள் நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் நம்மைக் கிள்ளிப் பார்த்துக் கேட்டுப் பார்த்து கொள்ள வேண்டும். கலிமா சொல்லிக் கொடுப்பதுடன் குளிப்புக் கடமை பற்றியும் உளூச் செய்தல், தொழுகை பற்றியும், சூரத்துல் பாத்திஹாவை மனப்பாடம் செய்யச்சொல்வதுடன் மற்றும் சில செய்திகளைச் சொல்லிக் கொடுப்பதுடன் அவர்களுக்கான வழிகாட்டல் முடிந்துவிடுகின்றது. இஸ்லாம் என்பது அவ்வளவுதானா?
தான் இவ்வளவு நாள் வளர்ந்து வாழ்ந்த குடும்பச் சூழல்களைத் துறந்துவிட்டு இஸ்லாத்தைத் தழுவும் புதியவர்களின் புனர்வாழ்வுக்கு நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது?
வயதானவர்களானால் அவர்களை பள்ளிவாசல்களில் மு அத்தின் ஆக்கி பாங்கு சொல்ல வைத்து முஹல்லாவில் முறைவைத்து மூன்று வேலை சாப்பாடு போடுகிறோம். இளைஞர்களானால் அவர்களுக்கு ஒரு ஆட்டோவை முன் பணம் மட்டும் கட்டிவிட்டு தொடர்ந்து வங்கியில் மாதாமாதம் ட்யூ கட்டும்படி வைத்து வட்டிக்குப் பழக்கிக் கொடுத்துவிடுகிறோம். பெண்களானால் நமது வீட்டு வேலைகளுக்கு வைத்துக் கொள்கிறோம். இதைவிடப் பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம்?
இஸ்லாத்தில் இணைந்தவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் எத்தனை? இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பிற மத சகோதர சகோதரிகள் நமது சமூகத்தில் திருமணம் முதலிய காரியங்களில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் “நவ முஸ்லிம்” என்று நவீன முத்திரை குத்தப்பட்டு வித்தியாசப்படுத்திப் பார்க்கப்படும் அவல நிலை உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள எனக்கு வெட்கமில்லை. அவர்களுக்குப் பெண் கொடுப்பதை அல்லது எடுப்பதை ஊராரின்முன் ஒரு கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கும் மனப் போக்கும் உள்ளது.
இதனால், புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் ஒரு ஆணையும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண்ணையும் திருமணச் சேவை செய்யும் ஊடகங்களில் விளக்கமான விளம்பரங்கள் கொடுத்து இல்வாழ்வில் இணைத்துவிடுகிறார்கள். இவர்கள் இருவருமே இல்வாழ்வில் இணையலாம். ஆனால் இஸ்லாத்தின் வாழ்வின் நெறிகளில் இணைவார்களா என்பது நமக்கு முன் நிற்கும் கேள்விக்குறி. இஸ்லாமியப் பின்னணி இல்லாமல், முறையான கற்பித்தலும், வழிகாட்டலும் இல்லாமல் அந்தக் குடும்பம் இஸ்லாமியக் குடும்பமாக எவ்வாறு விளங்கும்? இந்தக் கேள்வி அழைப்புப்பணியாளர்களுக்கு ஒரு சவாலான கேள்வியாகும்.
புதிதாக இஸ்லாத்தில் இணைந்த இருவருக்கிடையில் திருணம் செய்துவைத்தால் பலருக்கு அவரவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அருகிவிடுகிறது. அதனால் அவர்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. இவற்றுள் கொலை மிரட்டல்களும் அடங்கும். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட தந்தை வழி, தாய்வழி பாசமும், உறவும், அரவணைப்பும், ஆதரவும் இல்லாமல் மனத்தளவில் அவர்களும் பாதிக்கப்படலாம். எனவே, புதிதாக இஸ்லாத்தை ஏற்ற இருவரை ஜோடியாக இல்லறத்தில் இணைத்து விடுவது மட்டும் ஏற்றமான வழியாக அமையாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இவர்களின் இந்ததுயர் களையப்பட தொடர் முயற்சிகள், உதவிகள் தேவைப்படும் என்ற கருத்து, அழைப்பாளர்கள் கவனிக்கத்தக்கதாகும்.
இஸ்லாத்தை ஏற்று இணையக்கூடிய ஒரு தனி நபரையோ குடும்பத்தையோ அவர்களை குறைந்தது முதல் மூன்று மாதங்களாவது ஓரிடத்தில் ஒன்று சேர்த்து இஸ்லாமிய நெறிமுறைகளை, அடிப்படை சட்டங்களை கற்பிப்பதுடன் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். இக்காலகட்டத்தில் அவர்களின் தேவைகள் அனைத்துக்கும் முழுப் பொறுப்பெடுக்கப்படுவதுடன் அவர்களின் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலிய பொருளாதாரத் தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.
சிலர் இஸ்லாத்தை விரும்பி ஏற்கின்றனர். ஆனால், அவர்கள் வாழும் சூழல் இஸ்லாத்தைப் பின்பற்ற ஏற்றதாக இல்லை. அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இடம்மாற்றி குடியமர்த்தப்படும் தேவையும் ஏற்படலாம். இஸ்லாத்தை ஏற்றவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றத்தக்க சூழலுக்கு மாற்றப்பட வேண்டியதும் அவசியம் என்பதை அழைப்பாளர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு சகோதர சகோதாரிகள் மனமுவந்தும் சில சலுகைகளை எதிர்பார்த்தும் இஸ்லாத்தை ஏற்கின்றனர். ஆனால், அவர்கள் சொந்த நாட்டுக்கு வந்தபின் குடும்பத்துக்குள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. சொந்த நாட்டில் மாற்றமான சூழலில் இஸ்லாத்தை விடுவதா அல்லது குடும்பத்தை விடுவதா என்ற நெருக்கடியான நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேலை செய்யும் நாடுகளிலேயே திருமணம் முடிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகி, அதனால் இஸ்லாத்தையும் ஏற்று கொண்டு அவற்றை தங்களது குடும்பத்துக்கு தெரிவிக்காமலேயே வைத்திருப்பார்கள். சொந்த ஊருக்கு வந்ததும் அவர்களுக்கு அவரவர் மதங்களில் திருமணம் செய்யும் ஏற்பாட்டை குடும்பத்தினர் மேற்கொள்வார்கள். இப்போது கொண்டாட்டம் மனதுக்குள்ளே திண்டாட்டம்.
