Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 7 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 16, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சென்ற வாரம் பதிக்கப்பட்ட அத்தியாயத்தில்  நபி (ஸல்) அவர்களும், தனக்கு சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் போது அழுதுள்ளார்கள் என்பதை நாம் சில ஹதீஸ் தொகுப்புகப் பார்த்தோம். நபி (ஸல்) அவர்களைவிட நமக்கு முன்மாதிரி மனிதர் உலகில் வேறு யாரும் கிடையாது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்காகவும், தனக்காகவும் அளப்பரிய தியாகங்கள் செய்தவர்களை நினைத்து  பல சந்தர்பங்களில் ஆனந்தக் கண்ணீருடன் அழுதுள்ளார்கள். அதனை விளக்கும் ஒரு சில சம்பவங்கள் இதோ.

ஒரு தாய் தன்னுடைய மகனைப் பிரிந்து பல நாட்கள் கழித்து சந்தித்தாலோ, அல்லது ஒரு சகோதரி நீண்ட நாட்கள் பிரிந்த தன்னுடைய சகோதரனை மீண்டும் சந்தித்தாலோ, அல்லது ஓர் உற்ற நண்பன் தன்னுடை இளமை காலத்து நண்பனை நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு சந்தித்தாலோ ஆனந்த கண்ணீர் வருவது இயல்பானது. இது நம்மில் எல்லோருக்கும் பல சந்தர்பத்தில் ஏற்பட்டிருக்கும். இது போலவே அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது அது அந்த நபர்களின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களின் சபைக்கு ஒரு பெண் வந்தார்கள், அவர்கள் யார் என்றால், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பால்யகாலத்தில் தாயை இழந்து, பிறகு ஹலீமா ஸஃதிய்யா என்ற பெண்மணி அவர்களிடம் பால்குடித்து வளர்ந்தார்கள் என்பது நாம் வரலாற்றில் அறிந்த தகவல். அந்த பால்குடித் தாய் அவர்களின் மகளார் பல வருடங்களுக்குப் பிறகு தீன்குலத் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார்கள். தன்னுடைய பால்குடி சகோதரிக்கு தன்னிடம் இருந்த விரிப்பை விரித்துவிட்டு, அவர்கள் தன்னருகில் அமர வைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட தன் சகோதரியைப் பார்த்து  மாண்புமிகு இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் சந்தோசத்தில் அழ ஆரம்பித்தார்கள், தன்னுடைய தாடி நனைகின்ற வரை அழுதுள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் சொன்னார்கள், “எனக்கு இந்த சகோதரியின் தாய் பாலுட்டினார், அந்த பாலூட்டிய தாயுடைய மகளுக்கு நான் எவ்வளவு கொடுத்தாலும், அவைகள் அந்த பாலூட்டிய தாயின் தியாகத்துக்கு ஈடாகாது” என்று சொல்லி பெருமிதம் கொண்டதோடு அல்லாமல், தன்னுடைய பால்குடி சகோதரிக்கு சில சொத்துக்களைக் கொடுத்தார்கள் என்று வரலாற்று தொகுப்புகளில் (முஸ்னத் அப்துற்றஜ்ஜாக்) காண முடிகிறது.

குழந்தை பருவத்தில் தன்னோடு ஒன்றாக ஒரே தாயிடன் பால்குடித்து வளர்ந்த அந்த சகோதரியைப் பல வருடங்கள் கழித்து பார்த்த சந்தோசத்தாலும், அந்த பாலூட்டிய தாய் தனக்காக செய்த தியாகத்தை நினைத்தும்  ஆனத்தக் கண்ணீர் விட்டு நம்முடை தலைவர் நபி(ஸல்) அழுதுள்ளார்கள் என்பதை இந்தச் சம்வங்களில் இருந்து நாம் காணமுடிகிறது.

இது போல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்கள் நம்முடைய தூய மார்க்கம் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து அழுது, மற்ற தோழர்களிடம் அந்தத் தியாக செம்மல்களின் செயலைப் பெருமிதத்துடன் சொல்லி சந்தோசத்தில் அழுத்துள்ளார்கள் என்பதை பல வரலாற்று சம்வங்களில் நாம் காணலாம். 

இதோ நம் எல்லோருக்கும்  படிப்பினை தரும் சம்பவம், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத்தப்பட வேண்டியவை.

முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள். இவர் மக்கத்து மாநகரின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தவர். குரைசி வம்சத்தின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளும் தகுதியுடையவராக இருந்தவர். அவர்கள் ஒரு திசையில் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அவர் பிரயோகித்த வாசனை திரவியம் மனத்துக் கொண்டே இருக்கும், ஒரு நாளை ஓர் ஆடை என்று புத்தம் புதிய ஆடையுடனே மக்கத்து பெருவீதிதியில் வலம் வந்தவர். ஆனால் இஸ்லாத்தில் இணைந்த ஒரே ஒரு காரணத்திற்காக, தன்னுடைய வீட்டில் தன் தாயால் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்கள், பின்னர் அந்த கொடுமையிலிருந்து தப்பித்து, நபி(ஸல்) அவர்களிடம் வந்தடைந்தார்கள்.

முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்ற கண் பார்வை தெரியாத தோழரையும் நபி(ஸல்) மதினாவிற்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் முதல் தூதுவர்களாக கண்ணியப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என்பதையும் நாம் பல சந்தர்ப்பங்களில் ஹதீஸ்களில் படித்திருப்போம்.

அதே முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் ஒரு நாள், கடினத் தன்மையுடைய ஆடையுடன் ஒரு கஷ்டமான கோலத்துடன் நபி(ஸல்) அவர்களுடைய சபைக்கு வருகிறார்கள், நபி(ஸல்) முஸ்ஹப்(ரலி) அவர்களுடைய ஆடையையும், அவர்களுடைய நிலையை பார்த்து அழ ஆரம்பித்தார்கள். பிறகு நபி(ஸல்) தன்னுடைய தோழர்களிடம் சொன்னார்கள் “இந்த முஸ்ஹப்(ரலி) இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் அல்லாஹ் அவருக்கு கொடுத்த அருட்கொடையை நான் நினைத்து பார்க்கிறேன், அவருடைய தாயார் முஸ்ஹப்பை (ரலி) அவர்களை எப்படி செல்வ செழிப்பாக வைத்திருந்தார் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்”. இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக எல்லா வசதிகளையும் துறந்துவிட்டு கடுமையான ஆடையோடு இருக்கும் என்னுடைய முஸ்ஹப்பின் (ரலி) தியாகத்தை நினைத்து ஆனத்தத்தில் அழுகிறேன் என்று இரக்க குணமுடைய நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (இந்த சம்பவம் இப்னு மந்தா என்ற அறிஞருடைய அத்தர்கீப் வத்தர்கீப் என்ற ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்படுள்ளது.)

இதே முஸ்ஹப் இப்னு உமைர்(ரலி) அவர்கள் உஹத் யுத்தத்தில் ஷஹீதானார்கள். நபி(ஸல்) அவர்கள் முஸ்ஹப் அவர்கனின் ஜனாஸாவுக்கு கஃபனிடுவதற்காக ஆடையை போர்த்துகிறார்கள், தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. பிறகு இத்ஹிர் என்ற புல்லை எடுத்து கால் பகுதியை மறைத்து அந்த தியாகச் செம்மல் முஸ்ஹப் இப்னு உமைர் (ரலி) அவர்களை அடக்கம் செய்தார்கள் என்று வரலாறுகளில் நாம் காண்கிறோம்.

இதை போன்று கதாதா(ரலி) அவர்களை பற்றி மிகவும் சிலாகித்து தன் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சொல்லி கண்ணீர் விட்டார்கள் என்பதை வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.