இந்நிலைகளை எதிர்கொள்ள, வெளிநாடுகளில் இஸ்லாத்தை ஏற்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்கள் இங்கே வருவதற்கு முன்னரே ஓரளவு அவர்களது குடும்பத்திற்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கான ஒரு ஏற்பாட்டை அழைப்புப் பணியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு பரந்த அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.
இஸ்லாத்தை பரப்புரை செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே இணைந்தவர்களை சலிப்படையாமலும் சங்கடப்படாமலும் தக்க வைத்துக் கொள்வதும் தக்க உதவிகள் செய்வதும் முக்கியமாகும். இத்தகைய உதவிகளில் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் முன்னிலை வகிக்க வேண்டும்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பலர் ஹஜ் அல்லது உம்ரா போன்ற பயணங்களை மேற்கொள்ள அவர்களது பாஸ்போர்டில் மற்றும் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் முந்தைய பெயர் இடையூறாக இருக்கிறது. அரசுப் பதிவேடுகளில் ஆவணங்களில் சட்டபூர்வமாக பெயர்மாற்றம் போன்றவைகளுக்காக அவர்கள் அலைவது அவர்களை ஏண்டா இங்கே வந்தோம் என்று சலிப்படையச் செய்கிறது. அழைப்புப் பணி செய்த ஆர்வலர்கள் இத்தகைய பணிகளையும் ஏற்றுக் கொண்டு வந்தவர்களின் வாழ்க்கையை எளிதாக்க்கிக் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
அழைப்புப்பணி மட்டும் முக்கியமல்ல; அழைபை ஏற்று நம்மை நாடி வருபவர்களையும் வந்தவர்களையும் எல்லா வகையிலும் பராமரிக்கவேண்டியதும் நமது பொறுப்புதான். அந்தப் பணிகளே அழைப்பை பரிபூரணமாக்கும்.
இஸ்லாம் என்கிற அழைப்பை ஏற்று வருகிற விருந்தளிக்கு விருந்தைப் பரிமாற வெறும் இலையைப் போட்டு தண்ணீர் தெளித்து வைத்துவிட்டுப் போனால் மட்டும் போதாது. அந்த விருந்தைப் பரிபூரணமாக பரிமாறவேண்டும். இஸ்லாத்தை ஏற்பவர்களை, ஏற்கச் செய்வதுடன் வேலை முடியவில்லை. அதற்குப் பிறகுதான் வேலைகள் அதிகம் என்பதை அழைப்பாளர்கள் அடிமனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நிறைவுறும்.
6 Responses So Far:
ஒருஇஸ்லாமியர் தெருவிலிருந்து இன்னொருஇஸ்லாமியர் தெருவில் சம்பந்தம் கலப்பதையேஏற்றுக்கொள்ளவிரும்பாத ஊரில் அழைப்புப்பணி கட்டுரை எழுதுவது ஒரு பொழுது போக்கு யெனகொள்ள வேண்டும். அதைலேப்பில் படிக்கும் பலருக்கு பட்டெரிசார்ஜ் குறைந்தது தான்மிச்சம்.
//இலன்ஞர் ஆனால் அவர்களுக்கு ஒரு ஆட்டோவுக்கு முன்பணம்கட்டிவிட்டு ........//இந்தகட்டுரைகள் மூலம் ஆட்டோ தயாரிப்பாளர்களுக்கு நல்லயாவாரம்என்று கேள்வி.
புதிதாக இஸ்லாத்திற்க்கு வந்த மாற்று மத பெண்களை 'அம்மா' வுக்கு துணையாக வீட்டு வேலைகளுக்கு வெள்ளாட்டியாக வைத்துக்கொள்ளலாம்.
அன்பிற்குரிய காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//அழைப்புப்பணி மட்டும் முக்கியமல்ல; அழைபை ஏற்று நம்மை நாடி வருபவர்களையும் வந்தவர்களையும் எல்லா வகையிலும் பராமரிக்கவேண்டியதும் நமது பொறுப்புதான். அந்தப் பணிகளே அழைப்பை பரிபூரணமாக்கும்.//
கண்டிப்பாக!
அதிகம் எதிர்ப்புகளையும் ஏளனளத்தையும் எதிர்கொள்ள நேரிடக்கூடிய ஒரே பணி அழைப்புப்பணிதான். அதை மிகவும் செம்மையாகச் செய்து வந்தது இக்கட்டுரை.
நிறைவை எட்டினாலும் இன்னும் பல அனுபவங்களோடு மீண்டும் ஒரு பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உண்டு.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
அன்புள்ள தம்பி கவிஞர் சபீர்! வ அலைக்குமுஸ் சலாம்.
இன்ஷா அல்லாஹ்.
//நிறைவை எட்டினாலும் இன்னும் பல அனுபவங்களோடு மீண்டும் ஒரு பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உண்டு.//
தங்களின் நம்பிக்கை வீணாகாது. இன்ஷா அல்லாஹ்.
Post a Comment