உஹதுப் போரில் நம்முடைய ஈருலகத்தின் வெற்றிக்குச் சான்று அளிக்கும் படைத் தலைவர் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக நான்கு திசைகளிலும் அம்புகளை எதிரிகள் ஏவிக்கொண்டிருந்தார்கள். தன்னுடைய தலைவருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று உணர்ந்த கதாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை நோக்கி வரும் அம்புகளை தன்னுடைய உடம்பை நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கி அந்தப் போரில் ஷஹீதானார்கள். தன்னுடைய அருமை தோழர் கதாதா(ரலி) அவர்களின் தியாகத்தை பெருமிதமாக தன் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சொல்லி ஆனத்தத்தில் கண்ணீர் சிந்தினார்கள் என்பதை தபரானி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காண முடிகிறது.

இப்படி நபி(ஸல்) அவர்கள், தன்னோடு வாழ்ந்த தோழர்கள், சொந்தங்கள் இஸ்லாத்திற்காகவும், தனக்காகவும் எல்லா வகையிலும் தியாகம் செய்தவர்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார்கள் என்பதை நாம் அறிகிறோம்.

ஆனால் நாம் எதற்கெல்லாம் கண்ணீர் சிந்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, நபி(ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகத்தை நினைத்து ஆனத்தத்தில் அழுது பெருமிதம் அடைந்திருக்கிறோமா?

தொலைக் காட்சித் தொடர் நாடகத்தில் வரும் பொய் கதாப்பாத்திரங்களுக்காக கண்ணீர் சிந்தும் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திற்காக வாழ்ந்து மரணித்த எண்ணற்ற தியாகிகளின் வரலாறுகளை படித்து அவர்களின் தியாகங்களை நினைத்து கண்ணீர் அல்லாஹ்வுக்காக வடித்திருக்கிறோமா?

இன்று முஸ்லீம் என்று பெருமிதப்படுகிறோமே! இதற்கெல்லாம் காரணமாக யார் யாரெல்லாம் இருந்துள்ளார்கள் என்பதை என்றைக்காவது யோசித்து பார்த்து, நமக்கு அல்லாஹ் கொடுத்துள்ள இந்த நிஃமத்தை நினைத்து அழுதிருக்கிறோமா?

நாம் அழ வேண்டும். இஸ்லாத்திற்காக அழ வேண்டும். நபி(ஸல்) அவர்களின் தியாகத்தை நினைத்து அழ வேண்டும். ஸஹாபாக்களின் தியாகங்களை நினைத்து அழ வேண்டும் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை முன்னிருத்தியே அழவேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு.  தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.

M தாஜுதீன்

14 Responses So Far:

Ebrahim Ansari said...

//தொலைக் காட்சித் தொடர் நாடகத்தில் வரும் பொய் கதாப்பாத்திரங்களுக்காக கண்ணீர் சிந்தும் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திற்காக வாழ்ந்து மரணித்த எண்ணற்ற தியாகிகளின் வரலாறுகளை படித்து அவர்களின் தியாகங்களை நினைத்து கண்ணீர் அல்லாஹ்வுக்காக வடித்திருக்கிறோமா?//

அருமையிலும் அருமையான சிந்தனை. சிறப்பான கேள்வி.

தம்பி இக்பால் அவர்களின் நகைச்சுவைத்தொடரை வியாழக்கிழமைகளில் நான் புன்னகைப்பதற்காக எதிர்பார்த்தோம்.

தம்பி தாஜுதீன் அவர்களின் தொடரை கண்ணீர் சிந்துவதர்காக இப்போது எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அதன் விளைவே இந்த முதல் பின்னூட்டம்.

இதயத்தின் கதவுகளை ஆட்டி அசைத்துப் பார்க்கும் தொடர்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ் மனதை நெருடும் தொடர்.

இந்த முறை ஊர் சென்றிருக்கும் பொழுது செக்கடிப்பள்ளியில் சுபுஹுத்தொழுகைக்குப்பின் தஃலீம் (தயவு செய்து இதில் எந்தளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்கள், சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன, எந்தளவுக்கு நம்பகத்தன்மை இல்லா ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவாதம் இங்கு வேண்டாம்) வாசிக்கப்பட்டது.

அதில் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்.) அவர்கள் காலத்து மனதை நெருடும் ஒரு சம்பவம் படிக்கப்பட்டது. அந்த சஹாபியின் (ரலி..) பெயர் இங்கு ஞாபகம் இல்லை. போர் களத்தில் பிடிபட்ட‌ அவருக்கு இறை நிராகரிப்பவர்களால் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டு அவரை தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்கின்றனர். அப்பொழுது அவருக்கு குடும்பம், கோத்திரம் என இருந்தும் ம‌ர‌ண‌த்திற்கு முன் இறுதி ஆசை ஏதேனும் உண்டா? என அவர்களிடம் கேட்க‌ப்ப‌டுகிற‌து. அத‌ற்கு அந்த சஹாபி "எப்ப‌டியாவ‌து என்னுடைய‌ உள‌மார்ந்த இறுதி ச‌லாத்தினை எம்பெருமானார் கண்ம‌ணி நாய‌க‌ம் (ஸ‌ல்.) அவ‌ர்க‌ளிட‌ம் எத்தி வைத்து விடுங்க‌ள்" என்று மட்டும் வேண்டிக்கொண்ட‌ பின் அவ‌ருக்கு தூக்குத்த‌ண்ட‌ணை நிறைவேற்ற‌ப்ப‌டுகிற‌து என்ற வரலாற்றுச்ச‌ம்ப‌வ‌த்தை ப‌டித்த‌தும் அதை ப‌டித்த‌வ‌ருக்கு (செய்ஹனா ஆலிம்) அத‌ற்குப்பின் தொட‌ர‌ முடிய‌வில்லை. அதை கேட்ட‌ ந‌ம‌க்கும் க‌ண்ணீர் வ‌ந்து விட்ட‌து. இது போன்ற‌ எத்த‌னை நெஞ்சை பிழியும் தியாக‌ச்ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் இஸ்லாத்தில் ந‌ட‌ந்துள்ளது என்பதை நினைக்கும் பொழுதெல்லாம் எம் ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"துக்க‌ம் தொண்டையை அடைப்ப‌து" என்று சொல்வ‌தை அன்று உண‌ர்வுப்பூர்வ‌மாக‌ க‌ண்டேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவசியமான நல்ல தொடர்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ. தாஜுதீன்.

தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

தொடரில் ஆரம்பித்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
அவன் கொடுத்ததற்கே இன்னும் நன்றி சொல்லி முடியவில்லை.
இன்னும் கடன் தீர்க்கப்படாமலே இருக்கின்றது , கண்ணீர் எப்படி
நிற்கும் ? ஒரு உண்மை மு'மினுக்கு.

இவ்வுலகில் வேண்டுமானால் சோகம் துக்கம், இழப்பு ,வறுமை, இயலாமை ,
மற்றும் எத்தனையோ சோதனைகளுக்காக வேண்டி ஒரு சராசரி மனிதனுக்கு அழுகை வரலாம். அது இந்த உலகோடு முடிந்துவிடும். ஆனால் அனைத்தையும் தாண்டி ஒரு நிறந்ததர மறுமை வாழ்வுக்கான ஏற்ப்பாட்டை யார் செய்ய வில்லையோ , அவர்களின் அழுகையும் , அவலங்களின் ஓலமும்,
மறுமையில் முடிவில்லா நிலைக்கு தள்ளிவிடும்.

ஆதலால் அதை நினைத்து இந்த உலகில் யார் அழுகின்றோமோ , கண்ணீர் வடிக்கின்றோமோ , ஒவ்வொரு சொட்டு கண்ணீரும், மறுமையில் கண்ணீர் வடிக்காமல் நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

அழுவோம் அல்லாஹ்வுக்காக
அழுவோம் கப்ரின் கேள்வியின் தன்மையை நினைத்து
அழுவோம் நாளை மஹ்ஷரின் விசாரணையை நினைத்து
அழுவோம் இறைவனின் தண்டனையின் வேகத்தை நினைத்து
அழுவோம் இறைவன் தந்த அருட்கொடைகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்
ஈடாகது என்று நினைத்து
அழுவோம் நம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற
கவலையுடன்
அழுவோம் அவனை நினைத்து நாளும்
அழுவோம் நம் மனைவி மக்களின் ஈமானை நினைத்து
அழுவோம் நாம் வாழும் காலம் வரை அல்லாஹ்வை நினைத்து
அழுவோம் சுவனத்து இன்பம் கிடைக்கும் வரை.

உண்மையான ஈமானுக்காக அழுவோம்
அந்த அழுகையின் பலன் சுர்வர்க்கத்தின் "இல்லிய்யீன்" என்னும் உயர்ந்த
ஸ்தானத்தை அடைவோம் நாம் அனைவரும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவனை நினைத்து அழுதவர்களாக
ஆக்கி சுவனத்து இன்பங்களை சுகிக்கச்செயவானாக

ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்ன தான் கொடூரமான கொலைகாரர்களாக, இறைநிராகரிப்பவர்களாக‌ இருந்த பொழுதிலும் அவர்களை எல்லாம் மன்னித்து அவர்கள் மேல் இரக்கம் காட்டக்கூடிய எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும், இன்று பழமைவாதம், தீவிரவாதம் என கூக்குரலிட்டு மனித நேயத்தின் காவலர்கள், மதச்சார்பின்மையின் தூண்கள், தேசப்பற்றில் நிகரில்லாதவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் காவி கலந்த இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கூட்டு மனசாட்சி என்று சொல்லி தீர விசாரிக்காமல் ஒரு ஏழை அப்பாவி இளைஞனை அவன் குடும்பத்தினரை இறுதியில் சந்தித்து சிறிது உரையாட மனிதாபிமான அடிப்படையில் கூட சந்தர்ப்பம் அளிக்காமல் இரவோடு இரவாக கருணை மனுவை நிராகரித்து அடுத்த நாள் காலையில் ரகசியமாக தூக்கிலேற்றி அதே சிறை வளாகத்தில் அவன் உடலை அட‌க்க‌ம் செய்து அட‌க்க‌மாக‌ உள்துறை அமைச்ச‌ர் மூல‌ம் வெளியுல‌குக்கு செய்தி வெளியிட்டு அத‌ற்குப்பின் சில‌ நாட்க‌ள் க‌ழித்து அவ்விளைஞ‌னின் ம‌னைவிக்கு ம‌ர‌ண‌ த‌ண்ட‌ணை நிறைவேற்ற‌ம் ப‌ற்றி க‌டித‌ம் அனுப்பி அந்த‌ பாராளும‌ன்ற‌ கேசை ந‌ல்ல‌ க‌யிறு போட்டு இறுக‌க்க‌ட்டி மூடி வைத்துக்கொண்ட‌து........இதுவே ப‌ழ‌மை வாத‌ம், தீவிர‌வாத‌ம் பேசும் போக்கிரிக‌ளின் உண்மை நிலை. ஒப்பிட்டுப்பார்க்க‌ எள்ள‌ள‌வும் துப்பில்லை இங்கு....

Shameed said...

இந்த வார உறுதி மொழி:

//கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு. தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், //

உறுதியான உறுதி மொழி

sabeer.abushahruk said...

இந்த வார நிகழ்வுகள் நெகிழ்வூட்டுவனவாக இருக்கின்றன.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

...அதில் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்.) அவர்கள் காலத்து மனதை நெருடும் ஒரு சம்பவம் படிக்கப்பட்டது. அந்த சஹாபியின் (ரலி..) பெயர் இங்கு ஞாபகம் இல்லை. போர் களத்தில் பிடிபட்ட‌ அவருக்கு இறை நிராகரிப்பவர்களால் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டு அவரை தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்கின்றனர். அப்பொழுது அவருக்கு குடும்பம், கோத்திரம் என இருந்தும் ம‌ர‌ண‌த்திற்கு முன் இறுதி ஆசை ஏதேனும் உண்டா? என அவர்களிடம் கேட்க‌ப்ப‌டுகிற‌து. அத‌ற்கு அந்த சஹாபி "எப்ப‌டியாவ‌து என்னுடைய‌ உள‌மார்ந்த இறுதி ச‌லாத்தினை எம்பெருமானார் கண்ம‌ணி நாய‌க‌ம் (ஸ‌ல்.) அவ‌ர்க‌ளிட‌ம் எத்தி வைத்து விடுங்க‌ள்" என்று மட்டும் வேண்டிக்கொண்ட‌ பின் அவ‌ருக்கு தூக்குத்த‌ண்ட‌ணை நிறைவேற்ற‌ப்ப‌டுகிற‌து என்ற வரலாற்றுச்ச‌ம்ப‌வ‌த்தை ப‌டித்த‌தும்... //

அஸ்ஸலாமு அலைக்கும்,

அந்த தியாச் செம்மால், நபித்தோழர் யார் என்ற விபரத்தை சகோதரர் அபூமுஸ்ஹப் ஹதீஸ்களிலிருந்து எடுத்து தரலாமே..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட சகோதரர்களுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்.

இன்னும் நிறைய சம்வங்கள் உள்ளன, இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தர முயற்சி செய்கிறேன்.

கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு. தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.

Canada. Maan. A. Shaikh said...

தொலைக் காட்சித் தொடர் நாடகத்தில் வரும் பொய் கதாப்பாத்திரங்களுக்காக கண்ணீர் சிந்தும் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திற்காக வாழ்ந்து மரணித்த எண்ணற்ற தியாகிகளின் வரலாறுகளை படித்து அவர்களின் தியாகங்களை நினைத்து கண்ணீர் அல்லாஹ்வுக்காக வடித்திருக்கிறோமா?

நாம் அழ வேண்டும். இஸ்லாத்திற்காக அழ வேண்டும். நபி(ஸல்) அவர்களின் தியாகத்தை நினைத்து அழ வேண்டும். ஸஹாபாக்களின் தியாகங்களை நினைத்து அழ வேண்டும் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை முன்னிருத்தியே அழவேண்டும். இந்த பதிவை நம் வீட்டு பெண்மணிகளுக்கு எடுத்து கூறவேண்டும்...

உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்..........

இப்னு அப்துல் ரஜாக் said...

இன வெறி மொழி வெறி போன்ற வெறிகளுக்கு நம் இஸ்லாத்தில் இடமில்லை.எந்த மொழியும் சரியே.நாம் முஸ்லிம்கள் என்பதால் அரபிக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தமிழ் நம் தாய் மொழி என்பதால் இரண்டாவது தமிழுக்கும்,ஆங்கிலம் உலக மொழி என்பதால் மூன்றாவதாக அதற்கும்,நம் நாட்டு ராஷ்ட்ரிய பாஷா வாக ஹிந்தி இருப்பதால் நான்காவதாக ஹிந்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொண்டால் நமக்கே நல்லது.

கூடுதலாக ஒரு மொழி தெரிந்தால் இன்னும் நல்லதுதானே|

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு. தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.ஆமீன்.

அலாவுதீன்.S. said...

///கற்பனை பொய் கதைகளான சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை இன்றோடு நிறுத்திவிட்டு. தன் உடலாலும், உழைப்பாலும், செல்வத்தாலும் தியாகம் செய்து வாழ்ந்து மரணித்த தியாகச் செம்மல்களில் வரலாறுகளைப் படிப்போம், இஸ்லாத்திற்காக அவர்களின் தியாகங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்துவோம், படிப்பினை பெறுவோம், பிறருக்கும் எடுத்துரைப்போம், நன்மையானவைகளை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிபோம். இன்ஷா அல்லாஹ்.////

இன்ஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு